MT 6

MT 6

மாடிவீடு – 6

காலை 1௦ மணி…

தங்கள் வயலை சுற்றி வந்தான் அமுதன். அதிக வெயில் என்று இல்லாமல் ஒரு விதமான தென்றல் காற்றுடன் மெலிதாக தேகம் தீண்டியது அந்த காலை நேர வெயில்.

தூரத்தில் அவள் வந்துக் கொண்டிருந்தாள். கையில் கன்னுக்குட்டியை பிடித்தப்படி.
சுற்றி சுற்றி வயலைப் பார்த்தபடி வாய் ஏதோ மெதுவாக முணுமுணுத்து வந்துக் கொண்டிருந்தாள் அவள்.

தன் அருகில் வரவும், அவளை தடுத்தபடி வந்து நின்றான் அவன்.

“மன்னிக்க வேண்டும். நேற்று நான் வேண்டும் என்று உங்க மேல் மோதவில்லை.”

அவன் குரல் இனிமையாக ஒலித்தது!

“கொள்ளை அழகை இறைவன் ஒரே இடத்தில் கொட்டிப் படைத்திருக்கிறான். தங்கமணிகளை கோர்த்த சங்கிலிப் போல், கொள்ளை அழகுடன் காட்சித்தரும் இந்த தங்கமணிகளைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அதில் உங்களை நிச்சயமாக நான் கவனிக்கவில்லை”

அவன் குரலில் ஒரு கனிவு! அதோடில்லாமல் அவனில் ஒரு பணிவும் இருந்தது.

அவனதுப் பேச்சும், பார்வையும், தோற்றமும் பொய் சொல்வதாக தெரியவில்லை அன்புக்கு.

கட்டம் போட்ட சட்டையும், கறுப்பு நிற பேண்ட் அணிந்திருந்தான். பார்க்க மிகவும் கண்ணியமானவனாக தெரிந்தான்.

தன் அண்ணன் ஊரில் இருக்கும் பெண்களிடம் எப்படி கண்ணியமாக பேசுவானோ அதேக் கண்ணியத்தை அவன் கண்களில் கண்டாள்.

அவன் கூறுவது உண்மையாக தான் இருக்கும் என்று அன்பு நினைத்தாள்.

“இன்னும் உங்கள் கோபம் போகவில்லையெனில் நேற்றுப் போல் இன்றும் எனக்கு தண்டனை தாருங்கள். நேற்று சட்டையில் பூசிய சேறை, இன்று முகத்தில் பூசவேண்டும் என்றாலும் பூசுங்கள்” கண்களை மூடி அவள் முன் நேராக நின்றான்.

இப்பொழுது ஆச்சரியத்துடன் அவனை கூர்ந்துப் பார்த்தாள் அன்பு!

அவன் எதிரில் வந்ததை அவளும் கவனிக்கவில்லை. வயலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள். இப்படி தானே அவனும் வந்திருப்பான் அல்லவா?

நேற்று செய்த தவறின் ஆழம் தெரிந்தது? கண்களை மெதுவாக கீழே தாழ்த்திக் கொண்டாள்.

தவறு செய்துவிட்டு கீழே தலையை குனிந்து மன்னிப்பு கேட்கும் குழந்தையாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள் அன்பு.

முகத்தில் மெல்லியக் கீற்றுப்  புன்னகை பட்டணத்துக்காரனிடம்!

“நாந்தேன் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கோணும்… மடச்சி மாதிரி சேத்தை உங்க மேல பூசி போட்டேன். மன்னிச்சுகோங்க?”

“ம்ம்” மெல்லிய புன்னகையை முகத்தில் படர விட்டப்படி, வரப்பில் இருந்து இறங்கி, அவளுக்கு வழி விட்டு நின்றான்.

அவனைப் பார்த்து சிரித்தபடி சென்றாள் அவள்.

சற்று தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தாள் அன்பு.

அதே நேரத்தில் அவனும், அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

திரும்பி நடந்தாள் ‘குளத்தில் குளிச்சுட்டு, மீன் பிடிச்சுட்டு வீட்டுக்கு போகோணும்’ எண்ணியப்படியே நடந்தாள்.

கன்னுக்குட்டியை அங்கிருந்த மரத்தில் கட்டியவள். வரப்பை மாற்றி நடந்தாள்.

