மோகனப் புன்னகையில் 12

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. விஜயேந்திரனுக்கும் சுமித்ராவிற்கும் வாழ்க்கை இனித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அரண்மனை, ஃபாக்டரி, தோட்டம் என எல்லா இடங்களிலும் வேலை பார்ப்பவர்களுக்குத் துணி மணிகள் வாங்கி அதை சுமித்ராவின் கையாலேயே கொடுக்க வைத்தான் அரண்மனைக் காரன்.
சுமித்ராவின் வீட்டிற்கும் இரண்டொரு முறை போய் வந்தார்கள். விஜயேந்திரனின் வேலைப்பளு வெளியே சுற்ற அதிகம் இடம் கொடுக்கவில்லை.

முடிந்த வரை மனைவியோடு பகலுணவை உண்ண முயற்சி செய்தான். அதை அமுல்படுத்தவே அவனுக்கு அத்தனை சிரமமாக இருந்தது.

வீட்டிற்கு வர முடியாத பொழுதுகளில் அவனுக்கான உணவை சுமித்ராவே அனுப்பி வைப்பாள். அவனுக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி சமையலில் இடம்பிடித்தன.

கணவனுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்தாள் சுமித்ரா. விஜயேந்திரனுக்கு இதெல்லாம் புதிது தான் என்றாலும் முழுதாக அனுபவித்தான்.‌

அன்றைக்கு முழுவதும் விஜயேந்திரன் வீட்டில் இல்லை என்றால் சுமித்ரா வாடிப் போவாள். அலுத்துக் களைத்து வீடு வருபவனை விழுந்து விழுந்து கவனிப்பாள் மனைவி. அவள் அருகாமையை வகை தொகையாகப் பயன்படுத்திக் கொள்வான் அரண்மனைக் காரன்.
அன்றும் மதியம் வீடு வரவில்லை விஜயேந்திரன். லேசாக போரடிக்கவும் நாட்டியப் பயிற்சிக்காக அவன் அமைத்துக் கொடுத்திருந்த மாடி அறைக்குச் சென்றாள் சுமித்ரா.

விஜயேந்திரனின் அறைக்கு அடுத்தாற் போல இருந்தது அந்த இடம். நல்ல விசாலமான ரூம் தான். அங்கிருந்த அத்தனை பொருட்களையும் அப்புறப்படுத்தி விட்டு ஒற்றை நடராஜர் சிலையை அங்கு ஏற்பாடு பண்ணி இருந்தான்.
மாமியார் மதியத்திற்குப் பின் கொஞ்சம் கண்ணயர்வதால் அந்த நேரத்தை நாட்டியப் பயிற்சிக்கு உபயோகப் படுத்திக் கொள்வாள் பெண்.

ஸ்டீஃபனும் இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு வாரத்திலேயே கிளம்பிக் கனடா போயிருந்தான். போனபின் ஒரு கடிதமும் போட்டிருந்தான். அதனால் இப்பொழுதெல்லாம் மாடி ஏரியா அமைதியாகக் தான் இருந்தது.
சேலையை உயர்த்திச் சொருகிக் கொண்டு மெல்லிய ஒலியில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ யை ஒலிக்க விட்டாள். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ குரலில் பாடல் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது.
எப்போதும் அடவுகள் ஜதிக்கோர்வைகள் என்று தெரிந்தெடுத்து பயிற்சி பண்ணுபவள் ஏனோ இன்று சின்னக் கண்ணனைச் சரணடைந்திருந்தாள்.
கண்ணனின் குறும்புகளை இடுப்பை வளைத்து அபிநயம் பிடிக்கும் போது ஏனோ ஆனந்தமாக இருந்தது.
தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி…
பாடல் ஆரம்பிக்கும் போதே ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இத்தனை தைரியமாக சுமித்ரா இருக்கும் ரூம் கதவை வேறு யார் திறப்பார்கள்! இருந்தாலும் சுமித்ரா திரும்பவில்லை.
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் – தீராத…
வேஷ்டியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்தபடி பொடிநடையாக அவளைச் சுற்றி நடந்தான் விஜயேந்திரன். அவன் கண்கள் இரண்டும் அவள் ஆட்டத்தை அணு அணுவாக ரசித்தது. அவளும் நிறுத்தவில்லை.
கல்யாணம் முடிந்த பிறகு சுமித்ரா எங்கும் வெளியிடங்களுக்கு நாட்டியமாடப் போகவில்லை. ஒன்றிரண்டு அழைப்புகள் வந்த போதும் சங்கரன் அதைச் சுமித்ராவின் காது வரை கொண்டு வரவில்லை.

