MP5B

மது பிரியன் 5B

 

ஸ்பரிசங்கள் தந்த இனிமையை மீண்டும் உள்ளம் நாட, தனிமையில் மதுராவை நெருங்க நினைத்தவனுக்கு, தன்னை, தனது பழைய வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து கொண்டுதான் திருமணத்திற்கு மதுரா சம்மதித்தாளா இல்லையா எனும் வினாவிற்கான விடையைத் தெரிந்து கொள்ள விரும்பினான் விஜய்.

அன்றைய அவளின் பேச்சில் எழுந்த சந்தேகத்தை தெரிந்து கொண்டபின் அதனைச் சரிசெய்யாமல், அவளை தனக்கு இணங்கச் செய்வது முறையற்ற செயலாய் எண்ணினான்.

ஆனால் அந்த விசயத்தைப் பற்றிக் கேட்கப் போக, தற்போதைய இனிமை கெட்டு விடுமோ என்கிற தயக்கமும் அவனை ஆட்கொண்டது.

சாமான்ய மனிதன்தானே விஜய்.

ஆகையினால், அவளின் மனதோடு நெருங்கியபின், இதைப்பற்றிப் பேசி அதற்கான தீர்வு காணலாம் எனும் முடிவுக்கு வந்திருந்தான்.

மதுவின் இளக்கமும், இணக்கமும் அவனுக்கு பச்சைக் கொடியைக் காட்டி, தன்னை மனமுவந்து ஏற்றுக்கொண்டதை அவளின் செயல்வழியே அறிந்து கொண்டான்.

செவ்வானமாய் சிவந்துபோகும் வதனமே அவள் தன்னை ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய விசயமாகத் தோன்றிட, அன்று இரவு அறைக்குள் நுழைந்தவளின் கரம் பற்றி தனதருகே அமர வைத்தான்.

அதுவரை இலகுவாய் இருப்பதுபோல இருந்தவளுக்கு, கணவனின் தனிமையில் உண்டான நெருக்கத்தில் பதற்றம் வந்து சேர்ந்தது.

உள்ள நடுக்கம் உடல் வரை பரவிட, அது விரலிலும் வெளிப்பட்டது.

விரல்களை அவளுக்கு ஆதரவாய்ப் பிடித்து அவனுக்கும் கஷ்டமில்லாமல், மனைவிக்கும் நோகாமல் மெதுவாக சுடக்கு எடுத்தான்.

அதிலிருந்து எழுந்த சப்தங்கள், ஏழிசையாக இருவரின் உள்ளங்களிலும்.

துவண்டிருந்தவளை தோளில் சாய்த்துக் கொண்டவன், “உங்க அத்தை அதுக்குப்பின்ன உனக்கு போன் பண்ணாங்களா?”

“ம் இல்லை” அதுவரை நாணத்தில் துவண்டிருந்தவளுக்குள், வளர்ந்த வீட்டின் நினைவில் சஞ்சலம் வந்து அடைக்கலம் கொண்டது.

“உங்க அத்தைன்னா உனக்கு ரொம்பப் பிரியமா?”

“பெத்தவங்க இல்லாதப்போ, என்னை நடு ரோட்டுல எனக்கென்னானு அனாதையா விடாம, தங்க இடம் குடுத்து, கிழியாத உடுப்பு குடுத்து, வேளைக்கு சோறு போட்டது எல்லாம் அவங்கதான.  அதனால அவங்க மேல பிரியமில்லைனு எப்டிச் சொல்ல? அவங்களுக்கென்னானு விட்ருந்தா யாரும் கேக்கப் போறதில்லை.  ஆனாலும் இவ்ளோதூரம் வச்சிப் பாத்திட்டாங்கள்ல! அந்த நன்றி ஆயுளுக்கும் இருக்கும்”

மனைவியின் பதிலில் விஜய்யிற்கு வருத்தமாகப் போனது.

