மாயவனின் மயிலிறகே
அத்தியாயம் 12
குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்த அபிஜித்திற்கு அவனது முகமே புதியதாய் தோன்றியது. எந்நேரமும் இறுக்கத்துடன் உம்மென்று இருக்கும் முகம், இன்று மலரைப்போல மலர்ந்து காணப்படுகிறதே!
கூடவே விசிலும்! இறக்கை இல்லாத குறை ஒன்றுதான். அவன் மனம் வானவெளியில் திசையற்று பறந்து கொண்டிருந்தது.
மனதில் ஒரு துடிப்பு, உடலில் ஒரு சிலிர்ப்பு, பார்வையில் ஒரு தவிப்பு உதட்டில் ஒரு சிரிப்பு என பல உணர்வுகளை கையாளத் தெரியாமல் ஏதோ ஒன்றை தாறுமாறாக செய்துக் கொண்டிருந்தான்.
“ஜித்து… நீதானா இது. என்னாலயே நம்ப முடியல. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது! நீ அழகன்டா.” என தன்னைத்தானே சிலாகித்துக் கொள்ள, “ம்க்கும் இதுக்கே இப்படியா!” என அவன் மனம் தலையிலடித்துக் கொண்டு மூலையில் முடங்கியது.
இங்கே இவனின் சந்தோஷத்திற்கு காரணமானவளோ சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். வேறென்ன? பசி… பசி…அகோரப் பசி.
பாப்பு தூங்கி விழித்ததும் மெதுவாக கண்ணை கசக்கியவாறு வெளியே வந்தவள் “பொன்னு…பொன்னு” என கூப்பிட்டுப் பார்க்க காரில் சென்று கொண்டிருக்கும் அவர் வருவாரா என்ன?
“என்ன கதவு சாத்தியிருக்கு?” என எண்ணியவள், அப்போதுதான் ஜன்னலினூடே வெளியில் பார்த்தாள். நன்றாக இருட்டி இருந்ததைக் கண்டவள் முகம் சட்டென தூக்கத்திலிருந்து தெளிந்தது.
“அச்சோ! இருட்டிடுச்சு… என்னை விட்டுட்டு போய்ட்டாங்களா!” என நினைத்து நொடியில் முகம் மூஞ்சுறு போல ஆனது.
“ஜித்துவாலதான் என்னை விட்டுட்டு போய்ட்டாங்க…” என இன்ஸ்டன்ட்டாக மூக்குறிஞ்சியவள் வயிற்றில் அலாரமடிக்க “இப்ப எனக்கு பசிக்குதே… என்ன பண்ண?” என வயிற்றைப் பிடித்தாள் அந்த வளர்ந்த குழந்தை.
சமையலறைக்கு சென்று சாப்பிட எதாவது இருக்கிறதா என்று தேடினாள். பொன்னம்மா சட்னி அரைத்து வைத்திருக்க, தோசை ஊற்ற வேண்டும்… அதற்கு ஜித்து வர வேண்டும்.
“ஜித்துவ கூப்பிடனுமா? நோ.. வேண்டாம் நான் பேச மாட்டேன்.” என தலையை சிலுப்பிக் கொண்டு வீம்படித்தாள்.
“ஆனா பசிக்குதே!” உன் வீம்பு என்னை கட்டுப்படுத்தாது என வயிறு எச்சரிக்கை செய்ய சுற்றிமுற்றி பார்த்தாள். கெட்ச்அப் பாட்டில் இருந்தது.
இந்த சுவை அவளுக்கு பிடித்தமான ஒன்று. அதை எடுத்து சுவைத்துப் பார்த்து “ம்ம்…” என கண்களை மூடி ரசனையுடன் சத்தமெழுப்பினாள்.
ஆனால் இது பசியை கட்டுப்படுத்தாதே! பாட்டிலை மூடாமல் அப்படியே வைத்து விட்டு, மேலே இருந்த எவர் சில்வர் டப்பாக்களை பார்த்தாள்.