பின்னலைப் பின்னின் றிழுப்பான் – தலை…
அவள் தன் பாட்டில் அபிநயம் பிடித்திருக்க அவள் நீண்ட பின்னலை லேசாக இழுத்தான் அரண்மனைக் காரன். அவன் அப்போது வருவான் என்று தெரியாததால் தலையில் பூக் கூட வைத்திருக்கவில்லை சுமித்ரா.
அவள் பட்டுக் கூந்தலை வருடிய அவன் விரல்கள் அது மறைத்திருந்த வழவழப்பான முதுகையும் ஒரு முறை ஸ்பரிசித்தது. சட்டென்று அவன் கையைத் தட்டி விட்டாள் சுமித்ரா.

அந்தக் கரு விழிகள் இரண்டும் அவனை ஒரு முறை கோபமாகப் பார்த்தன. அவன் இதழ்களில் புன்னகை.

வண்ணப் புதுச்சேலை தனிலே – புழுதி…
இப்போது அவள் தூக்கிச் சொருகி இருந்த சேலைத் தலைப்பை அவன் இழுக்க ஆடிய வேகத்திற்கு ஒரு முறை சுழன்று அவன் மார்பிலேயே வந்து முட்டி நின்றாள் சுமித்ரா.
ஆட்டத்தைப் பாதியிலேயே அவன் குலைத்த கோபம் லேசாக எட்டிப் பார்க்க,

“விஜி… என்ன பண்ணுறீங்க?”

என்றாள் சற்றுச் சூடாக. ‘விஜி’ என்ற அழைப்பு இப்போது சரளமாக அவள் வாயில் வந்தது.

அவன் பதில் சொல்லவில்லை. இருந்தாலும் அந்தக் கண்களில் அத்தனை தாபம். அவள் கழுத்து வளைவில் அவன் முகம் புதைக்க பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்துத் தள்ளினாள் சுமித்ரா.
“விஜி! எங்க வெச்சு என்ன பண்ணுறீங்க?” கோபமாகச் சொன்னவள் புடவையைச் சரிசெய்த படி வெளியே போக, அவள் இடுப்பில் கை கொடுத்து அலாக்காகத் தூக்கினான் கணவன்.

“விஜி…!” அவள் முறைப்புகள் ஒன்றும் வேலைக்காகவில்லை. நேராகப் பக்கத்தில் இருந்த அவன் ரூமிற்குச் சென்றவன் ஒற்றைக் காலால் ரூமின் கதவடைத்தான்.

“என்ன பண்ணுறீங்க நீங்க?” கட்டிலில் அவளோடு சரிந்தான் விஜயேந்திரன்.

“வர வர ரொம்பவே வம்பு பண்ணுறீங்க.”

“அப்படியா?”

“இப்போ எதுக்கு நாட்டியத்தைப் பாதியிலேயே நிறுத்தினீங்க?”

“நீங்க எதுக்கு இன்னைக்குப் பாட்டுக்கு அபிநயம் பிடிச்சீங்க? அதுவும் எனக்குப் புரியுற மாதிரி தமிழ்ப்பாட்டு. வழமையா ‘தகிட தகதிமி’ இப்படி ஏதாவது ஒன்னைப் போட்டுக்கிட்டு ஆடுவீங்க. இல்லைன்னா ஒன்னுமே புரியாத சமஸ்கிருதப் பாட்டுக்கு ஆடுவீங்க. நானும் பார்க்கிறதோட நிறுத்திக்குவேன். இப்போ அப்படி முடியாது.”

