MMV 3

அத்தியாயம் – 3

கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக மருத்துவமனையிலிருந்து வேலையைக் கவனித்த பாரதிக்கு தற்போதுதான் கொஞ்சம் ஒய்வு கிடைத்தது. ஒரு முக்கியமான ஆப்ரேசன் ஒன்றை முடித்துவிட்டு இப்பொழுதுதான் ஓய்வாக அமர்கிறான்.

அவன் சீட்டில் சாய்ந்து விழி மூடவே அவனின் இமைகளுக்கு நடுவே அவளின் முகம் நொடிப்பொழுது வந்துச்செல்ல திடுக்கிட்டு விழி திறந்தான் பாரதி. அவளின் முகம் தன் மனதிற்குள் இந்தளவுக்கு பதிந்தது அவனிற்குமே அதிர்ச்சியாக இருந்தது.

அவன் சென்ற பயணங்களில் அவன் ஏராளமான பெண்களைக் கடந்து வந்தாலும் கூட, இந்த மாதிரி ஒரு பெண்ணின் முகமும் அவனின் மனதில் பதிந்ததில்லை. ஆனாலும் நடப்பினை உணர்ந்த பாரதியின் மனம் அவளின் முகத்தை அசட்டை செய்தது.

அவன் காரில் சாவியைக் கையில் எடுக்க அவனின் கைப்பேசி சிணுங்கியது.யார் அழைக்கிறார்கள் என்று நன்றாக  அறிந்தவனோ, “ஹலோ பிரவீன் வீட்டிற்கு வந்ததும் கதைக்கிறேன்..” என்றதும்,

“அண்ணா நீ முதலில் மணியைப் பாரு. வீட்டில் தனியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்று சிணுங்கியவனோ, “என்ன சொன்ன வீட்டுக்கு வந்து கதை சொல்றீயா?” என்று அண்ணனையும் கேலி செய்யவும் மறக்கவில்லை.

“கண்டியிலிருந்து வந்த குட்டி பெண்ணுடன் பேசிட்டு இருந்தேன். அது அப்படியே வாயில் வருதுடா..” என்றதும், “சரி சரி வீட்டிற்கு வந்து கதை சொல்லு..” என்று போனை வைத்தான் பிரவீன். தம்பியின் தனிமை உணர்ந்த பாரதி எழுந்து வீட்டிற்குக் கிளம்பினான்.

இரவு நேரத்தின் நிசப்தத்தைக் கடந்து அவனின் கார் சாலையில் பயணிக்க அவனின் நினைவுகள் வேறு எங்கோ பயணித்தது. கவிபாரதி இயல்பாகவே செல்வச்செழிப்பான குடுப்பத்தில் பிறந்தவன். அவனுக்குப் பிறகு இரண்டு வருடம் கழித்து பிறந்த தம்பிக்கு அண்ணன்தான் உலகமே.

பணத்தை சம்பாரிக்க உலகையே சுற்றும் தந்தைக்கு இல்லாத கெட்ட பழக்கவழக்கங்களே இல்லை. தாய் கொஞ்சம் பொறுப்பானவர் என்ற காரணத்தாலோ என்னவோ மகன்களை நன்றாகக் கவனித்துத தகுந்த வயதில் சிறந்தபண்புகளைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.

அவரின் நல்ல குணங்கள் கடவுளின் கண்களைக் கூட உறுத்திவிட்டதோ என்னவோ சீக்கிரமே இறைவனடி சென்று சேர்ந்தார் வசுந்தரா. அவர்களை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டிய தந்தையோ தகாத சாவகாசத்தில் சீரழிந்து போய்விட, தம்பியை பத்திரமாகப் பார்த்துக்கொண்டான் கவிபாரதி.

தன்னையே உலகம் என்று மாறிவிட்ட தம்பிக்காகவே வாழ தொடங்கினான்.பிரவீனுக்கு அம்மா, அப்பா எல்லாமே அவன்தான். அதே நேரத்தில் தனக்குப் பிடித்த டாக்டர் படிப்பை முடித்துவிட்டு வயிறு சம்மதம்பட்ட அனைத்து நோய்களின் சிறப்பு மருத்துவனாக விளங்குகிறான் பாரதி.

