MM10
MM10
மயங்காதே மனமே 10
ஓங்கி ஒரு அறை விட்டான் மித்ரன். அந்த ஆவேசத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பக்கத்தில் கிடந்த சோஃபாவில் விழுந்தார் மகேந்திரன். அழுதபடி அவரைத் தாங்க ஓடி வந்த அவர் மனைவியை ஓர் பார்வைதான் பார்த்தான். புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு சுவரோடு சாய்ந்து நின்று விட்டார்.
“சார்.” என்று கூவியபடி அவனைத் தடுக்க வந்த கதிரையும் ஒற்றைக் கையால் தள்ளி விட்டான். அவன் முகம் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
“யார் கிட்ட கேட்டு ஃபோட்டோ போட்டே?” கொத்தாக அவர் சட்டையைப் பிடித்தவன், அவரை வலுக்கட்டாயமாக எழுப்பி நிறுத்தினான்.
“மித்ரன்… கொஞ்சம்… பொறுமையா… நான் சொல்லுறதை கேளுங்க.” திக்கித் திணறி வார்த்தைகள் வெளிவந்தன.
“நீ என்ன சொல்லப் போறே? அந்தப் பரதேசி அபியை கேவலப்படுத்தத் தான் இப்பிடிப் பண்ணினேன்னு சொல்லப்போறே, அதானே?” தன் கைகளுக்குள் மாட்டியிருந்த அவர் சட்டையை இன்னும் இறுக்கியவன், அவரைப் பார்த்துக் கேட்க, மூச்சுவிடக் கஷ்டப்பட்டவர் அவசர அவசரமாக தலையாட்டினார்.
“அவனை என்ன வேணும்னாலும் நீ பண்ணு, அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. கூட ஒரு பொண்ணு இருந்துதா? இல்லையா?”
“இருந்துது.” மூச்சுக்கு அவர் கஷ்டப்படுவதை உணர்ந்த கதிர், அவசராக மித்ரனிடம் ஓடி வந்தான்.
“சார், செத்துக் கித்துத் தொலைச்சிடப் போறார் சார்.” என்றவன், மகேந்திரனை அவனிடமிருந்து பிரித்து சோஃபாவில் உட்கார வைத்தான். மனிதர் அரை உயிராக ஆகியிருந்தார். அங்கிருந்த இன்னொரு சோஃபாவை முழுதாக ஆக்கிரமித்த படி அமர்ந்திருந்தான் மித்ரன். மனம் அலைகடல் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது.
அன்று காலைப் பொழுது அத்தனை நல்லதாக விடியவில்லை அவனுக்கு. நிதானமாக ஃபாக்டரிக்கு ரெடியாகிக் கொண்டிருந்தவனைக் கலைத்தது கதிரின் கால்.
“குட் மார்னிங் கதிர்.”
“சார், பேப்பர் பாத்தீங்களா?” பதட்டத்துடன் வந்தது கதிரின் குரல். அந்தக் குரலில் ஆச்சரியப் பட்டவன்,
“இல்லையே கதிர், ஏன்? ஏதாவது முக்கியமான நியூசா?” என்றான்.
“சார், மகேந்திரனோட பத்திரிகையில, அந்த அபியோட ஃபோட்டோ அன்னைக்குப் போல ஃப்ரொன்ட் பேஜ்ல வந்திருக்கு சார்.” கதிரின் குரலில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
“வாட்? என்ன சொல்லுற நீ?” மித்ரன் அட்டகாசமாகச் சிரித்தான். ‘நம்மளையும் மிஞ்சி அந்தப் பயலுக்கு யாருடா எதிரி?’ என்ற ஏளனம் அந்தச் சிரிப்பில் இருந்தது.
“நீங்க… ஏதாவது…?” சந்தேகமாக இழுத்தான் கதிர்.
“யோவ், சும்மா போய்யா. மனுஷனுக்கு வேற வேலை வெட்டி இல்லையா? இவன் போற இடமெல்லாம் ஃபோட்டோ புடிக்கிறதுதான் என் வேலையா?” கடுப்பாக மித்ரன் சொல்லவும் குழம்பிப் போனான் கதிர்.
“சார்… ஃபோட்டோல… கூட இருக்கிறது…” கதிருக்கு வார்த்தை சிக்கியது.
