மாடிவீடு – 24
அழகுவும் – தமிழும் அவர் சாதிசனம் இருக்கும் தெருவில் இருக்கிறார்கள் என தெரியாமலே, அத்தனை வேலையையும் அமைதியாக செய்து விட்டு நிம்மதியாக வந்து படுத்துக் கொண்டார் ஆலமரத்தான்.
நடு இரவில் திடீர் என வெளியே வந்த பக்கத்து வீட்டு மனிதர், வீடு எரிவதைக் கண்டு போட்ட கூச்சலில் எல்லாரும் எழுந்து வந்தனர்.
எல்லாருக்கும் தெரிந்தது தான் இந்த வேலை ஆலமரத்தானுடையது என்று, ஆனாலும் என்ன செய்ய முடியும்.
தீயை அணைத்துவிட்டு அமைதியாக படுத்துவிட்டிருந்தனர். லிங்கம் மட்டும் கருவியபடியே படுத்திருந்தான்.
ஆலமரத்தானின் இந்த செயல் அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
காலையிலையே எழுந்த ஆலமாரத்தான் எப்பொழுதும் போல் வயலுக்கு செல்ல, நேற்று கேலியாய் பார்த்தவர்கள் பயத்துடனும், கொஞ்சம் மரியாதையுடனும் பார்க்க மீசையை கர்வமாய் நீவி விட்டபடி நடந்து சென்றார்.
“ஐயா” என அழைத்தபடி அவர் முன்னே வந்து நின்றான் லிங்கம்.
‘என்ன?’ என கண்களால் வினவியபடியே அவர் பார்க்க,
“கடைத் திறக்கச்ச நீங்க தந்த ஆயிரம் ரூவா? வட்டியோட கொண்டாந்திருக்கேன்” என்றவன் தான் கொண்டு வந்த பதினொரு நூறு ரூபாய் தாளை அவர் முன் நீட்டினான்.
யோசனையாக அவன் முன் கையை நீட்ட, அவர் முகத்தைப் பார்க்காமலே கையில் குடுத்து விலகி நடந்தான்.
நேராக அழகு இருந்த வீட்டுக்கு சென்று வீட்டைப் பற்றிக் கூற,
வீட்டைப் பார்த்த அழகுதான் மிகவும் துடித்துப் போனான். அவனது ஒரே சொத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டாரே.
அவனின் நிலை கண்ட தமிழ், அவள் வீட்டை நோக்கி செல்ல தடுத்துவிட்டான் அவன்.
“நாம பண்ணுனதும் தப்புத்தேன், அதேன் ஐயா இப்படி பண்ணிட்டாக விடு” என்றவன் மீதி இருந்த தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அமுதன் வீட்டுக்கு சென்றான்.
ஆனாலும் மனதில் ஒரு வலி!
ஆயிரம் பத்திரம் கூறி சென்றாலும், பொறுக்க முடியாத பாண்டியன் அடுத்த நாளே அழகைப் பார்க்க வந்துவிட்டார்.
அவருக்குதான் ஆலமரத்தானை பற்றி நன்கு தெரியுமே.
இங்கு வந்து நிலை அறிந்தவர் ரத்தம் கொதிக்க, கொலை முயற்சி என காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இன்னும் எத்தனை காலம்தான் இந்த அப்பாவி மக்கள் இவன் அராஜகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற கோபத்தில் புகார் அளித்துவிட்டார்.
அவருக்கு முழுக்க முழுக்க துணை நின்றது லிங்கம்! அதுதான் ஆலமரத்தானின் கடனை முழுமையாக அடைத்தான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் ஆலமரத்தான் கைதுசெய்யபட்டார்.
அந்த ஊருக்கு முதல் முதலில் காலெடுத்து வைத்தனர் காவல் துறையினர். முதல் கைதும் ஆலமரத்தானே.
ஒரு மூச்சு அழகு வீட்டின் முன் வந்து நின்று ஆடித்தீர்த்து விட்டார் அப்பத்தா. நீ நல்லாவே இருக்க மாட்ட, என் வம்சத்த அழிச்ச உன் வம்சம் விளங்காது இப்படி ஏக வசனங்கள். அப்பொழுதும் அமைதியாகவே இருந்தான் அழகு. அவளையும் இருக்க வைத்தான்.
பல மீட்டிங் போட்டு இந்த மக்களிடம் பேசினாலும் எந்த பிரச்சனைக்கும் காவல் நிலையம் செல்ல விடமாட்டார் ஆலமரத்தான். அவர்களை விட அழகாக அந்த பிரச்சனையை தீர்ப்பார் அவர்.
