MM17

MM17

மயங்காதே மனமே 17

கீதாஞ்சலி லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். தலைக்குள் யாரோ உட்கார்ந்து ட்ரம்ஸ் வாசிப்பது போல் ஒரு வலி. கண்களைப் பிரிப்பதே அத்தனை கஷ்டமாக இருந்தது.

கீதாகீதாம்மாகண்ணை நல்லாத் திறந்து பாருங்க. நான் யாருன்னு தெரியுதா?” தன் கன்னங்களைத் தட்டியபடி பேசிய குரல் கொஞ்சம் பரிட்சயமானது போல் இருந்தது. சிரமப்பட்டு கண்களைத் திறந்தாள். எதிரே நிற்பது டாக்டர் ஈஷ்வரன் என்று புரிந்தது. ஏதேதோ ஞாபகங்கள் அலை மோத, இறுதியாக அபியின் முகம் மட்டும் மனக்கண்ணில் மின்னி மறைந்தது. அபிக்கு ஏதோ ஆபத்து என்று உள்மனது ஓலமிட்டது.

டாக்டர்அபிஅபிஎங்க? அபிக்குஎன்னாச்சு?” பேச முடியாமல் தலையை ஏதோ பண்ணியது. திக்கித் திணறிக் கொண்டு கேட்டாள் கீதாஞ்சலி.

கீதாம்மா, ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாது. தலையில லேசா அடிபட்டிருக்கு. கொஞ்சம் வலி இருக்கும், பொறுத்துக்கனும். நான் பேசுறது கேக்குதா? நான் என்ன சொல்லுறேன்னு உங்களுக்குப் புரியுதா?” அவள் பக்கத்தில் குனிந்து சற்று சத்தமாகவே பேசினார் ஈஷ்வரன். அவளுக்கு முழுதாக நினைவு திரும்பி விட்டதா என்று அவருக்கு ஊர்ஜிதப் படுத்த வேண்டி இருந்தது.

டாக்டர், ஆம் ஃபைன். ஆக்ஸிடென்ட் ஆனது கூட எனக்கு ஞாபகம் இருக்கு. அபிக்கு என்ன ஆச்சு? நான் அபியை பாக்கனும்.” நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருந்தது கீதாஞ்சலிக்கு.

அபியை பாக்க நான் உங்களைக் கூட்டிக்கிட்டு போறேன்மா. அதுக்கு முன்னாடி நான் சொல்லுறதை கவனமா கேளுங்க. உங்க இடது கை எலும்பு ஃப்ராக்ஷ்ர் ஆகியிருக்கு. அதுக்கு பான்டேஜ் போட்டிருக்காங்க. முடிஞ்சளவு நீங்களும் கையை அசைக்காம பாத்துக்கோங்க.” 

டாக்டர் சொல்லவும் கையைக் குனிந்து பார்த்தாள் கீதாஞ்சலி. தலையைத் திருப்பும் போது நெற்றிப் பொட்டில் சுள்ளென்று வலித்தது. இடது கையொன்று இருப்பது போலவே அவளுக்குத் தோன்றவில்லை. அவளின் முகத்தில் வலியின் சாயலைப் பார்த்த ஈஷ்வரன்,

கீதாம்மா, யூ ஆர் பேஃபெக்ட்லி ஆல் ரைட். கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும். பெயின் கில்லர் எடுத்தா சரியாகிடும்.” என்றார்

டாக்டர்அபி…”

நர்ஸ்…” பக்கத்தில் நின்ற நர்ஸை அழைத்தார் ஈஷ்வரன்.

கீதா, வீல் செயார்ல இப்போ உங்களை உக்கார வெப்பாங்க. நீங்க எதுவும் ட்ர்ரை பண்ணக்கூடாது சரியா?” குழந்தைக்குச் சொல்வது போல ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்தார் ஈஷ்வரன்.

தாதியர் சேர்ந்து அவளைத் தூக்கி அந்த சக்கர நாற்காலியில் உட்கார வைக்க ஈஷ்வரன் அந்த நாற்காலியைத் தள்ளிக் கொண்டு போனார்.

கீதாஞ்சலியை எமர்ஜென்சி வார்டில் வைத்திருந்தார்கள். தலையில் அடி பட்டிருந்தாலும் MRI ஸ்கானில் எந்த ரத்தக் கசிவுகளும் புலப்படாததால் அவளை ICU இல் அட்மிட் பண்ணவில்லை. ஆனால் அபி ICU இல் தான் இருந்தான்.

