MT 15

மாடிவீடு – 15
காளையாக வளர்ந்து விட்ட அழகு, தான் ஒரு பெண்ணை
காதலிப்போம் என்று கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை.

அதிலும் தான் உயிராய் மதிக்கும் ஐயா பெண்ணை காதலிப்போம்
என சுத்தமாக எண்ணவில்லை.

மனைவி என்ற ஒருத்தி தன் வாழ்வில் வருவாள், அவளை தான்
உயிராய் விரும்புவோம் என்று அவன் கற்பனை செய்ததுக் கூட
கிடையாது.

தமிழ் அவன் வாழ்வில் வந்த பின்னால் தான் திருமணம் என்ற
எண்ணம் வந்தது அவனுக்கு.

அவன் நினைக்காதது எல்லாம் தமிழ் உருவில் அவனை நோக்கி
வந்தது.

திடீரென்று ஐயாவின் நினைவு வந்தது.

அவர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,

‘அது என்ன ஒப்புக் கொள்ளவில்லை என்கிறாய்? அவர் ஒப்புக்
கொள்ளவேமாட்டார்’ மனசாட்சி எடுத்துரைத்தது.

‘ஐயாவை மீறி, திருமணம் செய்துக் கொண்டு இங்கு உயிருடன்
இருக்க முடியுமா?’

‘அதற்காக அவளை விடப் போறியா?’

‘நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறான். ஜாதி விட்டு ஜாதி
திருமணத்தால் மகள் கொலை, காதலி காதலனுடன் ஓட்டம்.
இல்லன்னா தற்கொலை… இப்படி நிறைய,

கேள்வி மட்டுமா பட்டிருக்கிறாய்? ஊரில் கண்ணால்
காணவில்லையா? உன் முன்னால் ஒருத்தி இல்லையா?’
‘தமிழுக்காக, ஐயாவை எதிர்க்க முடியுமா?’

‘அவள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா?’

இத்தனை நாள் எப்படியோ? ஆனால் இனி அவள் இல்லாமல்
அவனால் வாழ முடியும் என்று தோன்றவில்லை.

‘என்னை போலவே அவளையும் ஆக்கப் போறியா அழகு?’ அவளின்
கேள்வி அவனை யோசிக்க வைத்தது.

தமிழ், அழகுவைப் பார்க்க, அந்த தாலியைப் பார்த்துக்
கொண்டிருந்தான் அழகு.

‘என்னை போலவே அவளை ஆக்கப் போறியா?’ வாசகம் அவன்
மனதில் மீண்டும் சுழட்டியடித்துக் கொண்டிருந்தது.

‘சிலுக்கு சொல்வதுப் போல் தாலி கட்டினால், உயிர் மிஞ்சுமா?
கண்டிப்பாக ஐயா உயிரோடு விடமாட்டார்’ தமிழை பார்த்துக்
கொண்டிருந்தான்.

அவளோ, ஆவலாக அவன் முகத்தை பார்திருந்தாள்.

அவளுக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. அப்பா அவர்களை
ஏற்றுக் கொள்வார். தன் ஆசைக்கு அப்பா எப்பொழுதும் தடை
விதிக்கமாட்டார்.

தன் தகப்பன் மேல் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தாள்.
சிலுக்குவின் காதல் அழகுவையே சுற்றி வந்தது.

இது எதுவும் அறியாத தமிழ் அழகைப் பார்த்து நின்றாள்.

“அவளை கல்யாணம் பண்ணு அழகு” சிலுக்கு தான் கூறியிருந்தாள்.
தமிழை ஒரு நொடி, பார்த்த அழகு என்ன நினைத்தானோ,
சிலுக்கு கையில் இருந்து தாலியை வாங்கி தமிழ் கழுத்தில்
கட்டியிருந்தான்.

“அழகு!” தமிழ் அதிர்ந்து விழிக்க,

சிலுக்கோ கர்வமாய் சிரித்தாள்.

தமிழின் அதிர்ந்த முகத்தை பார்த்த அழகு, அப்படியே திரும்பி
நடந்தான்.

கோவில் உள்ளே நுழைந்த சிலுக்கு அங்கிருந்த குங்குமத்தை எடுத்து
தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

மாட்டுவண்டியில் அமர்ந்திருந்த அழகு “அம்மணி” என்றழைக்க.

