UTN 10

உயிர் தேடல் நீயடி 10

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தான் விபீஸ்வர் தன் நிறுவனத்திற்கு வந்திருந்தான்.

அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து, மீண்டு வந்த தங்கள் முதலாளியை வரவேற்றனர்.

விபீஸ்வரை தனியே விட மனமின்றி ஜனனியும் அவனோடே தொற்றிக் கொண்டு வந்திருந்தாள். அவளின் கவலை அவளுக்கு.

அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு இடமும் விபீஸ்வருக்கு காவ்யதர்ஷினியை மறுபடி மறுபடி நினைவுபடுத்துவதாய்.

தலையை குலுக்கி கொண்டு தன் வேலைகளில் கவனத்தை செலுத்த முயன்றான். இந்த ஒரு மாதம் நிறுவனத்தின் நிலைப்பற்றி கலந்தாலோசனை நடத்தினான்.

சூழ்ந்திருந்த வேலைகள் கொஞ்ச கொஞ்சமாய் அவனை அமிழ்த்தி கொண்டன.

நாள் முழுவதும் சும்மாவே அந்த அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்து ஜனனிக்கு சலித்து போக, மதிய வேளைக்கு பிறகு மாலை வருவதாக சொல்லி விட்டு வெளியேறி விட்டாள்.

கணினி திரையில் நிலைத்திருந்த அவன் பார்வை திரும்ப, எதிரே காவ்யதர்ஷினி அமர்ந்து இருக்கும் தோற்றம் காட்சியானது. விபீஸ்வரின் பார்வை விலகாமல் அங்கேயே நிலை குத்தி நின்றது.

எப்போதும் போல பாந்தமான சுடிதாரில், குறிப்பு புத்தகத்தில் வேகவேகமாக குறிப்பெடுத்தபடி அமர்ந்திருந்தாள் காவ்யா, இடையிடையே அவள் மூக்கு கண்ணாடியை ஒற்றை விரலால் சரிபடுத்தியபடி எழுதிக் கொண்டிருந்தாள்.

இவன் அதிகமாய் அவளை பார்த்தது இப்படி தான். இப்போதும் அவள் அப்படியே தோன்றினாள்.

“ஹேய் சோடாபுட்டி, என்னை பைத்தியம் ஆக்கி வச்சிருக்க டீ, என் கண்ணுக்குள்ளயே ஒளிஞ்சிகிட்டு கண்ணாமூச்சி ஆடாதடி” எதிரே வெற்று இருக்கையை வெறித்து பேசியவனின் குரல் கரகரத்தது.

தன்னவள் நினைவில் அவன் இதயத்தின் அழுத்தம் கூட, தலையை இருக்கையின் பின்புறம் சாய்த்து கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டான்.

காவ்யதர்ஷினியின் புன்னகை முகம் அவன் மனத்திரையில் காட்சியானது.

அன்றும் இப்படி தான், அவன் எதிர் இருக்கையில் அமர்ந்தபடி விபீஸ்வர் சொல்வதை வேகவேகமாக குறிப்பெடுத்து கொண்டிருந்தாள் காவ்யதர்ஷினி. இடையே அவள் கண்கண்ணாடியை ஒற்றை விரலால் ஏற்றிவிட, இவன் பார்வை அவள் முகத்தில் பதிந்தது.

நேர்முக தேர்வில் முதல் முறை பார்த்த‌ அதே முகம் தான். அன்றிருந்த பரிதவிப்பிற்கு பதில் இன்று தன்னம்பிக்கையும் தெளிவும் கூடியிருந்தது அவள் முகத்தில்.

ஆனாலும் இப்போதும் அவள் பார்வை இந்த ஆண்மகனை கண்டு கொள்வதாய் இல்லை. தன்னிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் தவிக்கும் இவன் பெண் தோழியருக்கு மத்தியில், இவளின் ஒட்டாத பார்வை, இவனின் ஈகோவை சற்று உரச தான் செய்தது.

விபீஸ்வர் குறிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட, காவ்யாவின் பார்வை அவனை நோக்கி நிமிர்ந்தது.

“என்னாச்சு சர்?”