ICU இற்கு கீதாஞ்சலியை அழைத்துச் சென்றார் ஈஷ்வரன். வீல் செயாரில் தலை சாய்த்திருந்தவளின் கன்னத்தில் லேசாகத் தட்டினார்.

கீதாம்மா, அபியைக் கூப்பிடுங்க.” ஈஷ்வரன் சொல்லவும் கண்விழித்தாள் கீதாஞ்சலி. தலை வலித்தது. அந்த வலியையும் தாண்டி சொல்லத் தெரியாத வலியொன்று நெஞ்சுக்குள் பரவியது.

ஏதேதோ உபகரணங்கள் சூழ அந்தப் படுக்கையில் அபி படுத்திருந்தான். அவனைச் சுற்றி அத்தனை வயர்கள். ‘என்ன இது? என்ன ஆனது என் அபிக்கு?’ கண்களில் நீர் திரள டாக்டரை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களைத் துடைத்து விட்டவர் இடம் வலமாகத் தலை அசைத்தார்.

கட்டை விரலை உயர்த்திக் காட்டிய ஈஷ்வரனின் கண்களில் உறுதி தெரிந்தது. முகம் கடினப்பட்டிருக்க அவர் பார்த்த அந்தப் பார்வை ஆயிரம் யானை பலம் கொடுத்தது கீதாஞ்சலிக்கு. இரு கைகளையும் மேல் நோக்கிக் காட்டியவர், அப்படியே கும்பிட்டார். அவர் செய்கையில் நிலமையின் தீவிரம் புரிந்தது கீதாஞ்சலிக்கு. அவளின் செயாரை அபியின் படுக்கைக்கு அண்மையில் நகர்த்தினார்.

அபி…” தீனமாக வந்தது அவள் குரல். வலியைப் பொருட்படுத்தாமல் அவனருகில் மெதுவாக இன்னும் கொஞ்சம் நகர்ந்தாள். ஈஷ்வரன் எதுவும் சொல்லாமல் மௌனமாக நின்றார்.

அவள் வலது கை அபியின் உடலை மென்மையாக வருடியது. தாடை எலும்பு முறிந்திருந்ததால் கழுத்துக்கு பெரிதாகநெக் ப்ரேஸ்போட்டிருந்தார்கள். அவன் கன்னத்தை வருடினாள் பெண்.

அபிஅஞ்சலி வந்திருக்கேன். அபிஅபிகண்ணைத் திறந்து பாருங்க. அஞ்சலி வந்திருக்கேன் அபி…” அதற்கு மேலும் அங்கு நிற்காமல் வெளியே வந்தார் ஈஷ்வரன்.

மனது கனத்துப் போயிருந்தது. என்ன நடந்தது? ஏது நடந்தது? ஒன்றுமே தெரியாது. அர்த்த ராத்திரியில் கால் வரவும் அடித்துப் பிடித்து ஓடி வந்திருந்தார்கள். எதையும் சிந்திக்க நேரமிருக்கவில்லை. அவசர சிகிச்சை பிரிவில் அபியை சேர்த்து, சிகிச்சையை ஆரம்பித்திருந்தார்கள். சீல்ட் பெல்ட் கழட்டப் பட்டிருந்ததால் கீதாஞ்சலியை விட அபிக்கு சேதாரம் அதிகமாக இருந்தது. ‘எயார் பேக்ஓரளவே மார்புப் பகுதியைக் காத்திருக்க பக்கவாட்டு விலா எலும்புகள் இரண்டு முறிந்திருந்தன. தாடை எலும்பும் முறிந்திருக்க, இடது காலும் சேதாரப் பட்டிருந்தது.

எது எப்படி இருந்த போதும், மானிட்டரில் ஹார்ட் பீட் சில இடங்களில் திடீர் இறக்கத்தைக் காட்டவும் ஈஷ்வரனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. மருத்துவ வாழ்க்கையில் இதை விட எத்தனையோ மோசமான நிலைமைகளைக் கடந்திருந்தாலும், குடும்பத்திற்குள் ஒன்றெனும் போது மனம் கிடந்து பதறியது.

அழுதழுது ஓய்ந்து போயிருந்த குடும்பத்தினரை ஹாஸ்பிடலில் ஒரு ரூம் எடுத்து தங்க வைத்திருந்தான். போலீஸ் கேஸ் ஆகியிருந்ததால் அந்த வேலைகள் அனைத்தையும் வெற்றி பார்த்துக் கொண்டான்.

