OVOV 34

 

அர்ஜுனை வேண்டாம் என்று மறுத்து, நடுத்தெருவு, வாகனங்கள் வந்து போகும் ரோடு என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடி கொண்டு இருக்கிறாளா?

வீடு மாறி போன விஷயம் தெரிந்து விட்டதா ?

மனதை வார்த்தைகளால் பரிமாறி கொள்வதற்குள் அவன் காதலை  துறந்து ஓடி கொண்டு இருக்கிறாளா ப்ரீத்தி?

மெடூசா என்ற தேவதையின் கண்களை கண்ட உடன் சிலையாகி விடுவார்களாம். அதே போல் தன் கண்கள் காண்பதை நம்ப முடியாதவனாய் ப்ரீத்தியால் நடு தெருவில் சிலையாகி நின்றான் அர்ஜுன்.

உறைந்து நின்ற அர்ஜுனை உலுக்கி அவனை நிகழ் உலகத்திற்கு மீட்டு வருவதற்குள் அமன்ஜீத்துக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

“டேய் …லூசு மாதிரி நிக்காதே …கம் ….” என்ற அமன்ஜீத்,   அர்ஜுனை இழுக்காத குறையாய் அமன் ஓட ஆரம்பித்தான்.

இவர்கள் ஓட ஆரம்பிப்பதற்குள் ஏற்கனவே ஓடும் ப்ரீத்தியை பின் தொடர்ந்து ஓடி கொண்டு இருந்தாள் ஜெஸ்ஸி.

“ப்ரீத்தி …ஸ்டாப் …டோன்ட் ரன் …ஸ்டாப் ப்ரீத்தி …ஓடாதே …”என்று கத்தியவாறு .

ப்ரீத்தி முன்னால் ஓட, அவள் பின்னால் ஜெஸ்ஸி கத்தியவாறு ஓட,”பர்ஜாயீ ஸ்டாப் …”என்று கத்தி கொண்டு தீப் அவர்களுக்கு பின்னால் ஓடி கொண்டு இருந்தான்.

“இந்த வயசுல  எதுக்குடா என்னை ஓட வைக்கறீங்க … அடப்பாவிங்களா ஓட முடியலை.மூச்சு வாங்குது….”என்று புலம்பியவாறு தன் உடலை தூக்கி கொண்டு,அவர்களுக்கு பின்னால் ஓட முடியாமல் ஓடி கொண்டு இருந்தார் அமர்நாத்.

அவருக்கு பின்னால் அர்ஜுன்,அமன் ஓடி வர அவர்களுக்கு பின்னால் தில்சர் குழுவை சேர்ந்த முப்பத்திற்கும் மேற்பட்டோர், தில்சருடன் சேர்ந்து அர்ஜுன், அமனிற்கு பின்னால் ஓடி வந்தார்கள்.

சட்டென்று பார்ப்பவர்களுக்கு அங்கு ஏதோ மாரத்தான் ரேஸ் நடக்கிறதோ என்று தான் நினைக்க தோன்றும்.ஏறக்குறைய நாற்பது பேர் அந்த ரோட்டில் எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே ஓட வைத்த பெருமை ப்ரீத்தியையே சேரும்.

அர்ஜுன் வேகம் எடுத்து அமர்நாத் அருகே ஓடி வந்தவன், ”மாமா என்ன சொன்னீங்க …ப்ரீத்தி எதுக்கு இப்படி ஓடிட்டு இருக்கா?’என்றான் கடுப்புடன்.

“அடப்பாவி …டேய் …அவ ஓடினா அதற்கு நான் எப்படிடா காரணம் ஆவேன்?அந்த புள்ள பேசும் மொழியே எனக்கு புரியலை .இதுல அது கிட்டே நான் என்னத்தை சொல்லி அது ஓட போகுது?”என்றார் புசுபுசு என்று மூச்சு வாங்கியவாறு ஓட முடியாமல் ஓடியவாறு.

அவரை கேட்பதில் யூஸ் இல்லை என்று புரிந்து விட இன்னும் வேகம் எடுத்த அர்ஜுன்,முன்னால் ஓடி கொண்டு இருந்த கியான்தீப் அருகே ஓடி வந்தான்.

“தீப் என்ன சொல்லி தொலைத்தாய் …எதுக்கு ப்ரீத்தி இப்படி ஓடுறா?”என்றான் அவனுக்கு இணையாய் ஓடியபடி.

“அய்யோ வீர்ஜி சத்தியமாய் நான் எதுவும் சொல்லலை …லஸ்ஸி தான் வாங்கி கொடுத்தேன்.அதுவும் இனிப்பு அளவான பாதம்,பிஸ்தா,குங்குமப்பூ அதிகம் போட்டு தான் வாங்கி கொடுத்தேன்…

காரம் கூட வாங்கி கொடுக்கலை.பர்ஜாயீ ,ஜெஸ்ஸி பெஹன் கூட தான் பேசிட்டு இருந்தாங்க.ஜெஸ்ஸி  கத்த ஆரம்பித்த பிறகு தான் அவங்க ஓடுவதே எனக்கு தெரியும்.அதுவரை நான் அமர் மாமா கூட தான் பேசிட்டு இருந்தேன்” என்று தீப் அழாத குறையாய் பதற,அர்ஜுனுக்கு இதயமே வெளியே வந்து விடும் போல் துடிக்க ஆரம்பித்தது.

‘அய்யோ ஜெஸ்ஸி லூசு வழக்கம் போல் ஏதாவது காமெடி செய்யறேன் என்று ‘என்னை காதலிக்கிறேன்’ என்று உளறி வச்சுடுச்சா?அதை கேட்டு ப்ரீத்தி டென்சன் ஆகிட்டாங்களா?’ என்று மனதிற்குள் பயப்பந்து உருள, இன்னும் வேகம் எடுத்த அர்ஜுன் ப்ரீத்தியை துரத்தி கொண்டு ஓடி கொண்டு இருந்த ஜெஸ்ஸியை நெருங்கினான்.

“ஏய் சொறி பிடிச்ச பிசாசே…பைத்தியம் பிடித்த காட்ஜில்லா  ….நில்லுடீ .உன் வேலையை இங்கேயும் காட்டிட்டியா ? என்னத்தை சொல்லி அவளை இப்படி ஓட வைத்தே ?” என்றான் அர்ஜுன் ஜெஸ்ஸியை எட்டி பிடித்தவாறு.

ஓடி கொண்டு இருந்த ஜெஸ்ஸி,”டேய்…ஆத்திரத்தை கிளப்பாம ஓடிடு.நானே  பேசி கொண்டே இருந்தவ தீடிர் என்று பைத்தியம்  மாதிரி  எதுக்கு இப்படி ஓடிட்டு இருக்கா என்று புரியாம அப்போ இருந்து நானும் அவளை நிறுத்த ஓடிட்டு இருக்கேன்.

உன் ஆளை நான் எதுவும் செய்யலை சாமி .சாப்பிட்டது எல்லாம் ஜீரணம் ஆகி போச்சு.அடியேய் நில்லுடீ…ஸ்டாப் ப்ரீத்தி.”என்று கத்தியவாறு ஜெஸ்ஸி ஓட அர்ஜுன் தலையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது.

“Prītī pi’ārē saṭāpa.Ḍauna rana… Rukō/ப்ரீத்தி டியர்….நில்லு ….ஓடாதே ….ஸ்டாப் …”என்று பஞ்சாபியில் அர்ஜுன் கத்தி கொண்டு ஜெஸ்ஸியை முந்தி ப்ரீத்தி பின்னால் ஓடினான்.

“ப்ரீத்தி ஸ்டாப்…ஸ்டாப் ப்ரீத்தி….நில்லு ப்ரீத்தி.”என்ற குரல் தான் அந்த தெரு முழுக்க ஒலிக்க வீடுகளில்,கடைகளில் இருந்தவர்கள் எல்லாம் கூட எட்டி பார்த்தார்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல்.

