MP-19

MP-19

காலையிலேயே மகனோடும் மனைவியோடும் வந்துவிட்டான் கரிகாலன். மாமியார் நேற்றுச் சொன்ன வார்த்தைகள் ரோஸியை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.
இந்தியாவில் இருக்கும் வரை குழந்தையோடாவது அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கணவனும் மனைவியும் கிளம்பி வந்துவிட்டார்கள்.
மகனோடும் மருமகளோடும் எந்த விதப் பேச்சுவார்த்தைகள் இல்லாத போதும் பேரனைக் கண்டவுடன் ஓடி வந்து வாங்கிக் கொண்டார் தில்லை வடிவு.
ரவியும் பாட்டியோடு நன்றாகவே ஒட்டிக் கொண்டான். அதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு.
“மாமா.”
“சொல்லு கரிகாலா.” இது அடைக்கல நம்பி.
“இந்தக் கல்யாண விஷயத்துல ராஜா ரொம்பத் தீவிரமா இருக்கான். அதனால நீங்க எந்த எதிர்ப்பும் சொல்லாதீங்க மாமா.”
“ஓ…”
“நான் இந்தியாக்கு வர்றதுக்கு முன்னாடியே எங்கிட்ட இதைப்பத்தி பேசிட்டான். நானும் ஒரு சில விஷயங்களைப் பட்டும் படாமலும் எடுத்துச் சொன்னேன். ஆனா எதையும் ஏத்துக்கலை.”
“ம்…”
“நான் அதுக்கப்புறமா விவாதிக்கலை. விட்டுட்டேன். சுமித்ரா மேல நம்மை எல்லாரையும் விட ராஜாக்கு ரொம்பவே அக்கறை இருக்கு. அதைப் பார்க்கிறப்போ நம்ம வருத்தம் அனாவசியமோ ன்னும் தோணுது.”
“அதுவும் சரிதான். ஆனா எதுவா இருந்தாலும் அவங்களே பாத்துக்கட்டும் கரிகாலா.‌ நாம எதையும் ஆரம்பிச்சு வெக்க வேணாம். மாப்பிள்ளையோட அம்மா ஒரு மாதிரியான ஆளு. அவங்களை நாம பகைச்சுக்க வேணாம்.”
“சரி மாமா.”
“ஸ்டீஃபன் என்ன சொல்லுறாரு?”
“பொண்ணு அளவுக்குப் பையன் தீவிரமில்லை மாமா. ஆனா ராஜா ஸ்டீஃபன் கிட்டயும் பேசியிருக்கான். பொண்ணு இந்த அளவுக்குப் போயிருக்குன்னு தெரிஞ்ச உடனே அவனும் கொஞ்சம் இளகிட்டான்.”
“தப்பில்லை கரிகாலா. இப்படி ஒரு நிலைமையில எல்லாரும் கரையத்தான் செய்வாங்க.”
இங்கே இப்படிப் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருக்கும் போது அங்கே கண்ணபிரானைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.
“மாமா… அம்மாவைப் பார்த்து இந்த விஷயத்தைப் பேசினீங்களா?”
“உங்க மாமனார் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி பார்த்துப் பேசிட்டுத்தான் வந்தேன் விஜயா.”
“என்ன சொன்னாங்க?”
“பெத்த அம்மாவே பொண்ணு மேல அக்கறைப் படாதப்போ அவங்களைக் கோபிக்கிறதுல லாபம் இல்லைப்பா.”
“ஓ… வார்த்தைகள் விரும்பத்தகாததா இருந்ததுதா மாமா?” இதை விஜயேந்திரன் கேட்ட போது கண்ணபிரான் மௌனம் சாதித்தார்.
“பரவாயில்லை… சொல்லுங்க மாமா. சுமித்ராவைத் தப்பாப் பேசினாங்களா?”
“ம்…” பலத்த யோசனைக்குப் பின் பெரியவரின் தலை மேல் கீழாக ஆடியது. விஜயேந்திரன் ஒரு முறை கண்களை அழுந்த மூடித் திறந்தான்.
“சரி… அதை விடுங்க மாமா. ஸ்டீஃபனுக்கு உறவுன்னு சொல்லிக்க இருக்கிறது கரிகாலனும் ரோஸியும் தான். அவனுக்கு எந்த ஒரு நல்லது ன்னாலும் முன்னின்று பண்ண வேண்டியது அவங்க ரெண்டு பேரும் தான்.”
“ம்…”
“அவங்க இந்தியால இருக்கும் போதே சிம்பிளா ஒரு நிச்சயதார்த்தத்தைப் பண்ணிடலாம் மாமா. பின்னாடி மங்கையோட படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா கல்யாணத்தை வச்சுக்கலாம். நீங்க என்ன மாமா நினைக்கிறீங்க?”
“ஆமா விஜயா. எனக்கும் அது சரின்னு தான் தோணுது. இதுக்கப்புறம் அவங்க இந்தியா வர இன்னும் ரெண்டு மூனு வருஷம் ஆகலாம். நினைச்ச மாதிரி வர முடியாதில்லை?”