“நீ ஸ்பெக்ஸ் ஏன் யூஸ்‌ பண்ற காவ்யா?” அதிமுக்கிய கேள்வியை போல அவன் கேட்க, இவள் ‘என்னடா’ என்பதை போல விழித்து வைத்தாள்.

எப்போதோ அவன் பேச்சு பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவி இருந்தது. அதனை பற்றி காவ்யாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“அது, எனக்கு கிட்ட பார்வை சர், அதான்” அவள் பதில் தர,

“கண்ணாடி போடலைன்னா உனக்கு எதுவும் தெளிவா தெரியாதா?” அவன் மேலும் விளக்கம் கேட்க, எதற்கிந்த தேவையற்ற கேள்வி என்று அலுத்தது இவளுக்கு.

“கண்ணாடி போடலன்னாலும் எல்லாம் நல்லாவே தெரியும் சர், எழுத்து மட்டும் தான் ஷேடோ மாதிரி தெரியும்” என்று பதில் தந்தவள், “இந்த வொர்க் கம்பிளீட்டா சொல்லிட்டிங்கன்னா, நான் ப்னீஷ் பண்ணிடுவேன்” மேலும் அவன் பேச்சை வளர விடாமல் இடை நின்ற வேலையை நினைவுபடுத்தினாள்.

அவன் நெற்றி லேசாக சுருங்க, “என்னை பார்த்தா பூதம் மாதிரி தெரியுதா உனக்கு?” என்று கேட்க,

அவள் தயக்கமாய் தலையை இடவலமாக அசைத்து, “இல்ல சர்” என்றாள்.

“அப்ப, ஏதாவது வெறி பிடிச்ச மிருகம் மாதிரி தோணுதா?” அவன் அடுத்த கேள்விக்கு, “அச்சோ அப்படி எல்லாம் இல்ல சர்” என்று அவசரமாய் பதில் தந்தாள்.

“அப்படினா ஏன் நான் நார்மலா ஏதாவது பேசினா, நீ கழன்டிட்டு ஓடுற காவ்யா?” ஒற்றை புருவம் உயர்த்தி அவன் வினவ,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சர், என்னோட வேலை முடிஞ்சா சீக்கிரம் வீட்டுக்கு போலாம் இல்ல, அதான்” அவள் குரல் இறங்கி ஒலித்தது.

“ம்ஹும், நாளைக்கு என் ப்ரோக்ராம் எங்க?”

“சேலம் போகணும்னு சொல்லி இருந்தீங்க சர்”

“ஓகே, நீயும் என்னோட ஜாய்ன் பண்ணிக்கிற”

“சார்…” அவள் விழிகள் விரிந்தன.

“ஏன் இவ்வளோ ஷாக், எனி ப்ராப்ளம்?”

“அது வந்து, வெளியூர் போகும் போது எப்பவும் ரிக்கிய தானே கூட்டிட்டு போவீங்க…”

ஆமோதிப்பாக தலையசைத்தவன், “பட் இப்ப, நீ கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது, நாளைக்கு ரெடியா இரு” என்றவன், விட்ட இடத்திலிருந்து குறிப்பை கூற தொடங்கினான்.

‘நாளை எம்டியோடு தனியாக அத்தனை தூரம் போக வேண்டுமா!’ என்ற எண்ணம் தந்த பதட்டத்துடனே இவளும் குறிப்புகளை எடுத்துக் கொண்டாள்.

காவ்யதர்ஷினி பணி உயர்வினை அடுத்து அவள் குடும்பத்தின் வாழ்க்கை தரமும் சொல்லும் படியாக உயர்ந்து இருந்தது.

முதலில் தனக்காக ஸ்கூட்டி பெப்ட் ஒன்றை வாங்கிக் கொண்டவள், அடுத்ததாக, அந்த ஒண்டி குடுத்தன வாடகைவீட்டிலிருந்து ஓரளவு வசதியான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்கி குடும்பத்தோடு குடியேறி இருந்தாள். வசதிகள் நிறைந்த வாழ்க்கை காவ்யாவிற்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் மாதம் மாதம் இஎம்ஐ தொகை தான் அவள் கையை கடித்தது.

சிவா இப்போது கல்லூரி கடைசி வருடம் வந்திருந்தான். மஞ்சரி பன்னிரண்டாம் வகுப்பில் கரையை கடக்க முயன்று கொண்டிருந்தாள்.