‘யப்பா இது பொண்ணா…என்ன இந்த ஓட்டம் ஓடுறா?ஒலிம்பிக்க்கு அனுப்பினா நிச்சயம் இந்தியாவிற்கு ஒரு தங்க மெடல் உண்டு போல் இருக்கே.காலு தரையில் படுதானே சந்தேகமாய் இருக்கே?’தினமும் ஜாக்கிங் சென்று உடம்பை பிட்டாக வைத்து இருக்கும் அர்ஜூனாலேயே ப்ரீத்தியை எட்டி பிடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

Adrenelin அதிகமாகி ஓடி கொண்டு இருப்பவளுக்கும் சாதாரணமாய் அவளை பின் தொடர்ந்து ஓடி கொண்டு இருப்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கும் இல்லையா?அதை பற்றி அறியாத இவர்கள் ப்ரீத்தியை எட்டி பிடிக்க முடியாதவர்களாக திணறியவாறு ஓடி கொண்டு இருந்தார்கள்.

அவர்களின் ஓட்டம் அவர்களை அந்த கிராமத்தின் முச்சந்திக்கு அழைத்து வந்து இருந்தது.அங்கு வந்த பிறகே ப்ரீத்தியின் ஓட்டம் சற்று மட்டுப்பட, அந்த முச்சந்தியில் இருந்த ‘பஞ்சாபி dhaba’ ஒன்றில் வாயிலில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த   பெரிய விறகு கட்டை ஒன்றை கையில் கொண்டாள் ப்ரீத்தி.

 

பஞ்சாபி தாபா என்பது ஒரு சாலையோர உணவகம். அவை தேசிய,மாநில  நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் துரித உணவகங்கள்.

அந்த காலத்தில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பஞ்சாபி லாரி ஓட்டுனர்களுக்கு  நிறுத்தமாகவும், ஓய்வு எடுக்கும் இடங்களாகவும் இவை செயல்பட்டன.இன்றோ குடும்பத்தினர் ‘அவுட்டிங்’ செல்லும் இடங்களாக மாறி விட்டன.

பஞ்சாபி எங்கு சென்றாலும் தபா நகரும்” என்று சொல்லடை உருவாகும் அளவிற்கு இந்த ‘பஞ்சாபி தபாக்கள்’ ரொம்ப பேமஸ்.

தபா என்பது நாம் வழக்கமாய் நான்கு சுவற்றுக்குள் சாப்பிடும் ரெஸ்டாரண்ட் போன்றது இல்லை. மரத்தின் நிழலில் பத்து,இருபது கயிற்று கட்டில்கள் போடபட்டு இருக்கும்.ஒரு ஓலை கொட்டகைக்குள் சமையல் செய்யப்பட்டு,பரந்த வெளியில் உணவு பரிமாறபடும்.அதிகமாய் விறகு அடுப்புகள் மட்டுமே இங்கெல்லாம் உணவின் ருசிக்காக பயன்படுத்தப்படும்.

பூமிக்குள் குழி தோண்டப்பட்டு,அதற்குள் விறகுகள் உதவியால் எண்ணெய் விடப்படாமல்  பலவகையான சுக்கா ரொட்டிகளும்,பராத்தாக்களும்,’நான்’களும் கோழி வறுவல்களும் சுட சுட பரிமாறபடும்.

அப்படி ஒரு தாபா அந்த கிராமத்தில் உணவு பரிமாறி கொண்டு இருந்தது லாரி ஓட்டுனர்களுக்கும்,சுற்றுலா வந்து இருந்த குடும்பத்தினர்களுக்கும்.

அந்த தாபாவின் வாயிலில் அடுக்கி வைக்க பட்டு இருந்த விறகு கட்டைகளின் ஒன்றை தான் ப்ரீத்தி உறுவியது.

“மவனே உனக்கு சங்கு தான்…என்னத்தை செய்து வைத்தே?” என்றான் அமன்ஜீத் பின் இருந்துஅர்ஜுனிடம்.

‘நானா?நான் என்ன செய்தேன்?’சத்தியமாய் அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை.

திகைத்து போய் இருந்தது ஓடி வந்தவர்கள் மட்டும் இல்லை,என்ன என்று பார்க்க வெளியே வந்து எட்டி பார்த்த அந்த கிராமத்தினரும்,தாபாவில் உணவு உண்டு கொண்டு இருந்தவர்களும் தான்.

ப்ரீத்தியின் இந்த கட்டை தூக்கலை எல்லாம் எதிர் பராதவனாய் முகம் வெளுத்த அர்ஜுன்,சட்டென்று ஓடுவதை நிறுத்த, பின்னால் ஓடி வந்து கொண்டு இருந்த ஜெஸ்ஸி  அர்ஜுன் முதுகில் மோதி நிற்க,அவள் மேல் வந்து மோதி நின்றான் அமன்.இவர்கள் மேல் வந்து மோதி நின்றான் தீப்.

சட்டென்று வெகு துரிதமாய் ஓடி கொண்டு இருக்கும் ஒரு கார் பிரேக் அடித்தால் எப்படி பின்னால் வரும் வாகனங்கள் சங்கிலி தொடர் போல் தங்களுக்கு முன் இருக்கும் வண்டியில் மோதி நிற்குமோ,அது போல் அங்கு நடு தெருவில் மனிதர்கள் ஒருவரின் மீது ஒருவர் மோதி நின்றார்கள்.

“அஹ்ஹ்…”என்ற பல குரல்களின் அலறலும்,ரெண்டு கார்,ஒரு பைக்  ‘க்ரீச்’ என்று   பிரேக் இட்டு நிற்கும் சத்தமும் அந்த தெரு முழுவதும் எதிர் ஒலித்தது.

அடுத்து மயான அமைதி என்பார்களே அதை அணிந்து கொண்டது அந்த தெரு. என்ன நடக்கிறது என்று ஒரு கணம் யாருக்கும் எதுவும் புரியவில்லை.

ஓடி வந்தவர்கள் ஆங்காங்கே உறைந்து நின்றார்கள். சட்டென்று பார்த்தால் அந்த தெரு முழுக்க மனித சிலைகள் யார் கொண்டு வந்து நிறுவியது என்ற கேள்வி தான் எழும்.

அந்த நிசப்தத்தை கிழித்து கொண்டு உயர்ந்தது ப்ரீத்தியின் குரல்.

“டேய் ரஞ்சித் …..பிடிடா அந்த நாயை….”என்று உட்ச குரலில் ப்ரீத்தி அலற,சடன் பிரேக் பிடித்த வண்டிகளில் ஒன்றான பைக்கில் அமர்ந்து இருந்த ரஞ்சித் அடுத்த நொடி தன் பைக்கில் மோதி கீழே விழுந்து, எழுந்து ஓட ஆரம்பித்து கொண்டு இருந்தவன் மேல் பாய்ந்து அவனை ஓட விடாமல் தரையோடு தரையாக நடு தெருவில் வைத்து அமுக்கி பிடித்தான்.

தூரத்தில் இருந்து வரும் போதே அங்கு நடப்பதை கண்டு,ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட ரஞ்சித்தின் போலீஸ் மூளை விழிப்புடன் இருந்ததாலோ,இல்லை தோழியின் மேல் இருந்த நம்பிக்கை என்று சொல்லலாமோ அதன் படி ப்ரீத்தியின் குரல் கேட்டதும் அடுத்த நொடி ஓடி கொண்டு இருந்தவன் மீது பாய்ந்து விட்டான் ரஞ்சித்.

ஏதோ ஸ்டண்ட் காட்சி பார்ப்பது போன்ற காட்சியமைப்பு அது.ஹீரோ டைவ் அடித்து ஓடும் வில்லன் மேல் பாய்வது போல் எத்தனையோ படங்களில் பார்த்து இருப்போம்.அது தத்ரூபமாய் அங்கு அரங்கேறியது.

ரஞ்சித்தின் பிட்டான போலீஸ் உடல்,பல வருட கமாண்டோ ட்ரைனிங் உதவ,ஓடியவனை அமுக்கி பிடிப்பது அவனுக்கு வெகு சுலபமாய் இருந்தது.