“ஆமா. நான் கரிகாலன் கிட்டயும் ஸ்டீஃபன் கிட்டயும் பேசுறேன். நீங்க மேலே ஆகவேண்டியதைப் பாருங்க மாமா.”
“சரி விஜயா.”
மாமாவோடு பேசி முடித்த கையோடு போஸ்ட் ஆஃபீஸ் போய் ஸ்டீஃபனோடும் பேசி இருந்தான் விஜயேந்திரன்.
“நீங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன் ண்ணா.”
“ஸ்டீஃபன்… மங்கையோட அம்மாக்கு இதுல அவ்வளவு பெருசா இஷ்டம் இல்லை. அவங்க ஏதாவது ஏடாகூடமா நடந்தாலும் நீ எனக்காகக் கொஞ்சம் பொறுத்துக்கணும்.”
“அடடா! அப்போ மாப்பிள்ளை கெத்துக் காமிக்க முடியாதா ண்ணா?”
“அடேய்!” வாய்விட்டுச் சிரித்தான் விஜயேந்திரன்.
“பின்ன என்ன ண்ணா. மங்கைக்காக இல்லைன்னாலும் உங்களுக்காகவாவது நான் இதையெல்லாம் பொறுத்துக்க மாட்டேனா?”
“ஸ்டீஃபன்?”
“சொல்லுங்க ண்ணா.”
“இந்தக் கல்யாணத்துல உனக்கு முழு சம்மதம் தானே?”
“என்ன ண்ணா திடீர்னு இப்படிக் கேக்குறீங்க?”
“சொல்லு ஸ்டீஃபன்.”
“மங்கை அளவுக்குத் தீவிரமான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன். ஆனா மங்கையை நான் மறுக்கிறதுக்கு எந்தக் காரணமும் இல்லை ண்ணா. எங்க அண்ணா மாதிரிக் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சுட்டு அவஸ்தைப் படுறதை விட நாங்க எல்லாம் உஷாராக் கல்யாணத்துக்கு அப்புறமா காதலிக்குற ஆளுங்க.”
“பார்த்தியா… நீ என்னையே கலாய்க்கிற!”
“அது மட்டுமில்லாம அண்ணா எது செஞ்சாலும் அதுல நிச்சயமா எனக்கு நன்மை மட்டும் தான் இருக்கும்.”
“கண்டிப்பா ஸ்டீஃபன். மங்கை ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு ரொம்பவே பொருத்தமா இருப்பா.”
“தெரியும் ண்ணா.” ஸ்டீஃபனோடு பேசி முடித்து விட்டு மீதமிருந்த வேலைகளில் மூழ்கிப் போனான் விஜயேந்திரன். நேரம் மூன்றைத் தாண்டவும் வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.
நேற்று இரவு ஆர்க்கிட் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்த போதே நள்ளிரவு ஆகிப்போனது. காலையிலும் சுமித்ராவோடு சரியாகப் பேசவில்லை.
எல்லாவற்றையும் அசை போட்டபடி வேட்டியின் நுனியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்துக் கொண்டு அந்தப் புரத்தை நோக்கிப் போனான் அரண்மனைக்காரன். கலவரமான முகத்தோடு எதிரே வந்து நின்றாள் கங்கா.
“என்னாச்சு கங்கா?”
“ஐயா… அது வந்து…”
“என்னாச்சுன்னு கேக்குறேன் இல்லை!” விஜயேந்திரனின் குரல் உயர்ந்தது.
“அம்மா… சுமித்ரா ம்மாவை சத்தம் போட்டாங்க.”
“அத்தை வந்தாங்களா?”
“இல்லை ஐயா. ஆனா மங்கை மங்கைன்னு சொன்னது காதுல விழுந்துச்சு ஐயா.”
“இப்போ சுமித்ரா எங்க?”
“மாடியில இருக்காங்க ஐயா. எவ்வளவு சொல்லியும் கேக்காம ரொம்ப நேரமா நாட்டியம் ஆடிக்கிட்டு இருக்காங்க.”
கங்கா சொல்லி முடிக்கு முன் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன். ரூமிற்குள் ஏதோவொரு தில்லானாவை ஒலிக்க விட்டுக் கொண்டு உலகம் தெரியாமல் ஆடிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.
தூக்கிச் சொருகிய புடவை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டி இருந்தது. டேப் ரெக்கார்டரின் ஒலி குறைவாக இருந்ததால் அவள் அணிந்திருந்த சதங்கைகள் அவள் மனதின் ஓலத்தைத் தெளிவாகக் கணவனுக்கு எடுத்துச் சொன்னது.
“சுமித்ரா!” அவன் அதட்டலுக்குப் பலனின்றிப் போகவே மனைவியின் கையைப் பிடித்து அவள் ஆட்டத்தை நிறுத்தினான்.
இன்னொரு கையால் டேப் ரெக்கார்டரின் வயரைப் பிடுங்கி எறிய அது வாயை மூடிக் கொண்டது.