“சாரி மது.  அவங்களை பாக்காம ரொம்ப மிஸ் பண்றியோனுதான் அப்டிக் கேட்டேன்”

“எங்க அத்தை எனக்கு கல்யாணம்லாம் பண்ணி வைப்பாங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்த்ததே இல்லை.  ஏன்னா அவங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் என்னைவிடச் சின்னவங்களா இருந்தாலும், அடுத்தடுத்து ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணாங்க.  அப்பலாம் அந்த விசயமே எனக்குத் தெரிய வராம கல்யாணத்துக்கு ரெண்டு நாளு இருக்கத்தான் தெரிய வந்தது.  அப்ப நான் யோசிச்சிருக்கேன். ‘நம்மைவிட சின்னவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது.  ஆனா நமக்கும் அந்த மாதிரி வாழ்க்கை அமையுமானு’ அப்புறம் நாளாக நாளாக அதுலாம் ரொம்பப் பேராசைன்னு என்னை நானே சமாதானம் பண்ணிட்டு, வீட்டு வேலையுண்டு, நானுண்டுன்னு இருந்தேன்.  அத்தை கேட்டா பதில் சொல்வேன்.  எப்பவும் எங்கூட பேச மாட்டாங்க.  எதாவது தேவைன்னா வந்து கேப்பாங்க.  அவ்ளோதான்.  அவங்களைப் பொறுத்தவரை நான் அவங்களோட ஒரு வேலைக்காரி. அப்படி அவங்க நினைக்கும்போது, அவங்களை மிஸ் பண்றேனு சொன்னா உலகம் சிரிக்கும்ல” முகத்தில் பலவிதமான நவரச உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே பேசி முடித்தாள் மதுரா.

“அக்கா வந்து உன்னைப் பாக்க வரேன்னு உங்க அத்தைகிட்டச் சொன்னப்போ, உங்களுக்கு எதுக்கு அலைச்சல்னு சொல்லி, உன் போட்டோவை அனுப்பி வச்சதா, அக்கா எங்கிட்ட சொல்லிச்சு” விஜய், மதுராவுடனான திருமணப் பேச்சின்போது நிகழ்ந்த விசயத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

“கல்யாணம்னு வந்து எங்கிட்டச் சொன்னாங்க.  அத்தோட பிரேமா அத்தைகிட்ட சொல்லச் சொன்னாங்க.  வேற எதுவும் எங்கிட்ட சொல்லலை” மதுரா தனது நிலையை உரைத்தாள்.

“என்னைப் பத்தி எல்லாம் சொல்லித்தான, உங்க அத்தை எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க” விஜய்யைப் பொறுத்தவரையில், தனது பழைய வாழ்க்கை முழு பூசணி. ஆகையால்  அதை மறைக்க  வேண்டாம் எனும் முடிவோடு மனைவியிடம் அப்படிக் கேட்டுவிட்டான்.

“எங்கிட்ட எதுவும் சொல்லலை.  ஆனா பிரேமா அத்தை கேட்டதுக்கு, சௌந்திரம் அத்தை பதில் சொன்னாங்க.  அப்பத்தான் உங்களைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன்” முகம் முழுக்க சந்தோசம் விரவிக் கிடக்க, விஜய்யிக்கு புரிந்தது.  தன்னைப்பற்றிப் பேசுவதையே அத்தனை சந்தோசமாக மதுராவின் உள்ளம் நினைக்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டவனுக்கு, அவளைத் தூக்கித் தட்டாமாலை சுற்றும் ஆசை எழுந்தது.

அது தற்போது பேராசை என எண்ணியவன், தன்னை அடக்கிக் கொண்டான்.

சுற்றியதோடு, மனைவியை விட்டு சட்டென விலகியோட அவனால் முடியாதே!

“என்னைப் பத்தி வேற என்னெல்லாம் சொன்னாங்க?”

“நீங்க கவர்மெண்ட் வேலையில இருக்கீங்கனு சொன்னாங்க.  குடும்பத்தைப் பத்தி சொன்னாங்க.  அவ்ளோதான்”

மதுராவின் விரல்களைப் பிடித்து, தனது முகத்தருகே கொண்டு சென்றவன், இதழால் இதமாய் புறங்கையில் முத்தமிட்டான்.

விஜய்யின் முத்தம், அவளின் சித்தத்தை நெகிழச் செய்திருந்தது.

