பூவனம்—12

பூவனம்—12

மாதத்தில் இருமுறை கிராமத்திற்க்கு வந்து செல்ல வேண்டும் என்பது கிரிதரனின் தந்தை சுப்பையாவின் உத்தரவு. அதன் படி இருவரும் சென்றாலும் மனதில் ஒரு வித ஒட்டாதன்மையுடன் மீனாட்சி அம்மாள் நடமாட, மருமகளை சிறிது சிறிதாக ஒதுக்கத் தொடங்கினார்.

சமையலில் மருமகளுக்கு இருக்கும் பரிச்சயமற்ற தன்மை மாமியாருக்கு கற்கண்டாய் இனித்தது…குறை சொல்ல நல்லதொரு விஷயமல்லவா…

“இப்படி வெந்ததும் வேகாததும் சாப்பிட்டு சம்பாதிச்சே ஆகணும்னு என்ன பிடிவாதம்? ஒழுங்கா லட்சணமா எல்லாத்தையும் கத்துகிட்டு புருசனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்ற வழியப் பாரு” என்று ரம்யாவை சாட வெறுப்பின் உச்ச நிலையை எட்டி விட்டாள் அப்பெண்…

அங்கிருக்கும் நாட்களில் பேச்சும், செயலும் வெகுவாய் குறைந்து விடும், அந்த குறைவு கணவனிடமும் தொடர…

“எங்க அம்மா ஏதாவது சொன்னா என்னை ஏண்டி முறைக்கிற? உன் நல்லத்துக்கு சொல்றாங்கனு நினைச்சுக்கோ, எப்போ இருந்தாலும் இதெல்லாம் தெரிஞ்சுக்கதானே வேணும்” என்று சமாதானபடுத்த

“அவங்க வேலைக்கு போக வேணாம்னு சொல்றாங்க கிரி!! நான் படிச்ச படிப்பு வீணா போறத நான் விரும்பல, அது மட்டுமா இங்கேயே வந்து இருக்க சொல்றாங்க, என்னால அதெல்லாம் செய்ய முடியாது” கோபமாய் சொன்னவள்

“இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி சம்மதம் வாங்கி இருக்கணும் கிரி, நீ சொன்னியா? சென்னைல தான் குடும்பம் நடத்தப்போறோம்னு” கேள்வி கேட்பவளை முறைக்க மட்டும் தான் முடிந்தது அவனால்…

திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க பெற்றோரிடம் அவன் பட்ட பாட்டை மனைவியிடம் தெரிவிக்கவில்லை இன்னமும்.கோபமும் முறைப்புமாய் சண்டைகோழிகளாய் சிலிர்த்துக் கொண்டும் திரிவர் அங்கு இருக்கும் சமயத்தில்…

சண்டையிட்டு சமாதானம் அடையும் பொழுதுகள் மேலும் இனிமையை சேர்க்க, ஊடலும், கூடலும் இணைந்த அழகிய இல்லறத்தில் மேலும் ஆனந்தம் சேர்த்திடும் விதமாய் ரம்யா கருவுற்றாள். மகிழ்ச்சி தம்பதியருக்கு மட்டுமின்றி இருதரப்பு பெற்றோர்களுக்கும்…

வீட்டின் முதல் வாரிசு என்னும் சந்தோசம் மருமகளின் மீது உள்ள மனத்தாங்கலை மறக்கடித்து சகஜமாய் உரையாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் கிரிதரனின் பெற்றோர்.

மருமகளை சீராட்ட கிரிதரனின் பெற்றோர்கள் வருகை புரிய, வேலைக்கு விடுப்பு எடுக்க சொல்லி கிரி அறிவுறுத்த, ரம்யாவின் மனம் ஒப்பவில்லை.

“எனக்கு இப்போ ஒண்ணும் கஷ்டம் இல்லை கிரி, நான் நார்மலாத்தான் இருக்கேன். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், மொத்தமா சேர்த்து எடுக்குறேன்.