“விடுங்க விஜி. ஆட்டத்தைப் பாதியில நிறுத்தாதீங்க ன்னு பல தடவை உங்களுக்குச் சொல்லி இருக்கேன்.” திமிறிய மனைவியை சுலபமாக அடக்கினான் விஜயேந்திரன்.
“இப்போ எதுக்கு இவ்வளவு ஆவேசமா ஒரு ஆட்டம்?”
“என்னோட ஆவேசத்தை என் ஆட்டத்துல மட்டும் தான் என்னால காட்ட முடியும்.” சொல்லும் போதே கண்கள் கலங்கியது சுமித்ராவிற்கு. மனைவியின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான் விஜயேந்திரன்.
“ஏன்டா இப்படியெல்லாம் பேசுறே?” அவளைத் தனது ரூமிற்கு அழைத்து வந்தவன் ஃபேனைச் சுழல விட்டான்.
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தவளின் பாதங்கள் சிவந்து போயிருந்தன. அவள் அருகே அமர்ந்தவன் அந்தக் கால்களில் இருந்த சதங்கைகளை அகற்றினான்.
நிச்சயதார்த்தத்தின் போது ஸ்டீஃபனிடம் அவன் அனுப்பிய அதே சதங்கைகள். அதைப் பார்த்த போது நிகழ்காலத்துப் பிரச்சினைகள் அனைத்தும் மறந்து போனது விஜயேந்திரனுக்கு.
“சுமி…”
“ம்…”
“இந்த நாட்டியத்தை எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டிப் போட்டிடு.”
“ஏன்?”
“சொன்னாச் செய்யணும்.”
“அதான் ஏன்னு கேக்குறேன் இல்லை? காரணத்தைச் சொல்லுங்களேன்.”
“நாட்டியப் பேரொளி ஆசையாசையா ஒன்னு கேட்டாங்களே. அது வேணாமாமா அவங்களுக்கு? இப்படித் தையாத் தக்கா ன்னு குதிச்சா என்னத்துக்கு ஆகிறது?” கணவனின் பேச்சில் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் சுமித்ரா.
“சொன்னாப் புரிஞ்சுக்கணும் சுமித்ரா.”
“ம்…”
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டுக் கிளம்பலாம் சுமி. நாம ரெண்டு பேரும் இன்னைக்கு வெளியே போறோம்.”
“இன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேக்க மாட்டீங்களா?”
“அதைப் பத்தி நாம இப்போ பேச வேணாம் சுமித்ரா. நான் சொன்னதைச் செய்டா. அப்புறம் சாவகாசமாப் பேசலாம்.” நிதானமாகச் சொன்னவன் தானும் மனைவியின் அருகில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
******************
மாலைக் காற்று சிலுசிலுவென உடலைத் தழுவ அந்த ப்ளாக் அம்பாசிடர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
“எங்க போறோம் விஜி?” கேட்ட மனைவிக்குப் புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது. அவளுக்குத் தெரியும். இந்தப் புன்னகை வந்த பிறகு அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது.
அமைதியாகச் சுற்றுப் புறத்தை ரசித்தபடி இருந்தாள் சுமித்ரா. கார் ஓர் வீட்டின் முன்பாகப் போய் நின்றது. வீடு என்று சொல்ல முடியாத விதத்தில் கொஞ்சம் அளவிற் பெரியதாக இருந்தது.
“இறங்கு சுமித்ரா.” மனைவி இறங்கவும் அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனான் விஜயேந்திரன்.
வீட்டின் அமைப்பு அரண்மனையைப் பார்த்த மாதிரித்தான் தோன்றியது சுமித்ராவிற்கு. அழகான பெரிய கருங்கற் தூண்களும் வேலைப்பாடுகள் அமைந்த நிலைகளும் குளுகுளு என்றிருந்த பளிங்குத் தரையும் கண்ணைக் கவர்ந்தன.
“அரண்மனை மாதிரியே இருக்கு விஜி இந்த வீடு.” ஆச்சரியப்பட்ட மனைவியைப் பார்த்துச் சிரித்தான் விஜயேந்திரன்.
“என்ன சிரிக்கிறீங்க?”
“அரண்மனைக்காரனோட வீடு அரண்மனை மாதிரித்தானே இருக்கும்.”
“ஓ… இது… அப்படின்னா…” மனைவியின் தயக்கம் கணவனுக்கு அத்தனை தூரம் ரசிக்கத்தக்கதாக இருக்கவில்லை.
“இந்த வீடு இந்த விஜயேந்திரனுக்குச் சொந்தம் சுமித்ரா. அதாவது இது உன்னோட வீடு. இதுக்கும் மத்தவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, புரிஞ்சுதா?”
விஜயேந்திரன் போட்ட சத்தத்தில் அவன் குரல் அந்த வீட்டின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலித்தது. சுமித்ரா தலையைக் குனிந்து கொண்டாள்.
