முகிலன் விகாஷினியை பார்த்ததும் அதிர்ச்சியடைவான் என்று பார்த்தால், அது தான் இல்லை… இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இருந்தது அவன் பார்வை.
காட்டேஜ் விட்டு இறங்கி அவளை நோக்கி கால்களை நகர்த்தினான்… அவளும் இவன் வருவதை பார்த்து இறங்கி நடந்து வந்தாள்…
வரும் வழியில் பல படகுகள் நிற்க வைத்திருக்க… அதன் மேல் சுற்றுலா பயணிகள் மற்றும் காதலர்கள் அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்தும், பேசியும் பொழுதை போக்கினர். படகில் இடம் கிடைக்காதவர்கள் படகு மறைவில் அமர்ந்து தங்கள் காதலை வளர்த்து செழிப்பாக்க பாடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இவர்கள் நெருங்கிய நேரத்தில் அருகில் உள்ள படகில் இருந்த தம்பதிகள் எழுந்து சென்று விட… விகாஷினி அதில் குதித்து ஏறினாள். படகின் ஒரு முனையில் சென்று அமர்ந்து… அவனை பார்க்க…
அவன் மறுமுனையில் அமர்ந்து புன்னகையோடு…
“என்ன மேடம்… வாழ்க்கையில் முதல் தோல்வியை சந்திச்சிருக்கீங்க… ஹொவ் டூ யு பீல் நொவ்…?”
என்று கணீர் குரலில் கம்பீரமாக… ஆனால் வார்த்தைகளில் நக்கல் தொனிக்க கேட்டான்.
“ஜெயிச்சிட்டோம் அப்படிங்கற திமிரா…? நீ அப்படிங்கறதால இங்க பேசிட்டு இருக்கேன்… இல்லைனா இந்த காண்ட்ராக்ட் இப்போ என் கையில் தவழ்ந்திருக்கும்…”
என்று அலட்சிய புன்னகையோடு கூற..
“ஆமா ஆமா.. ஒருத்தனை போட்டு தள்ளிட்டு காண்ட்ராக்ட்ட பிடுங்கிறது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே.. என்னை போட்டுத் தள்ள உனக்கு எவ்ளோ நேரம் ஆகிற போகுது..”
என்றான் முகிலன்.
“ஸ்டாப் இட் முகில்… நான்சென்ஸ் ஆ உளராத.. ஏன் பார்ட்னெர்ஷிப் வச்சிக்க முடியாதா.. அப்படி போட்டு தள்ளிட்டே இருந்தா இன்னக்கி மும்பைல ஒரு கம்பெனி இருக்காது தெரியுமா.. ?”
என்றாள் சீறினாள் அவள்.
“ஹே.. யாருக்கிட்ட… நீங்க பிசினஸ்ல பண்ணற பண்ணிட்டு தில்லுமுள்ளு எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. அப்படியே நேர்மையின் திருவுரு மாதிரி பேசாத.. சொல்லிட்டேன்..”
என்று அவளிற்கு குறையாமல் கர்ஜித்தான்..
“பிசினஸ்ல நேர்மையா இருந்தா கையில திருவோடு எந்தி ரோட்டில் போகணும்… இது உனக்கு தெரியாது பாரு… நீயே என் கம்பெனிய ஒரு வருசமா வேவு பாத்துருக்க… நேர்மைய பத்தி பேசுற ரைட்ஸ் உனக்கு இல்ல… இதுவே வேற யாரும் என்றால் அவங்களை நடுத்தெருக்கு கொண்டு வந்துருப்பேன்..”
என்று கண்ணில் கனல் ஏற கூறினாள்…
இவர்கள் இருவரும் மற்றவர்கள் கருத்தை கவராமல் ஆனால் வார்த்தைகளை கூறிய அம்பென ஒருவர் மீது ஒருவர் விட்டு விளாசினர்.
அவள் அப்படி கூறும்போதே அவள் அனைத்தையும் அறிந்து தான் வந்திருக்கிறாள் என்று உணர்ந்துக்கொண்டான்.
“ஒஹ்… அப்படியா…? எங்கே இப்போ நான் உன் முன்னாடி தான இருக்கேன்.. அதுவும் உன்னை தோற்கடிச்சிட்டு.. என்னை என்ன பண்ண முடியுமோ பண்ணு பார்க்கலாம்.. நான் முகிலன்.. கார்முகிலன்..”
என்றான்.