“யாரா இருந்தா எனக்கென்ன?” அலட்சியமாகச் சொன்னவன்,
“யாரு? ஸோனாவா? உண்மையாவே அவனோட போய் சேந்துட்டாளா? விட்டுத் தள்ளு கதிர். ஆனா, பய அந்த ரேஞ்சுக்கு போக மாட்டானே? ராமாவதாரம் ஆச்சே…?” தன் வேலைகளைக் கவனித்தபடி பேசிக் கொண்டிருந்தான் மித்ரன். மனம் முழுக்க அந்தப் பெண் நிறைந்திருந்ததால், யாரைப் பற்றியும் அவன் கவலைப் படவில்லை. அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போட்டான் கதிர்.
“சார், ஃபோட்டோல… கூட… இருக்கிறது… கீதாஞ்சலி…” கதிர் சொல்லி முடிக்கவும், அங்கே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. மித்ரனுக்கு அந்தத் தகவல் சட்டென்று மூளைக்குச் செல்லவில்லை. கணத்தாக்கங்கள் வேலை நிறுத்தம் செய்தன. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே,
“சார்…” என்றான் கதிர்.
“நல்லாப் பாத்தியா கதிர்?”
“கையில பேப்பர் இருக்கு சார். பாத்ததும் ஆடிப் போயிட்டேன். நேரா உங்க வீட்டுக்குத் தான் சார் வர்றேன்.” அவன் சொல்லவும் ஒரு உறுமல் மட்டுமே பதிலாக வந்தது. ஃபோனை டிஸ்கனெக்ட் பண்ணிவிட்டு ஃசோபாவில் தொப்பென அமர்ந்தான் மித்ரன். அவன் வாழ்நாளில் இப்படி அவன் நிலை குலைந்ததில்லை.
எங்கோ, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று அவன் மனம் அடித்துச் சொல்லியது. அவன் அறிந்தவரை கீதாஞ்சலியும் அப்படிப்பட்ட பெண் கிடையாது, அபியும் அப்படிப்பட்டவன் கிடையாது. தொழில்முறைத் தகராறுகள் ஆயிரம் இருந்தாலும், அபி மேல் இப்படியொரு குற்றச்சாட்டை தன்னைத் தவிர யாரும் சுமத்த முடியாது என்று மித்ரனுக்கு நன்றாகத் தெரியும்.
அவன் அப்படிப்பட்டவனாக இருந்திருந்தால் தன் வேலை அன்று சுலபமாக முடிந்திருக்குமே. ஸோனாவைத் தயார் செய்ய வேண்டிய அவசியமே வந்திருக்காதே?
அந்தப் பெண்ணிற்கு வந்த கஷ்டம் தனக்கு வந்தது போல் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. மகேந்திரன் தனக்கு எதிராக செயற்பட மாட்டார் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனாலும் எதற்கு தன்னிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் இப்படியொரு அதிகப் பிரசங்கித்தனம் பண்ணி இருக்கிறார்?
இத்தனைக்கும் அந்தப் பெண் தனக்கு வேண்டப் பட்டவள் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அன்று ‘க்ரௌன் ப்ளாஸா‘ வில், அவளைப் பற்றி தான் அத்தனை விளக்கம் கூறிய போதே அவருக்குப் புரிந்திருக்கும், அந்தப் பெண் தனது மரியாதைக்கு உரியவள் என்று. இதையெல்லாம் தாண்டி மனிதர் அந்த ஃபோட்டோவை பேப்பரில் போட்டிருக்கிறார் என்றால்…?
மித்ரனின் தாடை எலும்புகள் கடினப்பட்டன. புயல் போல ரூமை விட்டு வெளியேறியவன், பாட்டி அழைத்ததையும் பொருட்படுத்தாமல் காருக்கு வந்திருந்தான். அடுத்த நிமிடமே கதிரும் வந்து சேர இருவரும் புறப்பட்டார்கள்.
பேப்பரைக் கதிர் நீட்டவும், அதைக் கைகளில் கூட வாங்கவில்லை மித்ரன். படத்தில் இருப்பது கீதாஞ்சலி தானா என்பதை மட்டும் அவன் கண்களால் சரிபார்த்துக் கொண்டான். அவன் கண்களுக்கு அவளைத் தவிர வேறெதுவும் தெரியவும் இல்லை.