கீழே விழுந்தவனின் மேல் தன் கால் முட்டியை வைத்து அழுத்தி,கீழே விழுந்து கிடந்தவனின் கைகள் ரெண்டையும் பின்புறம் வளைத்து பிடித்து தன் துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டான்.

கட்டையை எடுத்த ப்ரீத்தி கட்டையை தூக்கி அடித்ததையும்   யாரும் பார்க்கவில்லை. அதை போலவே ப்ரீத்தி ஒருவனை அது வரை  துரத்தி தான் ஓடி கொண்டு இருக்கிறாள் என்பதையும் மற்றவர் அறியவில்லை.

ப்ரீத்தி தூக்கி அடித்த கட்டை அவள் முன்னால் ஓடி கொண்டு இருந்த  ஒருவன் காலில் பட்டு அவன் தரையில் விழுந்து, உருண்டு,புரண்டு  நேர சென்று ரஞ்சித் வந்த பைக்கில் மோதியதையும் யாரும் பார்க்கவில்லை.

கண் இமைக்கும் நொடி, இதயம் துடிக்கும் நொடி – அதற்குள் இது அத்தனையும் நடந்து முடிந்து இருந்தது.

அர்ஜுனை  ‘பிடிக்கவில்லை’ என்று ப்ரீத்தி ஓட வில்லை. இன்னொருவனை பிடிக்க ஓடி கொண்டு இருந்தாள்.

வயல் வெளிகளுக்கு நடுவே திலீப் உடன் பேசி கொண்டு இருந்தவர்கள், திலீப்  கொடுத்த சில தகவல்களை உறுதி படுத்த அந்த ஊரின் பக்கம்  வந்து கொண்டு இருந்தார்கள். அப்படி அவர்கள் வருவதற்கும்,ப்ரீத்தி ஒருவனை துரத்தி கொண்டு வருவதற்கும் மிக சரியாய் ‘கன் டைம்’ ஆக இருந்தது.எல்லாமே எதர்ச்சையாக நடந்த நிகழ்வுகள் தான்.

எங்கோ திருமண வரவேற்புக்கு கிளம்பி கொண்டு இருந்த அர்ஜுன் அண்ட் கோ கிளம்பிய வரவேற்பிற்கு அமன்ஜீத்,ஜெஸ்ஸி கிளம்பியதும்,அவர்கள் வரும் வழியில் அமன்ஜீத் கார் ரிப்பேர் ஆகி நின்றதும் ,இவர்களை ஏற்றி கொண்டு வந்த அர்ஜுன்  கண்ணில் இந்த கிராமத்தின் வழியாக வந்து கொண்டு இருந்த  தில்சர் குழு கண்ணில் பட்டதும், அர்ஜுன் அவனுடன் பேச இறங்க,பெண்களுக்கு லஸ்ஸி வாங்கி பருகியவாறு இத்தனை பேர் ஒரே இடத்தில் நின்றதும் ‘ஸ்ட்ராட்டஜிக் செஸ் பீஸ்/strategic chess piece’ எப்படி மிக சரியான பொசிஷனில் வைக்கப்படுமோ அப்படி வைக்க பட்டது.

இயற்கையையும் சுற்றுப்புறத்தையும் பார்த்து ரசித்து கொண்டு இருந்த ப்ரீத்தி இப்படி திடீர் என்று ஒருவனை துரத்தி கொண்டு ஓடியதும்,அதே சமயம் ரஞ்சித்,வீரேந்தர்,சரண் அந்த எக்ஸ்சாட் ஸ்பாட்க்கு வருவதும் மிக சரியான வினாடியில் நிகழ்ந்தது.

இதில் எது வேண்டுமென்றாலும் மாறி போய் இருக்க வாய்ப்பு உண்டு.அர்ஜுன்,அமன்,தில்சர்,ரஞ்சித் இவர்கள் அனைவரும் வெவ்வேறு வழியில் அவர்கள் பயணத்தை மேற்கொண்டு இருந்தால்,சரியான சமயத்தில் ஒரே இடத்தில் இவர்கள் அனைவரும் வந்து குழுமி இருப்பது நடக்காமல் இருந்து இருக்கும்.

அப்படி இவர்கள் அனைவரின் சந்திப்பு மிக சரியாய் அந்த கிராமத்தில் நடைபெற்று இருக்கவில்லை என்றால் எத்தனை பேரின் வாழ்வு கேள்வி குறியாகி இருக்குமோ.

இவை நடக்காமல் இருந்து இருந்தால், அடுத்து நடக்க போகும் சம்பவங்கள், திகில் நிமிடங்கள் பார்ப்பவர்களின் இதய துடிப்பை அதிகமாக்கும் நிகழ்வுகள் நடக்காமல் போய் இருக்கலாம்.

சாலையில் வேகமாய் வந்து கொண்டு இருந்த ரஞ்சித் பைத்தியம் பிடித்தவன் மாதிரி ஒருத்தன் ஓடி வருவதையும். அவனை பின்னால் இருந்து ‘சந்திரமுகி’,’காஞ்சனா’ ரேஞ்சுக்கு  துரத்தி வரும் ப்ரீத்தியை கடைசி நொடியில் கண்டு பிரேக் அடிக்க அவன் வண்டி ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் நின்றது.

ரஞ்சித் அப்படி சடன் பிரேக் அடிப்பான் என்பதை ரஞ்சித்துக்கு பின்னால் போலீஸ் ஜீப்பில் அவனை தொடர்ந்து வந்து கொண்டு இருந்த  சரணும், இன்னொரு கார் ஒன்றினை அங்கிருந்து ஒட்டி கொண்டு சென்று இருந்த இன்னொருவனும் எதிர்பார்த்து இருக்கவில்லை.

பிரேக் மேல் ஏறி நிற்காத குறையாய் அழுத்த, ரெண்டு வண்டிகளும் பெரும் சத்தத்துடன் தான் நின்றது.

ஏறக்குறைய ஒரு வண்டியோடு மற்ற வண்டிகள் மோதும் நிலை.சடன் பிரேக் சத்தமும்,வண்டிகள் ஸ்கிட் ஆகும் சத்தமும்,ஒரு வண்டி அங்கு இருந்த கரண்ட் கம்பத்தில் மோதும் ஒலியும் அந்த அமைதியை குலைத்தது.

ரஞ்சித் பைக் ஸ்கிட் ஆகி திசை திரும்பி விட,அதில் மோதாமல் இருக்க  எதிர் புறத்தில் இருந்து இன்னொரு காரினை ஒட்டி கொண்டு இருந்தவன்  காரை ஒடித்து திருப்ப அது நேரே சென்று கரண்ட் கம்பத்தில் மோதி நின்றது.

நல்லவேளையாக பின்னால் வந்து கொண்டு இருந்த சரண் நிலைமையை சட்டென்று உணர்ந்து, பிரேக்கை அழுத்தி விட,சரண் ஒட்டி வந்த போலீஸ் ஜீப் -ரஞ்சித் பைக் மீதோ, ப்ரீத்தியால் கட்டையில் அடிக்கப்பட்டு கீழே உருண்டு கொண்டு இருந்தவன் மீதோ,எதிரே வந்த கார் மீதோ மோதாமல் சற்று தொலைவில் நின்றது.

அந்த இடம் அந்த கிராமத்தின் நான்கு வழி சாலை என்பதால் காரை ஒடித்து திருப்ப போதிய இடைவெளி இருந்தது சரணுக்கு உபயோகமாய் இருந்தது.

“வாட் தி ஹெல்”என்ற உறுமல்லோடு வீரேந்தர் கீழே இறங்க, சரண் காரின் உள் இருந்து எட்டி பார்க்க,இவர்கள் போலீஸ் உடையை கண்ட இன்னொரு கார்காரன் பதறி ரிவர்ஸ் எடுக்க ஆரம்பித்தான்.

“சரண்  …டோன்ட் லெட் தட் கார் பாஸ் யு ….ஸ்டாப் தி கார்.” என்று ப்ரீத்தியின் குரல் மீண்டும் அந்த பிராந்தியம் முழுவதும் ஆங்கிலத்தில் எதிர் ஒலித்தது.

