MT – 7
MT – 7
மாடிவீடு – 7
புலர்ந்தும், புலராத காலை வேளை செங்கதிரவன் தன் ஒளியை எங்கும் வீசிய நேரம், பறவைகள் சடசடவென உணவு தேடி கிளம்பிய வேளை “கொக்கரக்கோ” சேவலின் குரலில் கண்களைக் கசக்கியபடி மெதுவாக எழுந்தார் ஆலமரத்தான்.
அவரின் கண்களுக்கு முதலாகத் தெரிந்தது, பச்சை ஓலை வாசம் வீசிய குட்டி கூரை வீடு.
ஓசை வராமல் அதன் அருகில் வந்து சுற்றிப் பார்த்தவர், கண் அகல விரிந்தது. கன்னத்தில் கையை வைத்து அதிசயித்தார். அத்தனை அழகாக அந்த பச்சை ஓலை வீட்டை கட்டியிருந்தான் அழகு.
வேகமாக வீட்டுக்குள் சென்று “அமுதா… அமுதா” எனக் குரல் கொடுத்து அவளை அழைத்தார்.
“என்னங்க”
“இங்க வாயேன் இந்த அழகு பய பண்ணிருக்க வேலையைப் பாரு”
அங்கிருந்த தண்ணீரை எடுத்து வாயை கொப்பளித்துக் கொண்டே “குச்சி கட்டுறேன்னு சொல்லி குடிசையைக் கட்டிப்புட்டான்!” அதிசயித்தபடி அவருடன் நடந்தார் ஆலமரத்தான்.
“அடியாத்தி, இந்த அழகு பயலுக்கு என்ன ஆச்சு? இம்புட்டு பெரிய வீட்டை கட்டிப்புட்டான்!” நாடியில் கைவைத்துக் கொண்டே அந்தக் குடிசையைச் சுற்றி வந்தாள் அமுதா.
அழகாக பச்சை ஓலையை பின்னி, இரட்டை தட்டி வைத்து கட்டியிருந்தான். அதை சுற்றி ஆற்று மண் வேறு. அது மட்டுமில்லாமல் அந்த குடிசையின் உள்ளே மெத்தை போல் மண்ணை போட்டு அதில் ஒரு போர்வையை விரித்திருந்தான்.
அவனின் அம்மணி வெறும் தரையில் படுத்ததுப் போல் இல்லாமல், கட்டிலில் படுத்ததுப் போல் இருக்க வேண்டுமாம். எல்லாம் வேலையையும் முடித்தவன், அதிகாலை பொழுதில் தான் தூங்க ஆரம்பித்தான்.
ஒரு ஓரமாய்த் தன் வேஷ்டியை இறுக்கப் பிடித்தபடி சுருண்டு படுத்திருக்கும் அழகையே பார்த்திருந்தார் ஆலமரத்தான். அவனைக் கண்டு பெருமையாக இருந்தது அவருக்கு.
“பாவம் ராத்திரி பூரா முழிச்சிருந்து கட்டியிருக்கான் போல” அமுதா கவலையாகக் கூறினார்.
இரவு தமிழ் மாமா வந்து, முதல் தட்டியை எடுத்து வைத்துவிட்டு தான் சென்றார். சாஸ்திர சம்பிரதாயத்தை மிகவும் மதிக்கும் மனிதர் அவர். அவர் செல்லவும் மீதி வேலையை அவன் முடித்துக் கொண்டான்.
“என்ன இப்படிப் பனியில் படுத்து கிடக்கான், டேய் அழகு” தட்டி எழுப்பினார் ஆலமரத்தான்.
பனியில் படுத்திருந்த அழகையே புடவை வழியாகப் பார்த்திருந்தாள் தமிழ்.
“ஆங்… சொல்லுங்கய்யா” அதிர்ந்து விழித்த அழகு, கைகளைக் கட்டியபடி எழுந்து நின்றான்.