தங்கள் வாழ்வின் வளர்ச்சியை அனுபவிக்க கணவன் இல்லாமல் போனாரே என்ற கவலை தவிர பார்கவியின் மனம் பூரித்திருந்தார்.

நடுத்தர குடும்பங்கள் வாழ்ந்த அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தன் வண்டியை நிறுத்தி விட்டு, மின்தூக்கி உதவியோடு நான்காவது மாடியை அடைந்திருந்தாள் காவ்யா. அங்கே மூன்றாவது வீடு தான் அவர்களுடையது. முழுக்க முழுக்க அவளின் உழைப்பு என்று எண்ணும்போதே அவளுக்குள் ஒரு நிமிர்வு.

அழைப்பு மணி பொத்தானை அழுத்த, பார்கவி கதவை திறந்தார். காவ்யா உள்ளே நுழையும் போதே, “காவ்யா, எங்க ஸ்கூல்ல சயின்ஸ் எஸ்கர்ஸ்சன் கூட்டிட்டு போறாங்க, நானும் போகவா?” ஓடிவந்து ஆவலாக மஞ்சரி கேட்க,

“அவ கிடக்குறா காவ்யா, நீ போய் முகம் கழுவிட்டு வா, உனக்கு குழி பணியாரம் செஞ்சிருக்கேன், சீக்கிரம் வந்து சாப்பிடு” என்று பார்கவி சமையலறைக்கு செல்ல, காவ்யாவும் உள்ளே சென்று முகம் கழுவி, இலகுவான ஆடையை உடுத்தி கொண்டு வந்து வழக்கம் போல தரையில் அமர்ந்து கொண்டாள்.

சுடசுட குழி பணியாரத்தின் மணம் பசியை கிளற, தொட்டு கொண்ட புதினா சட்னி சுவையோ ருசியை கூட்டியது. இரண்டை எடுத்து சாப்பிட்டவள், இப்போது தான் மெத்தென்று அமர்ந்திருந்த தங்கையை கவனித்தாள்.

“சொல்லு மஞ்சு, எந்த ஊருக்கு எஸ்கர்ஸ்சன் போறாங்க?” காவ்யா கேட்க,

“ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணை மையத்துக்கு கா” மஞ்சரி பதில் துள்ளலாய் வந்தது.

“பப்ளிக் எக்ஸாம் பசங்களை இப்படி வெளியே கூட்டிட்டு போக மாட்டாங்களே, என்ன புதுசா, திருந்திட்டாங்களா?” காவ்யா சந்தேகமாக கேட்க,

“அது… எங்களுக்கு பப்ளிக் எக்ஸாம் போஷன் எல்லாத்தையும் முன்னமே கம்பிளீட் பண்ணிட்டாங்க, இப்ப ரிபீடட் டெஸ்ட் தான் போயிட்டு இருக்கு. அதனால ஸ்டூடண்ட்ஸ் எல்லாருக்கும் டென்ஷன் ரிலீஃப்காக ரெண்டு நாள் இந்த எஸ்கர்ஸ்சன் ஏற்பாடு செஞ்சிருக்காங்க” மஞ்சரி விளக்கமாகவே பதில் தந்தாள்.

“அதெல்லாம் நீ எங்கேயும் போக வேணாம், அந்த இடம் எங்கேயோ ஆந்திராவில இருக்குதாம், அவ்வளோ தூரம் எல்லாம் வயசு பொண்ண அனுப்ப முடியாது” பார்கவி உறுதியாக மறுக்க,

“ம்மா, என் ஃப்ரண்ஸ் எல்லாரும் போறாங்க மா, ப்ளீஸ்” மஞ்சரி சிணுங்களோடு கெஞ்ச ஆரம்பித்தாள்.

“பரவால்ல விடு மா, மஞ்சு போயிட்டு வரட்டும், விண்வெளி ஆராய்ச்சியில நம்ம நாடு செய்திருக்க சாதனையை அவளும் கண்கூடாக பார்க்கட்டும். அப்ப தான் புத்தகத்தை மட்டும் கட்டி அழுற அவளோட அறிவும் விசாலமா சிந்திக்க ஆரம்பிக்கும்” காவ்யா தங்கைக்கு ஆதரவாக பேச, மஞ்சு அவளை கட்டிக்கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் க்கா” என்று குதுகளித்தாள்.

