MM-14

MM-14

மயங்காதே மனமே 14

அந்த பிரம்மாண்டமான மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இத்தனை வருடங்களாக பாலகிருஷ்ணனும், நாராயணனும் சம்பாதித்து வைத்திருந்த தொழில்துறை நண்பர்கள், அரசியல் வட்டங்கள் என மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

அபி கன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ்இன் அத்தனை ஊழியர்களும் ஒன்றாக நின்று தங்கள் முதலாளியின் கல்யாணத்தை சிறப்பித்தார்கள். அன்று விடுமுறை கொடுத்து அத்தனை பேரிற்கும் வரும் விருந்தினர்களை வரவேற்கும் பொறுப்பை கொடுத்திருந்தான் அபி. ஒரு குடும்பமாகவே மாறிப்போன தொழிலாளர்கள் சந்தோஷமாகவே வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெற்றி எல்லாவற்றையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்.

வண்ண விளக்குகளின் அலங்காரங்கள் அந்தப் பிரதேசத்தையே ஜொலி ஜொலிக்கச் செய்திருந்தன. சுற்றிவர இருந்த மரங்களுக்கும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கார் பார்க்கிங் ஏரியா வாகனங்களால் நிரம்பி வழிய, அங்கேயும் ஒரு சிலரை உதவிக்கு நிறுத்தி இருந்தான் வெற்றி.

குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் வந்திருந்த விருந்தாளிகளை வரவேற்பதிலும், உபசரிப்பதிலும் மும்முரமாக இருந்தார்கள். அம்மாவின் கவனிப்புக் கிடைக்காத தருண் லேசாக சிணுங்கிய படி இருந்தான்.

நல்ல பளிச்சென்ற சிவப்பு நிறத்தில், தங்க நிற பார்டர் கொண்ட பட்டுப் புடவை அணிந்து அழகு தேவதையாக தன்னருகில் நின்றவளைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு. உடல் முழுவதும் தங்க நிற அரச இலைகள் நெய்யப்பட்டிருக்க, ப்ளவுசின் கழுத்துப் பகுதியை அழகிய த்ரெட் வேர்க் அலங்கரித்திருந்தது. கழுத்தில் அணிந்திருந்தரூபிசெட் அவளுக்கென்றே செய்தாற் போல அத்தனை அழகாக இருந்தது. காதில் குடை ஜிமிக்கியும், நெற்றிச் சுட்டியும், செஞ்சாந்துத் திலகமும் அவளை தேவலோக ரம்பை ஆக்கியிருந்தது.

அவள் நீண்ட கூந்தலை சற்றே உயரத்தூக்கி அலங்காரம் பண்ணி இருந்தார்கள். மிதமான ஒப்பனையும், அவள் மேனியிலிருந்து வந்த சுகந்த மணமும் பக்கத்தே நின்ற அபியை என்னென்னவோ செய்தன.

தன்னையே பார்த்திருந்தவனை உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள். கறுப்பு நிற சூட் அணிந்து கனகம்பீரமாக நின்றிருந்தான். சூட்டிற்கு மேட்சாக ஆஃப் வயிட் ஷேர்ட் அணிந்திருந்தான். அவள் பார்வையைச் சந்தித்ததும் லேசாகக் கண் சிமிட்டியவனின் இதழ்கள் எட்ட நின்றபடியே முத்தமொன்றை அனுப்பி வைத்தன. அதிர்ந்து போனவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அபி சிரித்துக் கொண்டான்.

வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக வாழ்த்திச் செல்ல கொஞ்சம் நெகிழ்ந்து போய் நின்றிருந்தார்கள் இருவரும். களைப்பாக இருந்தாலும், மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அத்தனை பேர் வந்தபோதும் உணர்ச்சி வசப்படாதவன், அந்தத் தம்பதியைக் கண்டதும் ஆரவாரமாக அவர்களை நோக்கிப் போனான். அபியின் செய்கையை ஆச்சரியமாகப் பார்த்திருந்தாள் கீதாஞ்சலி.

வந்தது வேறு யாருமல்லசுதாகரனும், மாதுமையாளும் தான். தங்கள் ஒரு வயது பெண் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை ஆனந்தமாக உணர்ந்தான் அபி.

ஹாய் சுதா!” அழைத்தபடியே சுதாகரனை நோக்கிப் போனவன் அவனைக் கட்டிக் கொண்டான். அந்த அழகான நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. அபி மட்டுமல்லாது ரஞ்சனியும் கூட அந்த நட்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். உமாவிற்கு குழந்தை பிறந்த போது முதல் ஆளாகப் போய் பார்த்துவிட்டு வந்திருந்தாள்.