பேபி பொறந்தப்புறம் தான் ரொம்ப கவனமா இருக்கணும். அப்போ சேர்த்து எடுத்துக்குறேனே” என்று சொல்பவளை தடுக்கவும் முடியவில்லை. ஆனால் இதுவே ஒரு விரிசலை உண்டாக்க வழி காட்டியது…

நாள் முழுவதும் தனியாய் அமர்ந்திருக்கும் மாமியாருக்கும், மருமகள் தன் பேச்சினை கேட்கவில்லை என்ற ஆதங்கம்  னதில் முளை விட, ஆரம்பித்து விட்டார் தன் பிரசங்கத்தை…

“இப்படி கொஞ்சங்கூட சூதானமில்லாம வரதும் போறதுமா இருந்தா சரி வராது, வெளியே காத்து கருப்பு பட்டா பிள்ளைக்கு நல்லதில்ல. நாங்கெல்லாம் இப்படியா வெளியே சுத்திகிட்டு இருந்தோம், இப்ப இருக்கிற பிள்ளைங்க சொல் பேச்சு கேக்குறதில்ல, பட்டாத்தான் புத்தி வரும் போல” என அங்கலாய்த்தவரிடம்

“அம்மா!!! இது கிராமம் இல்ல, நீ சொல்ற காத்து கருப்புக்கெல்லாம் இங்கே இடம் இல்லம்மா.உன் பேச்ச கேக்காம யார் இருக்கா சொல்லு? ரம்யா இப்பதானேம்மா வேலைக்கு சேர்ந்திருக்கா..பிரசவத்துக்கும் சேர்த்து லீவ் எடுக்கலாம்னு நாங்க தான் முடிவு பண்ணிருக்கோம்“ என சமாதானப் படுத்தியவனிடம்…

“அப்படியா பெரியதம்பி? இப்ப எல்லாமே நீங்க தானே முடிவெடுக்கீறீங்க? ரொம்ப பெரிய மனுசனாயிடீங்க!!! கல்யாணம் தான் உங்க இஷ்ட்டபடி முடிவேடுத்தீங்க, இந்த விசயத்துல கூட உங்க விருப்பம்ன்னா நாங்க எதுக்கு? பிள்ளை பேறுங்கிறது சும்மா இல்ல…

நாலு பக்கமும் சுதாரிச்சு கவனமா இருந்தா தான், பொறக்க போற உசிருக்கும் நல்லது. பிள்ளைத்தாச்சி பொண்ணுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு குடுக்கனும்னு பாக்குறேன். அது முடியுதா இங்கே? என்னமோ நான் தான் மசக்கைக்காரி மாதிரி வீட்டுக்குள்ள பத்திரமா இருக்கேன்” என்று தன் பல்லவியை விடாமல் பாடிகொண்டிருந்தார்…

திருமண விசயத்தில் பெற்றோரின் நிலையை மனைவிக்கு தெரிய வைக்காமல் இருந்தவனுக்கு தர்மசங்கடமான நிலை இப்போது…

“அதான் உங்க அம்மா நான் என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிக்கிறாங்களா கிரி? இப்போ என்ன அவசரம்னு அவங்க சம்மதம் இல்லாம என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க? பிடிக்காத மருமகளா இருக்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு எல்லாமே ஈஸியா போச்சு”

“அப்படியெல்லாம் இல்ல ரமி… வீட்டுல எல்லோர் சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடந்திருக்கு. நீ எதையாவது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே…

ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு வீட்டுல இருந்தா அவங்க அமைதியாகிடுவாங்க, செய்றியா செல்லம்!!” என கேட்டு, அதை செய்ய வைத்தான்.

கிரிதரனின் தாய் மீனாட்சி அம்மாள்… கிராமத்துப் பெண்மணி, கொஞ்சம் அல்ல, நிரம்பவே பழமைவாதி… குடும்பப் பாரம்பரியம் வேறு சேர்ந்து கொள்ள அவரின் பேச்சில் கம்பீரமும், மற்றவர்களை துச்சமென பார்க்கும் பார்வையும் நிரம்பவே இருக்கும். அப்படிப்பட்டவரிடம் மாமியார் மிடுக்கு சற்று தோரணையாகவே இருந்தது.