பார்கவியும் அரை மனதாக சரியென்று தலையசைத்து வைத்தார்.

“சிவா இன்னும் வரலையா மா?” காவ்யா தம்பியை பற்றி வினவ,

“ம்க்கும் நான் வேணான்னு சொல்லியும் கேக்காம, தீபாவளிக்கு வந்த போனஸ் எல்லாத்தையும் போட்டு அவனுக்கு பைக் வேற வாங்கி கொடுத்துட்ட, இப்ப அவன் எங்க வீட்டுல நிக்கிறான்” பார்கவி அலுத்துக் கொள்ள, காவ்யா இதழில் மென்னகை விரிந்தது.

போன மாதம் தனது போனஸ் தொகையை சொன்னவுடன், சிவா தயங்கி தயங்கி தான் தனது புது பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையை சொன்னான். முதலில் காவ்யா யோசித்தாலும், தம்பியின் வயதொத்த இளைஞர்கள் விதவிதமான பைக்கில் பறப்பதை இவளும் தானே பார்க்கிறாள். எனவே தம்பியின் விருப்பத்திற்காக சம்மதம் சொல்லி இருந்தாள். இப்போது பைக் கிடைத்தவுடன் அவனை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

இரவு உணவு முடித்து அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்து இருக்கும் போது, நாளை எம்டி உடன் வெளியூர் செல்ல போவதை காவ்யா சொல்ல, பார்கவி, மஞ்சரி இரு பெண்களுக்கும் அது சரியாக படவில்லை.

ஆனால் சிவா, “இங்க இருக்கிற சேலம் தான, போயிட்டு வா க்கா, எதுக்கும் கவனமா இருந்துக்கோ அது போதும்” என்று பெரிய மனிதனாய் தைரியம் சொன்னான்.

# # #

‘எவ்வளவு திமிர் இருக்கணும் அந்த சோடாபுட்டிக்கு?’

விபிக்கு தோன்றியது இதுதான். நேற்று அவள் பேச்சு வாக்கில், ‘உங்களோடு பேச்சு வளர்க்கும் நேரத்தில், நான் என் வேலையை முடிச்சா, சீக்கிரம் வீட்டுக்கு போலாம்’ என்று காவ்யா சொன்னதை அவன் வேறுவிதமாக எடுத்து கொண்டான்.

‘உன்னோடு வெட்டி பேச்சு பேசுவதை விட, எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு’ என்ற உள்ளர்த்தம் கொண்ட, மரியாதை சாயம் பூசப்பட்ட வார்த்தைகள் தான் அவை என்று தோன்றியது அவனுக்கு.

அந்த கோபத்தில் தான் இந்த பயணத்தில் அவளையும் உடன் சேர்த்து கொண்டான்.

சாலையில் காரை இயக்கிய படி, தன்னருகில் அமர்ந்திருந்த காவ்யாவை ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

தொடர்ந்து ஏசி அறையில் வேலை செய்ததாலும், அவளின் பொருளாதார நிலை சற்று உயர்ந்து இருந்ததாலும் முன்பைவிட அவள் மேனியில் பளபளப்பு கூடியிருந்தது.

முன்பு அலைச்சலில் கருத்து தெரிந்த முகத்தில் இப்போது சற்றே பொலிவு கூடி இருப்பது போல தெரிந்தாலும், இவன் நுனிவிரல் பட்டாலே சிவந்து குழையும் கண்ணாடி தோல் அழகிகளோடு பழகுபவனுக்கு இவளின் சாதாரண அழகின் மீது எந்தவித நாட்டமும் ஏற்படுவதாக இல்லை.

‘அழகு இல்லன்னாலும் துடுக்கு திமிர் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல’ என்று அவளை கரித்து கொண்டவன் இதழில் ஏளன புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“சர், சேலம் ஏன் போகணும், அங்க என்ன வேலை இருக்குன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே?” காவ்யா இப்போதும் தன் வேலையில் கருத்தாய் இருந்தாள்.

“பெருசா எந்த வேலையும் இல்ல கவி, அங்க நல்ல தரமான பருத்தி உற்பத்தி நடக்குதாம், அதான் அங்க ஒரு ஜின்னிங் பேக்டரி வாங்கலாம்னு ப்ளான், நேர்ல போய் பார்த்துட்டு தான் முடிவு பண்ணனும்”.

