MM 9

மாயவனின் மயிலிறகே

அத்தியாயம் 9

நாம் மிகவும் நேசித்தவர்கள் நமக்கு துரோகத்தைப் பரிசளிக்கும் போது வரும் வலியானது முதுகுத்தண்டை ஆயிரம் முறைத் துளையிட்டால் வரும் வேதனையை விட அதிகம்.

ரவிசந்திரனும் அதே வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். எத்தனைக் கம்பீரமானவர். அய்யனார் போன்ற அவரது தோற்றம் பயத்தைக் கொடுத்தாலும் நடத்தைப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்திருந்தது.

அவருடைய செயல்கள் அவரை அரசராகவேக் கொண்டாட வைத்தது. அதனால்தான் தங்களதுப் பிரியமான எஜமானன் கொண்ட கவலையை எப்படியாவது களைய வேண்டும் என்ற நோக்குடன் கிராமத்து டான்கள் காயத்ரியைக் கடத்தியிருந்தனர்.

ரவிசந்திரனின் பண்ணை வீடு. அவர் முன் ஏதோச் சாதனை செய்ததுப் போல பெருமையாக நின்றிருந்தனர் சிலர். அவரின் அபிமானிகள். சோபா போன்ற நீள் இருக்கையில் மயங்கிக் கிடந்த பெண்ணை ஒரு சலனமில்லாதப் பார்வையில் கண்டவர்க்கு என்ன தெரிந்தது.

தங்கையின் துரோகமா?

தனது மக்களின் கண்மூடித்தனமானப் பாசமா?

“ஐயா! இந்தப் பொண்ணு நம்ம பாப்பாவ கூட்டிட்டு போனப் பையனோட அக்காங்க. அதான் இந்த பொண்ணத் தூக்கினா பையன் தானா வருவான்னு உங்கக்கிட்ட கூடக் கேக்காம செஞ்சிட்டோம்” என்று அபிமானி ஒருவன் கூறினான்.

தன் முகத்தை ஆவலாக நோக்கியவர்களிடம் “உங்ககிட்ட இத எதிர்பாக்கல! ஏன் இப்படி செஞ்சீங்க?. இதென்னப் பழக்கம்! வீட்டு பொண்ணுங்க மேலக் கைய வைக்கிறது. தப்பு அந்தப் பையன் மேல மட்டுமில்ல நம்மப் பொண்ணு மேலயும்தான். யாரோ செஞ்ச வேலைக்கு இந்தப் பொண்ணுக்குத் தண்டனையா? இந்தப் பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தீங்களா!” கத்தவில்லை, கோபப்படவில்லை. ஆனால் கம்பீரமான அழுத்தமான குரலில் வினவினார்.

அபிமானிகள் தலைக்குனிந்து நின்றிருந்தனர். சந்திரனுக்கு மனம் வருத்தப்பட்டது. அவனுக்காக அல்லவா இந்தத் தலைகுனிவு. “நீங்கப் போங்க நான் இந்தப் பொண்ண அவங்க வீட்ல சேர்த்திடறேன்”

அபிமானிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ஐயா வேணாமுங்க நாங்க ஏதோ உங்களுக்கு நல்லது செய்யன்னு இப்படிப் பண்ணிட்டோம். இப்பப் பாத்தாத் தப்புன்னுத் தோணுதுங்க. நாங்களே போய் இவங்க வீட்டாளுங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டு விட்டுட்டு வரோமுங்க” என ஒருவன் தங்களது நிலையைத் தெரிவித்தான்.

“இல்லை வேண்டாம். இதுல நீங்க தலையிட வேண்டாம். அவங்க இப்ப எந்த நிலைமைல இருக்காங்களோ! அதனால நானேப் போறேன். அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டு இவங்கள விட்டுட்டு வரேன்.” இதுதான் இறுதி என முடிக்க

தவறை உணர்ந்தார்களா? தெரியாது. ஆனால் அவர் வார்த்தையை மீறிப் பழக்கமில்லாதவர்கள், “எங்களை மன்னிச்சிடுங்க” எனக் கூறிச் செல்வதற்காகத் திரும்ப அங்கே கண்விழித்து அமர்ந்திருந்தார் காயத்ரி.

