புலராத அந்த இளங்காலைப் பொழுதில் சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத கடற்கரை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தான் இளஞ்செழியன். மனிதர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அதனால் காற்று கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது.

வியர்த்து வடிந்து கொண்டிருந்தது. தொப்பலாக நனைந்திருந்த டீஷர்ட்டையும் பொருட்படுத்தாது ஓடிக்கொண்டிருந்தான் செழியன். தலையிலிருந்து வடிந்த வியர்வை காதோரமாக அவனை நனைத்துக் கொண்டிருந்தது.

கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தவன் அந்த ப்ளாக் ஆடியை நோக்கி நடந்து வந்தான். சூரியன் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனால் வருவதற்கான ஏற்பாடுகளை வானமங்கை ஜரூராக ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தாள்.

அவள் போட்டு வைத்திருந்த செங்கம்பள விரிப்பில் தன் பொற்பாதங்களைப் பதிக்க சூர்யபகவானும் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

காரிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்த இளஞ்செழியன் அப்படியே அதை முகத்தில் சரித்துக் கொண்டான். குளிர் நீர் முகத்தில் பட்டுத் தெறித்தபோது உடற்பயிற்சி செய்த உடம்பு இதமாக உணர்ந்தது.
கையை மடக்கி ஆர்ம்ஸை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

அர்ச்சனாவிடம் இன்றைக்குக் காட்ட வேண்டும். போன வாரம் தான் வேண்டுமென்று அவனைக் கேலி பண்ணி இருந்தாள் தங்கை.

‘அண்ணா! இன்னும் கொஞ்சம் ஆர்ம்ஸ் ஏத்து. இது பத்தலையாம்.’

“பத்தலையாம்னா… அப்போ இது உன்னோட கமெண்ட் இல்லையா?’

‘ம்ஹும்… மாலினி சொன்னா.’

‘அடிப்பாவி!’ இது அம்மா கற்பகம்.

‘என்னடா செழியா இந்தப் பொண்ணுங்க இப்படிப் பேசுதுங்க. உன்னை சைட் அடிச்சதே தப்பு. இதுல அதை உன்னோட தங்கைக்கிட்டயே வந்து அவ சொல்லுவாளா?’ வாயைப் பிளந்த அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்திருந்தான் இளஞ்செழியன். அம்மாவிற்கு இந்தக் காலத்துப் பெண்களைப் பார்த்தால் அப்படியொரு மலைப்பு.

‘எங்க காலத்துல எல்லாம் பசங்களை அண்ணார்ந்து பார்த்தாலே வீட்டுல இருக்கிற பெரியவங்க கண்ணை நோண்டிருவாங்க.’

‘இதை எங்களை நம்பச் சொல்லுறீங்களா? அவ்வளவு கட்டுப்பாட்டோட வளர்ந்த நீங்கதான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?’

‘அடியேய்! நான் என்னத்தடீ கண்டேன். உங்கப்பா தான் ஒத்தக்கால்ல நின்னார். எங்க வீட்டுல வந்து பேசினார். கல்யாணத்தன்னைக்குத் தான் உங்கப்பாவை நான் ஒழுங்காவே பார்த்தேன்.’

‘அப்படியாப்பா?’ அப்போதுதான் சோஃபாவில் வந்தமர்ந்த கருணாகரனைப் பார்த்துக் கேட்டாள் பெண்.

‘அப்பா பண்ணின தப்பை ஏம்மா திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்துறே?’ சோகமாக அவர் சொல்ல அண்ணனும் தங்கையும் சிரித்தார்கள்.

‘ஏன் கருணா? அப்போ நான் உங்களுக்கு நல்ல வைஃபா இல்லையா? உங்க மனசுல இந்த எண்ணம்தான் இருக்கா?’ விட்டால் அழுது விடுவார் போலக் கேட்ட அம்மாவைப் பார்த்து இன்னும் சிரித்தார்கள் இளையவர்கள்.

கருணாகரன் மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார். கை மனைவியின் தோளை இதமாக அணைத்துக் கொண்டது.

‘லூசாடி நீ? கேலிக்குச் சொல்லுறதையும் புரிஞ்சுக்க மாட்டியா நீ?’


‘அப்பா… அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா? உங்க காலத்துல பொண்ணுங்க பசங்களை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாங்களாம். அப்படி வளர்ந்த பொண்ணுதான் புருஷனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுதா?’

