MM5

MM5

மயங்காதே மனமே 5

எந்தப் பரபரப்பும் இல்லாமல் அந்தக் காலைப் பொழுதை அனுபவித்தபடி ரெடியாகிக் கொண்டிருந்தான் அபிமன்யு. இன்று அதிகம் வேலைகள் இல்லாததால் நிதானமாகப் புறப்பட முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அந்த அழகான விடியலை உள்வாங்கிக் கொண்டான்.

ஃபோனின் மெல்லிய ஒலி கவனத்தைக் கலைக்க, ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்று கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். பெட்டில் கிடந்த ஃபோன் ஈஷ்வரன் என்றது

எதுக்கு இந்த நேரத்துல ஈஷ்வர் கூப்பிடுறார்?’ யோசித்த படியே அழைப்பை ஏற்றான்.

குட் மார்னிங் ஈஷ்வர். சொல்லுங்க, என்ன காலங்காத்தால கூப்பிடுறீங்க?”

குட் மார்னிங் அபி. இன்னைக்கு செட்யூல் எப்பிடி? ரொம்ப டைட்டா?”

மார்னிங் கொஞ்சம் ஃப்ரீதான். சொல்லுங்க, என்ன விஷயம்.”

நானும், என் ஜூனியரும் ஒரு வேலையா வந்திருக்கோம். அவங்களுக்கு கன்ஸ்ட்ரக்ஷ்ன் பத்தி ஏதோ தெரிஞ்சுக்கனுமாம். புதுசா வீடு கட்டப் போறாங்க போல.”

ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வாங்களேன் ஈஷ்வர்.”

இல்லை அபி, அங்கெல்லாம் வந்தா லேட் ஆகிடும். ஜஸ்ட் ஒரு ஹாஃப் அன் அவர், எனக்காகலிபர்ட்டி ப்ளாஸாவாங்களேன், ப்ளீஸ்.”

நோ ப்ராப்ளம், ஆன் வே தான். வந்திர்றேன். ஒரு ஒன்பது மணிக்கு வந்தா கே வா?”

டபுள் கே. பை.” சொல்லிவிட்டு ஃபோனை டிஸ்கனெக்ட் பண்ணி விட்டார் ஈஷ்வரன். அபிக்கு அவரது செய்கை கொஞ்சம் வினோதமாக இருந்தாலும், இதுவரை இப்படி எந்த உதவியும் கேட்காத மனுஷன் இப்போது கேட்க, கொஞ்சம் விரைவாகவே புறப்பட்டான்.

அதே நேரம்

அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்த கீதாஞ்சலியைக் கலைத்தது அவள் ஃபோன்.

ம்ப்ச்…” எரிச்சற்ப் பட்டவள் ஃபோனைப் பார்க்க, மிஸஸ். ஜான்ஸன் என்றது.

இந்தம்மா எதுக்கு காலங்காத்தால என் உயிரை வாங்குது?’ மனதில் எரிச்சல் இருந்தாலும், அது குரலில் தெரியா வண்ணம் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்.

குட் மார்னிங் மேடம்.” குரல் இனிமையாகவே வந்தது.

குட் மார்னிங் மை சைல்ட். கான் யூ டூ மீ ஃபேவர்?”

ஷ்யூர் மேடம். என்னன்னு சொல்லுங்க.” முகம் அஷ்ட கோணலாக, தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

லாஸ்ட் வீக் நாம போன பிஸ்கட் ஃபாக்டரியோட ஓனர் கால் பண்ணினார் கீதாஞ்சலி.”

என்னாச்சு மேடம்? ஏதாவது ப்ராப்ளமா?” கொஞ்சம் கலவரமாகிப் போனாள். குரலில் இப்போது பதற்றம் தொற்றிக் கொண்டது.