மழைக்கு நனைந்த கோழிக்குஞ்சு வெடவெடத்து மேற்கூரையின் கீழ் ஒடுங்குவதுபோல அவனிடம் ஒடுங்கி நின்றவளின் தோளை ஒரு பக்கமாய் அணைத்துக் கொண்டவன், “என்னைப் புடிச்சிருக்குதான” தானாக ஒன்றை நினைத்துக் கொண்டு வாழத் துவங்குவதைவிட, சம்பந்தப்பட்டவளின் மனதைத் தெரிந்து கொள்ளலாம் எனக் கேட்டான்.

“ம்ஹ்ம்”

மதுராவின் ஒப்புதலை அறிந்ததும், இறுகத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

நெகிழ்ந்த மனதோடு, மொத்தத்தையும் அவனிடம் சரணாகதியடையச் செய்தவள், சுற்றிலும் இருந்த அமைதியில் இருவரின் இதயத் துடிப்பை உணர்ந்தனர்.

மதுராவிற்கு அப்போதுதான், திருமணத்தன்று பாட்டி சொன்னது நினைவில்வர, இதுவே சரியான சந்தர்ப்பம் என நினைத்தவள், “நான் ஒன்னு கேட்டா, நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே” பீடிகையோடு கணவனிடம் கேட்டாள்.

“கேளு” அணைப்பை விடுவித்தவன், இளநகையோடு அருகே நின்றவளின் விழிக்குள் ஊடுருவிய பார்வையுடன் கேட்டான்.

பாட்டி கூறியதைக் கூறியவள், “ஏற்கனவே உங்களுக்கு வேறு பொண்ணைப் பேசி வச்சிருந்துட்டு, அப்புறம் கல்யாணம் தட்டிப் போயிருச்சா” தனது யூகத்தைக் கணவனிடம் முன்வைத்தாள்.

தற்போது பந்து தனது பக்கம் வந்திருப்பதை, நாசூக்காக எதிரில் உள்ளவளுக்குக் மாற்றிவிட இது விளையாட்டு அல்லவே.  ஆகையினால் சற்று நிதானித்தவன், “இது யாரு சொன்னா?”

“இல்ல.. கல்யாணத்தன்னிக்கு அந்தப் பாட்டி ஏதோ சொன்னாங்கள்ல” நினைவு கூர்ந்தவள், “அதைவச்சி இப்ப நானாத்தான் கேக்குறேன்”

“இன்னொரு நாள், அதைப்பத்தி டீட்டைலா சொல்றேன் உனக்கு” மனைவியின் மூக்கைப் பிடித்துச் செல்லம் கொஞ்சி, பேச்சை மாற்றியவனின் மனதில், ‘அப்ப இந்த விசயத்தை அவங்க சொல்லவே இல்லைபோல’ வருத்தம்தொனிக்க, “உங்க அம்மா ஃபிரண்டு வீட்டுக்கு போகணும்னு கூப்பிட்டல்ல.. எப்போ போகலாம்” விஜய் முடிவு செய்துவிட்டான்.

பிரேமாவிடம் கூறி, மதுராவிடம் பேசச் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தான். தன்வீட்டார் பேசுவதைவிட அவளின் நலன் விரும்பிகள் வாயிலாக இந்த விசயத்தை அணுகுவது நல்லது என நினைத்திருந்தான்.

ஆகையால்தான் முதலில் சௌந்திரத்தைப் பற்றி விசாரித்தான்.  அவர் இதற்கு சரியான நபராக இருந்திருந்தால், முன்பே விசயம் மதுராவிடம் பகிரப்பட்டிருக்கும் என்பதால், அடுத்ததாக அவன் நினைவில் வந்தது பிரேமாதான்.

“எப்போனாலும் எனக்கு ஓகேதான்”

இதுபோல பேச்சு திசைமாறியது என்பதைவிட மாற்றப்பட்டது. இந்த வாரயிறுதியில் செல்லலாம் என நினைத்தவனுக்கு எதிர்பாரா வேலை காரணமாக, “அடுத்த வாரம் கண்டிப்பா போறோம்” கணவனின் வார்த்தையைக் கேட்டு சிரிப்போடு அகன்றாள் மதுரா.