ஹாஸ்பிடல் காரிடாரில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் வந்து அமர்ந்தார் ஈஷ்வரன். கீதாஞ்சலிக்கு நினைவு திரும்பியது பெரிய ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் அபியின் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. வைத்தியத்தையும் தாண்டி அந்தப் பெண்ணால் தான் இனி ஏதாவது முன்னேற்றம் நடக்க வேண்டும்

சார்…” அந்த அழைப்பில் திரும்பிப் பார்த்தார் ஈஷ்வரன். வெற்றி நின்று கொண்டிருந்தான்.

என்னாச்சுப்பா?”

ட்ரைவரை ஸ்டேஷன்லேயே வச்சு விசாரிக்குறாங்க சார். சந்தேகம் வராம இருக்கனும்னு அவனுங்களே ஆம்பியூலன்ஸுக்கும், போலீசுக்கும் இன்ஃபாம் பண்ணி இருக்கானுங்க சார்.”

ம்…”

ஆனா எனக்குத் தெரியும் சார். அந்தப் பரதேசிங்க தான் இந்த வேலையைப் பண்ணி இருப்பானுங்க. நான் ப்ரூஃப் பண்ணாம விட மாட்டேன் சார்.” ஆவேசமாகச் சொன்ன வெற்றியை அடக்கினார் ஈஷ்வரன்.

வெற்றி, நமக்கு அபி ஒரு ஆபத்தும் இல்லாம மீண்டு வந்தாலே போதும். யாரையும் நாம பழிவாங்க வேணாம். நமக்கு மேல தெய்வம்னு ஒன்னு இருக்கு. அது எல்லாத்தையும் பாத்துக்கும். விட்டுருப்பா.” அவர் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் உட்கார்ந்து இருந்தாலும் வெற்றியின் மனம் உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தது.

போலீஸ் ஸ்டேஷனில் அந்த black Audi பார்த்தபோது நெஞ்சுக்கூடு உலர்ந்து போனது. காரே இப்படி நொறுங்கிப் போயிருந்தால் அதற்குள் இருந்தவர்களின் நிலமை என்ன?

பின்னால் வந்த கன்டெய்னர் லாரியே அபியின் காரை மோதியிருந்தது. தொடர்ந்து வந்தால் சந்தேகம் வரும் என்று கிளைப் பாதை ஒன்றினூடாக வந்து ஹைவேயில் திடீரென்று இணைந்திருக்கிறார்கள். எல்லாம் பக்கா ப்ளான். வெற்றிக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. மனதில் வன்மம் வளர்த்துக் கொண்டான்.

அவசரமாக ICU விட்டு வெளியே வந்த நர்ஸ் ஈஷ்வரனிடம் ஓடி வந்தாள்.

டாக்டர், பேஷன்ட்கிட்ட லேசா ரியாக்ஷ்ன் தெரியுது. நீங்க அவசரமாப் போங்க. நான் சீஃபுக்கும் சொல்லிடறேன்.” நர்ஸ் சொல்லிவிட்டு நகரவும் உள்ளே ஓடினார் ஈஷ்வரன்

தன்னால் முடிந்த அளவு அபியை நெருங்கி, அவன் முகத்திற்குப் பக்கத்தில் தன் முகத்தை வைத்தபடி இருந்தாள் கீதாஞ்சலி. அவன் காதிற்குள் அவள் வாய் ஓயாது அவனை அழைத்தபடி இருந்தது. அபியின் வலது கை சுட்டு விரல் லேசாக அசைந்தது

  • °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°      •°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°        •°•°•°•°•°•°•°•°•

புயல் போல அப்பாவின் காபினுக்குள் நுழைந்தான் மித்ரன். ஆச்சரியமாக அண்ணார்ந்து பார்த்த ராஜேந்திரன் மகனைக் காணவும் ஆசுவாசமானார்.

ஹாய் மித்ரா, காலையிலேயே எதிர் பாத்தேன். என்னாச்சு? இவ்வளவு லேட்டா வர்ரே.” கூலாகக் கேட்டார் மனிதன்.

என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” ஆக்ரோஷமாக சத்தம்போட்ட மகனை கேள்வியாகப் பார்த்தார் அப்பா.