அவனை நோக்கி நடந்தாள் தமிழ். அழகுவின் வெகுநாளைக்கு
பிறகான “அம்மணி” என்ற அழைப்பு.

வழி நெடுகிலும் அவளிடம் எதுவும் பேசவில்லை அவன். அவனுக்கு
நன்கு தெரியும் நாளை காலை எப்படியும் பெரிய பூகம்பம்
வெடிக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது என்றும்…

அவளை வீட்டில் இறக்கி விட்டவன், தன் வீட்டை நோக்கி
நடந்தான். செல்லும் அவனையே வாசலில் நின்று பார்த்துக்
கொண்டிருந்தாள் தமிழ்.

#############

வீடே பெரும் அமைதியாக இருந்தது. தினமும் வீட்டில் இருக்கும்
லிங்கம் கூட இன்று வீட்டில் இல்லை.

“அன்பு” அழைத்துக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றான் அழகு

“என்னண்ணே?”

“லிங்கம் எங்க? ஆளையே காணும்… அங்கன நடந்து வந்தாலே
அவன் குரலுத்தேன் கேக்கும் இன்னைக்கு எங்கனப் போனான்?”

“தெரிலண்ணே… செல்விக் கூடாக்க கடையில இருந்தான்”
உரைத்தவள் அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தவள்.

அமைதியாக அவன் அருகில் அமர்ந்துக் கொண்டாள். அவள்
முகத்தை பார்த்தபடியே உணவை உண்டான் அழகு. அவன்
சாப்பிட்டு முடிக்கவும் தன் இடத்தில் வந்து படுத்துக்கொண்டாள்.

“செத்த நேரம் உன் மடில படுக்கவா அன்பு”

“என்னண்னே என்ன ஆச்சு? இதுக்கெல்லாமா கேட்ப? வா வந்து
படுத்துக்க?” டக்கென்று எழும்பிய அன்பு தன் அண்ணனை,
அன்னையாய் மடி தாங்கினாள்.

“ஏன் அன்பு? மனுஷனுக்கு காதல் வரக்கூடாதா?”

“என்னாச்சுண்ணே” மனம் அமுதனை எண்ணியது.

“ஒண்ணுமில்ல அன்பு. சிலுக்குவ நினைச்சேன்?”

“ஜாதி பாத்துத்தேன் காதல் வரனுமாண்ணே?”

“எல்லாத்திலையும் ஜாதி பாக்குறாய்ங்க அன்பு. சாமியையும் ஜாதி
வச்சு பிரிச்சுப்போட்டாங்க, அதேன் நாம அந்த கல்லு சாமியை தவிர
ஊர் சாமிய பாக்கவுடல,

தரத்துக்கு மீறுனது, கனவுல கூட நடக்காதது எதுவுமே நாம
ஆசைப்படக்கூடாது. நாம நாமளாத்தேன் இருக்கோணும்?”

“யாருண்ணே இப்படி எல்லாம் சொன்னது?”

“இது நீயோ? நானோ? சொன்னது இல்லை அன்பு. நம்ம பாட்டனும்,
முப்பாட்டனும் சொன்னது. அவக சொல்லி எதுனா தப்பா போகுமா?
அதெல்லாம் நாம ரோசனை பண்ணாம இருக்கோணும்?”

“எனக்கு இதெல்லாம் புடிக்கலண்ணே? நம்ம ஐயா எதுக்கு இப்படி
பண்ணுறாக?”

“ஐயாவ ஒன்னும் சொல்லாத புள்ள. அவக சரியாத்தேன் இருக்காக.
நாமத்தேன் தடுமாறிப் போறோம்? அதுக்கு அவக என்ன செய்வாக?
நாளபின்ன எனக்கு எது ஆனாலும், உனக்கு அவக தான் அய்யன்,
ஆத்தா முறையில எல்லாம் செய்வாக? அவக எப்போவும் நமக்கு
கடவுளுதேன்.

அவக காலைத் தொட்டு கழுவணுமேத்தவிர, அவக காலை
வாரக்கூடாது அந்த தப்பை மட்டும் நீ செஞ்சிராத அன்பு.