” இது…. பருப்பு, சர்க்கரை, மாவு” என விரலால் சுட்டி ஒவ்வொன்றையும் கூறியவள் அடுத்து இருந்த பாத்திரத்தைக் கண்டு,
“இதுலதான் எதாவது இருக்கும்”என முடிவு செய்து அதை எடுக்க பார்த்தாள்.
பொன்னம்மா இவளுக்காக எதாவது தீனி வகைகள் செய்து அதுபோன்ற டப்பாக்களில் வைத்துக் கொண்டே இருப்பார். எட்டி எட்டிப் பார்க்க அது கைக்கு எட்டவே இல்லை.
“ச்சே..இப்ப எப்படி எடுக்கறது… சரி கடைசியா ஒரு தடவ எட்டி பார்க்கலாம்” என சொல்லிக்கொண்டு வேகமாக ஒரே குதி…..
டமால்…..டங்..டமால்….டங்
மேலே இருந்த பாத்திரங்கள் கீழே விழ அதிலிருந்த அனைத்தையும் தன் மேலேயே தாங்கிக் கொண்டாள்.
கோதுமை மாவு, சர்க்கரை, முழுவதும் இவள் மேலே அபிஷேகமாக கொட்டியிருக்க, பருப்பு டப்பா மட்டும் நூலிழையில் தப்பித்தது.
சிறிதுநேரம் ஒன்றுமே புரியவில்லை. தலையை தேய்த்துக் கொண்டு கீழே பார்க்க இவள் மேல் கொட்டியதுபோக மீதம் சிறிதளவு தரையில் சிந்தியிருந்தது.
“அச்சோ போச்சே!” என பயத்தில் கண்களில் நீர் பெருக, அது மாவு அப்பியிருந்த கன்னத்தின் இருபக்கமும் வெள்ளையில் கருநிறக் கோடு போட்டதுபோல இறங்கிக் கொண்டிருந்தது.
மாவு வாயிலும் விழுந்திருக்க “த்து..த்து..” வாயில் இருந்த மாவை துப்பிவிட்டு துடைத்தாள். திறந்திருந்த கெட்ச் அப் பாட்டிலும் கீழே விழுந்திருக்க, அதுவும் இவள் கையிலும் உடையிலும் சிதறியிருந்தது.
கையில் அப்பியிருந்த “கெட்ச் அப்” வாயின் இருபுறமும் சிகப்பு வண்ணத்தில் இழுத்திருக்க, தலையை ஆட்டி மீதி இருந்த மாவையும் கிழே தள்ளியவாறு சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.
அதே சமயம் கருப்பு நிறத்தில் எலும்புக்கூடு படம் வரைந்தவாறு தலை முதல் கால் வரை உடையணிந்த ஒரு உருவமும் உள்ளே பம்மியவாறு வந்தது.
பயமுறுத்த வந்த உருவம் இவளின் அழகு தோரணையில் அரண்டு “ஐயோ பேய்” என கத்த,
திடீரென்று வந்த அவ்வுருவத்தை கண்டு இவளும் “ஐயோ ஜித்து கருப்பு பேய்” என கத்த,
இவர்களின் சத்தத்தில் அடித்து பிடித்து அபிஜித் கீழே வந்தான். அதே வேகத்தில் வெளியிலிருந்து நால்வர் உள்ளே வந்திருந்தனர்.
சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அடுத்த நொடி குபீரென வெடித்துச் சிரிக்கத் தொடங்கினர்.
“ஹா..ஹா…ஹா…ஹையோ! ஷாக்கு குடுக்க வந்தவனுக்கே ஷாக்கா!” என நால்வரும் விழுந்து விழுந்து சிரிக்க, அதற்கு குறைவில்லாமல் அபிஜித்தும் சிரித்துக் கொண்டிருந்தான்.