சில கணங்கள் என்றாலும் நொடிப்பொழுதில் கடந்த காலம் சென்று வந்த அவன் வீட்டின் முன்னே காரை நிறுத்திவிட்டு இறங்கிட வாசலில் அமர்ந்திருந்தான் பிரவீன் [பிரவீன் யார் என்று ஞாபகம் இருக்கிறதா?]

அவன் வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “ஸாரிடா கொஞ்சம் வேலை அதிகம். அதற்காக இப்படியா வாசலில் வந்து உட்கார்ந்திருக்க வேண்டுமா?”என்ற கேள்வியுடன் அவனின் அருகில் வந்தான்.

அவனின் குரலில் சோர்வை உணர்ந்த பிரவீன், “அண்ணா வேலை அதிகமா?” கவலையுடன் கேட்க, “அதெல்லாம் இல்லடா..” என்றவன் தொடர்ந்து,

“ஒரு இரண்டு நிமிஷம் வெயிட் பண்ணு பிரவீன் நான் குளித்துவிட்டு வருகிறேன்..” என்றவன் மாடிப்படிகளை கடந்து வேகத்தில் அறைக்குள் சென்று மறைந்தான்.

கொஞ்சநேரத்தில் குளித்துவிட்டு நார்மல் டீசர்ட், சாட்ஸு டன் கீழே வந்தவன் தம்பியின் முகத்தைக் கவனிக்க அவனோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, “பிரவீன்..” என்ற அழைப்பில் அவனின் கவனம் கலைந்திட, “அண்ணா..” என்றான்..

“இன்னும் என்ன யோசனை வா. உனக்கு சாப்பிட என்னடா வேண்டும்?”

“மசாலா தோசை..” என்றவன் டைனிங் டேபிளில் அமர்ந்துகொள்ள,“உருளைக்கிழங்கு எடுத்துதா..” என்றதும், “அண்ணா நான் ஹெல்ப் பண்ணவா..” என்று ஆர்வமாகவே கேட்டான் பிரவீன்

“ஏண்டா வரப்போகிற பொண்டாட்டிக்குச் சமைக்கத் தெரியாதே, அதனால் அண்ணாவுடன் சேர்ந்து நாமும் சமையல் கத்துக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாயா?” என்று தம்பியை வம்பிற்கு இழுத்தான் பாரதி.

“அண்ணா நானும் அந்த பெண்ணை ரயிலில் பார்த்துட்டு உனக்கு போன் பண்ணியதும் போதும் நீ என்னை வம்பு இழுத்தே ஒரு வழி பண்ற..” என்றான் அவன் கோபத்துடன்..

அவனின் கைகள் வழக்கம் போல வேலையைச் செய்தாலும், “வாழ்க்கையில் நம்ம ஆயிரம் பயணங்கள் போனாலும், சில பயணங்கள் மட்டும் நம்ம மனதைவிட்டு நீங்காது பிரவீன்..” என்றவனை சிந்தனையுடன் நோக்கினான் தம்பி.

“இந்த பயணம் உனக்கு என்ன பண்ணுச்சு அண்ணா..” என்று கேலி குரலில் அவன் கேட்க, “டேய் நான் உனக்கு அண்ணாடா..” என்று வாய்விட்டு சிரித்தான் பாரதி.

“அண்ணா என்னவோ சரியில்ல. என்னை உண்மையைச் சொல்லிவிடு..”என்று சிரித்துக்கொண்டே கேட்க, “சும்மா வம்பிற்கு இழுக்காதே..” என்றவன் வேலையைத் தொடர்ந்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் சமையலை முடித்துவிட்டு சாப்பிட அமர,“டேய் சாம்பல் வெச்சுகோவன்..” என்றவனை முறைத்தான் பிரவீன்

“அண்ணா என்னடா சொல்ற..” என்று தலையில் அடித்துக்கொள்ள, “ஐயோ ஸாரிடா சட்னி போட்டுக்கோ..” என்றதும், “உன்னை இப்படியே விட்ட என்னை சுடுகாட்டிற்கு கூட்டிட்டு போயிருவ போலவே..” சாப்பிட தொடங்கினான்.