என்ன மாப்பிள்ளை சார், பொண்ணை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு வந்துட்டீங்க.” கேலி பண்ணிய சுதாகரனைப் பார்த்துச் சிரித்தவன், உமாவிடம் திரும்பி,

டாக்டர் அம்மா எப்பிடி இருக்கீங்க? கோயம்புத்தூர்ல ரொம்பவே ஃபேமஸ் ஆகிட்டதா கேள்விப்பட்டேன்.” என்றான். அவன் கேலியில் சிரித்த உமா,

அபி சார், இன்னைக்கு நாங்க தான் உங்களை கேலி பண்ணனும். நீங்க இல்லை.” சொல்லிய படியே கீதாஞ்சலியை நோக்கிப் போனாள் உமா. அவர்களோடு ரஞ்சனியும் வந்து இணைந்து கொண்டு கீதாஞ்சலிக்கு உமாவை அறிமுகப்படுத்தி வைக்க அந்த இடமே கலகலப்பாகிப் போனது

அபி சார் இத்தனை நாள் வெயிட் பண்ணினது எதுக்குன்னு இப்போ தான் புரியுது அத்தான்.” என்றாள் உமா, சுதாகரனைப் பார்த்து. மனைவியைப் பார்த்து சுதாகரனும் புன்னகைத்தான்.

ஆஹா! டாக்டர் அம்மா எதையோ கண்டுபிடிச்சுட்டாங்க போல இருக்கே அஞ்சலி, என்னன்னு கேளு.” அபியும் கலாட்டாவில் இறங்கினான்.

என்னாச்சு உமா?” சிரித்தபடியே கேட்டாள் கீதாஞ்சலி.

பாக்குற பொண்ணையெல்லாம் வேணாம்னு தட்டிக் கழிச்சுக்கிட்டே இருந்தாங்க உங்க ஹீரோ. இப்போதான் புரியுது, உலக அழகியைத் தேடிக்கிட்டு இருந்திருக்காங்கன்னு.” அந்தப் பேச்சில் லேசாக வெட்கப் பட்டாள் கீதாஞ்சலி.

அபி, மழை வந்தாலும் வரும்.” கேலியாகச் சொன்ன சுதாகரனை இடைமறித்தாள் ரஞ்சனி.

அண்ணா, இது மொக்கை ஜோக். பொண்ணுங்களை மட்டந்தட்ட பசங்க சொல்லுற அபாண்டம். இது செல்லாது.” அவள் சொல்லவும், சுதா அப்படியே அடங்கிப் போனான். பார்த்த அன்றிலிருந்து ரஞ்சனி மேல் அவனிக்கிருந்த பாசம் கடுகளவும் குறைந்திருக்கவில்லை.

என் தங்கச்சி சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் சொன்னதை நானே வாபஸ் வாங்கிக்குறேம்மா

சுதா, நீங்க இவளுக்கு ஓவரா இடம் குடுக்குறீங்க. அன்னைக்கு ஒரு நாள் சொல்லுறா, நீயெல்லாம் என்ன அண்ணன், எனக்கு சுதாண்ணா தான் அண்ணன் எங்கிறா.” புகார் செய்த அபியைப் பார்த்துச் சிரித்தான் சுதாகரன்.

பின்ன என்ன சுதாண்ணா, ஒரு ஹெல்ப் பண்ணுறது கிடையாது. கூடப் பொறந்தவங்கிற அக்கறை கொஞ்சம் கூட கிடையாது.”

நீ எதுக்கும்மா இவங்ககிட்ட கெஞ்சிக்கிட்டு நிக்குறே. பேசாம மாப்பிள்ளைக்கிட்ட சொல்லி கோயம்புத்தூர் வந்திரு. வீட்டுல பொண்ணுங்க இல்லாதவங்களுக்குத் தான் அதோட அருமை தெரியும்.”

ம்அப்பிடிச் சொல்லுங்கண்ணா. இருந்தாலும் இனி வீட்டுல பொண்ணு இல்லைன்னு நீங்க சொல்ல முடியாது. அதுதான் இந்தப் பட்டுக்குட்டி இருக்கே.” சொல்லிய படியே சுதாகரனின் கைகளில் இருந்த அந்தக் குட்டி தேவதையை வாங்கிக் கொண்டாள் ரஞ்சனி. நன்கு பழக்கப்பட்டிருந்த அத்தையிடம் தாவிக்கொண்டாள் பெண்.