“மகேந்திரன், உனக்கு நல்லாத் தெரியும். அந்தப் பொண்ணு எனக்கு ரொம்பவே வேண்டப்பட்ட பொண்ணுன்னு. அதையும் தாண்டி இந்த ஃபோட்டோவை நீ போட்டிருக்கேன்னா, உனக்கு குளிர்விட்டுப் போச்சுன்னு தானே அர்த்தம்.” அமைதியாக இருந்தாலும் அவன் குரலில் ஆத்திரம் அடங்கியிருக்கவில்லை.
மகேந்திரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். நேற்று மாலை ஒரு ஏழு மணி போல அவரின் ஆதர்ஷ ஃபோட்டோ கிராஃபர் அந்தத் தகவலைக் கொண்டு வந்திருந்தான்.
வேறு ஏதோ ஒரு வேலையாகப் போனவன், களைப்பாக இருக்கவும் பக்கத்தில் இருந்த அந்த காஃபி ஷாப்பில் ஒரு காஃபி குடிக்கப் போயிருந்தான். எதேச்சையாக அங்கே அபியைக் காணவும் அவர்கள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டான்.
இருவரும் எழுந்து வெளியே போக எத்தனிக்கும் போது கீதாஞ்சலி தடுமாறவும், அவளைத் தாங்கிப் பிடித்த அபிமன்யுவும் என, சந்தர்ப்பம் அழகாக அமைந்து போனது. சமயம் பார்த்துக் கொண்டிருந்தவன், தனது ஃபோனில் அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டான்.
ஃபோட்டோவைப் பார்த்த போது மகேந்திரன் சந்தோஷத்தின் உச்சிக்குப் போனார். ஒரு லட்டு கிடைத்தாலே ஆனந்தப்பட்டிருப்பார். இங்கே இரண்டு லட்டுகள் தன் கைகளில் விழவும் மனிதர் மகிழ்ந்து போனார்.
இத்தனை நாளும் மனதினில் அடங்கி இருந்த வன்மம் தலைதூக்கியது. அன்று மித்ரனை ஹோட்டலில் பார்த்தபோது அவன் கண்களே சொன்னது, அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கிருந்த மயக்கத்தை. அதே பெண்ணை அபியோடு சேர்த்துப் பார்க்கும் போது, அது அவனது தன்மானத்திற்கு விழும் பெரிய அடியென்று கணக்குப் போட்டார் மகேந்திரன். அதேவேளை குடும்ப கவுரத்தைக் கட்டிக் காக்க நினைக்கும் அபிமன்யுவிற்கும் இது பெரிய அடியாக இருக்கும் என்று அவர் உள்மனது அடித்துச் சொன்னது.
எல்லாவற்றையும் பக்காவாகப் பண்ணியிருப்பதாகத் தான் மகேந்திரன் நினைத்திருந்தார். ஆனால் அந்த இரு வாலிபர்களும், அந்தப் பெண்ணின் மேல் தீராக் காதல் கொண்டிருப்பதை பாவம் அவர் அறியவில்லை.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா, எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம அந்த ஃபோட்டோவை உன்னோட பேப்பர்ல, அதுவும் ஃப்ரொன்ட் பேஜ்ல போட்டிருப்ப?” மித்ரன் கேட்கவும், இப்போது மகேந்திரனிற்கு எதுவோ சுள்ளென்று தைத்தது.
இத்தனை வருட காலம் பத்திரிகைத் துறையில் இருந்த தைரியம் அவரை கொஞ்சம் நிமிரச் செய்தது. தன் பத்திரிகையில், தான் ஒரு நீயூஸைப் போட இவனிடம் எதற்குக் கேட்க வேண்டும்? என்ற ஆங்காரம் தலைக்கேற வார்த்தைகளைச் சிதற விட்டார்.
“என்னோட பேப்பர்ல, நான் ஒரு ஃபோட்டோவைப் போட உனக்கிட்ட எதுக்குய்யா கேக்கணும்? ஆமா, வேணும்னு தான் போட்டேன். என்ன பண்ணுவ? நான் பாக்கப் பொறந்த பொடிப்பயலுங்க, என்னை ஆட்ட நினைச்சா சும்மா விட்டுருவேனா? பத்திரிகைக் காரன்யா. சமயம் பாத்துக்கிட்டே இருந்தேன்.” ஒழுங்காக உட்காரக் கூட திராணி இல்லாத போதும், ஒரு கோணல் சிரிப்போடு சொல்லி முடித்தார் மகேந்திரன்.
