UKK18

UKK18

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-18

காலையில் எழுந்தவுடன் அன்றைய சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி மனைவியிடம் கொடுத்தவன், காலை உணவிற்குப் பின் தனது அன்றாட பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டான், சந்துரு.

ஜனதாவும் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, மதிய உணவுக்கான பணிகளையும் நிறைவு செய்தபின் சற்று நேரம் இளைப்பாறி இருந்தாள்.  ஜனதாவின் தாயார் வழமைபோல் அலைபேசியில் அழைத்து சற்று நேரம் மகளுடன் பேசியிருந்தார். இடையில் ஜனதாவின் அண்ணி, உமாவும் பேசிவிட்டு வைத்திருந்தாள்.

இருவரும் பேசிவிட்டு வைத்தபின் பொழுது போகாமல் இருந்தவள், கணவனுக்கு அழைத்து விருத்தாசலத்தில் இருக்கும் தங்களின் ஜெராக்ஸ் அல்லது கண்ணாடியில் எழுத்து வேலைப்பாடு செய்யும் கடைக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினாள்.

மதிய உணவிற்கு வீட்டிற்கு வரும்போது ஜனதாவையும் அழைத்துச் செல்வதாகக் கூறி வைத்திருந்தான், சந்துரு.  கணவனின் வருகைக்காக காத்திருந்தவள், கணவன் வரும் வரை தனது அலைபேசியை எடுத்து அவளின் மெயிலுக்கு வந்திருந்த செய்திகளைப் பார்த்தாள்.  பிறகு, முகநூல், வாட்சப், டெலெகிராம் என பொழுது போக்க, அதற்குள் சந்துரு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்திருந்தான்.

மனைவியின் கடந்த இரு நாள் மெனுவை பார்த்தவன்,

“ஏன் ஜனதா இத்தனை நாளும் இப்டியெல்லாம் வச்சதில்ல. நேத்தும் இன்னைக்கும் என்ன விசேஷம்? சமையல்ல நளபாகம் விளையாடுது”

“ரெண்டு நாளா நீங்க காயெல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க அதான், அத வச்சுப் பண்ணேன்”

“அப்ப இத்தன நாளு எங்க அம்மா சமைக்க எதுவும் வாங்கிக் கொடுக்கலயா?”, சாதாரணமாகவே கேட்டான்.

“நீங்க எதுவும் சாப்பிட மாட்டிங்கனு சொல்லி அத்த தினம் எதாவது ஒரு காயி தான் வாங்கி தருவாங்க. அத வைக்கச் சொல்லுவாங்க… அவங்க வாங்கிக் கொடுத்தத வப்பேன்…  ஆனா ரெண்டு நாளா நிறய காயி வாங்கிட்டு வந்து தந்துட்டீங்க… அதான் பிரெஷ்ஷா இருக்கும்போது செய்திரலாம்னு வச்சுட்டேன்”

“அது (அம்மா) வச்சுக் கொடுத்தா சாப்பிடத்தான் செய்வேன்… அதுக்கெல்லாம் எங்க… எங்க அம்மாவுக்கு நேரம்.. நேரமிருந்தாலும் இப்டியெல்லாம் வைக்காது”, என்று கூறி சிரித்தபடியே சாப்பிட்டான்.

“அதத்தான் நானும் நேத்தே யோசிச்சேன். நீங்க சாப்பிட மாட்டிங்கனு அத்த சொன்ன காயெல்லாம் நான் சொல்லாமலே நீங்க வாங்கிட்டு வந்திருந்தீங்க… நானும் அதுலயே கூட்டு, பொரியல் வச்சேன்… ஆனா நீங்க சாப்பிட்டவுடனே எனக்கு ஒரே ஆச்சர்யம்”