அனைவரும் அதிர்ந்தனர். காயத்ரியின் கலங்கிச் சிகப்பேறியிருந்த முகமே கட்டியம் கூறியது அவர் அனைத்தையும் கேட்டுவிட்டார் என்று.

“மன்னிச்சுக்கோங்க தாயி” எனக் கையெடுத்து கும்பிட்டவர்களை இன்னும் நன்றாக மயக்கம் தெளியாதக் கண்களில் பார்த்தவர் “நீங்க போகலாம்” என வெறுமையான ஆனால் உறுதியான குரலில் கூறினார் காயத்ரி.

காயத்ரி எவ்வளவு அழகியோ, அவ்வளவு தைரியமானவர், கம்பீரமானவர். அதனால்தான் அந்த காலத்திலேயே மேற்படிப்பு படித்து தனியாக வெளியூரில் பணிபுரிந்தார்.

மற்றவர்கள் சென்றுவிட ” இனி என்ன?” என எண்ணியவாறே தனித்து விடப்பட்ட இருவரும் மௌனம் காத்தனர். ரவிசந்திரனிடத்திலோ புதிதாய் முளைத்த தயக்கத்தையும் மீறிய ஆராய்ச்சிக் காயத்ரியின் மேல்.

அழவும் இல்லை, ஆர்ப்பரிக்கவும் இல்லை. சூழ்நிலையைக் கிரகித்துக் கொள்ளும் ஒரு மௌனம் மட்டுமே. தலையைக் கையால் தாங்கியவாறு அமர்ந்திருந்தார்.

அவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே லேசாக விழிப்புத் தட்டியிருந்தது காயத்ரிக்கு. அவர்களது உரையாடலை முழுவதுமாகக் கேட்டவர் என்ன மாதிரி உணர்கிறார் என்றேத் தெரியவில்லை.

ஊரேத் தாங்கும் ஒரு மனிதர். ஊருக்காகத் தன் மரியாதையை விட்டுக் கொடுக்கும் ஒரு மனிதர். சந்திரனைப் பற்றி உயர்வாக நினைக்கத்தான் தோன்றியது.

இருபக்கமும் தவறு என்னும் போது தன்னைப் பிணையமாகக் கொண்டு வந்திருப்பதை நினைத்துப் கோபம் பொங்கினாலும் அதையே ரவிசந்திரன் கூறும் போது சற்று நிம்மதியாகவும் இருந்தது.

தான் இப்போது கோபப்படவேண்டுமா? இல்லை சமாதானம் பேச வேண்டுமா? இருமனதாய் இருந்தவரை கலைத்தது “மன்னிச்சுக்க மா” என்னும் கம்பீரமான குரல்.

மன்னிப்பை கூட இவ்வளவு கம்பீரமாக கேட்க முடியுமா என்ன? தலையை நிமிர்த்தி பார்த்தார் காயத்ரி.

வெள்ளை வேட்டி சட்டை, நெற்றிக்கும் கீழ் வழியும் கருகருவென்ற கேசம், கூர் நாசி, அதற்கும் கீழ் கத்தை மீசை இருபுறமும் வளைந்து மேல்நோக்கியிருந்தது, கழுத்தில் கருடனை சின்னமாக கொண்ட தங்க சங்கிலி. கையில் இறுகியத் தசைக்களை மேலும் இறுக்கி காட்ட காப்பு எனக் கம்பீரத்தின் மொத்த ரூபமாய் இருப்பவர் மன்னிப்பு வேண்டினார் என்றதால் வந்த ஆச்சர்யம் காயத்ரியின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“இப்படி நடக்கும்னு எதிர்பாக்கல. அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். உங்கள உங்க வீட்ல பத்திரமா விட வேண்டியது என்னோடப் பொறுப்பு என் மேல நம்பிக்கையிருந்தா வாங்க போகலாம்.” என காயத்ரியின் கண்களை பார்த்து உரைத்தார். தவறு செய்யாதவர்களிடத்தில் வரும் நிமிர்வு அவரிடம்.

