பூவனம்-14

தன்னிலை மறந்து பிதற்றும் ரம்யாவை கட்டுப்படுத்தும் பொருட்டு முதலில் தூக்க மருந்தை செலுத்தி அவளை உறங்கவைத்த பின்னரே, மற்றவர்களை பார்த்து நிலைமையை கேட்டு அறிந்து கொண்டனர் மருத்துவர்கள்…

“ஏம்மா… பொம்பளைங்க எங்கே ஒண்ணு கூடினாலும் ஏதாவது சண்டை போட தான் செய்வீங்களா? இங்கே எங்களுக்கு வைத்தியம் பாக்க வந்தவங்க ஆரோக்கியம் தான் முக்கியம். அவங்கள அமைதியா இருக்க விடாம செய்ற எந்த ஒரு  காரியத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது.

அப்படி மீறி ஏதாவது நடந்தா, நாங்களே உங்கள வெளியே போக சொல்லிருவோம், அத மனசுல வைச்சுகிட்டு நடந்துக்கோங்க” என்று மருத்துவர் கடுமையாய் எச்சரித்து வெளியேறி விட்டார்.

மீனாட்சி அம்மாளுக்கு இது பெருத்த அவமானமாய் போய் விட்டது. பார்ப்பவர்கள் எல்லாம் கும்பிடு போட இது என்ன அவரின் கிராமத்து மருத்துவமனையா? யார் அவருக்கு இந்த அரிய பெரிய விஷயத்தை புரிய வைப்பது.

“பார்த்தியா கமலம்… இந்த டாக்டர் சொல்லிட்டு போறத… என்னமோ நாங்க தான் இங்கே வேலையத்து போய் வம்ப இழுத்துகிட்டு அலையுற மாதிரில்ல பேசிட்டு போறாரு.

வர வர எங்கேயும் நமக்கு மரியாதை இல்லாம போயிருச்சு… இன்னும் நான் என்னனென்ன பேச்சு வாங்க வேண்டி இருக்கோ?

“வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள விட்ட கதை”யா இவளுக்கு ஒரு நல்லது செய்ய போயி, இப்போ நானுல்ல பேச்சு வாங்கிட்டு நிக்கிறேன்…

போதும் இதுங்களோட சங்காத்தம் வச்சுகிட்டதுக்கு ரொம்ப நல்ல பேரு எனக்கு கிடைச்சு போச்சு… இனிமே ஒரு நிமிஷம் கூட இங்க நிக்க கூடாது வா போவோம்” என சிலிர்த்துக்கொண்டு கிளம்பிவிட்டார்…

மருந்தின் வீரியத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்க்க பார்க்க, பெற்றவளின் மனவேதனை அதிகரித்தது…. கணவரிடம் நடந்தவை அனைத்தையும் ஒப்பித்து விட்டார் செல்வி…

“போதும்ங்க.. நம்ம பொண்ணு இவங்க வீட்டுல இருந்தது போதும்… பச்ச பிள்ளனு கூட பாக்காம, என்னென்ன பேச்சு எல்லாம் பேசிட்டா அந்த பொம்பள… ஊருக்கு பெரிய மனுஷின்னு தான் பேச்சு,

மனசுல ஈவு இரக்கங்கிறது கொஞ்சம் கூட இல்ல? இன்னும் ரெண்டு நாள் இங்க இருந்தா, என் பொண்ணு எனக்கு இல்லாம போய்டுவா போல?

நம்ம மாப்பிள்ளை வந்த பிறகு நாம இவள அனுப்பலாம். அது வரைக்கும் எங்ககூடவே இருக்கட்டும்ங்க…” என்று அழுகையில் கரைந்தவரிடம்…

“அப்பிடியே செய்வோம் செல்வி… நம்ம பொண்ண விட நமக்கு எதுவும் முக்கியமில்ல” என்றவர் உடனடியாய் சென்னைக்கு அழைத்து சென்று விட்டார்.