“என்ன பொண்டாட்டி ஒரு மாதிரியா சிரிக்கற?”

“சிரிக்கறது குத்தமா?”

“இல்லை.. அந்தச் சிரிப்பைப் பாத்தா, ‘இவனுக்கு வேற வேலையே இல்லை.  இப்டித்தான் சொல்லுவான்.  ஆனா நடக்காது’ அப்டிங்கற மாதிரி இருக்கே”

“ச்சேச்சே அப்டியா இருந்தது.  அப்ப இனி நல்லா சிரிக்க ட்ரை பண்றேன்” மதுராவும் வார்த்தைக்கு வார்த்தை அவனோடு வாயாடத் துவங்கியிருந்தாள்.

பஞ்சவர்ணம் மற்றும் வசீ இருவரும் உறங்கச் சென்றபின், சற்றுநேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பவன், மதுரா வேலை முடித்து வரும்வரை காத்திருக்கப் பழகியிருந்தான்.

அவள் வந்ததும் உறங்கச் செல்லாமல், மதுராவை தன் கைவளைவில் வைத்தபடியே, தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க, இங்கு தனிக் காட்சியை அரங்கேற்றுவார்கள்.  எல்லாம் ஒரு எல்லையோடு.  அதன்பின் மதுராவை அலேக்காகத் தூக்கிக் கொண்டு படுக்கைக்குச் செல்வான்.  அங்கும் சற்றுநேரம் கொஞ்சல், குலாவல்கள் தொடரும். ஆனாலும் அடுத்த கட்டத்திற்கு செல்லாமலேயே நாள்கள் கடந்தது.

மதுராவின் உள்ளத்தில் சின்ன சந்தேகம் பொறியாகத் துவங்கி, தற்போது பெரிய தீப்பிழம்பாக மாறியிருந்தது.

‘என்னவா இருக்கும்.  நல்லா அன்பா பேசுறாங்க. எதுவும் பிரச்சனையோ? ஆனா இப்படி இருக்க கல்யாணம் பண்ணிக்கணுமா?’ இப்படி அவளின் மனதில் ஓடியது.

ஆனால் கேட்கும் தைரியமோ, இதை யாரிடம் கூறி தெளிவது என்கிற ஞானமோ அவளுக்குச் சுத்தமாக இல்ல.

நாள்கள் சென்றது.  வந்த சில நாள்களிலேயே மதுரா கவனித்திருந்தாள்.  சில உபயோகமற்ற பொருள்கள் பயனற்று இடத்தை மறைத்தபடியே கிடந்தது. மழைக்கும், வெயிலுக்கும் அப்படியே கிடந்து யாருக்கும் பயனில்லை.  உடைந்த மரக்கட்டில், கம்ப்யூட்டர் டேபிள், நாற்காலி, சில பாத்திரங்கள் இன்னும் இப்படி சில.

“இங்க பழைய திங்க்ஸ் எல்லாம் அடசலா அங்கங்கே வெளிய கிடக்குங்க. அதையெல்லாம் எங்க ஒதுக்கி வைக்கலாம்கணவனிடம் கேட்க, அவனும் அதற்கான வழியைக் கூறிவிட்டு அலுவலகம் சென்றிருந்தான்.

இதனால் வரப்போகும் துயரறியாதவள், கருமமே கண்ணாக அன்று மதியமே வேலையைத் துவங்கியிருந்தாள்.

மதியத்திற்குமேல், பஞ்சவர்ணத்தைக் கொண்டு தேவையற்றது எனக் கருதியதை எல்லாம் விஜய் கூறிய இடத்தில் எடுத்து வைக்கச் சொல்ல, அவரும் கூறியதைச் செய்து கொண்டிருந்தார்.

பின்புறத்தில் இருந்த சிறிய அறையில் உபயோகமற்ற பொருள்கள் சில முன்பே வைக்கப்பட்டு இருந்தது.  சிலாபின் மீது பழமை மாறாமல் இருந்த அழகான அட்டை ஒன்று மதுராவின் கண்ணில்பட, ஆர்வமிகுதியில் “அக்கா, அந்தக் கடைசியில இருக்கு பாருங்க.  அதை எடுத்து எங்கிட்டத் தாங்க பஞ்சுவிடம் கூறினாள்.

