மயங்காதே மனமே 13
காலையிலேயே எழுந்து குளித்து முடித்திருந்தாள் கீதாஞ்சலி. அவள் பொருட்கள் எல்லாம் வந்து விட்டதால், புதிய இடம் என்பதைத் தவிர வேறொன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
பொருட்களை அந்தந்த இடங்களில் அடுக்கிக் கொண்டு இருந்தவளை ஆக்கிரமித்துக் கொண்டான் தருண். கீதாஞ்சலி அந்த வீட்டிற்கு வந்ததில் அபி சந்தோஷப்பட்டானோ இல்லையோ, தருண் ஆடித் தீர்த்து விட்டான்.
அவன் வாய் ஓயாது கீதா ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தது. இப்போதும் நைட் ட்ரெஸ்ஸோடு ஓடி வந்திருந்தான். கீதாஞ்சலிக்கும் அந்தச் சிறுவனின் துணை மனதிற்கு இதமாகத்தான் இருந்தது.
இருவருமாகச் சேர்ந்து நர்சரியில் ப்ராக்டிஸ் பண்ணிய பாடலை இப்போதும் பாடிக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை.
‘பேபி ஜீஸஸ்… பேபி ஜீஸஸ்…’ பாடிக்கொண்டிருந்த தருண், கவனம் கலைந்தவனாக கதவைப் பார்த்துச் சிரித்தான். குழந்தையின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்திருந்த கீதாஞ்சலியும் திரும்பிப் பார்த்தாள்.
கதவில் சாய்ந்தபடி இவர்களையே பார்த்திருந்தான் அபிமன்யு. எப்போது வந்தான் என்று தெரியாது. கைகளைக் கட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் திரும்பிப் பார்க்கவும் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
கீதாஞ்சலிக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது, இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை. நேற்று அவன் ஃபோன் தன் கையில் இருந்ததற்கே எல்லோரும் கேலியாகப் பார்த்தார்கள். இப்போது ரூமிற்குள்ளேயே வந்து உட்கார்ந்து கொண்டால் என்ன நினைப்பார்கள்?
எதையும் சிந்திக்க விடாமல் பாட்டைத் தொடரும் படி தருண் அடம் பிடிக்கவும் விட்ட இடத்திலிருந்து பாட்டைத் தொடர்ந்தார்கள்.
கையில் ஒரு சிறிய பையோடு வந்த சீமாவும் பேரனின் பாட்டில் லயித்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டார். சொன்னதையெல்லாம் சமர்த்தாகக் குழந்தை செய்யவும் கீதாஞ்சலிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. அவன் கன்னங்களை செல்லமாகக் கிள்ளியவள்,
“ஸ்வீட் பாய்.” என்றாள். அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம்,
“ஏய்…!” என்றொரு அதட்டல் அபியிடமிருந்து வந்தது. நாக்கைக் கடித்துக் கொண்டாள். தருண் பெரிதாகச் சத்தம் போட்டு கை தட்டிச் சிரித்தான்.
“நம்ம வீட்டு ராஜா அவன்.” சொன்னவன் அதோடு நிறுத்தாமல், அவள் ஒற்றை ஜடையைப் பிடித்து இழுத்தான்.
“ஆ…” வலியில் அவள் கத்தவும், அபியின் கையைத் தட்டிவிட்டார் சீமா.
“என்ன பண்ணுற அபி? வலிக்குமில்லையா?” அம்மா கண்டிக்கவும் குறும்பாகச் சிரித்தான் மகன். தருண் ஓடி வந்து மாமனிடம் தாவிக் கொள்ளவும், இரண்டு பேரும் அந்தக் கட்டிலில் உருண்டு புரண்டார்கள். அவர்களைக் கண்டு கொள்ளாத சீமா,
“கீதா, இது பிடிச்சிருக்கான்னு பாரும்மா.” என்றார்.
“என்னத்தை அது?” கேட்டபடி எழுந்தவளை தன்னருகே அமர்த்திக் கொண்டார். மாமனும், மருமகனும் விளையாட்டைத் தொடர்ந்தார்கள்.
“லாக்கர்ல இருந்த செட். பிடிச்சிருந்தா ரிசப்ஷனுக்கு போடலாம். பிடிக்கலைன்னா சொல்லும்மா, வேற மாத்தலாம்.”