தம்பியின் சிந்தனை முகம் கண்டவன், “பிரவீன் என்ன விஷயம்..” என்று விசாரிக்க, “நீ கல்யாணம் கொண்டால் இந்த வேலை எல்லாம் அண்ணியே பார்த்துப்பாங்க இல்ல..” என்றதும் தன்னை மறந்து வாய்விட்டு சிரித்தான்.

பிரவீன் பாரதியை விநோதமாகப் பார்க்கவே, “இந்த காலத்தில்
பெண்களுக்குச் சுடுதண்ணீர் கூட போட தெரியாதுடா.. இந்த  நிலையில் அவள் வந்து வேலை செய்வாளா?” என்று கேட்டவனின் சிரிப்பு மேலும் அதிகரித்தது.

அவனுடன் நினைத்து நகைக்க, “எனக்கு மனைவியாக வரும் பெண்ணிற்குச் சமைக்க தெரியல என்றால் என்னோட பாடு திண்டாட்டம்தான்..” என்றதும் பிரவீனின் சிரிப்பு அதிகரித்தது..

அதன்பிறகு இருவரின் பேச்சும் திசைமாறிவிட, இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். அதன்பிறகு பாரதி தன்னுடைய அறைக்கு செல்ல பிரவீன் அவனின் அறைக்குள் சென்று மறந்தான்.

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, அன்றும் தம்பியை காலேஜ் கொண்டு போய் இறக்கி விட்டுவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

அதேநேரம் இங்கே நிலாவும், சுமிம்மாவும் வேலை கிடைக்காமல் தினமும் தவித்துப் போயினர். இந்த இடைப்பட்ட நாட்களில் சுமிம்மாவை முழுவதுமாக உணர்ந்து கொண்ட நிலா பயமின்றி அவருடன் வளைய வந்தாள். அன்று காலையும் அவர்கள் இருவருமே வெளியே கிளம்பிச் சென்றனர்..

கிட்டத்தட்ட பதினோரு மணியளவில் சுமிம்மா சென்ற இடத்தில் வேலை கிடைக்காமல் சோர்வுடன் வீடு திரும்பும் பொழுது, அங்கிருந்த பஸ்ஸ்டாப்பில் சோகமாக அமர்ந்திருந்த நிலாவைக் கண்டார்.

“இவ என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறா?” என்ற கேள்வியுடன் அவளை நெருங்கிய சுமிம்மா, “நிலா..” என்று அழைத்தார்.

அவரின் குரலில் அவளின் கவனம் களைந்துவிட வெடுக்கென்று  நிமிர்ந்த நிலாவின் விழிகள் கலங்கிச் சிவந்திருக்கவே, “என்னடா கண்ணு கலங்கினமாதிரி இருக்கு..” என்று பதட்டத்துடன் அவளின் அருகில் அமர்ந்தார்.

சிறிதுநேரம் மௌனமாகவே இருந்தவளோ, “எனக்கு எந்த கடையிலும் லைக் கிடைக்கல சுமிம்மா..” என்றவளின் விழிகள் மீண்டும் கலங்கியது.

அவளின் வருத்தம் அவருக்கும் புரிந்தாலும், ‘ஹப்பாடா வேலை
கிடைக்காமல் இருந்தால் அதுவே போதும் விநாயகா..’ என்று மனதார வேண்டிக் கொண்டார்.

“இதுக்கு போய் யாராவது அழுவாங்களா?” அவளின் கலங்கிய விழிகளை அழுந்த துடைத்துவிட்ட சுமிம்மா, “இந்த வேலை கிடைக்கல என்றால் இதைவிட பெஸ்டாக ஏதோ கிடைக்க போகுது.. அதுக்கு போய் இப்படி கலங்கினால் என்னடா பண்ண முடியும்..” என்று புன்னகையுடன் கேட்டார்..

அவர் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அவளின் மனம் அதை ஏற்க மறுக்கவே, “கூட்டுக்குள் இருக்கிற குருவிகளுக்கு உலகம் தெரியாதும்மா. அந்த மாதிரி வீட்டிற்குள் இருக்கிற வரை எனக்கும் வெளியுலகம் பற்றி தெரியல. அப்பொழுது எல்லாம் கவலையே இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன்..” என்றவளின் உடல் இங்கிருந்தாலும் மனம் எங்கோ சென்று வந்தது..