பொறிக்குள் அகப்பட்ட எலியின் நிலைமை தான் ரம்யாவிற்கு. ஏற்கனவே திருமணப் பேச்சில் அவரை மீறியதால் கொஞ்சம் சமாதனப்படுத்தும் பொருட்டு கிரிதரன் பொறுத்து போகும் படி சொல்ல, சரியென்று பட மௌனியாகிப் போனாள்.

இயல்பிலேயே அமைதியானவள், மேலும் அமைதியாக தன் பொழுதினை கழிக்க ஆரம்பித்தாள்.

மாமியாரின் அதிகாரத்துடன் கூடிய சீராட்டலும், மசக்கையும் சேர்ந்து ரம்யாவை பாடாய் படுத்தி வைத்தது….

கஷாயங்கள், கிராமத்து பக்குவத்தில் உணவு முறைகள் பழக்கமில்லை அவளுக்கு…இவைகளையே மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட மனதில் நொந்தே போனாள்.

தாய் மடி சாய ஆசை வந்தாலும், சட்டமாய் வீட்டில் அமர்ந்திருக்கும் மாமியாரை தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. எங்கே தன்னை மதிக்கவில்லை என்ற போர்க்கொடியை தூக்கி விட்டால் என்ன செய்வது? என்ற ஒரு வித பயம் மனதில் வந்தமர்ந்து கொண்டது.

தாயின் கவனிப்பில் மனைவியை விட்டாலும், தனிமையில் அவளை மகிழ்விக்க தவறுவதில்லை கிரிதரன். “உன் மனசுல எந்த குறையும் இருக்க கூடாது ரமி!!! என் பொண்டாட்டிக்கு பிடிச்ச விஷயத்தை செஞ்சாதான் என் பிள்ள சமத்தா புத்திசாலியா வெளியே வந்து, அவ அம்மாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணுவா” என்று சிரித்துக் கொண்டே…

“என் செல்லம் நீங்க வந்து தான் இந்த அப்பாவி அப்பாவ  காப்பாத்தணும்… எப்ப பார்த்தாலும் உருட்டி மிரட்டி என்னை பயமுறுத்தி வச்சுருக்காங்க உங்க அம்மா… செய்வீங்களா குட்டிம்மா” என தாயிடம் ஆரம்பிக்கும் அவனின் கொஞ்சல் குழந்தையிடம் முடியும்.

“அடப்பாவி!! நான் மிரட்டுறேனா? இப்படி சொல்றது உனக்கே ஓவரா தெரியல, ஏன்டா அம்மாவும், பிள்ளையும் என்னை மட்டுமே டார்கெட் பண்ணி பேசுறீங்க… பொழுதுக்கும் உங்க அம்மா பேச்ச கேட்டு வெறுப்புல இருக்கேன்… இப்போ நீயும்  ஆரம்பிக்கிறீயா?” மூச்சு விடாமல் பேசுபவளை தோள் வளைவில் வைத்துக்கொண்டே…

“அம்மாக்கு தெரிஞ்சதெல்லாம் கிராமத்து பழக்கம் மட்டும் தான்… அத நாம குத்தம் சொல்ல கூடாது ரமி. இன்னும் கொஞ்ச நாள் தானே, அப்பறோம் அம்மா ஊருக்கு போயிருவாங்க, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என கெஞ்ச

“ஏன் கிரி இப்படி பேசுற, நீ சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கணுமா? எனக்கு இதெல்லாம் பழகி போயிருச்சு, நீ பீல் பண்ணற அளவுக்கெல்லாம் இல்ல, நான் சந்தோசமா இருக்கேன்,விளையாட்டுக் சொன்னேன், அதுக்கு நீ இப்படி அழுக வேணாம், பாக்க சகிக்கல!!!”

“அது என்ன குட்டிம்மானு சொல்றே, பையன் வந்தா என்னவாம், உனக்கு பிடிக்காதோ?”

அவள் கையை தன் கைகளில் வைத்துக்கொண்டே… “எங்க வீட்டுல பெண் குழந்தைகளுக்கு ரொம்ப பஞ்சம். எனக்கு தெரிஞ்சு மூணு நாலு தலைமுறையா ஆண் குழந்தை மட்டும் தான் பொறக்குது…

இது ஒரு பெருமையா கூட பேசுவாங்க பெரியவங்க… அத என் பொண்ணு வந்து மாத்தணும், மத்தவங்க கண்ணுக்கு எப்படியோ எனக்கு பெண்குழந்தை தான் வேணும்.