“எனக்கு இதைப்பத்தியெல்லாம் பெருசாத் தெரியாது அத்தை. வீட்டுல அம்மாதான் எல்லாம் பாத்துப் பாத்து வாங்குவாங்க.” தயங்கியபடியே சொன்னாள்.
“நல்ல பொண்ணு தான். புடவையைக் காட்டினாலும் தயக்கம், நகையைக் காட்டினாலும் தயக்கம். அபி, நீ கஷ்டப் பட்டெல்லாம் ஒன்னும் சம்பாதிக்க வேணாம்பா. உம்பொண்டாட்டி சிக்கன சிகாமணியா இருக்கா.” கேலியாகச் சொன்னவர்,
“தருண், வாடா கண்ணா குளிக்கலாம்.” என்று தருணையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அபியின் கண்கள் அவளைக் கூர்மையாகப் பார்த்தது.
“என்னாச்சு அஞ்சலி? எதுக்கு தயங்குற?”
“எங்க வீட்டுலயே நிறைய இருக்கு. இன்னும் எதுக்கு? அதுவும் இவ்வளவு காஸ்ட்லியா?”
“அதுக்காக, ஆசையாக் குடுக்கும் போது வேணாம்னு சொல்லுவியா?”
“எனக்குக் கஷ்டமா இருக்கு.”
“இதுல என்ன கஷ்டம் இருக்கு. இதை உன்னோட வீடா நினைச்சா உனக்கு இந்தத் தயக்கம் வராது. இதுவே எம்மாமனார் எனக்கு ஏதாவது குடுத்தா நான் சந்தோஷமா வாங்கிப்பேன்.” கட்டிலை முழுதாக ஆக்கிரமித்தபடி படுத்திருந்தவன் குறும்பாகச் சொன்னான்.
“அந்த சக்தி அவருக்கு இருக்கா?” குதர்க்கமாகக் கேட்டாள் கீதாஞ்சலி.
“ஏனில்லை? முழுசாக் குடுத்திருக்காரே. அழகா, அம்சமா, சும்மா கும்…” வேண்டுமென்றே ஒரு தினுசாக அவளைப் பார்த்துக் கொண்டு சொன்னவனை, முடிக்க விடாமல் பக்கத்திலிருந்த பில்லோவால் அடித்தாள் கீதாஞ்சலி.
“ஏய் அஞ்சலி…!” வாகாக அவளிடம் அடி வாங்கிக் கொண்டு வேண்டுமென்று கத்தினான் அபி.
“வாய் ரொம்பத்தான் நீண்டு போச்சு. என்ன பேச்சு இது? எவளாவது ஒயிலா இருக்கிறவளைப் பாக்க வேண்டியது தானே! நான் குண்டா?”
“குண்டுன்னு சொல்லலடா செல்லம், நான் சொல்ல வந்ததே வேற.” சிரித்தபடியே சொன்னான்.
“அது இதை விடக் கேவலம். என்னைப் பாத்தா எப்பிடித் தோனுது?” அடியை நிறுத்தாமலேயே கேட்டாள்.
“அது என்னென்னமோ தோனுதுடி…” சொல்லியபடி நிமிர்ந்து பார்த்தவன்,
“பாட்டி…!” என்றான். கதவிற்குப் பக்கத்தில் அன்னலக்ஷ்மி முறைத்தபடி நின்று கொண்டிருந்தார். அபியின் முகத்தில் அசடு வழிந்தது. அப்போதுதான் பாட்டியைக் கவனித்த கீதாஞ்சலி, பில்லோவைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டு, ஜன்னலோரமாகப் போய் நின்று கொண்டாள். மானம் போனது.
“இங்கே என்ன பண்ணுற நீ?” கடுகடுவென இருந்தது பாட்டியின் முகம்.
“அது… பாட்டி… தருண்…” தந்தி அடித்தான் அபிமன்யு.
“ஐயர் வந்திருக்கார், தாத்தா உன்னைக் கூப்பிடுறாங்க. நீ அங்க போ.” அவர் சொல்லவும், விட்டால் போதும் என்று ஓடினான் அபி. முதுகைக் காட்டியபடி நின்ற கீதாஞ்சலியைப் பார்த்தவர், ஒரு சிறு புன்னகையோடு நகர்ந்து விட்டார்.