நோ நோ. அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை. இந்த இயர் நாம நடத்துறகிறிஸ்ட்மஸ் ப்ளேக்கு அவங்க ஸ்பான்ஸர் பண்ண ரெடியா இருக்கிறதா சொல்லுறாங்க.” நிறுத்தி நிதானமாகச் சொன்னார் மிஸஸ். ஜான்ஸன். அவர் குரலில் அத்தனை மகிழ்ச்சி இருந்தது.

வாவ்! வன்டர்ஃபுள் நியூஸ் மேடம். அப்போ இந்த வருஷம் அந்த அலைச்சல் நமக்கு இல்லை, அப்படித்தானே மேடம்?” இப்போது அவள் குரலிலும் ஒரு துள்ளல் வந்திருந்தது. ஒவ்வொரு வருடமும் ஸ்பான்ஸருக்காக அவர்கள் அலைவது அவளும் அறிந்த விடயம் தானே.

யெஸ் மை சைல்ட். அது சம்பந்தமா பேச இன்னைக்கு பத்து மணிக்கு வரச்சொல்லி இருக்காங்க. அந்த மீட்டிங்கை முடிச்சிட்டு நீங்க நர்சரிக்கு வந்தா போதும் கீதாஞ்சலி.”

…! நான்தான் போகப் போறேனா மேடம்?”

யெஸ் கீதாஞ்சலி. உங்க கன்ட்ரோல்ல அந்த இவன்ட் நடக்குறதால நீங்க போனாத்தான் பெட்டரா இருக்கும். போறதுக்கு முன்னாடி ரஃப்பா ஒரு பட்ஜெட் ப்ளான் பண்ணிக்கோங்க.” 

கே மேடம்.” 

குட் லக் மை சைல்ட்.”

தாங்க் யூ மேடம்.” அவள் மனம் கணக்கு வழக்கில் இறங்கியது.

அவர்களது நர்சரியில்மல்டி கல்சரல் இவன்ட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழமை. குழந்தைகளுக்கு மற்றைய கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள இது போன்ற நிகழ்வுகள் பெரிதும் உதவின.

தீபாவளி, ஈத், கிறிஸ்ட்மஸ் மிகவும் விசேஷம். அதிலும் புது வருடக் கொண்டாட்டமும் சேர்ந்து வருவதால் கிறிஸ்ட்மஸ் இன்னும் விசேஷமாக இருக்கும்

ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பில் நடப்பது வழக்கம். கிறிஸ்ட்மஸ் கீதாஞ்சலியின் தலைமையில் நடப்பதை தீர விசாரித்த பின்பே, மித்ரன் விவரமாகக் காய் நகர்த்தி இருந்தான்.

ரூமை விட்டு வெளியே வந்த கீதாஞ்சலி நேராக ஆதித்தனின் ரூமிற்குச் சென்றாள். விசிலடித்தபடி தலைக்கு ஜெல் தடவிக் கொண்டிருந்தான் பையன்.

ஆதி, இன்னைக்கு மத்தியானத்துக்கு அப்புறமாத் தான் காலேஜ் போறதா சொன்னேயில்லை?”

யெஸ் சிஸ், இப்போ என்ன அதுக்கு?”

எனக்கு ஒரு இடத்துக்குப் போகணும், கூட்டிட்டு போறியா? ப்ளீஸ்.” சொன்ன அக்காவைத் திரும்பிப் பார்த்தான் ஆதி. சில கணங்கள் யோசித்தவன்,

என்னோட ட்ரெஸ் கொஞ்சம் இருக்கு. நீ வாஷ் பண்ணி குடுப்பேன்னா நான் கூட்டிட்டு போறேன்.” அழகாக பேரம் பேசினான்.

சனிக்கிழமை வாஷ் பண்ணிக் குடுக்குறேன். இந்த வீக் ஃபுல்லா நான் பிஸி ஆதி.”

நோ ப்ராப்ளம் சிஸ். சாட்டர்டே ஃபைன்.” சொல்லியபடியே ரூமை விட்டு வெளியேறப் போனவனைத் தடுத்தது கீதாஞ்சலியின் குரல்.