“என்னடா… என்ன கோலம் இது, எதுக்கு இதெல்லாம்? சின்னதா ஒரு குடிசை கட்டுனா போதாதா?” கூரையைக் காட்டிக் கேட்டார் ஆலமரத்தான்.
“இங்க பாருங்க, ராத்திரி முழுக்கப் பனி பெய்யுது, இங்க தொட்டு பாருங்க” அவர் கையைப் பிடித்துத் தன் கை மேல் வைக்க,
உறுத்து விழித்த ஆலமரத்தான், கண்கள் சிவக்க அழகை முறைத்துப் பார்த்தார்.
டக்கென்று கையை விட்ட அழகு, “அதில்லங்கய்யா, ராத்திரி பூரா எம்புட்டு பனி பெய்யுது, இதுல குச்சி கட்டி அம்மணி படுத்தா அவகளுக்கு மேலுக்கு வந்திரும், அதேன் இப்படிக் கட்டுனேன். ரெண்டு, மூணு வாரம் எப்படிக் குச்சில இருக்க முடியும், அதுவும் அம்மணி வேற வீட்டுல செல்லமா வளர்ந்துட்டு, அது எப்படி அங்க இருக்கும்ங்க,
அம்மணி எங்க ஜனமா, எங்க வேணா படுத்து எங்க வேணா எழுந்து போக, அது மகராசிங்கய்யா, இப்படி ஒரு கூரை வீடு கட்டுனாத்தேன் அதுவும் சந்தோசமா இருக்கும், அதுதானுங்க ஐயா” பெருமையாக அதைப் பார்த்துக் கூறினான் அழகு.
“அப்படிங்களா?” சிரிப்புடன் கேட்டார் ஆலமரத்தான்.
“இல்லையா பின்ன, இப்படிக் கட்டுறதுல அப்படி உங்களுக்கு என்னத்தேன் நஷ்டம் ஆச்சாம், கேளுங்க ஆத்தா… புள்ள பெரியமனுஷியா மாறிருக்கு… சந்தோசப்படாம ஏன் பண்ணிருக்கன்னு கேட்குறீக?” இடுப்பில் கைவைத்துக் கேட்டான் அழகு.
“என்ன நஷ்டம் ஆச்சா?” போலி கோபத்துடன் கேட்க,
“அதிலிங்கய்யா... அம்மணி பாவம் அதேன்” தலையை சொறிந்துக் கொண்டான்.
‘அம்மணிக்காக செய்தால் ஐயா வையுறாகளே?’ என்ற எண்ணம் அவனிடம்.”
“அவன் சொல்லுறதும் சரிதானுங்க… பனில படுத்தா தமிழுக்கு மேலுக்கு வந்திடும்” அவனுக்கு சப்போர்ட் செய்தார் அமுதா.
“ஆங் அதேன்… அப்படியே சாயந்திரம் மாமா வீட்டுக்காரங்க வந்திருவாக ஆகுற வேலையைப் பாருங்க, ஆத்தா, ஐயாவை அழைச்சுட்டு போங்க”
“சரி… சரி… போடா குளிச்சிட்டு வந்து சாப்பிட வாடா” அவனை அனுப்பியவர் சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார். தலைக்கு மேல் ஆயிரம் வேலைகள் குவிந்துக் கிடந்தன.
காலையில் எடுத்த பதனீர் எல்லாம் நேராக ஆலமரத்தான் வீட்டில் வந்திறங்கியது.
காலமே அரிசி இடிக்க ஆரம்பித்துவிட்டனர், ஒரு பக்கம் அரிசிமாவை சலித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் தேங்காய் துருவிக் கொண்டிருந்ததனர். இன்னொரு பக்கம் பதனீர் பானையில் கொதித்துக் கொண்டிருந்தது. கருப்பட்டியாக கொதித்துக் கொண்டிருந்தது.