இந்நேரம் வரை கலக்கத்துடன் அமர்ந்திருந்தவளின் முகம் செந்தணலாக மாறுவதை கவனித்த சுமிம்மா, ‘இவளுக்கு இவ்வளவு கோபம் வருது?’ என்று புரியாமல், “நிலா..” அவளின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார்.

அதற்குள் அவளின் மனநிலை மாறிவிட, “சாதாரண பில் போடும் வேலைக்கு கூட பிளஸ் டூ மார்க் சீட்டும், கம்பியூட்டர் கோர்ஸ் முடித்த சர்டிபிகேட் கேட்கிறாங்க..” என்றவளின் உதட்டில் கசந்த புன்னகை மலர்ந்தது.

சுமிம்மா அவளின் தலையை பாசத்துடன் வருடிவிட, “என்னவோ அம்மா மனசே சரியில்ல..” என்றாள்.

மீண்டும் எதையோ நினைத்து சிரித்தவள், “ஒரு பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால் அடுத்த பிரச்சனை ஸ்டார்ட் ஆகுது..” என்றாள்..

அவளை ஆழ்ந்து பார்த்த சுமிம்மா, “இப்பொழுது கூட உனக்கு சிரிப்புதான் வருகிறதா?” சுமிம்மா அவளை கேலி செய்ய, “என்னோட முட்டாள்தனம் கண்டு நான் சிரிக்காமல் வேற என்ன பண்றது சுமிம்மா..” புரியாமல் கேட்டாள்.

மீன் தானாக வந்து வலையில் மாட்ட பொறுமையாக காத்திருந்த சுமிம்மா, “நான் உனக்கு வேலை தருகிறேன் செய்கிறாயா?” என்று கேட்கவே, “என்ன வேலைம்மா..” என்றவள் ஆர்வமாகவே.

“நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் நிலா. நீ படிக்கிறாயா?” என்றதும் அவளின் முகம் வாடி போகவே, “என்னடா..” என்று பாசத்துடன் கேட்டார் சுமிம்மா.

அவரின் மனம் அவளுக்கு புரியாமல் இல்லை. அவள் வீட்டிற்குள் நுழைந்த இரண்டாவது நாளே சுமிம்மா அவளிடம் இதைத்தான் கேட்க, ‘இல்லம்மா எனக்கு படிக்க விருப்பம் இல்ல..’ என்று மறுத்துவிட, சுமிம்மா புன்னகையுடன் நகர்ந்துவிட்டார்.

தன்பிறகு இந்த ஒரு மாதளவில் அவளும் வேலை தேடி செல்வதும் மீண்டும் சோர்வுடன் வீடு திரும்புவதைக் கவனித்தாலும் அவர் அமைதியாகவே இருந்தார்.

அவள் சாப்பிட காசு கொடுத்தற்கு கூட, “உனக்கு அம்மா இருந்தால் இப்படித்தான் பணம் கொடுத்து சாப்பிடுவாயா?” என்று அவளிடம் சண்டைக்கே வந்துவிட்டார்.

அவள் ஆயிரம் சமாதானம் சொன்ன பின்னர்தான் அவளுடன் சுமிம்மா பேசினார் என்பது வேற கதை. இந்த மாதிரியே நாட்கள் நகர்ந்தாலும் சுமிம்மா சாமி கும்பிடும் நேரம் மட்டும் நிலாவிற்கு அவர் மேல் கோபம் கோபமாக வரும்..

அவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் பொழுதெல்லாம், “இந்த நிலாவிற்கு மட்டும் வேலையே கிடைக்கக்கூடாது..” என்றவரின் உதட்டில் குறும்புடன் புன்னகைக்க, நிலாவின் முகத்திலோ தீப்பொறி பறந்தது..

“சுமிம்மா சாமி உங்கபக்கம் இல்ல என்னோட பக்கம்தான்..” என்று அவருடன் சண்டைக்கு வருவாள் நிலா.

“இவர் மட்டும் எனக்கு சாதகமாக எதுவும் செய்யல. இந்த கோவில் ஐயருக்கு மொட்டை போட்டுவிட வேண்டியதுதான்..” என்ற சுமிம்மா ஐயரின் தலையில் இடியை இறக்கிவிட, நிலாவோ விழுந்து விழுந்து சிரித்தாள்..