இருவரும் மதிய உணவை முடித்துவிட்டு கிளம்பியிருந்தனர்.  கண்ணாடி எழுத்து மற்றும் டிசைன் வேலைப்பாடு செய்யும் அவர்களின் கடையில் மனைவியை விட்டுச் சென்றான். சந்துரு வெளியில் போகும்போது… வீட்டிற்குச் செல்லும் நேரம் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அங்கு கோரல்டிராவில் டிசைனிங் பணிகளைச் செய்ய இருவர் நியமிக்கப்பட்டு தத்தமது பணிகளில் அவர்கள் கவனமாக இருந்தனர்.  ஜனதா முதுஅறிவியல் கணினி அறிவியல் பயின்றிருந்தாலும் அப்ளிகேசன் பயன்பாடுகளை விட கணினி லாங்குவேஜ், வெப் டிசைனிங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருந்தாள்.

ஆகையால் கோரல்டிரா பற்றிய ஞானம் எதுவும் இல்லாததாலும், பப்ளிஷிங் வேலைப்பாடுகளுக்கான கணினி பயன்பாடுகள் மற்றும் அவர்களின் நேர்த்தியான வடிவமைப்புகளை ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவும் பார்த்திருந்தாள்.

இரு பெண்கள் அங்கு பணிக்கு இருக்க, அவர்களிடம் கோரல்டிரா கற்றுக் கொள்ள எடுக்கும் கால அவகாசம் பற்றிக் கேட்டறிந்தாள்.  அதில் ஒரு பெண் தனது பணிகளுக்கு இடையில் ஜனதாவிற்கு கற்றுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டாள்.  அதில் மகிழ்ந்தவள், அடுத்த நாள் முதல் காலையிலேயே இங்கு வந்துவிடுவதாகக் கூறினாள்.

பிறகு கணவனுக்கு அழைத்துப் பேசியவள் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூற, குரலில் சுரத்தில்லாமல் ‘சரி கிளம்பி இரு, இதோ இருவது நிமிசத்துல வரேன்’ என்றபடி அழைப்பை துண்டித்திருந்தவனை எண்ணியபடியே அவனுக்காக காத்திருந்தாள்.

 

கூறியபடி இருபது நிமிடத்தில் வந்தவனுடன் கிளம்பி வீடு வந்திருந்தாள்.

“ஏங்க என்ன செய்யுது? உடம்புக்கு எதுவும் முடியலயா?”, ஜனதா

“இல்ல…”, வந்தவன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான்.

“அப்றம் ஏங்க… ஒரு மாதிரியா இருக்கீங்க?”

“உங்க சின்ன அண்ணன் போன் பண்ணாப்ல, கொல்கத்தாவுக்கு மீட்டிங் போனபோது அர்ச்சனாவையும் கூடவே கூட்டிட்டுப் போயிருந்தாராம்… அங்க போன இடத்துல நேத்து நைட்ல இருந்து அதுக்கு காய்ச்சல்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காராம்”

“என்ன சொல்றீங்க? ஏன் திடீர்னு காய்ச்சல்னு தெரியலயே… பெட்ல அட்மிட் பண்ற அளவுக்கு முடியலயாமா?”

“ஆமா… ரொம்ப ஆளே டல்லா இருக்காம். பக்கத்துலனா ஒத்தாசைக்கு உடனே ஓடிப்போயிரலாம், இவ்வளவு தூரத்துல தனியா ஒரு ஆளா என்ன பண்ணுவாப்லனுதான் ஒரே யோசனை”, வருத்தமாகச் சொன்னான்.

“அம்மாகிட்ட பேசவா?”

“அவங்ககிட்ட பேசி என்ன செய்ய?”

“….”

“எங்க அம்மாகிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன், இப்ப சாயந்திர பஸ்க்கு வருதாம், இங்க”, என்றபடி எழுந்து வெளியே கிளம்பியவனிடம்

“அத்த வரட்டும், நீங்க… கொஞ்சம் இருங்க… நான் டீ போட போறேன்… குடிச்சுட்டு வெளியே போங்க”, என்றபடி விரையில் தேநீர் தயாரித்து வந்து கணவனிடம் கொடுத்தாள்.