அவன் தரப்பு நியாயத்தை அவன் சொல்லி முடிக்க நாட்டியம் பாதியில் நின்று போன வருத்தம் அவள் முகத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.

“அதெப்படி… சேலையில புழுதியை வாரி அடிச்சேனா? ம்… அப்புறம் என்ன சொன்ன? பாதி சாப்பிடும் போது தட்டிப் பறிச்சேன்னா… அடியேய்! பாதியில தட்டிப் பறிக்கிறது…” அவனை அதற்கு மேல் பேச அனுமதிக்காமல் வாயை இறுக மூடியிருந்தாள் சுமித்ரா.
மறுகையால் அவன் கன்னத்தில் பட் பட்டென்று நான்கு அடிகள் போட்டாள்.

“இந்த வாய் இப்போ ரொம்பவே பேசுது. பாட்டுல வந்தது நீங்க இல்லை. சின்னக் கண்ணன். குழந்தை பண்ணுற சேட்டை.”
“ஓ… அப்போ ‘அலைபாயுதே கண்ணா’ ன்னு கண்ணை உருட்டிக் கிட்டு ஆடினதெல்லாம் முடிஞ்சு போச்சா?”
அவன் சொன்ன விதத்தில் சட்டென்று சிரித்தாள் சுமித்ரா.
“முடிஞ்சு போச்சு. நீங்க வேணாம் போங்க. நாட்டியத்தைப் பாதியிலேயே நிறுத்துறீங்க. எனக்கு அந்தக் குட்டிக் கண்ணனே போதும்.”
ஒரு புன் சிரிப்போடு சொன்னவள் புரண்டு மறுபக்கம் படுத்தாள். தனக்கு முதுகு காட்டிப் படுத்திருக்கும் மனைவியைக் கொஞ்ச நேரம் கண்கள் சுருங்கப் பார்த்திருந்தான் விஜயேந்திரன்.
அவள் பின்னலை அப்பால் நகர்தியவன் அவள் முதுகில் கன்னம் வைத்துக் கொண்டான்.
“அம்மு… என்னாச்சு? எங்கிட்ட ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா?”
“ம்ஹூம்…”

“அப்போ என் அம்முக்கு என்ன வேணும் இப்போ?”
“…………”
அவர்கள் தனிமையைக் குலைத்தது அந்தச் சத்தம். தடதடவென கதவு தட்டும் ஓசை கேட்க இரண்டு பேரும் எழுந்து உட்கார்ந்தார்கள்.
விஜயேந்திரனின் அறைக் கதவை இப்படித் தட்டும் தைரியம் இதுவரை யாருக்கும் வந்ததில்லை.

அவசரமாக எழுந்தவன் கதவைத் திறந்தான். எதிரே கணக்கர் நின்றிருந்தார். முகத்தில் அப்பட்டமான பதட்டம் தெரிந்தது.
“தம்பி! ஜமீன் அம்மா கால் பண்ணி இருந்தாங்க.”

“என்னவாம்?” கோதை நாயகியை பெயர் சொல்லி எப்போதுமே கணக்கர் அழைத்ததில்லை.

ஜமீன் வம்சத்திற்கு மருமகளாகப் போனதால் இப்படித்தான் அழைப்பார்.
“அவங்க பொண்ணை ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம். அழுதுக்கிட்டே பேசினாங்க தம்பி. உங்களை உடனேயே புறப்பட்டு வரச் சொன்னாங்க.”
“என்னாச்சு திடீர்னு?”
“தெரியலையே தம்பி. ஆனா ஏதோ அவசரம்னு புரிஞ்சுது. ரொம்பவே அழுறாங்க.”
“சரி, நான் இதோ வந்தர்றேன். நீங்க இன்னொரு தரம் ஃபோன் பண்ணி என்ன ஏதுன்னு கேளுங்க.”
“அவங்களும் ஆஸ்பத்திரியில தான் இருக்காங்க போல. நான் அவசரத்துல ஆஸ்பத்திரி நம்பர் கேக்கலை தம்பி.” கையைப் பிசைந்தார் கணக்கர்.