இன்று அழகு இன மக்களிடம் நிறைய நிறைய கூறினார் பாண்டியன். புதிதாக இருந்த தலைவரையும் பார்த்து பேசி காவலர்கள் பற்றி நிறைய நல்லவைக் கூறி ஒருவாறு அவர்களையும் சம்மதிக்க வைத்திருந்தார்.
ஏதாவது பிரச்சனை என்றால் காவலரை நாடக் கூறினார். அவர்கள் இருப்பது நமது நலம் காக்கதான் இப்படியான வார்தைகள் கொண்டு எல்லாரையும் சரிக்கட்டியிருந்தார்.
ஆலமரத்தானைப் போல் சட்டத்தை தன் கையில் எடுக்காமல், சட்டதின் கையில் சட்டத்தை குடுத்தார்.
இனியும் அப்படியே இருக்க கூறினார் எல்லாரையும்.
மேலும் இரு நாட்கள் அங்கிருந்துவிட்டுதான் பட்டணம் நோக்கி சென்றார்.
காவல் நிலையத்தில் இருந்து ஒருவாரம் கழித்துதான் வீட்டுக்கு வந்தார் ஆலமரத்தான். பல அடிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடிக்க மிகவும் தளர்ந்துவிட்டார் மனிதர். ஆனாலும் அவர்களை சும்மா விடும் எண்ணம் இருக்கவில்லை.
பல மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அடிக்கடி காவல் துறையினர் அந்த ஊருக்கு வர ஆரம்பித்தனர்.
காவலர்களின் வரவு அதிகரிக்க அதிகரிக்க ஆலமரத்தானின் வெளிவரவு சுருங்கியது.
பின்னாளில் எல்லாரும் அவரை ஏளனமாய்ப் பார்ப்பது போல் தோன்ற வெளியில் செல்வதை ஆறுமாதத்தில் முற்றிலும் தவிர்த்தார். அவரது வாசம் வீட்டின் வாசலோடு முடிந்துப்போனது.
அமுதாம்மாள் மனதில் வருத்தபட்டாரே தவிர வெளியில் கூறவில்லை.
ஆனால் அவரின் தாயால் அப்படி இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வருவோர் போவோர் என்று எல்லாரிடமும் தமிழை சபிக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையில் அன்புவின் வளைகாப்பை மிகவும் பெரிதாக நடத்தினான் அழகு. அவர்களுக்கென்று இன்னொரு உறவு.
அதுதான் சமயம் என்று சிலுக்கையும் கையோடு அழைத்து வந்துவிட்டான்.
அவள்தான் அவன் குடும்பத்தில் மூத்தவள் அவள் சொல்வதைதான் பெரும்பாலும் அழகு கேட்பான்.
அவள் ஆலோசனைபடித்தான் வயலில் பயிரிடுவான். அழகு நேரமோ இல்லை சிலுக்கு வந்த ராசியோ அழகு கொஞ்சமாய் வளர ஆரம்பித்தான்.
வந்த வாய்ப்பை விடாமல் பிடித்து தன் திறமையால் முன்னுக்கு வந்துக் கொண்டிருப்பவன்.
அன்புவுக்கு பிரசவம் பார்த்தது வரை சிலுக்குதான்.
அவளுக்கு ஆண் குழந்தைப் பிறக்க, அவளின் காதலன் நினைவாக “ராஜா” என பெயரிட்டாள்.
அந்த குழந்தையை அவள் கொஞ்சுவது ‘என் சாமி’ என்றுதான்…
குழந்தையும் பாட்டி… பாட்டி… என்று செல்லம் கொஞ்சுவான்.
இவர்களது பாசப்பிணைப்பில் அமுதன், பாண்டியன் இருவரும் இணைந்துக் கொள்வார்கள்.
உண்மையாகவே இப்பொழுதுதான் வாழ்வதுப் போல் அவர்களுக்கு தோன்றும் அப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அவர்களது.
தமிழ், அழகு காதலில் உலகம் மறந்து இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
அழகு வீட்டில் ஒரு மூலையில்தான் இடம் கேட்டாள் அவள், ஆனால் அவன் அவளுக்கு அவன் உயிரையே அர்பணித்தான் என்றுதான் கூறவேண்டும். அப்படி ஒரு சந்தோஷமான வாழ்க்கை அவர்களது.
இனி அவனது ஒரே ஒரு ஆசை, தமிழுக்கு ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பதே. அதுவும் சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அவனுக்கு மலையளவு உண்டு.