தேநீர் அருந்திய கணவன் வெளியில் சென்றதும், மதியத்திற்கு பிறகான பாதியில் விட்டுச் சென்றிருந்த பணிகளைப் பார்த்திருந்தாள், ஜனதா.

மாலை ஆறரை மணிக்கு வந்திறங்கிய மாமியாருக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்தாள், ஜனதா.  அதைக் குடிக்கும் முன் மகளை நினைத்து வராத அழுகையில் சிந்தாத கண்ணீரை தனது முந்தனையில் துடைத்தவாறு புலம்பினார்.

“எம்புள்ள அனாத மாதிரி அங்க கஷ்டப்படுதே, யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே?”

“…”

“யாருக்கு எந்த கெடுதலும் எம்புள்ள நினக்காது நான் என்ன செய்வேன்?”, என பலவாறான முறைகளில் புலம்பி மருமகள் தந்த தேநீரை அருந்தியபின்… எழுந்து, வீட்டை, அடுக்களையை, வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதியை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் ஹாலில் வந்து அமர்ந்திருந்தார், சுசீலா.

அடுத்து செழியனுக்கு அழைத்துப் பேசிவிட்டு மீண்டும் தனது புலம்பலை ஆரம்பித்து இருந்தார்.  இரவு உணவிற்கு என சப்பாத்தி மாவைப் பிசைந்தவளைப் பார்த்த சுசீலா,

“இதெல்லாம் சேகரு சாப்ட மாட்டனே… சோறு இருந்தா போதும் அவனுக்கு… இந்த மாதிரி பலகாரமெல்லாம் சாப்டமாட்டான்”

“…”

“கஞ்சியும் ஊறுகாவும் இருந்தா போதும் அவனுக்கு”

“உங்களுக்கும், மாமாவுக்கும் சாதம் வச்சிரேன் அத்த”

“நான் எதுனாலும் சாப்பிடுவேன்”, சுசீலா

அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் ஜனதா அவளின் பணிகளை விரையில் முடித்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அடுக்களையில் இருந்த மதியம் மீதமானவற்றைப் பார்த்த சுசீலாவிற்கு மனம் தாளவில்லை.  ‘எதுக்கு இப்டி காசல்லாம் கரியாக்குதுனு தெரியலயே… இத அவன் சாப்பிடவும் மாட்டான்… எதுக்கு ஹோட்டல் மாதிரி வீட்ல இத்தனை கறி காயி?’, சுசீலா.

சுசீலாவின் புலம்பலைக் கேட்க விரைவில் வந்திருந்தார் செழியன்.  மாமனாரின் சத்தம் கேட்டு அறையிலிருந்து வந்தவள், மாமனாரை வரவேற்று

“சாப்பிடறீங்களா மாமா?”

“ஆமா மருமகளே, நாக்கு செத்து போயிருக்கு… சீக்கிரமா வச்சத போட்டுக் கொண்டா… பசிக்குது… மதியம் வேற சாப்பிடல…”, என்றபடி இரவு உண்ண ஆயத்தமானார்.

தட்டில் சாப்பாடுடன் வந்தவளிடம், “தாம்மா…” என தட்டை வாங்கி உண்ண ஆரம்பித்தார்.

அதைப் பார்த்திருந்த சுசீலா “பட்டினியா கிடந்த மாதிரி கூட இல்ல, காங்காதத கண்ட மாதிரி ஒரு சோத்தக் கண்டதும் சாப்பிடுறீங்களே… இத்தனை நாளு உங்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்தலயா? புள்ள அங்க முடியாம கிடக்கு வந்தவுடனே சாப்பிட உக்காந்துட்டீங்க”

“அடி போடி.. நீ கஞ்சி தான் ஊத்துன… எம் மருமக… விருந்தே வைக்குது… ம்… அர்ச்சனாவுக்கு காச்ச தான… காச்ச மண்டையடி வராம உடம்புக்கு இருக்குமா?”, என்றபடி உண்டு எழுந்தார்.