இவர்களது சிரிப்பிற்கு காரணமான இருவரில் பாப்பு ஓடிப்போய் அபிஜித் பின்னால் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருக்க, இன்னொருவனோ தலையில் இருந்த முகமூடியை கழட்டி தலை யை கோதியவாறு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
அவர்கள் சிரித்துக் கொண்டே இருக்க, “டேய் போதும் விடுங்கடா! ஏதோ இந்த ஒருதடவ மிஸ் ஆகிடுச்சு. இதுக்கு போய் கெக்கேபிக்கேன்னு சிரிக்கறீங்க” என தன் திட்டம் தோல்வியடைந்த கடுப்பில் அவர்களை சாடினான் பவன்.
இவர்கள் ஐவரும் அபிஜித்தின் கல்லூரி தோழர்கள். அபிஜித்தோடு சேர்த்து நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் என ஆறு பேர் கொண்ட படை.
கல்லூரியே இவர்களை அறுபடை என அழைக்கும் அளவிற்கு பிரபலம் இவர்கள். அபிஜித், சந்தோஷ், பவன், ரித்விக், ஷாலினி, அமலா எப்போதும் ஒன்றாகவே இருப்பர்.
இதில் அபிஜித் கலெக்டராகிவிட, சந்தோஷ் பிஸினஸ் செய்து கொண்டுள்ளான். பவன் அமைச்சரின் மகன். அதாவது அடுத்த அரசியல் வாரிசு. ஆனால் அந்த பந்தா இல்லாமல் பழகுவதற்கு இனிமையானவன்.
ரித்விக் அபிஜித்தை போலவே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இரண்டு நட்சத்திரங்களை பெற்ற போலிஸ் அதிகாரியாக உள்ளான்.
ஷாலினி தந்தையின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த, சாதுவான அமலா குடும்ப தலைவியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாள்.
அவள் கணவன் வேறு யாருமல்ல, இவர்களில் ஒருவனான சந்தோஷ்தான். இவன் விரட்டி விரட்டி காதல் சொல்ல, அவளும் சிறிதுகாலம் தவிக்கவிட்டு இவனை ஏற்றுக்கொள்ள, இருவீட்டாரும் திருமண பந்தத்தில் பினைத்து விட்டனர்.
அறுவரும் படிப்பில் கெட்டியாய் இருந்தாலும், கல்லூரி காலத்திற்கே உரிய கலாட்டாக்களும், அடிதடிகளும் பஞ்சமில்லாமல் இருக்கும்.
ஒருமுறை சீனியர் மாணவன் ஒருவன் அமைதியான அமலாவிடம் வரம்புமீறி வம்புசெய்து விட, அதைக் கேள்விப்பட்ட நால்வரும் அன்று இரவு ஹாக்கி மட்டையுடன் சென்று வெளுத்து வாங்கி விட்டனர்.
சீனியர் மேலேயே கைவைத்ததால் ஒரே நாளில் ஆறு பேரும் பிரபலமாகிவிட்டனர். அதன் பிறகு இவர்களுடன் யாரும் வாலாட்ட முயன்றதில்லை.
இவர்களில் பவன் மட்டும் சில கிறுக்குத்தனங்களை செய்து மற்றவர்களை பயமுறுத்தி இவர்களிடம் அன்பாய் சில அடிகளை பெற்றுக் கொள்வான். அது இன்றளவும் தொடர்கிறது.
ஐவரும் அபிஜித்தின் பிறந்தநாளிற்கு ஒன்று கூடுவது வழக்கமே. நாளைதான் வருவார்கள் என அபிஜித் எதிர்பார்த்திருக்க அவர்கள் சர்ப்ரைஸ் விசிட்டாக இன்றே வந்துவிட்டனர்.
அப்போதுதான் பவனிற்கு ஒரு யோசனை தோன்ற, வீட்டில் தாத்தா, பாட்டி, பொன்னம்மா இவர்களை பயப்படுத்த நினைத்து மற்றவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே வந்தவன் பாப்புவைப் பார்த்து கத்தியது.
