MM 11

மாயவனின் மயிலிறகே

அத்தியாயம் 11

“ம்மா.. என்ன பண்ற ரெடியா எல்லாம் எடுத்து வச்சிட்டயா? இல்லயா?” எனக் கத்திக் கொண்டேத் தாயின் அறையில் நுழைந்திருந்தாள் ஜனனி.

“ஏன்டி கத்தற இங்கத்தான இருக்கேன்” எனச் சலித்தப்படியே மறுநாள் கிளம்புவதற்கு இன்றே பேக்கிங் செய்துக் கொண்டிருந்தார் காயத்ரி. முகத்தில் மகனைக் காணப்போகும் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

நாளை மறுநாள் அபிஜித்தின் பிறந்த நாள். இத்தனை வருடமாக அலைப்பேசி மூலமாக வாழ்த்துக் கூறியவள் இந்த வருடம் நேரில் செல்லத் திட்டமிட்டிருந்தாள்.

காரணம் ‘பாப்பு’

யாருடனும் (சிலரைத் தவிர) நெருங்கி பழகாத தன் அண்ணன் ஒரு பெண்ணை தன் வீட்டில், அதுவும் தன் அறையில் வைத்துப் பார்த்துக் கொள்கிறான் என்றால் அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். இன்னும் சரியாக கூறவேண்டுமென்றால் பாப்புவின் மேல் சிறுப் பொறாமை.

தனக்குக் கிடைக்காத அண்ணனின் பாசத்தைத் தனி ஆளாக அனுபவிக்கிறாள் என்ற கோபம். தினமும் பாட்டியின் மூலம் கேட்கும் அவளின் சேட்டைகள், அதற்கு அண்ணனின் கெஞ்சல்கள், மிரட்டல்கள் எனத் தான் அனுபவிக்க வேண்டிய ஒன்றை சம்மந்தமில்லாத ஒருத்திப் பறித்துக் கொண்டதுப்போல ஒரு எண்ணம்.

பாப்பு சிறுகுழந்தை போல மனநலம் கொண்டப் பெண் என்ற தகவலை மட்டும்தான் கூறியிருந்தனர். அபிஜித்தின் மீதான தாக்குதலையோ, அதில் பாப்பு இடையில் வந்து தன்மேல் தாங்கிக் கொண்டதையோ கூறியிருக்கவில்லை.

அதனை அபிஜித் விரும்பமாட்டான். அவனைப் பற்றிய இது போன்ற தகவல்கள் வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி, செய்தி தாள்களின் மூலமே ஜனனி மற்றும் காயத்ரியால் அறிய இயலும்.

ஆனால் சந்திரன் எப்போதும் தன் மகனை தன் பார்வையிலேயே வைத்திருப்பவர். அவனின் அன்றாட நடவடிக்கைகள் முதல் அவனை நோக்கி வரும் தாக்குதல்கள் என அனைத்தையும் அறிவார்.

அதில் சிலவற்றை தன் பலத்தால் நீர்த்துப் போகவும் செய்வார் . அதேப்போல்தான் பாப்புவைப் பற்றியும் அவர் அறிவார். மகனைக் காப்பாற்றிய பெண் என்ற மதிப்பும், அதனால் சிறு பாசமும் உண்டு அவர் அறியாமலே.

இந்த தாக்குதல் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாததால் விசயம் வெளியே தெரியவில்லை. அதுவுமில்லாமல் நடந்து முடிந்ததைக் கூறி காயத்ரியைக் கலவரப்படுத்த விரும்பவில்லை அந்த பெற்றவர்கள்.

ஆர்வமும், கோபமும், மகிழ்ச்சியும், பொறாமையுமாய் ஜனனி மேற்கொள்ளும் இந்தப் பயணம் அவளை அண்ணனிடம் நெருங்க வைக்குமா? இல்லை மேலும் விலக வைக்குமா?

கலெக்டர் அலுவலகம். பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள். ஆங்காங்கே மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். நாகு இப்பொழுதெல்லாம் சரியாக தன் வேலையைச் செய்துக் கொண்டிருந்தான்.