* * * * * * * * * * * *
அந்த மங்கிய நிலவொளியில் அமைதியாக நின்றிருந்தாள் கீதாஞ்சலி. அன்று காலையில் தான் அபியின் குலதெய்வக் கோவிலில் வைத்து அவர்கள் திருமணம் முடிந்திருந்தது. இரண்டாம் முறையாகத் தாலி கட்டியிருந்தான் அபிமன்யு.
ஒரு பத்து மைல் தொலைவில் இருந்த ஒரு குக்கிராமத்தில் இருந்தது அந்தக் கோவில். பார்த்தாலே புரிந்தது, மிகவும் பழமையான கோவில் என்று. இரண்டு குடும்ப அங்கத்தவர்களையும் தவிர வேறு யாரும் அழைக்கப் பட்டிருக்கவில்லை. ஆனாலும், திருமணம் விசேஷமாகவே நடந்தேறியது. எந்தக் குறையும் இருக்கவில்லை.
திருமணம் முடிந்த கையோடு, வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். மிகவும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதுவே வீடு நிறைந்து போனது.
அன்றைய நாள் முழுவதும் ஒரு சஞ்சலத்துடனேயே நடமாடிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. ஆனால் அதற்கு அவசியமே இல்லை எனும் வகையில் இருந்தது அங்கு வந்தவர்களின் நடவடிக்கைகள்.
யாரிடம் என்ன சொன்னார்களோ, அங்கு வந்த அத்தனை பேரும் அவளையும், அவள் குடும்பத்தையும் மிகவும் கண்ணியமாகவே பார்த்தார்கள், நடந்து கொண்டார்கள்.
எந்த கவுரவக் குறைச்சலும் அவர்களுக்கு ஏற்படவில்லை. வசதி படைத்திருந்தாலும், பண்பாடும் தெரிந்திருந்தது வந்தவர்களுக்கு. கொஞ்சம் நெகிழ்வாக உணர்ந்தாள் கீதாஞ்சலி.
ஆனால் அவள் அறியாத விடயங்களும் இருந்தன. குடும்பத்திற்குள் ஒன்றிரண்டாக எழும்பிய சலசலப்பை அபி ஒட்டு மொத்தமாக அடக்கியிருந்தான். தன் மனைவிக்கும், மனைவியின் குடும்பத்திற்கும் எந்த விதமான பழிச் சொல்லும் வர அவன் அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
திருமணத்திற்கென நேரங் குறித்த போதே, சடங்கிற்கும் நல்ல நேரம் பார்த்திருந்தார்கள். ஈஷ்வரன் மூலமாக அதை நாசூக்காகத் தவிர்த்திருந்தான் அபி.
“ஏன் மச்சான்?” கேள்வி கேட்டவரை ஏதேதோ சொல்லி, சிரித்து மழுப்பியிருந்தான்.
அன்று முழுவதும் பக்கத்திலேயே இருந்த அவள் அருகாமை ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பக்கத்தில் இருந்தாலும் அவள் காட்டிய ஒதுக்கம் அவனுக்குப் புரிந்தது. அவளின் சம்மதம் இல்லாமல் அவசர அவசரமாகத் தாலி கட்டியது அவளைக் காயப்படுத்தி இருப்பது புரிந்தாலும், எந்த இடத்திலும் அதற்கான காரணத்தை அவன் விளக்க முற்படவில்லை.
மாமனாரிடம் இலகுவாகச் சொல்ல முடிந்ததை, கீதாஞ்சலியிடம் சொல்ல அவன் பிரியப் படவில்லை. அந்த நினைப்பே அவனுக்குக் கசந்தது. தன்னைத் தவிர யாரும் அவளை ஆர்வமாகப் பார்ப்பது கூட பிடிக்கவில்லை.
சொல்லி இருந்தால் நிச்சயமாக அவள் புரிந்து கொண்டிருப்பாள். இருந்தாலும் அவனுக்குச் சொல்லப் பிடிக்கவில்லை. யாரோ ஒருவனைக் காட்டி தன் காதலியை, மனைவியாக்கும் கேவலம் அவனுக்கு வேண்டாம்.
தான் காதல் சொன்னபோது அவள் மறுத்திருந்தாலும், காலப் போக்கில் அவளை மாற்றும் எண்ணம் தான் இருந்தது அபிக்கு. ஆனால், எல்லாம் தலை கீழாக மாறிப்போனது.