என்னாச்சு மித்ரன்? நியூஸ் கேள்விப் பட்டதும் அப்பாக்கு ஹக் குடுத்து, டின்னருக்கு கூட்டிட்டு போவேன்னு பாத்தா…”

போதும், நிறுத்துங்க உங்க பீதாம்பரத்தை. உங்களை யாரு இந்த தேவையில்லாத வேலை பாக்கச் சொன்னது? யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணுறீங்க?”

ஏன் மித்ரா? அன்னைக்கு உன்னைக் கேட்டேனேப்பா. நீயும் சைலன்டா இருந்தியே?”

சைலன்டா இருந்தா நீங்க சம்மதமா எடுத்துப்பீங்களா? கார்ல யாரு இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”

யாரு இருந்தா நமக்கென்ன? நம்ம எதிரிதான் நமக்கு டார்கெட். கூட இருக்கிற நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாம் பாத்துக்கிட்டு இருக்க முடியாதுப்பா.” அவர் பேச்சில் கண்களை இறுக மூடித் திறந்தான் மித்ரன். இவரிடம் பேசிப் பயனில்லை என்றே தோன்றியது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சட்டென்று வெளியே வந்து காரிற்குள் ஏறி அமர்ந்து கொண்டான். அங்கே இன்னும் தாமதித்தால் வார்த்தைகள் தடிக்கக் கூடும். கோபம் தகதகவென கொதித்தது. அப்பா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அடித்து நொறுக்கி இருந்திருப்பான்

அன்று காலையில் கதிர் அந்தத் தகவலைச் சொன்ன போது ஆடிப் போய்விட்டான் மித்ரன். அபியைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. ஆனால் சம்பவத்தின் போது கூட கீதாஞ்சலியும் இருந்தாள் என்று கேள்விப் பட்டபோது சர்வாங்கமும் ஆடியது.

தான் முதல் முதலாக நேசித்த பெண். காதலை தனக்குக் கற்றுக் கொடுத்த பெண். அவளை நோகடித்துப் பார்க்க மித்ரனுக்கு சக்தி இருக்கவில்லை

அபியைத் தாக்குவது கூட அந்தப் பெண்ணுக்கு தான் செய்யும் அநியாயம் தான் என்று புத்திக்குத் தெரிந்தாலும், மனது அதை ஏற்க மறுத்தது. அவளின் காதல் அபிமன்யுவிற்குத் தான் என்பதை அவன் ஆண்மை முற்றாக மறுத்தது, நிராகரித்தது. ஃபோன் சிணுங்கவும், எடுத்துப் பார்த்தான் மித்ரன். ஸ்டீஃபன் அழைத்துக் கொண்டிருந்தான்

சொல்லு ஸ்டீஃபன்.”

சார், உங்க கிட்ட பேசனும். கிளம்பிட்டீங்களா?”

இல்லை, கார்ல தான் இருக்கேன். வெளியே வா பேசலாம்.” ஸ்டீஃபன் ராஜேந்திரனின் வலது கை. அவரின் நிழல் என்று கூட சொல்லலாம். காரிற்குள் வந்து ஏறியவனை தீவிரமாகப் பார்த்தான் மித்ரன்.

சாரி சார். நான் எவ்வளவு சொல்லியும் அப்பா கேக்கலை.”

எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ஸ்டீஃபன். எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?” அந்தக் குரலில் இருந்த ஆதங்கம் ஸ்டீஃபனைச் சங்கடப்படுத்தியது.

அப்பா ரொம்ப தீவிரமா இருந்தாங்க சார். அப்போவும் கார்ல அபி மட்டுமில்லை, கூட அந்தப் பொண்ணும் இருக்குன்னு தகவல் சொன்னோம். ‘கோ அஹெட்’ னு சொல்லிட்டாங்க.”

காட்!”

சாரி சார், என்னை தப்பா எடுத்துக்காதீங்க.”

இல்லை ஸ்டீஃபன், உங்களைக் கோபிச்சு என்ன ஆகப் போகுது? ஹாஸ்பிடல் நிலவரம் என்னன்னு தெரியுமா?”

கஷ்டம்னு தான் பேசிக்குறாங்க.” அதைக் கேட்ட மித்ரன் ஸ்டியரிங்கில் தலை சாய்த்துக் கொண்டான். அவனோடு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாத ஸ்டீஃபன் காரை விட்டு இறங்கிக் கொண்டான்.