ஆதி…”

இப்போ என்ன?” அதிகாரமாக வந்தது குரல்.

போற வழியிலே கொஞ்சம் லிபர்டி ப்ளாஸா கூட்டிக்கிட்டு போறியா? கொஞ்சம் திங்ஸ் வாங்கனும். ப்ளீஸ்…” முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் கெஞ்சவும், தம்பிக்கு அத்தனை குதூகலமாக இருந்தது.

அப்படீன்னா வாஷ் பண்ணின ட்ரெஸ்ஸை அயர்ன் பண்ணிக் குடுக்கனும். கே வா?”

ஆதி…” சிணுங்கிய படி காலை உதைத்தாள் கீதாஞ்சலி.

முடியுமா? முடியாதா?” கறாராகக் கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்,

ம்…” என்றாள்.

குட் அக்கா.” சொல்லிவிட்டுக் கீழே போய்விட்டான் ஆதி. ‘எல்லாம் என் நேரன்டா. ஸாலரி அன்னைக்கு வருவேயில்லை, அன்னைக்கு இருக்கு சங்கதிமனதிற்குள் கறுவிக் கொண்டவள், தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கீழிறங்கிப் போனாள்.

                             ———————————————————————

அந்த black Audi பார்க் பண்ணிவிட்டு உள்ளே போனான் அபிமன்யு. வெள்ளை நிற ஷர்ட்டும், காக்கி கலர் ட்ரௌஸரும் அத்தனை எடுப்பாக இருந்தது அவனுக்கு. ‘கோஸ்டா’ வில் வெயிட் பண்ணுவதாக ஈஷ்வரன் சொல்லியிருக்கவும் நேராக அங்கேயே போனான்.

சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஈஷ்வரன் வந்திருந்தார். இதில் விசேஷம் என்னவென்றால் கூட இருந்தது ஒரு பெண். சுடிதாரில் இருந்தாள். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கே அழகாக, திருத்தமாக இருந்தது அந்த முகம். நிழற்குடைகளின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

ஹாய் மாப்பிள்ளை.”

வாங்க மச்சான்.”

ஸாரி, வந்து ரொம்ப நேரமாச்சா?”

இல்லையில்லை, இப்போதான் வந்தோம். அபி, இது லாவண்யா. என்னோட ஜூனியர். லாவண்யா, திஸ் இஸ் அபி. என்னோட மச்சான்.” ஈஷ்வரனின் அறிமுகத்தில் இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

அபி, லாவண்யா ஏதோ புதுசா வீடு கட்டப் போறாங்களாம். அதுக்குத்தான் உங்ககிட்ட ஐடியா கேக்குறாங்க. நீங்க பேசிட்டு இருங்க. நான் இதோ வந்திர்றேன்.” சொல்லிவிட்டு நகர்ந்து போனார் ஈஷ்வரன். அபிக்கு லேசாக எங்கோ உதைத்தாலும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை.

சொல்லுங்க மேடம். என்ன ஸ்டைல்ல வீடு கட்டப் போறீங்க? பட்ஜெட் என்ன? ஏதாவது ப்ளான் உங்க மனசுல இருக்கா? இது இது, இப்பிடி இப்பிடி இருக்கனும்னு…” கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனான் அபி. பேச்சும், குரலும் தொழில் சம்பந்தப்பட்டு இருந்தது.

எப்பிடி இருந்தாலும் பரவாயில்லை. நீங்க ப்ளான் காட்டுங்க. பிடிச்சிருந்தா நான் கே பண்ணுறேன்.” கொஞ்சம் தயங்கித் தயங்கிப் பேசியது பெண். ஆச்சரியமாகப் பார்த்தான் அபி.

அப்பிடியில்லை மேடம். காசு போடப்போறது நீங்க. உங்களுக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா? அதைத்தான் கேக்குறேன்.”

