SST–EPI 21

SST–EPI 21

அத்தியாயம் 21

 

1960களில் தொடங்கப்பட்ட அலேகேட்ஸ்(alleycats) எனும் மியூசிக் பேண்ட் இன்றுவரை மலேசியர்களால் போற்றப்படுகிறது. இதை தொடங்கியவர்கள் டேவிட் ஆறுமுகம், லோகநாதன் ஆறுமுகம் எனும் சகோதரர்கள். பல ஆங்கில, மலாய் மற்றும் சில தமிழ் பாடல்கள் பாடி இந்த பேண்ட் புகழடைந்தது. எல்லா இனத்தவரும் இவர்களின் பாடலை ரசித்துக் கேட்டார்கள், இன்றும் கேட்கிறார்கள். டேவிட் ஆறுமுகம் ஸ்டைலாக சொல்லும் ‘தெரிமா காசே(நன்றி)’ இங்கே மிக பிரபலம்.

 

வேலையை முடித்தும் முடிக்காமலும் டாக்சியில் வீட்டுக்குப் பயணித்துக் கொண்டிருந்தான் குரு. அவன் எண்ணங்கள் எல்லாம் தன் வீட்டில் தங்கி இருக்கும் மிருவையே வட்டமிட்டன. இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டன அவள் குருவின் வீட்டில் அடைக்கலமாகி. ஆனால் அவளை கண்ணால் காண்பது தான் அபூர்வமாக இருந்தது குருவுக்கு.

அன்று அவள் நின்ற கோலம் இன்னும் அவன் மனதை அலைக்கழித்தது. எப்பொழுதும் சிரித்த முகமாகவே பார்த்த மிருவை பொலிவிழந்த சோக சித்திரமாய் பார்த்தவனுக்கு மனதை பிசைந்தது. கண், முகமெல்லாம் சிவந்துப் போய் லேசாக நடுங்கியபடி இருந்தாலும் இவனைப் பார்த்து தைரியமாக காட்டிக் கொள்ள புன்னகைத்தவளைப் பார்த்ததும் வாரி அணைத்துக் கொண்டான் குரு.

அந்த நேரத்தில் தான் காதல் சொன்னதோ, மணக்க கேட்டதோ அவனுக்கு நினைவு வரவில்லை. மிரு கலங்கி நிற்கிறாள், அவளை ஆறுதல் படுத்த வேண்டும் என்பது மட்டுமே அவனை உந்தியது. தன் அணைப்பில் நடுங்கி ஒடுங்கி இருந்தவளை, விலகவே விடவில்லை அவன். அதையும் இதையும் பேசி, கொஞ்சமாக வம்பிழுத்து அவள் கண்களில் லேசாக தோன்றிய ஒளியைக் காணவும்தான் இவனுக்கு மனது லேசாகியது.

உடல் நிலை சரியாக இருந்தால் கண்டிப்பாக தன் வீட்டுக்கு வந்திருக்க மாட்டாள் மிரு என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். இந்த நிலையில் கூட ஹோட்டலில் தானே விட சொன்னாள் அவள். தாரமாக்க நினைத்தவளை தோழியாய் அல்லவா அழைத்து வந்தான்!

தன் கட்டிலில் உறங்கிய மிருவைப் பார்க்கவே குருவுக்கு பரம சுகமாக இருந்தது. இது நிஜம்தானா, இல்லை தினம் தான் காணும் மாயக்கனவா என அவனின் மனம் சான்று கேட்டது. மனம் கேட்ட சான்றை கொடுக்கவே, அவளை நெருங்கிப் படுத்துப் பட்டும் படாமல் கட்டிக் கொண்டான் குரு.

காய்ச்சல் நின்றிருந்ததால் லேசாக வியர்த்திருந்தாள் மிரு. பின்னங்கழுத்தின் வியர்வையின் வாசமும், அவளுக்கே உரித்தான பூரீன் பேபி பவுடர் வாசமும் அவனை இன்னும் நெருங்க சொன்னது. ஏற்கனவே மலாக்காவில் ‘இனி தொட்ட, நீ செத்த!’ என்பது போல விரல் நீட்டி எச்சரித்திருந்தாள் மிரு. அவள் கோபத்தை நினைத்து சிரிப்பு வந்தாலும், ஏற்கனவே நொந்திருப்பவளை தானும் நோகடிக்க வேண்டாம் என முடிவெடுத்தான் குரு. மெல்ல விலகி எழுந்து அமர்ந்தவன், உறங்கும் தன் மோனாலிசாவையே மோன நிலையில் ரசித்திருந்தான்.