கணவன், மனைவி இருவரும் அர்ச்சனாவைப் பற்றி பேசியபடி இருக்க மீண்டும் தனதறைக்குச் சென்றுவிட்டாள் ஜனதா.

—————————

 

அர்த்தனுடன் வந்திருந்தவர்களுள் ஒருவன் கதவைத் திறந்தான். திறந்தவன் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, நின்றிருந்தவனை யோசனையுடன் பார்த்த வீட்டினுள் இருந்தவர்கள் சுதாரிக்கும் முன்… என்ன நடக்கிறது என உணரும் முன் காட்சிகள் மாறின.  புதிய முகங்கள் பல அறிமுகமாகியிருக்க, வந்திருந்தவர்களில் ஓரிருவர் தவிர அனைவரும் காக்கி நிறத்தில் உடையணிந்திருந்தனர்.

நிஜமான… ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் அங்கிருந்தவர்களின் மனதில் சலசலப்பை உண்டாக்கி, திகைக்கச் செய்திருக்க அனைத்தும் பத்து நிமிடங்களில் அரங்கேறி அந்த நாடகம் நிறைவுப் பகுதிக்கு வந்திருந்தது.

அப்போதுதான் அங்கு அவசர அவசரமாக வந்து இறங்கினான், அமர்.  வந்தவுடன் அங்கிருந்த சூழலை உணர்ந்து வீட்டினுள் நுழைந்தவன் அங்கு நடந்தவற்றை அமைதியாகப் பார்த்திருந்தான்.

அங்கு இருந்தவர்கள் பார்வையாளர்களாக மாறி, வெளியில் இருந்து வந்தவர்கள் நடித்த உண்மையான நாடகத்தின் காட்சிகளை அரங்கேற்றியிருக்க… காவல்துறையின் கவனமான சிரத்தை மிகுந்த பணிகளுக்கு பின், அர்ச்சனா உரியவனிடம் ஒப்படைக்கபட்டிருந்தாள்.

வீட்டைச் சுற்றி நின்றிருந்த போலீஸாரைக் கண்டதும், அர்த்தன் தனது கோபத்தை மௌனிகாவின் கண்ணத்தில் காண்பித்திருந்தான்.

சுருண்டு கீழே விழுந்தவள் நீண்ட நேரம் எழவே இல்லை. மௌனிகாவுடன் வந்தவன் தனது நிலை உணர்ந்து அமைதியாக நின்றிருந்தான்.  நீண்ட நேரம் எழாமல் கிடந்த மௌனிகாவை நோக்கி அடியெடுத்து வைத்த அர்ச்சனாவை விடாமல் பிடித்து நிறுத்தியிருந்தான் அமர்.  அதற்குமேல் தன் உடல் நடுங்கினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமரின் அருகிலேயே நின்றுவிட்டாள் அர்ச்சனா.

‘ஹனி டேக் கேர்….’, என்ற சத்தத்தில் அர்ச்சனா, அமர் இருவரும் குரல் வந்த திசையில் ஒருசேர திரும்பிப் பார்க்க, இருவரையும் பார்த்து அர்த்தன் அர்த்தமாக புன்னகைத்திருந்தான். ‘யாரு பெத்த புள்ளடா நீ… எம் பொண்டாட்டிய ஹனிங்கற’ இது அமர்.

முரண்டு பிடிக்காமல் மிகவும் நாகரிகத்துடன் காவல்துறையின் பணிகளை மரியாதையுடன் ஏற்று அவர்களுடன் கிளம்பியிருந்தான் அர்த்தன்.  மற்றவர்களையும் அதே வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பியிருந்தது, கொல்கத்தா காவல்துறை.