“பச்.. நான் திரும்ப திரும்ப சொல்றேன்.. போட்டு தள்ள நினைச்சா.. நான் இங்க வந்துருக்க மாட்டேன்.. 2 வருஷம் ஆச்சே.. கொஞ்சமாவது மாறிருப்பனு நினைச்சேன்.. நீ இன்னும் மாறவே இல்ல.. அப்போவும் நான் சொல்ல வராத கேட்க உனக்கு பொறுமை இல்லை.. இப்போதோ நீ தேவையில்லாம என்கிட்ட பகை வளர்த்திட்டு இருக்க… உன்கிட்ட பேச வந்தேன் பாரு..”
என்று சொல்லி முடிக்க..
“போதும்… உன் நடிப்பு என்கிட்ட செல்லாது.. அண்ட் மோர்ஓவர் என்மேல கை வைக்க உன்னால முடியாது.. உன்கிட்ட நேர்ல மோத போறோம்னு தெரிஞ்சி எல்லா ஏற்பாடும் பக்காவா பிளான் பண்ணிட்டு தான் வந்துருக்கேன்.. வீணா ட்ரை பண்ணி மறுபடியும் தோற்று போகாத…”
என்றான்.
முகிலனை அழுத்தமாக பார்த்தவள்.. எழுந்து போக பார்க்க… அவனிற்கு அவளை சும்மா விட மனதில்லையோ…
“இதுதான் ஆரம்பம்… போக போக பாரு நீ பண்ணுன அத்தனையும் உனக்கு திரும்பி பண்ணுறேன்…”
என்று கூற…
“என்ன பண்ணுவ… உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது… இப்போ நீ பண்றதுக்கு பின்னாடி கண்டிப்பா வருத்தபடுவ… இப்பொதும் சொல்றேன் நான் பிசினஸ்ல எப்படியோ… சொந்த வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றல… நீ அத மனசுல வச்சி என்கிட்ட மோதாத… உனக்கு கடைசி சான்ஸ் தரேன்.. இதுக்கு மேல என்வழில வந்த.. அழிஞ்சிபோயிருவ…”
என்று அவளுக்கே உரிய பாணியில் அழுத்தமாக கூறினாள்.
அவள் கூறியதை கேட்டு இவனிற்கு தான் கோபம் விஸ்வரூபம் எடுத்தது…
“என்ன சொன்ன சொந்த வாழ்கையில் ஏமாற்றலயா…”
என்று புருவம் இடுங்க கேட்க..
“எஸ்.. ஆப் கோர்ஸ்… என் காதல் பொய்யில்லை… அதை இப்போ கூட என்னால நிருபிக்க முடியும்… ஆனா உனக்கு நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை…”
என்று வானத்தில் எங்கோ பறந்து கொண்டிருந்த பறவையை பார்த்து கூறினாள்..
“காதல்…?” என்று ஏளனமாக கேட்டவன்…
“அதுக்கு அர்த்தம் தெரியாதா நீயெல்லாம் அத பத்தி பேசுறது தான் வேடிக்கை…”
என்று குத்தினான்.
பெற்றோர் மற்றும் தங்கையிடம் பேசி முடித்த ருத்ரா… தன் காட்டேஜ் திரும்ப நினைக்க அவள் காலருகில் ஒரு விளையாட்டு பந்து வந்து விழுந்தது… அதனை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பத்தடி தூரத்தில் இருந்த படகிற்கு பின்புறமிருந்து ஒரு ஏழு வயது மிதக்கத்தக்க பெண் குழந்தை ஓடி வந்தது… அவளிடம் புன்னகையோடு பந்தை கொடுத்து விட்டு ருத்ரா நிமிர… சற்று தள்ளி ஓரமாக இருந்த படகில் தன் கணவன் வேறொரு பெண்ணுடன் அமர்ந்திருப்பதை பார்த்தாள்… யார் என்று யோசனையுடன் நெருங்க… தூரத்திலேயே விகாஷினி என்றும் அறிந்துக்கொண்டாள்.
இவள் எதற்கு இங்கே… ஏதாவது பிரச்சனையோ என்று எண்ணியவாறு அவர்களிடம் விரைய…
அதேநேரம் தன் காதலை இகழ்ச்சியாக கூறியதும் விகாஷினிக்கு மனதிற்குள் ஆத்திரம் மிகுந்தது.
