MMV 16

MMV 16

அத்தியாயம் – 16

கிழக்கு வானம் செவ்வானமாக மாறுவதை ஜன்னலோரம் நின்று ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.

விடியும் முன்னரே வேலைகளை முடித்துவிட்ட பின்னரும் மனதில் ஏதோவொரு பரபரப்பு. இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்டது..

‘இதுவரை எதிர்பார்க்காகாத ஒரு விஷயம் நிகழ போவதாக அவளின் மனம் உரைக்க அதை ஒதுக்கிவிட்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்திய நிலா குளிப்பதற்கு அவளின் அறைக்கு சென்றாள்.

சுமிம்மா குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்று தயாராக, “சீக்கிரம் சுமிம்மா.. பிரவீன் ரெடி ஆகிட்டான் இல்ல..” என்று கேட்கும் பொழுதே காலின்பேல் சத்தம் கேட்டது.

அவள் இன்னும் குளிக்காமல் இருக்கவே, “நீ போய் குளி நிலா. நான் போய் பார்க்கிறேன்..” என்று வாசலுக்கு விரைந்தார் சுமிம்மா. அவள் மணியைப் பார்த்துவிட்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.

அவர் சென்று கதவை திறக்க அஜய், ரேணு, திவாகர், ரித்து அவரின் தாத்தா எல்லோரும் வந்திருக்க, “வாங்க..” அவர்களை வரவேற்றார் சுமிம்மா.

“சுமிம்மா இன்னும் அண்ணா எழுந்திரிக்கல இல்ல..” அஜய் சந்தேகமாக இழுக்கவே,

“இன்னும் இல்ல..” என்ற சுமிம்மா அவர்களை ஹாலில் அமரவைத்தார்.

அவர் காபி கொண்டுவர கிச்சனுக்கு செல்லவே, “இந்த நிலா சஸ்பென்ஸாக அனைத்தையும் முடித்துவிட்டால் போல..” என்று புன்னகைத்தாள் ரேணு.

“நிலா பார்க்கத்தான் அமைதி. ஆனால் வேலையில் படுசுட்டிப்பெண்..” என்று ரேணுவின் தாத்தா சொல்லிக் கொண்டிருக்க,

“எல்லோரும் அதற்குள் வந்தாச்சா..” என்ற கேள்வியுடன் மாடியிலிருந்து இறங்கி வந்தான் பிரவீன்.

அவனை பார்த்து புன்னகைத்த திவாகர், “ஐயோ சீக்கிரம் வந்தது ஒரு குத்தமா?” என்று கேட்க, “அதெல்லாம் இல்லாடா..” என்று சமாளித்தான் அவன்.

அதன்பிறகு ஆண்கள் நால்வரும் அமைந்து கதை பேச தொடங்கவே, ரேணுவும், ரித்துவும் நிலாவைத் தேடி அவளின் அறைக்கு சென்றனர்.

இருவரும் அறைக்குள் நுழைய கண்ணாடி முன்னாடி தேவதை போல நின்றிருந்தாள் நிலா.

இளம்பச்சை நிறத்தில் சேலை கட்டி, கூந்தலை தளர பின்னி மல்லிகை பூச்சூடி, கண்ணுக்கு மையிட்டு பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தாள்.

“வாவ் நிலா செம கியூட்..” என்று ரேணு அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் பதிக்க,

“என்னக்கா இப்படியெல்லாம் பண்றீங்க..” என்று கூச்சத்துடன் விலகினாள் நிலா.

அவளை பார்த்த பிரம்மித்து நின்ற ரித்து, “உன்னைக் கட்டிக்க போறவன் ரொம்ப கொடுத்து வெச்சவன்..” என்று சொல்ல நிலாவின் முகம் நொடிபொழுதில் மாறியது.

பிறகு தன்னை நிகழ்காலத்திற்கு மீட்டெடுத்தவள், “சரி வாங்க நம்ம போலாம்..” என்று அவர்கள் மூவரும் வெளியே வந்தனர். காலையில் எப்பொழுதும் போல எழுந்த பாரதி தயாராகி கீழே வந்தான்.