உமா, பாட்டி எப்பிடி இருக்காங்க?” உமாவின் காதைக் கடித்தாள் ரஞ்சனி.

ம்முன்னைக்கு எவ்வளவோ பரவாயில்லை.” சத்தமில்லாமல் பதில் சொன்னாள் உமா.

சுதா, கலெக்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்காம்? லாஸ்ட் டைம் பேசினப்போ மகேஷ் சொன்னான்.”

ஆமா அபி, பிடிக்காதவங்க யாரோ பண்ணி இருக்காங்க. கொஞ்சம் தூரம் எங்கிறதால மாறன் மாமாவும் கூடப் போயிருக்காங்க.”

அப்பிடியா!” 

தூரத்தே இருந்தபடி இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். பழைய நினைவுகள் லேசாக வந்து போனது.

குடும்பக் கதைகள் அத்தனையையும் அளவளாவி முடித்த சுதாகரன் தம்பதியை ரஞ்சனி சாப்பிட அழைத்துச் செல்ல, அபியின் முகத்தில் இருந்த மலர்ச்சியைப் பார்த்து புன்னகைத்தாள் கீதாஞ்சலி.

ரொம்ப வேண்டப்பட்டவங்களோ?”

ம்ரொம்பவே டா. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அது பெரிய கதை. அதை இன்னொரு நாள் சொல்லுறேன்.” என்றவன்,

பசிக்குதா?” என்றான். நேரம் இரவு எட்டையும் தாண்டிக் கொண்டிருந்தது.

லைட்டா.” என்றவளின் முகம் லேசாகச் சோர்ந்திருந்தது. பின்னேரப் பொழுதிலிருந்து விருந்தினர்களை வரவேற்றபடியே இருந்தனர். தூரத்தில் நின்ற அம்மாவைக் கண்ணாலேயே அழைத்தவன்,

அம்மா, அஞ்சலிக்கு ஏதாவது சாப்பிடக் குடுங்க, பசிக்குமில்லை.” என்றான்

ஆட்கள் வர்ரது கொஞ்சம் குறைஞ்சிருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிருங்க. யாராவது வந்தாங்கன்னா நான் அப்பாவை கவனிக்க சொல்லுறேன்.” சொல்லியபடியே இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் சீமா. ஃபோன் அலறவும், அதை எடுத்துப் பார்த்தான் அபி. புதிய நம்பராக இருந்தது. யோசனையோடே காதுக்குக் கொடுத்தான்.

ஹலோ.”

சார், நான் கதிர் பேசுறேன்.”

எந்தக் கதிர்ங்க?”

மித்ரன் சாரோட பி சார்.” அந்தப் பதிலில் கொஞ்சம் உஷாரானான் அபிமன்யு.

ம்சொல்லுப்பா, என்ன விஷயம்?” இத்தனை நேரம் அந்தக் குரலில் இருந்த இலகுத் தன்மை காணாமல் போயிருந்தது.

சார், கார் பார்க்கிங் வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா?” அந்தக் குரல் கெஞ்சியது.

என்னப்பா விளையாடுறியா? நான் எதுக்கு இப்போ அங்க வரணும்? இங்க ஃபங்ஷன் நடக்குது, தெரியுமில்லை?”

சார், ஒரு பத்து நிமிஷம், என்னால மித்ரன் சாரை கன்ட்ரோல் பண்ண முடியலை. கொதிச்சுக்கிட்டு இருக்கார். அவர் அங்க வந்தா ஏதாவது ரசாபாசம் ஆகிடுமோன்னு பயமா இருக்கு சார்.” கதிரின் குரலிலேயே மித்ரனின் நிலமை என்னவென்று அபிக்குப் புரிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

வெயிட் பண்ணு கதிர், வந்துக்கிட்டே இருக்கேன்.” என்றவன், தன் அம்மாவிடம்,

அம்மா, நீங்க அஞ்சலியை சாப்பிடச் சொல்லுங்க. நான் ஒரு முக்கியமான ஃப்ரெண்ட்டை பாத்துட்டு ஒரு பத்து நிமிஷத்துல வந்திர்ரேன்.” சொல்லிவிட்டு அவசரமாக கார் பார்க்கிங்கை நோக்கிப் போனான். அம்மா அழைத்ததை அவன் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

இவனைக் கண்ட மாத்திரத்தில் காரை விட்டு இறங்கிய மித்ரன், கொத்தாக அபியின் காலரைப் பற்றினான். அபி சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. புன்னகைத்தபடி அமைதியாக நின்றிருந்தான். கண்கள் மட்டும் தன் சட்டையைப் பற்றியிருந்த மித்ரனின் கைகளைப் பார்த்து மீண்டது. தடுக்க வந்த கதிரை தள்ளிவிட்டான் மித்ரன்.