இல்லை, அப்பிடி எதிர்பார்ப்பெல்லாம் பெருசா ஒன்னும் இல்லை.” அந்தப் பெண்ணின் பதிலில் குழம்பிப் போனான் அபி.

எந்தக் கேள்விக்கும் அந்தப் பெண் சரியாக பதில் சொல்லவே இல்லை. பிடி கொடுக்காதது போல் தோன்றியது. ஒரு கட்டத்திற்கு மேல் அபிக்கு,

இந்தப் பெண்ணிற்கு வீடு கட்டும் எண்ணம் இருக்கிறதா? இல்லையா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது. கண்களைப் பார்த்துப் பேச மறுத்த அந்த நாணம், அவனுக்கு வேறு கதை சொல்லியது. ஒரு பத்து நிமிடங்கள் போயிருக்கும். ஈஷ்வரனுக்கு மிஸ்ட் கால் வைத்தான். அடுத்த ஐந்து செக்கன்களில் வந்து சேர்ந்தார் மனிதர்.

ஈஷ்வரன் வந்தது தான் தாமதம், அந்தப் பெண் சட்டென்று எழுந்து கொண்டாள்.

கார் வந்திருக்கும். நான் கிளம்புறேன் டாக்டர்.” என்று ஈஷ்வரனிடம் சொல்லி விட்டு, அபியைப் பார்த்து புன்னகைத்தவள் விடு விடுவென்று நடந்துவிட்டாள். போகும் அந்தப் பெண்ணையே பார்த்திருந்தான் அபி.

என்ன அபி, பிடிச்சிருக்கா?” கேட்ட ஈஷ்வரனை ஆச்சரியமாகப் பார்த்தான் அபிமன்யு. இப்போது இந்த நாடகத்தின் அர்த்தம் பிடிபட்டது அபிக்கு.

ஹாஹாஅப்பிடிப் போடுங்க அருவாளை! எப்போ இருந்து ஈஷ்வர் இந்த வேலையெல்லாம் பாக்கத் தொடங்கினீங்க?” அத்தனை கேலி இருந்தது அபியின் குரலில். லேசாக அசடு வழிந்தது ஈஷ்வர் முகத்தில்.

நான் என்ன பண்ணட்டும் அபி? எல்லாம் ரஞ்சனியோட ஏற்பாடு. மறுத்துச் சொல்ல என்னால முடியுமா?”

அதுக்காக காலங்காத்தால உங்களை ப்ரோக்கர் மாதிரி அனுப்புவாளாமா?”

ஐயையோ! இப்பவும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்காதீங்க அபி.”

என்ன மாப்பிள்ளை, இப்பிடிப் பயந்து சாகுறீங்க?”

நாளைக்கே நீங்களும் ஒரு கல்யாணத்தைப் பண்ணுவீங்க இல்லையா? அப்போ புரியும் உங்களுக்கு.” சொன்ன ஈஷ்வரனை கேலியாகப் பார்த்தான் அபி.

அதை விடுங்க அபி. பொண்ணைப் பிடிச்சிருக்கா?” அவர் குரலில் ஆர்வம் தெரிந்தது.

ஒரு பத்து நிமிஷம் தான் பேசியிருப்பேன். அதுக்குள்ளயே மண்டை காஞ்சிருச்சு. வாழ்நாள் முழுக்க எப்பிடி ஈஷ்வர்?”

…! ‘ஆர் எஸ் டெக்ஸ்டைல்ஸ்ஓனரோட ஒரே பொண்ணு. ரொம்ப நாளாவே கேட்டுட்டு இருக்காங்க. அதான் ரஞ்சனி சட்டுப் புட்டுன்னு காரியத்துல இறங்கிட்டா.”