தம் வீட்டுப் பெண்களின் மனவேதனை, அவரை மிகவும் வேகமாய் செயல்பட வைத்தது.தன் வீட்டில் இளவரசியாய் வலம் வந்தவள், தன்னிலை மறந்து புலம்புவதைப் பார்க்க சண்முகத்தின் மனதில் பாரம் ஏறிக் கொண்டது…

நெஞ்சம் முழுவதும் ஆற்றாமையுடன், கோபமும் ஒருங்கே சேர, பெண்ணை அழைத்து செல்லும் விஷயத்தை கிரிதரனின் வீட்டில் அறிவிக்கவில்லை…

“சொன்னால் மட்டும் சந்தோசமாய் அனுப்பிட போறாங்களா என்ன? அதுக்கும் என்ன குத்தம் கண்டுபிடிப்பாங்களோ? வர்றது வரட்டும் பேசிக்கலாம்” என்ற திடமான முடிவில் தான் சென்றது… ஆனால் அதுவே பெரிய முடிவை கையில் எடுக்க ஆரம்ப புள்ளியாய் மாறியது…

மனவேதனையுடன் பெண்ணை அழைத்துக்கொண்டு ரம்யா குடும்பம் அந்த பக்கம் போக, இங்கே கிராமத்தில் மீனாட்சி அம்மாள் ஆரம்பித்து விட்டார் தன் புலம்பலை…

“நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாம கூட்டிட்டு போயிருக்காங்கன்னா எவ்ளோ திமிர் இருக்கணும்? அந்த பொண்ணுக்கும் என்ன நெஞ்சழுத்தம் இருக்கணும்? இது எல்லாம் புருஷன் என்ன சொன்னாலும் தலையாட்டுவான்னு நினைச்சு செஞ்சுகிட்டு இருக்காங்களா?

நாங்க என்ன செத்தா போய்ட்டோம்? நாலு பேச்சு வரத்தான் செய்யும், அத தாங்கித்தான் ஆகணும். அத விட்டுட்டு எதிர் பேச்சு பேசுறது என்ன பழக்கம்?

பைத்தியம் பிடிச்ச மாதிரி அந்த பொண்ணு கத்துனத நினைச்சாலே எனக்கு இப்போவும் ஈரக்குலை நடுங்குது… இப்படிப்பட்டவ நாளைக்கு குடும்பத்த எப்படி நல்ல நிலைமைக்கு கொண்டு போவா?”

“அப்படியெல்லாம் சொல்லாதே மீனாட்சி… என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டு மருமக, வாழ வந்த பொண்ண வாய்க்கு வந்த படி பேசக்கூடாது” என்று கிரிதரனின் தந்தை சுப்பையா மனைவியின் பேச்சை கட்டுபடுத்த முயல, அசரவில்லை மீனாட்சி அம்மாள்.

“வேணாம்… நமக்கு இந்த பொண்ணு வேணாம், போதும் இவ கூட என் பையன் வாழ்ந்தது. இங்கே இவ வந்து தான் விடியணும்னு எதுவும் இல்ல, இவளை தள்ளி வைக்குறது தான் சரின்னு படுது, பஞ்சாயத்துலயும் அவங்க ஊர் பக்கமும் தள்ளி வைக்க என்ன செய்யணுமோ அத முறையா செஞ்சு வேலைய முடிங்க” என்று மனதிற்குள் பூத்த வன்மத்தை வெளிப்படுத்தி செயல்படுத்த முனைந்தார்.

கடையில் பணம் கட்டி, கைக்கு வந்த பொருளை வேண்டாம் என்று தள்ளி வைப்பது போல், எளிதாய் தன் முடிவை கூறினார் அந்த மாமியார்.

அவரின் முடிவு அனைவருக்கும் தூக்கி வாரிபோட்டது… இது வரை தன் அண்ணியிடம் நேரில் பேச கூட தயங்கும் கிரியின் தம்பி முரளிதரனும் கூட கதி கலங்கி விட்டான்…

“என்னம்மா சொல்லறீங்க… கொஞ்சம் நிதானமா யோசிச்சு பேசுங்கம்மா. அண்ணி என்ன கெடுதல் செஞ்சாங்கம்மா? ஏன் இவ்வளவு வெறுப்பு அவங்க மேல உங்களுக்கு? கொஞ்சங்கூட நல்லதில்ல, நீங்க சொல்லறதும், செய்ய நினைக்கிறதும்” என்றவன் தொடர்ந்து

“அவங்க வந்து நின்னா தான் பஞ்சாயத்து நடக்கும்… எதிராளி இல்லமா எப்படிம்மா இதை செய்ய முடியும்? கொஞ்சமும் யோசனை இல்லமா பேசுறதை இனிமேயாவது  குறைச்சுக்கோங்க”  என்று தடுத்து நிறுத்த நினைத்தவனின் முயற்சியும் வீணாய் போனது…

“எப்ப இருந்து நாட்டமையானீங்க சின்னதம்பி… அந்த பொண்ணே சொல்லிட்டா, இங்கே வந்ததில இருந்து அவளோட சந்தோசம், தூக்கம் எல்லாம் போச்சுன்னு. நான் பொய் சொல்லலே… உங்க கமலம் அத்தை கிட்ட கேட்டு பாரு.