மித்ரன் அமைதியாக இருந்தான். அவர் இத்தனை பேசியும் அவன் வாயே திறக்கவில்லை. அவனின் நிதானம் பார்த்து கதிருக்குக் குளிரெடுத்தது. அவனோடான இந்த ஒரு வருட காலப் பழக்கத்தில், மித்ரனை அவன் இத்தனை நிதானமாகப் பார்த்ததில்லை.
ஃபோனை எடுத்து டைப் பண்ணிக் கொண்டிருந்தான். யாருக்கோ டெக்ஸ்ட் பண்ணுகின்றான் என்று சொல்லாமலேயே புரிந்தது. அந்த வேலையை முடித்தவன், ஒரு பத்து நிமிடங்கள் அமைதியாக இருந்தான். அந்த இடமே ஸ்தம்பித்தாற் போல இருந்தது. ஏதோ செய்கிறான் என்று எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் என்ன செய்கிறான் என்றுதான் புரியவில்லை.
அந்தப் பத்து நிமிடங்களும் கழிந்த பிறகு, ஃபோனை எடுத்தவன் யாருக்கோ அழைத்து விட்டுக் காத்திருந்தான். அந்தப் புறம் அழைப்பு எடுக்கப் பட்டது போலும்.
“ஹலோ, ‘தினசரி‘ பத்திரிகை ஆஃபீஸுங்களா? ஹாட் நியூஸ் ஒன்னு இருக்கு மேடம். நீங்க அதை வேரிஃபை பண்ணிக்கிட்டு சுடச்சுட, இன்னைக்கு ஈவ்னிங் ப்ரின்டுக்கு போடுங்க.” சொல்லி முடித்தவன், அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ,
“கோடவுனுக்கு நீங்களே போய் செக் பண்ணிக்கோங்க மேடம். மிஸ்டர். மகேந்திரனோட பேப்பர் கோடவுன் பத்திக்கிட்டு எரியுது, யாரோ முன் விரோதத்துல பண்ணிட்டதா சொல்லுறாங்க.”
“……”
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு மேடம்? தகவல் உண்மையா? பொய்யா? அதை மட்டும் பாருங்க.” சொன்னவன் ஃபோனை அணைத்து சோஃபாவில் போட்டான்.
மகேந்திரனின் முகம் செந்தணல் போல மாறியிருந்தது. தன் தொழில் சாம்ராஜ்யத்தில் கை வைத்தவன் மேல் கொலை வெறி தோன்றியது. கொஞ்சம் நிதானித்துக் கொண்டு எழுந்து நின்றவர்,
“மித்ரா…! ஆழம் தெரியாம நீ காலை விடுற. மகேந்திரன் யாருன்னு உனக்கு இன்னும் புரியலை.” கர்ஜித்தவரை இகழ்ச்சியாகப் பார்த்துப் புன்னகைத்தான்.
“அடங்க மாட்டேன்றானே…! ம்… கதிர், இவனுக்கு ஒரு பொண்ணு இருக்கில்லை?” யோசித்தபடியே அவன் கதிரிடம் கேட்கவும், அதுவரை மௌனமாக சுவரில் சாய்ந்த படி நின்றுகொண்டு அத்தனையையும் பார்த்திருந்த மகேந்திரனின் மனைவி கதறியபடி மித்ரனின் காலில் வந்து விழுந்தார்.
“தம்பி, இந்த மனுஷன் புத்தியில்லாம பண்ணுற காரியத்துக்கு எம் பொண்ணை ஒன்னும் பண்ணிடாதேங்க தம்பி. அது வாழவேண்டிய பொண்ணுப்பா.” அவரின் கண்ணீரை இரக்கமற்றுப் பார்த்திருந்தவன்,
“உம் புருஷன் கிட்ட சொல்லி வை. இதுக்கு மேலயும் என் வழியில வந்தான்… உம் பொண்ணு ஃபோட்டோ பேப்பர்ல வரும். அது என்ன கோலத்துல வரும்னு நான் உனக்கு சொல்லத் தேவையில்லை.” அடிக்குரலில் உறுமிவிட்டு வெளியேறினான் மித்ரன். அவனின் செய்கைகள் கொஞ்சம் அதிகப்படி போல் தோன்றியது கதிருக்கு.