தமிழ் பள்ளிக்கு சென்றிருந்தால் மிருவுக்கு தமிழ் கவிதை படித்திருப்பான். அந்தோ பரிதாபம், ஆங்கில வழி கல்வியல்லவா படித்தான் குரு. ஆகையால் தன் மிருவுக்காக மெல்லிய குரலில் அவனுக்கு மிகவும் பிடித்த ஆங்கில பாடல் ஒன்றை முணுமுணுத்தான்.

Say farewell to the dark of night
I see the coming of the sun
I feel like a little child
Whose life has just begun
You came and breathed new life
Into this lonely heart of mine

(தமிழில் எனக்குத் தெரிந்த விளக்கம்)

“இரவின் இருட்டுக்கு விடை கொடுத்து

பகலவன் வருகையை பார்த்து நிற்கிறேன்

இப்பொழுதுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கும்

சிறு குழந்தையைப் போல உணர்கிறேன்

தனிமையில் தத்தளிக்கும் என் நெஞ்சில்

நீ வந்து புது வாழ்வு தந்தாய்”

என பாதி பாடலில் இருந்தவன், அவளிடம் மெல்லிய அசைவு தெரியவும், ஓசைப்படாமல் கட்டிலில் இருந்து இறங்கி வேகமாக ஓடி சோபாவில் தாவி குதித்துப் படுத்துக் கொண்டான்.

தன் காதலுக்கு எதிர்காலம் இருக்கிறதா என அவனுக்குத் தெரியவில்லை. காதலியே காதலுக்கு எதிரியாகிப் போனது அவன் வாங்கி வந்த வரம். ஆனாலும் மோதி பார்க்காமல் வீழ்ந்து போக மாட்டேன் எனும் முடிவில் தான் இருந்தான் குரு.

‘இனி போராட்டம் தான், பூகம்பம்தான். ஆனந்தி ஒரு பக்கம், மிருது ஒரு பக்கம். நான் பாசம் வச்சிருக்கற ரெண்டு பேரும் என்னை ஆட்டி வைக்கப் போறாங்க. எதிர்காலம் ரொம்ப ப்ரைட்டா தெரியுதுடா சாமி!’ என மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் தூங்கிப் போனான்.

மறுநாள் காலை ஐந்துக்கு எப்பொழுதும் போல அவன் எழும்போது எதிரே இருந்த சோபாவில் குளித்து முடித்து தனது கேரி பேக்குடன் அமர்ந்திருந்தாள் மிரு.

“மார்னிங் மிரு”

“மார்னிங் பாஸ்”

எழுந்து அவள் அருகே வந்தவன், காய்ச்சல் இருக்கிறதா என நெற்றியைத் தொட்டுப் பார்க்க முயன்றான். அவன் தொடுவதற்குள் தலையைக் குனிந்துக் கொண்டாள் மிரு.

“காய்ச்சல் நல்லா போச்சு பாஸ். நான் கிளம்பனும்!”

குரு ஒன்றுமே பேசவில்லை. எழுந்து ரூமுக்குப் போனவன், பத்து நிமிடம் கழித்து வந்தான். தலையில் நீர் சொட்ட டீசர்ட், ஷார்ட்சுடன் வந்தவன் கிச்சனுக்குள் புகுந்துக் கொண்டான். அவன் வசிப்பது ஸ்டூடியோ டைப் கோண்டோ. ரூம் மட்டும் தான் கதவு வைத்து மூடி இருக்கும். மற்றப்படி ஹால், கிச்சன் எல்லாம் திறந்தவெளி கான்சப்ட். ஹாலில் இருந்து கிச்சனைப் பார்க்கலாம், கிச்சனில் இருந்து ஹாலைப் பார்க்கலாம். இவளைக் கண்டுக் கொள்ளாமல் கிச்சனில் அவன் எதையோ உருட்ட, இவளும் எழுந்து அங்கே சென்றாள்.

“பாஸ்”

“ஹ்ம்ம்”

“கிளம்பனும்!”