இப்பொழுதுத் தன்னுடைய முறை “சாரி உங்களுக்கும் எவ்வளவு வருத்தமிருக்கும்னு தெரியுது . போறவங்கப் போய்ட்டாங்க ஆனால் இங்க நம்மத்தான்” என்ற காயத்ரி இதழ்களை அழுத்தமாக மூடிக்கொண்டார்.

அழுகிறாளா எனப் பதறியவர். “ப்ளீஸ் இனி நடக்க வேண்டியதப் பார்ப்போம். உங்க அப்பா அம்மாவுக்குத் தகவல் சொல்லனும் அவங்க உங்கள காணோம்னு வருத்தப்படுவாங்க” எனக் காயத்ரியின் முகத்தைப் பார்க்க.

அப்போதுதான் அவருக்கும் ஞாபகம் வந்ததுப்போலப் பதற்றத்துடன் “நான் என் வீட்டுக்குப் போகனும் ப்ளீஸ். ”

” போகலாம் ஆனா அதுக்கும் முன்னாடி உங்க வீட்ல டெலிபோன் இருக்கா”

அந்தக் காலத்தில் ஊரில் ஒன்றிரண்டு வீட்டில் மட்டுமே டெலிபோன் வசதி இருக்கும்.

“ம்.. இருக்கு” என்று எண்களைக் கூற சந்திரன் தொடர்புக் கொண்டார். ஆனால் அந்தப்புறம் எடுக்கத்தான் ஆளில்லைப் போலும்.

“யாரும் எடுக்கலயேம்மா”

மனம் சோர்ந்துப் போனதுப் பாவைக்கு. அதோடு என்னவாயிற்றோ என்ற கலக்கம் வேறு.

அவரது முகத்தை பார்த்தவர் ” சரி நானே கூட்டிட்டுப் போறேன். உங்களால ஜீப்ல உட்கார்ந்து வர முடியுமா” என உடல் நலனை முன்வைத்துக் கேட்க

முடியுமென தலையசைத்தவர் எழுந்து கொள்ள மயக்க மருந்தின் வீரியம் லேசாகத் தள்ளாட வைத்தது. ரவிசந்திரன் வேகமாக அருகில் வந்து அவரை அணைத்தவாறுத் தாங்கிப் பிடித்தார்.

சோர்வுடன் சந்திரனைப் பார்த்தார் காயத்ரி

“என்னம்மா”

“என்னால முடியல என்னவோப் பண்ணுது”

காயத்ரியை மெல்ல அந்த நீள் இருக்கையிலேயேப் படுக்க வைத்தவர். உள்ளேச் சென்று இஞ்சி தட்டிப் போட்டு தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தார். மெல்லக்குடிக்க வைத்து ” கொஞ்சம் நேரம் படும்மா.” எனப் படுக்க வைத்து அவருக்குப் போர்த்தி விட்டார் சந்திரன்.

மயக்க மருந்தின் வீரியம் கண்களைச் சுழற்றியப் போதும் “அம்மாகிட்டப் போகனும்”

“போகலாம்மாக் கொஞ்ச நேரம் தூங்கு இருட்டிடுச்சு காலைல நேரமாப் போகலாம்” என வாஞ்சையாகக் கூற சந்திரனை ப் பார்த்தபடியே கண்மூடினார் காயத்ரி.

அதிகாலை மூன்று மணிக்கே விழிப்புத் தட்டியது காயத்ரிக்கு . கைக்கால்களை அசைத்து மெதுவாக எழுந்தவர் அப்போதுதான் தான் எங்கிருக்கிறோம் என நினைவில் வரச் சந்திரனைத் தேடினார்.

சந்திரன் வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். ஆனால் தூங்கியிருக்கவில்லை. காயத்ரியின் வளையல் சத்தத்தில் எழுந்தவர் உள்ளே வர அவரைக் கண்டுச் சங்கடமாய் உணர்ந்த காயத்ரி “சாரி நல்லா தூங்கிட்டேன் போல” என உரைக்க

“இப்ப எப்படி இருக்கு உங்களுக்கு”

“நாமப் போகலாம்” எனப் பதிலை தனதுச் சம்மதத்தில் கூறினார்.