தனது அறையில் சில முக்கிய காவல் துறைஅதிகாரிகளுடன் ஒரு வழக்கு சம்மந்தமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தான் அபிஜித்.

அது ஒரு பெண்ணின் கொலை வழக்கு. வன்புனர்வு செய்யப்பட்ட அந்தப் பெண்ணை, மேலும் முகத்தையும் சிதைத்துக் கொடூரமாக கொலை செய்திருந்தனர். சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் இன்று காவல்துறை அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் மாவட்ட ஆட்சியாளரின் தலைமையில் கூட்டப்பட்டிருந்தது.

அப்போது வீட்டு எண்ணிலிருந்து அழைப்பு வர, அபிஜித் கட் செய்து விட்டு மீண்டும் பேசத்தொடங்கினான்.

ஆனால் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்த வண்ணம் இருக்கவே சற்றே எரிச்சலடைந்து, “சாரி…ஆபீசர்ஸ் ஜஸ்ட் எ மினிட்” என அவகாசம் கூறியவன் முகம் இறுக எழுந்துச் சென்றான்.

அபிஜித்திற்கு அவன் வேலையின் போது தேவையில்லாமல்,தொந்தரவு செய்தால் கோபம் கோபுரம் வரை தொட்டு வரும். அவன் பொறுமையை மேலும் சோதிக்கும் விதமாக மீண்டும் அழைப்பு வரவே ஏதாவது அவசரத் தேவையாக இருக்குமோ என எண்ணினாலும் “ஹலோ” காட்டமாக வந்ததுக் குரல்,

“………….” (அமைதி அமைதி அமைதியோ அமைதி)

அது இன்னும் கொஞ்சம் கோபத்தைத் தாறுமாறாய் கிளறிவிட, “பாப்பு பேசு” என அழுத்தமாக வந்தது. வீட்டு எண்ணிலிருந்து அழைப்பது அவள் மட்டுமே மற்றவர்கள் அவரவர் அலைபேசியையே உபயோகிப்பது.

“ஜித்து வீட்டுக்கு வா…. என்னை விட்டுட்டு இவங்க எல்லாரும் கோவிலுக்கு போறாங்களாம். நானும் போறேனே, என்னையும் கூட்டிட்டு போக சொல்லு ஜித்து… நீ சொன்னா கேட்பாங்க” என நேரம்காலம் தெரியாமல் பேசி வைக்க,

இதற்குதானா எனப் பல்லைக் கடித்தவன், “இதுக்குதான் போன் போட்டுட்டே இருந்தாயா? ஒரு தடவ கட் பண்ணா வேலையா இருக்கேன்னு தெரியாது… சின்ன பிள்ளையா நீ… போன வை , வீட்டுக்கு வந்ததும் பேசறேன்” என ஏசிவிட்டுப் போனை அணைத்து விட்டான்.

ச்சே…வரவர சேட்டை அதிகமாய்ட்டே போகுது. வீட்டுக்குப் போய் பேசிக்கறேன், என மனதோடு பேசிக் கொள்ள மீண்டும் அழைப்பு வந்தது.

போனைப் பார்த்தவாறு நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டவன், கோபத்தைக் கட்டுப்படுத்தி போனை ஆன் செய்து காதில் வைத்ததுதான் நேரம். “இனி போன் பண்ண மாட்டேன்னு சொல்லத்தான் போன் பண்ணேன். ஹான்… அப்பறம் நான் இன்னும் சின்ன பிள்ளைதான்… என்ன திட்டிட்ட இல்ல இனி உங்கூட பேசமாட்டேன்.. “எனக் கூறிப் பட்டென்று போனை வைத்துவிட்டாள்.

இப்போது அவன்தான் முழித்துக்கொண்டு நின்றிருந்தான். நான்தான் கோவமா பேசனும். ஆனா இங்க நிலைமையப் பாரு, என போனை தன் நெற்றியில் வைத்து கண்மூடி நின்றவன் முகத்தில் சிறிது நேரத்தில் இளம் புன்னகையொன்று அழகாய், வசீகரமாய் படர்ந்தது.

அவனுமே இப்படி பேச வேண்டும் என்று எண்ணவில்லை. விடாமல் தொல்லை செய்யவும் கொஞ்சமாக…. கொஞ்சமே… கொஞ்சமாகத் திட்டிவிட்டான்.