உனக்குன்னு ஒருத்தன் அழுக்கு வேட்டி, சட்டை போடாத கருத்த
தேகம், எப்பவும் ஐயாவை பார்த்து வணங்குறவனா பாத்து ஐயா
கொண்டு வருவாக…

தப்பி தவறிக் கூட சொக்கா போட்ட பையனை மனசுல நினைச்சுப்
போடாத அன்பு. அது நம்ம ஐயாவுக்கு பிடிக்காது” பேசியபடியே
அன்புவைப் பார்க்க கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள்.

“எதுக்கும்மா அழுவுற?”

“எதுக்குண்ணே இப்படி எல்லாம் பேசுத… இதுவரைக்கும்
ஆசைப்பட்டதை எல்லாம் எப்பாடுப்பட்டாச்சும் நீ எனக்கு வாங்கி
தந்தியேண்ணே? இப்போ என்னாச்சுண்ணே? ஏன் இப்படி பேசுத?”

“என்னால முடியாததை நீ கேட்கமாட்டேன்னு எனக்கு தெரியும்மா?
ஆனாலும் நீ ஒரு பொருள் மேல ஆசைப்பட்டு கேக்க நான்
இல்லாது போனா உன்னால தாங்கமுடியாது அன்பு”

“எண்ணன்னே சொல்லுத? எனக்கு ஒண்ணும் விளங்கல?”

“இந்த ஜாதி, சம்பிராதயம் எல்லாம் மாற போறதில்லை அன்பு.
நாமும் மாத்த ஆசை படக்கூடாது. எல்லாத்தையும் ஜாதியை வச்சு
பிரிக்க ஊருல, நாம மட்டும் ஜாதியை மீறி போகக்கூடாதும்மா”

“அண்ணே! என்னாச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் பேசுத?”

“ஒண்ணும் இல்ல அன்பு… சும்மா பேசணும்னு தோணிச்சி அதேன்…
போ படுத்து தூங்கு எதுனாலும் காலமே பேசலாம்.”

“இல்ல நீ என் மடிலையே படுத்துக்க… இன்னைக்கு நீ சரியே
இல்ல?” அவனை மடியிலேயே தூங்கவைத்தாள். அமுதனைப் பற்றி
கூற எண்ணியவள் ஏனோ மறைத்துவிட்டாள்.


“என்னம்மா தமிழ் புதுசா இன்னைக்கு புடவைக் கட்டிருக்க…
திருவிழாக்கு கட்ட சொன்னதுக்கு மேலையும், கீழவும் குதிச்ச?
என்ன விசயம் எம்பொண்ணு புடவைக் கட்டிருக்கு?”

“அ… அது… அதுவந்துப்பா… இன்னைக்கு செவ்வாய் கிழமைல்ல
அதேன் கோவிலுக்கு போலாம்னு?”

“எல்லா நல்ல நேரந்தேன், என் தோஸ்து இன்னைக்கு வீட்டுக்கு
வருவான்… அதனால வீட்டுலையே இரு… சாயங்காலம் வாக்குல
அழகுவ கூட்டிட்டு போகச் சொல்லுறேன் சரியா?”

“ம்‌ம்… சரிப்பா?” அமைதியாக வீட்டின் உள்ளே சென்றாள் தமிழ்.
அதே நேரம் பாண்டியும், அமுதனும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

“டேய் பாண்டி! பாத்து எம்புட்டு வருஷம் ஆச்சு?” ஓடி வந்து
அணைத்துக் கொண்டார்.

“ஏலேய் ஆலமரம்… என்னடா மீசை எல்லாம் வச்சு நல்லா
மாறிட்டியேடா!” ஆச்சரியமாக அணைத்துக் கொண்டார்.

“வாங்கண்ணே நல்லாருக்கீகளா? எத்தனை வருஷம் கழிச்சு
வந்துருக்கீக?”

“அடடே! தங்கச்சி நான் ரொம்ப நல்லாருக்கேன்… நீ எப்படிம்மா
இருக்க? அதேன் இப்போ வந்துட்டேன்ல” ஆர்பாட்டமான சிரிப்பு
அவரிடம்.

“என்னவோடா நீ வந்தப் பிறகுத்தேன் வீடு கலகலன்னு இருக்குது”

“இருக்காதா பின்ன… ஆமா எங்க என்ற மருமக புள்ள?”

“தமிழு” உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் ஆலமரம்.