இருவரும் சென்னை வந்து சேர மதியம் ஆனது. ஆனால் பூட்டியிருந்தக் கதவுத்தான் அவர்களை வரவேற்றது. பக்கத்தில் விசாரிக்க இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தவர்கள் புவனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கூறினர்.

சந்திரன் அயர்ந்தார். பிரச்சினை மேலும் மேலும் வலுப்பதை அறிந்துக் கவலை கொண்டார். காயத்ரி இப்போதும் அழவில்லை நான் உடைய மாட்டேன் என்னும் பாவனையில் மனதில் சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கொண்டிருந்தார்.

சந்திரனுக்கு காயத்ரியை நினைத்து இன்னும் வியப்பும் மரியாதையும் கூடியது. இவ்வளவு அழுத்தமா என்று. தாமதிக்காமல் இருவரும் மருத்துவமனைச் சென்றனர்.

முதல் நாள் தோழியைப் பார்த்து வருகிறேன் எனக் கூறிச்சென்ற மகள் இன்னும் வராததால் மனம் பதைத்தது போயிருந்தனர் சாரதி புவனா தம்பதியினர்.

பத்தாதற்கு அருகில் உள்ளவர்களின் அக்கறை என்னும் பெயரில் மறைந்திருந்தக் குத்தல் பேச்சுகள் வேறு மனதைக் குத்திக் கிழித்து ரணத்தை உண்டாக்கியது.

அடுத்தடுத்த அதிர்ச்சிகளைத் தாங்காமல் புவனாவின் இருதயம் தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய மாரடைப்பு என பெயர் வைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவர்கள் சென்ற போது புவனா இன்னும் கண்விழிக்கவில்லை. மாரடைப்பு வருவது முதல் முறை என்பதால் சிகிச்சை முடிந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார். சாரதி மிகவும் தொய்ந்த நிலையில் புவனாவின் அருகில் அமர்ந்திருந்தார்.

பரபரப்புடன் அறையினுள் நுழைந்த காயத்ரி “ப்பா” என அழைக்க, அவர் பின்னால் சந்திரனும் வந்தார்.

அவரை ஒரு ஆணுடன் பார்த்ததும் மற்றவர்கள் கூறியது மீண்டும்மீண்டும் காதில் எதிரொளிக்க விசாரிக்காமல் தீர்ப்பை எழுதிப் பேனா முனையை உடைப்பதற்குப் பதிலாக மகளின் மனதை உடைத்தார் சாரதி. மகளைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார். காயத்ரி அதிர்ந்தார். நான் என்ன தவறு செய்தேன் என அறியா பிள்ளையாய் அவர் மனம் தவித்தது.

“ப்பா” மீண்டும் அழைக்க,

சாரதி கையெடுத்து கும்பிட்டவர் ” போயிடும்மா எங்களுக்கு பிள்ளைங்களே இல்லன்னு நினைச்சிக்கறோம். இதுக்கும் மேல ஒரு அதிர்ச்சிய இவ மனசுத் தாங்காது. எனக்குன்னு இவதான். எனக்கு என் புவனா வேணும். அவங்கவங்க அவங்க விருப்பப்படி இருந்துக்கோங்க.” விரக்தியா ஆற்றாமையா என பிரித்தறிய முடியா பாவனை அவரிடத்தில் .

தந்தையா! தன் தந்தையா, என்னை நம்பவில்லையா! என அடிவாங்கிய பிள்ளைப் போல் பரிதவித்து நின்றிருந்தார் காயத்ரி.

ரவிசந்திரனுக்கும் இது அதிர்ச்சியே என்ன மனிதர் இவர் என்ன ஏது என்று விசாரிக்காமல் பெற்ற பெண்ணை நம்பாமல் இப்படி பேசுகிறாரே! என்று கோபமும் இதற்கு தானும் ஒரு காரணம் எனப் பரிதவிப்பும் கலந்தக் கலவையாக காயத்ரியைப் பார்த்தார்.

