MT 14

MT 14

மாடிவீடு – 14

செல்வி முன் நின்‌றிருந்தாள் அன்பு. செல்வியால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

‘அன்புவா இப்படி செய்கிறாள்? அன்புவா காதலிக்கிறாள்?’ இதை காதல் என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சதா அழகுவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இவளை இப்படி மாற்றியது யார்? அவளுக்கு தெரியவில்லை ஆனாலும் பயமாக இருந்தது.

அன்புவை பார்த்தாள், அவள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் இன்னும் குழந்தைத் தனம் மிச்சமிருந்தது?

அன்பு வெகுளி. அவளை, அவன் ஏமாற்ற நினைத்திருந்தால்? என்ன செய்வது? நிரம்பவே பயம் செல்வியிடம்.

“அவனோட பணத்தைப் பார்த்து மயங்கிட்டியா அன்பு?”

“என்ன சொல்லுற செல்வி” அவள் கண்களில் வலியின் சாயல்!

“அவன் மேல உனக்கு ஒன்னு வந்திருக்குதே அது அவன் பணத்தைப் பார்த்துதேன் வந்திசான்னுக் கேட்டேன்” வார்த்தையை நிறுத்தி நிதானமாகக் கேட்டாள் செல்வி.

“பணமா! எப்படி செல்வி இப்படி கேக்குற? அவர் யார்ன்னு தெரியதுக்கு முன்னாடியே அவரைப் பார்த்தேன். அடிக்கடி அந்த பக்கமாக போனேன்? ஏன் தெரியுமா? ஏதோ ஒரு விதத்துல அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி”

“நீ நடந்துகிற முறை சரியா அன்பு?”

ஒரு கணம் தவறு செய்வதாக தோன்றியது. ஆனால் அவர்‌, என்னை பார்க்கும் பொழுது அவர் கண்களில் தோன்றும் சந்தோஷம் காதல், அதை இப்பொழுது நினைத்தாலும் இனித்தது.”அனுபவம் புதுமை… அவரிடம் கண்டேன்” பாட வேண்டும் போல் இருந்தது.

“காதலிக்கிறது தப்பா செல்வி?”

“காதலிக்கிறது தப்பில்லை அன்பு. ஆனால் தகுதி இல்லாத இடத்தில் காதல் வருவது ரொம்ப தப்பு அன்பு”

“காதல் தகுதிப் பார்த்து வராது செல்வி, அதே போல நான் அவர் மேல் கொண்ட காதலுக்கு காரணம் கண்டுப் பிடிக்கவும் விரும்பல, காதல் தோன்ற ஒரு காரணமும் இருக்கக் கூடாது. அது தானா தோன்றிய காதலாதேன் இருக்கோணும். என் காதல் எனக்காகத்தேன்… எனக்காக மட்டுந்தேன். ஆனா, நீ நினைக்குறதுப் போல அவர் ஒன்னும்  மோசமானவர் இல்லை… நானும் பணத்துக்காக அவரை காதலிக்கலை”

“மோசமானவர் இல்லைன்னு சொல்லுற? அதேன் உன்னை கட்டிப் பிடிச்சிட்டு இருந்தானா?” கோபமாக வந்தது செல்விக்கு.

“அவன் ஆண் இன்னைக்கு அணைப்பான்… நாளைக்கு இழைப்பான்… ஒரே நாளுல எல்லாம் மறைந்து விடும், மறந்து விடும். உனக்குத்தேன் நாளைக்கு சிக்கல். இவ்வளவு பேசுற நீ இதெல்லாம் யோசிக்காண்டாமா?

அதிலும் அவன் பெரியவீட்டுப் பிள்ளை. ஆசைப்பட்டு பின்னாடி சுத்துவான். அப்புறம் வாழ்க்கையை இழந்து நீதேன் தனியா நிப்ப, இதெல்லாம் நல்லதில்லைப் புள்ள”

“என்மேல எத்தனை பாசமா இருக்கார் தெரியுமா? ஒரு நாள் என்னை பாக்கலேன்னாலும் அவ்ளோ துடிச்சு போறார்? அவருக்கு என் காதலை குடுகிறதுல என்ன தப்பு இருக்கு?”