“எங்க?”

“என் வீட்டுக்கு”

“நோ!”

“என்ன நோ?”

“நோனா, அங்கப் போக வேணாம்னு அர்த்தம். நோன்னா இங்கயே இருன்னு அர்த்தம்” என சொல்லியபடியே சூடான பாலை அவள் அருகே நகர்த்தினான்.

மறுத்துப் பேச வாய் திறந்தவளை,

“முதல்ல பால குடி மிரு! காய்ச்சல் வந்த உடம்பு. மத்ததுக்கு எனர்ஜி இல்லைனாலும் சண்டை போடவாச்சும் எனர்ஜி இருக்கனும்ல” என்றவன், டோஸ்டரில் இரண்டு ஸ்லைஸ் ப்ரேட்டை வாட்டி பட்டர் தடவி மிருவுக்குக் கொடுத்தான். அவனுக்கு ப்ரோட்டின் பார்(protein bar) ஒன்றை எடுத்துக் கொண்டவன், அதை கடித்து சாப்பிட்டப்படியே டைனிங் டேபிளில் அவள் முன்னே அமர்ந்தான்.

“அட்லீஸ்ட் அம்மா டிஸ்ச்சார்ஜ் ஆகி வர வரைக்குமாச்சும் நீயும் தம்பியும் என்னோட தங்கிக்குங்க மிரு! அந்த வீட்டுல நீ எப்படி இருக்கியோ, என்னா ஆகுமோன்னு என்னால பயந்துகிட்டே இருக்க முடியாது. ப்ளிஸ் மிரு!”

“இல்ல பாஸ்! இதெல்லாம் சரி வராது”

“என்ன சரி வராது? நேத்து நைட் முழுக்க பூட்டாத ரூமுல தானே படுத்திருந்த! நான் உன் மேல பாஞ்சி பிராண்டி வச்சேனா? இல்லைதானே? அப்புறம் என்ன பயம் மிரு?”

அவள் அமைதியாக மறுப்பைக் காண்பிக்கவும்,

“என்னிக்குமே உன் மேல பாஞ்சி பிராண்டற ஐடியாலாம் எனக்கு இல்ல மிரு. எப்போவுமே இந்த குரு சாப்ட் அண்ட் ஸ்மூத் மட்டும்தான்” என சொல்லி புன்னகைத்தான்.

“இதுக்குத்தான் நான் போறேன்னு சொல்றேன் பாஸ்! எப்போ பாரு ஒரு மார்க்கமாவே பேசி வைக்கறீங்க! இது சரிப்பட்டு வராது”

“என்ன மார்க்கமா பேசிட்டேன்? கத்திப் பேசாம சாப்ட்டா பேசுவேன்னு சொன்னேன். உன் கிட்ட எந்தப் பிரச்சனையும் பண்ணாம ஸ்மூத்தா நடந்துக்குவேன்னு சொன்னேன்! இதுல என்ன மார்க்கத்த நீ பார்த்துட்ட? நான் சரியாத்தான் பேசறேன்! நீ தான் நான் பேசற எல்லாத்துக்கும் இன்னொரு மீனிங் வச்சுப் பார்க்கற”

அவன் பதிலில் பல்லைக் கடித்தாள் மிரு.

“நான் எந்த மீனிங்கும் வச்சிப் பார்க்கல பாஸ்”

“நிஜமாவா மிரு?”

“யெஸ் பாஸ்”

“என்னையும் நான் பேசறதையும் தப்பா நினைக்கலனா இங்கயே இருக்கலாமே மிரு. உன்னை மட்டும் இருக்க சொல்லலையே, தம்பியும் இருக்கலாம்னு தானே சொல்லறேன். இல்ல உனக்கு யாராச்சும் சொந்தக்காரங்க இருக்காங்களா? சொல்லு மிரு! நான் அங்க கொண்டு போய் விடறேன் உன்ன”

“சொந்தம் இருக்காங்க, ஆனா இல்ல!”

“தென் அம்மா வர வரைக்கும் இங்கயே இருக்கலாம். நான் ரெண்ட் கூட கேட்க மாட்டேன். என்னையும், என்னோட திங்ஸ்சையும் என்னைக் கேட்காமலே நீ யூஸ் பண்ணிக்கலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் மிரு”

கோபத்துடன் எழுந்தவள்,

“நான் போறேன்!” என்றாள்.