சலித்த மாவை, பெரிய அண்டாவில் மாற்றி, சுக்கு, தேங்காய் சேர்த்து கிளறி, அதனுடன் கருப்பட்டி உடைத்து கலந்துக் கொண்டிருந்தனர், அருகில் இருந்தவர்களோ உருண்டைகளாக உருட்டிக் கொண்டிருந்தனர்.
இப்படி அந்த ஊர் மக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை கையில் எடுத்துக் கொண்டனர். ஆலமரத்தான் அரண்மனையே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது.
தமிழுக்கு சீனி கொண்டு வருபவர்களுக்கு, தமிழ் வீட்டு சார்பாக கொடுக்க, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் என ஒரு பக்கம் அடுக்கிக் கொண்டிருந்தனர்.
வயசுக்கு வந்த பிள்ளைகளுக்கு ஒரு படியோ, இரண்டு படியோ சீனி கொடுப்பது அந்த ஊர் வழக்கம். இரவு விருந்தில் மொய் பணத்துக்குப் பதிலாக இப்படி சீனி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் அந்த ஊர் மக்கள்.
இப்படியாக ஆலமரத்தான் வீடு படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, தமிழ் குச்சியில் இருந்து வீட்டில் கால் எடுத்து வைக்கும் வரை இதே பரபரப்பு இருக்கும்.
சொக்கார் ஆள்மாற்றி… ஆள்மாற்றி தமிழுக்கு விருந்து வைப்பர். அழகு இன மக்களுக்கு இந்த பதினைந்து நாளும் விருந்து தான்.
தமிழுக்கு தான் அங்கிருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. இதில் அன்பு வேறு கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
தமிழைப் பார்த்து பயந்து ஓடும் அன்பு, இப்பொழுதோ வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
சிறுவயதில் அன்பு அழுக்கு சட்டையுடன் அலைவதை காணும் நேரம் எல்லாம் தமிழ் அவள் தலையில் கொட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடுவாள்.
தமிழைத் துரத்தி அன்பும் ஓடுவாள். ஆனால் புத்திசாலியான தமிழ், அன்பு வீட்டுக்குள் வரமாட்டாள் என எண்ணி அன்பை அடித்து விட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவாள்.
அவளைத் துரத்தி வரும் அன்பு வாசலிலேயே தேங்கிக் கொள்வது தமிழுக்குப் பெருத்த சந்தோசத்தைக் கொடுக்கும். வீட்டில் இருந்தபடியே நாக்கை துருத்தி அழகு காட்டி சென்று விடுவாள்.
பாவமாக வாசலையே பார்த்து நிற்கும் அன்பு அழுதபடியே மாட்டுக் கொட்டகை சென்று தன் அண்ணன் மடியில் அழுது கொண்டே படுத்துக்கொள்வாள்.
நாளடைவில் அழகு, அன்பை பற்றி அறிந்துக் கொண்டாள். அப்படித் தான் அழகை தீவிரமாகக் கவனிப்பாள். அப்படிக் கவனித்து மனதில் அவனை ஏற்றுக் கொண்டாள்.
அவளுக்கு மாடிவீட்டில் அடைபட்டுக் கிடப்பது பிடிக்கவில்லை. எளிமையிலும் சந்தோசமாக ஆசைப்பட்டபடியே வாழும் அழகை அவளுக்கு நிரம்பப் பிடித்துப் போனது.
‘அவன் கூடவே இருந்தால், அன்பு போல் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கலாம்’ என அவளே கற்பனை செய்து கொண்டாள். அதிலிருந்து அவள் அனுமதி இல்லாமலே அழகு பின்னாக அவள் மனம் சென்றது.
“சின்னம்மா எதுக்கு இப்படி ஒளிஞ்சு இருக்கீக” அன்பு தன் கேள்வியை ஆரம்பித்திருந்தாள்.