‘பார்த்தீங்களா கருணா இவ பேசுற பேச்சை! இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். நீங்கதான் கேக்கலை.’ முகத்தை நீட்டிக் கொண்டார் கற்பகம்.

கல்யாணம் ஆன புதிதில் கற்பகம் கணவரை அத்தான் என்றுதான் அழைப்பார். ஆனால் அதைக் கருணாகரன் தான் நிறுத்தி இருந்தார்.

அவருக்கு இந்த அத்தான் பொத்தான் எல்லாம் பிடிக்கவில்லை. மனைவியைப் பெயர் சொல்லி அழைக்கப் பழக்கி இருந்தார்.
முதலில் திணறிய போதும் பிற்பாடு பழகிக் கொண்டார் கற்பகம்.

ஆனால் அதைப் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்ன? இந்த வாண்டுக்கு இதெல்லாம் தெரிந்தால் அவர்களை ஒரு வழி பண்ணி விடுவாளே!

‘அப்பா அப்படி எதைம்மா கேக்கலை? அதுவும் நீங்க சொல்லி!’ அர்ச்சனா அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்க, இளஞ்செழியன் புரிந்துகொண்ட பாவத்தில் சிரித்தான். அம்மா அப்பாவின் இனிமையான இல்லறம் அவனறிந்த விடயம் தானே.

‘அந்தப் பழங்கதையை விட்டுட்டு உங்கண்ணாவோட புதுக்கதைக்கு வா அர்ச்சனா. எப்போ எங்களுக்கொரு மருமகளைக் கொண்டுவரப் போறானாம்?’

‘ஏம்ப்பா?’ இலக்கு தன்னை நோக்கிப் பாயவும் அதுவரை மௌனமாக இருந்த செழியன் வாயைத் திறந்தான். இது அம்மாவின் ஏற்பாடு என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இல்லாவிட்டால் அப்பா இப்படியெல்லாம் பேசுகின்ற ஆளே இல்லையே!

‘என்னடா ஏம்ப்பா? முப்பது வயசு ஆகுது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம்?’

‘அதானே! நல்லாக் கேளுங்கம்மா. வீட்டுல ஒரு கல்யாணம் நடந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும். அண்ணா ப்ளீஸ்… சீக்கிரமாக் கல்யாணம் பண்ணேன்.’

‘உனக்கு ஜாலியா இருக்க நான் கல்யாணம் பண்ணணுமா அர்ச்சனா?’

‘ஏன்? கல்யாணம் பண்ணினா உனக்கும் தான் ஜாலி. உனக்கு மூக்குல கோபம் வரும்போது ஈஸியா அதை இறக்கி வெச்சிடலாம். அதுக்குத்தான் உனக்குன்னு ஒரு அடிமை வந்திடும் இல்லை.’

‘வாயை மூடு அர்ச்சனா. என்ன பேச்சு இது? வர்றவ உங்கண்ணனுக்கு அடிமையா? நாளைக்குப் போற இடத்துல உம்புருஷனுக்கு அப்போ நீயும் அடிமையா?’

‘ஐயோ அம்மா! நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீங்க ஏன் அதை இவ்வளவு சீரியஸா எடுக்குறீங்க?’

‘பேச்சுக்குக் கூட அப்படிச் சொல்லாத. இந்த வீட்டுக்கு வரப்போறவளை அவங்க வீட்டுல உன்னை நாங்க பார்த்துக்கிற மாதிரித்தானே அருமை பெருமையா வளர்ப்பாங்க? அப்போ நாம மட்டும் எப்படி ஒரு பொண்ணை அப்படி நினைக்கலாம்?’

‘அம்மா நான் சும்மா தமாஷூக்கு அப்படி சொன்னேன். அண்ணனோட கோபம்தான் ஊரறிஞ்ச விஷயமாச்சே… அதனால அப்படிச் சொன்னேன். நீங்க எதுக்கு இவ்வளவு சீரியஸா அதை எடுத்துக்கிறீங்க?’

‘ஐயாவுக்கு வர்ற கோபத்தை அவர் பொண்டாட்டி மேலதான் இறக்கி வெப்பார்னா அவர் கல்யாணமே பண்ணிக்க வேணாம்.’

‘ஏய் கற்பகம்! என்ன பேச்சு இது?’