‘இந்த வீட்டை நீங்களே வைத்திருங்கள்’ என பாண்டியன் ஆயிரம் முறைக் கூறினாலும் அதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
‘தமிழ் அவள் உரிமையாய் ராணியாய் வலம் வர அவளுக்கு ஒரு வீடு வேண்டும்’ என்பது அவன் எண்ணம்.
இதற்கிடையில் லிங்கம் – செல்வி கல்யாணம் கூட நடந்து முடிந்திருந்தது.
அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்திருந்தது. மிகவும் பயத்துடன் இருந்தது முத்தார்தான்.
‘இன்னும் உன் மகள் வயசுக்கு வரவில்லையா?’ என்று கேட்ட மக்கள் மத்தியில் ‘தன் மகள் எப்படி இருக்க போகிறாள்?’ என இவள் பயந்திருக்க, திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் ஒரு பேரனை அவள் கையில் கொடுத்தாள் செல்வி.
திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அழகுவுக்கு இன்னும் வாரிசு வரவில்லை.
இதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்றாலும், அவளை கவலைப் படவைத்தனர் சுற்றி இருந்தவர்கள். அதில் முக்கிய பங்கு அவளின் அப்பத்தா.
ஆலமரத்தான் எங்கும் செல்வது இல்லை. ஆனால் அப்பத்தா, தன்னால் ஆன வயல் வேலைகளை வேலைகார்கள் வைத்துப் பார்த்துக் கொண்டார். அவருக்கு துணை அமுதாம்மாள்.
வேதனை, துக்கம், அவமானம் தாங்காமல் ஆலமரத்தான் வீட்டில் அடைந்தது அவர் தாயால் தாங்கமுடியவில்லை.
ஆலமரத்தானின் கௌரவமே அவரை மூலையில் தள்ளியது!
வீட்டுக்கு போனாலே ‘தன் மகன் கம்பீரமாய் வலம் வந்ததுதான்’ நினைவுக்கு வரும்.
அந்த நேரம் எல்லாம் தமிழை சபிப்பதை நிறுத்தவில்லை அவர்.
அழகு, தமிழை ஒரு நாளும் வயலுக்கு அழைத்து சென்றதில்லை.
ராணியாக வாழவேண்டியவள்… அவளை வயலுக்கு அழைக்க மனம் வராது அவனுக்கு.
அவள்தான் குளத்தில் குளிக்க வருகிறேன் என்று அவன் சைக்கிளில் முன்னால் ஏறிக் கொள்வாள்.
இதுவும் அவள் ஆசைபட்டவையே!
வயலில் விளைந்த காய்கறிகளை அமுதன் யோசனைப் படி பட்டணதில் விற்க கொண்டு செல்ல ஆரம்பித்தான் அழகு .
லிங்கமும், அழகுவும் சேர்ந்து மினி டெம்போ ஒன்று வாங்கினர். செல்வி கடையை பார்த்திருக்க, இவன் பட்டணத்துக்கு செல்வான்.
நாளடைவில் பக்கத்து ஊரில் இருந்து காய்கறிகள் வாங்கி பட்டணம் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். இப்படியாக அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம்.
பாண்டியன் குடுத்த சிறு நூலைப் பற்றிக் கொண்டு உயர்ந்து விட்டான். வந்த வாய்ப்பை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அவன்.
ஐந்து ஆண்டு கடின உழைப்பில் ஓரளவு நல்ல நிலையை எட்டினர் அழகு தம்பதியினர். கணிசமான தொகையும் கையில் சேர்ந்தது.
ஆலமரத்தான் எரித்த இடத்தில் தமிழுக்கான வீடும் வளர்ந்துக் கொண்டு வந்தது.
*****************
வரப்பில் அழகைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் தமிழ். முகம் புன்னகையில் விரிந்திருந்தது.
வாய்கால் பாதையை வாழை மரங்களுக்குத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தான் அழகு.
“இப்படி உச்சி வெயில் நேரம் இங்க இருக்காதன்னு எத்தனை நாள் சொல்லுறது தமிழ்?”
“நான் சொன்னா மட்டும் நீங்க எதுமே கேட்கல? நான் மட்டும் கேட்கணுமா?” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“சரி சொல்லு நான் என்ன செய்யணும்?”