“அது, ஆம்பள முகத்தை சின்னம்மா பாக்க கூடாதாம் அதேன் இப்படி இருக்காக?” செல்விதான் பதில் கூறியிருந்தாள்.
“பார்த்தா தான் என்னவாம்?”
“பார்த்தா முகத்துல பரு வருமாம்?”
“ஆரு சொன்னா இப்படி?”
“நம்ம பாட்டி தான் சொன்னாக?”
“சின்னம்மா நீங்க சொல்லுங்க, ஏன் இங்க இருக்கீக?”
“வெளி ஆளுகளைப் பார்த்தா அவகளதேன் கட்டிக்கோணும், அதேன் இப்படி அடைச்சு போட்டுருக்காக” கடுப்புடன் கூறினாள் தமிழ்.
“இப்போ என்னைத்தேன் பாத்திருகீக? அப்போ எங்கண்ணனை கட்டிக்குவீகளா?”
“ஏன்டி கோட்டி மாதி கேட்கவ?” செல்வி தான் அதட்டினாள்.
“இப்போ என்னைத்தேன் பாத்திருக்காக, என்னை கட்ட முடியாதுல்ல, அதேன் அண்ணனை கட்டுவீகளான்னு கேட்டேன்”
“உன் அண்ணனை தானே கட்டிகிட்டா போச்சு” சிரிப்புடன் கூறியிருந்தாள் தமிழ். இந்த நிமிடம் ஏனோ அன்பை அத்தனை பிடித்திருந்தது.
“ஐயா மாமன் வூட்டுக்காரக வந்துட்டாக” வாசலில் எதிர் பார்த்திருந்த அழகு ஓடி வந்து ஆலமரத்தானிடம் கூறினான்.
“சரி… சரி… நீ தூரமா போய் நில்லு”
“சரிங்கய்யா” என்றவன் புன்னகை முகத்துடன் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.
மேள, தாளத்துடன் முப்பதுக்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டு வந்துக் கொண்டிருந்தது மாமன் சீர்.
தமிழ் முறைப்பையனோ தலையில் முண்டாசு கட்டி, வீரமாகக் கையில் ஒரு கொழுத்த ஆட்டை பிடித்தபடி முன்னால் நடந்து வந்தான்.
“மச்சான்” எனக் கூவியபடி ஆலமரத்தானை கட்டியணைத்துக் கொண்டார் அமுதன்.
சீர்வரிசைகள் வீட்டில் நுழைய, தமிழைச் சேலை மறைவில் இருந்து பின்கட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆண் முகத்தைப் பார்க்காதபடி சேலை மறைப்பின் பின்னே அழைத்துச் செல்ல, தமிழ் கண்களோ புடவை வழியாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அழகுவையே பார்த்திருந்தது.
பின்கட்டில் அமரவைக்கபட்ட தமிழ் மேல் ரோஜா இதழ் கலந்த பாலை ஊற்றினார் அவளின் அத்தை.
அடுத்ததாக மஞ்சள் நீர் ஊற்றி அவளின் விழா ஆரம்பித்தது. ஒரு வித புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தாள் தமிழ்.
சந்தனைத்தை குழைத்து அவளின் கன்னத்தில் பூசி தண்ணீர் ஊற்றினர். மாமன் வாங்கி வந்த சின்னாளம் பட்டுக் கட்டி, முடியை தளர பின்னி நுனியில் குஞ்சத்தைக் கட்டி, நெருக்கி கட்டிய மல்லியை தலையில் சூடி, அழகுற மிளிர்ந்தாள் தமிழ்.
நெற்றியில் சுட்டியும், கழுத்தில் தங்க அட்டிகையும், ஆபரணமும் பூட்டி கோவில் சிலையென ஜொலித்தாள் தமிழரசி.
அவளின் அத்தை ஆசையாகக் கொண்டு வந்த ஒட்டியாணமும் அவள் இடையில் இடம் பெற்றிருந்தது.