*********************
“டேய் போதும் நிறுத்துங்கடா!” என பவன் கத்தியதில் அனைவரும் அமைதியாகிவிட,
“என்னே கேலி செஞ்சு சிரிச்சது போதும், யாரந்த பொண்ணுன்னு இவன்கிட்ட கேக்கறீங்களா!” என முறைப்புடன் தன் கேள்வியை முன்வைத்தான்.
அப்போதுதான் அவர்களுக்கு அந்த நினைவே வந்தது. அவளை திரும்பி பார்க்க, அவளோ அபியின் முதுகில் இன்னும் அழுத்தமாக ஒண்டினாள்.
ஐவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொள்ள, அபிஜித் தினறினான்.
முன்பானால் சடுதியில் அறிமுகப்படுத்தியிருப்பான். ஆனால் இப்போது புதிதாக உணர்ந்த நேசத்தினால், அவளது மனநிலையால் ஏற்பட்ட குழப்பத்தினால் என்னவென்று அறிமுகம் செய்வது என தடுமாறினான்.
“ஜித்து யாரிவங்க? இவங்களை போகச்சொல்லு… எனக்கு பயமாயிருக்கு” என அவர்களை எட்டி எட்டி பார்த்தவாறு மெல்லிய குரலில் கூற, மற்றவர்கள் இவளின் செய்கையை வினோதமாக பார்த்தனர்.
அப்போதுதான் அவள் பயந்துபோயிருப்பதை அறிந்து, அபிஜித் பாப்புவை முன்னால் இழுத்து தோளோடு சேர்த்தவாறு பிடித்தான்.
“பாப்பு ஒன்னுமில்லடா! இவங்களாம் என்னோட ஃப்ரண்ட்ஸ். சும்மா விளையாடறாங்க.” என சமாதானம் கூறினான்.
“ஆமா, இதென்ன கோலம் இப்படி இருக்க” என தலையிலிருந்த மாவை தட்டிவிட்டவாறே கேட்க,
“பசிச்சுதா அதான் மேல இருந்த டப்பால எதாவது இருக்கும் எடுத்து சாப்பிடலான்னு எட்டி எடுத்தேன். ஆனா பக்கத்துல இருந்த டப்பா என் மேலயே விழுந்து அதுல இருந்ததெல்லாம் என் மேலயே கொட்டிடுச்சு. இங்க வலிக்குது” என தலையைக் காட்டியவாறு அழுகையுடன் கூறினாள்.
“அச்சோ! இன்னும் வலிக்குதா” என பரபரப்புடன் தலையை தேய்த்தான்.
“போதும் ஜித்து வலிக்குது” என சிணுங்கினாள்.
இவர்கள் மற்றவர்களை மறந்து தனி உலகில் லயித்திருக்க, ஐவரும் இவர்களை சுவாரசியமாக பார்த்தனர்.
அடுத்த சிலநிமிடங்கள் இவள் மிஞ்சுவதும், அவன் கெஞ்சுவதும் என நகர, அபிஜித்துடன் அவளைப் பார்க்க தாய் சேய் போல் அத்தனை கவிதையாய் இருந்தது.
அவன் திரும்ப போவதில்லை என உணர்ந்த ஷாலினி ” அபி” என அழைக்க,
“என்ன ஷாலு”
வாய் கூறினாலும் கண்ணோ, கால்களோ ஒரு இன்ச் கூட நகரவில்லை.
“எதுக்கு இந்த வேலை உனக்கு… என்கிட்ட கேட்டா நான் செய்யமாட்டனா… எதையாவது பண்ணிட்டு இப்படி திருதிருன்னு முழிச்சிட்டு நிக்கறதே வேலையாப் போச்சு” என கடிந்து கொண்டே தலையில் இருந்த மாவை தட்டிவிட்டுக் கொண்டிருந்தான்.