“என்ன எல்லோரும் சேர்ந்து எங்கோ வெளியே போற மாதிரி இருக்கு..” என்ற கேள்வியுடன் மாடிப்படிகளில் வேகமாக இறங்கி வந்தான் பாரதி. சுமிம்மா அவர்களுக்கு காபி போட்டு எடுத்து வந்தார்.

“ஆமா மகேஷ் பாபு பட சூட்டிங் நடக்கிறதாம் அதை பார்க்க கிளம்பிடோம்..” என்று நக்கலாக பதில் கொடுத்தான் பிரவீன்.

மற்றவர்கள் புன்னகையுடன் அமர்ந்திருக்க, “இன்னும் என்ன பேச்சு வாங்க கேக் வெட்டலாம்..” அவர்களை அழைக்க வந்த நிலாவைப் பார்த்ததும் அவனின் இதயத்துடிப்பு எகிறியது.

சேலையில் சோலை பெண்ணொருத்தி கண்முன்னே வந்து நின்றிருக்க அவன் உலகத்தையே மறந்தவண்ணம் அவளையே இமைக்காமல் பார்த்தான். இத்தனை நாள் இல்லாமல் இன்று அவளின் அழகு அவனை கவர்ந்து இழுக்கவே தன்னை கட்டுபடுத்திக்கொள்ள பெரும்பாடுபட்டான்.

“ஹலோ அண்ணா என்ன கண்ணைத் திறந்துட்டே தூங்கற.. உனக்காக விடிய விடிய வேலை செய்த நிலாவிற்கே தூக்கம் வரல..” என்றவனின் குரல் அவனை நிஜத்திற்கு அழைத்து வந்தது.

“என்னடா சொல்ற..” என்றவன் கேட்கும் முன்னே அவனின் முன்னாடி டேபிளில் எல்லாம் ரெடியாக இருக்க,

“வாண்ணா வந்து கேக் கட் பண்ணு..” என்றான் பிரவீன் புன்னகையுடன்.
அவனுக்காகவே எல்லாம் பார்த்து பார்த்து செய்த நிலா அவனுடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசிப்பதை கண்டு அவளின் முகமும் மலர்ந்தது.

இந்த வீட்டிற்கு அவள் வந்து மூன்று வருடத்தில் அவன் சொன்ன சொல்லி இன்றுவரை கடைபிடிக்கிறான்.

தன்னுடைய படிப்பிற்கு அவனும் ஒரு காரணம் என்று அவள் முழுவதுமாக நம்பினாள்.

என்னவோ அவனுக்கு என்று செய்யும் விஷயத்தில் முழு ஈடுபாடுடன் செய்துவிட்டு ஒதுங்கி நின்று அவனை ரசித்தாள். அவளின் மனதில் ஒரு நிம்மதி பரவுவரை மனதார உணர்ந்தாள்.

மற்றவர்கள் அவனை சுற்றி நின்றிருக்க, “பாரதி உன்னோட பிறந்தநாளையே மறந்துட்ட போல.

இந்த வீட்டில் பெரியவங்க இல்லாததால் தானே நீ பிறந்தநாளையே மறந்துவிட்டாயா?” என்று புன்னகையுடன் கேட்டபிறகு தான் அவனுக்கே அவனின் பிறந்தநாள் ஞாபகம் வந்தது.

அவனின் அம்மா இருந்த பொழுது அவன் கொண்டாடிய பிறந்தநாள் அதன் பிறகு இன்றுதான் கொண்டாடுகிறான்.

யாரிடமும் அவன் பிறந்தநாள் பற்றி இதுவரை சொன்னதில்லை. சுமிம்மா வீட்டிற்கு வந்த பிறகும் கூட அவர் பலமுறை கேட்டும் அவன் சொல்லவில்லை.

‘என்னோட பிறந்தநாள் இவர்களுக்கு எப்படி தெரிந்தது?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது. ஒரு முறை விளையாட்டின் பொழுது அவளிடம் சொன்ன நினைவு வர அவளின் மீது அவனின் பார்வை படிந்தது.