அது மட்டுமா? அவ பேய் வந்த மாதிரி கத்துனத பார்த்துட்டு எப்பிடி இவள என் பையன் கூட சேர்ந்து வாழ அனுமதிக்க முடியும் சொல்லு? நான் சொன்னா சொன்னது தான்… இத மாத்த நினைக்காதீங்க” என்று தன்னுடைய பேச்சே இறுதி முடிவாய் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டவர்…

“எல்லா விசயத்தையும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டுப் போறதுக்கு இது பட்டணம் கிடையாது தம்பி…

ஒரு விசயத்தை கேட்டா கண்ணு காது வச்சு, நாலா திரிச்சு பேசுற, பொல்லாத சனங்க இருக்குற இடம் இது. ஒரு நாள் இங்கே இருந்தாலும் அவங்க பேசுறத தடுக்க முடியாது….

இதுக்காக தான் வேணாம்னு சொல்றோம்… அவ்ளோ லேசா எல்லாத்தையும் எடுத்துக்க மாட்டாங்க” என்று பொங்கி விட்டார்….

எவ்வளவு படித்தால் என்ன? அனுபவப்பட்டால் என்ன? சமயங்களில் மனிதர்கள் உணர்ச்சிகளின் கைப்பாவையாகி விடுகின்றனர்.

அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான பொங்கலில், அனைவரிடமும் தன்பக்க நியாயத்தை சொல்லி, தன் வாதத்தை பிரதானமாக்கினார் மீனாட்சி அம்மாள்…

கிரிதரனின் தந்தைக்கும் இந்த விசயத்தில் தன் கருத்தை சொல்ல அனுமதி கிடைக்கவில்லை.

தான் நினைப்பதையே நடத்திக் கொள்ளும் மனநிலை, யாரைப் பற்றியும் யோசிக்காது, ஒரு அழகான சிறிய குடும்பத்தை சிதற வைத்த பெருமையை பெற்று விட துடித்தார் மீனாட்சி அம்மாள்.

மகனிடம் இங்குள்ள நிலைமையை சொன்னதை விட, தன் பக்க நியாயத்தையே சொல்லி, நினைத்ததை நடத்தி விட முனைந்தார்.

“என்னம்மா விளையாடுறீங்களா? உங்க இஷ்டத்துக்கு பேசிகிட்டே போறீங்க? ரம்யா வீட்ல விசாரிக்கிறேன்… என்னோட வாழ்க்கைம்மா இது… நீங்க கோபப்படாதீங்க” என்ற
மகனின் சமாதான பேச்சு எடுபடவில்லை.

“அப்போ நாங்க சொல்லறதுல உனக்கு நம்பிக்கை இல்ல அப்படித்தானே? எனக்கு அவமானமா இருக்குடா,

என் வீட்டுல இருந்து, என் கையாள சோறு சாப்பிட்டவ. அந்த நன்றி கொஞ்சம்கூட இல்லாம என் மூஞ்சியில காறித்துப்பாத குறையா அவளுக்கு இங்கே நிம்மதி கிடைக்கலனு சொல்லிட்டு போறா.

அவ அம்மாகாரி பொண்ண நான் கட்டிவச்சு  டுமைபடுத்தின மாதிரி என்னையவே ஏசிப் பேசுறா, அப்பன்காரன் ஒரு படி மேல போய் எங்ககிட்ட கூட சொல்லமா பொண்ணை கூட்டிட்டு போறான்னா என்ன அர்த்தம்?