உண்மையிலேயே அவளுக்கு அது யாருக்குச் சொந்தமான வீடு என்று தெரிய வேண்டி இருந்தது. அரண்மனை அமிழ்தவல்லியின் பெயரில் இருப்பது அவளுக்குத் தெரியும். ஆனால் மனதில் இருப்பதை அத்தனை வெளிப்படையாக அவளால் கேட்க முடியவில்லை.
அமிழ்தவல்லி சம்பந்தப்பட்ட அனைத்துமே அவளுக்குக் கசந்தன. மனைவியின் முகத்தில் வாட்டத்தைக் கண்டவன் அவளருகில் வந்தான்.
“சுமித்ரா! நாம புதுசாக் கல்யாணம் ஆனவங்க. இப்போ நாம அனுபவிக்கிற இந்த நாட்கள் நம்ம வாழ்நாள் முழுதுக்கும் நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய நாட்கள். அதை நீ வீணடிக்காத.”
“இன்னைக்கு என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியாது விஜி.”
“தெரியும் சுமித்ரா.”
“திரும்பத் திரும்ப உங்க அம்மா என்னையே காயப் படுத்துறாங்க. எனக்கும் மங்கையோட கல்யாணத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை ன்னு ஏன் அவங்களுக்குப் புரிய மாட்டேங்குது?”
“இனி எந்தப் பிரச்சினையும் வராது சுமித்ரா.”
“உங்களுக்குத் தெரியாது விஜி. என்னைப் பார்த்தாலே அவங்களுக்குக் கோபம் வருது. ஏதாவது சொல்லிடுறாங்க.”
“பார்க்கிறதால தானே கோபம் வர்றதும் வார்த்தைகளை விடுறதும்? இனிப் பார்க்கவே வேணாம். இந்த அரண்மனைக்காரனோட பொண்டாட்டி இனி யார்க்கிட்டேயும் ஏச்சும் பேச்சும் வாங்க வேணாம். அது என்னோட அம்மாவா இருந்தாலும் சரிதான்.”
“விஜி?”
“இனி நாம ரெண்டு பேரும் இங்க தான் இருக்கப் போறோம். கங்காவை வரச் சொல்லி இருக்கேன். சமையலை அவ பார்த்துக்குவா. வெளி வேலைகளுக்கு கணக்கர் ஒரு ஆளை அனுப்புறேன்னு சொல்லி இருக்கார். அதை நான் பார்த்துக்கிறேன். என் பொண்டாட்டியோட முழு வேலை இனி என்னைக் கவனிக்கிறது மட்டும் தான். புரியுதா?”
அங்கிருந்த ஊஞ்சலில் அமைதியாக உட்கார்ந்து விட்டாள் சுமித்ரா. ஏற்பாடு நன்றாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள அவளால் முடியவில்லை.
திருமணம் முடிந்து இப்போதுதான் நான்கு மாதங்கள் ஆகிறது. அதற்குள் தனிக்குடித்தனம் என்றால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இத்தனை நாளும் ஒன்றாக இருந்த தாயையும் மகனையும் தான் பிரித்து விட்டதாகப் பேச்சு வராதா?
மற்றவர்கள் பேசுவது ஒரு புறமிருக்கட்டும். இத்தனை வயதிற்கு மேல் தனது மாமியார் தனியாக அந்த அரண்மனையில் இருப்பது நியாயமா?
மனைவியின் முகத்தையே பார்த்திருந்த விஜயேந்திரன் லேசான புன்னகையோடு அவள் அருகில் போனான். அவனுக்குத் தெரியும். சுமித்ரா இந்த ஏற்பாட்டிற்கு அத்தனை சீக்கிரத்தில் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று.
“என்னாச்சு சுமித்ரா?”
“இல்லை விஜி. இது சரி வராது. நாம அங்கேயே போகலாம்.”
“அரண்மனைக்காரன் முடிவெடுத்தா எடுத்தது தான் சுமித்ரா. அதுல எந்த மாற்றமும் இல்லை.”
“அப்படி இல்லை விஜி. இத்தனை வயசுக்கு மேலே உங்கம்மா தனியா இருக்கிறது நியாயம் இல்லை. எம்மேல தான் அத்தனை பழியும் வந்து விழும்.”
“நான் வேணும்னு நினைச்சிருந்தா அம்மா உங்கிட்ட இப்படி நடந்திருக்க மாட்டாங்க. ஊர் உலகத்தைப் பத்தி என்னைக்குமே நான் கவலைப்பட்டவன் கிடையாது. அது உனக்கு நல்லாவே தெரியும் சுமித்ரா.”
“விஜி நான் சொல்லுறதை…” அவன் பார்த்த பார்வையில் சுமித்ராவின் வார்த்தைகள் பாதியிலேயே நின்று போயின.
சற்று நேரத்திலெல்லாம் கங்காவும் அங்கு வந்து சேர்ந்து விட்டாள். கலகலப்பிற்குப் பஞ்சமில்லாமல் போனது. விஜயேந்திரனும் ஏதோ வேலையாக வெளியே போக கங்காவின் சத்தம் தான் வீடு முழுவதும் கேட்டது.