இப்போவே சொல்லிட்டேன், நமக்கு எத்தன குழந்தை பொறந்தாலும் பொண்ணாத்தான் பொறக்கணும்” என்ற தன் அதி முக்கிய ஆசைக்கனவை பெருமையாய் கூறினான்.

“இவ்ளோ ஆசையா உனக்கு!!! உண்மையிலேயே உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குடா, உன் ஆசையே என்னோட ஆசை போதுமா? இனிமே நமக்கு பொண்ணு மட்டும்தான் சரியா.

ஆனா எனக்கு உன்ன மாதிரியே ஒரு பையன் வேணுமே செல்லம்!!! அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் கருணை காட்டலாமே கிரி” என்ற அவளின் கேள்விக்கு தன் தாடையில் விரலை வைத்துக்கொண்டே அதி தீவிரமாய் யோசித்தவன்…

“இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் ரம்… நீ எப்போ என்ன மாமா… அத்தான்னு கூப்பிட்றியோ அப்போதான் அது நடக்குமாம், என்னம்மா ட்ரை பண்றீயா?” சீண்டலுடன் முடித்தான்…

“அதானே பாத்தேன்… என்னடா இன்னும் நீ உன்னோட கச்சேரிய ஆரம்பிக்கலையேனு நினைச்சேன். ஏன்டா இத சொல்லலேன்னா தூக்கம் வராதா உனக்கு? இப்படி கூப்பிட்டு தான் நீ என் புருசன்னு ஊருக்கெல்லாம் காட்டிக்கனுமா?

பிடிக்காத விசயத்த செய்யச் சொல்லி என்னை கம்பெல் பண்ணாதே கிரி, குழந்தை எல்லாம் சாமி குடுக்குற வரம். எனக்கு பையன் பொறக்கணும்னு இருந்தா, என் சிங்கக்குட்டி தானா வரப்போறான்… உன் பேச்ச கேக்க வேற ஆளப்பாரு” என சிலிர்த்துக்கொண்டே, சிரிப்புடன் அவனை பதிலுக்கு சீண்டி முடித்தாள்…

இந்நிலையில் ஆன்சைட் வேலைக்கான வாய்ப்பாய்  ரிதரனுக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது… இந்த இரண்டு வருட ஒப்பந்தம் ஐந்து வருடமாய், தன் கழுத்தை இறுக்கப் போவதை அறியாமால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணத்துக்கு தயாரானான் கிரிதரன்…

ரம்யாவிற்கும் மகிழ்ச்சியே, ஆனாலும் சிறு பதட்டம் மனதில் வர அதையும் மறைத்து வைத்தாள்.ஆயிரம் பத்திரங்கள் சொல்லி கணவன் விடை பெற்றாலும் மனைவியின் ஏக்கப்பார்வையை கண்டு கொண்டான்.

“இப்படி திருதிருன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்குற ரம்யா எனக்கு வேணாம், அப்பறம் கனவுல கூட இப்படியே வந்து பயமுறுத்துவ, அதுலயே எனக்கு ஜன்னி வந்துரும்மா, கொஞ்சம்
நல்லா சிரி தங்கம்…” என்று சீண்டியவனை

“நல்ல விதமா உன்னை வழியனுப்பி வைக்கணும்னு நினைக்கிறேன்… அத நீயே கெடுத்துக்குறே கிரி!!! கிளம்புறப்பவே இப்படி பேசி பயமுறுத்தி வைக்குறியேடா… நானே, நீ இல்லாம எப்படி இருக்கபோறேங்கற கவலையில இருக்கேன். இதுல ஏடாகூடமா எதையாவது பேசி என்னை கடுப்பேத்தாதே.