“திட்ற நீ….போ” என பாப்பு அவன் கையை தட்டிவிட,
“என்ன கோவமா! இந்த ரோசத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல” என செல்லமாய் மிரட்டியவாறு மீண்டும் மாவை தட்டிவிடலானான்.
“டேய்! இவன் என்னடா கண்டுக்க மாட்டிங்கறான்” என ஷாலு நண்பர்களிடம் வினவ,
“பொறு..பொறு என்னதான் பன்றான்னு பார்க்கலாம்” என கூறிய ரித்விக் அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்து கொண்டான்.
மற்றவர்களும் அப்படியே அங்கங்கு அமர, இவர்கள் புறம் திரும்பிய அபிஜித்
“கைஸ்…ஃப்ரிட்ஜ்ல கூல்ட்ரிங்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க…இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்” எனக் கூறியவன் பாப்புவுடன் மேலே சென்று விட்டான்.
அவன் மீண்டும் கீழே வரும்போதும் அவர்கள் அவ்வாறே அமர்ந்திருக்க,
“என்னடா எதுவும் எடுத்துக்கலயா” என கேஷூவலாக கேட்டவாறே அவர்களை கடக்க முயன்றான்.
“அபி நில்லு” பவன்
“யாரந்த பொண்ணு” ஷாலினி
“கல்யாணம் ஆகிடுச்சா…உன் வொய்ஃபா அவங்க” அமலா
“எங்ககிட்டகூட சொல்லல” சந்தோஷ் என ஐவரும் அவனை முறைத்தபடி நின்றனர்.
“ம்…ரெண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு” என நக்கலாக கூறினான் அபிஜித்.
“என்னாது” என கோரசாக கத்தியவர்கள் இவன் மேல பாய தயாராக,
“டேய் நிறுத்துங்கடா… ரொம்ப கற்பனைய ஓடவிடாதீங்க…அப்படிலாம் ஒன்னுமில்ல.”
பாப்புவை பற்றி அவளது இன்றைய மனநிலை வரை முழுதாக கூறினான். இவன் சொல்ல சொல்ல அமைதியாய் அமர்ந்திருந்தனர் ஐவரும்.
“இந்த பொண்ணு யாருன்னு தெரியலயா?” ரித்விக்.
“ம்ஹீம்… தெரியல. எங்கயிருந்து வந்தா என்ன ஏது ஒன்னுமே தெரியல” அபிஜித்.
“ஹௌ ஈஸ் இட் பாசிபிள்! ஒரு க்ளூ கூடவா கிடைக்கல” சந்தோஷ்.
“சென்னை ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வந்திருக்கா. கூட யாரும் வந்த மாதிரி தெரியல. அங்கயிருந்து பஸ்ல இங்க வந்திருக்கா. அது மட்டும்தான் தெரிஞ்சது”
“ஜித்து” சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்த்தனர். மயில் கழுத்து நிறத்தில் லாங்கவுன் அணிந்து மெதுவாக தயங்கியவாறு கீழே இறங்கி வந்தாள்.
இவளையே வைத்தக்கண் வாங்காமல் பார்க்க சங்கோஜமடைந்தவள் எப்போதும் போல அபிஜித்தின் பின்னால் சென்று மறைந்து நின்று எட்டிப் பார்த்தாள்.
“அபி…ஷி ஈஸ் சோ க்யூட்…” “ஹாய் பாப்பு” ஷாலினி முதலில் ஆரம்பித்தாள்.
அபிஜித்தின் டீ சர்ட்டைப் பிடித்து இழுத்தவள் என்ன செய்ய என்று கண்களாலேயே கேட்க,
அவளை இழுத்து முன்னால் விட்டவன் “சே ஹாய்.. இவங்க..”