‘பின்ன என்ன கருணா?‌ உங்கப் பொண்ணு பேசுறது மட்டும் சரியா?’
‘சின்னப் பொண்ணு ஏதோ புரியாமப் பேசுறா. அவளைத் திருத்துறதை விட்டுட்டு ஏட்டிக்குப் போட்டியா நீயும் பேசுவியா?’ கணவர் தன்னைக் கோபிக்கவும் உள்ளே போய்விட்டார் கற்பகம்.

இதுதான் கற்பகம். புருஷன், பிள்ளைகள், தன் வீடு என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் உயர்தட்டுப் பெண்மணி. ஆனால் கோடி கோடியாகக் கணவன் சம்பாதிக்கும் பணத்தை என்றுமே கவனத்தில் கொள்ளாத எளிமையான அம்மா… மனைவி.

காரிற்குள் ஏறி அமர்ந்த இளஞ்செழியன் சூர்யோதத்தைக் கொஞ்ச நேரம் அனுபவித்துப் பார்த்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த இடமே தகதகவெனக் கொதிக்க ஆரம்பித்துவிடும்.

காயிலிருந்த சிடி ப்ளேயரை அவன் கைகள் இயல்பாக ஆன் பண்ணியது. இயற்கையை ரசித்தபடி பழைய பாடல்களைக் கேட்பதென்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

‘உன்னை நான் சந்தித்தேன்… நீ ஆயிரத்தில் ஒருவன்…’ சுசீலாவின் இனிமையான குரலில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. இளஞ்செழியன் கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்.

பாடலை இடையில் தொல்லை பண்ணியது அவன் தொலைபேசி. எடுத்துப் பார்த்தான். சந்திரமோகன் அழைத்துக் கொண்டிருந்தார்.

“குட்மார்னிங் அங்கிள்.” அவன் கை பாடலின் ஒலியை மெதுவாகக் குறைத்தது.

“குட்மார்னிங் செழியா. ஜாகிங் முடிச்சுட்டயா?”

“கிட்டத்தட்ட… நீங்க சொல்லுங்க அங்கிள். என்ன காலங்காத்தால கூப்பிட்டிருக்கீங்க?”

“பின்ன உன்னைப் பிடிக்க முடியுமா? யோவ்! அது என்னய்யா பாட்டி காலத்துப் பாட்டெல்லாம் கேக்குறே?” பாடலின் சத்தம் அவர் காதுகளையும் சென்றடைந்திருக்க வாய்விட்டுச் சிரித்தார் மனிதர்.

“அது ஒரு சுகம் அங்கிள். அதுலயும் இந்தப் பாட்டுல வர்ற வரிகள் என்னை ரொம்பவே இழுக்கும்.”

“அப்படியா என்ன? அது என்ன வரிகள்? நம்ம செழியனையே இழுக்கிற மாதிரி?” ஆவலாகக் கேட்டார் சந்திரமோகன்.

“இந்தப் பாட்டுல ஒரு வரி வருமில்லை அங்கிள்? மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்னு.”

“ஆமா… அதுல என்னப்பா ஸ்பெஷல் இருக்கு? இது எல்லாப் பொண்ணுங்களும் சொல்லுறதுதானே?”

“எல்லாரும் சொல்லுறதுதான் அங்கிள். ஆனா இங்க அது சொல்லப்பட்டிருக்கிற விதம் அருமை.”

“அப்படியா என்ன?”

“ம்… வழக்கமாப் பாடல்கள்ல அவங்களோட அன்பைத் தன்னோட இணைக்கிட்டச் சொல்லும் போது ஒரு நாடகத் தன்மை தெரியும். நீ இல்லைன்னா நானில்லை… உன்னைப் பிரிஞ்சா நான் செத்துப் போயிடுவேன்… அப்படி இப்படின்னு அள்ளி விடுவாங்க.”

“ஹா… ஹா…”


“ஆனா இங்க அப்படியில்லை அங்கிள். அந்தப் பொண்ணு தன்னோட நிலைமையை ரொம்ப சிம்பிளா தன்னோட காதலன்கிட்டச் சொல்லுது. மன்னவா… எனக்கு மகிழ்ச்சிங்கிறது உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல மட்டும்தான் இருக்கு. நீ கிடைக்கலைன்னா நான் செத்துப் போக மாட்டேன்… வாழுவேன் தான். இருந்தாலும், அந்த வாழ்க்கையில உயிர்ப்பு இருக்காது. ஜீவன் இருக்காது. என்னோட சந்தோஷம் உன்னைச் சேர்ரதுலதான் இருக்கு. தட்ஸ் இட்.”