* * * * * * * * * * * *
வீடே அமைதியாக இருந்தது, ஆனால் அத்தனை பேரும் அங்கேதான் கூடி இருந்தார்கள். காலையிலேயே பேப்பரைப் பார்த்து விட்டு ரஞ்சனி கால் பண்ணி ஒரு ஒப்பாரி வைத்திருந்தாள். அது போதாதற்கு சீமாவும் இங்கிருந்து பதில் ஒப்பாரி வைத்திருந்தார்.
நாராயணனுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. முதல் தடவை பேப்பரில் ஃபோட்டோ வந்த போது, அவர் உடல்நிலை குறித்து யாரும் அதை அவரிடம் சொல்லி இருக்கவில்லை. இப்போது அனைத்தையும் தன் கண்களால் பார்த்த போது மனிதன் ஆடிப் போய்விட்டார்.
தான் இத்தனை வருடங்களாக ஊர் விட்டு ஊர் வந்து வியாபாரம் பண்ணிய போது சம்பாதிக்காத பகையை, தன் மகன் இந்தக் குறுகிய காலத்தில் சம்பாதித்து வைத்திருப்பதைப் பார்த்து அவர் மனம் கவலைப்பட்டது. எதிரி தன்னிடம் மோதாமல், தன் மகனை குறி வைத்திருப்பதை அவர் அறியவில்லை.
அபிமன்யு கைகள் இரண்டாலும் தலையைத் தாங்கிய படி மௌனமாக அமர்ந்து இருந்தான். விடியற்காலையில் ஜாகிங் முடிந்து வீடு வந்தவனுக்கு, அன்றொரு நாள் போல இன்றும் பூகம்பம் காத்திருந்தது. தாத்தாவின் பார்வை அவனை நெருப்பைப் போல எரித்தது. பாட்டி மட்டும் கொஞ்சம் அவனிடம் அனுசரனையாக நடந்து கொண்டார். கூர்க்கா வீட்டு வாசலில் வந்து நிற்கவும்,
“என்னப்பா?” என்றார் அன்னலக்ஷ்மி.
“அம்மா, யாரோ ஒருத்தர் நம்ம ஐயாவைப் பாக்கணும்னு சொல்றார்மா. இப்போ முடியாது இன்னொரு நாள் போய்ட்டு வாங்கன்னு சொன்னா கேக்காம அடம் பிடிக்கிறார்மா.” வீட்டின் அசாதாரண நிலை புரிந்து சமயோசிதமாக நடந்திருந்தான் கூர்க்கா.
“யாருப்பா அது, நேரங் காலம் தெரியாம தொந்தரவு பண்ணுறது? ஏதாவது சொல்லி அனுப்புப்பா.” சலிப்பாகச் சொன்ன பாட்டியின் கையைப் பிடித்துத் தடுத்தான் அபிமன்யு. அவன் உள் மனது ஏதோ அவனுக்கு உந்த,
“பரவாயில்லை, வரச்சொல்லுங்க அண்ணா.” என்றான்.
“சரி தம்பி.” கூர்க்கா நகரவும், அவனை ஆச்சரியமாகப் பார்த்தார் பாட்டி.
“எதுக்குப்பா, வீடு இப்போ இருக்கிற நிலமையில யாரைப்பா நம்மால பாக்க முடியும்?” கேட்ட பாட்டியை யோசனையாகப் பார்த்தவன், எழுந்து வாசலுக்குப் போனான். அங்கிருந்த அத்தனை பேரும் அவனை வினோதமாகப் பார்த்திருந்தனர்.
ஓய்ந்து போன தோற்றத்தில் அந்த மனிதர் அவன் முன்னால் வந்து நின்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்குப் புரிந்தது, அது கீதாஞ்சலியின் அப்பா என்று. கூர்க்கா சொன்னபோதே அவனுக்கு மணியடித்தது. அதனால் தான் வாசல் வரை எழுந்து வந்திருந்தான்.