அவள் குரலில் இருந்த பதற்றமே விஷயம் வெகு சீரியஸ் என்பதை சரணுக்கு உணர்த்தி விட, வீரேந்தர் அடுத்த நொடி காரில் இருந்து குதித்து இருக்க,கார் கதவினை கூட மூடாமல்  ஒரு கணமும் தாமதிக்காமல் சரண்  ரிவேர்ஸ் எடுத்து அந்த காரின் பக்கம் செல்ல, உலோகத்துடன் உலோகம் மோதும் ஒலி காதை செவிடாக்கியது.

அதற்கு மேல் செல்ல வழியில்லாமல் அந்த கறுப்பு நிற மாருதி நெக்ஸா அப்படியே நின்று விட,நின்ற காரில் இருந்து நால்வர் மூன்று திசையில் இறங்கி ஓட ஆரம்பித்தார்கள்.

“ஸ்டாப் தேம்…”என்று ப்ரீத்தி மீண்டும் குரல் எழுப்ப, போலீஸ் உதவியை ப்ரீத்தி நாடியதே அங்கு இருந்தவர்களுக்கு அங்கு இருந்து தப்பி போக முயலும் அந்த நால்வர் தவறானவர்கள் என்பதை உணர்த்தி விட, அடுத்த நொடி தில்சர் குழுவினர் ஐந்து பேர் ஒவ்வொரு திசைக்கும் பாய்ந்து சென்று அவர்களை அமுக்கி பிடித்து அழைத்து வந்தனர்.

“என்ன இது ப்ரீத்தி?வாட் ஹப்பேனெட்?’என்றபடி ப்ரீத்தி அருகே வந்து நின்றார்கள் அர்ஜுனும்,வீரேந்தரும்.

“அங்கிள்…நாங்க அந்த ஸ்கூல் கிட்டே  நின்று தான் லஸ்ஸி சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.அப்போ இந்த xxxxx அந்த ஸ்கூல் சிறுமி  ஒருத்தி கிட்டே போதை மருந்து sale செய்துட்டு இருந்தான் அங்கிள்.அதை நான் பார்த்தேன்.

அந்த பிள்ளை கிட்டே பெரிய கறுப்பு பாக் ஒன்று கொடுத்தான். அந்த சிறுமி  இவன் காலில் விழுந்து அழுதும் கூட இவன் விடவில்லை. ரொம்ப சின்ன பொண்ணு அங்கிள்.

இவன் பேச்சை அந்த சிறுமி கேட்கவில்லை என்றதும் அதை போய் அங்கே…இங்கேன்னு தொட்டு,அழுத்தின்னு இந்த xxxx பட்டபகலில்,அந்த புதரின் ஓரம் நின்று டார்ச்சர் செய்து கொண்டு இருந்தான்.”என்று ப்ரீத்தி தான் கண்டவற்றை வார்த்தை கொண்டு சொல்ல முடியாமல் நிறுத்த,

“ஹே பக்வான்…”என்று நெஞ்சில் கை வைத்து கொண்டார் வீரேந்தர்.

“இவன் கையில் இருந்த போன்னில் அந்த பெண்ணுக்கு எதையோ காட்டி, காட்டி பயமுறுத்தி இழுத்து வைத்து நாலு அறை கொடுத்தான் இந்த xxxx .

அந்த பிள்ளையின் ஆடையை எல்லாம் கிழித்துன்னு ரொம்ப படுத்தி எடுத்துட்டான்.இதை எல்லாம் நான் கவனித்து விட்டதை கண்டு கொண்ட இவன் அதோ அந்த காரில் இருந்தவர்களுக்கு சிக்னல் கொடுத்துவிட்டு ஓட ஆரம்பித்தான் அங்கிள்.நான் துரத்திட்டு போனேன்.”என்று  சொல்லி முடித்த ப்ரீத்தியின் ஆங்கில பேச்சை ஜெஸ்ஸி, தீப் மற்றவர்களுக்கு மொழி பெயர்க்க அங்கு இருந்தவர்கள் கையில் சிக்கிய அந்த ஐந்து  மிருகங்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

ஆத்திரம் தீரும் வரை கை,கால், கட்டையை  பயன்படுத்தி அவர்களை துவைத்து காய போட்டார்கள்.அங்கு இருந்தவர்கள் ஆத்திரம் தீரட்டும் என்று சரண்,வீரேந்தர்,ரஞ்சித் கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

“உன் கூட தானேடீ நான் நின்னுட்டு இருந்தேன்.இதை எல்லாம் எப்போ பார்த்தே?”என்றாள் ஜெஸ்ஸி.

“ஹ்ம்ம் நீ வாட்ஸ்ஆப், மூஞ்சிப்புக்கு, ட்விட்டர், இன்ஸ்டாகிராம்ன்னு நீ தான் அதுங்களுக்கு அடிமையாகி தலையை தொங்க போட்டுட்டு சுத்தறியே. உன் தலையை அதற்குள் புதைத்து கொண்டு இருக்கும் போது தான் நான் அக்கம்,பக்கம் பார்த்துட்டு இருந்தேன்.

வெளியே வரும் போது தேவை என்றால் ஒழிய நான் சமூக வலைத்தளங்களை பார்ப்பது இல்லை ஜெஸ்ஸி.mp3 பிளேயர், இல்லை கார் மியூசிக் சிஸ்டம் ஆன் செய்துட்டு என் கவனம் எல்லாம் சுற்றுப்புறத்தின் மீது தான் இருக்கும்.நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம்,இல்லை யாருக்காவது நம் உதவி தேவைப்படலாம்.ஏதாவது கால் வந்தாலும் ஒரு இடத்தில் நின்று பேசி விட்டு தான் நடப்பேன்.

ACP ராஜேஸ்வரி சொன்ன பெண்களுக்கான அட்வைஸ் இது ஜெஸ்ஸி.வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணின் கவனமும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் தான் இருக்க வேண்டும்.

வாய், கூட வருபவர்களுடன் பேசி கொண்டு இருந்தாலும்,கண் சுற்றுப்புறத்தை அலசி கொண்டு இருக்க வேண்டுமாம்.கண் இமைக்கும் நொடியில் எது வேண்டும் என்றாலும் நடந்து விடலாம் அதற்கு ஏற்ப நாம் ரியாக்ட் ஆக எப்பொழுதும் அலெர்ட்நெஸ் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னதை தான் கடைபிடித்தேன். “என்றாள் ப்ரீத்தி.

“வாஸ்தவம் தான்.அந்த பெண்களுக்கான செமினார் நானும் தான் அட்டென்ட் செய்தேன்.இது போல் அலெர்ட்னெஸ் பற்றிய புக் படிச்சி இருக்கேன்.ஆனா ரியாலிட்டி எங்கே போனாலும் சமூக வலைத்தளத்திற்குள் தலையை புதைத்து கொள்வது தான்.படிப்பதை நிஜ வாழ்க்கையில் கடைபிடிப்பது இல்லை தான்.”என்றாள் ஜெஸ்ஸி

“அப்போ தான் ஒரு பிள்ளை அந்த ஸ்கூல் உள்ளே இருந்து பயந்து,பயந்து  அர்ஜுன் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த புதற்கு வந்துச்சு.

இயற்கை உபாதை போல் இருக்குன்னு தான் நானும் முதலில் நினைத்தேன்.ஆனால் கழிப்பறை தான் ஸ்கூலுக்குள் இருக்குமே என்பது மைண்டில் கிளிக் ஆச்சு.

தவிர பாத்ரூம் போக வரும் பெண்ணின் முகத்தில் எதற்கு அத்தனை பதட்டம்,பயம்? நீ உன் போனை நொண்டி கொண்டு இருக்கும் போது கொஞ்சம் பின்னால் நகர்ந்தேன். புதர் அருகே அத்தனையும் கண்ணில் பட்டது.