“நான் தான் சொன்னேனில்லை சுமித்ரா ம்மா. ஐயா உங்களை யார்கிட்டேயும் விட்டுக் குடுக்க மாட்டாங்க. இப்பதான் உங்களுக்கு நிம்மதி. நினைச்ச நேரத்துக்கு நாட்டியம் ஆடலாம். ஏம்மா… குழந்தைங்களை இங்க நாட்டியம் கத்துக்க வரச் சொல்லலாம் இல்லை?”
தன் பாட்டில் பேசிக் கொண்டிருந்தவள் அப்போது தான் சுமித்ராவிடமிருந்து எந்தப் பதிலும் வராமற் போகவும் திரும்பிப் பார்த்தாள்.
முகத்தில் யோசனை தெரிய இமைக்காமல் அமர்ந்திருந்தாள் பெண்.
“சுமித்ரா ம்மா! என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“கங்கா!”
“சொல்லுங்க ம்மா.”
“இந்த ஏற்பாட்டுல எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை கங்கா.”
“ஏம்மா?”
“ஆயிரந் தான் இருந்தாலும் அவங்க ஐயாவோட அம்மா இல்லையா? இத்தனை வயசுக்கு மேல அவங்களைத் தனியா விட்டுட்டு ஐயா இப்படி வர்றது சரியா?”
“அந்த எண்ணம் அவங்களுக்கும் இருக்கணுமில்லை ம்மா. இத்தனை வயசுக்கு மேல வீட்டுக்கு வந்த மருமகளை இப்படியெல்லாம் பேசுறோமேன்னு அவங்க யோசிச்சாங்களா ம்மா?”
“நான் அவங்களுக்குப் பிடிக்காத மருமகள் கங்கா.”
“பிடிக்குதோ பிடிக்கலையோ, நீங்க தானே ஐயாவோட பொண்டாட்டி. அது இல்லைன்னு ஆகிடுமா? இல்லை அதை மாத்தத்தான் முடியுமா? உங்களுக்குத் தெரியாது ம்மா. அரண்மனையோட சம்பிரதாயப் படி இருபத்தைஞ்சு வயசுக்குள்ளேயே கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க. முப்பதை நெருங்கியும் ஐயா கல்யாணம் பண்ணாம இருந்தது ஊர்ல இருக்கிற அத்தனை பேருக்கும் அவ்வளவு வருத்தத்தைக் குடுத்தது.”
கங்கா பழங்கதை பேசவும் ஆவலே உருவாகக் கேட்டிருந்தாள் சுமித்ரா.
“பெரிய ஐயா இருந்த வரைக்கும் அரண்மனையோட சம்பிரதாயங்கள் வேறே ம்மா. எப்போ எல்லாம் நம்ம ஐயாவோட கட்டுப்பாட்டுக்குக் கீழே வந்துச்சோ அப்போ தான் லேசான சலசலப்பு அரண்மனைக்குள்ள ஆரம்பிச்சிச்சு.”
“என்னாச்சு கங்கா?”
“நம்ம ஐயா எல்லாரோடையும் எந்த பேதமும் பார்க்காமப் பழகுவாங்க. அரண்மனை ங்கிற கெத்து படிப்படியா சரிய ஆரம்பிச்சுது. அந்த நேரம் பார்த்து ஐயாவும் கல்யாணத்துல நாட்டப்படலை. வந்த வரனையெல்லாம் தட்டிக் கழிச்சாங்க.”
“அவங்க அம்மா ஒன்னும் சொல்லலையா?”
“சில நேரம் வாக்குவாதம் நடக்கும். ஐயா பிடிகுடுக்க மாட்டாங்க. நாங்க என்னத்தைக் கண்டோம். வந்த வரன் ஒன்னும் ஐயாக்குப் பிடிக்கலைன்னு தான் நினைச்சோம். ஆனா உலக அழகியைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்தாலும் எங்க ஐயா வேணாம்னு தான் சொல்லி இருப்பாங்க ன்னு பின்னாடி தானே புரிஞ்சுது!”
கங்காவின் பேச்சில் தலையைக் குனிந்து கொண்டாள் சுமித்ரா. முகம் சிவந்து போனது. தன் எதிரில் நாணத்தோடு உட்கார்ந்திருக்கும் அந்தப் பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த விசுவாசி.
“எத்தனை அழகா இருக்கீங்க ம்மா. கல்யாணமே வேணாம்னு இருந்த தன்னோட மகன் உங்களைக் கைகாட்டும் போது… உங்களைத் தாங்க வேணாம். இப்படிக் கேவலப் படுத்தாம இருக்கலாம் இல்லை? ஐயா செஞ்சதுல எந்தத் தப்பும் இல்லைம்மா. மனசைப் போட்டுக் குழப்பிக்காம நீங்க சந்தோஷமா இருங்க. எங்க ஐயா எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்.”