அபிமன்யுவை ஒரு முறை கூர்ந்து பார்த்தார் அறிவழகன். அவன் சட்டையைப் பிடித்து உலுக்கும் ஆத்திரம் வந்தாலும், தன்னை நிதானப் படுத்திக் கொண்டார். ஒருவேளை தன் எதிரில் நிற்பவன் மேல் எந்தத் தவறும் இல்லாமல் கூட இருக்கலாம், என்று அவரது இத்தனை வருட வாழ்க்கை அனுபவம் சொன்னது. சட்டென்று அவர் அருகில் வந்தவன்,
“உள்ளே வாங்க அங்கிள்.” என்றான்.
“நீங்க யாரு தம்பி?” காட்டமாகக் கேட்டார் மனிதர்.
“அங்கிள்?”
“உங்க பேர் என்ன? அம்மா, அப்பா யாரு? குலம் என்ன? கோத்திரம் என்ன? எங்களுக்கு ஏதாவது தெரியுமா? இல்லை, முன்னே பின்னே பாத்துத்தான் பழகியிருக்கோமா?” அவர் குரல் படிப்படியாக அதிகரிக்கவும், உள்ளே இருந்த அத்தனை பேரும் எழுந்து வெளியே வந்தார்கள்.
சரியாக அந்த நேரத்திற்கு ரஞ்சனியின் காரும் அங்கு வந்து நிற்க, ஈஷ்வரனும், ரஞ்சனியும் காரிலிருந்து இறங்கினார்கள். தருண் பாட்டியிடம் தாவிக் கொண்டான். அறிவழகனின் அருகில் வந்த ரஞ்சனி,
” நீங்க… கீதாவோட அப்பா இல்லை. நான் உங்களை நர்சரியில ஒரு தரம் பாத்திருக்கேன் அங்கிள். உள்ள வாங்க அங்கிள்.” சட்டென்று அவரின் கையைப் பிடித்தவள், அவரை வீட்டிற்குள் இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள். அபி செய்யத் தயங்கியதை, அவன் தங்கை சுலபமாகச் செய்து முடித்திருந்தாள்.
அங்கிருந்த அத்தனை பேரையும் சுற்றி வந்தது அறிவழகன் கண்கள். வயதில் மூத்திருந்த பாலகிருஷ்ணனைப் பார்த்தவர்,
“ஐயா, நீங்கெல்லாம் யாருன்னு எனக்குத் தெரியாது. உங்க வீட்டுப் பையனோட எதுக்கு எம் பொண்ணு ஃபோட்டோவை பத்திரிகை வரை இழுத்து விட்டிருக்காங்கன்னும் எனக்குப் புரியலை. எம் பொண்ணு அப்பிடிப் பட்டவ கெடையாதுங்க.” சொன்னவரின் குரல் லேசாகக் கரகரத்தது.
“அங்கிள் ப்ளீஸ், உங்க பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்லை. நான் தான் அஞ்சலியை காஃபி ஷாப்புக்கு வரச் சொன்னேன். அதுவும் எந்தத் தப்பான நோக்கத்திலயும் இல்லை.”
தருணின் டீச்சர் தான் படத்தில் அபியோடு இருக்கும் பெண் என்றும், அவள் பெயர் கீதா என்றும் அங்கிருந்த அத்தனை பேரிற்கும் ரஞ்சனியின் புண்ணியத்தில் தெரிந்திருந்தது. இப்போது அவன் ‘அஞ்சலி‘ என்று சொல்லவும், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை‘ என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.
“எதுக்கு தம்பி எம் பொண்ணை நீங்க காஃபி ஷாப்புக்கு வரச் சொன்னீங்க?” இந்தக் கேள்வியில் அபி விக்கித்துப் போனான் என்றால், அங்கிருந்த மற்ற அனைவரும் தலை குனிந்து போனார்கள்.
ஆனால் ரஞ்சனி எதற்கும் தயங்கவில்லை. தன் அண்ணனின் மனம் அந்த நொடியில் அவளுக்குப் புரிந்து போக, நிலமையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
“நான் தான் அங்கிள் அண்ணா கிட்ட கீதாவை மீட் பண்ணச் சொன்னேன். நர்சரி ஃபங்ஷனை கீதா ஆர்கனைஸ் பண்ணுறதால, அது சம்பந்தமா பேசச் சொல்லி நான் தான் சொல்லியிருந்தேன்.” முழுப் பூசணிக்காயை ரஞ்சனி சோற்றில் மறைப்பது, அறிவழகனைத் தவிர அத்தனை பேருக்கும் புரிந்தது.