“சரி பரவாயில்லை விடுங்க. நான் இதோ கிளம்பி வர்றேன். காரை வெளியே எடுத்து நிறுத்தச் சொல்லுங்க.” ஆணையிட்டவன் அவசர கதியில் தயாரானான்.
அடுத்த பதனைந்தாவது நிமிடம் சுமித்ராவையும் விஜயேந்திரனையும் சுமந்துகொண்டு அந்த ப்ளாக் அம்பாஸிடர் ‘மங்கள புரி’ நோக்கிச் சென்றது.
??????
ஆஸ்பத்திரியின் உள்ளே நுழைந்தார்கள் விஜயேந்திரனும் சுமித்ராவும். அத்தையின் வீட்டு ட்ரைவர் வாசலிலேயே நின்றிருந்தவர் இவர்களைக் காணவும் உள்ளே அழைத்துச் சென்றார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் மங்கை. கோதை நாயகியும் அவர் கணவர் கண்ணபிரானும் அங்கேயே தான் நின்றிருந்தார்கள்.
“மாமா! என்ன ஆச்சு?” கண்ணபிரானிடம் விஜயேந்திரன் கேட்க கோதை நாயகியின் கையைப் பிடித்துக் கொண்டாள் சுமித்ரா. புடவைத் தலைப்பால் வாயை இறுக மூடிய அத்தை குலுங்கிக் குலுங்கி அழுதார்.
“மாமா?”
“வேணாம் பா. இங்க எதுவும் பேச வேணாம். உங்க அத்தையைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க. அவ சொல்லுவா.” அந்த ஒரு பொழுதுக்குள் அவர் முகம் அத்தனை மூப்பைக் காட்டியது.

விஜயேந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மங்கைக்கு என்ன ஆனது? மாமாவையே அவன் பார்த்திருக்க,
“சொன்னதைச் செய் விஜயேந்திரா. ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டான்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இங்க எதுவும் பேசாதே.” என்றார் மீண்டும்.
அதற்கு மேல் அங்கு யாரும் எதுவும் பேசவில்லை. அத்தையை அழைத்துக் கொண்டு கணவன் மனைவி இரண்டு பேரும் அத்தையின் வீட்டுக்கே வந்து சேர்ந்திருந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்ததும் கோதை நாயகி பெருங் குரலெடுத்து அழுதார்.
“விஜயா! இந்தப் பொண்ணு பண்ணி இருக்கிற வேலையைப் பார்த்தியா? என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டாளே!” அத்தை சத்தமாக அழவும் சட்டென்று வீட்டின் கதவைப் பூட்டினாள் சுமித்ரா.

“அத்தை! இங்கப்பாரு. முதல்ல அழுறதை நிறுத்து. பேசுறது நம்ம பொண்ணைப் பத்தி. அதால இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே. என்ன நடந்ததுன்னு சொல்லு.”
கண்களைத் துடைத்துக் கொண்ட கோதை நாயகி கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்தார்.
“தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கா விஜயேந்திரா.” சொல்லும் போதே அவர் கண்களில் மீண்டும் கண்ணீர் நிறைந்தது.
“என்ன!” விஜயேந்திரனும் சுமித்ராவும் திகைத்துப் போனார்கள்.
“என்ன அத்தை சொல்லுறே நீ?”
“ஒன்னுமே புரியலையே ப்பா. கொஞ்ச நாளாவே மங்கை அவ்வளவு நல்லா இல்லை. நானும் பல தடவை கேட்டுப் பார்த்துட்டேன். ஒன்னுமே இல்லைன்னு சாதிச்சிட்டா.”
“ஏன் அத்தை? மங்கை யாரையாவது விரும்புறாளா?”
“தெரியலையே ப்பா. அப்படி இருந்தா அந்தக் கருமத்தைச் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே. நாங்க என்ன வேணான்னா சொல்லப் போறோம்.”
“இப்போ எப்படி இருக்கா?”
“வயித்தை சுத்தம் பண்ணிட்டாங்க. மாமாக்குத் தெரிஞ்ச டாக்டர் எங்கிறதால பிரச்சனை வராம பார்த்துக்கிட்டாங்க. எதுக்கு ப்பா இவ இப்படியெல்லாம் பண்ணுறா?” மீண்டும் ஆரம்பித்தார் கோதை நாயகி.