முடிவாகச் சொன்னவள் எழுந்து இரவுச் சமையலைப் பார்க்கப் போய்விட யோசனையில் மூழ்கினாள் சுமித்ரா. புது வீடு தனக்கும் கணவனுக்கும் ஒரு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று தெரிந்தாலும் மனது ஏற்க மறுத்தது.
**************
மூன்று வாரங்கள் கடந்து போயிருந்தன. புதிய வீட்டில் விஜயேந்திரனுக்கும் சுமித்ராவிற்கும் வாழ்க்கை இனிமையாகக் கழிந்தது.
ஆரம்பத்தில் மாமியார் இங்கே வந்து ஏதாவது சண்டை போடுவாரோ என்ற பயம் சுமித்ராவிற்கு நிறையவே இருந்தது. ஆனால் அதைப் பொய்ப்பித்திருந்தார் அமிழ்தவல்லி.
கண்ணபிரான் ஏற்கனவே திட்டமிட்ட படி மகளின் நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். மனைவியை அவர் கவனத்தில் கொள்ளவே இல்லை.
அம்மாவின் இந்தப் பாரா முகம் மங்கைக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.
‘அப்பா! அம்மாக்குப் பிடிக்காம எந்த ஏற்பாட்டையும் பண்ணாதீங்கப்பா.’
‘சரி… பண்ணலை. அப்போ நான் பார்க்கிற மாப்பிள்ளையை நீ கட்டிக்கிறியா ம்மா?’
‘நான் கடைசி வரைக்கும் உங்க கூடவும் அம்மா கூடவும் இருந்துக்கிறேனே ப்பா.’ மகளை எதுவும் சொல்ல முடியாத கண்ணபிரான் மனைவியை முறைத்து விட்டுப் போய்விட்டார்.
நிச்சயதார்த்த வேலைகளில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை. கரிகாலன் மூன்று வார விடுமுறையிலேயே இந்தியா வந்திருந்ததால் இன்னும் ஒரு வாரம் நீட்டிக் கொண்டான். ஸ்டீஃபனுக்கும் அதிக நாட்கள் விடுமுறை கிடைக்காததால் ஒரு வார விடுமுறையில் இந்தியா வந்து நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு எல்லோரும் ஒன்றாகக் கனடா போவதாகத் தீர்மானிக்கப் பட்டிருந்தது.
“அண்ணா!” ஏர்போர்ட்டிற்கு அழைக்க வந்திருந்த விஜயேந்திரனைக் கட்டிக் கொண்டான் ஸ்டீஃபன்.
“அண்ணி வரலையா ண்ணா?”
“வேலை நிறைய இருக்கில்லையா ஸ்டீஃபன். அதோட நம்ம வீடு தானே மாப்பிள்ளை வீடு. ஏற்பாடெல்லாம் பண்ண வேணாமா?”
விஜயேந்திரன் கேட்கவும் ஸ்டீஃபனும் புன்னகைத்துக் கொண்டான்.‌ நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பிக்கும் போதே விஜயேந்திரன் கரிகாலனிடம் உறுதியாகச் சொல்லி விட்டான்.
‘இங்கப் பாரு கரிகாலா! ஸ்டீஃபன் உன் மச்சினனா இருக்கலாம். ஆனா என்னோட தம்பி. என் வீடு தான் மாப்பிள்ளை வீடு. இதுல எந்த மாற்றமும் இல்லை புரியுதா?’
‘சரி ராஜா.’ எந்தப் பந்தாவும் பண்ணாமல் விட்டுக் கொடுத்து விட்டான் கரிகாலன்.
தன் வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வந்த ஸ்டீஃபனுக்கு என்ன செய்தாலும் தகும் என்பதே அரண்மனைக்காரனின் எண்ணமாக இருந்தது.
கார் அரண்மனையை நோக்கிப் போகாமல் வேறு திசையில் செல்லவும் ஸ்டீஃபன் அண்ணனைத் திரும்பிப் பார்த்தான்.‌
“அண்ணா! எங்க போறோம்?”
“சொல்லுறேன் ஸ்டீஃபன். நீ அமைதியா இரு.” காரை நேராக வீட்டின் முன் கொண்டு நிறுத்தும் வரை விஜயேந்திரன் எதுவும் பேசவில்லை.
“யார் வீடு ண்ணா இது?”
“இறங்கு ஸ்டீஃபன். நம்ம வீடுதான்.” அண்ணாவின் பதிலில் ஆச்சரியப்பட்டான் இளையவன். இவர்கள் தனிக்குடித்தனம் வந்ததை ஸ்டீஃபன் வரை கொண்டு செல்லவில்லை அரண்மனைக்காரன்.
“வாங்க ஸ்டீஃபன்.” சுமித்ரா வரவேற்கவும் சுமித்ராவின் புறமாகத் திரும்பியவன்,
“அண்ணீ! என்ன அண்ணி இதெல்லாம்? நீங்க ஏன் இங்க இருக்கீங்க?” என்றான் குழப்பமாக.