“தேன் எடுக்கும் வரை பூவை வண்டு சுற்றத்தேன் செய்யும் அன்பு”

“அவர் அப்படி பட்டவர் இல்லை செல்வி”

“தேன் உண்ணும் வண்டு. தேன் முடிந்ததும் விட்டு போய்விடும் அன்பு”

“அவர் அப்படிப்பட்டவர் இல்லை செல்வி. இவர் வண்டும் இல்லை. என் மனம் கவர்ந்தவர். எந்த நேரத்திலும் அவர் என்னை விட்டு போமாட்டார். ஏன், அவர் உயிர் பிரியும் நிலை வந்தாலும் என்னையும் அழைச்சிட்டுத்தேன் போவாரே தவிர, தனியா என்னை தவிக்க விடமாட்டார்?”

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற, கடல் ஆழம் கண்டவரும், கன்னியின் மனம் அறிந்தவரும் காலை விடாமல் இருக்கமாட்டார்களாம்?”

“இருக்கட்டுமே? மண்ணின் ஆழம் தெரிந்து தானே மரம் வளர்க்கின்றது. என் மன ஆழம் தெரிந்து எங்கள் காதலும் வளரட்டுமே?”

அப்படியே திகைத்துப் போய் அன்புவைப் பார்த்திருந்தாள் செல்வி. எப்படி இப்படி பேசக் கற்றுக் கொண்டாள். காதல் வந்தால் அறிவு மழுங்கிப் போகும் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறாள் செல்வி.

ஆனால், முதல் முறையாக காதலால் அறிவாளியாக ஜொலித்த அன்புவைக் கண்டாள்.

“பார் அறிவு சொட்ட காதலில் நிமிர்ந்து நிற்கும் எங்கள் வெகுளி அன்புவைப் பார்” மனம் கர்வம் கொண்டது.

அதற்காக அவளை ‘போய் காதலித்து வா’ என்று அனுப்ப தயாராக இல்லை. அமுதனை அவள் நம்ப தயாராக இல்லை. பணக்கார வர்க்கத்தின் ஆளுமையை தான் ஊரிலே காண்கிறாளே?

“அப்படியே வச்சுக்கோ அவர் காலை விட்டதாவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் வீட்டினர் உன்னை ஏற்றுக் கொள்வார்களா? உன்னை மருமகளாக இந்த ஊருக்கு உரக்க சொல்வார்களா?”

இப்பொழுது அன்புக்கு கொஞ்சம் பயம் வந்தது. அமுதன் அப்பா வந்திருக்கிறார் தான். ஆனால் ஆலமரத்தான் ஐயா இதற்கு ஒப்புக் கொள்வார்களா?

“காதல் செய்வீர்” என்று உரக்க கூறிய பாரதியாரே, “நாடகத்தில், காவியத்தில் காதல் வந்தால் நாட்டினர், வீட்டினர் தான் நன்று என்கின்றனர்.

வீட்டினிலே, கிணற்றினிலே, ரோட்டோரதிலே காதல் வந்தால் உறுமுகின்றனர். பாடைக் கட்டி காதலை, காதலர்களை அழிக்க முயற்சிக்கின்றனர். இப்படி இருக்கையில் எப்படி தன் காதல் நிறைவேறும்?

அமைதியாக அன்பு முகத்தையே பார்த்திருந்தாள் செல்வி. உண்மை தானே? காதல் தான் காட்டிலும் மேட்டிலும் வருமே? அக்காதல் நிறைவேற சாத்தியக் கூறுகள் உண்டா?

“இல்லை” என்று தான் எல்லார் பதிலாக இருக்கும். அதை தான் அன்புவிடம் விளக்கிக் கொண்டிருக்கிறாள்.

“காற்றில் ஆடிய முல்லைக்கு தேர் கொடுத்தானாம் ஒருவன், மழை குளிரில் ஆடிய மயிலுக்கு போர்வை கொடுத்தானாம் இன்னொருவன்.