“ரிலேக்ஸ் மிரு! ஆபிஸ்க்கு நீ வர வேணாம். வோர்க் ப்ரம் ஹோம் அப்ளை பண்ணு. நான் அப்ரூவ் பண்ணறேன். அதுக்குத்தான் என்னை யூஸ் பண்ணிக்கன்னு சொன்னேன். என்னோட திங்ஸ்னா வாஷிங் மெசின், இந்த கிச்சன், டீவி இதெல்லாம் யூஸ் பண்ணிக்கன்னு சொன்னேன். யூ சீ மிரு, உன் மைண்ட்ல தான் சம்திங் ராங். நான் பதமா சொல்லறத நீ பலானதா நினைச்சிக்கிற”

அவன் கண்ணை நேராகப் பார்த்து,

“நைட் என்னைக் கட்டிப்பிடிச்சீங்களா பாஸ்?” என கேட்டாள்.

“பாரேன்! மருந்து மயக்கத்துல கூட நான் கட்டிப்பிடிச்ச மாதிரி கனவு வந்துருக்குனா நீ என்னை அவ்வளவு டீப்பா லவ் பண்ணற மிரு. ஆனா ஏன் மிரு ஒத்துக்க மாட்டற? ஒத்துக்கிட்டு என்னை கல்யாணம் செஞ்சிகிட்டனா நெஜமாவே கட்டிப் பிடிச்சுக்குவேன் மிரு. தினமும் கட்டிப் பிடிச்சுக்குவேன். இப்படி நீ கனவு கண்டு ஏங்க வேண்டாம்” என சொல்லி கண் அடித்தான் குரு.

“இப்டியே லாடு லபக்கு தாஸ் கணக்கா கப்ஸா வுட்டுட்டு திரி நைனா, அப்பாலே ஊடு கட்டி அடிக்கறேன்” என வெடித்தாள் மிரு.

“ஹேய் மிரு! என்ன பாஷை இது?”

“என்னவோ பாஷை! உங்களுக்குப் புரியலல அது போதும். இப்போ நான் போய் வோர்க் ப்ரம் ஹோம் அப்ளை பண்ணறேன்!” என கோபமாக ஹாலுக்கு சென்று விட்டாள் மிரு.

கிச்சனை சுத்தம் செய்தவன், அவள் அருகில் வந்து

“நான் போய் கார் எடுத்துட்டு வரேன். நீ கீழ வந்து நில்லு மிரு. உன்னோட கார போய் எடுத்துட்டு வரலாம்” என்றான்.

அவள் பார்வை குருவின் கைகளுக்குப் போனது. பின் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“வேணா பாஸ்! கிரேப் எடுத்துப் போகலாம்” என சொல்லிவிட்டாள்.

அவன் உடலில் இருந்த பதட்டம் சட்டென வடிய மெல்ல புன்னகைத்தான் குரு.

“உன் நெத்தியில என்னமோ இருக்கு மிரு” என சொல்லி அவளை நெருங்கியவன், புறங்கையால் எதையோ தட்டி விடுவது போல அவள் உடல் சூட்டை ஆராய்ந்தான்.

அவள் என்ன ஏது என கேட்கும் முன்னே,

“நீ கிரேப் புக் பண்ணு மிரு! நான் போய் ஆபிஸ் க்ளோத்ஸ் போட்டுட்டு வரேன். நீயும் தம்பியும் என்னோட பக்கத்து ரூம் எடுத்துக்குங்க! கட்டில் மெத்தை மட்டும் இருக்கு. கபோர்ட்லாம் வாங்கிப் போடல. என் வைப் வந்ததும் அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிப் போடலாம்னு விட்டுட்டேன். இப்போத்தான் நீ வந்துட்டியே பர்னிச்சர் ஷோப் போகலாமா மிரு?” என கேட்டு அவள் கத்த ஆரம்பிப்பதற்குள் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டான் குரு.

தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் மிரு. மறுபடியும் அந்த வீட்டுக்கு தனியாய் போக பயமாய் இருந்தது அவளுக்கு. வெட்கத்தை விட்டு தன் தாய் மாமாவின் வீட்டுக்குப் போய் பார்க்கலாமா என கூட நினைத்தாள். அந்த நினைவே கசந்துப் போக, நிமிர்வுடன் எழுந்து அமர்ந்தாள் மிரு.