“சரி விடு அத்தை. ஏதோ தெரியாம பண்ணிட்டா. சின்னப் பொண்ணு. அவளுக்கு என்ன பிரச்சனையோ? பக்குவமா பேசி அவளோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். புரியுதா? சும்மா அவளைத் திட்டக் கூடாது நீ.”
“அந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணின இத்தனை நாளுல அவர் அழுது நான் பார்த்ததில்லை சுமித்ரா. ஆனா இன்னைக்கு அவர் பொண்ணு கிடந்த நிலைமையைப் பார்த்துட்டு அழுதார் பாரு!” சுமித்ராவின் தோளில் சாய்ந்தபடி மீண்டும் ஓவென்று அழுதார் கோதை நாயகி.‌
சுமித்ராவிற்குமே என்ன பேசுவதென்று புரியவில்லை. ஆதரவாக அவர் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

“அவங்க அப்பா செல்லம் அவ. நான் தான் திட்டுவேன். அவர் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டார். மனசுல என்ன இருந்தாலும் எங்ககிட்ட சொன்னாத்தானே புரியும். அவளா முடிவெடுத்தா எப்படிம்மா?”
“அத்தை நீ முதல்ல எந்திரி. உன்னை விட்டா நீ இப்படியே அழுது கரைஞ்சிருவ. சுமித்ரா! அத்தையோட போய் நைட்டுக்கு ஏதாவது டிஃபன் பண்ணுங்க. மாமாக்கும் சாப்பாடு அனுப்பணும் இல்லை?”
விஜயேந்திரன் சுமித்ராவிடம் கண்ணைக் காட்ட அத்தையையும் அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் போய் விட்டாள் பெண்.

விஜயேந்திரன் மங்கையின் அறைக்குள் வந்தான். கச்சிதமாக எல்லாம் வைக்கப்பட்டு இருந்தன. கண்ணபிரான் நல்ல வசதியான வீட்டுப் பிள்ளை. ஜமீன் வம்சம்.
ஆண் பிள்ளைகள் இல்லை என்று என்றைக்குமே அவர் கவலைப்பட்டதில்லை. வளர் மங்கை தான் அவருக்கு எல்லாமே. என்னமோ அவர்கள் குடும்பங்களில் ஒற்றைப் பிள்ளைகளாகவே அமைந்து போனது.
மங்கையின் ஒவ்வொரு பொருட்களாக அலசி ஆராய்ந்தான் விஜயேந்திரன். மேசை மேல் புத்தகங்கள் தான் அடுக்கப் பட்டிருந்தன. சந்தேகப் படும் படியாக எந்தப் பொருளும் அவன் கண்ணுக்குப் பிடிபடவில்லை.
கட்டிலில் கிடந்த தலையணைகளையும் அப்புறப்படுத்திப் பார்த்தான்.

ம்ஹூம்… ஒன்றும் அகப்படவில்லை.
ஏதோ ஒன்று உந்த கட்டிலின் மெத்தையை உயர்த்தினான். மெத்தைக்கு அடியில் ஒரு டயரி இருந்தது. எடுத்துப் பார்க்க உள்ளே ஸ்டீஃபனின் ஃபோட்டோ. கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது விஜயேந்திரனுக்கு. தொப்பென்று கட்டிலில் அமர்ந்தான்.