அவள் புன்னகைக்க அவளின் புன்னகையில் சிலநொடி தன்னுடைய தாயின் பிம்பம் கண்டு திகைப்பில் ஆழ்ந்த பாரதி, ‘இனிமேலும் தள்ளிபோட கூடாது..

இன்றே அவளிடம் தன்னுடைய மனதை வெளிபடுத்த வேண்டும்..” என்று முடிவு செய்தான்..

அதன்பிறகு அவன் கேக் கட் பண்ணி தம்பிக்கு ஊட்டினான். மற்றவர்கள் அவனுக்கு பரிசு கொடுக்க நிலா மட்டும், “நான் எதுவும் வாங்கல பாரதி ஸாரி..” என்றவளின் விழிகள் எதையோ சொல்ல துடிப்பதை உணர்ந்தான்.

மற்றவர்கள் முன்னிலையில் அவளிடம் கேட்கவும் அவனின் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் அவளை அப்பொழுது விட்டுவிட்டான். அதன்பிறகு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தோட்டத்தில் உட்கார்ந்து பேசிகொண்டிருந்தனர்.

அப்பொழுது மற்றவர்களுக்கு ஜூஸ் எடுக்க நிலா மட்டும் வீட்டிற்குள் நுழைய பாரதி செல்லடிக்க, “ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன்..” என்று அவர்களைவிட்டு நகர்ந்துவிட்டான்.

தன்னுடைய அறையில் எதையோ எடுக்க சென்றவன் மீண்டும் கீழே வரும் பொழுதுதான் நிலா தனியாக இருப்பதை கவனித்துவிட்டு, ‘ஓஹோ மேடம் தனியாக இருக்காங்களா..’ என்றவன் அவளை வம்பிழுக்க அவளின் அருகில் சென்றான்.

“ஹலோ மேடம் என்ன பண்றீங்க..” என்று அவன் கேட்க, “எல்லோருக்கும் ஜூஸ் போட்டுட்டு இருக்கேன்..” என்றாள் நிலா புன்னகையுடன்.

“ம்ம் சரி என்னோட கிப்ட் எங்கே..” என்று அவளை வம்பிற்கு இழுக்க, “நான் கிப்ட் வாங்கி வெச்சது உங்களுக்கு தெரியுமா? இருங்க நான் போய் எடுத்துட்டு வரேன்..” என்று அவளின் அறைக்கு வேகமாக சென்றாள். அவளின் நடையில் துள்ளலை கண்டு அவனின் மனமும் துள்ளியது.

அவனுக்கு வாங்கிய கிப்ட் எடுத்துகொண்டு ஹாலுக்கு வந்த நிலா, “பாரதி இங்கே வாங்க..” என்று அழைக்கவே,

“என்ன கிப்ட் வாங்கினீங்க மேடம்..” என்று அவளின் அருகில் சென்றான்.

“இந்த கிப்ட்ஸ் உங்களுக்காக..”என்று இரண்டு பார்சலை அவனிடம் கொடுத்தாள். இரண்டுமே ரொம்ப சின்னதாக இருக்க அவனும் யோசனையுடன் கிப்ட்சை பிரிக்க அதில் ஹீரோ பேனா இருக்கவே,

“இது என்ன நிலா..” என்று கேள்வியாக புருவம் உயர்த்தி அவளிடம் கேட்டான்.

அவனின் பார்வையை புரிந்துகொண்டு நிலா, “இது நீங்க எனக்காக வாங்கி கொடுத்த பேனா இல்ல. அந்த பேனாவின் நான் எக்ஸாம் எழுதி முதல் பரிசு வாங்கிய பேனா உங்களுக்கு கொடுக்கணும் என்று தோனுச்சு..” என்று விளக்கம் கொடுக்க அவனின் முகம் மலர்ந்தது.
அடுத்த கிப்ட் பார்சலை பிரிக்க அதில் தங்கத்தில் ஒரு மோதிரம் இருக்கவே அதன் நடுவே ஹார்ட்டில்‘b’ என்ற எழுத்து இருக்கவே, “ரிங் எனக்காக வாங்கியதா நிலா..” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.