ஒரு செகண்ட் எப்படி ரியாக்ட் ஆவது என்பது கூட புரியவில்லை. எங்கேயோ நடப்பதாய் நாம் படிக்கும் வக்கிரங்கள் நம் கண் முன்னே அரங்கேறும் போது ரியாக்ட் ஆவதற்குள் எல்லாம் கை மிஞ்சி தான் போகிறது.நல்லவேளை இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை.என்னை பார்த்ததும் ஓட ஆரம்பித்தான். அதான் துரத்திட்டு போனேன்.”என்றாள் ப்ரீத்தி.

“ஜெஸ்ஸி அதை மொழி பெயர்க்க,”இதை எல்லாம் எங்களிடம் சொல்லிட்டு போய் இருக்கலாம் தானே?என்னவோ ஏதோ என்று எல்லோரும் பயந்து போனோம்.”என்றான் தீப் கடுப்புடன்.

“ஆமா உங்க எல்லார் கிட்டேயும் இதை எல்லாம் explain செய்வதற்குள் அவன் ஓடி போய் காரில் ஏறி டாடா காட்டிட்டு போய் இருப்பான்.ஓட ஆரம்பித்தால் என்ன எதற்கு என்பது புரியாமல் “நில்லு ப்ரீத்தி “ன்னு கத்திட்டு பின்னால் தானே வர போறீங்க என்று தான் சொல்லாமல் ஓடினேன்.”என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்ட அங்கு இருந்தவர்கள் திருத்திரு என்று விழிக்க ஆரம்பித்தார்கள்.

“ஒருவேளை நாங்க உன் பின்னால் ஓடி வந்து இருக்கவில்லை என்றால் ?”என்றான் அர்ஜுன்

“அதற்கு சான்ஸ்சே இல்லை என்பது தான் எனக்கு தெரியுமே அர்ஜுன். இத்தனை பேர் ஓடி வரவில்லை என்றாலும் நீங்க, தீப், ஜெஸ்ஸி நிச்சயம் வருவீங்க என்று எதிர்பார்த்தேன்.காரணம் இல்லாமல் கூட இருப்பவர் ஓட, ‘எதற்கு?’ என்ற கேள்வியுடன் பின் தொடர்வது தான் மனித இயல்பு.

தவிர உங்க கூட வந்து இருக்கும் என் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு என்னும் போது நீங்க நிச்சயம் என்னை பின் தொடர்ந்து வருவீங்க என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை அர்ஜுன்.”என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு அர்ஜுன் முகத்தில் புன்னகை அரும்ப,அவர்கள் இருவருக்கும் மட்டுமே பிரதியோகமான பார்வை பரிமாறல்கள் அங்கு அரங்கேறியது.

‘உண்மை தான் பேபி.நீ உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் உன்னை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருப்பேன்.’ என்ற அர்ஜுனின் மன எண்ணத்தை அறிந்தவளாய் ப்ரீத்தியின் முகம் புன்னகையை காட்டியது.

‘வருவீங்க என்று தெரிந்து தானே ஓடினேன்.’என்றது ப்ரீத்தியின் மனது.

‘ஆமா இவங்க அப்படியே பெரிய அவந்திகா.முன்னாடி பட்டாம்பூச்சிகளுடன் காடு,மலை,அருவி எல்லாம் தாண்டி குதித்து குதித்து ஓடுவாங்க… அர்ஜுன்,’ பாஹுபலி சிவ்வு’ மாதிரி  ‘தீரனே …தீரனே”என்று பாக்க்ராவுண்ட் மியூசிக்குடன் ஓடி வருவார்…’ என்று வாய் விட்டு முனகியது ஜெஸ்ஸி தான்.

‘ஐயோ ஐயோ….கண்ணால் ‘நலம் தானா…?’ இப்போ இது தேவை தானா?….டேய் இது எல்லாம் ரொம்ப ஓவர் டா…நாடு தாங்காது டா…..நிறுத்துங்க டா உங்க ஜொள் மழையை ‘என்று மனதிற்குள் பொரிந்தாள் ஜெஸ்ஸி.

(இந்த புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு காண்டு?)

அர்ஜுன்,ப்ரீத்தி அங்கே ஒரு பார்வை நாடகத்தை நடத்தி கொண்டு இருக்க, அதை கண்டு அமன்ஜீத்,ஜெஸ்ஸி வெளிப்படையாகவே தலையில் அடித்து கொள்ள,அதனால் கவனம் சிதறிய ப்ரீத்தியின் கண்களில் கீழே விழுந்து கிடந்தவன் தென்பட்டான்.

“அர்ஜுன்…அவன் போன் அதோ அவன் பாக்கெட்டில் வெளியே தெரியுது பாருங்க.எதை காட்டி அந்த பெண்ணை பயமுறுத்தி கொண்டு இருந்தான்… பாருங்க.”என்றாள் ப்ரீத்தி இவளால் கட்டையில் அடி வாங்கி,பொது மக்களால் அடித்து நொறுக்க பட்டவனின் போனினை கை  காட்டி.                                     .

ப்ரீத்தியின் கை சைகை மூலம் அவள் போனினை தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்ட அர்ஜுன், கீழே குனிந்து அந்த அரக்க ஜென்மத்தின் போனை எடுத்து பார்க்க , அதில் இருந்தவற்றை பார்த்தவுடன்  அர்ஜுனுக்கு ரத்தம் கொதித்தது.

கண்கள் சிவந்து, உடல் விரைத்து, கை முஷ்டி இறுக ப்ரளயகால ருத்திரன் போல் அத்தனை கோபம் கொண்ட அர்ஜுன் மாட்டிய ஐவரையும் கன்னம் கன்னமாய் தன் ஆத்திரம் தீரும் வரை அறைந்தான்.

நூற்றுக்கணக்கான பள்ளி பிள்ளைகளை, கல்லுரி மாணவிகளை,இல்லத்தரசிகளை தவறாக எடுக்கபட்ட பல வீடியோக்கள்,புகைப்படங்கள் என்று பார்ப்பவர் நெஞ்சில் ரத்தம் கசிய வைக்கும் வக்கிரங்களின்  சாட்சியாய் இருந்தது அந்த போன்.

சில புகைப்படங்கள் அவர்களே அறியாமல் எடுக்கபட்டு இருந்தன.சிலவற்றில் முழு மயக்கத்தில் இருந்தார்கள். அதாவது மயங்க வைக்கப்பட்டு அந்த புகைப்படங்கள் எடுக்கபட்டு  “LEVERAGE” ஆக வைத்து பிளாக்மெயில் செய்யபட்டு கொண்டு இருந்தனர்.

பிளாக்மெயில்லுக்கு பயந்து பயந்து,விஷயம் வெளியே தெரிந்து விட போகிறதோ என்றே இந்த அரக்க ஜென்மங்கள் சொல்லும் படி நடக்கும் கைப்பாவைகளாகி விடுகிறார்கள்.

The victims can never escape their abuse.

இவர்களை தவிர பொது மக்கள் யாரும் பார்க்கவிடாமல் அர்ஜுன் அந்த போனை மறைத்து விட்டான் என்றாலும், இவர்களின் முக பாவம், இவர்களின் கோபம் அங்கு இருந்தவர்களுக்கு சொல்லாமல் சொல்லி விட்டது அந்த போனில் இருப்பது எந்தவிதமான வக்கிரம் என்பதை.

அதை கண்ட ப்ரீத்திக்கும், ஜெஸ்ஸிக்கும் குமட்டி கொண்டு வந்தது. பள்ளி செல்லும் சிறுமிகள்,கல்லுரி இளம் பெண்கள்,இல்லத்தரசிகள் என்று பலரின் வாழ்வை புதை குழியில் தள்ளி இருந்த அந்த போன் காட்டிய காட்சிகளை, வீடியோக்களை  கண்ட ப்ரீத்திக்கும்,ஜெஸ்ஸிக்கும் இதயத்தை ஏதோ செய்தது.