அருகில் வயலுக்கு நீர் பாயும் பெரிய குளம் இருந்தது. அதை நோக்கி நடந்தாள்.

இப்பொழுது வெகுதூரத்தில் நடந்து சென்ற அவன் மீண்டும் அவளை திரும்பிப் பார்த்தான். ஏனோ அவளை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றியது.

ஒரு முறை பார்பவர்களை பலமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகில்லை அன்பு. ஆனால் ஒருமுறை பார்பவர்களை மீண்டும் ஒரே ஒருமுறை பார்க்க வைக்கும் குழந்தை முகம்.

குட்டையாக, சிறு குழந்தையைப் போல் இருந்தாள். முதல் முறையாக பார்த்த பொழுதே மீண்டும் அவளைப் பார்க்க தோன்றியது காரணம் தெரியாமலேயே!

அப்படியே அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான். வயல் வரப்பு முடிந்திருந்தது, அடுத்து கொஞ்ச இடம் வெட்ட வெளியாக இருந்தது. செவந்தி செடி இருந்த இடமாம் விசாரித்துக் கொண்டான். அதை தொடர்ந்து வாழை மரங்களின் அணிவகுப்பு.

இனி எழில் கொஞ்சும் அழகை காண வேறு திசை செல்லவேண்டும்… திரும்பிப் பார்த்தான் அவளை காணவில்லை. கொஞ்சமாய் நடந்து சென்றான். தூரத்தில் அவள் தெரிந்தாள்.

காந்தமாய் இழுத்தாள்!

இரும்பு கொஞ்சமாய் நகர்ந்தது!

அவள் எங்கே போகிறாள் என்று தெரியாது. ஆனாலும் அவளை நோக்கி நடந்தான். அவள் செல்லும் இடம் கண்டிப்பாய் எழில் மிகு இடமாய் இருக்கும் அவன் நம்பிக்கை!

சட்டென்று அவளைக் காணவில்லை.

இரும்பு தனித்து நின்றது!

அவளை காணும் ஆவல் பெருகியது!

நடையின் வேகம் அதிகரித்தது!

அருகில் காந்த அதிர்வலை!

கண்களை சுற்றி சுழல விட்ட பின் தான் தெரிந்தது. அவள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாள்.

அதிர்வலையை கண்டு கொண்டான்!

இரும்பு இரண்டடி பின்னே நகர்ந்தது!

ஆனாலும் காந்தம் இழுத்ததே!

அவன் வெட்கிப் போனான்… தான் வயதுக்கு வந்த ஆண்மகன் அந்த நொடி உணர்ந்துக் கொண்டான்.

காந்தம் பருவமெய்த போகும் நாளுக்காய் காத்திருக்க தோன்றியது.

இரும்பு தனித்து திரும்பிச் சென்றது.