எண்ணங்களோடே மாடி ஏறி வந்தவன், தோட்டத்தில் நின்ற தன் மனைவியைப் பார்த்து விட்டு அங்கே சென்றான். வீடே அமைதியாக இருந்தது.
கடல் வண்ணத்தில் ஒரு பட்டுப்புடவை உடுத்தி இருந்தாள். மெல்லிய ஊதா வண்ண பார்டரும், அதே நிறத்தில் ப்ளவுஸும் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்தது. ஆபரணங்கள் எதையும் களையாமல், கூந்தலை மட்டும் அவிழ்த்து விட்டிருந்தாள். இடையைத் தழுவி நின்ற அந்த மெல்லிய ஒட்டியாணம் அபியின் பொறாமையை தூண்டி விட்டது.
அழகுப் பதுமையாக நின்றவளைப் பார்த்த போது, தான் செய்து கொண்ட சங்கல்பம் மறந்து போனது அபிக்கு. அன்றைக்கு போல இன்றைக்கும் அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டான். ஓர் அதிர்வு அவளிடம் தெரிந்தாலும், அவனை அனுமதித்தாள்.
“எத்தனை நாளைக்குத்தான் அந்த நிலாவை பார்த்துக்கிட்டு நிக்கப் போற அஞ்சலி?” அந்தக் கேள்வியில் கொஞ்ச நேரம் மௌனித்தவள், சற்றுத் தயங்கியபடியே பதில் சொன்னாள்.
“எனக்குப் பாக்க… பிடிச்சிருக்கு.”
“ஓ… பாக்க மட்டும்தான் பிடிச்சிருக்கா.”
“…….”
“அஞ்சும்மாக்கு இன்னும் கோபம் போகலையா என்ன?”
“இப்போ கோபம்னு நான் சொல்லலையே.” அவளின் ஒட்டாத அந்தக் குரலில் புன்னகைத்தான் அபி.
“ஓ… அப்போ இன்னைக்கு பூரா விலகி நின்னதுக்கு காரணம் என்ன?” அவன் கேள்வியில் அவள் தலை குனிந்தாள். தன் மனதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறானே! மௌனமாக நின்றவளைத் தன் புறமாகத் திருப்பினான் அபி. அவள் முகத்தையே அவன் பார்த்திருக்கவும்,
“எம்மனசு என்னன்னு எனக்கே புரியலை அபி.” என்றாள். தயக்கமாக அவள் குரல் வந்தாலும், அதில் தயக்கமில்லாமல் அவன் பெயர் வந்தது. அபிக்கு பறப்பது போல் இருந்தது. அந்தக் கணத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
“சொல்லுடா…” அவள் மனதிலிருப்பது அவள் வாயாலேயே வெளிவரட்டும் என்று அவளை ஊக்குவித்தான்.
“என் முடிவுகள் எல்லாத்தையும் நானே எடுத்துப் பழகிட்டேன். இப்போ… எனக்காக இன்னொருத்தர் முடிவெடுக்கும் போது…” முடிக்காமல் நிறுத்தினாள் கீதாஞ்சலி.
“அது இன்னொருத்தர் இல்லைடா, உன்னோட பாதி.”
“ம்… ஒத்துக்கிறேன். அதை எம்மனசும் உணரனும் இல்லையா?”
“கண்டிப்பா…”
“எனக்கு… சொல்லத் தெரியலை அபி.” அவள் தடுமாறவும் சிரித்தான் அபி.
“நான் சொல்லட்டுமா?” அந்தக் காந்த விழிகள் அவனை நிமிர்ந்து பார்த்தன.
“ம்… சொல்லுங்களேன்.”
“மனசுல லேசா ஒரு ஆசை வந்துது. மனசுக்குள்ள வந்த ஆசையை அறிவு ஏத்துக்கலை. இது ரொம்பப் பெரிய இடம், நமக்கு ஒத்து வராதுன்னு சொல்லிடுச்சு. அறிவு சொன்னதை ஏத்துக்கவும் முடியாம, மனசு ஆசைப்பட்டதை நெருங்கவும் முடியாம நின்னப்ப, என்னெல்லாமோ நடந்து போச்சு.” அவன் கொஞ்சம் நிறுத்தவும், ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். அந்தக் கண்களில் முத்தம் வைத்தான் கணவன்.