அவர் முகத்தில் என்னக் கண்டாரோ ஆறுதலாக அவர் கையைப்பிடித்து “நான் அவர்கிட்டப் பேசறேன்மா என் மேலதான் தப்புன்னு சொன்னாப் புரிஞ்சுக்குவாறு” என ஆறுதல் அளிக்க

ஒரு கை நீட்டி அவரைத் தடுத்தவர் “தேவையில்ல இன்னொருத்தர் சொல்லித்தான் என்னை நம்பனும்னா அது எனக்கு தேவையில்ல.”

காயத்ரியின் விரக்தி அவரது அப்பாவின் மேல் கோபமாகத் திரும்பியது. “தப்பு பண்ணிட்டீங்க சார், உங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்ல உங்களுக்கு. கொஞ்சமும் யோசிக்காம வார்த்தைய விட்டுட்டீங்க. நான் யார் தெரியுமா? உங்க பையன் கூட்டிட்டுப் போன அமிர்தாவோட அண்ணன் நான்”

அதுவரை அமைதியாய் இருந்த சாரதி சரேலென நிமிர்ந்து பார்த்தார். ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல்

“என்னை சேர்ந்தவங்கத்தான் எனக்கே தெரியாம உங்கப் பொண்ணைத் கடத்திட்டாங்க. என் தங்கச்சிக்காக, என்னோடக் கவலையை நீக்குவதற்காக. எனக்கு விசயம் தெரிஞ்சு அவங்கள சத்தம் போட்டு இவள இங்க கூட்டிட்டு வரேன். இது எதுவும் தெரியாம இப்படிப் பேசிட்டீங்களே”

இதுவரை காயத்ரியின் மேல் இருந்த மரியாதைத்தன்மை இப்பொழுது உரிமையாய் ஒருமைக்கு தாவியிருந்தது. சாரதிக்கு சந்திரனின் ஆளுமையானப் பேச்சு அவரது உயரத்தைக் காட்டியது.

இன்னும் தன் தந்தையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த காயத்ரியை தன்புறம் திருப்பி “இங்க பாரும்மா உன் பெயர் கூட எனக்குத் தெரியாது. ஆனா என்னை வச்சி உன்னை இப்படிச் சந்தேகப்பட்டுப் பேசறது எனக்குப் பிடிக்கல. நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்.” எனக்கூறி நிறுத்த

காயத்ரி என்ன? என்பது போலப் பார்த்தார்.

தொண்டையைச் செறுமியவர் “என்னை கல்யாணம் கட்டிக்கறீயா?”

காயத்ரிக்கு அதிர்ச்சி ஆச்சர்யம் அதை மீறிய இதம் நெஞ்சுக்குள் பரவியது. மறுக்கக் காரணங்களைத் தேடிய மனது ஒன்றுமில்லாமல் கைவிரிக்கச் சாரதி தவறு செய்துவிட்டோமா? என யோசிக்கும் முன் அடுத்த அரைமணியில் ரவிசந்திரனின் சரிப்பாதியானார் காயத்ரி.

ஒரு மாதம் கடந்திருந்தது. சந்திரனுக்கு இப்போதெல்லாம் காயத்ரியின் வளையோசையே சங்கீதம். திருமணம் அவசரமாய் நிகழ்ந்திருந்தாலும் விருந்தை அமர்க்களப்படுத்தியிருந்தார். இல்லை ஊர் மக்கள் அசத்தியிருந்தனர்.

ஆசையாய் கட்டிக் கொண்ட கணவனில்லை. ஆனால் ஆவலாய் கட்டிக் கொண்டவர். எப்படி அவருக்குச் சம்மதித்தோம் என எண்ணாத நாளில்லை.

பண்ணை வீட்டில் மயக்கம் தெளிந்த போதே மயங்கி விட்டேனா! என மனம் முனுமுனுக்கும். அதற்கும் சரியாகப் பதில் இல்லை.

ஆனால் அவருடனான வாழ்க்கை வானவில்லாய் வண்ணம் சேர்த்தது. அந்த அளவு அவருள் நிறைந்தார். அவரையும் நிரப்பிக் கொண்டார்.

தவறை உணர்ந்து வந்தத் தந்தையையும் உடல்நலம் சரியில்லாதத் தாயையும் சற்று முனுமுனுத்தாலும் சந்திரனின் ஒரு பார்வையில் பழையதை ஒதுக்கி பாசத்தைப் புதுப்பித்துக் கொண்டார்.