“அப்பா” என்றபடி வெளியே வந்தாள் தமிழ்.

“மருமகபுள்ள ரொம்ப பெருசா வளந்துட்டாளேடா…” என்றவர் அவள்
அருகில் சென்று,

“எப்படிம்மா இருக்க தமிழ்”

“நான் நல்லாருக்கேன் மாமா” என்றபடி அவரையே பார்த்துக்
கொண்டிருந்தாள். ஃபோட்டோவில் மட்டுமே இவரைப்
பார்திருக்கிறாள்.

“வாடா… அப்படியே உக்காந்து காத்தாட பேசுவோம்… உன்கிட்ட ஒரு
முக்கியமான விஷயம் பேசோணும்”

“அதுக்குத்தேன் நானும் வந்திருக்கேன்” கூறியபடியே அங்கிருந்த
நாற்காலியில் அமர, அமுதனும் அமர்ந்துக் கொண்டான்.

“சுத்தி வளைச்சு உன்கிட்ட பேசவிரும்பலடா நேரடியாவே
விசயத்துக்கு வாரேன்?”

“அதென்னடா வாரேன்… போறேன்னு சொல்லிபோட்டு விஷயத்தை
சொல்லுடா?”

“எம்பொண்ணு தமிழை உனக்கு மருமகளா தரலாம்னு
நினைக்குறேன்?”

“அத பத்திதான் நானும் பேசவந்தேன் ஆலமரம்… உன் குடும்பத்துல
பொண்னெடுக்கிறதும் சாமியை மருமவளா கொண்டு வரதும்
ஒன்னுத்தேன்.

எம்மவன் இந்த ஊரை விட்டு வரமாட்டேன்னு சொன்னவுமே நான்
சுதாரிச்சு ஓடி வந்துட்டேனா பாத்துக்கோயேன்” சிரித்தபடியே
பாண்டியன் கூற,

ஆலமரத்தான் மனமோ கொஞ்சம் திடுக்கிட்டது,
அன்பு – அமுதனை அடிக்கடி வயலில் சந்திக்கிறதை பற்றி
கேள்விபட்டிருக்கிறார்.

அமுதன் பட்டணத்துப்பையன் ஏதோ ஆர்வக்கோளாறில் பேசுகிறான்
சொன்னால் புரிந்துக் கொள்வான் என எண்ணிக் கொண்டார்.

அன்புவை அவர் பெரிதாக எண்ணவில்லை.

அதே போல் தான் குளத்துக்கரையில் அழகு – தமிழை கண்டார்.
ஆனால் அவர் அதை பெரிதாக எண்ணவில்லை. ஏதாவது பெரிதாக
நடக்கும் முன் அமுதனுக்கும், தமிழுக்கும் திருமணத்தை முடிக்க
வேண்டும் என எண்ணித்தான் பாண்டி வருகைக்காய் காத்திருந்தார்.

இதோ அவர் வந்தும் விட்டார். ஆனால் அவர் பேசுவதைக் பார்த்து
சிந்தனைவயப்பட்டவராய் அவர் முகத்தைப் பார்திருந்தார்.

“என்ன அப்படி பாக்குறடா… எல்லாம் நல்ல விசயந்தேன். அதேன்
உன் வீட்டை தேடி வந்திருக்கேன்”

“ம்ம்”

“என்ன ‌ம்ம் ன்னு ஒத்தை வார்தையில சுழுவா சொல்லிபுட்ட…
நீதேன் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தோணும்… பொண்ணுக்கு
அப்பா நீதானே”

தமிழ் அதிர்ச்சியாய் பார்திருந்தாள்.

“விளங்குறப் போல சொல்லுடா?” சந்தோஷ குரல் ஆலமரத்தானிடம்.

“இப்போ என் தோஸ்து முகத்துல சிரிப்பை பாருடா அமுதா”
சிரிப்புடன் அமுதனிடம் கூறியவர் ஆலமரத்தானை நோக்கி
திரும்பினார்.

“இங்க பாருடா… நேராவே விசயத்துக்கு வாரேன்… என் பையனுக்கு,
நீ சின்ன வயசுல இருந்து வளக்குறியே அன்பு அவளை ரொம்ப
பிடிச்சிருக்காம். அதேன் அவளை பொண்ணுக் கேட்டு அமுதன்
அப்பாவா உன் வீட்டுக்கு வந்திருக்கேன்” மென்னகையுடன் கூறினார்
பாண்டி.