“நான் திட்டம் போட்டு எதுவும் பண்ணலைடா. நீ மறுத்தப்போ கூட விட்டுப் பிடிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நிலைமை மாறிடுச்சு.”
“அப்பிடியென்ன தலை போற நிலைமை? யாரும் என்னைத் தூக்கிட்டுப் போப்பறாங்களா என்ன?” கேலியாகக் கேட்டவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“இவ்வளவு அழகா இருந்தா தூக்கிட்டுத்தானே போவாங்க. நான் உஷாரா இருக்க வேணாம்?”
“ஆமா… ரொம்பத்தான் கேலி பண்ணுறீங்க.”
“கேலியா? அம்மணி இன்னைக்கு கண்ணாடி பாக்கலையா என்ன?” அவன் சரசத்தையும் தாண்டி அவள் முகம் கொஞ்சம் தீவிர பாவம் காட்டியது.
“என்ன யோசனை?” என்றான்.
“எல்லாமே அவசர கோலத்துல முடிஞ்சா மாதிரி இருக்கு. பாத்து, பேசி, பழகின்னு எதுவுமே இல்லாம…”
“ம்… புரியுது அஞ்சலி. இப்போ அதை பண்ணலாமே.” சொன்னவனை மீண்டும் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்னடி பார்வை இது? மனுஷனோட உயிரை அப்பிடியே உருவி எடுக்குது.” தன் பேச்சில் தலைகுனிந்த பெண்ணை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்தவன்,
“அஞ்சும்மா, வீட்டுல நாம மட்டும் இல்லை. பெரியவங்க எல்லாம் இருக்காங்க. நமக்குள்ள எல்லாம் இயல்பா இருந்தா தான் அவங்க நிம்மதியா இருப்பாங்க. அதனால, இந்தத் தனித் தனி ரூம்ல இருக்கிறதெல்லாம் வேணாம்.” அந்தக் கண்கள் மீண்டும் அவனைச் சோதித்துப் பார்த்தது.
“மகாராணிக்கு எப்போ மனசு வருதோ, அப்போ இந்த அடிமையை ஏத்துக் கிட்டாப் போதும். அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்.”
“அபி… நீங்க என்னைப் புரிஞ்சுக்கிறீங்க இல்லையா?”
“கண்டிப்பா, அதுக்காக அம்மணி என்னை வருஷக் கணக்குல காக்க வெக்கக்கூடாது.” சிரித்தபடியே சொன்னவன் அவளைத் தன் ரூமிற்கு அழைத்துச் சென்றான்.
கீதாஞ்சலி இருந்த அறையை விட இது பெரிதாக இருந்தது. அந்தக் குடும்பத்தின் ராஜகுமாரனின் வாசஸ்தலம், அழகாகவும், ஆடம்பரமாகவும் இருந்தது.
“அஞ்சலி, உன்னோட திங்ஸ்ல சிலதை ரஞ்சனி இங்க ஷிஃப்ட் பண்ணி இருக்கா. மீதியை நாளைக்கு எடுத்துக்கலாம். நான் ஒருத்தன் இங்க இருக்குறேங்கிற நினைப்பே வேணாம். இது உன்னோட ரூம். இங்க நீ என்ன வேணா பண்ணலாம், சரியா?”
“ம்…”
“ட்ரெஸ் சேன்ஜ் பண்ணனும்னா பண்ணிக்கோ. ரொம்ப டயர்டா இருக்கு.” தன் மனதை மறைத்துச் சொன்னவன், கட்டிலில் சாய்ந்து கொண்டான்.
தனக்கு முதுகு காட்டி ஒருக்களித்துப் படுத்திருந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. அவன் செய்கைகள் அத்தனை இதமாக இருந்தது அவளுக்கு.
தன் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தாலும், அவன் காதலை, எந்த இடத்திலும் அவன் மறுக்கவுமில்லை, மறைக்கவுமில்லை என்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தான் சம்மதித்திருந்தால் இங்கே அழகானதொரு இல்லறம் ஆரம்பித்திருக்கும் என்று அவள் மனசாட்சி மல்லுக்கு நின்றது. எண்ணங்களின் கனம் தாங்க முடியாமல் ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
நடு ஜாமத்தில் கண்விழித்த அபி, தன்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்தபடி இருந்தான். அவள் நிலையை நினைத்த போது கொஞ்சம் வேதனையாக இருந்தது. தடாலடியாக நடந்த நிகழ்வுகள் அவளை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. வீட்டை விட்டு, வீட்டு மனிதர்களை விட்டு திடீரென்று இன்னொரு வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டால், பாவம் அவளும் தான் என்ன செய்வாள்?