“பார்றா… காதலை பத்தி நல்லா தெரிஞ்ச பெரியமனுசன் இங்க இருக்கார்னு தெரியாம போச்சே… எப்படி விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன்ல வேலை பார்த்த ருத்ரா உன் மனைவி ஆகினா…? சரி அது கூட தற்செயல்னு சொல்லலாம்… பட்… பிசினஸ்காக கல்யாணம் பண்ணுன உன்னை விட… தனியா இருக்குற என் காதல் ஒரு படிமேல தான்… இன்பாக்ட் உனக்கு தான் காதல பத்தி பேச… சாரி நினைக்க கூட அருகதை இல்ல…”
என்று வார்த்தைகளை ஆந்திரா மிளகாயின் காரத்தோடு அள்ளி தெளித்தாள்.
இந்த வாக்கியம்… கடல் அலைகளின் இரைச்சலையும் மீறி ருத்ராவின் காதில் துல்லியமாக விழுந்ததை விதி என்பதை தவிர வேறு என்ன சொல்ல…?
முகிலனும் விகாஷினியிடம் இருந்து இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை… அவனே தன் மனதிடம் அனுதினமும் கேட்கும் கேள்வியல்லவா… இந்த இரு நாட்கள் மறந்திருந்தது… அவள் கேட்டதும் மீண்டும் மனதினுள் குடைய தொடங்கியது.
ருத்ரா விகாஷினியின் கூற்றில் அங்கிருந்து நகராமல் கால்களை மண்ணில் புதைத்தது போல் அசையாமல் நின்றுவிட்டாள்… பின்னர் நினைவு வந்து அவர்கள் பார்த்துவிடாமல் இருக்க பக்கத்து படகில் சாய்ந்து மறைந்து கொண்டாள். அப்போது தான் அவளிற்கு மூச்சுகாற்று வேக வேகமாக தேவைப்பட்டது, இத்தனை நேரம் மூச்சடக்கி நின்றதால்…
அதற்கு மேல் நிற்க தோன்றாமல்… இல்லை முடியாமல் தங்களது இடத்திற்கு சென்றுவிட்டாள் மனதை பிசையும் எதோ ஒரு உணர்வோடு.
முகிலன் தடுமாறியதை நொடியில் மறைத்து…
“நான் ஆவது கல்யாணம் தான் பண்ணுனேன்… ஆனா நீ தான் கருமாதியே பண்ணிட்டியே…”
என்று கூறிகொண்டே எழுந்து இறங்கி மணலில் நின்றுக்கொண்டான்.
அவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்தியதோ…
பல்வேறு உணர்ச்சிகளில் ஆட்பட்டு விகாஷினி கொந்தளித்தாள்… அவன் முன் தன் பலவீனத்தை காட்ட விருப்பமின்றி… அவனிற்கு முன், ஏறியதை போலவே குதித்து இறங்கியவள்… தன் காட்டேஜ் நோக்கி சென்றுவிட்டாள்.
முகிலனும் மனதில் வெகு சங்கடத்துடன்… மீண்டும், ருத்ராவிற்கு நியாயம் செய்யவில்லையோ…? தவறு செஞ்சிட்டோமோ என்றவாறு தன்னையே குழப்பி கொண்டு நடக்க… பின் நியாபகம் வந்தவனாக ருத்ரா எங்கே என்று பார்வையால் தேடினான்…
வானமும் நன்றாக இருட்டியதால் ஆள் நடமாட்டம் சிறிது சிறிதாக குறைந்துக்கொண்டு வந்தது.
அவள் தங்களை பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் சிறிதுமின்றி காட்டேஜ் சென்றிருப்பாள் என்று எண்ணினான்… ஏன்னெனில் அவர்கள் பேசியது தான் ருத்ராவின் எதிர்ப்புறம் மற்றும் ஒதுக்குப்புறம் ஆயிற்றே… பந்து வந்து அவன் வாழ்க்கையை பந்தாடும் என்று நினைத்துப் பார்த்திருப்பானா…?
அவன் உள்ளே நுழைந்து பார்க்க… ஹாலில் கொண்டு வந்த பெட்டிகள் தயாராக இருந்தது… அவள் எங்கே என்று ரூமிற்குள் எட்டி பார்த்தான்…
மனக்கஷ்டத்தில் அல்லது அழுத்தத்தில் வழக்கமாக படுப்பது போல் சுருண்டு படுத்திருந்தாள்… அவள் படுத்திருந்த விதம் அவன் மனதை இளக்கியது… அருகில் நெருங்கி
“ருத்ரா என்ன பண்ணுது…”
என்று கேட்டான்.
அவள் பதில் கூறாமல் படுத்திருக்க…
“பசிக்குதா… ?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
அவன் அங்கிருந்து போனால் போதும் என்று நினைத்த ருத்ரா.. இல்லை என்று தலையசைத்தவாறு எழுந்து போர்வை கழுத்து வரை போர்த்தி படுத்துக்கொண்டாள்.