‘பாஸ் கல்யாணம் செஞ்சிக்க கேட்டாரு. எனக்குப் பிடிக்கலன்னு சொல்லிட்டேன்! ஆனாலும் அவரது ஆசையை அப்பப்போ சொல்லிட்டே இருக்காரு! அதுல என்ன தப்பு? அதை ஏத்துக்கறதும், தட்டிக் கழிச்சுட்டுப் போறதும் என்னோட சாய்ஸ்! இதுக்கு ஏன் கோபப்பட்டு அவர் கிட்ட எகிறனும்? இப்போ இங்க இருக்கறது தான் எனக்குப் பாதுகாப்பு. பாஸ் கிட்ட ஒதுங்கி இருந்துட்டா சமாளிச்சிரலாம் ’ என நினைத்தவள் அங்கேயே தங்குவதென முடிவெடுத்தாள்.

வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் வசதியை குரு செய்துக் கொடுக்கவும், அம்மாவைப் பார்த்துக் கொண்டே ப்ரோட்பேண்ட் இண்டெர்நெட் கொண்டு ஆபிஸ் வேலை செய்வாள் மிரு. இவள் காலையில் அம்மாவுடன் இருக்கவும், கணே பள்ளிக்குப் போய் விடுவான். பிற்பகலில் அம்மாவைப் பார்க்க வருவான் கணே. அவனை அங்கே நிறுத்திவிட்டு, மிரு குருவின் வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு, சிம்பிளாக எதாவது சமைத்து எடுத்துக் கொண்டு குரு வருவதற்குள் மருத்துவமனைக்கு ஓடி வந்துவிடுவாள். இரவில் கணே குருவுடன் தங்கி விடுவான். இது வரை இவர்கள் குருவின் வீட்டில் இருப்பதை ரதியிடம் மறைத்தே வைத்திருந்தனர். இரு முறை மிருவின் முதலாளி எனும் சாக்கில் வந்துப் பார்த்த குருவும், எதையும் சொல்லிக் கொள்ளவில்லை ரதியிடம்.

தன்னிடமே கண்ணாமூச்சி ஆடும் மிருவை நினைத்து இவனுக்குப் புன்னகை வந்தது. அந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிக்கத்தான் இன்று கிளையண்ட் மீட்டிங்கை கான்சல் செய்து விட்டு மதியமே வீட்டுக்குப் போய் கொண்டிருந்தான் குரு. அவளை நினைத்தாலே முகம் புன்னகையைப் பூசிக் கொள்கிறது குருவுக்கு. கணே அவனுடன் இரவில் தங்கப் போகிறான் என அவள் சொல்லிய போது இவன் பேசிய பேச்சும் அவள் முகம் போன போக்கும் இப்பொழுது நினைத்தால் கூட அவனுக்கு சிரிப்பு பொங்கியது. டாக்சி ட்ரைவர் அவனை ஒரு மாதிரி பார்க்க கஸ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“பாஸ்”

“யெஸ் மிரு”

“இன்னிக்கு நைட் கணே, என் தம்பி உங்க கூட தங்கிக்குவான்.”

“சரி!”

“பத்திரம் பாஸ்”

சிரிப்புடன்,

“எதுக்கு இந்தப் பத்திரம் மிரு? வெறும் கணேஷ் தானே என் கூட தங்கப் போறான்? கணேஷ்வரின்னு உன் தங்கச்சி யாராச்சும் என் கூட தங்கப் போறாங்களா? தங்கிச்சியாச்சும் அழகா இருப்பாளா இல்லை உன்ன மாதிரியே பேரழகா இருப்பாளா? என்ன சொல்லு மிரு, சிஸ்டர் இன் லான்னு ஒருத்தி இருந்தா அந்த ஆம்பளை ரொம்ப குடுத்து வைச்சவன். எல்லா வீட்டுலயும் அப்படி அமைஞ்சிடா எந்த ஆம்பளையும் மாமியார் னீட்டுக்குப் போக சோம்பல் படவே மாட்டான்!” என அவளை வம்பிழுத்தான் குரு.

“ஏன், எனக்கு தங்கச்சி இல்லைன்னு பாஸ்க்கு ரொம்ப கவலையா இருக்கோ?”