ஆனால் பேசியப்பிறகு மனம் சங்கடப்பட்டது உண்மை. சரி மாலைச் சென்று, சமாதானப்படுத்திக் கொள்ளலாம் எனக் கிடப்பில் போட உடனே அடுத்த போன் வரவும் “இவளை” எனப் பல்லைத்தான் கடிக்க முடிந்தது அவனால். ஆனால் அதன் பிறகு அவனுக்கு வாய்ப்பு தராமல் அவளே பேசி வைத்துவிடவும் சிரிப்புதான் வந்தது.

“பாப்பு…பாப்பு… சரியான காட்டு பில்லி நீ… உன்னை வந்துக் கவனிச்சுக்கறேன்.” எனச் செல்லமாய் வைதவன், நல்லவேளை இப்படி தனியாக நின்று கொண்டு சிரிப்பதை யாரும் கவனிக்கவில்லை எனச் சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் கலெக்டராய் மிடுக்காக தன் முகத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்துச் சென்றான்.
**********

சென்னையில் உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் தங்கியிருந்த ஆடம்பர அறையின் பால்கனியில் அமைதியாக நின்றிருந்தான் அவன். ராகுல் . ஷௌரியா. வடநாட்டு சாயல் அப்பட்டமாய்த் தெரிந்தது. கைகளைக் கட்டி சிற்பம்போல அசையாது நின்றிருந்தான்.

ஆனால் மனதில் புயலாய் சில ஞாபகங்கள், அதில் சில முகங்கள். அவன் எண்ணத்தை தடுக்கும் விதமாய் அலைபேசி அழைத்தது.

அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டவன் பரபரப்பாக எடுத்து காதுக்கு கொடுத்தான். முகம் மகிழ்ச்சி, சோகம் என மாறிமாறி வர இறுதியாக தகவலுக்கு நன்றி கூறி வைத்துவிட்டான்.

உடனே வேறு ஒரு எண்ணுக்கு தொடர்பு கொண்டவன் (அவன் ஹிந்தியில் பேசுவது தமிழில்)

” டாலு கிடைச்சுட்டா அம்மு” என மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.

“………”

“வேண்டாம் நானே பாத்துக்கறேன்”

“….”

“இல்ல இப்ப வேண்டாம்… நீ அர்னவ் வ பாத்துக்கோ”

“……”

“அவ எனக்கும் முக்கியம் அம்மு” உறுதியாக வந்தது குரல்.

“சரி….வச்சிடறேன் இப்ப திருவள்ளூர் போகனும்….கலெக்டர மீட் பண்ண” என ஒருவிதப் புன்னகையுடன் கூறியவன் இணைப்பைத் துண்டித்தான்.

“அபிஜித்….. கலெக்டர் ஆஃப் திருவள்ளூர். ஐ எம் கம்மிங் ” எனத் தன் சன் கிளாஸை அணிந்தவன் இண்டர்காமில் அழைத்து அறையைக் காலி செய்வதாகக் கூறி தயாராகத் தொடங்கினான்.

அபிஜித்தின் வீட்டில் பெரும் போராட்டமே நடந்து ஓய்ந்திருந்தது. ஆனால் எதுவும் பலனளிக்காமல் போகவே சோகமாக அமர்ந்திருந்தாள் அவள்.

முடி கழுத்து வரை வளர்ந்திருந்தது. அதை அப்படியே லூசில் விட்டவாறு காற்றில் அசைந்தாடியது. பல வண்ணங்களினால் ஆன சுடிதார் அணிந்திருந்தவள், அங்கும் இங்கும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த பொன்னம்மாவைப் பார்த்தவாறு நகத்தைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தாள்.

இந்நேரம் அபிஜித் இங்கு இருந்திருந்தால் அவன் கையால் ஒரு கொட்டு வாங்கியிருப்பாள் என்பது தின்னம். “என்ன செய்யலாம்…என்ன செய்யலாம்” என மூளைத் தாறுமாறாக சிந்திக்க, எழுந்து தாத்தா பாட்டியின் அறைக்குச் சென்றாள்.