அபி…! வெச்சு செஞ்சிட்டே இல்லை? இதுக்கு நீ என்னை கொன்னு போட்டிருக்கலாம்.” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான். முகம் பார்க்க விகாரமாக இருந்தது.

உன்னை எதுக்கு நான் கொல்லனும் மித்ரன்?” வார்த்தைகள் நிதானமாக வந்தது.

நடிக்காதடாஎதுவும் தெரியாத மாதிரி நடிக்காத…” மித்ரனின் சுருதி ஏறியதில் தொலைவில் ஏதோ வேலையாக வந்த வெற்றி ஓடி வந்தான். இவர்கள் நின்ற கோலத்தைப் பார்த்தவன்,

சார்! என்ன சார் நடக்குது இங்க?” என்றான். குரலில் பதட்டம் இருந்தது. அவனை ஒற்றைக் கையால் தள்ளி நிறுத்திய அபி,

நீ ஒதுங்கு வெற்றி, ஒரு பழைய கணக்கு ரொம்ப நாளா பாக்கி இருக்கு. இன்னையோட அதை முடிச்சிர்ரேன்.” வாய் வெற்றியிடம் பேசினாலும் கண்கள் மித்ரனிடமே இருந்தது. கதிரும், வெற்றியும் செய்வதறியாது கையைப் பிசைந்தபடி நின்றார்கள். லேசாகச் சிரித்த அபி, கதிரைத் திரும்பிப் பார்த்தான்.

என்ன கதிர்? கார் நேரா ஏர்போர்ட்ல இருந்து இங்க தான் வருது போல? பிசினஸ் ட்ரிப் சக்ஸஸாமா உன் முதலாளிக்கு?” என்றான் கேலியாக.

அபிஎன்னைக் கொலைகாரன் ஆக்காத.” உறுமிய மித்ரனின் கையை தன்னிடமிருந்து அகற்றிவிட்டான் அபி.

ஆட்டத்தை ஆரம்பிச்சு வெச்சது நீ, நான் சுபம் போட்டிருக்கேன் அவ்வளவுதான்.”

உன் ஃபோட்டோவை நான் போடல்லை.” கத்தினான் மித்ரன்.

இப்போ போடலைன்னா என்ன? அப்போ போட்டே இல்லை? மித்ராசேர்க்கை சரியில்லைப்பா உனக்கு. உன் கழுத்துலேயே கத்தியை வச்சுட்டான் மகேந்திரன் பாத்தியா?” அபியின் பதிலில் மித்ரனின் கண்கள் கூர்மையானது.

அப்போஎல்லாம் தெரிஞ்சு தான் இவ்வளவு தூரம் வந்திருக்க இல்லை?” திட்டம் போட்டுத்தான் என் கீதாஞ்சலியை எங்கிட்ட இருந்து பறிச்சிருக்க இல்லை?” இந்த வார்த்தைகளை மித்ரன் சொல்லி முடிக்கும் போது, அபியின் கைகள் மித்ரனின் கழுத்தை நெரித்தது.

இன்னொரு தடவை இந்த மாதிரி பேசினகுடலை உருவிடுவேன். அபி பொண்டாட்டி, அவ்வளவுதான் உன் வாயிலிருந்து வரனும். பெயர் சொன்னே, மிதிச்சே கொன்னுடுவேன்.” ஆக்ரோஷமாக வந்த அபியின் பதிலில் மித்ரன் கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்தான். உணர்ச்சிகள் இப்போது இடம் மாறியிருந்தது.

மித்ரனின் மனது இப்போது வேகமாகக் கணக்குப் போட்டது. தன்னைப் பழிவாங்கவே அபி இந்தக் கல்யாணத்தை நடத்தி இருக்கிறான் என்ற எண்ணம், முதல் தடவையாக சறுக்கியது. அபியின் உயிர் நாடியும் அந்தப் பெண்தானோ என்று சிந்திக்கத் தோன்றியது. போர் முறையை சட்டென்று மாற்றினான்.