ம்…”

பொண்ணு கொஞ்சம் மூடி டைப்பா இருக்கேன்னு ரஞ்சனிகிட்ட சொன்னேன். அதுக்கு, பொண்ணு உங்களுக்குப் பாக்கலை, எங்கண்ணனுக்கு பாக்குறேன்னு சொல்லுறா அபி.” பாவமாகச் சொன்னார் ஈஷ்வரன்.

ஹாஹாஅப்பிடியா சொன்னா?” கல கலவென வாய்விட்டுச் சிரித்த அபிமன்யுவை கலைத்தது அந்தக் குரல்.

ஹலோ டாக்டர் ஸார்.” அந்தக் குதூகலக் குரலில் திரும்பிப் பார்த்தார் ஈஷ்வரன்.

அடடே! மிஸ் கீதாஞ்சலி. என்ன இந்தப் பக்கம்? ஷாப்பிங்கா?” 

யெஸ் டாக்டர். சின்னதா ஒரு ஷாப்பிங்.” அதரங்கள் மட்டுமல்லாது கண்களும் சிரித்தன.

ஆஹா! சின்ன ஷாப்பிங்கா? அதுவும் லேடீஸ், நீங்களா?”

ஐயையோ! டாக்டர் ரொம்பவே நொந்து போயிருப்பீங்க போல இருக்கே. மேடம் கிட்ட போட்டுக் குடுக்கவா?” கிளுக்கிச் சிரித்தாள் கீதாஞ்சலி.

ஏம்மா? ஏம்மா குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணுறீங்க?” அபி என்றொருவன் அங்கு இருப்பதை மறந்து இரண்டு பேரும் அளவளாவிக் கொண்டார்கள்.

திஸ் இஸ் அபி, மேடமோட அண்ணா.” அறிமுகப் படுத்தி வைத்தார் ஈஷ்வரன்.

தெரியும் டாக்டர், பாத்திருக்கேன்.” அபியை வட்டமிட்ட அந்தக் கண்களில் குறும்பிருந்தது. அந்தக் குறும்பு அபியை கொஞ்சம் சீண்டிவிட்டது.

மிஸ் ஃப்ரீயா இருக்கும் போது ரொம்ப பேப்பர் படிப்பாங்க மாப்பிள்ளை.” அபியின் அந்தப் பேச்சில் ஈஷ்வர் கொஞ்சம் ஆடிப் போனார். இதற்கு என்ன பதில் சொல்வது?

கண்ணால காணுறது எல்லாம் மெய்யுன்னு நம்புற அளவுக்கு இங்க யாரும் முட்டாள் இல்லை டாக்டர்.” பதில் ஈஷ்வருக்காக இருந்தாலும், அந்தக் கெண்டை விழிகள் இரண்டும் அபியிடமே இருந்தது. அந்தப் பதிலில் அபியின் கண்களில் ஒரு மின்னல் வந்து போனதோ? அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை ஒன்று வந்து அமர்ந்து கொண்டது. அந்தப் புன்னகையில் ஈஷ்வரனே மயங்கிப் போனார்.

நேரடியாக இரண்டு பேரும் பேசிக் கொள்ளாமல், தன்னை வைத்து ஆடும் நாடகம் ஈஷ்வரனுக்கு நல்ல சுவாரஸ்யமாக இருந்தது. பேப்பர் மேட்டர் வரை இருவரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டார்.

உக்காருங்க கீதா. காஃபி ஆர்டர் பண்ணட்டுமா?”

இல்லை டாக்டர், இங்க பக்கத்துல இருக்கிற பிஸ்கட் ஃபாக்டரிக்கு ஒரு சின்ன வேலை விஷயமா போகணும். அதுக்கு முன்னாடி ஷாப்பிங்கை முடிக்கலாம்னு வந்தேன். தம்பி வர்ற வரைக்கும் தான் வெயிட் பண்ணுறேன்.” சொன்னவள் ஃபோனை உயிர்ப்பித்து நேரத்தைப் பார்த்துக் கொண்டாள்.