உள்ளே வந்தவள், அமைதியாக அமர்ந்து கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை சரிபார்த்துக் கொண்டிருந்த புவனாவின் காலடியில் அமர்ந்து அவரது மடியில் தலைசாய்த்துக் கொண்டாள்.

அவரும் பார்த்துக் கொண்டுத்தானே இருக்கிறார் இவளின் தவிப்பை. “என்னடாம்மா” எனப் பரிவுடன் தலையைக் கோதினார்.

அவரது கையைத் தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்டவள், “நானும் வரனே பூ” (புவனாவின் சுருக்கம் பூ) பாவமாய்க் கேட்க, பெரியவருக்கு தன்நிலை மறந்தது! அவள் நிலை மறந்தது! கூட்டிப் போகலாமா என்று கூட தோன்றியது.

“வேண்டான்டா கண்ணு என்னாலயே சரியா நடக்க முடியாது, இதுல நான் எப்படிடா உன்னப் பாத்துக்குவேன்.” என நிலைமையை விளக்கினார்.

அதைக் கேட்டவளின் கண்கள் பளிச்சிட்டது. “பூ உனக்காத்தான் நான் வரேங்கறேன்… நான் வந்தா உன் கைய பிடிச்சுக்கிட்டு ஹெல்ப்பா இருப்பேன்ல” எனத் திடீர் சேவகியாக மாறினாள்.

அவளின் எண்ணம் அறிந்தவர் “அதான் பொன்னம்மா வராளேக் கண்ணு” என தடை போட,

“ஐயோ! பூ, பொன்னு உன்ன பிடிக்க முடியாம கீழ விட்டுட்டாங்கன்னா!” என அவர் போட்டத் தடையை அநாயசமாகத் தாண்டினாள்.

அதை அறையினுள் பால் டம்ளருடன் நுழைந்துக் கொண்டிருந்த பொன்னம்மா கேட்டுவிடக் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள். அவர் புவனாவிடம் பால் கொடுத்துவிட்டு இவளை போலியாய் முறைத்துக் கொண்டு சென்றதும், இந்த விக்கெட் இனி விழாது! எனப் பாட்டியை டீலில் விட்டவள் பொன்னம்மா பின் சென்றாள்.

புவனாவிற்கும் சங்கடமாய் இருந்தது. எந்நேரமும் பூ…பூ.. எனத் தன் பின்னால் பூனைக்குட்டியாய் சுற்றி வருபவள், இரண்டு நாட்களாய் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு நானும் வருவேன் என அடம்பிடிக்க, அபிஜித்தோ வேண்டாம் என மறுத்திருந்தான்.

அவன் கூறுவதும் நியாயமாய்ப்பட்டது. பட்டாம்பூச்சியாய் சுற்றி வருபவள் இந்த வயதானவர்களுடன் வந்தால் அமைதியாய் இவர்களுக்கு ஈடுகொடுத்துப் பொறுமையாக இருப்பாளா? என்பது சந்தேகமே.

மற்றபடி இவள் வந்த பிறகுதான் “வீடு” என்ற அமைப்பே நிறைந்ததாய் தோன்றியது அவருக்கு. அபிஜித் இருந்தாலும் அவன் யாருடனும் அவ்வளவாக ஒட்ட மாட்டான். அதனால் எந்நேரமும் சலசலக்கும் அருவியாய் சிரித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் சுற்றி வரும் இந்த பட்டாம்பூச்சியை மிகவும் பிடித்துப் போயிருந்தது அவருக்கு. இதை நினைத்துக்கொண்டே பாலை அருந்தியவர் மீண்டும் தன் சரிபார்க்கும் பணியைத் தொடங்கினார்.

பொன்னம்மா அடுப்படியில் இருக்க, அவரின் பின்னால் சென்று நின்றவள் அவர் முந்தானையைப் பிடித்து இழுத்து “பொன்னு” என ராகமாக அழைக்க,

தன் கனவனுக்கு பின் தன்னை “பொன்னு” என அழைக்கும் இவளை திட்ட மனம் வருமா என்ன? அவள் புறம் திரும்பியவர், “ஏங்கண்ணு ரெண்டு நாள்தான, நாங்க வந்திடுவோம்ல”

“ரெ………ண்டு நாள் பொன்னு” என விரலைக் காட்டியவாறு சோகமானாள்.