“அழகா இருக்கக் கண்ணு” அவளின் அத்தை திருஷ்டி கழித்துக் கன்னத்தில் சிறு கருப்பு சாந்து பொட்டை வைத்து விட்டார்.
“ஏம்ப்பா முறை பையனை வர சொல்லுங்க”
“தந்தனா தந்தனா… என் வந்தனா வந்தனா…
உன் மாமன் உன்னைத் தேடி வந்தேனே…
நீ கொஞ்சம் நில்லுமா… நில்லுமா…” கொஞ்சும் குரலில் பாடியபடி வந்தான் அவளின் முறைப்பையன்.
“தமிழு, ஏ புள்ள தமிழு” அழைத்தபடி மாலையுடன் அவள் முன் வந்து நின்றான் ஏழு வயது கதிர்.
அவளை ஏற இறங்க பார்த்தவன் “என்ன புள்ள இம்புட்டு பெருசா வளர்ந்துட்ட” குறைபட்டுக் கொண்டான்.
“டேய் பேசாம மாலையைப் போடுடா” அப்பத்தா கூற,
“நீ சும்மா இரு அப்பத்தா” அவரை அடக்கியவன் “ஏ புள்ள” என மீண்டும் அவளை அழைத்தான்.
மென்னகையுடன் தலையைக் குனிந்துக் கொண்டாள் தமிழ்.
“அட தமிழுக்கு வெட்கத்தைப் பாரேன்” குதூகலமானான் கதிர்.
“டேய் மாலையைப் போடுடா”
“ம்ம்… நான் பெரிய மனுஷன் ஆகுறதுக்குள்ள, நீ ஆகிட்ட, சரி இருக்கட்டும், ஆனா ஒன்னு நான் வளர்ந்த பிறகுத்தேன் நீ என்னைக் கட்டிக்கோணும், அதுக்கு முன்ன மாமனை கட்ட ஆசைபடக்கூடாது” கால் பெரு விரலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டே கதிர் கூறினான்.
அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினாள் தமிழ்.
“நீ இப்படி என்னைக் கொட்டி கொட்டியே வளரவிடாம பண்ணிட்ட” குறைபட்டுக் கொண்டவன், அவளுக்கு மாலையைப் போட்டு “ஏ புள்ள நீ ரொம்ப அழகா இருக்க” நகத்தைக் கடித்தபடி நின்றானவன்.
அதே நேரம் அவள் கண்களோ ஆவலாக அழகைத் தேடியது. ‘தான் எத்தனை அழகாக இருக்கிறேன்’ என்று அவன் வாயால் கேட்க ஆசைக் கொண்டது அவளின் காதல் மனது.
“ஏத்தா நல்லா பாத்துக்கோ, இவனைத் தான் நீ கட்டிக்கோணும், உன் மாமன் முகத்தைத் தான் முதல் முதலா பார்த்திருக்க”
சுற்றி இருந்தவர்கள் கிண்டலடிக்க,
முதல் முறையாக அழகு முகத்தைப் பார்த்தது அவள் நினைவில் வந்து அவள் முகத்தைச் செம்மையடையச் செய்தது.
மாமன் மாலையைப் போட்டு முடித்ததும் அவளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றனர்.
நீள பாய் விரித்து நடுவே ஒரு சேரில் தமிழ் அமர்ந்திருந்தாள். அவளை சுற்றி அவ்வூர் பெண்கள். அவளுக்கு கொண்டு வந்த சீனியை கொடுக்க, ஒவ்வொருத்தருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம் கொடுக்கப்பட்டது.
சிறு பெண்களுக்கு என தனியாக பச்சை மாவை(கருப்பட்டி மாவு) கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் கூடவே, பள்ளியில் படிக்கும் பெண்கள் இருவர் அவளுக்கு சில்வர் தட்டை கொண்டுக் கொடுத்தனர்.