அவள் இழந்த அத்தனையையும் தன்னொருவனால் ஈடுகட்ட முடிந்தும், அவள் தயக்கத்திற்கு மதிப்பளித்தே விலகி நின்றான். ஆனால் அந்த இடைவெளி அதிகமாவதை அவன் விரும்பவில்லை. முடிந்தளவு தன் காதலை, தன் தேடலை அவளுக்கு உணர்த்த நினைத்தான்.
அதேநேரம் அந்த நள்ளிரவுப் பொழுதில் மித்ரனின் கார் ஏர்போட்டை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தது. கதிர் ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தான்.
“கதிர்…”
“சொல்லுங்க சார்.”
“தாத்தா கிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன். அவர் இந்த ஒரு வாரத்துக்கு எல்லாத்தையும் பாத்துக்குவார். நீ கூடவே இரு. இந்த ட்ரிப்பைப் பத்தின எல்லா தகவலையும் உனக்கு நான் டெய்லி அப்டேட் பண்ணுவேன். அதை தாத்தாக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணு.”
“சரி சார்.”
“வேற என்ன…?” யோசித்த மித்ரனை கலைத்தான் கதிர்.
“சார்… நான் நாளைக்கு… என் தங்கை…” தயங்கிய கதிரை இடைமறித்தான் மித்ரன்.
“ஆங்… ஞாபகம் இருக்கு. தாத்தா கிட்ட சொல்லி இருக்கேன். நீ நாளைக்கு போய்ட்டு வா. பணம் ஏதாவது வேணுமா கதிர்?”
“ஐயையோ! அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். நானென்ன என் தங்கைக்கு கல்யாணமா பண்ணப் போறேன்? புதுசா வேலைக்கு சேரப் போகுது. அதை ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திருவேன்.”
“ஆமா… அப்பிடியே கல்யாணம் பண்ணிட்டாலும் நீ கேக்குற ஆள்தான் போ! இங்கப்பாரு கதிர், உனக்கு என்ன தேவைன்னாலும் என்னைக் கேக்கனும், புரியுதா?”
“சரி சார்.” சொல்லியபடி காரை ஏர்போர்ட் பார்க்கிங்கில் நிறுத்தினான் கதிர்.
“கதிர், கீதாஞ்சலியைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சா எனக்கு உடனே தெரியப் படுத்து. ஓ கே?”
“சரி சார், ஹாப்பி ஜேர்னி சார்.” சொன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தவன், டிபார்ச்சரை நோக்கிப் போய் விட்டான்.
கதிர் தன் முதலாளியையே பார்த்தபடி இருந்தான். மித்ரனிடம் நிறைய மாற்றங்கள். பெண்கள் சகவாசத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்தி இருந்தான். முன்போல ‘பப்‘ ஏ கதியென்று கிடப்பதில்லை. என்ன சொல்லித் தவிர்த்தானோ? அந்த ஸோனா, ஆளையே காணவில்லை. எல்லாம் அந்தப் பெண் கீதாஞ்சலியால் வந்த மாற்றம் தான். ஆண்டவன் அந்தப் பெண்ணை இவர் கண்ணில் கொஞ்சம் முன்கூட்டியே காட்டி இருந்திருந்தால், சமூகத்தில் இத்தனை கெட்ட பெயர் மித்ரனுக்கு வந்திருக்காது என்றே கதிருக்குத் தோன்றியது. அடிப்படையில் நல்லவன் தான். சேர்க்கையும், கண்டிப்பில்லாத வாழ்க்கையும் தான் அவனை இந்த அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
பார்க்கலாம், இந்தப் பத்திரிகை களேபரம் ஓய்ந்து விட்டால் எல்லாம் வழமைக்குத் திரும்பிவிடும். எண்ணியபடியே காரை எடுத்தான் கதிர். காலம் தன் விளையாட்டை ஆரம்பித்தது.