உண்மையாக காதலை தந்த என்னவனுக்கு என்னையே பரிசாக கொடுக்கிறேன் நான். எங்கோ, எதற்கோ செல்லும் உயிர். அதை இவருக்கு கொடுத்து விட்டு போகிறேனே?

நீ சொல்வதுப் போல் அவர் வண்டாக இருந்தால், நான் அவருக்கு தேனாக இருந்துவிட்டுப் போகிறேன். ஒரு வண்டின் பசியை போக்கியதாக இருக்கட்டுமே. அந்த வண்டு என் மனம் கவர்ந்தவராக இருக்கட்டுமே?”

அன்பின் பதிலில், செல்வி ஒரு நிமிடம் ஆடிதான் போனாள். இதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச எண்ணவில்லை. அவளின் நம்பிக்கை நிறைவேற வேண்டுதல் மட்டும் வைத்துக் கொண்டாள்.

‘என்ன மாதிரியான காதல் இவர்களுடையது’ அப்படியே அன்பை பார்த்து நிற்க… தன் வீட்டை நோக்கி, தன் அண்ணனை நோக்கி நடந்தாள் அன்பு.

****************************

“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கீங்களா?” அந்த பக்கம் திரும்பி இருந்து பேசிக் கொண்டிருந்த தமிழ், அழகுவைப் பார்த்துக் கேட்டாள் சிலுக்கு.

‘யாருடா இது’ கொஞ்சமாய் மனதில் தோன்றிய பயத்துடன் திரும்பி பார்த்தனர் இருவரும்.

சிலுக்கைக் கண்டதும் இருவருக்கும் ஆச்சரிய புன்னகை. கோவிலில் இருந்த இத்தனை வருடத்தில் சிலுக்கு யாரிடமும் ஒரு வார்த்தைக் கூடப் பேசினதில்லை.

“அத்தை”

“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கீங்களா?” மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் சிலுக்கு.

“அக்கா” ஆச்சரியமாகப் பார்த்தான் அழகு.

சிலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாள் என்பது, நினைவில் இல்லாத தமிழோ “ஆமா” என்றிருந்தாள்.

”ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கிறீங்களா?” என்றபடி அவர்களின் முன்னே தாலியை நீட்டினாள் சிலுக்கு.

இருவர் கண்களும் ஒரே நேரத்தில் அந்த தாலியில் நிலைக்க, சிலுக்கு மனம் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

************************

“ம்மா, அந்த சிந்தாமணி புள்ளை எப்படிம்மா?”

“அவளுக்கென்னடா ரொம்ப நல்ல பொண்ணுதேன்… ஆனா என்ன வாய்தேன் கொஞ்சம் நீளம்”

“ரொம்ப வாய் பேசுமோ?” அறியாதவனாய் கேட்டான் ராஜா.

“ரொம்பெல்லாம் இல்லடா… அடுத்த வீட்டுப் புள்ளைய நாம பேசக்கூடாது… ஆமா, நீ எதுக்கு அவளைப் பத்திக் கேட்குத?”

“இல்லம்மா… அந்த புள்ளைய நான் காட்டிக்கலாம்னு இருக்கேன்?”

“என்ன புரியாமப் பேசற ராஜா?   இந்த ஊர் ஆளுங்க பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பண்ணியிருக்கியே…  இந்த விஷயம் ஆலமரத்தான் ஐயாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதேன்… நம்மளை உயிரோடவே விடமாட்டாங்க… அதிலும் நாம அவங்க சாதிசனம் இல்ல ராஜா… எப்படி உனக்கு இப்படி ஒரு காரியம் செய்ய மனசு வந்திச்சி”

நடுக்கம் குறையாமல் பயத்தோடு அவன் முகத்தைப் பார்த்து கேட்டார் ராஜாவின் தாய் மரகதம்…

“இந்த விஷயம் மட்டும் இந்த ஊருல ஒருத்தருக்காச்சும் தெரிஞ்சது,  ஜாதி வெறி பிடித்த மிருங்கங்கள் யாருன்னு பார்க்காம ஆளையே உரு தெரியாம அழிச்சிருவாங்கவாங்கடா… என்கிட்ட கேட்டதுப் போல யாருட்டையும் கோட்டி மாதி கேக்காத ராசா”