…! அவ்வளவு காதலா? நான் தான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன் அபி. நீ ரொம்பவே ஸ்டேட்டஸ் பாப்பியா, நான் அந்த இடத்துலதான் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்.” சொன்னவனின் நிதானம் அபியைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. தன் வசம் இருந்த அவன் கழுத்தை ஓங்கித் தள்ளிவிட்டான். பக்கத்தில் இருந்த காரோடு போய் மோதி நின்றான் மித்ரன்.

கைகள் இரண்டையும் விரித்து அந்தக் காரோடு சேர்ந்து நின்றவன் இப்போது லேசாகப் புன்னகைத்தான். அவன் நடவடிக்கைகள் அபிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று மாறவும், அபி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். இவன் வேறு எதற்கோ அடித்தளம் போடுகிறான் என்று அவன் உள்மனது அடித்துச் சொன்னது.

பொறுக்கிஉனக்கே காதல் வரும் போது எனக்கு வராதாடா?”

குட், அப்போ காதல்தான்னு ஒத்துக்கிறயா அபி?”

சர்வ நிச்சயமா.”

ஹாஹாஅப்போ என்னோட வலி உனக்குப் புரியும் இல்லை. உனக்கு வலிக்கனும்டா, இப்போ எனக்கு வலிக்குதில்லை அதே வலியை உனக்கு மித்ரன் காட்டுவான்டா.” மித்ரனின் ஆங்காரக் குரலில் சிரித்தான் அபி.

காரில் ஸ்டைலாக சாய்ந்து நின்ற மித்ரனை நோக்கி வந்தவன், அவன் ஷேர்ட்டில் இல்லாத தூசியைத் துடைத்து விட்டான்.

ப்ரோஇந்தக் கை இருக்கு பாருங்க, இதை தனியா தட்டினா சத்தம் வராது ப்ரோ. இன்னொரு கையும் வேணும் ப்ரோ. இதை புரிஞ்சுக்க முடியாத அளவு நீங்க சின்னப் பையனும் கிடையாது ப்ரோ. நீங்க அந்த மன்மதனுக்கே ட்யூஷன் எடுப்பீங்கன்றது இந்த ஊருக்கே தெரிஞ்ச ரகசியம் ப்ரோ.” வார்த்தைக்கு வார்த்தை அவனை கேலி பண்ணினான் அபி.

ம்தெரியுதில்லை அபி, மித்ரன் மன்மதனுக்கே பாடம் எடுப்பான்னு. ரொம்பத் தைரியமாப் பேசாதே.” சொன்னவனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான் அபி

வார்த்தையை அளந்து பேசு. என் பொண்டாட்டி நிழலை கூட உன்னால தொட முடியாது.” அந்த வார்த்தைகளை அபி சொன்னபோது ஒரு கோணல் சிரிப்பு சிரித்தான் மித்ரன். அந்த அடி கூட வலிக்கவில்லை அவனுக்கு.

ஆனாலும் உனக்கு நான் நன்றி சொல்லனும் மித்ரா. எத்தனை தரம் அந்த நர்சரிக்குப் போயிருப்பேன். என் அஞ்சலியை நான் ஒரு தடவை கூட கவனிச்சுப் பாத்திருக்கமாட்டேன். ஆனா, நீ உன் ஆதர்ஷ நாயகியோட என்னை சேத்து வெச்சு ஒரு ஃபோட்டோ போட்ட பாரு. அன்னைக்கு பத்திக்கிச்சு மாப்பிள்ளை நெருப்பு.”

என் வாழ்க்கையில நான் பண்ணின மிகப் பெரிய தப்பு அதுதான் அபி, ஒத்துக்கிறேன். என் தப்பை நானே சரி பண்ணுறேன். மித்ரனைக் கெட்டவனாத்தான் இந்த உலகம் பாக்க விரும்புதுன்னா நான் என்ன பண்ண ப்ரோ. நல்லவனாக விட மாட்டேங்கிறீங்களேடா!” என்றவனை ஆழமாகப் பார்த்தான் அபி.

வேணாம் மித்ரா, எம் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அந்த ஸோனாவை என்னால தூசு மாதிரி தட்டிட்டுப் போக முடியும். ஆனா அஞ்சலி அப்பிடியில்லை. அவ மேல உம் பார்வை பட்டுதுன்னு தெரிஞ்சாலே நீ சாம்பல் தான். நீ இதுவரைக்கும் பாக்காத அபிமன்யுவை இனிப் பாப்ப, ஒதுங்கிரு.” எச்சரித்தான் அபி. அதற்கெல்லாம் அடங்குபவனா மித்ரன். கையை நீட்டி சோம்பல் முறித்தான்.