“நான் சொல்றேன்…நாங்க அபியோட ஃப்ரண்ட்ஸ்..இனி உனக்கும் ஃப்ரண்ட்ஸ் ஓ.கே வா” என அமலா மென்மையாக கேட்டாள்.
கேள்வியோடு அபியை பார்க்க அவனும் கண்களை மூடித்திறந்து ஆமாமென்றான்.
“ஹாய்” என மெதுவாக கூறினாள் பாப்பு.
பின் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இவளும் அவர்களோடு ஒன்றிவிட்டாள்.
பவனைத் தவிர. அவனுடைய ஆஜானுபாகுவான தோற்றம் சற்றே இவளை மிரள வைத்தது.
பவன் மட்டும் “முதல்லயே இப்படி அறிமுகமாகி இருந்திருந்தா நான் திடீர்னு ஜெர்க் ஆகிருக்க மாட்டேன்ல பாப்பு” கூற மற்றவர்கள் சிரித்தனர்.
“அதுவா டப்பாவதான் எடுக்க ட்ரை பண்ணேன். ஆனா மொத்தமா என் மேலயே விழுந்திடுச்சு” தயங்கியவாறே பாவமாக கூற மற்றவர்களும் சோகமாக “”ச்ச்ச்ச்ச்” என உச் கொட்டினர்.
அதற்குள் அபிஜித் உணவு தயார் செய்திருக்க அனைவரும் ஒரு பிடி பிடித்தனர்.
கல்லூரி காலம் மீண்டும் திரும்பியது போல கலகலத்துக் கொண்டிருந்தனர்.
“நீங்க நாளைக்குதான் வருவீங்கன்னு நினைச்சேன்.” அபிஜித்.
“ஹோ! மறந்திட்டோம் பாரு. கெளம்பு..கெளம்பு நாம் இந்த தடவ இங்க செலிபரேட் பண்ண போறதில்ல” சந்தோஷ் படபடத்தான்.
“வேற எங்க?” அபிஜித்
“ஏன் எங்கன்னு கூப்டாதான் வருவியா…கெளம்புன்னா கெளம்புடா” பவன்.
“அதில்லடா தாத்தா பாட்டி யாருமே இல்ல பாப்பு…” என இழுக்க,
“நீ… ன்னா நீ மட்டுமா பாப்புவும்தான் கெளம்புங்க ரெண்டு பேரும்.” ஷாலினி
“இல்லடா பாப்பு இருக்க நிலமைல…” யோசனையாக பார்க்க,
“அபி இத்தன பேர் இருக்கோம் பார்த்துக்க மாட்டமா! கெளம்புடா இப்பயே கெளம்பினாதான் காலைல அங்க போக முடியும்.” ரித்விக்
சிறிது நேரம் யோசித்த அபிஜித் “சரி போலாம்” என கூற, “ஹேய்” என கூச்சலிட்டனர்.
இதுவரை அவர்கள் பேசியதை ஆவென கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு புரிந்ததெல்லாம் தான் ஜித்துவுடன் எங்கோ வெளியில் செல்லப் போகிறாம் என்பதுதான்.
“ஜித்து நாம டூர் போறோமா?”
ஆவலாய் முகத்தை பார்த்தவளுக்கு ஆமென தலையசைத்தான்.
“ஹேய் சூப்பர்…. தேங்க்ஸ் ஜித்து” என எதிர்பார்க்காத கன்னத்து முத்தமொன்றை அளித்து பேக்கிங் செய்ய ஷாலினியையும், அமலாவையும் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்.
இதுவரை சிறு அணைப்பு, அதீத பாசத்தில் தலை அல்லது நெற்றியில் மென்முத்தம் இதுதான் வாடிக்கை இவனுக்கு. ஆனால் பாப்புவாக முத்தமிட்டது இதுதான் முதல் முறை.