பஞ்சு அதை என்னவென்று பாராமலேயே, ஸ்டூலில் நின்றபடியே இழுத்து, அதை மதுராவிடம் எடுத்துத் தந்திட, ஏ த்ரீ அளவில் இருந்த ஆல்பத்தை, மதுராவின் கையில் வாங்க முடியாதளவிற்கு அது கனமாக இருந்தது.

வாங்கும்போது கவனம் முழுக்க அதில் இருக்க, பாதி இழுத்த நிலையிலேயே தெரிந்த உருவம் விஜய்யினது என்பதைக் கண்டுகொண்டிருந்தாள் மதுரா.

ஏனோ ஏதோ அபஸ்வரமாய் தோன்றியது. ஆனாலும், அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டே ஆக வேண்டும் என உள்ளம் துடிக்க,  முழுவதையும் இழுத்துத் தன் கையில் பஞ்சு தர, பெற்றுக் கொண்டவளுக்கு, இதயம் தாறுமாறாகத் துடித்தது.

இன்னொரு புறத்தில் இருந்தது ஒரு பெண் என்பதைக் கண்டதுமே, தன் கணவனோடு வேறு பெண்ணா? என அதை ஏற்றுக் கொள்ள இயலாத மனதில், சுயபச்சாதாபம் அத்தோடு ஏமாற்ற உணர்வு ஒருங்கே எழ சட்டென கண்ணில் நீர்.  மனஅழுத்தம் கூடி, சட்டென உண்டான அதிர்ச்சி, காரணமாய் மயக்கம் வரும்போல இருந்தது.

மனதின் அலைச்சுழல் அதிகமானதும், தாங்கிக்கொள்ள இயலாத மூளை சட்டென மதுராவின் இயக்கத்தை நிறுத்தி, மயக்கத்தை தந்திருந்தது. முகப்பில் இருந்த பெயர்களை விஜயரூபன் அஞ்சனாஸ்ரீ என இருந்ததை படித்தவள், அப்படியே நின்ற இடத்திலேயே ஆல்பம் கையிலிருந்து நழுவ தரையில் சரிந்துவிட்டாள்.

திடீரென மதுரா சரிந்ததைக் கண்ட பஞ்சவர்ணம், “மதுராம்மா.. ஆஅஅஅஅ கத்தியபடியே ஸ்டூலில் இருந்து இறங்கியவர், சட்டென அடுக்களைப் பகுதிக்குச் சென்று தண்ணீரை எடுத்து வந்து, மதுராவின் முகத்தில் தெளித்திட, மயக்கம் தெளியாததால் விழி மூடி அசையாமல் கிடந்தாள் மதுரா.

பதற்றத்தில் அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று பஞ்சவர்ணம் உதவிக்கு அழைக்க, நான்கைந்து பெண்கள் வீட்டிற்குள் கூடிவிட்டனர்.

“நல்லாத்தான் நின்னுட்டுருந்தாங்க.  என்னானே தெரியலை.  சட்டுனு சரிஞ்சு விழுந்துட்டாங்க நடந்த விசயத்தை விளக்கியபடியே, அங்கிருந்து மதுராவை அனைவரும் கைத்தாங்கலாய் ஹாலுக்குத் தூக்கி வந்தனர்.

அனைவரும் ஆளுக்கொரு கைப்பக்குவம் செய்து மதுராவை விழிக்கச் செய்திருந்தனர்.

மதுரா விழுந்து கிடந்த இடத்தில் வந்து அவளைத் தூக்கி, அனைத்தும் செய்தவர்களின் கண்ணில் அந்த ஆல்பமும் படாமல் இல்லை.

ஆனாலும் அதைப்பற்றி எதுவும் பேசாமல், “என்னம்மா. திடீர்னு என்ன மயக்கம்? நாளு எதுவும் தள்ளிப் போயிருச்சாவந்ததில் ஒருவர் மெதுவாக வினவ

தலையசைத்து மறுத்தவள், என்ன பதில் சொல்ல என்று புரியாமல், அப்படியே திகைப்பில் அமர்ந்துவிட்டாள்.