அவருக்கு அவளை அப்படி பார்க்க முடியவில்லைதான், ஆனால் இந்த நிலமையில் இவளைக் கூட்டிக் கொண்டுப் போக முடியாது என்னும் வாதமும் ஏற்புடையதாகவேப் பட்டது.

இப்போது இப்படி கெஞ்சுபவள் , இவர்களை வசமாய் ஏமாற்றி காரியம் சாதித்துக் கொள்ளுவாள் என்பதை அறிவார்.

“தம்பிதான் உன்னை அவர்கூட கூட்டிட்டு போறேன் சொன்னாருல்ல” எனக் கேட்க,

அபிஜித் திட்டியது நினைவு வர, “போ பொன்னு ஜித்து என்னை திட்டிட்டாங்க…நான் இனி அவங்ககூட பேசமாட்டேன்” என குழந்தையாய் மிழற்றினாள்.

“அவங்க திட்ற அளவுக்கு நீங்க என்ன பண்ணீங்க ” என கறார் ஆசிரியராய் இவர்,

“போன்தான் பண்ணேன்” நல்ல பிள்ளையாய் அவள்,

“போன் பண்ணதுக்கா திட்டினாரு?” கேள்வியாய் மீண்டும் இவர்,

“ம்…டென் டைம்ஸ்தான் பண்ணேன்” விளக்கும் மாணவியாய் இவள்,

“அதான! வேலையா இருந்திருப்பாங்க, நீங்க தொந்தரவா இத்தனத்தடவ போன் பண்ணா அப்பறம் திட்டத்தான் செய்வாங்க” எனச் சரியான புரிதலாய் அவர்,

” ஓ….. ஆனா முதல் தடவையே போன் எடுத்திருந்தா நான் ஏன் மீதி ஒன்பது தடவையும் போன் பண்ணப் போறேன்” விட்டுக் கொடுக்காமல் அவள்,

“அதுவும் சரிதானோ!” என அவர் யோசிக்கத் தொடங்கினார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்குப் போதே அபிஜித்தின் கார் ஓசை கேட்க, “பொன்னு நான் கீழ ரூம்ல இருக்கேன், சொல்லிடாதீங்க” என சிட்டாய்ப் பறந்து விட்டாள்.

அபிஜித் வேகமாக உள்ளே நுழைந்தான். அவளை எதிர்பார்த்து வந்தவன், அவள் வரவேற்பறையில் இல்லை என்றதும் அவசரமாக மாடியேறினான்.

அவர்களது அறையை திறந்து பார்க்க அங்கேயும் இல்லை. கீழே வந்து பொன்னம்மாவிடம் கேட்க அவர் கீழ் அறையைச் சுட்டிக் காட்டினார்.

“ஓஹோ!! ஆனா அங்க என்ன பண்றாங்க மேடம்”என நினைத்தவன் அறையை திறக்க நினைக்க அது உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது.

“பாப்பு” என அழைக்க

உடனே கதவின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

“நான் பேச மாட்டேன்” என பதில் உடனே வந்தது.

“ஸ்ஸப்பா இந்த மூட்டைப் பூச்சிக்கெல்லாம் இவ்ளோ கோவம் வருது” என நினைத்தவன்

“சரி கதவையாவது திற”

“நோ…. நீ பேட் பாய். என்னை திட்டிட்ட” எனக் கதவை அடித்தாள்.

“அப்ப என்கூடப் பேச மாட்டயா”

“……..”

“பாப்பு” தலையை கதவில் சாய்த்தவன் மெதுவாக அழைக்க

“ம்…” அவளும் அதே தொனியில்

“பதில் சொல்லு”

“சொன்னனே”

“சத்தமா சொல்லு எனக்குக் கேக்கல”

“நான் தலையாட்டினேன். எப்படி சத்தம் வரும்.”