  • °•°•°•°•°•°•°•°•°•°•°•°•          •°•°•°•°•°•°•°•°•°•°•°•°•          •°•°•°•°•°•°•°•°•°•°•

நான்கு நாட்கள் கடந்திருந்தது. அந்த நான்கு நாட்களும் நரக வேதனையை அனுபவித்திருந்தது அந்தக் குடும்பம். ஈஷ்வரன் யாரையும் ICU இற்குள் அனுமதிக்கவில்லை

கீதாஞ்சலிக்கு நினைவு திரும்பி இருந்தாலும் அவள் அருகாமையில் அபியிடம் முன்னேற்றம் தென்பட்டதால், முழு நேரமும் அவன் அருகாமையிலேயே இருந்தாள். மற்ற யாரையும் பார்க்கும் எண்ணமும் அவளுக்கு இருக்கவில்லை.

அத்தனை பேரும் வயதானவர்கள் என்பதால் ஹாஸ்பிடல் ரூமைக் காலி பண்ணிவிட்டு அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி இருந்தார் ஈஷ்வரன்

கீதாஞ்சலிக்கு நினைவு திரும்பி இருப்பதையும், அபியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதையும் மட்டும் குடும்பத்தினருக்குத் தெரியப் படுத்தி இருந்தார். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஆக்சிடென்ட் ஆன இந்த நான்கு நாட்களில் முதன் முறையாக அபி இன்று கண் திறந்து பார்த்திருந்தான். ஆவலாகப் பார்த்த மனைவியை இனங் காண்பதற்குள் மீண்டும் அந்த விழிகள் மூடிக் கொண்டன

கலவரத்துடன் திரும்பிப் பார்த்த கீதாஞ்சலியைப் ஆசுவாசப் படுத்திய ஈஷ்வரன் புன்னகைத்தார்.

எல்லா மெடிசின்சும் ரொம்ப பவர்ஃபுல் இல்லையாம்மா, அந்த டயர்ட்னஸ் தான். கவலைப் படுற மாதிரி வேற ஒன்னும் இல்லை.” அந்தப் பதில் சற்றே ஆறுதலைத் தந்தாலும் மனம் பரிதவித்தது.

அவள் இடது கைக்குஸ்லிங்போட்டிருந்தார்கள். தலைவலி சற்றே குறைந்திருந்தாலும், ஏதாவது சிந்தனையின் போது தான் இன்னும் மீதமிருப்பதை அவளுக்கு அடிக்கடி உணர்த்தியது.

ஆனால் அபியைப் பார்த்த போது நெஞ்சுக்கூடு உலர்ந்து போனது. உயிருக்கு எந்த ஆபத்தும் இனி இல்லை என்று ஈஷ்வரன் அடித்துச் சொல்லி இருந்தார். இருந்தாலும் உடல் முழுவதும் கட்டுக்களோடு, எந்த அசைவுமின்றி நான்கு நாட்கள் மரம் போல கிடந்தவனைப் பார்க்கும் போது ஓவென்று அழலாம் போல இருந்தது.

எத்தனை சுறுசுறுப்பானவன். அன்று ஒரு நாள் மட்டும் எத்தனை ஆட்டம் போட்டான். ரிசப்ஷன் முடிந்த கையோடு, வாழ்க்கையையும் ஆரம்பிக்க அவன் அனுமதி கேட்ட போது, மறுக்கத் தோன்றவில்லை பெண்ணுக்கு.

உள்ளமும், உடலும் அவனுக்காக ஏங்க ஆரம்பித்திருந்தது. அன்றைய ராப்பொழுது முழுவதும் திகட்டத் திகட்டக் கதை படித்தான் அபிமன்யு. அந்த விடியல் கூட எத்தனை அழகாக விடிந்தது.

சின்னப் பிள்ளை போல அன்று முழுவதும் குறும்புகளும், சேட்டைகளும் பண்ணிய படியே இருந்தானே. அந்த ஒரு நாளில் அவன் காதலை அவளுக்கு முழுதாகக் காட்டினானே. உலகத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அன்றே அனுபவித்து முடிப்பவன் போல அத்தனை ஆனந்தப்பட்டானே. அத்தனையும் இப்படி ஓய்ந்து போய் ஓரிடத்தில் அடங்குவதற்காகத்தானா?

கண்களில் கண்ணீர் வழிய, மனது மௌனமாக ஓலமிட்ட படி இருந்தது. சட்டென்று தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனைச் சுற்றி எப்போதும் பாசிட்டிவ்வான சிந்தனைகளே இருக்க வேண்டும் என்று ஈஷ்வரன் கண்டிப்பாக சொல்லி இருந்தார். அதனாலேயே வீட்டு மனிதர்களையும் அவர் அனுமதித்திருக்கவில்லை.