“அர்ஜுன்…விடு அர்ஜுன் …செத்துட போறாங்க.விடு அர்ஜுன்.”என்று வீரேந்தர்,சரண்,அமன்,தீப்,அமர்நாத் என்று பலரும் அர்ஜுனை இழுத்து பிடித்து நிறுத்தியும் அவன் கோபம் அடங்கவில்லை.

“விடுங்க தாயா…இவனுங்க எல்லாம் உயிரோடு இருக்கவே கூடாது.பச்ச பிள்ளைகளை கூட விட்டு வைக்கவில்லை. வக்கிரம் பிடிச்ச xxxxxxxx.எவ்வளவு தைரியமாய் பட்ட பகலில் ஸ்கூல் பிள்ளை கிட்டே இப்படி பொது இடத்தில் தவறாய் நடந்து இருக்கிறான்.

பத்து நிமிஷம் போதும் தாயா.கொஞ்சம் கண்டுக்காம விடுங்க ….உயிரை எடுத்துடுறேன்.”என்று அர்ஜுனின் கோபம் அங்கு இருந்த ஒவ்வொருத்தரின் கோபத்தை தான் எதிரொலித்தது.

சட்டென்று அந்த இடம் கந்தக கிடங்கில் பிடித்த தீ போல்,பல எரிமலை தொடர்கள் ஒன்றாய் வெடிப்பது போன்ற சூழல் உருவாகி போனது.

“விடுங்க அங்கிள் அர்ஜுன் தான் கரெக்ட்…இவனுங்களை எல்லாம் நடுத்தெருவில் நிற்க வைத்து கொன்றால் கூட தப்பில்லை தான்.  இப்படி பொது இடத்தில் ஒரு பெண்ணையோ, சிறுமியையோ பாலியல் வன்முறைக்கு ஒருவன் ஆளாக்குகிறான் என்றால் அவனை எதிர்த்து கேள்வி கேட்க ஒருவரும் துணிய மாட்டார்கள் என்ற எண்ணம் தானே காரணம்.

பஸ்களில்,அலுவலகங்களில்,ஷேர் ஆட்டோக்களில் தங்கள் குடும்பத்தை காக்க ஓடும் பெண்களை கண்களால் துகில் உரிவதும்,இடிமன்னர்களாய் இடிப்பதும், தொட்டு தடவுவதும் தொடர்கதைகளாக தானே இருக்கிறது.

அதன் அதீதம் தான் இது போன்ற நிகழ்வுகள். இப்படி நடுத்தெருவில் நாலு பேரை போட்டு தள்ளினால் தான் தப்பு செய்யும் எண்ணம் கூட இன்னொருவனுக்கு வராது.”என்றாள் ஜெஸ்ஸி கண்கள் சிவந்து.

“அட நீ வேற சும்மா இரும்மா…இன்னும் ஏத்தி விடாதே..அர்ஜுன் விடுன்னு சொல்றேன் இல்லை.மூவ் “என்றார் வீரேந்தர்.

அர்ஜுன்,அமன்,தில்சர்,பொது மக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் அந்த ஐந்து பேரை காப்பாத்துவதற்குள் வீரேந்தருக்கும், சரணுக்கும்,ரஞ்சித்திற்கும் போதும் போதும் என்றாகி விட்டது.

மாட்டிய அந்த ஐந்து அரக்க ஜென்மங்களையும் குற்றுயிர் ஆக்கிய பிறகும் கூட அங்கு இருந்தவர்களின் கோபம் தணியவில்லை.

நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது?

-இந்த வரிகள் உண்மை தானே.இது போல் எத்தனை பெற்றோர்கள் கதறி கொண்டு இருக்கிறார்கள் சில வக்கிரங்களுக்கு தாங்கள் பெற்ற பெண்களை,சிறு பிஞ்சுகளை பலி கொடுத்து விட்டு.

https://www.youtube.com/watch?v=3r7-pBYjtQc

‘போதை மருந்து,பாலியல் வன்முறைகளும், குழந்தைகள் கடத்தல்களும்,pronography எல்லாமே ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட மரண பள்ளத்தாக்குகள்.ஏதோ சினிமாவில், கதைகளில் மட்டும் சொல்லபடும் கற்பனை உருவகம் இல்லை.

அமெரிக்காவில் மட்டும் 16.9 பில்லியன் ஆண்டு வருமானம் ஈட்டும் ஆர்கனைஸ்ட் குற்றம் pronography.

‘என் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் நான் இதை பார்க்கிறேன். இதனால் யாருக்கு என்ன கெடுதல்?’ என்று கேள்வி கேட்பவர் அறிவது இல்லை,இவர்கள் சுகம் காண ஏதோ ஒரு இல்லத்தின் மொட்டு தான் கடத்தி கருக்கபடுகிறது என்ற உண்மை.

ரொம்ப rare கேஸ் தாங்களாகவே இந்த தொழிலுக்கு வருபவர்கள்.மீதம் உள்ள 98 சதவீதம்  ஹியூமன் டிராபிக் மூலம் கடத்தப்பட்டு,பாலியல் தொழிலுக்கும், நீல படங்கள் எடுக்கவும் பயன்படுத்தபடுவதே மிக அதிகம்.

மீள நினைத்தால் உடல் கூட மிஞ்சாது.தடயமே இல்லாமல் அழித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்.

amazon,பிளிப்கார்ட்டில் பொருட்களை விற்பது போல் குழந்தைகள், பெண்கள் ஆன்லைன் ஏலம் என்பது எல்லாம் சர்வ சாதாரணம். இது “horrendous crime/மிக கொடூரமான குற்றம்”

இந்தியாவில் இது எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய குற்ற பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி/NCRB ) மற்றும் அமெரிக்காவின் காணாமல் போன மற்றும் exploited குழந்தைகளுக்கான தேசிய மையம் (என்.சி.எம்.இ.சி/NCMEC) சமீபத்தில் கையெழுத்து இட பட்டு இருப்பது குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம்க்கு செக் வைக்க பெரிதும் உதவும்.

தவறான வீடியோ,புகைப்படம் எடுத்து  ‘வெளியே சொன்னாய் என்றால்’என்று மிரட்டி மிரட்டியே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும்  குழந்தைகளும்,பெண்களும் எண்ணிக்கை மிக அதிகம். இப்படி பாதிக்கப்பட்டவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நடந்ததை வெளியே சொல்ல துணியாத வரை, இந்த கூட்டத்தினரின் ஆட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

‘ஊசி இடம் கொடாமல்’ என்று உயர்ந்த தத்துவம் பேசும் சமூகத்தின் முன், இவர்கள் வாய் இருந்தும் ஊமைகளாய், தங்களுக்கு நேரும் கொடூரங்களை வெளியே சொல்ல துணியாமல் அனுபவிக்க பழக்கப்படுத்தி விடபடுகிறார்கள்.

தோழமை ,உறவுகள் மூலம் போதை மருந்துக்கு பழக்க படுத்த படும் பிள்ளைகள்,பெண்கள்  பாதி என்றால்இவர்கள் அறியாமலே இவர்கள் சாப்பிடும் பொருட்களில் கலந்து விற்று இவர்களை அடிக்ட் ஆக்கும் குரூரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சில வாரங்கள் போதை மருந்து பழக்கப்படுத்தி விட்டால் அது வெறியாக மாறி விடும்.மூச்சு விடுவது உயிர் வாழ எத்தனை அவசியமோ அத்தனை அவசியமாய் மாறி விடும் நரகம் அது.’ஜஸ்ட் ஒரு முறை ட்ரை’என்று ஆரம்பிப்பது முடிவற்ற பயணமாய் தொடர்ந்து கடைசியாக இறுதி யாத்திரைக்கு வழி வகுத்து விடும்.

வாழ்விற்கும்,மரணத்திற்கும் நடுவேஉள்ளே இடைவெளியில் இவர்கள்   சிக்கி மீளவே முடியாத பல அவலங்கள், கொடுமைகள், கோராமைகள் அனுபவிக்கும் போது  நடைபிணமாகி விடுகிறார்கள்.