கையில் காஃபியோடு கணவனைத் தேடி வந்த சுமித்ரா அவன் அமர்ந்திருந்த விதம் பார்த்துப் பதறிப் போனாள்.

“விஜி! என்னாச்சு விஜி? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” மனைவி பதறவும் தன் கையிலிருந்த டைரியை அவளிடம் கொடுத்தான் விஜயேந்திரன்.

கேள்வியாகக் கணவனைப் பார்த்தபடி அதை வாங்கியவள் உள்ளே புரட்டினாள். கண்கள் நிலைகுத்திப் போனது.

“என்ன விஜி இது? கிணறு வெட்டப் பூதம் வந்த கதையா இருக்கு.”

“எனக்கும் ஒன்னும் புரியலை சுமித்ரா. எப்போ இதெல்லாம் நடந்தது? எப்படி நடந்தது?”

“இதுக்கும் ஸ்டீஃபனுக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?”
“இருந்திருந்தா இவ அதை மாமாக்கிட்டச் சொல்லி இருக்கலாமே?”

“பையன் கிறிஸ்டியன். ஒரு வேளை அதனால சொல்லாம விட்டிருக்கலாம் இல்லையா?”
“வாய்ப்பிருக்கு.”

 

“இப்போ என்ன பண்ணுறது?”

“யோசிக்கலாம். பொம்பிளப் பிள்ளை காரியம். எடுத்தோம் கவுத்தோம்னு எதுவும் பண்ண முடியாது. நிதானமாத்தான் பண்ணணும்.”
“ம்…”
????????
அடுத்த நாள் எப்போது விடியும் என்று காத்திருந்து போஸ்ட் ஆஃபீஸ் வந்திருந்தான் விஜயேந்திரன். நேற்று இரவு இருவரும் அத்தையின் வீட்டிலேயே தங்கி விட்டார்கள்.
கணக்கருக்குக் கால் பண்ணி மங்கைக்கு உடம்பிற்கு முடியவில்லை, அதனால் இரண்டு நாட்கள் இங்கு தங்கிவிட்டு வருகிறோம் என்று மட்டும் தகவல் சொல்லி இருந்தான் விஜயேந்திரன்.
முன்னேற்பாடாகவே வந்திருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல்ப் போனது.

இரண்டு மூன்று முறைகள் முயன்றதன் பிறகு ஸ்டீஃபனை லைனில் பிடித்தான் அரண்மனைக் காரன்.
“ஸ்டீஃபன்.”
“அண்ணா! என்ன ஆச்சரியம்? அண்ணியைத் தவிர உங்களுக்கு இப்போ வேற யாரையும் தெரியாதே? எப்படீன்னா?” இளையவனின் கேலியை ஒரு சிரிப்போடு ஏற்றுக் கொண்டான் விஜயேந்திரன்.

“ஸ்டீஃபன்! உனக்கும் மங்கைக்கும் என்ன பிரச்சினை?” தயவு தாட்சண்யம் பாராமல் நேராக வந்தது கேள்வி.
“அண்ணா!”
“ஸ்டீஃபன்… உண்மையிலேயே என்னை நீ அண்ணாவா நினைச்சா எதையும் மறைக்காம சொல்லு.”
“ஐயோ அண்ணா! நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. சின்னப் பொண்ணு இல்லையா? உலகம் தெரிய மாட்டேங்குது. எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்குவாங்க.”
“நீ இன்னும் விஷயத்துக்கு வரலை ஸ்டீஃபன்.”

“உங்க கல்யாண சமயம் ரெண்டு மூனு தடவை பார்த்தப்போ பேசியிருக்கேன் ண்ணா.