“நான் தினமும் உன்கூட வயலுக்கு வரோணும்”
“அதெல்லாம் வேண்டாம்மா. எல்லாம் நானும் அக்காவும் பாத்துப்போம் நீ வீட்டுல இரு. உனக்கு கஷ்டமா இருக்கும்ல தமிழ் அதேன் சொல்லுத்தேன் கேளுமா”
கை, கால்களைக் கழுவியபடியே அவன் கூற,
“அதெல்லாம் முடியாது” என்றபடி வரப்பில் இருந்து மெதுவாக எழ, அவளுக்கு தன் கையை நீட்டி அவளை அழைத்து அந்த வரப்பில் நடந்து வர, அவன் முகத்தையே பார்த்தபடி வந்தாள் தமிழ்.
“என்ன அப்படி பாக்குறவ?”
“நீ மட்டும் என் வாழ்க்கையில இல்லன்னா நான் என்ன ஆகிருப்பேன் அழகு” என,
“நீ என் வாழ்கையில் வரலன்னா நான் என்ன ஆகிருப்பேன் தமிழ்” அதே கேள்வியை இவன் திருப்பிக் கேட்டான்.
எப்பொழுதும் ஓருவர் மாற்றி ஒருவர் கேட்கும் கேள்வி. இருவருமே பதில் சொல்லாமல் ஒரு புன்னகையுடனே கடந்துவிடுவர்.
‘இன்னாருக்கு இன்னார் என்று தேவன் போட்ட முடிச்சு’ இருவர் மனதிலும் இந்த எண்ணம் வர, ஆலமரத்தான் முகமும் வந்துப் போகும், அதனாலேயே பதில் சொல்லாமல் கடந்துவிடுவர்.
“இந்த கேள்விக்கு பதிலை, நம் பொண்ணு வந்து சொல்லுவா அழகு” என தன் மணி வயிற்றில் கை வைத்து இப்பொழுது தமிழ் கூற,
அழகு முகம் புன்னகையில் விரிந்தது. தன் கையை அவள் கைமேல் வைத்து மெதுவாக அழுத்தியவன்.
“கண்டிப்பா சொல்லுவா” என நிறைவாய் புன்னகைத்தான்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் அவர்களின் வாரிசுக்கு ஐந்து மாதம்.
இப்படியாக நாளை திறக்க இருக்கும் புதுவீட்டைப் பற்றியும் பேசியபடி அந்த வரப்பில் நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.
தமிழ் கருவுற்றிருக்கும் செய்தி கேட்ட நாளில் இருந்து வீட்டு வேலை வேகமாய் நடந்துக் கொண்டிருந்தது.
அவளின் சொந்த வீட்டில் தான் அவர்களின் இளவரசி பிறக்க வேண்டுமாம். சீக்கிரம் முழு வேலையும் முடித்து இதோ குடிபுகும் நாளும் வந்துவிட்டது.
“புள்ளத்தாச்சி பொண்ணு இப்படித்தேன் வெயில்ல சுத்துறதா?” எனக் கேட்டபடியே சாப்பாட்டை சுமந்து வந்தார் சிலுக்கு. கையில் அவரது பேரனை பிடித்தபடி நடந்து வந்தார்.
அன்பையும், செல்வியையும் வீட்டில் இருக்க கூறிவிட்டு இவள் இங்கு வந்திருந்தாள்.
“நான் சொன்னா எங்க கேட்குறா, எதுவும் கேக்குறது இல்லக்கா, நீயாச்சும் சொல்லேன்”
“என் மருமவள நான் என்னத்தை சொல்லுறது, புள்ள ஆசைபடுறதை செய்யேன்டா” என,
“சரித்தேன், நீயும் இவ கூடச் சேர்ந்தாச்சா வேறென்ன நான் சொல்ல, நீ வயலுக்கே வா ஆத்தா” என தமிழைப் பார்த்துக் கண்ணடிக்க,
“ரெண்டும் நல்லா ஜோடி சேர்ந்திருக்கு பாரேன்” என சிலுக்கு சிரிக்க,
“எல்லாம் நீத்தேன் சேர்த்து வச்சத்த” என இவள் கூற,
“சரி… சரி… சாப்டுங்க” புன்னகையுடன் பரிமாறினார் சிலுக்கு.
இதே வார்த்தையை சில மாதங்களுக்கு முன் கூறினால் சிலுக்கு முகம் அப்படியே வாடிவிடும்.
ஆனால் இப்பொழுது எந்த வருத்தமும் இல்லை. திருமணத்தின் நிறைவை தமிழின் மேடிட்ட வயிறு காட்ட, தான் சரியாகத்தான் செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி மட்டுமே.
“நீங்க சாப்ட்டு வீட்டுக்கு போங்க, நாளைக்கு கூப்பிட வேண்டியவங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு வாரேன்” என சிலுக்கு கிளம்பினார்.