கொல்கத்தாவின் உயர் போலீஸ் அதிகாரியை அவரின் அலுவலகத்தில் சென்று நேரில் சந்தித்து சில பார்மாலிட்டிகளை முடித்துக் கொண்டு, அவருக்கு நன்றி கூறி விடைபெற்றார்கள் அமரும் அர்ச்சனாவும். அதன்பின் அர்ச்சனாவுடன் விடுதிக்கு வர மாலை முடிந்து இரவு தொடங்கி இருந்தது.

அங்கு இருந்தவரை மனைவியை தனதருகில் வைத்துக் கொண்டிருந்தவன், அறைக்குள் வந்து தாழிட்டவுடன் கைகளில் அள்ளி அணைத்தபடி

“அச்சு வெல்லம்”

“ம்…” என்றவளின் கண்களின் ஈரம் அமரின் நெஞ்சைத் தொட”, பதறியவன் “அதான் நான் வந்து உன்ன ஷேஃபா கூட்டிட்டு வந்துட்டேன்ல, அப்புறம் எதுக்குடி அழற”, என மென்குரலில் கேட்டபடி அவளை கைவளைவில் இறுக்கி அணைத்திருந்தான்.

அமரின் நெஞ்சுக்குள் நுழையும் வேகத்துடன் முகத்தை ஆழமாக புதைத்தபடி அர்ச்சனா அழுத நிலையில் இருக்க

“அழாதடி அச்சு, எனக்கு அந்த லூசு என்ன பிளான் பண்ணிருக்குனு தெரியல அதான், சென்னைல இருக்குற ஒரு போலீஸ் ஆபிசர் மூலமா இங்க ஹெல்ப் கேட்டேன்.  உன் மொபைலுக்கு வர மெசேஸ், கால்ஸ், என் மொபைல் கால்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ணாங்க,

அதன் மூலமா எவ்வளவு சீக்கிரம் உன்ன எங்க கஸ்டடிக்கு கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வந்தாச்சு, உங்கிட்ட இத நான் முன்னாடியே சொல்லிருந்தா அவகிட்ட உளறியிருப்ப, அது இன்னும் இடியாப்பச் சிக்கலாகிரும்னு தான் உங்கிட்ட நேத்து சொல்லல… ஆனாலும் நீ ரொம்ப பயந்திட்டியா”, என அர்ச்சனாவின் தலையை ஆதரவாகத் தடவியபடி கேட்டான்.

மனைவியின் உடலில் இருந்த நடுக்கம் சற்று குறைந்திருந்தாலும், முற்றிலும் சரியாகவில்லை என்பதை உணர்ந்திருந்தான். அதனால் தன்னோடு இறுக்கி அணைத்தபடியே மனைவி கேட்டதற்கெல்லாம் பதிலளித்திருந்தான்.

“அவ ஏன் இப்டி இருக்கா? அவள ஜெயில்ல போட்ருவாங்களா?”, இரக்கம் மனதை தட்டியது.

“அவங்க அப்பாகிட்ட ஏற்கனவே வார்ன் பண்ண சொல்லியாச்சு. அவரு சொல்லியும் இந்த தான்தோன்றி பிசாசு கேக்கல.  அதுக்கு மேலயும் அடங்கலனா வரப்போற அசிங்கத்த எல்லாம் அவ ஏத்துக்கத்தான் வேணும்”, நியாயம் பேசினான்.

“இருந்தாலும் ஒரு பொண்ணு தான அவ”,என கூறும் போதே அர்ச்சனாவின் உடல் நடுங்கியது.

“இத நாம நினச்சு என்னாகப் போகுது, நீயும் ஒரு பொண்ணுன்னு அவ யோசிக்கலல்ல”

“எங்க ஊருல ரொம்ப வயசானவங்கல்லாம் பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க, இப்ப நம்மனால தான அவ மாட்டிக்கிட்டா”

“அடி என் அறிவுக்கடலே, நம்ம என்ன சும்மாவ அவள போலீஸ்கிட்ட புடிச்சு குடுத்தோம். உன்னை அவ மிரட்டறானு மட்டும் தான் நான் கம்ப்ளைன்ட் பண்ணிருந்தேன், நான் கான்ஃபரன்ஸ்ல இருக்கும் போது புது நம்பர்ல இருந்து  உனக்கு மெசேஜ் வந்தது.