“ம்…. கதவில ஒரு முட்டு, முட்டு தெரிஞ்சுக்கறேன்” என கடுப்பாக கூற, அந்தப்பக்கம் அவள் கதவை முட்டி அலறும் சத்தம் கேட்டது. கொஞ்சம் வேகமாக முட்டி விட்டாளோ!

என்ன நடந்திருக்கும் என நினைத்தவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. கதவில் சாய்ந்து நின்றவாறே சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.

இறுக்கம் தளர்ந்தான், முகமூடி கழட்டினான், பதவியை மறந்தான் , பந்தத்தை மறந்தான் அப்படியொரு சிரிப்பு கண்ணில் நீர் வரும் வரை.

இவன் சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு கூட கண்களில் நீர் தழும்பியது. இவனின் மகிழ்ச்சியை பார்த்து. இத்தனைப் பேரை மகிழ்விக்கிறோம் என அறியாமல் தலை இடித்ததோடு, அபிஜித் கேலி செய்வதுபோல் சிரிக்கவும் அழுதுக் கொண்டே படுத்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.

இரவு ஏழு மணி வாக்கில் தாத்தா, பாட்டியுடன் பொன்னம்மாவும் கிளம்ப, அப்போதும் எழுந்து கொள்ளவில்லை அவள். இதுவே நல்லது என அவர்கள் கிளம்பிவிட்டனர்.

அபிஜித்தும் அவர்களை வழியனுப்பிவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டான். மேலும் ஒரு மணிநேரம் கடந்திருந்தது. அவன் இரவு உணவுக்காகக் கீழே வர, அப்போதும் அவள் உறங்கிய அறை திறக்கவில்லை.

என்னவாயிற்று இவளுக்கு? தலையில் இடித்துக்கொண்டது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா? என எண்ணிய மாத்திரத்தில் பயம் தொற்றிக் கொள்ள வீட்டின் பின் பக்கம் பாய்ந்திருந்தான்.

பின் பக்கம் சென்று அந்த அறையின் ஜன்னலை திறக்க, நல்லவேளை அது உள்ளே தாழிடப்படாததால் திறந்துக் கொண்டது.

உள்ளே தலையணையை இழுத்து கட்டிப்பிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுதுதான் சுவாசம் சீரானது அவனுக்கு.

மீண்டும் உள்ளே வந்தவன் அவள் விழித்து வரும் வரை காத்திருக்கலாம் என எண்ணித் தொலைக்காட்சியை ஆன் செய்து அவளறையைப் பார்த்தவாறு அமர்ந்துக் கொண்டான்.

நியுஸ் சேனலில் தினசரி செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார் பெண் ஒருவர். சிறிது நேரம் பார்த்தவனால் அதில் மனம் ஒன்ற முடியவில்லை. எப்போதும் ஆர்வமாய் பார்க்கும் ஒன்று இன்று கசந்தது.

மீண்டும் ஒரு முறை அவளறையை கண்டு மீண்டான். ஏதோ தனிமையாய் உணர்வதைப்போல ஒரு எண்ணம் புதியதாய். சில மாதங்கள் முன்வரை தனியாக இருந்தவன்தான், ஆனால் இப்போது கொல்லாமல் கொன்றது.

வேறு சேனலை மாற்றிக் கொண்டே வர ஒரு மியுசிக் சேனலில் நிறுத்தினான். பொதுவாகப் பாடல்களை விரும்பி கேட்பான்தான். ஆனால் அதற்கு நேரம்தான் ஏது.

சரி இன்று கேட்போமே என நிறுத்த, அதில் சுஜாதா மோகன் உணர்ந்து உருகி பாடிக் கொண்டிருந்தார்.

“நேற்று இல்லாத மாற்றம் என்னது”

“ஆமாடா ஜித்து நீ முன்ன மாதிரி இல்ல இப்பலாம்.” என அவனது மனம் கூறிக்கொண்டது.

அவன் மாற்றம் அவனுக்கே தெரிந்தது. எப்போதும் இருக்கும் இறுக்கம் இப்போது காணாமல் போன அறிவிப்பில் இணைந்து விட்டது. அவள் வந்த பிறகு!