“முதல்ல உள்ள வாங்க மாப்பிள்ளை சார். அப்புறமா உங்க அண்ணாவே எல்லாத்தையும் சொல்லுவாங்க.”
ஸ்டீஃபனுக்கு எல்லாமே பெருங் குழப்பமாக இருந்தது. சுமித்ரா சற்று நகர்ந்த நேரமாகப் பார்த்து விஜயேந்திரனைப் பிடித்துக் கொண்டான்.
“அண்ணா! நீங்க இப்போ இங்க என்ன நடக்குதுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?”
“பெருசா ஒன்னுமில்லை ஸ்டீஃபன்.”
“ஏன் ண்ணா? அரண்மனையை விட்டுட்டு நீங்க இந்தக் குட்டி வீட்டுல வந்து இருக்கிறது உங்களுக்குச் சின்ன விஷயமா?”
“என் சுமித்ராக்கு மரியாதை குடுக்காத இடம் எவ்வளவு பெருசா இருந்தா எனக்கென்ன ஸ்டீஃபன்?”
“என்ன ண்ணா திடீர்னு? நீங்க கல்யாணம் பண்ணும் போதே உங்கம்மாக்கு அண்ணியைப் பிடிக்காது. இருந்தாலும் மரியாதையாத் தானே நடத்தினாங்க?”
விஜயேந்திரன் எவ்வளவு மறைக்க முயன்றும் ஸ்டீஃபன் சரியாக நாடியைப் பிடித்தான்.
“இந்தக் கல்யாணத்துல அம்மாவுக்கும் இஷ்டமில்லை ஸ்டீஃபன். அந்தக் கோபம் அத்தனையும் சுமித்ரா மேல திரும்ப ஆரம்பிச்சிடுச்சு.”
“ஓ…” அதற்கு மேல் இளையவனுக்கு எந்த விளக்கமும் தேவைப் படவில்லை. மௌனமாகவே இருந்தான்.
“இங்கப்பாரு ஸ்டீஃபன். உனக்கு இதுல எந்தச் சங்கடமும் தேவையில்லை. சொல்லப்போனா நானும் சுமித்ராவும் இங்க தான் நிம்மதியா இருக்கோம். எங்க வாழ்க்கையில சந்தோஷம் ன்னா என்னன்னு காட்டினவன் நீ. உனக்காக இந்த அண்ணன் எந்த எல்லைக்கும் போவான் ஸ்டீஃபன்.”
“அண்ணா!”
“சீக்கிரமாச் சாப்பிட்டுட்டுக் கிளம்பு. ரோஸியும் கரிகாலனும் உனக்காகக் காத்திருப்பாங்க.”
அதற்கு மேல் ஸ்டீஃபனை அதிகம் சிந்திக்க விடாத விஜயேந்திரன் சாப்பிட்டு முடித்ததும் அவனை அப்படியே கையோடு அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
கார் கரிகாலன் வீட்டிற்குப் போகாமல் நேராக ஆர்க்கிட் தோட்டத்தில் போய் நின்றது.
“எப்படிப் போகுது ண்ணா உங்க ஆர்க்கிட் பிஸினஸ்?”
“ம்… இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு ஸ்டீஃபன். அதை விடு. உனக்காக ஒரு முக்கியமான விசிட்டர் உள்ள காத்துக்கிட்டு இருக்காங்க.” காரை விட்டு இறங்கிய படி விஜயேந்திரன் சொல்லத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான் இளையவன்.
“அண்ணா!”
“பரவாயில்லை… அண்ணா தான் பர்மிஷன் குடுக்கிறேன் இல்லை. போய்ப் பேசு.”
“தான்க் யூ ண்ணா.” விஜயேந்திரனை இறுக அணைத்தவன் ஒரு புன்னகையோடு உள்ளே போனான்.
பூக்களோடு பூவாக நின்றபடி அந்த நீல வானத்தை வெறித்துப் பார்த்திருந்தாள் வளர்மங்கை. புடவை கட்டியிருந்தாள்.
நான்கு மாதத்திற்கு முன்பு தான் பார்த்த மங்கை இவளில்லை என்று ஸ்டீஃபனுக்குத் தோன்றியது. நான்கைந்து முறை பார்த்திருப்பான். இரண்டு முறை பேசி இருப்பான். ஆனால் இன்று அவள் தான் தனது வாழ்க்கை என்று முடிவாகி இருக்கிறது.
நான் அவளுக்குக் கிடைக்க மாட்டேன் என்று தெரிந்த போது உயிரையே விடத் துணிந்தாளா இவள்! அந்த நினைப்புத் தோன்றிய போது ஸ்டீஃபனின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
விஜயேந்திரனின் கல்யாணத்தின் போது விளையாட்டுப் பிள்ளை போல அங்குமிங்கும் ஓடியாடித் திரிந்தவள் இன்று பெரிய மனுஷி போல நின்றிருந்தாள்.
“ம்க்கும்…” அந்தச் சத்தத்தில் விலுக்கென்று திரும்பினாள் மங்கை. கண்கள் இரண்டும் இமைக்காமல் ஸ்டீஃபனையே பார்த்திருந்தன.