###########
அந்த மாலை வேளை தென்னை ஓலையில் கூரை பின்னிக் கொண்டிருந்தான் அழகு. ‘தன் ஐயா வீட்டு முதல் விசேஷம் தான் இல்லாமல் எப்படி’ என்று அவனே ஒவ்வொரு வேலையாக இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தான்.
தாய்மாமா கட்டவேண்டிய குச்சிவீடு வேலை நடந்துக் கொண்டிருந்தது. அவர் சம்பிரதாயத்துக்காக ஒரு தட்டி பின்னி கொடுத்தார். மீதியை அழகுவை கவனிக்க சொல்லி, மற்ற வேலையை கவனிக்க தன் வீட்டிற்கு சென்றார்.
ஒரு பக்கமாய் கருப்பட்டி மாவுக்கான வேலை நடந்துக் கொண்டிருந்தது. நெல் இடித்துக் கொண்டிருந்தவர்களின் வாயோ மெல்லிய பாடல்களை சிந்திக் கொண்டிருந்தது.
வெளியே ஒரு புடவையை மறைத்து அதில் தமிழரசி அமர்ந்திருக்க கண்களோ  அழகையே வட்டமிட்டது.
மடித்து விட்டிருந்த சட்டை, முறுக்கேறிய கறுத்த தேகம், அதில் ஒரு தாயத்து. கட்டம் போட்ட கைலியை, டிரவுசர்க்கு மேல் கட்டியிருந்தான். தலையில் ஒரு துண்டு. இது தான் அவனின் தின அலங்காரம். அப்படியே தமிழ் மனதை கொள்ளைக் கொண்டான்.
எந்த நேரமும் மாடு, மாட்டுக் கொட்டகை, தோட்டம் என்று அழுக்கு பையனாக அழுக்குச் சட்டையில் சுற்றுவான். தான் இப்படி இருக்கிறோமே என்று ஒரு நாளும் எண்ணமாட்டான்.
தலையைக் கூட வாரமட்டான். அன்பு வாரி விட்டால் மட்டுமே உண்டு. அப்படி இருந்துமே அவளைக் கவர்ந்தான் அழகு பேரழகனாய்!
அவள் கைகளை மருதாணிக் கொண்டு மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தாள் அன்பு. கூடவே செல்வியும்.
மதியமாய் வீட்டுக்கு வந்த அழகு, தங்கையை அழைக்க,
வீட்டின் முன் நின்ற மருதாணி செடியில் இருந்து வேகமாக இலையைப் பறித்தவள். அம்மியில் அரைத்து ஒரு சிரட்டையில் கொண்டு வந்திருந்தாள்.
இன்றில் இருந்தே அவளும் ஐயா வீட்டில் வேலை செய்பவர்களில் ஒருவள்.
“ஏன்டா நான் என்ன பண்ண சொன்னேன் நீ என்ன பண்ணுற?” கேட்டபடி வந்தார் ஆலமரத்தான்.
“என்ன சொன்னீக?”
“டேய் நான் உன்கிட்ட கேட்கிறேன், நீ என்னையே திருப்பிக் கேள்வி கேட்கிறியா?”
“நீங்க தானேங்க ஐயா கேட்டீக, நான் என்ன சொன்னேன்னு?”
அவனின் பதிலில் மெதுவாகச் சிரித்துக் கொண்டாள் தமிழ்.
ஆலமரத்தானை பார்த்துப் பயப்படும் ஆட்களைத் தான் தமிழ் பார்த்திருக்கிறாள். ஆனால் அழகு அவருக்குப் பயந்ததே இல்லை. இப்படித் தான் அவர் எதுக் கேட்டாலும் அதையே திருப்பிக் கேட்பான். சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அவன். அந்த பேச்சில் கட்டியிழுக்கபடுவாள் தமிழ்.
ஐயாவை பார்த்து அழகு கட்டும் கை கூட அவரைக் கண்டு பயந்து அல்ல, அவர் மேல் உள்ள மரியாதையில் என்பதும் அவளுக்குத் தெரியும்.
தன் தந்தை மேல் அத்தனை மரியாதை வைத்திருக்கும் அழகு, இவள் காதலை ஏற்ப்பானா? அவனையே பார்த்திருந்தாள்.
“எல்லாருக்கும் செய்தி அனுப்ப சொல்லிருந்தேனே? சொல்லிட்டியா?”
“ஆம். சொல்லியாச்சு, நாளக் காலையில வந்துருவாக”
“அப்புறம் சமையல்காரனுக்குச் சொல்ல சொன்னேனே”
“ஆங், சொல்ல ஆள் அனுப்பியாச்சு”
“வாழைத்தாறு, வாழையிலை வெட்ட சொன்னேனே? இங்கன இருக்க, போய் என்னாச்சுன்னு பாரு?” அவசரபடுத்தினார் ஆலமரத்தான்.
“கொஞ்சம் அப்படியே பின்னாடியும் திரும்பி பாக்குறது, இங்கனையே பார்த்துட்டு இருந்தா எப்படி.. நான் எல்லா வேலையும் செஞ்சுப்போட்டேன் ஐயா… நீங்க செத்த அதை பாத்தீங்கன்னா இந்த வேலையையும் முடிச்சுபோட்டு. அடுத்த வேலையை பார்பேனுங்க ஐயா?”