மனதில்கூட “அபி” எனத் தன்னை அழைத்துக் கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் “ஜித்து” என்றே அழைத்துக் கொண்டான். அவளுக்காக பயம் கொள்கிறான், அவளை நினைத்து சந்தோஷம் கொள்கிறான்.

அவளுக்காக, அவளால், என அவனின் ஒவ்வொன்றிலும் அவளையே இணைத்துப் பார்க்கிறான். இந்த மாற்றம் புதியது.

“காற்று என் காதில் ஏதோ சொன்னது”

காற்று ஒன்றும் கூறவில்லையே இவளின்குரல்தான் எப்போதும் “ஜித்து… ஜித்து” என அழைத்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுகிறது. எனப் பாட்டோடு தன் மனதையும் இணைத்துப் பார்த்துக் கொண்டான்.

“இதுதான் காதல் என்பதா!
இளமை பொங்கி விட்டதா!
இதயம் சிந்தி விட்டதா! சொல் மனமே!”

” இதுதான் காதலா?” என்ற ஒற்றை வார்த்தையில் அவனின் நினைவுகள் நின்று விட்டது.

காதலா? என்னில் மாற்றங்கள் நான் உணர்ந்தது நிஜம். அவளுக்காக நான் துடிப்பதும், அழுவதும், மகிழ்வதும் நிஜம். அப்படியென்றால்??????

உடல் சிலிர்த்து, கைகள் ஜில்லிட்டு மண்டைக்குள் பூச்சி குடைய, வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சடசடவென்று பந்தயம் நடத்தியது போல நிலையிழந்து போனான்.

“நான் பாப்புவை விரும்புகிறேனா? இல்லையே பாசம்தானே கொண்டேன்! ஆனால் அதீத பாசம். மனம் எடுத்துரைத்தது.

அது காதலாகுமா? அவள் சிறு பிள்ளைபோல அல்லவா? அப்போது நான் சிறு பிள்ளையைக் கூட காதல் பார்வை பார்க்கும் மிருகமா?

இல்லையே எல்லாரிடமும் அப்படி இல்லையே? இவளிடம் மட்டும்தானா… ஆம் இவளிடம் மட்டும்தான் என உறுதிப் படுத்திக் கொண்டான்.

இது தவறு என ஒரு மனம் எடுத்துரைத்தது. ஏன் கூடாதா? என இன்னொரு மனம் கேள்வி கேட்டது.

உன்னிடம் பாதுகாப்பைத் தேடி அடைக்கலம் ஆகியிருக்கும் தன்னைப் பற்றிய சுயநினைவில்லாதப் பெண்ணை பற்றி இப்படிதான் நினைப்பாயா?

எனப் பல கேள்விகள் இடியாய் முழங்க அந்த வெம்மையை தாங்க முடியாமல், எதிலிருந்தோத் தப்பிப்பவன் போல அவனது அறைக்கு ஓடி குளியலறையில் புகுந்து ஷவரின் அடியில் நின்றான்.

கண்களை மூடி மீண்டும் ஒரு முறை சுய அலசல் செய்ய, கண்ணுக்குள் வந்து ஜித்து எனச் சிரித்தாள் அவள்.

அவள் மீதான பாசம் உண்மை. அது அளவில்லாமல் நீண்டதும் உண்மை. உன்னளவில் நீ சரியாக இருக்கிறாய் பிறகு ஏன் தடுமாற்றம். ஆனால் அவள் நிலை? அவள் மனம்? இது தவறில்லையா? என எதிர் கேள்வி கேட்ட மனதிடம்

இப்போதைக்கு இதை ஏற்றுக் கொள். மீதியை காலத்தின் கையில் விட்டுவிடு எனத் தெளிவான முடிவெடுத்தவன் எவ்வளவு நேரம் நின்றானோ? குளிரத் தொடங்க வெளியில் வந்து உடைமாற்றிக் கொண்டு தலைவாரத் தொடங்கினான்.

“ஐயோ வெள்ளை பேய்!” என ஒரு ஆணின் குரலும், “ஐயோ ஜித்து கருப்பு பேய் ” எனப் பாப்புவும் அலறும் சத்தம் கேட்டு அடித்து பிடித்து வெளியே ஓடிவந்தான் அபிஜித்.