“அதை நர்சரியில வச்சு பேசி இருக்கலாமேம்மா? இப்போ பாரும்மா, எம் பொண்ணு நிலமை என்ன ஆகியிருக்குன்னு.” அந்தக் குரலில் ரஞ்சனி, அபியைத் திரும்பிப் பார்த்தாள். ‘என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன், இனி நீதான் ஏதாவது செய்ய வேண்டும்‘, என்ற சேதி அதில் இருந்தது.
அபி, அறிவழகனின் பக்கத்தில் வந்தவன்,
“அங்கிள், நான் சொல்றதை நீங்க கொஞ்சம் கேக்குறீங்களா?” என்றான். அவனைக் கேள்வியாகப் பார்த்தார் பெண்ணைப் பெற்றவர்.
“காரையும், ட்ரைவரையும் நான் உங்க வீட்டுக்கு அனுப்பறேன். நீங்க ஒரு கால் பண்ணி, உங்க வீட்டுல இருக்கிற எல்லாரையும் கிளம்பி வரச் சொல்லுறீங்களா?”
“எதுக்கு?”
“அங்கிள் ப்ளீஸ். என்ன? ஏதுன்னு கேக்காம நான் சொல்லுறதை ஒரே ஒரு தரம் பண்ணுங்க.” அபி சொல்லவும், அங்கிருந்த எல்லோரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார் அறிவழகன். அத்தனை பேரும் மௌனமாக இருக்கவும், வேறு வழியில்லாமல் மஞ்சுளாவை அழைத்து விபரம் சொன்னார்.
அவர்கள் வரும் வரையிலும் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சீமா கொண்டு வந்து நீட்டிய காஃபியை வாங்க சங்கடப்பட்டார் அறிவழகன்.
“எடுத்துக்கோங்க அண்ணா. எதுக்கு சங்கடப் படுறீங்க? யாரோ என்னமோ பண்ணினதுக்காக நம்மை பசங்களை நாமே குத்தஞ் சொல்லுறது நல்லதில்லை அண்ணா.” சிரித்த முகமாகச் சொன்னவரை மறுக்க முடியாமல், காஃபியை எடுத்துக் கொண்டார்.
ட்ராஃபிக் அதிகமில்லாத காலைப் பொழுது என்பதாலோ என்னவோ, ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக கார் வந்து சேர்ந்திருந்தது. குழப்பம் நிறைந்த முகத்தோடு காரிலிருந்து இறங்கினார்கள் மூன்று பேரும்.
கீதாஞ்சலியைக் கண்ட மாத்திரத்தில் தருண் பாய்ந்து சென்று அவளைக் கட்டிக் கொண்டான். கீதாவை தன் பாட்டி வீட்டில் பார்த்த சந்தோஷத்தில் பையன் குதித்தான். கீதாஞ்சலியும் அவனைத் தூக்கிக் கொள்ள, அழகாக அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். வீடே அவர்களை ஒரு கணம் வேடிக்கை பார்த்தது.
அபி கண்ணைக் காட்டவும், ரஞ்சனி ஓடிச் சென்று மஞ்சுளாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். ஆதித்தன் ஒன்றுமே புரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான். இவர்கள் மூவரும் உள்ளே நுழையவும்,
“வாங்கண்ணி” என்றார் சீமா. எதிரியாக இருந்தாலும் வீட்டிற்கு வந்தவரை வரவேற்க வேண்டியது பண்பு என்று அவர் வரவேற்க, லேசாகப் புன்னகைத்தார் மஞ்சுளா. சூழ்நிலை கொஞ்சம் இதமாக மாறியது.
கீதாஞ்சலியின் அருகில் வந்தான் அபிமன்யு. அவள் கையில் இருந்த தருணை வாங்கி ரஞ்சனியிடம் கொடுத்தவன், அவள் கையைப் பிடித்து தங்கள் பூஜையறக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அத்தனை பேரும் ஆச்சரியமாக அவனைப் பார்த்திருக்க, எதைப்பற்றியும் யோசிக்காமல் பூஜையறையில் இருந்த அந்த மஞ்சள் கோர்த்த தாலிக் கயிற்றை அவள் கழுத்தில் கட்டி முடித்தான்.