என்னம்மா கோவிலுக்கு வந்த நீங்க வேண்டுவதற்கு பதிலாக என்னோட தலையில் கை வைக்கிறீங்க..” என்று பதறிவிட்டார் கோவில் ஐயர்.

அதற்கு நிலாவோ, “ஒரு பழமொழி உண்டு ஐயரே..” என்றவளை அவர் புரியாமல் பார்க்க, “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான்னு..” என்று குறும்புடன் இழுத்தாள்.

“அதற்காக என்னோட தலையை மொட்டை போடுவதாக
வேண்டுவீங்களோ..” ஐயர் அவர்களிடம் சண்டைக்கு வந்தார்.

“அவர் கொடுக்க வரத்தை கூட கொடுக்கவிடாமல் செய்வது நீதானே அப்போ உங்களுக்குதானே மொட்டை போடணும்..  இல்ல சுமிம்மா..” என்று அவரை கேலி செய்ய அவளை முறைத்தார்.

“வேண்டாம் நிலா. என்னோட போட்டி மட்டும் போடாதே. கடைசியில் ஜெய்ப்பது நான்தான்..” என்றார் சுமிம்மா..

“நீங்க ஜெய்த்துவிட்டால் நான் இந்த ஐயரின் தலையை மொட்டை போட்டுவிடுவேன்..” என்று சாதாரணமாக சொல்லி ஐயரிடம் பல பூசைகள் வாங்கிவிட்டே வீடு வந்து சேர்ந்தனர்..

அதெல்லாம் நினைத்தவளின் உதட்டில் புன்னகை அரும்பிட, “நிலா..” என்று அவளின் கவனத்தைக் கலைத்தார் சுமிம்மா.

அவள் நிமிர்ந்து அவரைக் கேள்வியாக பார்க்க, “என்ன பூசாரிக்கு மொட்டை போடலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிற போல..” என்று அவளின் மனதை படித்தது போலவே கேட்டார்.

“இப்பொழுது படித்த பெண்களுக்கே வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கு நிலா. நான் சொல்வதை கேளும்மா..” என்றார் அவர் தன்மையாகவே..

அவள் சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு, “இல்லம்மா என்னால் உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம்..” என்றவள் தயங்கவே சுமிம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது..

“சும்மா பட்டிக்காடு மாதிரி பேசாதே நிலா. சில நேரத்தில் ரொம்ப முதிர்ச்சியாக பேசற.. பல நேரத்தில் சுத்த பட்டிக்காடு மாதிரி நடந்துக்கிற..” அவளிடம் சண்டை போட்டார்..

நிலா மெளனமாக இருக்க, “நான் படிக்க வைக்கிறேன். இப்பொழுது நீ ஒரு முடிவு சொல்லல எனக்கு கெட்ட கோபம் வரும் பாரு..” என்று மிரட்டிவிட்டு அமைதியானார் சுமிம்மா.

அதே நேரத்தில் மருத்துவமனை நோக்கிப் பயணித்த கவிபாரதியின் விழிகளில் விழுந்தனர் சுமிம்மாவும், நிலாவும்!

சுமிம்மாவை பார்த்தும் காரை பஸ்ஸ்டாப் அருகில் நிறுத்திவிட்டு கவிபாரதி காரைவிட்டு இறங்கி வந்தான். அதேநேரத்தில் காரின் சத்தம் கேட்டு திரும்பிய நிலா அவனைப் பார்த்தும் மீண்டும் திடுக்கிட்டுப்போனாள்..

நேரான நடையுடன் அவளை நோக்கி வந்த அவனின் பார்வையின் வீச்சு கண்டு விழி தாழ்த்திக்கொண்டவளின் உள்ளமோ பதட்டத்தில் படபடக்க கைகால்கள் வெடவெடத்துப் போயின.

அவனோ அதெல்லாம் கவனிக்காமல், “சுமிம்மா..” என்ற அழைப்புடன் அழுத்தமான காலடி ஓசையுடன் அவர்களை நெருக்கிட நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தார்.

மொட்டு வளரும்..

error: Content is protected !!