“ஊருக்கு வந்து ஒரு மாசந்தேன் ஆவுது… அதுக்குள்ள இப்படி ஒரு ஆசை எப்படி வந்திச்சி… அந்த புள்ள எல்லார்கிட்டையும் நல்லாதேன் பேசும். அது வேற ஆரும் இல்ல… ஐயோவோட தங்கச்சி. அவரோட சித்திப் பொண்ணு… அது ஐயா போல இல்ல ஜாதிசனம் பாக்காம ஊட்டுக்குள்ளார போவும், வரும்… அதுக்காக நீ ஆசைப்பட்டது சரி இல்லை ராஜா… லீவுக்கு வந்தமா வேலையைப் பாத்துப்போட்டு போவமான்னு இருக்கோனும்”

“அம்மா…  நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? ஏன் இப்படி பயப்படுறீங்க? அப்படி ஒருத்தர் உயிரை அசால்ட்டா எடுத்திருவாங்களா? அது அவங்களால முடியுமா? போலீஸ் எதுக்கு இருக்காங்க? அதுக்கு தான் சொன்னேன் என்கூட அங்க வந்திருங்கன்னு… இங்க இருந்தாலே இப்படி தான் அவங்களைப் போலவே யோசனை வருது. இந்த சாக்கடை வாசம் உன் மேலையும் வீச தான செய்யுது. இங்க பாரும்மா நான் யாருக்கும் பயப்படல… நாளைக்கு எனக்கும் அவளுக்கும் கோவில்ல கல்யாணம்… உன்னோட சம்மதம் மட்டும் தான் வேணும்… அதையும் உன்னால தரமுடியலன்னா சொல்லு, அவளை கூட்டிட்டு நானே கிளம்புறேன்”

“டேய் ஏன்டா இப்படி பண்ணுற… என்ன இருந்தாலும் நாம அவகளுக்கு கீழத்தேன்… அதை மனசுல வச்சுப்போட்டு பேசு ராஜா… படிச்சுப்போட்டா எதுனாலும் பண்ணலாம்னு நினைக்காத, அது அது… அந்தந்த இடதில இருக்கோணும், நாம எப்போவும் அவக வாசப்படில இருக்க செருப்புத்தேன்”

“ம்மா… அந்த செருப்ப நாங்க தான் செஞ்சிக் கொடுக்கோம். அதை மட்டும் போடுவாங்களா? அப்போ ஜாதி தெரியாதாமா? அவரு வேண்டாம்னு சொல்லுற சாதிசனம் உழைக்குற துட்டுல தான் அவரு வயிறு நிறையுது. இதெல்லாம் வேணும் அவக வேண்டாமா? இங்காருமா, சொல்லுறத நல்லா கேட்டுக்கோ, அவளை தான் கட்டுவேன். யாரு வந்து தடுக்குறா? அதையும் நான் பாக்குறேன்” வீராப்பாய் குதித்தான் ராஜா. எப்பொழுதும் அவன் இனத்துக்காய் எப்பொழுதும் குரல் கொடுப்பவன்.

இன்று தாயின் மனதில் பெரிய இடியை இறக்கி, போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கினான்.

ஆலமரத்தானின் உண்மை முகம் தெரியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தான். தன் இனத்துக்கு எந்த களங்கம் வந்தாலும் அதை தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார் அவர். மிகவும் கொடூர மனம் படைத்த பயங்கர முகம் கொண்டவர் இந்த ஆலமரத்தான்.

விடியற்காலையில் கதவு வேகமாக தட்டப்பட பயத்துடன் எழுந்த மரகதம், அருகில் ராஜாவைப் பார்க்க அவனைக் காணவில்லை.

இப்பொழுது வெளிப்படையாகவே நடுங்கியது அவருக்கு, ராஜா எப்போ எங்கே போனான்? என்ற யோசனை அவரிடம்.