இது கிடைக்க எது வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலையில் வைக்க படும் மக்கள்,இந்த போதைக்காக கொலை,கொள்ளை,பாலியல் தொழில்,ஆட்கடத்தல்,மற்றவரை போதைக்கு ஆளாக்குதல் என்று எந்த extremeக்கு வேண்டும் என்றாலும் செல்வார்கள்’என்பதை நினைத்து பார்த்த வீரேந்தர் கண் கலங்க நின்றார்.

‘இன்னும் இந்த யூனிபோர்ம் கடைசி முறையாய் கழற்றும் வரை இது போன்ற எத்தனை கொடுமைகளை,மரணங்களை சந்திக்க நேரிடும்?’என்று நினைத்த சரண் வேதனை பெருமூச்சினை வெளியிட்டான்.

“ஸ்டாப் …ஸ்டாப்…அவங்க செத்துட போறாங்க.இதில் யார் எல்லாம் இருக்காங்க என்று அவங்க கிட்டே விசாரிக்கணும் …விடுங்க.”என்று வீரேந்தர் சொல்ல,சரணும்,ரஞ்சித்தும் அந்த ஐந்து பேரை குப்பை போல் அள்ளி போலீஸ் ஜீப்பில் போட்டார்கள்.

“நல்ல வேலை செய்தே ப்ரீத்திமா …”என்று வீரேந்தர் வெறும் காற்றுடன் தான் பேசி கொண்டு இருந்தார்.அவர் பாராட்டுவதை கேட்க ப்ரீத்தி அங்கே நின்று இருக்கவில்லை.

u டர்ன் எடுத்து மீண்டும் ப்ரீத்தி ஓட ஆரம்பித்து இருந்தாள்.இந்த முறை அவள் ஓட்டம் இந்த கயவர்கள் கையில் சிக்கி இருந்த அந்த பிள்ளையின்  பள்ளியை நோக்கி இருந்தது.

தில்சர் குழுவில் சிலர் அந்த  ஜீப்புக்கு காவலாய் இருக்க,வீரேந்தர்,அர்ஜுன், அமன்,ரஞ்சித், ஜெஸ்ஸி, தில்சருடன்  இன்னும் சிலர் ப்ரீத்தியின் பின்னால் அந்த பள்ளியை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

“வாட் ப்ரீத்தி …இப்போ என்ன?”என்றாள் ஜெஸ்ஸி.

“அந்த பெண் body language அப்பொழுதே சரியில்லை.இவனை துரத்திட்டு ஓடும் போது திரும்பி திரும்பி அந்த பள்ளிக்கு உள்ளே செல்லும் அந்த சிறுமியையும்  என் கண் பார்வையில் வைத்துட்டே தான் ஓடினேன்.சம்திங் நோட் ரைட்…மை கட் டெல்லஸ் மீ…”என்ற ப்ரீத்தியின் பேச்சை ஜெஸ்ஸி மொழிபெயர்க்க அங்கு இருந்தவர்களுக்கு பதற்றம் கூடி போனது.

“இத்தனை பெரிய ஸ்கூல்…அதில் எந்த வகுப்பில் அந்த பிள்ளையை தேடுவது?”என்றான் அர்ஜுன்.

“i  know டு which கிளாஸ் ஷி went டு ….அவளை என் கண் வலையத்துக்குள் வைத்து கிட்டே தான் ஓடினேன்.”என்று ப்ரீத்தி சொல்ல,அப்பொழுது தான் அர்ஜுனுக்கு புரிந்தது ஓடும் போது பல முறை ப்ரீத்தி ஏன் திரும்பி, திரும்பி பார்த்து கொண்டு ஓடி கொண்டு இருந்தாள் என்பது.

முன்னால் அரக்கனை துரத்தி கொண்டே ஓடியவாறு, பின்னால் அந்த பிள்ளையின் மேலும் அவள் பார்வையை வைத்து கொண்டு இருந்து இருக்கிறாள்.இது தான் பெண்களுக்கு தேவைப்படும் அலெர்ட்னெஸ் என்பதா?தன்னை சுற்றி 360 டிகிரியில் எந்த கணமும் பார்வை பதித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதா?

நெருப்புக்கோழி போல் வாட்ஸ்அப்பில்,முகநூலில் முகத்தை போதித்து கொள்ளாமல் தனக்கும்,மற்றவர்களுக்கும் கூட ஆபத்து என்றால் சட்டென்று செயல் பட ஒரு பெண்ணிற்கு மிக முக்கியம் தன் சுற்றுப்புறத்தை பார்வையால் அலசி ஆராயும் திறன்.

குதிரைக்கு கண் பட்டயம் கட்டியபடி செல்வதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை.எந்த நொடியும் எதுவும் நிகழலாம் என்னும் போது இந்த உட்ச கட்ட awareness தன் சுற்றுப்புறத்தின் மீது ஒவ்வொரு பெண்ணிற்கும் இருப்பது அவசியம்.

இன்று ப்ரீத்தியின் அந்த விழிப்புணர்வு எந்த அளவிற்கு தன்னை சுற்றி நடப்பவை அனைத்தையும் கவனித்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அர்ஜூன்க்கு அவனையும் அறியாமல் புன்னகையை அவன் முகத்தில் மலர விட்டது.

அமன்ஜீத் ப்ரீத்தியின் இந்த துணிச்சலை நேராய் கண்டு முழுவதும் பித்தாகி அவள் பின்னால் ஓடி கொண்டு இருந்தான்.ஒரு கணம் கூட hesitate செய்யாத ப்ரீத்தியின் இந்த திடம் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் வியப்புடன் அவளை நோக்க தான் வைத்து கொண்டு இருந்தது.

‘எல்லோரும் வரும் போதே ‘expiry’ தேதி உடன் தான் இந்த பூமிக்கு அனுப்பி வைக்க பட்டு இருக்கும் போது,யாரும் 2000 வருடம் எல்லாம் உயிர் வாழ போவதில்லை என்னும் போது மற்றவர்களுக்கு உதவுவதால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தம் கிடைக்கும் போது அதை செய்ய தயங்குவதில் அர்த்தம் என்ன இருந்து விட போகிறது?

அதிலும் பெண் இன்னொரு உயிரையே உலகிற்கு கொண்டு வரும் அமிர்த கலசங்கள்.மற்றவர்களுக்கு உதவ சொல்லியா தர வேண்டும்?தன்னை காத்து கொண்டே மற்றவர்களை காத்து விடும் ரட்ஷகிகள் ஆயிற்றே பெண் இனம்.

எங்கேயோ படித்தேன் ஜெஸ்ஸி.வாழ்க்கையில் எந்த நொடி நீ எதற்காக இங்கு பிறந்து இருக்கிறாய் என்பதை உணருகிறாயோ,உன் எந்த செயல் உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறதோ அந்த நொடி நீ உன் வாழ்க்கையை முழுமையை வாழ்ந்த மனிதன் என்று சொல்லி கொள்ளலாமாம்.” என்று ஜெஸ்ஸியிடம் ப்ரீத்தி சொன்னது நினைவுக்கு வர அர்ஜுன் முகம்  பெருமையில் மிளிர்ந்தது.

தெருக்களில்,பள்ளி,கல்லுரி அருகே எத்தனையோ பேர் குழந்தைகளிடமும்,பெண்களிடமும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு தான் கடப்போம்.

கண்ணில் பதிவதில் பாதி கருத்தில் நில்லாமல் தான் போகும்.ஆனால் ஒரு உடல் மொழி காட்டி கொடுத்து விடும் நம் கண் முன்னே தவறு எதுவும் நடக்க போகிறதா இல்லை நடந்து கொண்டு இருக்கிறதா என்பதை.

இது எல்லாம் நமக்கு ஏன் என்று கண்டும் காணாமல் ஒதுக்கி போகும் நல் உள்ளங்களும் இருக்க தான் செய்கிறார்கள். எனக்கு எது வந்தாலும் பரவாயில்லை கண் முன்னே நடக்கும் தீமையை தட்டி கேட்டே தீருவேன் என்று ப்ரீத்தி போன்ற பெண்களும் துணிந்து தான் இருக்கிறார்கள்.