மற்றவர்கள், “மசக்கைனால மயக்கமில்லைனா, சாதாரணமா எடுத்துக்கூடாது.  உடனே டாக்டர்கிட்ட போயிட்டு வந்திரலாம் வாம்மா மதுராவைக் கிளப்ப,

“இல்ல அவங்க வந்ததும், அவங்களோடவே போயிட்டு வந்துக்குறேன்.  ரொம்ப நன்றி உதவிக்கு வந்தவர்களிடம் தனது நன்றியைப் பகிர்ந்தவள், “பஞ்சக்கா, எல்லாத்துக்கும் டீ போட்டு எடுத்தாங்க அனைவரும் ஹாலில் அமர்ந்து மதுராவைப் பார்த்தபடியே, “நேரங்கெட்ட நேரத்துல டீலாம் வேணாம்மா.  நீ மயக்கமாகிட்டனு அவங்க கூப்பிட்டதால வந்தோம்.  எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு.  போயி என்னானு பாக்கறோம்.  உடம்பப் பாத்துக்கம்மா கிளம்ப எத்தனிக்க

“வந்துட்டு ஒன்னுமே சாப்பிடாமப் போறீங்களே அந்நேரத்திலும் வருந்தினாள் மதுரா. 

“சீக்கிரமா நல்ல விசயம் சொல்லும்மா. வந்து விருந்தே சாப்பிடறோம் அனைவரும் ஒன்றுபோலக் கூறிவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினர்.

சென்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே ஏதோ பேசியவாறு வெளியேறினர்.

சற்று தெளிந்தபின், அந்த ஸ்டோர் ரூமிற்குள் சென்று, ஆல்பத்தை எடுத்து வந்து தங்களதறைக்குள் வைத்தாள் மதுரா.

அடுத்து கணவன் வீட்டிற்குள் நுழையும்வரை அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை.

ஆல்பத்தை ஒவ்வொரு பக்கமாய்ப் பார்த்தவளுக்கு, தான் இரண்டாந்தாரம் என்பதைவிட, தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்கிற தனது நினைப்பில் விழுந்த அடியிலிருந்து மீளமுடியாமல், ஆழ்மனம் பிதற்றியது.

அதிலும் அஞ்சனாவைப் பார்த்தவளுக்கு, தான் அவளைக் காட்டிலும் அழகிலோ, நேர்த்தியிலோ, அந்தஸ்திலோ மட்டு என்பது உறைக்க, உறைந்துபோனது மனம்.

‘அவங்களோட வாழ்ந்தவருக்கு, என்னோட வாழ எப்டிப் புடிக்கும்.  அதான் எங்கிட்ட ஒட்டாமலேயே இருந்திருக்காங்க’ தனக்குள் பேசிக்கொண்டபடியே, பல நினைவுகள் அலைக்கழிக்க, தனது பிறப்பை, ஆதரவற்ற தனது வாழ்வை எண்ணி வருத்தம் மேலிட அறையைவிட்டு வெளிவர விருப்பமின்றி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

பள்ளி விட்டு வந்த வசீகரன், அறைக்குள் நுழைந்து “அத்தை..”

“வா வசீ”

வசீயின் வருகையை உணர்ந்து படுக்கையிலிருந்து எழுந்தவளைக் கண்டவன், “என்னத்தை உடம்புக்கு முடியலையா?  என்ன செய்யுது?”

“தலைவலியா இருக்கு வசீ.  உனக்கு வேணுங்கறதை பஞ்சக்காகிட்ட கேட்டு வாங்கிக்க”

“உங்களுக்கும் காஃபி வாங்கிட்டு வரவா?”

“எனக்கு எதுவும் வேணாம்.  தூங்கி எந்திரிச்சா சரியாகிரும்”

“சரித்தை.  அப்ப கொஞ்ச நேரம் தூங்குங்க.  இன்னைக்கு நானே படிச்சிக்கிறேன்” அறையைவிட்டு வெளியேறிவிட்டான்.

விஜய் வரும்வரை தனிமை கொடுமையாக இருந்ததா?  விஜய் வந்தபின் மதுராவின் நிலை கொடுமையாக இருந்ததா?

……………………………………………