கதவை திறக்க, அங்கு ஆலமரத்தானின் வயலில் வேலை செய்யும் ஆட்கள் இருவர் நின்றிருந்தனர்.

“உங்களை ஐயா கூப்பிடுறாக?” உரைத்தவன் முன்னால் நடக்க, அவரை தொடர்ந்து சென்றார் அவர்.

கைகளை மரத்தின் பின்னே கட்டப்பட்ட நிலையில் உடம்பெல்லாம் ரத்தக் களறியாய் வலியில் துடித்துக் கொண்டிருந்தான் ராஜா.

“ராஜா” என்ற கேவலுடன் அவனிடம் ஓடினார் மரகதம்.

அங்கும் இங்கும் உறுமிக் கொண்டு நடந்தார் ஆலமரத்தான்.

காலமே ராஜாவை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றாள் சிலுக்கு. தான் கண்கொத்தியாக கவனிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலே அவனை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் ஆலமரத்தானிடம் சிக்கிக் கொண்டனர் இருவரும்.

“என் புள்ளைய விட்டிருங்க அவன் எந்த தப்புமே செய்யல?” ஆலமரத்தானிடம் கெஞ்சினார் மரகதம்.

“உம் மவனுக்கு எத்தன தகிரியம் இருந்தா என் வீட்டு புள்ளையே இழுதுட்டு போவான். கொஞ்ச நாளாவே காதுக்கு சேதி வந்துட்டுத்தேன் இருக்கு. பட்டணத்து பையன் விவரம் எல்லாம் தெரிஞ்சி சும்மா நண்பனாத்தேன் பேசுதான்னு நினைச்சா? என் வீட்டுலையே கைய வச்சிருக்கான்.

நாலு எழுத்து படிச்சுபோட்டாலும், சொந்தமா வயல் வச்சாலும் நீங்க எங்களுக்கு கீழத்தேன். பெரியாளாவனும்னு நெனப்பு மட்டும் இருந்தா பத்தாது மரகதம், பெரிய மனுசனாட்டம் நடக்கோணும்.” ஆத்திரமாக வந்தது அவருக்கு.

“பெரிய வீட்டுல சம்மந்தம் கேட்குதோ உம்மவனுக்கு” ராஜாவை ஓங்கி ஒரு உதை உதைத்தார்.

அவன் சட்டைபையில் இருந்த தாலி, அவனை மீறி வெளியில் வந்து விழுந்தது.

அதை கையில் எடுத்தவர் முகத்தில் கேலி புன்னகை. அந்த புன்னகை கொஞ்சமாய் கோபமாய் மாற “எந்த தப்பும் செய்யாத உம்மவன் கையில எப்படி வந்திச்சி இந்த தாலி” மரகதம் முன் நீட்டினார் அவர்.

“உம்மவனுக்கு நீயும் கூட்டோ? குடும்பமா ஏமாத்துறீகளா?” கடுமையாக முறைத்தபடி அந்த தாலியை தூக்கி வீசினார் அவர்.

தூரத்தில் மயங்கிக் கிடந்த சிலுக்கு முகத்தில் வந்து விழுந்தது அத்தாலி. டக்கென்று கண்களை திறந்தாள் அவள். ஆலமரத்தான் அடித்த ஒரே அடியில் அப்படியே கீழே மயங்கி விழுந்திருந்தாள்.

“அண்ணே” அலறியபடி ஆலமரத்தானை நோக்கி ஓடினாள் சிலுக்கு.

ஆலமரதான் அருகில் வரவும், அருகில் இருந்த கல் தடுக்கி கீழே விழ, அவள் முடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டார் ஆலமரத்தான்.

“உனக்கு அவன் கேக்குதோ… எனக்கு அப்பவே தெரியும்டி… நீ இப்படி சிலுக்கு சிலுக்குனு சுத்தும் போதே… இன்னும் எத்தனை பேர்டி கிளம்பிருக்கீங்க என்னையும், என் ஜாதியையும் கெடுக்க” ஆக்ரோஷமாக உறுமினார்.