ஓடி வந்தவர்கள் கண் முன்னே வந்தது அந்த பள்ளி.பல பள்ளிகளை போல் சுற்றுவர் இல்லாமல்,சுகாதார சீர்கேடுகளின் மத்தியில் வெளியே மட்டும் பளபள என்று கலர் அடிக்க பட்டு உள்ளே ஓட்டை உடைச்சல் என்று ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒன்றாய் அது இருந்தது.

அந்த பள்ளியின் பிரின்சிபால் ஒரு பெண்.அவர் எங்கோ கிளம்பி கொண்டு இருந்தார்.சட்டென்று அத்தனை பேர் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அதுவும் காக்கி சட்டையுடன் மூவர் நுழைய அவர் மிரண்டு போனார்.

“ஸ்டாப் …ஸ்டாப் “என்று அவர்களை அவர் தடுத்து நிறுத்த முயல,

“அங்கிள் …யு எக்ஸ்ப்ளெய்ன்.”என்ற ப்ரீத்தி அதிர்ந்து போய் நிற்கும் ப்ரின்சிபாலை இடித்து தள்ளாத குறையாய் கடந்து தரை தளத்தில் இருந்த ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

அந்த வகுப்பில் இருந்த பாடம் நடத்தி கொண்டு இருந்த ஆசிரியரும்,வகுப்பில் இருந்த பெண்களும் சட்டென்று அத்தனை பேர் உள்ளே நுழைய மிரண்டு தான் போனார்கள்.

“ஹே ….Tū kauṇa hai/யார் நீங்க எல்லாம்?…Tusīṁ kī kara rahē hō/இங்கே என்ன செய்யறீங்க?Dafā hō jā’ō//வெளியே போங்க.”என்று அவர் பஞ்சாபியில் அலற,அவரிடம் சரண் அங்கு நடப்பதை விளக்கி கூறினான்.

அதையே வெளியே வீரேந்தர் ப்ரின்சிபாலிடம் சொல்லி கொண்டு இருந்தார்.

வீரேந்தர்,சரண் சொன்னதை அந்த பள்ளி பிரின்சிபால்,அந்த வகுப்பு ஆசிரியை ஏற்று கொள்ளவே இல்லை.தேய்ந்து போன ரெகார்ட் மாதிரி,’எங்கள் பள்ளி அப்படி பட்டது இல்லை,எங்கள் மாணவர்கள் அப்படி பட்டவர்கள் இல்லை’என்பதையே தான் திருப்பி திருப்பி சொல்லி கொண்டு இருந்தார்கள்.

பெற்றோர்களும் இந்த மைண்ட் செட்டிற்கு விதிவிலக்கு அல்ல.’என் பிள்ளை அப்படி செய்யறவங்க இல்லை’என்று சொல்பவர்கள் அறிவதில்லை இன்றைய தலைமுறையினர் ‘சமூக வலைத்தளங்களின் கைபொம்மைகள்’ என்பதை.

“Tell me about your friend,i tell about you’ என்ற பதத்திற்கு ஏற்ப இன்றைய தலைமுறை  எது நல்ல நட்பு,எது கூடா நட்பு என்பதை எல்லாம் பகுத்து அறிவதில்லை.

இந்தியாவில் எத்தனையோ பள்ளி பிள்ளைகளின்  மரணங்கள் ,ஹாஸ்டல் தற்கொலைகள்,rehab சென்டர் அறைகள் அறியும் எது உண்மை என்பதை. வெளி உலகிற்கு வராமல் ‘குடும்ப மானம்,பள்ளி பெயர்’ என்று மறைக்க படும் மரணங்கள் மிக அதிகம்.

ப்ரின்சிபாலும்,வகுப்பு ஆசிரியையும் அங்கேயே நின்று கத்தியவாறு ப்ரீத்தியை தடுத்து நிறுத்த பார்க்க,அவர்களை முன்னேற விடாமல் ஜெஸ்ஸி,அர்ஜுன்,அமன்ஜீத்,தீப் ப்ரீத்திக்கு அரனாய் நின்றார்கள்.கைலப்பே உண்டாகும் சூழல் அது.

அர்ஜுன் “கோ”என்று கை காட்ட ப்ரீத்தி பின்னால் இருந்து இவர்கள் கத்துவதையும் பொருட்படுத்தாமல் வகுப்பறைக்குள் ஒவ்வொரு டெஸ்க் அருகேயும் குனிந்து நிமிர்ந்து தேடினாள் ப்ரீத்தி.

‘கிளாஸ்,ஸ்கூல் விட்டு வெளியே போங்க…இல்லைன்னா போலீசை கூப்பிடுவேன்’ என்று சொல்வதற்கு ப்ரின்சிபாலுக்கும், டீச்சருக்கும் அந்த பள்ளி நிர்வாகிகளுக்கும் வழி இல்லாமல் போனது.உள்ளே வந்து இருப்பதே போலீஸ் தானே.

“ப்ரீத்தி…என்னடீ செய்யுறே?”என்றாள் ஜெஸ்ஸி.

“பாக் …அவன் கொடுத்த பாக் தேடுறேன்.அந்த பொண்ணு இந்த கிளாஸ்க்குள் தான் வந்துச்சு பாக்க்குடன் .நான் பார்த்தேன்.” என்று தேடிய ப்ரீத்தி சட்டென்று ஒரு கறுப்பு நிற பையுடன் நிமிர்ந்தாள்.

“ரஞ்சித்…இந்த பாக் தான் அது.”என்று ரஞ்சித்திடம் ப்ரீத்தி கொடுக்க,அதை கிளவுஸ் அணிந்த கையால் ரஞ்சித் பிரிக்க,அந்த பை முழுக்க “கருந்தேள்” படம் பதித்த போதை மருந்து பொட்டலங்கள் இவர்களை பார்த்து சிரித்தது.

  

இது போல் எத்தனை புத்தக பைகள் விஷத்தை சுமந்து கொண்டு இந்தியாவில் வகுப்பறைகளை கரை படுத்தி கொண்டு இருக்கிறதோ?

“அந்த பொண்ணு எங்கே?”என்று சரண்,ரஞ்சித் ஒரே சமயத்தில் அந்த கிளாஸ் டீச்சரை பார்த்து கேட்க,”எந்த பொண்ணு சார்?”என்று அவர் பயத்தில் நடுங்கினார்.

அதுவரை அங்கு எழுந்த கூச்சல் எல்லாம் நின்று போனது. ஒருத்தரின் முகத்திலும் ஈயாடவில்லை. இதோ கண் முன்னே தடயம்.

உள்ளே வந்த ப்ரின்சிபாலும்,வீரேந்தரும் கூட அத்தனை பெரிய பையையோ,அதில் அத்தனை போதை மருந்து பாக்கெட் இருக்கும் என்றோ எதிர்பார்த்திருக்கவில்லை.

ஒரு கணம் அங்கு இருந்தவர்கள் மீண்டும் உறைந்து தான் போனார்கள்.

ரஞ்சித்,சரண் பார்வை அந்த வகுப்பில் எந்த டெஸ்கில் இருந்து அந்த பை எடுக்கப்பட்டதோ அந்த டெஸ்கில் அமர்ந்து இருந்த மற்ற சிறுமிகளின் மீது விழ,அந்த பிள்ளைகள் பயத்தில் அழவே ஆரம்பித்து விட்டார்கள்.

“அந்த பை எங்களுடையது இல்லை மேடம்…காட் ப்ரோமிஸ் மேடம் …”என்று அந்த பிள்ளைகள் அழ, அவர்களின் அழுகுரல்,பயந்த முகம் கல் நெஞ்சையும் இலக்க கூடியது என்று வாய் வார்த்தையாக வேண்டும் என்றால் சொல்லலாமோ?

நிஜம் வேறு மாதிரியாக தானே இருக்கிறது.

அரக்கன் பெரியவனா?    ரட்சகன் பெரியவனா?

 

பயணிப்போம்…