அத அவங்களுக்கு இங்க உள்ள போலீஸ் டிபார்மண்ட கொடுத்த நம்பருக்கு ஃபார்வார்ட் பண்ணி இந்த நம்பர்ல இருந்து வர மெசேஜஸ், கால்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ண சொன்னேன். அவ உன்னை இப்டி ஒரு இக்கட்டுல மாட்டி விட்டு நம்மள வச்சு செய்யணும்னு நினப்பானு நான் யோசிக்கவே இல்ல…

அதுவே நமக்கு கெடுதல் நினச்சு கெட்டழிஞ்சு போச்சு, அது செயலுக்கு நாம எப்படி பொறுப்பாக முடியும்?”

“இனிமேலாது அவ திருந்துவாளா?”, அர்ச்சனா

“அதப் பத்தி இனி யோசிக்கவே செய்யாத, வேற பேசு, இத ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துரு, உங்க வீட்ல இத பற்றி எல்லார்கிட்டயும் சொல்லிர வேணாம்”

“அந்த…. அவனையும்… போலீஸ் பிடிச்சு என்ன செய்வாங்க?”

“அவன்…?. ஓஹ் அவனையா… ரொம்ப நாளா எதாவது கேஸ்ல சிக்குவானானு எதிர்பார்த்துட்டு இருந்திருக்காங்க, இங்க உள்ள போலீஸ். இவகூட சேர்ந்ததால அவனுக்கும் கெட்ட நேரமா முடிஞ்சிருச்சு”

“வெளியில வந்தும் நமக்கு தொந்தரவு தந்தா நாம என்ன பண்ணுறது?”, அர்ச்சனா

“நாம நம்மை காப்பாத்திக்க தான் கேஸ் கொடுத்தோமே தவிர, அவன பிடிச்சுக் குடுக்கனும்னு கங்கனம் கட்டிட்டு இங்க வந்து அவன காட்டிக் குடுக்கல… ஆண்டவன் விட்ட வழிதான். நாம நல்லதே நினப்போம்”

“எனக்கு அந்தாளை நினச்சாலே பயமா இருக்கு”, உடல் அதிர்ந்தவளை சற்று அணைவாகப் பிடித்தான் அமர்.

“அவன் பெரிய ஆளு இங்க, நிறய தொழில்கள் வெளியில தெரிஞ்சாலும், இந்த மாதிரி பொண்ணுங்கள கைமாத்தி விடற தொழில் பண்றான்னே  பகிரங்கமா யாருக்கும் தெரியாம பண்ணிட்டு இருந்திருக்கான். இன்னைக்கு வகைதொகையா வந்து மாட்டிக்கிட்டானு ஏசி சொன்னார்”, சற்று நேரம் எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாக இருந்தனர்.

“இப்டி இன்னும் அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்காம கொஞ்சம் வெளியில போயிட்டு வருவமா?”, அமர்.

“நாம நம்ம ஊருக்கே போயிருவமா?”, பயந்தபடி கேட்டவளை இறுக அணைத்தவன் நெற்றியில் இதழ் பதித்து

“உனக்கு எங்க இருக்கணும்னு தோணுதோ அங்க இரு. ஒன்னும் பிரச்சனை இல்ல” என அன்பாகக் கூறியனின் கழுத்தை இருகைகளால் கோர்த்து முகத்துடன் முகம் புதைத்தாள்.

“உங்கள விட்டுட்டு என்னால தனியா எங்கயும் இருக்க முடியாதே”, அழுகையுடன் கூறினாள்.

“அப்ப ஒரிசாவுக்கு தான் போயாகணும்”

“அப்ப நானும் அங்கயே இருக்கேன், தமிழ்நாட்டுல எல்லாம் இந்த வேல இல்லயா?”, குரல் கம்மக் கேட்டாள்.