“பின்ன… வீட்டை மிஸ் பண்ணுறியா…?” என்று மேலும் விடாது கேட்டுக்கொண்டிருந்தான்.
அலைபேசியில் பேசிய சந்தோசம் இப்பொது அவள் முகத்தில் இல்லாதிருக்கவே என்ன காரணம் என்று அறிந்துகொள்ள முகிலன் விழைய…
ருத்ரா வாய் திறந்தாள் தானே… அவள் ஆம் என்பது போல் தலையசைத்து… இவனை தலையால் தண்ணிர் குடிக்க வைத்தாள்.
வீட்டை மிஸ் பண்ணுவது உண்மைதானே என்ற நினைவில் ருத்ரா அவன் கேட்டதிற்கு தலையாட்டி மீண்டும் சுருண்டாள்.
வேறொரு நேரமாக இருந்தால் முகிலன் கோபம் கொண்டிருப்பான்… இப்போது அவன் மனதும் ருத்ராவை எண்ணி குழம்புவதால் பொறுமையாக விளக்கை அணைத்து படுத்துக்கொண்டான்.
ஆக இவர்களது இரண்டாவது இரவு… உணவு கூட உண்ண மனதின்றி பட்டினியோடு கழிந்து கொண்டிருந்தது.
********************************************
முகிலனிடம் சொல்ல வந்த விஷயம் சொல்ல முடியாமலே போக… அவனது பேச்சில் எரிச்சல் கலந்த கோபத்தில் விஜயவாடா சென்று அங்கிருந்து மும்பைக்கு பிளைட் ஏறினாள் விகாஷினி.
முட்டாள் முகில்… என்று அவள் மனது அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தது.
இரவு ஒரு மணி அளவில் மும்பையில் விகாஷினி இறங்கியதும்… அவளது போன் சிணுங்கியது… யார் என்று பார்த்தால், அவளின் தாய் விக்னேஸ்வரி அழைத்துக்கொண்டிருந்தாள்.
அதை சிறிது வெறுப்போடு பார்த்தவள், பின் பெருமூச்சை விட்டு…
“ஹலோ மாம்…”
என்று முகத்தை திருத்தி கூற…
“ஹலோ… மும்பை வந்தாச்சுல… நேரா வீட்டுக்கு வா… உன்கிட்ட பேசணும்…”
என்றார் அவர்.
“நான் காலையில் வரேன் மாம்.. அதுவரை பக்கத்துல இருக்குற கெஸ்ட் ஹவுஸ்ல தூங்கி எந்திச்சி வரேன்… ஐ பீல் வெரி டையர்ட்… ப்ளீஸ்”
என்றாள் குரலில் சோர்வை காட்டி.
அவரும்,
“சரி சீக்கிரம் வா…”
என்றதோடு முடிக்க..
“ஓகே மாம்… ஆபீஸ் போறதுக்கு முன்னாடி அங்க வந்துட்டு போறேன்..”
என்றவாறு போனை அணைத்து பாக்கெட்டில் போட்டாள்.
எந்நேரமும் அவரின் கண்காணிப்பின் கீழ் இருப்பது அவ்வளவு வெறுப்பாக இருந்தது… ஆனாலும் இன்னும் சிறிது நாட்கள் என்று பல்லை கடித்து பொறுத்துக்கொண்டிருக்கிறாள்.
அவளுக்காக கார் காத்திருக்க…
“நான் போயிக்குறேன்… இந்தா இதை வைத்துக்கோ… காலையில் கெஸ்ட் ஹவுஸ் வந்திரு…” என்று டிரைவரிடம் கூறி ஏறி அமர்ந்தவள்…
காரை கிளப்பும் முன்…
“மாம் கேட்டால்…”
என்று அவனை பார்த்து புருவம் உயர்த்த…
“கெஸ்ட் ஹவுஸ் வந்தாச்சு மேம்…”
என்றான் வாயெல்லாம் பல்லாக…
“ம்ம்… குட்..”
என்றவள் அடுத்த நிமிடம் டிராபிக்கில் கலந்திருந்தாள்.
இவனை போல் பத்து பேரை சரி கட்டி தான் இரண்டு வருடமாக தாயின் கண்ணில் மண்ணை தூவி வருகிறாள்.
கார் பதினைந்து நிமிடத்தில் அந்தேரியில் இருக்கும் பிரமாண்ட செவென்ஹில்ஸ் ( seven hills ) மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் நுழைந்தது.