இருவருக்கும் பேசத் தோன்றவில்லை. ஒரு வித மோன நிலையில் அப்படியே நின்றிருந்தார்கள். முதலில் சுதாரித்துக் கொண்ட ஸ்டீஃபன் தான்,
“மங்கை.” என்றான்.
அவன் அழைத்தது தான் தாமதம் மங்கையின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது.
“ஏய் மங்கை! எதுக்கு இப்போ அழற?” அவன் பதறிப் போகவும் கண்களைத் துடைத்துக் கொண்டவள் தலையை ஆட்டினாள்.
“ஒன்னுமில்லை.”
“ஒன்னுமில்லாததுக்கு அழுவாங்களா?”
“எனக்கு அழணும் போல தோணுது. விடுங்களேன்.”
“இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணுறே. முட்டாளா நீ? இந்த ஸ்டீஃபன் இல்லைன்னா வேற யாராவ…” ஸ்டீஃபன் முடிக்கும் முன்னர் ஓங்கி ஒரு அறை அவன் கன்னத்தில் விட்டாள் வளர்மங்கை.
“இன்னொரு தரம் இப்படிப் பேசினீங்க என்னை உயிரோட பார்க்க மாட்டீங்க.”
“மங்கை!”
“நான் இல்லைன்னா இன்னொருத்தன் ன்னு சொல்லுற அளவுக்கு உங்களுக்கு என் காதல் அத்தனை சுலபமாப் போச்சா?”
“அப்படியில்லை மங்கை.”
“பேசாதீங்க. என்னோட ஆசையைச் சொல்லிக் கடிதம் போட்டா ஏதோ முட்டாளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிற மாதிரி விளக்கமா லெக்சர் அடிப்பீங்களா நீங்க?
விக்கி அழுதவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஸ்டீஃபன்.
“அப்படியில்லை மங்கை. நடக்காதுன்னு தெளிவாத் தெரிஞ்சதுக்கு அப்புறமா உனக்கு வீணான நம்பிக்கைகளைக் குடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.”
“ஏன்? இப்போ நடக்கலையா?”
“நடக்குது. உன்னோட அம்மாவுக்கு விருப்பமில்லாம, அண்ணனும் அண்ணியும் அரண்மனையில இல்லாம, இப்படி எத்தனையோ வெறுப்புகளைச் சம்பாதிச்சிக்கிட்டு நடக்குது.”
அவன் பேச்சில் அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் நிறைந்தது.
“அதுக்குத் தான்… என்னோட போகட்டும் ன்னு நான்… அந்த முடிவை எடுத்தேன்.”
“மங்கை! முட்டாள்தனமாத் திரும்பத் திரும்ப அதையே பேசாத.” அவன் அணைப்பு இறுகியது.
“வேற என்ன பண்ணச் சொல்லுறீங்க? சம்பந்தப்பட்ட நீங்களே என்னை நிராகரிக்கும் போது என்னால என்ன பண்ண முடியும்?”
“அது நிராகரிப்பு இல்லை மங்கை. என்னைப் புரிஞ்சுக்கோ. ஏற்கனவே இதே காதலால அண்ணாவும் அண்ணியும் பட்ட பாட்டை என் கண்ணாலேயே பார்த்ததுக்கு அப்புறம் என்னால எப்படி இதிலெல்லாம் இறங்க முடியும் சொல்லு?”
“என்னால அப்படி உங்களை விட்டுக் குடுக்க முடியலை. யாரு எதிர்த்தாலும் சரி, வாழ்ந்தா உங்க கூட தான். இல்லைன்னா அம்மா அப்பா கூடவே கடைசி வரைக்கும் வாழ்ந்து முடிச்சிடுவேன்.”
இத்தனை ஆழமாக இந்தப் பெண் தன் மீது காதல் வைத்திருக்கிறதா என்று எண்ணிய போது ஸ்டீஃபனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
அதே காதல் எத்தனை பேர் மனதில் வேதனையை விதைத்திருக்கிறது என்று நினைத்த போது கவலையாகவும் இருந்தது.
அண்ணாந்து தன் முகம் பார்த்தவளை நோக்கிக் கண் சிமிட்டினான் ஸ்டீஃபன்.
“அக்கா அத்தானைக் கூட இன்னும் போய்ப் பார்க்கலை. அண்ணா இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. நான் கிளம்பட்டுமா மங்கை?”
“ம்…” தயக்கத்தோடு தலையாட்டிய பெண்ணைப் பார்த்தபடியே நகர்ந்தான் ஸ்டீஃபன். அவள் கண்கள் அவனை நோக்கி ஆயிரம் விண்ணப்பங்கள் வைத்தன.
அதற்கு மேல் அங்கே நிற்பது ஆபத்து என்று தெரிந்தே அவசர அவசரமாகக் கிளம்பினான் ஸ்டீஃபன்.
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

 

error: Content is protected !!