செல்கள் அனைத்தும் சிலிர்த்து அடங்க புது ரத்தம் பாய்ந்தது போல உணர்ந்தான். காதினுள் ஓங்காரமாய் ஆர்ப்பரித்த இசை ….போக போக மெல்லிய ஸ்வரமாய் இசைக்க அதன் இனிமையில் மூழ்க தொடங்கினான்.
கண்களை மூடி கிரகித்துக் கொண்டிருந்தவனை நண்பர்கள் உலுக்கி தயாராக சொல்ல சமாளித்தவாறு எழுந்து தயாராக சென்றான் அபிஜித்.
ஆர்ப்பாட்டமாக தொடங்கியது இவர்களின் பயனம். டோயோடா இன்னோவா இவர்களை சுமந்து கொண்டு கூர்க் நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
ரித்விக் ஓட்ட அபிஜித் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான். பெண்கள் மூவரும் நடு பகுதியில் அமர, சந்தோஷ், பவன் பின்னிருக்கையை ஆக்கிரமித்தனர்.
பத்து மணிநேரப் பயணம் பாப்புவை இன்னும் அவர்களுடன் நெருங்க வைத்தது. அவர்களுக்கும் இவள் இன்னும் வளர்ந்த குட்டி பெண்ணாகவே தெரிய, அவளை இன்னமும் பிடித்தது.
குடகு மலை என்னும் கூர்க். கர்நாடகாவின் காஷ்மீர். இந்தியாவின் ஸ்காட்லேண்ட் என அழைக்கப்படும் அழகிய நகரம். இயற்கையின் கொடை அதிகமாக பரவிக் காணப்படும் இடம்.
தமிழ்நாட்டில் பல டெல்டா மக்களை வாழவைக்கும் காவிரித் தாயின் உன்னதமான பிறப்பிடம்.
எங்கும் பசுமையாய் கானப்படும் புல்வெளிகள், காபி, தேயிலை தோட்டங்கள். நீர்வீழ்ச்சிகள் என கண்களுக்கு விருந்தாகும் இடங்கள் பல உள்ளன.
எப்பொழுதும் காற்றில் கலந்திருக்கும் காபி வாசம் என மனம் மயக்கும் சுற்றுலாத்தளம்.
இவர்கள் காலை வேளையில் அங்கு சென்றிருந்தனர். ஹோட்டலில் ஷாலினி, பாப்புவுக்கு ஒரு அறையும், சந்தோஷ், அமலாவிற்கென ஒரு அறையும், மற்ற ஆண்கள் மூவருக்கும் ஒரு அறையும் புக் செய்திருந்தனர்.
சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள் குளித்து தயாராகி கிளம்பினர். பாப்பு மட்டும் குளிருது குளிக்க மாட்டேன் என அடம் செய்ய, அவளை கிளப்புவதற்குள் போதும் போதுமென்றானது .
ஒரு வழியாக தயாரானவர்கள் முதலில் அங்குள்ள துபாரே யானைகள் முகாம், ராஜா சீட், போன்ற சுற்றுலாத் தளங்களை கண்டுவிட்டு அப்பே(Apay) பால்ஸ் வந்திருந்தனர்.
ஆர்ப்பரிக்கும் அருவியை பாதுகாப்பாக நின்று கண்டுகளிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அருவி மகள் வாரியிறைத்த மெல்லிய சாரலில் நனைந்தவாரே நின்றிருந்தனர்.
கிளம்பியதிலிருந்து இதுவரையும் கூட பாப்பு அவள் ஜித்துவின் புறம் திரும்பவே இல்லை. ஷாலினியுடனே ஒட்டிக்கொண்டு இருந்தாள்.
அதில் இவன் மனம் சற்று சுணங்கத்தான் செய்தது. நேசத்தின் முதல் அறிகுறியாம் “பொஸஸிவ்னஸ்” நோய் அவனை தாக்கியது.
அவன் எங்கு, யாருடன் இருந்தாலும் இவளை கவனிக்கத் தவறவில்லை.