பார்த்தசாரதிக்கு மருமகன் எவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர் எனப் பெருமையே. அதுப் பணத்தால் வந்த அந்தஸ்தால் இல்லை. அந்த ஊர் மக்களே அவர் மேல் கொண்ட அளவில்லாப் பாசத்தால் வந்தது.

இதற்கிடையில் காயத்ரியைத் கடத்திக் கொண்டு வந்தவர்கள் தாங்களாகவே வலிய வந்து உண்மையைக் கூறி மன்னிப்பு வேண்ட இன்னும் என்ன வேண்டுமாம் சாரதிக்கு மனம் நிறைவாய் உணர்ந்தார்.

இத்தனை சந்தோஷத்திலும் சீனிவாசனையும் அமிர்தாவையும் மறந்தே போயினர். அந்தளவிற்கு ரவிசந்திரனும், காயத்ரியும் அவர்களது அந்யோன்யமான வாழ்வும் மறக்கச் செய்தது.

அடுத்த இரண்டாவது மாதத்தில் காயத்ரி கருவுற்றார். அதைச் சந்திரன் கொண்டாடியதை விட ஊர் மக்களே தடப்புடலாய் கொண்டாடித் தீர்த்தனர். தங்கள் புது இளவரசனோ இளவரசியோ வரவேற்க ஆவலாக இருந்தனர்.

ஒன்பது மாதமும் சந்திரன் கண் இமைபோல் தன் கண்மணியைக் காத்தார். ஒரு நன்னாளில் தன் முதல் மகவான அபிஜித்தை ஈந்தார் காயத்ரி.

அபிஜித் இளவரசனாகவே வலம் வந்தான். தாயிடம் சேட்டை செய்யும் செல்லப் பிள்ளை. தந்தையின் சொல் பேச்சுத் தட்டாதத் தனையன் எனச் சிறுவயதிலேயேப் பொறுப்பானவனாக இருந்தான்.

அபிஜித்திற்கு ஆறு வயதாக இருக்கும்போது காயத்ரி மீண்டும் கருவுற்றார். தன் இளைய ரத்தப் பந்தத்தை ஆவலாக எதிர்பார்த்தான் அபிஜித்.

இந்த ஆறு வருடத்தில் ரவிசந்திரனின் புகழ் இன்னும் உயர்ந்தது. அரசியலில் அவர் ஈடுப்படவில்லை. ஆனால் தேனி மாவட்டத்தின் அரசியலை நிர்ணயம் செய்பவராக மாறியிருந்தார்.

இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல எதிரிகளை சம்பாதித்திருந்தார். அப்படித்தான் ஒருமுறை காயத்ரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தப் போது விவசாய மாநாட்டிற்குச் சென்றிருந்தார்.

ஆனால் வரும் வழியில் பெரும் விபத்து ஏற்பட்டுக் கைக்கால்களில் தலையில் பயங்கர அடிபட்டது. அவருக்கு நினைவு திரும்பவே இரண்டு நாட்கள் ஆனது.

இதில் பெரிதும் நிலைகுலைந்தவர் காயத்ரியே. மகனைப் பார்ப்பதா, கணவனைப் பார்ப்பதா இல்லை இன்றோ நாளையோ வெளிவர காத்திருக்கும் புதுவரவை எதிர் கொள்வதா என தத்தளித்தார்.

ஆனால் இவர் தனியாய் நிற்க அவசியமில்லாமல் ஊரே துணையிருந்தது. அப்போதுத்தான் விபத்தை விசாரித்தக் காவல் அதிகாரி இது திட்டமிட்டக் கொலை முயற்சி எனவும் இனி மிகவும் கவனமாய் இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

சந்திரன் படுத்த படுக்கையாய் கிடக்க மகனை எண்ணி மிகவும் பயந்தார் காயத்ரி. அதனால் அபிஜித்தை ரகசியமாக வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்க வைக்க எண்ணினார்.