அவன் தன்னை விளித்த விதத்தை கவனித்தவள், “சர், கவி இல்ல என்னோட பேர் காவ்யா, காவ்யதர்ஷினி” ஒருவித அழுத்தமாக தன் பெயரை குறிப்பிட்டாள்.

“உன்ன காவ்ய…தர்ஷினினு நீட்டி முழக்கி கூப்படறதுக்குள்ள என் வாய் வலிச்சு போகும், உன் அப்பா கொஞ்சமாவது மாடர்னா உனக்கு பேர் செலக்ட் பண்ணி இருக்கலாம்” அவன் நொட்டம் சொல்ல,

“விபீஸ்வர் சக்கரவர்த்தி… உங்க அப்பா உங்களுக்கு ரொம்ப மார்டன் பேரை தான் வச்சிருக்காங்க இல்ல சர்” அதிராத குரலில் இவள் கேள்வியும் நறுக்கு தெறித்தாற் போல் வர, அடுத்த நொடி விபி வாய்விட்டு சிரித்து விட்டான்.

“ம்ஹும் என் பேரை பிளேம் பண்ற அளவுக்கு துணிச்சல் வந்துடுச்சா உனக்கு?” அவனும் விளையாட்டாகவே பேச்சை வளர்த்தான்.

“அச்சோ இல்ல சர், எல்லாருக்குமே அவங்கவங்க பேர் தான் முதல் அடையாளமே, அது பாஸ் நீங்களா இருந்தா என்ன? உங்களுக்கு கீழ வேலை செய்யற நானா இருந்தா என்ன?” காவ்யா தன் கருத்தில் உறுதியாக நிற்க,

இவனுக்கு, ‘இவள் மட்டும் ஏன் இப்படி?’ என்று தான் தோன்றியது. இவனுக்கு எப்போதுமே பெயரை சுருக்கி அழைக்கும் பழக்கம் உண்டு. தான் விளிக்கும் செல்ல பெயர் சுருக்கத்தில் குழைந்து போன பெண்களைத் தான் இதுவரை இவன் கடந்திருக்கிறான். அப்படி இருக்க, இந்த குள்ளவாத்துகாரி மட்டும் சீரிக் கொண்டு நிற்பது, இவனுக்கு புதிதாய் சற்று சுவாரஸ்யமாய் இருந்தது.

“அப்ப நான் உன்ன கவின்னு கூப்பிட கூடாதா?”

“காவ்யாவே என்னோட சுருக்க பேர் தான் சர், அதையும் சுருக்கி கூப்பிட்டா எப்படி சர்?”

“பாயிண்ட் தான், பட் எனக்கு இப்படி கூப்பிட தான் நல்லாயிருக்கு கவி…” பிடிவாதகாரன் தன் குணத்தை அழுத்தி உச்சரித்த ‘கவி’யில் பரைசாற்றினான்.

இவள் கடுகடுப்பாக அவனை விழி அகல முறைத்து விட்டு, வெளிப்புறம் பார்வையை பதித்துக் கொண்டாள்.

‘பிடிக்காது என்று தெளிவாய் சொன்ன பிறகும் அப்படித்தான் அழைப்பேன் என்று வீண் வீம்பு செய்பவனிடம் இன்னும் என்ன சொல்லி புரிய வைப்பது?’

சிறிது தூரம்‌ அவர்களுக்கு இடையே மௌனம் மட்டுமே பேசி கொண்டிருக்க,

“விபீஸ்வர்… இந்த நேம் எனக்கு
பிடிக்கல மாத்தணும்னு டேட் கிட்ட சண்டை எல்லாம் போட்டிருக்கேன் சின்ன வயசுல” தன் சின்ன வயதை நினைவு கூர்ந்தான் அவன்.

காவ்யா திரும்பி அவன் சொல்வதை கவனிக்கலானாள்.

“பட், அவருக்கு இந்த நேம் மேல அவ்வளவு இன்ட்ரஸ்ட், ஏதோ கடவுளோட பேருன்னு சொன்னாரு, சேன்ஜ் பண்ண ஒத்துக்கவே இல்ல”

இதுவரை தானே திறக்க முயலாத தன் ஆழ் மனதின் பக்கங்களை அவளிடம் புரட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான் அவன்.