“ம்ம் என்னோட முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ரிங் இது.. உங்களுக்கு இந்த டிசைன் படிச்சிருக்கா..” என்று ஆர்வத்துடன் முகமலர அவள் வினாவ,

“ரொம்ப பிடிச்சிருக்கு நிலா..” என்றான் பாரதி புன்னகைத்தவன் “நிலா..” என்றவனின் குரலில் மாற்றத்தை உணர்ந்து பட்டென்று நிமிர்ந்தாள்.

அவனின் பார்வை தன்மீது மையலுடன் படிவத்தை உணர்ந்தவள், “பா..ர..தி..” என்றவள் திணறினாள் அவன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க பேயை பார்த்தது போல இரண்டடி பின்னே நகர்ந்தாள்.

“நிலா ஐ லவ் யூ சோ மச்.. உன்னோட இந்த மாற்றத்திற்காக தான் இதுவரை பொறுமையாக காத்திருந்தேன்.. வில் யூ மேரி மீ..” என்ற கேள்வியுடன் அவளை நெருக்க அவனின் வார்த்தைகள் அவளின் தலையில் தீயை அள்ளி கொட்டியது போல இருந்தது..
அவனின் வார்த்தைகளில் ரொம்பவே பாதிக்கப்பட்ட நிலா,

“பாரதி ப்ளீஸ் கிட்ட வராதே..” என்று அவனை எச்சரிக்கை செய்தாள். அதுவரை குளிரும் நிலாவாக இருந்தவள் இப்பொழுது கொதிக்கும் நெருப்பாக மாறியிருந்தாள்.
அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டவன் அவளை நோக்கி முன்னேறியவண்ணம்,

“நான் ஏதாவது பண்ணிருவேன் என்று பயமா?” என்று குறும்புடன் கேட்டு கண்சிமிட்டினான்.

“நீ என்னை எதுவும் பண்ண மாட்ட.. ஆனால் நான் உன்னை ஏதாவது பண்ணிருவேன்.. ப்ளீஸ் கிட்ட வராதே பாரதி..” என்ற நிலாவின் கண்கள் கோபத்திலும், ஆத்திரத்திலும் சிவந்தது.

அதற்குள் அவன் அவளை நெருங்கி அவளின் செவ்விதழ்களில் இதழ் பதிக்க நெருங்கும் வேளையில்,

“பாரதி நகரு..” என்று கத்தியவள் தன்னுடைய கையிலிருந்த நகத்தை வைத்து அவனின் நெஞ்சில் கீறிவிட,

“ஏய் நிலா..” என்று தன்னை மீறி கத்திவிட்டான் பாரதி.

அவள் கைகளால் கீறிய இடம் எரிந்தது. அவளோ அப்படியே சரிந்து அமர்ந்த நிலா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள்.

அவர்களின் சத்தம் வெளியே இருந்த யாருக்கும் கேட்கவில்லை. அதனால் யாரும் வீட்டிற்குள் வராதது பாரதிக்கு நிம்மதியாக இருந்தது. அவன் எதுவும் செய்யாவிட்டாலும் நிலாவின் அழுகைக்கு யாரிடமும் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை.

அதுவரை அவனைச் சூழ்ந்திருந்த மாயவலை அறுந்து விழுகவே, “நிலா..” என்றவன் அவளைதலையை மெல்ல வருடவே, “பாரதி எனக்கு வாழனும் என்று ரொம்ப ஆசை எல்லாமே கானல் நீராக போகும் என்று நான் நினைக்கவே இல்ல..” என்றவள் உடைந்து அழுதாள்

அவளின் கண்களில் கண்ணீர் பெருகிட அவனின் மனம் வலிக்க அவளை இழுத்து மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் பாரதி. அவளை தீமைகள் தீண்டாமல் நான் பாதுக்காப்பேன் என்பது போல அவளை அணைத்திருந்தான்.