செம டயர்ட் அபி, ஜப்பான் வேற வின்டர் ஸீஸனா? குளிர் பின்னுடிச்சி. ஊருக்கு வந்தாலே போதும்னு இருந்துது.” எதுவும் நடக்காததைப் போல பேசிய மித்ரனைப் பார்த்த அபி நக்கலாகச் சிரித்தான்

ரொம்பத்தான் குளிருக்குப் பயந்தவன் நீ! உன்னை மாதிரி ஆளுங்களுக்கு, அதுக்கெல்லாம் வேற ரெமெடீஸ் இருக்கே.”

ம்ஹூம்இந்தத் தடவை கொஞ்சம் வித்தியாசமான ரெமெடி. புது மாப்பிள்ளை, அது என்னன்னு நான் சொன்னா நீங்க தாங்க மாட்டீங்க.” அவன் வில்லங்கமான பதிலில் அபியின் தாடை இறுகியது. அவன் கோபத்தைப் பார்த்துச் சிரித்தவன்,

கதிர், காரை எடு.” என்றான். அத்தனை நேரமும் அமைதியாக நின்ற கதிர், ஓடிப் போய்க் காரை ஸ்டார்ட் பண்ண அதில் ஏறிக்கொண்டான் மித்ரன். கண்கள் நான்கும் இன்னொரு முறை மோதிக் கொண்டன.

                                            *     *     *     *     *     *     *     *     *     *     *

பப்இல் உட்கார்ந்திருந்தான் மித்ரன். நீண்ட நாட்களுக்குப் பின்னான அவன் வரவு அங்கிருந்த அத்தனை பேரையும் ஆச்சரியப் படுத்தியிருந்தது

மனம் கொதிகலனாகக் கொதித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக தானாகத் தேடிச் சென்ற பெண், தன்னை கொஞ்சம் நிதானிக்கச் செய்த பெண், பாட்டி சொன்னதை வைத்துப் பார்த்தால் தன்னை மனிதனாக மாற்றிய பெண்இன்று தனக்கு இல்லை. அந்த உண்மையை ஏற்க மனம் மிகவும் போராடியது.

கீதாஞ்சலிஎன்ற பிம்பம் நொறுங்கிஅபியின் மனைவிஎன்ற பிம்பம் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டது. ‘ஜானி வாக்கர்ஒவ்வொரு பெக்காக இறங்கிக் கொண்டிருந்தது.

பிஸினஸ் பேச்சுவார்த்தையை, வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த மித்ரனை, அந்த வாட்ஸ்அப் மெஸேஜ் நிஜத்திற்குக் கொண்டு வந்திருந்தது

ஸோனா அனுப்பி இருந்தாள். அது ஒரு இன்விடேஷன். என்னவாக இருக்கும்? என்று எண்ணியபடியே பார்த்தவனுக்கு தலை சுற்றியது.

நிஜத்தைப் புரிந்து கொள்ள இரண்டொரு நிமிடங்கள் எடுத்துக் கொண்டவன் கதிரை அழைத்தான். பயத்தில் வாய் குழறியவனிடமிருந்து தகவலை ஊர்ஜிதப் படுத்தியவன், அடுத்த ஃப்ளைட்டில் ஊர் வந்து சேர்ந்திருந்தான்.

புயலாகிப் போயிருந்தவனை தடுக்க திராணியில்லாமல், அபியை வெளியே அழைத்திருந்தான் கதிர். அபியைப் பார்க்கும் அந்த நொடி வரை அவன் காதலியை அந்த அயோக்கியனிடம் இருந்து பறிக்கும் எண்ணம்தான் இருந்தது

ஆனால் எப்போது அவன் அத்தனை தைரியமாகப் பேசினானோ அப்போது புரிந்தது மித்ரனுக்கு, தன் சொர்க்கம் கை நழுவிப் போய் விட்டதென்று. அந்தக் கணம் அவனுள் மையம் கொண்ட நிதானம், இந்த நொடி வரை நிலையாக நின்றது

மனம் வெற்றிடமாக இருப்பதைப் போல் உணர்ந்தான் மித்ரன். காதல் என்ற உணர்வு போய் தான் தோற்றுப் போன உணர்வே மனதை நிறைத்துக் கொண்டது. தன்னை வாழ்க்கையில் தோற்கடித்த ஒருவனை பழிவாங்கும் வெறியே மிகைத்துக் கொண்டு போனது. இன்னொரு மிடறு சுகமாக உள்ளே இறங்கியது.

 

error: Content is protected !!