அவர் கூறியதை கேட்டதும் ஆலமரத்தனிடம் மிகப்பெரிய அதிர்ச்சி… இதை கொஞ்சமும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை…

“நிறுத்துடா… யாரு வீட்டுக்கு வந்து என்ன விஷயம் பேசுற? இதை
பேசத்தேன் அங்கிருந்து வந்தியோ? நல்லாருக்குடா ரொம்ப
நல்லாருக்கு… அன்னைக்கு உன்னால முடியாததை இன்னைக்கு
நடத்த பாக்குறியோ?

இப்படி ஒரு கல்யாணம் நான் உயிரோட இருக்கும் வரை நடக்காது,
நடக்க விடமாட்டேன்… இன்னைக்கு உம்மவனுக்கு அவளை கட்டிக்
குடுத்தா, நாளைக்கு அழகு வருவான் எம்பொண்ணை பொண்ணுக்
கேட்டு.

என் வீட்டுலையே அவன் வளர்ந்தான்னு உடனே நான் அவளை
தூக்கி குடுத்திருவேனா? இல்லை அவன் நல்ல பையன்னு
எம்பொண்ணைத்தேன் குடுத்திருவேனா? ஒரு நியாயம் தர்மம்
வேண்டாமா?

குலம் குலத்தோடுத்தேன் சேரோணும்? ஒரே நாளுல நம்ம குலம்,
கோத்திரத்தை தூக்கி சாக்கடையில வீச சொல்லுத? பெத்த
அப்பனையும், ஆத்தாளையும் மாத்த சொல்லுத?

தன் அப்பன் மேலையும், ஆத்தா மேலையும் உயிரா இருக்க எந்த
பையனும் நீ சொல்லதை செய்யமாட்டான்.

போ… போ… உம்பையனுக்கு நல்ல புத்தியா சொல்லு… அதே போல
உன் கதையும் சொல்லு…

அமுதா… அமுதா நானும் உன் வயசுல இப்படி ஒரு பொண்ணு
மேல ஆசைபட்டுத்தேன் அசிங்கபட்டு ஊரை விட்டு போனேன்னு
சொல்லு…

உம்பையன் தானா திருந்துவான். வந்துட்டான் பெருசா பொண்ணுக்
கேட்க… யாரு வீட்டுக்கு வந்து என்ன பேசுறான்… இவனை
வீட்டுக்குள்ளாரவுட்டது எந்தப்பு” கோபம் கொப்பளித்தது
ஆலமரத்தானிடம்.

“ரொம்ப நல்லாருக்குடா உன் நியாயம்… நீ மட்டுந்தேன் இந்த ஊருல
உன் அப்பன் ஆத்தா மேல உயிரை வச்சுருகியோ? நாங்களுந்தேன்
வச்சிருக்கோம்?

உன்னை விட அதிகமாந்தேன் வச்சிருக்கோம்… உன்னைப்போல
இப்படி காட்டுமிராண்டி தனமா நடந்துத்தேன் காட்டனும்னு இல்ல
ஆலமரம்.

ஆனா, எந்த அப்பன், ஆத்தாளும் பெத்த புள்ளை ஆசையை
தடுக்கமாட்டா… தன் உயிரை குடுத்தாச்‌சும் காப்பத்துவா?
ஆனா, நீ உன் அப்பன், ஆத்தா ஆசைக்காக மத்த அப்பன், ஆத்தா
ஆசையை அளிக்க பாக்குறியே?

நீ எப்படி அப்பன், ஆத்தா மேல பாசம் வச்சிருகியோ? அதே
பாசத்தைத்தேன் எல்லாரும் வச்சிருக்காக…

நீ, உன் அப்பன், ஆத்தா ஆசையை நிறைவேத்து, நான் மத்த அப்பன்,
ஆத்தா ஆசையை நிறைவேத்துறேன்… முடிஞ்சா துணை இரு…
இல்லையா விலகிப் போய்ட்டே இரு… தடுக்க பார்த்த… நடக்குறதே
வேற”

அமுதனை இழுத்துக் கொண்டு திரும்பி நடந்தார் பாண்டி.