இன்னுமா உனக்கு விளங்கல? வெளிநாட்டுக்கு போயி உனக்கும் அவள மாதிரி புத்தி பிசகிபோச்சா என்ன?” என்றவரிடம்

“அதையெல்லாம் என்ன ஏதுனு கேப்போம்மா… வசரப்படாதீங்க, கொஞ்சம் நிதானமா இருங்க, உங்ககிட்ட வந்து அவங்கள பேச சொல்றேன்” என மகன் சமாதானப்படுத்த

“நான் எந்தவொரு சமாதானத்தையும் அவங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல… யாரையும் மன்னிக்கற நினைப்பும் எனக்கும் இல்ல, ஊர்ல கேக்கறவங்களுக்கு பதில் சொல்லி முடியல…

வகைதொகையா மகளுக்கு செய்ற மாதிரி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சியே…இப்போ அவ எங்கே போனா? அப்படி போற அளவுக்கு நீ என்ன கஷ்டம் குடுத்தேனு பாக்குறவங்க எல்லாம் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேக்குறத காது குடுத்து கேக்க முடியல”

“நானும் உங்க அப்பாவும் தலை குனிஞ்சி நிக்கிறோம்… நீ என்னடான்னா சாவகாசமா கேட்டு விசாரிப்போம்னு சொல்றே? பெத்தவங்களுக்கு மாரியாதை குடுக்க பழகிக்கோங்க தம்பி

எங்க சுத்துனாலும் இன்னோரடா பையன்னு எங்க பேர தான் நீங்க சொல்லணும்…அப்படி சொல்லும் போது நாம எப்பேர்ப்பட்டவங்க, நம்ம கௌரவம் என்னனு  கேக்குறவங்களுக்கு சொல்லாமலேயே தெரியணும்… அது தான் உனக்கும் மதிப்பு குடுக்கும்” என்றே தன் வாதத்தை தொடர்ந்தார்.

“ஏன்மா இப்படி ஒண்ணுமில்லாத விசயத்த, பேசிப்பேசியே பெருசாக்குறீங்க? கொஞ்சம் பொறுமையா யோசிங்க” என கிரிதரன் கெஞ்ச மசியவில்லை மீனாட்சி அம்மாள்.

“எது ஒண்ணுமில்லாத விஷயம் பெரியதம்பி? நம்ம வீட்டை பார்த்து நாலு பேர் சிரிக்கிற மாதிரியான காரியத்தை அவங்க செஞ்சுட்டு போயிருக்காங்க. இத நாங்க சும்மா விடணுமா? முடியாது…

நம்ம கெளரவத்த அசைச்சு பாக்குற மாதிரி மத்தவங்க நடந்தா, அவங்க சாவகாசத்த முளையிலேயே கிள்ளி எரிஞ்சுடனும், பக்கத்துல வச்சு வேடிக்கை பாக்கக்கூடாது.

இதுக்கும் மேல உனக்கு அந்த பொண்ணு தான் வேணும்னு நீ நினைச்சா எங்கள மறந்துரு, ஒரு பஞ்சாயத்து கட்டாயமா நடந்தே ஆகணும்….

அது உன் பொஞ்சாதிய தள்ளி வைக்கிறதுக்கா நடத்துனாலும் சரி, இல்ல நீ எங்களுக்கு புள்ள இல்லன்னு உன்ன நாங்க தள்ளி வைக்கிறத்துக்கா நடந்தாலும் சரி.

எது உனக்கு சௌகரியம்னு முடிவு பண்ணிக்கோ… இதுக்கும் மேல நான் பேசமாட்டேன்… அவ்ளோ தான்” என்று தன் வாதத்தை நீளமாய் முடித்து கிரிதரனை வாயடைக்க செய்து விட்டார் அவனின் தாய்…

“ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ பெரியதம்பி… எல்லோருக்கும் அவங்க ஆசைப்பட்டது போலவே வாழ்க்கை அமைஞ்சுடாது….

நம்மளை மீறியும் இது நடக்கணும்னு இருந்தா அது நடந்தே தான் தீரும்… அதனாலே எனக்கு புத்திமதி சொல்லறத விட்டுட்டு என்ன செய்ய? ஏது செய்யனும்னு முடிவு பண்ணிக்கோ”… என்று ஆங்காரமாய் சொல்லி முழங்கி விட்டார்…

இப்படியாய் கிரிதரனுக்கு கழுத்தில் கத்தியை லாவகமாய் வைத்து விட்டு, தன் வாதத்தை, பிரிதிவாதியும் தப்பென்று சொல்ல முடியாத படி பேசி, தன் தரப்பு நியாயத்தை விளக்கி விட்டார்  மீனாட்சி அம்மாள்.