ஆலமரத்தான் பின்னால் திரும்பிப் பார்க்க, வரிசையாக வாழைத்தாறும், வாழையிலையும் வந்து கொண்டிருந்தது.
“போங்கப்பு, அப்படியே பின்னாடி போங்க… அங்கன இருக்க சாமான் கூட அடுக்கிபோடுங்க” அவர்களுடன் கூறியவர், அழகை கண்டு வியந்தார்… சொன்ன அத்தனை வேலையை கனகட்சிதமாக செய்திருந்தான்.
இதற்கு தான் அழகு வேண்டும் என்பது. இதற்கு தான் அழகை ஆலமரத்தானுக்கு அத்தனை பிடித்திருந்தது. இதற்கு தான் தமிழை அழகு கூட எங்க என்றாலும் தைரியமாக அனுப்புவார்.
அழகு, ஆலமரத்தான் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தில் வந்த கண்மூடித்தனமான நம்பிக்கை. தன் தந்தை அவன் மேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும் தமிழை அவன் மேல் பித்தம் கொள்ள வைக்கிறது.
வேலைக்காரனை வேலைக்காரன் போல் வைக்காமல் பாசக்காரனைப் போல் பார்த்துக் கொண்டால், யாருக்கு தான் காதல் வராது. அது தான் வந்தது வந்தே விட்டது.
அழகு மேல் அத்தனை பாசம் வைத்திருக்கும் அப்பா, தன் காதலை கண்டிப்பாக ஏற்பார் என்ற கண்மூடி தனமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை கொடுத்தது தான் தமிழின், அழகு மேல் உள்ள காதல்!
அப்பா மேல் உள்ள நம்பிக்கையால் விளைந்த காதல்! அப்பா மேலுள்ள நம்பிக்கை அழிந்தால் காதல் அழியும். என்றும் மகளுக்கு அப்பா மேல் இருக்கும் நம்பிக்கை அழியாது. அவள் காதலும் அழியாது!
தன் தந்தை அவனை நம்பிக்கையாக இங்கு வைத்திருக்கிறார் என்றால் அவன் எத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்? அவனை காதலித்தால் என்ன தப்பு. இது ஒன்று தான் தமிழின் எண்ணம். இதில் தன் தந்தையின் கெளரவம், சாதி எதுவும் அவள் நினைவில் இல்லை. அழகு அவன் மட்டும் தான் தெரிந்தான்.
அவன் மேல் அப்பா வைத்திருக்கும் நம்பிக்கையும், தான் வைத்திருக்கும் காதலுமே அவள் கண்களுக்கு தெரிந்தது.
என்றும் தமிழ் தனித்து நின்றால் அது அழகல்ல… அழகுடன் இணைந்து இருந்தால் தான் அது அழகு தமிழ்! இல்லை என்றால் நாம் “தமிழ் அழகு” என்று கூறமாட்டோமே!
அவள் காதல் அவளுக்கு தவறாக தெரியவில்லை. தன் தந்தைக்கு அவன் மேல் நம்பிக்கை. தனக்கு அவன் மேல் காதல்!
இந்த பொல்லாத காதல், நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டது. அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டால் காதல் எம்மாத்திரம்?
அவள் ஊர் கோவிலில் இருக்கும் சிலுக்கை பற்றி அவள் அறிந்திருந்தால், இந்த காதல் என்னாகுமோ?
வியப்பாக அவனைப் பார்த்து திரும்பியவர், கண்களில் அப்பொழுது தான் அவன் செய்யும் வேலை தெரிய, “ஏய்! என்ன நீ இதைப் பின்னிட்டு இருக்க, எந்திரி, எந்திரி இதெல்லாம் மாமா வூடு வந்து பாத்துப்பாக”
தட்டி பின்னிக் கொண்டிருந்தவனைப் பார்த்து பதறியவராகக் கூறினார்.
“ஆமா மாமன் வூடு வந்து தான் வேலையை முடிச்சுப்போட சொல்லிட்டு போயிருக்காக?” என்றவன், அங்கு வந்த அமுதாவைப் பார்த்து,
“ஏத்தா நீங்க சொல்லுங்க, தமிழ் மாமா வந்து இதெல்லாம் பின்னுவாகளா?”
“தமிழ் மாமா சின்னப் பையன்ல. அதேன் அண்ணன் வந்து சொல்லிபோட்டுத்தேன் போயிருக்கான். நீ பாருப்பா”