“செழியா! நீ இவ்வளவு ரசனைக்காரனா?”

“என்ன அங்கிள்? கேலி பண்ணுறீங்களா?”

“அடப்போய்யா! ஆமா… எப்போ ஹாஸ்பிடல் வரப்போறே? அதைக் கேக்கத்தான் நான் கூப்பிட்டேன்.”

“நிஜமாத்தான் கேக்குறீங்களா அங்கிள்?”

“ஆமா செழியா. அதுல என்ன சந்தேகம் உனக்கு?”

“இப்போக் கூப்பிட்டுட்டு பின்னாடி வருத்தப்படக் கூடாது.”

“ரொம்பப் பேசுறே சின்னப்பயலே. வாயை மூடிக்கிட்டு நாளைக்கே ஹாஸ்பிடல் வந்து சேரு… புரியுதா?”

“ம்… பார்க்கலாம்.” விட்டேற்றியாகப் பதில் சொன்னான் செழியன்.

“நீ வரணும் செழியா. நான் நாளைக்கு உனக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன். இப்போ வச்சிடட்டுமா?”

“ம்…” ஃபோனை வைத்த இளஞ்செழியன் பாடலுக்குள் மீண்டும் மூழ்கிப்போனான்.

சந்திரமோகன் நகரின் பிரபல மருத்துவமனை ஒன்றின் சொந்தக்காரர். குடும்ப நண்பர். கருணாகரனிற்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதையும் தாண்டி இப்போது அந்தக் குடும்பத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு உறுப்பினர் என்றே சொல்லலாம். நாளை ஹாஸ்பிடல் போவதா வேண்டாமா என்று சிந்தித்தபடியே காரை ஸ்டார்ட் செய்தான் இளஞ்செழியன். வெயில் நன்கு ஏறிவிட்டிருந்ததால் இதற்கு மேல் உடற்பயிற்சி செய்ய முடியும் என்று தோன்றவில்லை.


மருத்துவக் கல்லூரி வளாகம். கனவுகளைச் சுமந்தபடி புதிய வரவுகள் அலைமோதிக் கொண்டிருக்க, கனவுகள் நிஜமாகும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை என்று பழையவர்கள் நிதானித்திருந்தார்கள்.
குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்து கொண்டு ஒரு கூட்டம் வேண்டுமென்றே இளம் பெண்களை வம்பிழுத்துக் கொண்டிருந்தது.

“ஏய்! ரெட் சுடிதார். இங்க வா.” அருண் அழைக்கவும் அந்தப் பெண் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆனால் நடையில் ஒரு திமிர் தெரிந்தது.

“என்னடா மச்சான்… நடையே சரியில்லையே!” அருண் தாடையைத் தடவிக் கொண்டான்.

“அருண்…‌ ஆனாப் பொண்ணு லட்டு மாதிரி இருக்காடா…” இது விஷால்.

“ம்… அப்படீங்கிறே.”

“ஆமாடா.” அநியாயத்திற்கு வழிந்தான் விஷால்.

“சரி அடக்கி வாசி.” அருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண் இவர்களை நெருங்கி இருந்தது.

“ஃபர்ஸ்ட் இயரா?”

“ஆமா.”

“நான் என்ன உன்னோட மச்சானா? ஆமா சீனியர்னு சொல்லு.” இப்போது அருணின் குரலில் அதட்டல் இருந்தது.

“ஆமா சீனியர்.” சொன்னதைச் செய்தாள் பெண். ஆனால் அந்தக் குரல் அவனுக்குப் பணியவில்லை. அருணிற்கு ஏனோ அந்தப் பதில் அத்தனை திருப்தியைக் கொடுக்கவில்லை.

“பெயர் என்ன?”

“அர்ச்சனா.”

“ம்… சரி அர்ச்சனா. அண்ணாத்தேக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டிட்டுப் போய்க்கிட்டே இரு.” அருண் சொல்லுமுன் விஷால் இடையில் புகுந்தான்.

“அர்ச்சனா… அருண் தான் உனக்கு அண்ணாத்தே. நான் இல்லை. ஓகே.”