அவ்வளவுதான். நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. எப்படி அட்ரஸ் கிடைச்சுதுன்னு தெரியலை. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு லெட்டர் வந்திருந்தது. நான் உடனேயே பதில் போட்டுட்டேன்.”
“என்னோட ரூம்ல இருந்து அட்ரஸ் எடுத்திருப்பா. அதை விடு, நீ என்ன சொன்னே?”
“இது சாத்தியப் படாதுங்க. குடும்பங்களுக்குள்ள வீணான மனவருத்தத்தை நாம உண்டு பண்ணக் கூடாது. படிப்பில மட்டும் கவனம் செலுத்துங்க. உங்க வீட்டுலயே உங்க தகுதிக்கு ஏத்தா மாதிரி நல்ல மாப்பிள்ளை பார்ப்பாங்கன்னு சொன்னேன்.”

“ஆக… எங்கேயும் மங்கையைப் பிடிக்கலைன்னு நீ சொல்லலை?”
“அண்ணா!”
“அண்ணாக் கிட்ட நீ இன்னும் உண்மை பேசலை ஸ்டீஃபன்.”
“இன்னொரு சுமித்ரா உருவாகிறதை நான் என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன் ண்ணா.”
“மங்கை இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கா.”
“ஐயோ! என்ன ஆச்சு?”

“தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டா.”
“ஜீசஸ்! என்னண்ணா சொல்லுறீங்க? இப்போ எப்படி ண்ணா இருக்கா?”
“ம்… பரவாயில்லை. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.”
“அண்ணா…”
“ம்… சொல்லு.”

“நீங்க என்னைத் தப்பா நினைக்கிறீங்களா?”
“இல்லை ஸ்டீஃபன். நானும் காதலிச்சவன் தானே. அதோட வலி எனக்குப் புரியும் ஸ்டீஃபன். உனக்கு நான் ரெண்டு நாள் டைம் குடுக்கிறேன். நல்லா யோசி. மத்தவங்களைப் பத்தி யோசிக்காம உன் மனசுல என்ன இருக்குன்னு மட்டும் யோசிச்சு எங்கிட்ட சொல்லு. எனக்கு மங்கை முக்கியம் ஸ்டீஃபன். அவ கொழந்தை மாதிரி. அவ கஷ்டப்படக் கூடாது, புரியுதா?”
“ம்…”

அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான் விஜயேந்திரன். தலை பாரமாக இருந்தது. நேராக அத்தையின் வீட்டுக்கு வந்து விட்டான்.

கொஞ்ச நேரத்திலெல்லாம் மங்கையை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அந்த ஒரு நாளிலேயே பாதியாகிப் போயிருந்தாள்.

சுமித்ரா தன் பொறுப்பில் மங்கையை எடுத்துக் கொண்டாள். மறந்தும் அத்தையை மங்கையின் ரூமிற்குள் வர அவள் அனுதிக்கவில்லை.

கண்ணபிரான் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவர் கோலம். அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த விஜயேந்திரன் கைகளை லேசாகத் தட்டிக் கொடுத்தான்.

“மாமா… கவலப்படாதீங்க. சின்னப் பொண்ணு இல்லையா? ஏதோ புரியாமப் பண்ணிட்டா. நான் பேசுறேன் மங்கை கிட்ட.” விஜயேந்திரன் சொல்லவும் வந்த அழுகையை அவர் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்.

“செய் விஜயேந்திரா. நான் என்ன பையனையா பெத்து வச்சிருக்கேன். எனக்கு நீ தானே பையன். உனக்கு என்ன தோணுதோ அதைச் செய்.”
“கவலைப் படாதீங்க மாமா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.”

“எம் பொண்ணு பாடையில போறதைப் பார்க்கிறதுக்கா நான் அவளை இவ்வளவு ஆசை ஆசையா வளர்த்தேன். என்னைப் புரிஞ்சுக்கலையே விஜயேந்திரா அவ.” குலுங்கி அழுதார் கண்ணபிரான்.