“ஆங், அது தான் நான் பின்னுறேன், தமிழ் மாமா கூரை பின்னனும்னா ரொம்ப வளரணும் அதுவரைக்கும் நம்ம தமிழ் அம்மணி இப்படியே குத்தவச்சி உட்காரமுடியுமா? அம்மணிக்கு வயசாகிடாது”
“டேய் படவா, எம்பொண்ணையா வயசானவன்னு சொல்லுத?”
“அதில்லைங்கய்யா? அவக குட்டியா இருகாகல்ல… கூரை பின்னுறது சாஸ்திர சம்பிராயதுக்குத் தானே, நான் பின்னி அவக கையில் கொடுக்கப் போறேன் அவக குச்சி கட்ட போறாக, மாமன் சின்னப் பையன் தானே”
“அதுக்கில்லடே, அது வந்து…”
“நீங்க சும்மா கிடங்க, அவன் எல்லாம் சரியாத்தேன் செய்வான், யய்யா நீ செய்”
“அப்படிச் சொல்லுத்தா, அம்மணி சமஞ்ச சந்தோசத்துல ஐயா கையும், காலும் புரியாம இருக்காக”
“அதுக்கில்ல அமுதா…”
“நீங்க இங்கிட்டு வாங்க, எல்லாம் அவன் பாத்துக்கிடுவான்” கையோடு அவரை அழைத்துச் சென்றார் அமுதா. இதுவும் ஒரு நம்பிக்கை. அவன் எல்லாம் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை.
“அட அதுக்கில்லடி, யாரை கேட்டு பண்ணீங்கன்னு நாளைக்கு உங்கண்ணன் வந்து துள்ளினா? நான் என்ன பதில் சொல்லுறதாம்?”
“இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அவன் ஒன்னும் சொல்லமாட்டான் நான் பாத்துக்கிடுத்தேன்… எல்லாம் சொல்லிகிட்டுத்தேன் போயிருக்கான்” கூறியபடியே மற்ற வேலைகளை செய்ய அவரை அழைத்துச்‌ சென்றார் அமுதா.
சின்னச் சிம்னி விளக்கின் ஒளியில் தமிழ் அவனையே பாத்துகிடக்க, அவள் கையில் மருதாணியை வைத்துவிட்டு, காய்ந்ததும் கையில் இருந்து அகற்றி விட்டு தேங்காய் எண்ணையை கையில் போட்டுக் கொண்டிருந்தாள் அன்பு.
மருதாணியின் சிவப்பு, கையில் நன்றாக ஏறியிருக்க, அவளைப் பார்த்து சிரித்தவள், வெளி திண்ணையில் படுத்துக்கொண்டாள் .
அழகு ஒலை பின்னிக் கொண்டிருந்தான்.
வெளியில் காவலுக்கு இருந்த ஆலமரத்தான் அவனையே கொஞ்ச நேரம் பார்த்திருந்து விட்டு, அவரை அறியாமல் உறங்கிட, நிலவு மகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சேவையைச் செய்து கொண்டிருந்தாள்.
வேலை எல்லாம் முடிந்த அழகு ஒரு ஓலையைப் போட்டு அதில் அப்படியே தூங்கிப் போனான்.
நடுஇரவில் பனியில் லேசாகக் குளிரெடுக்க காலையும், கையையும் குறுக்கி அப்படியே படுத்திருந்தான்.
அவனையே பார்த்திருந்த தமிழ், அவன் குளிரில் காலை குறுக்கிப் படுக்கவும் மெதுவாக எழ, அவளின் கொலுசு ‘நான் இன்னும் விழித்துத் தான் இருக்கிறேன்’ எனக் குரல் கொடுத்தது.
“இது ஒன்னு நேரம் காலம் தெரியாம” புலம்பியவள் ஓசை வராமல் அதை மெதுவாகக் கழட்டி பக்கத்தில் வைத்துப் பூனை பாதம் எடுத்து வைத்து வெளியில் வந்தாள்.
கொடியில் தொங்கிய ஆலமரத்தான் வேஷ்டியை எடுத்து அவன் அருகில் வந்து ஓசை படாமல் அவனுக்குப் போர்த்தி மெதுவாக எழ, அவள் தாவணியைப் பிடித்துக் கொண்டான் அழகு.
அதிர்ந்து திரும்ப “ம்மா” என்றபடி அவள் தாவணியைக் கையில் பிடித்து அந்தப் பக்கமாகத் திரும்பி படுத்தான் அழகேசன்.
சிரிப்புடன் அவன் அருகில் குனிந்தவன் மெதுவாக அவன் தலையைக் கோதி ஊத, அவள் தாவணியை விட்டவன், வேஷ்டியை இறுக்கப் பிடித்துப் போர்த்தித் தூங்க, சிரிப்புடன் எழுந்தவள், தன் இடத்திற்கு வந்து நியாபகமாகக் கொலுசை அணிந்து கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
error: Content is protected !!