“அண்ணே அவரை விட்டுருண்ணே… என்னை என்ன வேணா பண்ணு அவரை விட்டிருண்ணா… நாந்தேன் அவரு பின்னாடி போனேன்… இப்போ கூட அவரை நாந்தேன் இழுத்திட்டுப் போனேன்”

ஆலமரத்தானின் கால்களைப் பிடித்துக் கொண்டு, சிலுக்கு கதற, அவளை குரூரமாக முறைத்தார்.

எதிர்த்து பேசும் பலன் இன்றி மயங்கி சரிந்தான் ராஜா.

“யய்யா… ராசா நான் சொன்னதை கேட்டியா… இப்போ பாரு மிருகம் மாதிரி இப்படி பண்ணி போட்டாங்களே?” ராஜாவை கட்டியணைத்து கதறினார்.

“அவங்களை விட்டிருண்ணா… நான் இனி யாரையும் பார்க்கமாட்டேன்… யார் வீட்டுக்கும் போகமாட்டேண்ணா… வீட்டுலையே இருக்கேண்ணா… அவங்களை விட்டிருண்ணா”

“காலம் முழுக்க உன்னை வீட்டுல வச்சி நான் அசிங்கப்படவா…?  நாளைக்கே ஊர் முழுக்க இந்த விஷயம் தெரிஞ்சு என் முன்னுக்கவே என் ஜாதிக் காரன் என்னை காறி துப்ப வழி சொல்லுதியோ…

எனக்கு என் ஜாதித்தேன் முக்கியம். என் ஜாதிக்காரன் முன்னாடி தலை குனிஞ்சு நிக்க வழி சொல்லுதியோ? அது இந்த ஆலமரத்தானுக்கு ஒரு நாளும் வாராதுடி… அப்படி ஒன்னு நடந்தாக்கா இந்த மரம் சாயும்”

“நீ என்ன சொன்னாலும் கேக்குதேன். அவனை விட்டிருங்க” கதறினாள் சிலுக்கு.

என்ன நினைத்தாரோ, சிலுக்கை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார் ஆலமரத்தான்.

வீட்டினரிடம் எதுவும் கூறவில்லை அவர். அவளும் கூறவில்லை. பேசாமல் தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.

எல்லாருக்கும் காலைப்பொழுது எப்பொழுதும் போல் விடிந்தது.

ஆனால், சிலுக்குக்கு வாழ்க்கையே முடிந்தது.

ஊர் கிணற்றில் ராஜாவும், அவன் தாயும் பிணமாக மிதக்கின்றனர் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவ, வேகமாக அங்கு ஓடினாள்.

முடிந்தது… எல்லாம் முடிந்தது…

கன கட்சிதமாக வேலையை முடித்திருந்தார் ஆலமரத்தான்.

அவனைக் காக்க… இவள் நினைக்க… அவன் உயிரே பிரிந்தது.

எல்லாரும் அவனுக்காய் வருத்தபட… இவள் மட்டும் வேகமாய் சிரித்தாள்… பைத்தியமாய் சிரித்தாள்…

அதன் பிறகு அவள் வாசம் அந்த கோவில் ஆனது.

அவளை அவள் போக்கில் விட… ஆலமரத்தானின் கட்டளை பிறந்தது.

கொஞ்ச நாள் அவளுக்காய் வருத்தபட்ட ஜனம்… நாளடைவில் அவளை சுத்தமாய் மறந்துப் போனது… அவளை மறக்காமல் இருந்தது அமுதாம்மாள் மட்டுமே…

இப்பொழுது இருவரையும் பார்த்துச் சிரித்தாள் சிலுக்கு.

“இதை நீ அவளுக்கு கட்டுனா? உன்னை யாரும் ஒன்னும்  சொல்லமாட்டாங்க? அன்னைக்கு அவன் எனக்கு கட்டிருந்தா அவனும் போயிருக்கமாட்டான்… நீயும் அவளை விட்டு போப்போறியா… அவளையும் பைத்தியமா நடிக்க வைக்க போறியா?”

“என்னை போலவே அவளையும் ஆக்கப் போறியா?”

தமிழ், அழகுவைப் பார்க்க, அந்த தாலியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகு.

 

error: Content is protected !!