அவன் முகத்தருகே குனிந்து, மெதுவாக அவன் கன்னங்களை வருடிக் கொடுத்தாள். அந்த ஒற்றை நாள் உறவில் தன் ஸ்பரிசம் அவனுக்குத் தன்னை இனங்காட்டுமா? மனதில் சஞ்சலம் எழ அவனை அழைத்தாள். அவனுள் நீக்கமற நிறைந்த உறவு அவள், உணர்வு அவள். ஆனால், அது அந்தப் பேதைப் பெண்ணுக்குப் புரியவில்லை.

அபிநான் பேசுறது கேக்குதா? நீங்க எங்கூட பேசி நாலு நாள் ஆச்சு அபி. எப்பிடி உங்களால முடியுது அபி? உங்க அஞ்சலி கூட பேசாம எப்பிடி அபி உங்களால இருக்க முடியுது?” தன் அருகாமையை அவனுக்கு உணர்த்த முடிந்த மட்டும் முயற்சி செய்தாள்.

அபிஎனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. உங்களை என்னால இப்பிடி பாக்க முடியலை. ப்ளீஸ், என்னைப் பாருங்க அபி. உங்க அஞ்சலியைப் பாருங்க அபி.” அவளையும் அறியாமல் அவர் குரல் தழுதழுத்தது.

இதுக்கு மேல என்னால முடியலை அபி. ரொம்ப வேதனையா இருக்கு. அந்த ஆக்சிடென்ட்ல நான் போய் சேந்திருக்கப்படாதான்னு தோனுது அபி. உங்களை இந்தக் கோலத்துல பாக்கிறதை விட அது எவ்வளவோ மேல்ன்னு தோனுது அபி.” கண்ணீர்க் குரலில் பேசியபடியே இருந்தாள் கீதாஞ்சலி. அவனிடத்தில் எந்த அசைவும் தோன்றவில்லை.

என்னைப் பாருங்க அபி. ஒரே ஒரு தரம் என்னைப் பாத்து அஞ்சலின்னு கூப்பிடுங்க அபி, எனக்கு அது போதும். அபிஅபி…” அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் விழிகளில் பட்டுத் தெறித்தது. இமைகள் மூடி இருந்தாலும், மூடிய விழிகளுக்குள் அசைவை உணர்ந்தாள் அஞ்சலி. பரபரப்புடன் மீண்டும் அவனை அழைத்தாள்.

அபிநான் பேசுறது கேக்குதா அபிஎன்னைப் பாருங்க அபி. அபிஅபி…” அந்தக் குரலில் லேசாகக் கண் திறந்தான் அபிமன்யு. கீதாஞ்சலி சந்தோஷத்தின் உச்சிக்குப் போனாள்.

அபிஇங்கப் பாருங்கஎன்னைப் பாருங்க அபிஎன்னைத் தெரியுதா அபிஅஞ்சலிஅஞ்சலி வந்திருக்கேன் அபி…” அனைத்தையும் மறந்து ஓவென்று அழுதாள் கீதாஞ்சலி. அவள் கண்களைப் பார்த்த மாத்திரத்தில் அவன் கண்களும் லேசாகக் கலங்கியது

இல்லையில்லை, நீங்க கண் கலங்கக் கூடாது. நான்எனக்குசந்தோஷம் தாங்கலை, அதான்…” என்ன பேசுகிறோம் என்று புரியாமல் குழம்பினாள் பெண். அவன் முகம் முழுவதும் ஒற்றைக் கையால் வருடிக் கொடுத்தாள். இப்போது அவன் விழிகள் நன்றாகத் திறந்து அவள் இடது கையை நோக்கியது.

அது ஒன்னுமில்லை அபி. லேசான ஃப்ராக்ஷ்ர் தான். வலி கூட இல்லவே இல்லை. அசைக்கக் கூடாதுன்னு சும்மா போட்டு விட்டிருக்காங்க.” சிரிப்போடு அவள் சொன்ன விதத்திலேயே புரிந்தது அது பொய்யென்று.

தாடை எலும்பு முறிந்திருந்ததால் அபியால் பேச முடியவில்லை. ஆனால் அவன் விழிகள் மட்டும் அவள் முகத்தையே மொய்த்திருந்தது. இமைக்காமல் அவளைப் பார்த்தபடியே இருந்தான்.

 

error: Content is protected !!