இப்போது கூட நீர்வீழ்ச்சியை பார்த்து அவள் குதூகலிக்க, இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பவன் இவர்களின் செய்கைகளை அவ்வப்போது நிழற்படங்களாக பதிவு செய்துக் கொண்டிருந்தான்.
சந்தோஷும், அமலாவும் இளம் தம்பதியினரின் இலக்கணத்தின் படி தனி உலகில் லயித்திருந்தனர்.
ரித்விக் கூட “தனியா ஹனிமூன் வரவேண்டிவனெல்லாம் கும்பலா டூர் வந்துட்டான்” என கலாய்த்துக் கொண்டிருந்தான்.
இது எதுவும் பாதிக்காமல் அந்த இளம் ஜோடிகள் வலம் வந்தனர். நீர்வீழ்ச்சியிலும் கூட குளிரத் தொடங்க இருவரும் அணைத்தபடி நின்றிருந்தனர்.
அதைக் கண்ட பாப்பு “அவங்க ஏன் அப்படி நிக்கறாங்க” என அதிமுக்கியமான சந்தேகத்தைக் கேட்க,
“ஆ…அது..அது… குளிருதில்ல அதனாலதான்” என சமாளித்து வைத்தாள்.
“ஓ…இப்படி நின்னா குளிராதா?”
“ம்ம்ம்…” அப்போதைக்கு சமாளிக்க வேண்டி” ம்” கொட்டினாள் ஷாலினி.
அப்போது ரித்விக், பவன் ஷாலினியை அழைக்க அவள் அவர்களுடன் சென்றாள்.
அங்கே பாப்பு மட்டும் தனித்திருக்க, அபிஜித் அவளருகில் சென்றான். அந்த ஊரின் தட்பவெப்ப நிலைக்கே குளிரத் தொடங்க, இப்போது அருவியின் சாரலில் நடுங்கவே ஆரம்பித்தது அவளுக்கு.
கைகளை தேய்த்துக் கொண்டு நிற்கவும், “என்னடா குளிருதா” என கேட்ட அபிஜித்தை பார்த்தவள் “ஸ்…ரொம்ப குளிருது ஜித்து” என சட்டென இருக்கமாக அணைத்துக் கொண்டாள். உபயம் ஷாலினி.
அவன் மூச்சையடைத்த சிற்பமானான்!…
இவள் குளிரைப் போக்க நினைத்து அவனை அணைக்க, அவன் தீப்பிழம்பாய் எரியத் தொடங்கினான்!…
பதிலுக்கு அணைக்கவுமில்லை. கண்களை மூடி அவளின் மெல்லிய ஸ்பரிசத்தை சாரலோடு உணர்ந்துக் கொண்டிருந்தான்.
குழந்தை மனம் கொண்டவள் சிறிது நேரத்தில் விலகி ஓடியிருக்க, இவன் நகரக் கூட தோன்றாமல் தலைக்கோதி நின்றிருந்தான்.
அதன் பின் ஒருவித உல்லாசத்துடனே சுற்றினான். ஆனால் அடுத்த சற்று நேரத்தில், இதயம் முழுதும் நிறைந்தவளை காணாமல் காபி தோட்டத்தின் ஒரு பகுதியில் கால்களை மடித்தவாறு கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தான் அபிஜித்.
இனி வாழ்வேயில்லை! என்பது போல தோன்றியது அவன் தோற்றம். அப்போது தூரத்தில் ஒலித்த அந்த வரிகள் அவன் மனதின் துயங்களை எடுத்துக் கூறுவது போல் இருந்தது.
“காற்றின் அலை வரிசை கேட்கின்றதா!…
கேட்கும் பாட்டில் ஒரு உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா….
நெஞ்சு நனைகின்றதா!…
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா!…..
காற்றில் கண்ணீரை ஏற்றி….
கவிதை செந்தேனை ஊற்றி …..
கண்ணே உன்வாசல் சேர்த்தேன்……
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ…டோடி வா…..”