“ஓகே சீனியர்.”

“பாட்டை ஆரம்பி.” இது அருண்.

“பாடத் தெரியாது… சீனியர்.”

“நான் என்ன சூப்பர் சிங்கருக்கா ஆள் தேடுறேன்? சும்மா எதையாவது பாடு தங்கைச்சி.”

“மச்சான்! ஏன்டா உனக்கிந்தக் கொலை வெறி? நல்ல ஃபிகரையெல்லாம் சட்டுன்னு இப்படிப் பாசமலர் ஆக்கிடுறியே!” மேடை ரகசியம் பேசினான் விஷால்.

“எது? இது நல்ல ஃபிகரா? மச்சான் வரவர உன்னோட ரசனை கொஞ்சம் மட்டமாகிப் போச்சுடா?” இதை அருண் சொல்லும் போது அர்ச்சனாவின் முகம் லேசாகச் சிவந்தது. அந்த முகத்தின் பாவத்தைப் பார்த்த அருணிற்கு ஏனோ சுவாரசியம் பிறந்தது.

“அர்ச்சனா பாடலைன்னா என்ன மச்சான். இப்போ நான் பாடுறேன் பாரு.” விஷால் அத்தோடு நிறுத்தாமல் பாட ஆரம்பித்திருந்தான். அர்ச்சனாவின் நன்றிப் பார்வை அவனை வானத்தில் பறக்கச் செய்திருந்தது.

“பறவைகளில் அவள் மணிப்புறா… பாடல்களில் அவள் தாலாட்டு…” விஷால் பாட அர்ச்சனா வாய் பொத்திச் சிரித்தாள்.

“எது? நம்ம அர்ச்சனாத் தங்கச்சி உனக்கு மணிப்புறாவா?”

“நம்ம இல்லை மச்சான்… உன்னோட தங்கச்சி.”

“சரி… அதுக்காக நீ மணிப்புறா… தாலாட்டுன்னெல்லாம் ஓவராப் புகழப்படாது.”

“சரி… அப்போ நீ புகழு மச்சான்.”

“ஆ… இது பேச்சு. இப்போப் பாரு. என் தங்கைக்கோர் கீதம் நான் எப்படி இசைக்கிறேன்னு.” அருண் பாட ஆரம்பிக்கும் போதே அர்ச்சனாவிற்குப் புரிந்தது. ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்று.

“பறவைகளில் அவள் அண்டங்காகம்… பாடல்களில் அவள் ஒப்பாரி…”

“மச்சான்!” விஷால் நொந்து போனான். ஆனால் பாடல் தொடர்ந்தது.

“கனிகளிலே அவள் வேப்பங்காய்… காற்றினிலே அவள் சூறாவளி…” பாடலை அவன் முடித்த போது அர்ச்சனாவின் சூடான பார்வை அருணைத் துளைத்தது.

“இன்னா தங்கச்சி… அண்ணாத்தே பாடின பாட்டு உனக்குப் புடிச்சிருக்கா?” வேண்டுமென்றே அவளை அவன் கேலி பண்ண அர்ச்சனா முகத்தை அந்தப்புறமாகத் திருப்பிக் கொண்டாள்.

“ஏய்! என்ன? வந்த நேரத்திலிருந்து நானும் பார்க்கிறேன். சீனியர் எங்கிற ஒரு பயம் இல்லை. சும்மா சும்மா முறைக்கிற. யாருக்கிட்டக் காட்டுற உன்னோட திமிரை.” உட்கார்ந்திருந்த சுவரிலிருந்து சட்டென்று குதித்த அருண் அந்தப் பெண்ணை நோக்கிப் போகவும் விஷால் பயந்துவிட்டான்.

“டேய் அருண்! என்னடா மச்சான். எதுக்கு இவ்வளவு கோபப்படுறே நீ?”

“பாருடா விஷால். என்னவோ பெரிய இவ மாதிரி முறைச்சிக்கிட்டே நிக்குறா? ஒரு அறை விட்டாத் தாங்க மாட்டா. ஆளையும் மொகறையையும் பாரு. போடீ!”

“அர்ச்சனா! நீங்க போங்க.” உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்று முறைத்துக் கொண்டு நின்ற பெண்ணை கஷ்டப்பட்டு அப்பால் அனுப்பினான் விஷால்.