“சேச்சே அப்படிலாம் இல்ல மிரு. எனக்கு சந்தோஷம்தான். உன்னை மாதிரியே உன் தங்கச்சி இருந்தா, என் மிருதுவோட தங்கச்சியும் எனக்கு மிருதுதான்னு அவளையும் கட்டத் தோணும். எதுக்கு வம்பு. எனக்கு என் மிரு ஒருத்திப் போதும்”

“அதனாலத்தான் கடவுள் உங்களுக்கு வெறும் ப்ரதர் இன் லா மட்டும் குடுத்துருக்கான்!” என காதலி மாதிரியே கோபித்துக் கொண்டு போனவளை புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் குரு. அதற்குப் பிறகு தான் அவளை காணவே முடியவில்லை குருவால். அவளைப் பார்ப்பதற்காகவே மருத்துவமனை போனான்.

டாக்சிக்குப் பணம் செலுத்தி விட்டு லிப்டில் ஏறியவனுக்கு வீடு செல்லவே உற்சாகமாக இருந்தது. மிருவுக்கு ஒரு சாவி கொடுத்திருந்தான் குரு. தன்னுடைய சாவிக் கொண்டு கதவைத் திறந்தவன், அப்படியே வாசலிலே வேரோடி நின்றான். பாட்டு சத்தம் காதைக் கிழிக்க, சமையலறையில் கரண்டியுடன் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் மிரு. தொள தொளவென ஒரு கருப்பு டீசர்ட், முட்டி வரை ஷோர்ட்ஸ் அணிந்திருந்தாள். அந்த டீசர்டோ ஒரு பக்க தோளில் வழிந்து இன்னொரு பக்க தோளைக் காட்டிக் கொண்டிருந்தது.

“வாட் அ வெல்கமிங் சைட்!” முகம் புன்னகையில் மலர்ந்தது குருவுக்கு.

மிருவோ,

“உள்ளங்கள் பேசும் மொழியறிந்தால்

உன் ஜீவன் துடிக்கத் தேவையில்லை

இரு கண்கள் பேசும் பாஷைகளை

இரு நூறு மொழிகள் சொல்வதில்லை

தான் கொண்ட காதல் மொழிவதற்கு

மலேசிய நாட்டுப் பெண்கள் துணிவதில்லை” என ரேடியோவுடன் சேர்ந்து பாட்டை மாற்றிப் பாடிக் கொண்டே இடுப்பை ஆட்டி ஸ்லோ டாண்ஸ் ஆடிக் கொண்டிருந்தாள்.

கதவை மெல்ல சாற்றிவிட்டு மென்னடைப் போட்டு மிருவின் பின்னால் வந்து நின்றவன்,

“மலேசியா நாட்டுப் பொண்ணுங்க சொல்லலைனாலும், பையனுங்க கண்டுப்புடிச்சிருவோம்” என சொன்னான்.

ரேடியோ சத்தத்தில் அவன் வந்ததை அறியாதவள், அருகில் குரல் கேட்கவும் திகைத்துத் திரும்பி பின்னால் நின்றவனை மோதி நின்றாள். அவள் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்ட குரு, இறுக அவளை அணைத்துக் கொண்டான்.

“நேரா ஐ லவ் யூ குருன்னு சொன்னா என்ன மிரு? இப்படி பாட்டுல தான் சொல்வியா?” என குழைவாக கேட்டான்.

அவன் அணைப்பில் இருந்தவள் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள், வீட்டின் கதவு திறந்தது.

“ஹே ப்ரோ! நான் வந்துட்டேன்! எப்படி போன தடவை வந்துட்டுப் போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேன்!” தனது சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே வந்த ஹரி ஆர்ப்பாட்டத்துடன் குரல் கொடுத்தான்.

அவன் பார்வை வட்டத்துக்குள் இறுக கட்டிப்பிடித்தப்படி நின்றிருந்த குருவும் மிருவும் பட,

“ஓ மை கடவுளே!” என வாயைப் பிளந்தான் அவன்.

 

‘இந்த மனசுக்குள் ஆசைகள் ஆயிரம்

ஆசைகளோடு வாழ பெண்ணே நீ அருகில் வேண்டும்…’

(தவிப்பார்கள்)

error: Content is protected !!