அவனின் கரங்களில் பாதுகாப்பை உணர்ந்த நிலா, “நான் யாருக்குமே கெடுதல் நினைக்கல பாரதி.. ஆனால் என்னோட வாழ்க்கையே வீணாக்கிட்டாங்க.. உனக்கு என்று கொடுக்க என்னிடம் எதுவுமே இல்லடா..” என்று அவளையும் அறியாமல் மனதை வெளிபடுத்தினாள்.

அவள் நெஞ்சில் கீறிய இடத்திலிருந்து ரத்தம் வழிய, “நான் உன்னை காயப்படுத்திட்டேன் இல்ல..” என்று அவனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
தன் கைவிட்டு போன பொருளுக்கு ஏங்கும் மழலை போல இருந்த அவளின் முகத்தை பார்த்தவனின் விழியும், மனமும் சேர்ந்து கலங்கியது.

அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து, “நீ முதலில் வந்திருந்தா நான் இப்படி ஆகிருப்பேனா? இப்போ வந்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ற.. உன்னை எப்படி கல்யாணம் பண்ண முடியும்.. அதன் எல்லாம் முடிஞ்சிபோச்சு..” என்றவள் அவனின் கைகளில் மயங்கினாள்.
அவள் மெல்ல மயக்கத்திற்கு செல்ல, “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாரதி.. அவங்க எல்லாம் சேர்ந்து என்னோட வாழ்க்கையை திசை திருப்பிட்டாங்க..” என்றவள் முழு மயக்கத்திற்கு செல்ல அவளை தூக்கிச்சென்று அவளின் அறையில் படுக்க வைத்தவன் அவள் நன்றாக தூங்க ஊசி போட்டான்.

அவள் குழந்தை போல தூங்குவதை பார்த்து அவளின் நெற்றியில் இதழ்பதித்து நிமிர்ந்தவன் அந்த அறையைவிட்டு வெளியே வந்தவன் கைகளால் தலையைத் தாங்கிபிடித்த வண்ணம் சோபாவில் அமர்ந்தான்.
அவள் கடைசியாக சொன்ன இரண்டு வாக்கியத்தில் முதல் ஒன்று அவளின் மனதை பிரதிபலிக்க மற்றொன்று அவனின் கேள்விக்கு விடையாக அமைந்தது. இத்தனை நாளாக அவளின் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.

அவளை அதே கன்னியாகுமரியில் சந்தித்த ஞாபகம் வரவே வேகமாக எழுந்து தன்னறைக்கு சென்ற பாரதி அந்த நாட்குறிப்பு டைரியை புரட்டினான். அவன் இதுவரை செய்த ஆபரேசன் தேதியையும், ஊரையும் குறிப்பிடுவது அவனின் வழக்கம்.
அந்த டைரியில் முதல் இடம் பிடித்த ஊரே கன்னியாகுமரி என்பதைப் பார்த்ததும்,

“கலைநிலா..” என்றவன் அதிர்ச்சியில் சிலையானான். அவளுடைய வாழ்க்கைக்கும், அவனின் வாழ்க்கைக்கும் இடையே விதி ஆடிய விளையாட்டு இது..
தன்னுடைய பேக்கில் அந்த டைரியை எடுத்து வைத்துகொண்டு அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மனதில் கொண்டுவந்தவன் வேகமாக அறையைவிட்டு வெளியே வர, “நிலா இன்னுமா ஜூஸ் போடுற..” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.

அவளை காணாமல், “வீட்டிற்குள் தானே வந்தால்..” என்றவர் அவளின் அறைக்கு செல்லும் முன்னே,

“சுமிம்மா நைட் எல்லாம் தூங்காமல் இருந்ததில் தலை வலிக்குது என்று தூங்கிவிட்டால் நீங்க அவளை எழுப்பாதீங்க..” என்றதும் அவனின் முகத்தை கவனித்தவர்,

“பாரதி உள்ளே என்ன நடந்தது?” என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் வேகமாக வெளியே சென்றான்.

“அம்மா நான் வெளியே போறேன் நான் வீட்டிற்கு வர இரண்டு நாளாகும்..” என்றவன் அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

error: Content is protected !!