உடம்ப நல்லா பாத்துக்கோ, ரொம்ப கஷ்டப்பட்டு ஒண்ணும் நீ வேலை பாக்க வேணாம். எவ்ளோ சீக்கிரம் இங்கே வர முடியுமோ வந்து சேரு. என்னால ரொம்பநாள் எல்லாம் உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது, என்ன சொல்றது புரியுதா?” முறைப்புடன் ஆரம்பித்து அமைதியுடன் முடித்தாள்…

“அப்போ நான் அங்கே போய் ஒழுங்கா வேலை பாக்க வேணாமா? கெட்டபேர் வாங்கச் சொல்றியாடி, சரியான கேடி நீ! புருசனுக்கு ஒரு நல்லது நடக்க விடமாட்டேங்குற, என்னா ஒரு நல்ல எண்ணம்மா உனக்கு” என்று கூறியவனின் சட்டையை கொத்தாக பிடித்தவள்…

“யாரு நானடா கேடி… நீதான் கேடி… உன்னை நினைச்சு கவலை பட்டேன் பாரு என்னை சொல்லணும்.. உனக்கு என்ன நீ போய்டுவே… எனக்கு தான், நான் எப்படி சமாளிச்சுக்க போறேன்னு தெரியல…” என்றவளின் கண்களில் கண்ணீர் கீழே இறங்க தயாராய் இருந்தது…

“ஏண்டா செல்லம் இப்படி சொல்றே? உனக்கு என்ன குறை, நம்ம சுத்தி பெரியவங்க எப்போவும் இருக்காங்க. உனக்கு இங்கே இருக்க கஷ்டமா இருந்தா உங்க அம்மா வீட்டுக்கு போயிரு.

எப்பிடியும் அம்மா இந்த வாரம் ஊருக்கு  யிருவாங்கனு நினைக்கிறேன், அதுக்கப்பறம் என்ன? உனக்கு எங்கே பிடிக்குதோ, எப்படி இருக்கணும்னு நினைக்கிறயோ, அப்படி இருந்துக்கோ.

இப்படி எல்லாம் மனச போட்டு குழப்பிக்க கூடாதுன்னு எத்தன தடவ சொல்லறது. உனக்கு மட்டும் இல்ல, பேபிக்கும் நல்லதில்லடா” என்று கூறி நெற்றியில் முத்தமிட்டவனின் தோள் சாய்ந்து கண்ணீரில் கரைய ஆரம்பித்து விட்டாள்… மனைவியின் அழுகையை காண அவனுக்கும் மனமில்லை.

“பேசாம இந்த ட்ரிப் கான்செல் பண்ணிரலாம் ரமி… உனக்கு டெலிவரி முடிஞ்சதுக்கப்றம் வேணா பிளான் பண்ணிக்குறேன்“

“என்ன பேச்சு இது கிரி!!! ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது, நாம தான் யூஸ் பண்ணிக்கணும்,தட்டிக் கழிக்கக் கூடாது. நான் சந்தோசமா தான் இருக்கேன்,நான் ஒண்ணும் கவலைப்படல சரியா? நீ சொல்ற மாதிரி பெரியவங்க இருக்குற வரை எனக்கு என்ன கவலை? நீ என்னை பத்தி யோசிக்காம உன் வேலைய ஒழுங்கா பாரு சரியா, கிளம்பு நேரமாச்சு” என்று சகஜநிலைக்கு திரும்பினாள்…

“இத… இதத்தான்டி நான் எதிர்பார்த்தேன்… லவ் யூ ரம்!” கண்சிமிட்டியவனை…

“போகும் போதும் அடி வாங்கிட்டுதான் போவேன்னு அடம்பிடிக்கிறியேடா…” என்று அவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்தாள்…

தன் தாயிடம் ஆசி வாங்கிக்கொண்டு நிமிர்ந்தவனிடம் “நீ ஒண்ணும் கவலைப்படாதே தம்பி! ரம்யா பிள்ளை பெத்து என் கையில வாங்குற வரைக்கும் அவ கூட இருக்குறதா முடிவு பண்ணிட்டேன். அதனால போற இடத்துல உன் வேலைய மட்டும் கவனத்துல வச்சுக்கோ, என் மருமக பத்தின கவலைய நீ விட்ரு…” என்று அலுங்காமல் சொன்னவரிடம் மறுத்து பேசும் தைரியம் வரவில்லை இருவருக்கும்…

 

error: Content is protected !!