தோழி யாரேனும் வயசுக்கு வந்தாலோ, இல்லை கல்யாணமோ என்றால் அவர்களுக்கு இப்படி தட்டு கொடுப்பது ஒரு சிறு வழக்கம்.
ஒவ்வொருத்தராகச் சந்தனம் பூசி, சீனி கொடுக்க, தமிழ் மனது அலைப்புற ஆரம்பித்தது. கண்களோ நாலா புறமும் அலைபாய்ந்து அழகை தேடியது.
செல்வி, அன்பு அவள் வயதுடைய அவள் இன குழந்தைகள் நெருக்கியடித்து நின்று தமிழைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாருக்கும் குடுத்து முடித்து அன்பு இன குழந்தைகளுக்கும் உருண்டை கொடுக்க, சிரிப்புடன் வாங்கிக் கொண்டனர்.
வாங்கி கையில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தாள் அன்பு.
“என்ன அன்பு, நீ திங்கலியா?”
“சின்னம்மா இது அண்ணனுக்கு” மெதுவாக உரைத்தாள் அவள்.
“இதை நீ சாப்டு, அப்புறமா குடிசைக்கு வா, நா தாரேன்”
தலையாட்டியபடியே கையில் இருந்ததை தின்ன ஆரம்பித்தாள்.
தமிழ், குடிசைக்குள் அழைத்து வரப்பட, அங்கிருந்த குழந்தைகளோ அவளுக்கு பூசி வைத்திருந்த சந்தனத்தை எடுத்து தங்கள் மேல் பூசி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அத்தனை ஆட்டம், பாட்டம் என கோலாகலாக தமிழ் வீடிருந்தது.
குடிசையில் அமர வைக்கப்பட்ட, தமிழ் முன் உலக்கை, சாவி, காலில் ஒரு இரும்பு வளவி என போட தன் தாயை பயங்கரமாக முறைத்தாள் அவள்.
பின்கட்டில் கறி விருந்து நடந்து கொண்டிருக்க, அழகு அங்கிருந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அழகு சத்தம் இவள் அமர்ந்திருந்த குடிசை அருகில் கேட்கவும்,
இத்தனை நேரம் இருந்த கோபம் எல்லாம் போய், முகம் சிறு வெட்கத்தை சுமந்திருந்தது. தன் அலங்காரத்தை அவனிடம் காட்ட ஆசைக் கொண்டது மனம்.
தன் முன்னால் இருந்த கண்ணாடியை கையில் எடுத்துக் கொண்டாள்.
கண்ணாடியை லைட் நேராக வைத்து, குடிசையில் இருந்த சிறு ஜன்னல் அமைப்பில் இருந்த தென்னம் மட்டை வைத்து அடைத்திருந்த இடைவெளியாக அவன் மேல் அடித்தாள்.
‘என்னடா இது அம்மணி குடிசையில் இருந்து வெளிச்சம் வருது, இப்படி இடை இருந்தா வெட்டி பசங்க வருவான்களே’ எண்ணியவன் இன்னொரு தட்டியை எடுத்துக் கொண்டு குடிசை நோக்கி சென்றான்.
‘அடேய் அறிவு கெட்டவனே? நீ ஏன்டா இவ்ளோ நல்லவனா இருந்து தொலைக்க’ மானசீகமாகத் தலையில் அடித்தவள், அவன் குடிசை பக்கம் வரவும் அவள் முகம் கண்ணாடியில் தெரிவது போல் பார்க்க வெளியில் நின்ற அழகு ஒரு நொடி அவள் முகத்தை ரசனையாகப் பார்த்தவன், எதுவும் அறியாதது போல் அந்த இடைவெளியை ஓலை வைத்து இறுக்கக் கட்டி அடைத்துச் சென்றான்.
செல்லும் அவனையே சிறு ஓட்டை வழியாகப் பார்த்திருந்தாள் தமிழ். அன்றைய நொடி இன்னும் அவள் மனதில் அவன் உயர்ந்தான்.