“எதாவது புது புராஜெக்ட் அங்க வந்தா போயிருவோம்”

“அது வரை இங்கதான் இருக்கணுமா?”, பயம் தெளியாமல் இருந்தாள்.

“ஆமாண்டா”, என பேசியபடி இருக்க,

இரவு உணவிற்கான நேரம் வந்தும் அமரின் அருகாமையிலிருந்து வெளிவர எண்ணவில்லை அர்ச்சனா.  அமர் இரவு உணவை கேண்டீனில் சென்று சாப்பிடலாம் வா என அழைத்தும் வரவில்லை என்றுவிட்டாள், அர்ச்சனா.

“சரி நீ ரும்ல இரு, நான் போயி வாங்கிட்டு வரேன்”, என்க, அதற்கும் மறுத்துவிட்டாள்.  இவளை என்ன செய்ய என்று யோசித்தவன், கேண்டீனுக்கு அழைத்து அறை எண்ணைக் கூறி இங்கு இருவருக்குமான உணவை கொண்டு வந்து தருமாறு கூற,  அடுத்த இருபது நிமிடத்தில் இரவு உணவைக் கொண்டு வந்து தந்திருந்தனர்.

நடந்த விசயங்கள் மேல்மட்ட அளவில் இருந்த பொறுப்பாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அன்று மாலை கிளம்புவதாக இருந்த பயணத்தை அடுத்த நாள் காலைக்கு மாற்றியிருந்தான், அமர்.

உணவை உண்ணச் செய்து படுக்கையில் விட்டதும் உடனே உறங்கியிருந்தாள் அர்ச்சனா.  ஆனாலும் அவனுடைய மேலாடையை இருகப் பற்றியிருந்த கைகளைப் பார்த்தவனுக்கு அவளின் பயத்தின் அளவை உணர முடிந்தது.

படுத்து இரு மணி தியாலத்தில் அர்ச்சனாவிடமிருந்து முனகல் சத்தம் வர

அர்ச்சனாவின் உடல் சுரத்தால் நெருப்பாக கொதித்தது.  இரவில் என்ன செய்ய என யோசிக்கும் முன் அர்ச்சனாவின் அனத்தல் அதிகமாகி இருந்தது.  அடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அர்ச்சனாவை சிசிச்சைக்காக சேர்த்திருந்தான் அமர்.

முந்தைய தின அதிர்ச்சி, அலைக்கழிப்பு, பயம் அனைத்தும் அர்ச்சனாவிற்கு சுரத்தை தந்திருந்தது.  அன்று முழுவதும் மருத்துவமனையில் மனைவியின் அருகிலேயே இருந்தான். சுயநினைவின்றி இருந்த மனைவிக்கு தாயாக இருந்து பார்த்துக் கொண்டான், அமர்.

மாலையின் தனது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அழைத்து விடயத்தைப் பகிர்ந்து கொண்டான்.  பிறகு சந்திரசேகருக்கு அழைத்து மேலோட்டமாக பேசிவிட்டு வைத்தான்.

எப்பொழுதும் வெடக் கோழி போலத் தெரியும் அர்ச்சனா, சீக்கு வந்த கோழி போல உருமாறியிருந்தாள்.  இருநாட்களில் மிகவும் வாடித் தெரிந்தாள் அர்ச்சனா.

அதன்பின் அழைத்த அன்பரசி ‘சற்று குணமானவுடன் மருத்துவமனையில் இருந்து ஊருக்கு வருமாறும், ஒரிசாவிற்கு அர்ச்சனாவை இப்பொழுது அழைத்துச் செல்ல வேண்டாம்’ எனவும் கூற, அமருக்கும் அதுவே சரியெனத் தோன்ற, அடுத்து வந்த மூன்றாம் நாள் அர்ச்சனாவுடன் நெய்வேலி வந்தான், அமர்.

 

**********************************************

error: Content is protected !!