“நானும்… நானும்” என ராஜாவும் பின்னே கிளம்ப, “என் சாமி இல்லாம, நான் எங்க போவேன்” என அவனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார்.
வயதின் காரணமாய் கொஞ்சம் கொஞ்சம் சரிந்து நடந்தாலும், பேரனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வார் அவனும் “பாட்டி” என கழுத்தை கட்டிக் கொள்வான்.
தமிழ், அழகுவுக்கான அன்றைய இனிய விடியலும் அழகாக விடிந்தது.
அழகு குடும்பம் புது வீடு திறப்பு விழா அதை தொடர்ந்த விருந்து என் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
இவர்களுக்கு நல் விடியலாய் இருக்க, ஆலமரத்தானின் தாய்க்கு கடைசி விடியல் போல உயிர் ஊசல் ஆடிக் கொண்டிருந்தது.
தன் தாயைப் பார்க்கக் கூட ஆலமரத்தான் அறையை விட்டு வெளியில் வரவில்லை. அவரே தானே ஒதுங்கிக் கொண்டார் போலும்?
பால் காய்ச்சி முடித்த அழகு, தமிழையும் அவர்கள் குடும்பத்தாரையும் வீட்டின் வெளியே அழைத்து செல்ல,
வாசல் கேட் அருகே மதில் சுவரில் ஒரு பச்சை வண்ண துணி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்க்கவும் அன்புவும், அமுதனும் தன்னைப் போல் சிரிக்க, செல்வியும் இணைந்துக் கொண்டாள்.
சிரித்தவர்களை முறைத்துப் பார்த்தவள், “என்ன அழகு?” என கேட்க,
“நீயே பார்த்துத் தெரிஞ்சிக்கோயேன்” எனக் கூறி சிரிக்க,
“ரொம்பத்தேன் பண்ணுறீக” என சிலித்தவள், துணியை விலக்க,
“தமிழரசி மாடிவீடு” என சிமெண்ட்டில் பொறிக்கபட்ட பேர் பலகை ஒன்று வைத்திருந்தான்.
வீடும் மாடி வீடுத்தான். அவர்களுக்கு போதுமான மாடிவீடு… வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு.
ஆலமரத்தான் வீடு இல்லாமல் எரித்த அதே இடத்தில், எங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதுப் போல் ஸ்ட்ராங்க் அஸ்திவாரம் போட்ட வீட்டை உருவாக்கினான் அழகு.
“இதென்ன தமிழரசி மாடிவீடு” என அவள் கேட்க,
“ஆமா, இது உன்னோட வீடுதானே” என,
“அதெல்லாம் சரித்தேன், அதென்ன புதுசா மாடிவீடு”
“நீ எப்பவும் மாடிவீடு தமிழ் தானே, அதுதேன் அப்படியே வரட்டும்னு வச்சாச்சி, இது அமுதன் ஐடியாத்தேன், நானும் புதுசா இருக்குன்னு வைக்க சொல்லிட்டேன்” எனக் கூற,
“அப்படியா?” என அன்பு மெதுவா அமுதனிடம் கேட்க,
“சும்மா” என அவன் கண்ணடிக்க, அவர்களுக்குள் மெல்லிய புன்னகை விரிந்தது.
“எனக்கு தெரியும், நீங்கத்தேன் இந்த வேலை எல்லாம் பார்ப்பீக” என அப்படியே அழகை அணைக்க, அவளின் மேடிட்ட வயிறு நானும் இருக்கேன்’ எனக் கூற, கொஞ்சம் விலகி சிரித்து மீண்டும் அணைத்துக் கொண்டான் அழகு.
தூரத்தில் நின்று இவர்களையே பார்த்திருந்த அமுதா, மகளின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை கண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து “நல்லாயிரு” என ஆசீர்வதித்தார்.
அதே நேரம் அங்கு வீட்டில் ஊசல் ஆடிக்கொண்டிருந்த அப்பத்தாவின் உயிர் அவரை விட்டு பிரிந்தது.
இரு குடும்பமும் என்றும் இணைவது இல்லை. நல்லதோ, கெட்டதோ எதற்க்கும் அவர்களையும் இவர்கள் அழைக்கவில்லை, அவர்களும் இவர்களை அழைக்கவில்லை.
நீ உன் நிலையில் இரு, நான் என் நிலையில் இருக்கிறேன் என விலகியே இருந்தனர்.
…………..நாமும் அப்படியே விடைபெறுவோம்…………..