சட்டென்று அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டான் மருமகன்.
“என்ன பேச்சு மாமா இது? விடுங்க, ஏதோ தெரியாம பண்ணிட்டா. அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லுறேன் இல்லை.”

அவரை சமாதானம் பண்ணி விட்டு மங்கையின் ரூமிற்கு வந்தான் விஜயேந்திரன்.‌ சுமித்ரா இல்லாத போராட்டங்கள் எல்லாம் பண்ணி அப்போதுதான் சின்னவளைக் கொஞ்சம் ஜூஸ் பருக வைத்திருந்தாள்.

விஜயேந்திரனைக் காணவும் மங்கையின் உதடுகள் பிதுங்கியது. கண்கள் கண்ணீரைச் சொரிய முகத்தை மூடிக் கொண்டாள் பெண்.
“இங்கப் பாரு மங்கை, அழக்கூடாது. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீ தைரியமா இருக்கணும்.” விஜயேந்திரன் சொல்லவும் சின்னவளின் அழுகை ஸ்விட்ச் போட்டாற்போல சட்டென்று நின்றது. ஆச்சரியமாக அவள் அத்தானின் முகத்தை அண்ணாந்து பார்க்க கண்களை ஒரு முறை மூடித் திறந்தான் விஜயேந்திரன்.
“அத்தான்!” என்று கூவிக்கொண்டு அவன் தோள் சாய்ந்து அழுதாள் வளர் மங்கை.
“இதுக்குத் தான் அத்தான் அடிக்கடி சொல்லுறது. இன்னும் கொஞ்சம் வளர் மங்கை… வளரு மங்கை… ன்னு.” அரண்மனைக் காரன் ராகம் பாடவும் இப்போது சுமித்ராவும் சேர்ந்து சிரித்தாள்.

கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து கோதை நாயகியின் வீட்டை ஓரளவு செப்பனிட்டு இருந்தார்கள். இரவு உணவை முடித்துக் கொண்டு மங்கையோடும் சற்று நேரம் பேசிவிட்டு தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரூமிற்குள் வந்தாள் சுமித்ரா.

கட்டிலில் கால்நீட்டி அமர்ந்திருந்தான் கணவன். முகத்தில் சிந்தனைக் கோடுகள்.

இங்கே நடந்த அமளி துமளியில் இரண்டு பேருக்கும் நின்று பேச நேரமில்லாமல்ப் போயிருந்தது. கதவை மூடிவிட்டு கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் சுமித்ரா. அவன் கைகள் இதமாக அவளை வருடிக் கொடுத்தது.
“விஜி!”
“ம்…”

“ஸ்டீஃபன் கிட்டப் பேசினீங்களா?”
“ம்.”
“என்ன சொன்னார்?”
“பையன் மேல தப்பில்லைன்னு தான் தோணுது ம்மா. ஆனா…”
“என்ன ஆனா?”
“ஒரு பிடித்தம் இருக்கிற மாதிரி தான் தெரியுது.” கணவனின் வார்த்தைகளில் சுமித்ராவின் முகத்தில் கலவரம் தெரிந்தது.

“சரியா வரும்ன்னு நினைக்கிறீங்களா?”
“பார்க்கலாம்.”
“மங்கை தாங்க மாட்டான்னு தோணுது விஜி.”
“ம்… இந்தக் காதல் மனுஷங்களை என்ன பாடு படுத்துதில்லை சுமி?” அந்தக் குரல் அவளை ஏதோ பண்ண அவன் மார்புக்குள் இன்னும் புதைந்து கொண்டாள் சுமித்ரா.
“தூங்குடா, ரொம்ப டயர்டா தெரியுறே.”
“நீங்களும் ரொம்ப வருத்திக்காதீங்க விஜி. எது விதிச்சிருக்கோ அதுதானே நடக்கும்.”

“ம்… அதுவும் சரிதான்.” ஒருவர் அருகாமை மற்றவருக்கு இதமாக இருக்க கண்ணயர்ந்தார்கள் இருவரும்.

error: Content is protected !!