அங்குதான் அவர் தவறியது. இதுநாள் வரை தன் காலையேப் பூனைகுட்டிப் போல் சுற்றிவரும் மகனை, அவனது விருப்பத்தை மறந்திருந்தார். மகனது பாதுகாப்பேப் பிரதானமாக இருக்க அவர் எடுத்த இந்த முடிவு அபிஜித்தை அவரை விட்டு விலக வைத்தது.

தன் தங்கையோ தம்பியோ பிறக்கும் குழந்தையை முதலில் தானேக் கையில் ஏந்தவேண்டும். தானே குளிப்பாட்ட வேண்டும். கதைகள் கூறி உறங்க வைக்க வேண்டும் என இன்னும் பலபல ஆசைகள் கொண்டிருந்தது அந்த அன்பு உள்ளம்.

ஆனால் இதை எதையும் அனுபவிக்காமல் தன் அன்னையையும் பிரிய வேண்டும் என்ற நிலையில் அழ அழ விடுதிக்கு அனுப்பப்பட்டான். இதுவே முதல் வெறுப்பாக அவன் மனதில் பதிந்தது.

விடுதி வாழ்வில் தன்னைபழ பொருத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டான் அபிஜித். தாயின் ஜித்து கண்ணா என்னும் அழைப்புக்காக ஏங்கினான். யாருடனும் பழகாமல் தனிமை தவமிருந்தான்.

நாளடைவில் இந்த வாழ்வுக்குப் பழகி கொண்டாலும் தாயின் மீது உள்ள கோபம் வெறுப்பாக மாறியது. சிறிதுச் சிறிதாக விலக ஆரம்பித்தான். கைக்குழந்தையை விட்டுவிட்டு காயத்ரியால் வர இயலா நிலை.

மகனை விடுதியில் விட்டதற்காக சந்திரன் மிகவும் கடிந்து கொள்ள அவனது பாதுகாப்பைக் காரணம் காட்டி அதைத் தவிர்த்தார்.

நாளடைவில் காயத்ரி அவனைக்காண வந்தபோது கூட பார்க்காமல் தவிர்த்தான். விடுமுறையை கூட சாரதி புவனாவின் வீட்டில் கழித்தான். காரணம் அங்கு வேலை செய்த பொன்னம்மா. அப்போது பள்ளியில் அறிமுகமான சஞ்சய்யின் நட்பை விரும்பி ஏற்றான்.

காயத்ரிக்கு மகனின் விலகல் நெடுநாள் கழித்தே உணர முடிந்தது. அவர் சரிசெய்ய முனைந்த போது அவன் அவரை விட்டு வெகுதூரம் சென்றிருந்தான். பெரியகுளம் வீட்டிற்கு இதுவரை ஒன்றிரண்டு முறை மட்டுமே சென்றுள்ளான்.

அவ்வாறு செல்லும் போதும் ஒருநாள் இரண்டு நாளில் திரும்பி விடுவான். அதிகம் யாருடனும் பேச மாட்டான். ஆனால் இவன் சென்றுவிட்டால் கிராமமே இவனைக் கொண்டாடும்.

அதிலும் அங்குள்ளப் பல இளைஞர்களின் ரோல் மாடல் இவன். அவர்களுக்கெனப் பல உதவிகள் செய்துள்ளான். ஆக இவன் விலகல் அவன் குடும்பத்தாரிடம் மட்டுமே குறிப்பாக அன்னையிடம்.

அவன் தங்கை ஜனனியைக் காணும் போதெல்லாம் அவன் இழந்த இறந்த காலம் பூதகாரமாய் தோன்றும். அதற்காகத் தங்கையின் மேல் வெறுப்பில்லை. அவளை மிகவும் பிடித்ததால் வந்த விலகல் இது.

இது சிறிய விசயமாக தோன்றலாம் . ஆனால் ஆறு வயது அபியின் நிலையில் யோசித்துப் பார்த்தால் அவன் வலி புரியும். அப்பொழுதும் தன் வலியை நீக்க நேர்மையான வழியைத்தான் அவன் தேர்ந்தெடுத்தது.

இதோ இன்று வரை அந்தத் தாயுள்ளம் தன் மகனின் அம்மா என்னும் வார்த்தைக்காகத் தவமிருக்கிறது. அவரது வேண்டுதல் நிறைவேறுமா? அது காலத்தின் கையில்.