“பார்த்தியாடா மச்சான். நீ போகச் சொன்னதுக்குப் பிறகும் முறைச்சிக்கிட்டு நிக்குறதை.”

“பெரிய இடத்துப் பொண்ணா இருக்கப் போகுது மச்சான். விட்டுத்தள்ளு.”

“அவ பெரிய இடம்னா அது அவளோட. இது காலேஜ் மச்சான். இங்க எல்லாரும் ஒன்னுதான்.”

“சரி விடு… நீ என்னடா இன்னைக்கு ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்படியெல்லாம் நடந்துக்கிறே!” விஷால் ஆச்சரியப்படவும் அருணும் உச்சுக்கொட்டிக் கொண்டான். அது அவனுக்குமே கொஞ்சம் விந்தையாகத்தான் இருந்தது.

எப்போதும் பெண்களிடம் அதிகப் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டான். ஒன்றிரண்டு தோழிகள் உண்டுதான். இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் நன்கு பரிட்சயமானவர்கள். இது போன்ற புதிய வரவுகளிடம் அத்தனை சுலபத்தில் பேசுபவனல்ல அருண். ஆனால், ஏனோ இந்தப் பெண்ணின் நிமிர்வு இன்று அவனைச் சீண்டிப் பார்த்திருந்தது.

“என்ன அர்ச்சனா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” கடுகடுத்த முகத்தோடு வந்த தோழியைக் கேட்டாள் ஷிவானி.

“ஒன்னுமில்லை.” வாய் சொன்னாலும் கண்கள் என்னவோ தீவிர பாவத்தையே காட்டியது.

“என்னாச்சு? சீனியர்ஸ் ராகிங் பண்ணினாங்களா?”

“ம்…” உறுமலாகத்தான் வந்தது பதில்.

“விடுப்பா… இதெல்லாம் சகஜம் தானே.”

“இல்லை ஷிவானி. ரொம்ப ஓவராப் பேசுறாப்போல. எங்கண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொன்னேன்னு வை. அவன் கதை கந்தல் ஆகிடும்.”

“ஏய்! சும்மா இருப்பா. இதையெல்லாமா வீடு வரைக்கும் கொண்டு போவாங்க? சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணு அர்ச்சனா.”

“ம்… ஆனா இனிமே எங்கிட்ட அவன் வாலாட்டினா… அப்போ காட்டுறேன் அவனுக்கு நான் யாருன்னு.”

“சரி… விடு விடு.” ஷிவானி அவளை இழுத்துக்கொண்டு கான்டீன் போன போது கூட அர்ச்சனாவின் கண்கள் கோபத்தைத் தான் உமிழ்ந்து கொண்டிருந்தது.

தம்பியின் முகத்தைப் பார்த்தபடியே வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் மாதவி. தம்பி என்றால் பெரிதாக வயது வித்தியாசம் இல்லை. மாதவிக்கு இருபத்தி ஐந்து என்றால் அருணிற்கு இருபத்தி நான்கு.

ஆரம்பித்த வேகத்தில் சட்டென்று நிதானித்து விட்டார்கள் உமாசங்கர், அமுதவல்லி தம்பதியினர். மூத்தது பெண். மாதவி என்று அழகாகப் பெயர் வைத்திருந்தார்கள். அவளைப் பெண்ணாகப் பெற அந்தப் பெற்றோர் தவம் தான் பண்ணி இருக்க வேண்டும்.
மாதவி அத்தனை பொறுமைக்குச் சொந்தக்காரி. டாக்டர் ஆகவேண்டும் என்பது அவளது கனவு… ஆசை. ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

உமாசங்கர் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றுகிறார். நல்ல சம்பளம் தான். இருந்தாலும் பணம் செலவழித்து மகளை டாக்டராக்க அவரால் முடியவில்லை. அந்தளவிற்கு அவருக்குத் தெம்பில்லை.
ஆனால் அந்த வாய்ப்பு அருணிற்குக் கிட்டியது. நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தான். அப்பாவின் சம்பாத்யம் மட்டுமல்லாது இப்போது மாதவியின் வருமானமும் சேர்ந்து கொண்டதால் வீடு தலைநிமிர்ந்து இருந்தது.


மாதவியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை பார்க்கிறாள். இரண்டு வருட சர்வீஸ். குறை சொல்லமுடியாத அளவு நல்ல சம்பளம். எல்லாவற்றையும் விட அவளின் மனதுக்குப் பிடித்தமான வேலை.


“அருண்!” மாதவியின் குரலில் சட்டென்று திரும்பினான் அருண். வீட்டின் பின் வாசலில் நின்றிருந்தான். பழைய வீடுதான். உமாசங்கரின் வழிவழியாக வந்த வீடு. ஆனால் பார்க்க அத்தனை அழகாக இருக்கும். வீட்டின் முன்னும் பின்னும் சின்னதாகத் தோட்டம் வைத்திருந்தாள் மாதவி.


“என்ன மாதவி?” அக்காவை எப்போதும் பெயர் சொல்லித்தான் அழைப்பான் இளையவன்.


“என்னாச்சு உனக்கு இன்னைக்கு? வீட்டுக்கு வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன். ரொம்ப டல்லா இருக்க.”


“ம்ப்ச்… ஜூனியரோட ஒரு சின்னப் பிரச்சனை.”
“பொண்ணா?”


“ம்…”


“கை நீட்டிட்டியா?” பதறிப்போய்க் கேட்டாள் பெண்.


“மாதவி! லூசா நீ?” எரிச்சலின் உச்சக்கட்டத்தில் வந்தது அருணின் பதில்.


“பார்த்து அருண். எல்லாத்துக்கும் கோபப்படாதடா.”


“கோபமெல்லாம் இல்லை மாதவி. ரொம்பத் திமிராப் பேசினாளா… அதுதான் என்னால தாங்க முடியலை.” சொன்னவனை வினோதமாகப் பார்த்தாள் மாதவி. அவனது தோழிகள் தவிர யாரோடும் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டான் அருண். அவனை இன்று யார் இத்தனை தூரம் பாதித்தது?


எதுவும் பேசாமல் அவளது ரூமிற்கு வந்தவள் காஞ்சனாவை அழைத்தாள். அருணின் நெருங்கிய வட்டத்தில் அவளும் ஒருத்தி.


“அக்கா! சொல்லுங்கக்கா. என்ன இந்த நேரத்துல?”


“இன்னைக்கு என்ன ஆச்சு காஞ்சனா? அருண் அவ்வளவு நல்லா இல்லையே.”


“அக்கா இன்னைக்கு எனக்கு உடம்புக்கு முடியலை. வீட்டுல தான் இருந்தேன். என்னாச்சுக்கா?”


“ஓ… யாரோ ஜூனியர் பொண்ணோட ஏதோ தகராறு போல. வந்ததுல இருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கான். அதுதான் உனக்கு ஃபோன் பண்ணினேன் காஞ்சனா?”


“யாரு? நம்ம அருணா?” காஞ்சனா அந்தப்புறம் பெருங்குரலெடுத்துச் சிரிக்கவும் மாதவியும் சிரித்தாள்.


“ஐயா எங்க கேங்கைத் தவிர வேற யாருக்கிட்டயும் பெருசாப் பேசமாட்டாரே!”


“அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. கொஞ்சம் என்னன்னு பாரு காஞ்சனா?”


“சரிக்கா. நான் விஷாலுக்கு ஃபோன் பண்ணிக் கேக்குறேன். இவனுக்கு ஃபோன் பண்ணினா எம்மேல பாயுவான்.”


“ஆமா… என்னையும் திட்டுவான். நீ பேசாம விஷால்கிட்டயே விசாரி.”


“சரிக்கா. வெச்சிடட்டுமா?”


“ம்… ஓகேடா. பை.”


“பை க்கா.”


ஃபோனை வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்தாள் மாதவி. காலையில் மார்னிங் ட்யூட்டி. இப்போது தூங்கினால்தான் காலையில் நேரத்தோடு கிளம்பச் சரியாக இருக்கும்.


இந்த இரண்டு வருட சர்வீஸில் டாக்டர் சந்திரமோகனிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தாள் பெண். நல்ல அருமையான மனிதர். இவள் அப்பா வயதிருக்கும். மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்.


இவளுக்கு மாத்திரமல்ல. ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் அனைவருக்கும் சீஃப் டாக்டர் என்றால் ஒரு தனி மரியாதை தான். நினைத்தபடியே மெத்தையில் கண்ணயர்ந்தது தத்தை.

error: Content is protected !!