பரவாயில்லை, தம்பி வர்ற வரைக்கும் இங்க உக்காருங்க கீதா.” சொன்ன ஈஷ்வரனை நன்றியாகப் பார்த்தவள், அருகிலிருந்த பென்ச்சில் உட்கார்ந்தாள்.

பக்கத்துல இருக்கிற பிஸ்கட் ஃபாக்டரின்னா…” அபி லேசாக இழுக்கவும், அவசரமாகப் பதில் சொன்னாள் கீதாஞ்சலி.

மிஸ்டர். மித்ரன் அதோட ஓனர்னு சொன்னாங்க.” அந்தப் பதிலில் ஈஷ்வரை கூர்மையாகப் பார்த்தான் அபிமன்யு.

மித்ரன்னா…” சந்தேகமாகப் பதில் பார்வை பார்த்த ஈஷ்வரைப் பார்த்து தலை அசைத்தான் அபி.

ம்ராஜேந்திரன் பையன்தான் மாப்பிள்ளை.”

எதுக்கும்மா நீங்க அங்க போறீங்க?”

நர்சரி விஷயமா மிஸஸ். ஜான்ஸன் தான் அங்க போகச் சொன்னாங்க டாக்டர். ஏன், ஏதாவது பிரச்சனையா டாக்டர்?”

அப்பிடி இல்லைம்மா. அந்தப் பையனைப் பத்தி அவ்வளவுநல்லதா…” எப்படிச் சொல்வது என்று திணறினார் ஈஷ்வரன்.

எதுக்கு ஈஷ்வர் மென்னு முழுங்குறீங்க. அவனுக்கு ஒரு காரியம் ஆகனும்னா எந்த எல்லைக்கும் போவான்னு பட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே.” ஈஷ்வரன் சொல்லத் தயங்கியதைப் பட்டென்று சொன்னான் அபி.

எந்த எல்லைக்கும்னா?” முதல் முறையாக அவன் கண்களை நேராகப் பார்த்துக் கேட்டாள் பெண்.

முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணை அனுப்பி யார் மேலேயாவது மோத வைப்பான். அதையே ஒளிஞ்சு நின்னு ஃபோட்டோ எடுத்து பேப்பர்ல போடுவான். இந்த விளக்கம் போதுமா?” ஆத்திரமா? கேலியா? எதுவென்று புரியாத குரலில் சொல்லி முடித்தான் அபி.

…” அபியை இப்போது அவள் பார்த்த பார்வையில் கொஞ்சம் கலக்கம் இருந்தது. ஆனால் அது உண்மைதானா? என்று நினைக்கும்படி அடுத்த நொடி அவள் முகத்தில் மீண்டும் அந்தக் குறும்பு வந்து உட்கார்ந்து கொண்டது

அதனாலென்ன டாக்டர். நம்மைச் சுத்தி நாலு நல்ல மனுஷங்க இருக்கும் போது எந்த ஃபோட்டோவும் நம்மளை ஒன்னும் பண்ணாது.” புன்னகையோடு சொன்னவளை இப்போது குறும்பாகப் பார்த்தான் அபி. அவளின் அந்தத் தைரியம் அவனுக்குப் பிடித்திருந்தது. ஃபோன் சத்தம் அவளைக் கலைக்க எடுத்துப் பார்த்தவள்,

தம்பி வந்துட்டான். நான் கிளம்புறேன் டாக்டர்.” என்று ஈஷ்வரனிடம் சொல்லிக் கொண்டவள், அபியை லேசாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள். போகும் பெண்ணையே தொடர்ந்தது அபியின் கண்கள்.

என்ன நடக்குது மச்சான் இங்கே? ரெண்டு பேரும் பேசாமலேயே பேசிக்குறீங்க, பாக்காமலேயே பாத்துக்கிறீங்க.” ஈஷ்வரனின் கேலியில் லேசாகப் புன்னகைத்தான் அபிமன்யு.

அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை மாப்பிள்ளை.”

ஒன்னுமில்லைன்னு வாய்தானே சொல்லுது. கண்ணு ரெண்டும் பொண்ணு பின்னால இல்லை போகுது. என்ன மச்சான்? டாக்டர் வேணாம்னா, டீச்சர் கே வா?”

ஐயையோ! மாப்பிள்ளை, நீங்க வேறே. ரஞ்சனிக்குத் தெரிஞ்சுது, அப்புறம் நர்சரிக்குப் பக்கத்துல இருக்கிற கோஸ்டாவுல உங்களை உக்கார வெச்சிருவா. ஜாக்கிரதை.”

ஆமாம் மச்சான். பண்ணினாலும் பண்ணுவா.” இரண்டு பேரும் கேலியாகப் பேசிச் சிரித்துக் கொண்டாலும், அவர்கள் இருவரது மனதும் கீதாஞ்சலியையே நினைத்துக் கொண்டது

இந்தப் பெண் அபிக்கு வெகு பொருத்தமாக இருப்பாள் என்று ஈஷ்வரன் நினைக்க, இந்தப் பெண் தன்னோடு பொருந்தி வருவாளா என்று கவலைப்பட்டது அபியின் மனது.

                                     ——————————————————————-

ஸ்கை ப்ளூ ஷர்ட்டும், நேவி ப்ளூ ட்ரௌஸருமாக வந்திருந்தான் மித்ரன். அன்றைக்குப் போல் இன்றைக்கும் தனக்கு முன்பாகவே வந்து உட்கார்ந்திருக்கும் முதலாளியை வாய் பிளந்து பார்த்தான் கதிர். ஆனால் அதை உணரும் மனநிலையில் அவன் இல்லை. இவனைக் கண்ட மாத்திரத்தில்,

கதிர், வா வா. உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.” என்று சொன்ன முதலாளியை இமைக்க மறந்து பார்த்தான் கதிர்.

எதுக்கு சார் என்னை எதிர்பாத்துட்டு இருக்கீங்க?” அவன் கேள்வியை கணக்கிலே கொள்ளாதவன், எழுந்து வந்து அவன் முன் படு ஸ்டைலாக நின்றான்.

கதிர், இன்னைக்கு நான் எப்பிடி இருக்கேன். உண்மையா பதில் சொல்லணும்.” இப்படிக் கேட்ட முதலாளியை, ஏதோ பேயைப் பார்ப்பது போல பார்த்தான் கதிர்.

என்ன ஆனது இன்றைக்கு இவனுக்கு?’ மனதில் நினைத்தை வெளியில் சொல்ல முடியாமல், மித்ரனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான்

பார்த்துப் பார்த்து, கவனமெடுத்து அவன் உடுத்தியிருப்பது பார்த்தாலே தெரிந்தது. விஷயம் என்னவென்று புரியாமலேயே உண்மையைச் சொன்னான்.

ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க சார்.”

நிஜமாத்தான் சொல்லுறியா?”

நான் என்னைக்கு சார் பொய் சொல்லி இருக்கேன்? பாக்க சும்மா ஜம்முன்னு ராஜா மாதிரி இருக்கீங்க.” சொன்னவனை வந்து இறுகத் தழுவிக் கொண்டான்

என்ன விசேஷம் சார்?”

இன்னைக்கு ஒரு கெஸ்ட் வர்றாங்க கதிர்.”

கெஸ்ட்டா? அது யாரு சார்? எனக்குத் தெரியாம உங்களைப் பாக்க வர்றது?” கதிரின் கேள்வியில் மர்மமாகப் புன்னகைத்தான் மித்ரன்.

அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடுமே.” சொல்லியபடியே வேலையைத் தொடர்ந்தான் மித்ரன்

கதிருக்கு எல்லாமே புதிராக இருந்தது. இந்த ஒரு வருடப் பழக்கத்தில் மித்திரன் இத்தனை கரிசனமாக உடுத்தி, மகிழ்ந்து என்று கதிர் பார்த்ததில்லை. வேலை நேர்த்தியாக இருந்தாலும், எல்லாவற்றிலும் ஒரு அலட்சிய பாவம் இருக்கும். இன்று யார் வரவிற்காக இத்தனை முன்னேற்பாடுகள். யோசித்தபடியே கதிரும் வேலையில் மூழ்கிப் போனான்.

சரியாகப் பத்து மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது மித்ரனிடமிருந்து கதிருக்கு அழைப்பு வந்தது. மானேஜருடன் பேசிக் கொண்டிருந்தவன் அவசரமாக எம் டி யின் அறைக்குள் நுழைந்தான்.

சொல்லுங்க சார்.” தனக்கு முன் பவ்வியமாக நின்ற கதிருக்கு பதில் சொல்லாமல், தனது சிஸ்டத்தின் ஸ்கிரீனை அவன் பக்கமாகத் திருப்பிக் காட்டினான் மித்ரன்

விசிட்டர்ஸ் அறையின் சி சி டி வி மித்ரனின் சிஸ்டத்துக்கு கனெக்ட் பண்ணப் பட்டிருந்தது. ஆனால் அங்கு இருப்பது யார்? கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தான் கதிர். சந்தேகமேயில்லை, அது சாஷ்டாத் கீதாஞ்சலியே தான். கூடவே ஒரு பையனும் இருந்தான். அவள் தம்பி போலும்.

தெறித்த கண்களோடு மித்ரனைத் திரும்பிப் பார்த்தான் கதிர். இதை இத்தனை சீக்கிரத்தில் அவன் எதிர் பார்க்கவில்லை. மித்ரன் எப்போதும் தன் இலக்கை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று தெரிந்திருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக பேசிப் பார்க்கலாம் என்று நினைத்திருந்த அவன் நினைப்புகள் அத்தனையும் தவிடு பொடியானது. தன் குடும்பத்தைப் போல இன்னொரு குடும்பமும் சீரழியக் கூடாது என்று அவன் நினைத்த நினைப்பு, வீணாகிப் போகுமோ என்று அப்போது வருத்தப்பட்டான்.

தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி கெத்தாக, ‘எப்படி?’ என்று கேட்டான் மித்ரன். கதிர் சட்டென்று எந்த பதிலும் சொல்லவில்லை. தான் பேசும் பேச்சுக்கள், தன் முதலாளியை சீண்டிவிட வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் முதலில் தன்னை நிதானப் படுத்திக் கொண்டான். அந்தப் பெண்ணை இந்தச் சிக்கலில் இருந்து விடுவிப்பது தான் இப்போது முக்கியம்.

சார், தீயா வேலை செஞ்சிருக்கீங்க போல இருக்கு?” கேள்வியில் கேலி கலக்காமல் கவனமாகப் பேசினான். வெற்றிப் புன்னகை ஒன்று மட்டுமே பதிலாகக் கிடைத்தது கதிருக்கு. இந்தப் பெண்ணைப் பார்த்தால் இவன் இழுக்கும் இழுப்பிற்கெல்லாம் ஆடுபவள் போல் தெரியவில்லை. நம்பிக்கையை விட்டு விடாமல் வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கோர்த்தான்

அவங்க என்ன நோக்கத்துல வந்திருக்காங்கன்னு இப்போவும் எனக்குத் தெரியாது சார். எதுவா இருந்தாலும், அது நல்ல நோக்கமா இருக்கனும்னு நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்.” கதிர் சொல்லவும் வாய்விட்டுச் சிரித்தான் மித்ரன். அந்தச் சிரிப்பு அத்தனை நல்லதாகத் தோன்றவில்லை கதிருக்கு.

 

 

error: Content is protected !!