“ஏதோ கடவுளோட பேரு இல்ல சர், அது என் பிள்ளையாரப்பாவோட பேரு” அந்த பெயருக்கு சிறுபிள்ளை போல உரிமை கொண்டாடினாள் அவள்.

“வாட், பிள்ளையார் பேரா?” அவன் நம்பவில்லை. தனக்கும் கட்ட பிரம்மச்சாரி பிள்ளையாருக்கும் எப்படி பொருந்தும்!

“எல்லா கடவுள்களுக்கும் மேலான பரம்பொருள் ஈஸ்வரன், அந்த பரம்போருளுக்கும் மேலான முழுமுதற் கடவுள் விநாயகர்… விபு + ஈஸ்வர். கடவுள்களுக்கெல்லாம் கடவுளானவன்னு அர்த்தம் வரும்”

தன் பெயருக்கு விளக்கம் சொன்னவளை வியந்து பார்ப்பது இவன் முறையானது.

“என் பேரை வச்சு நிறைய ஆராய்ச்சி செய்திருக்க போல”

“அப்படி எதுவும் இல்ல சர், என் பிள்ளையாரப்பாவோட பேரெல்லாம் எனக்கு அத்துப்படி” என்று அவனுக்குரிய பெயரிலிருந்து அவனை தூர நிறுத்தி இருந்தாள்.

‘எப்போதும் தன்னிடம் வார்த்தைகளை கத்தரித்து பேசும் இவளை என்ன தான் செய்து தொலைப்பது?’ என்ற எண்ணம் எழ, தன் காரை நிறுத்தினான்.

“இறங்கு கவி” வேண்டும் என்றே அவள் பெயரை சுருக்கி உச்சரிக்க, அவள் சின்னதாய் தலையை சிலுப்பிவிட்டு இறங்கினாள்.

அதுவோரு நவீன பருத்தி ஆலை. எங்கும் பருத்தி பஞ்சுகள் மலைமலையாய் குவிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் நெடி அந்த காற்றிலும் பரவி இருந்தது.

நடுத்தர வயதை தாண்டியவர் ஒருவர் இவர்கள் இருவரையும் வரவேற்று, அந்த ஆலை முழுவதையும் சுற்றி காண்பித்தார். தங்கள் முதலாளி வெளிநாட்டில் உள்ள தன் மகனுடன் தங்கிவிடும் முடிவில் இருப்பதால் இந்த ஆலையை விற்க போவதாக காரணம் சொன்னார் அவர்.

விபீஸ்வர் அங்கே ஒவ்வொரு இடங்களையும், பெரிய பெரிய ராட்சத இயந்திரங்களின் திறனமைப்பையும் கவனித்து ஆராய்ந்தபடி, அவரிடம் சந்தேகங்களையும் விளக்கங்களையும் கேட்டுக் கொண்டிருக்க, காவ்யா அவற்றை எல்லாம் சிரத்தையாக கவனித்து கொண்டிருந்தாள்.

அவன் படாபட்டென்று இரண்டில் ஒன்று என பேசி அந்த ஆலையை முடித்திருந்தான். ‘இத்தனை அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன?’ காவ்யாவின் தயங்கிய பார்வையே அவனிடம் கேள்வி எழுப்ப,

“இந்த ஜின்னிங் மில் விக்க போற விசயம் லீக் ஆகறத்துக்கு முன்ன, அக்ரிமென்ட் போட்டுட்டா, அது எனக்கு தான் லாபம்… கவி” விபி ஒற்றைக்கண் சிமிட்டி சொல்ல, இவள் சட்டென வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

தன் வியாபார தந்திரத்தை பற்றி சொன்னவன், அவளை சீண்டவும் மறக்கவில்லை.

அங்கே வேலையை வெற்றிகரமாக முடித்து கொண்டு வீடு வந்து சேர மாலை கவிழ்ந்து இருந்தது.

அதன்பிறகு நவீன பருத்தி அரவை ஆலையின் கணக்குகளை சீரமைக்கும் வேலையில் அடிக்கடி அங்கே சென்று வரலானான். உடன் அவன் காரியதரிசி கவியும்.

# # #

இன்றைய நாள் ஒன்றும் அத்தனை புத்துணர்வான விடியலை தரவில்லை போல விபீஸ்வருக்கு.

அரசு பள்ளிகளில் சீருடைகளை மொத்தமாக தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இவன் கை நழுவி இருந்தது.

வியாபாரத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் சாதாரணம் தான் என்றாலும் கூட, அடுத்த முறையும் இதே தவறு நேராமல் கவனமாக செயல்படுவதும் அவசியம் ஆகின்றது.

“ஹாய் விபி, ஹௌ இஸ்ட்” என்று விரிந்த புன்னகையோடு எதிர் வந்து நின்றவனுக்கு, இவனும் தாராளமாய் பதில் புன்னகை தந்தான்.

“கங்க்ராட்ஸ் மகிழ், உங்களுக்கு இந்த டென்டர் கிடைச்சதுல மீ ஆல் சோ ஹேப்பி மேன்” வெகு இயல்பாய் தன்னை காட்டிக்கொண்டு மகிழ்நனின் கைக்குலுக்கினான் விபீஸ்வர்.

யாரையும் முறைத்து எதிரி ஆக்கிக் கொள்ளும் எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை விபீஸ்வருக்கு. தன் இலக்குகளை முயன்று வெற்றி ஆக்கி கொள்ளும் தளராத பிடிவாத குணம் தான் அவனுடையது.

“தேங்க்ஸ் யங் மேன்” என்று மேம்போக்காய் நன்றி சொல்லி விட்டு, அவன் காதருகில், “இந்த பப், பார்ட்டி, கேர்ள் ஃப்ரண்ஸோட கண்டபடி சுத்தரது எக்ஸட்ரா… இதையெல்லாம் கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கோ, இந்த அனுபவசாலியோட சின்ன அட்வைஸ், கேட்கலைனா பின்னாடி வருத்தபடுவ சொல்லிட்டேன்” என்று இலவச அறிவுரையும் வழங்கி விட்டு நகர்ந்தான்.

‘இது எல்லாம் தான் உன்னோட மைனஸ்’ என்று வெற்றி பெற்ற ஜோரில் இவனுக்கு அறிவுரைகளை வீசிவிட்டு சென்றிருந்தான் மகிழ்நன்.

விபீஸ்வர் வழக்கம் போல அவன் பேச்சை தூசு தட்டிவிட்டு, “நாம எங்க மிஸ் பண்ணோம் தெரிஞ்சதா காவ்யா?” தன் காரியதரிசியிடம் விவாதித்தபடி அங்கிருந்து வெளியே நடந்தான்.

“நாம கோட் பண்ண அமௌண்ட் கரெக்ட் தான் சர்… அவங்க கம்பெனி கோட் செஞ்சு இருக்க அமௌண்ட்ல கண்டிப்பா குவாலிட்டியான மெட்டிரீயல்ஸ் தர முடியாது சர்…” காவ்யா விளக்கம் தர,

“எஸ், இடத்துக்கு தகுந்த மாதிரி நாமும் தரத்தை குறைச்சு அமௌண்ட் கோட் பண்ணி இருக்கணும் இல்ல…!” பக்கா வியாபாரியாக விபீஸ்வர் சொல்ல, ஆமோத்திக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அமைதியாக இருந்து விட்டாள் காவ்யதர்ஷினி.

இப்படித்தான் அந்த நாட்கள் கடந்து கொண்டிருந்தன அவனுக்கு. எப்போதும் போல வழமை மாறாமல். தொழில், ஏற்றம், இறக்கம், அலைச்சல், அவ்வப்போது கேளிக்கை, கொண்டாட்டம் என.

சக்கரமாய் இலகுவாக சுற்றி வந்த அவன் பாதையில் எப்படி, எங்கு தடம்புறண்டான் என்று அவனுக்கே புரியவில்லை.

தன் ஒட்டு மொத்த கர்வத்தையும் போயும் போயும் வெகு சாதாரண சிறு பெண்ணிடம் விட்டுவிட்டு வீழ்ந்து போவானென்று அவன் நினைத்துகூட பார்த்ததில்லை அப்போதெல்லாம்.

# # #

உயிர் தேடல் நீளும்…