mu-10

mu-10

15

வன்மமான புன்னகை

எந்த வித அலங்கரிப்பும் இல்லாத, கண்ணீரால் நனைந்து பொலிவிழந்த முகம்… அவளின் தவிப்பை சொல்லும் வறண்ட இதழ்கள்… வளைந்த புருவங்களுக்கு கீழே அழுது சிவந்திருந்த கரு விழிகள்… அவன் இதயத்தைத் தாக்கிய கூர்மையான வேல் போன்ற பொட்டு… இப்போது முழு சந்திரனைப் பிரதிபலிக்கும் வட்ட நிற பொட்டாக மாறி இருக்க… அந்த மாற்றத்தோடு அவள் நெற்றி வகிட்டில் இருந்த திலகம் அவள் வேறொருவனுக்கு உரிமையானவள் என்பதை அழுத்தமாய் அவனுக்கு உரைக்க அவன் மனமோ அதை ஏற்க மறுத்தது.

 சோகம் படர்ந்திருந்த அவளின் வதனம் அவனை இன்றுமே ஈர்ப்பதற்கான காரணத்தை அவனால் அறிந்து கொள்ளவே முடியவில்லை. அன்று முதல்முறை அவளின் பிம்பத்தைப் பார்த்து எவ்வாறு ரசித்தானோ இன்றுமே அத்தகைய விதம் அவனின் விழிகள் அவளின் மீது லயித்துவிட அவள் மீதான கோபமெல்லாம் நொடியில் காணாமல் போய், அவனுக்குள் அவள் மீதிருந்த காதல் மீண்டுமே தலைதூக்கியது.

 அவன் தன் நிலை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ ஒரே ஒரு முறை கூட அவனை நிமிர்ந்து நோக்கவேயில்லை. அந்த நிராகரிப்பு மீண்டும் அவன் கோபத்தைத் தலைதூக்கச் செய்ய, அவன் தன் குரலை உயர்த்தி,

“நாம் சந்தித்துக் கொள்ளவே வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது எதற்கு என்னைச் சந்திக்க வந்தாய் அக்னீஸ்வரி?!” என்று அவளைப் பார்த்தவாறு அழுத்தமாய் வினவினான் ருத்ரதேவன்.

அவனின் அந்தக் கேள்வி அக்னீஸ்வரியை வேதனைப்படுத்திய போதும் வேறு வழியின்றி அவனை நிமிர்ந்து நோக்கினாள். முன்னே பார்த்த அதே கம்பீரமும் தோற்றமும் கொஞ்சம் கூட மாறுபடவேயில்லை, எனினும் இம்முறை அவனின் மீது எந்தவித ஈர்ப்போ சலனமோ அவளுக்குள் ஏற்படவில்லை.

“தாங்கள்தானே என் கணவரை ராஜதுரோகம் செய்தார்… எனப் பழி சுமத்தி கைது செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தது?!” என்று கோபத்தோடு கேட்க ,

அவன் ஏளனப் புன்னகையோடு, “ஓ!… அந்த வைத்தியன்தான் உன் கணவனா?!” என்று அவன் தெரியாதது போல் வினவினான்.

அக்னீஸ்வரிக்கு அவன் உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறானா என்பதை நம்ப முடியவில்லை. அவனின் இதழில் தவழ்ந்த வன்மமான புன்னகையைக் கவனித்தாள். அவளின் மனம் லேசாய் கலவரப்பட, மீண்டும் ருத்ரதேவன் அவளின் தவிப்பைக் கண்டு ரசித்தபடி,

“இப்போது நீ வந்ததன் காரணத்தை நான் புரிந்து கொண்டேன்… உன் கணவரை விடுவிக்கச் சொல்லி என்னிடம் மன்றாட வந்திருக்கிறாய்… சரிதானே?!” என்றான்.

, அந்த வார்த்தைகளைக் கேட்ட அக்னீஸ்வரி சினம் கொண்டு, “என் கணவர் எந்தவித குற்றமும் செய்யாத போது நான் எதற்காக தங்களிடம் மன்றாட வேண்டும்… அவர் மீது தாங்கள் என்ன எண்ணத்தில் இத்தகைய பழியைச் சுமத்தினீர்கள்?!” என்றாள்.

அவளை உற்று நோக்கியவன், “உன் அழகில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும்… உன் அகந்தை மட்டும் இன்னும் துளி கூட மாற்றமடையவே இல்லை அக்னீஸ்வரி” என்று உரைக்க அவள் சந்தேகமாய் அவனை ஏறிட்டாள்.

அப்போது அவன் உதிர்த்த வன்மமான புன்னகை அவளுக்கு நெருப்பின் மீது நிற்பதைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்தது.

அதேநேரம் அவன்  தன் மீதுள்ள துவேஷத்தைக் காட்டவே இவ்விதம் நடந்து கொள்கிறான் என்றும், தன்னை பழி தீர்த்துக் கொள்ளவே தன் கணவரின் மீது பொய்யான பழியைச் சுமத்தினான் என்பதையும் அவனின் பார்வை அவளுக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்த அவள் அதிர்ந்து நின்றாள்.

ருத்ரதேவன் வஞ்சமான புன்னகை இழையோட, “என்ன யோசனை அக்னீஸ்வரி… இன்னுமா நான் ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறேன் என்று உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்று கேட்டான்.

“நன்றாய் புரிந்தது… என்னை பழி தீர்த்துக் கொள்ள தாங்கள் என் கணவன் மீது இத்தகைய மோசமான பழியை சுமத்தினீர்கள்… இல்லையா?!” என்று சொல்லித் தான் செய்த தவறால் இத்தனை பெரிய விளைவுகள் ஏற்பட்டதே என்று குற்றவுணர்வால் தவித்தாள்.

“ஆம்! உன்னை பழி தீர்த்துக் கொள்ளவே அவ்விதம் செய்தேன்… என்று நீ எனக்கு சூட்டப்பட வேண்டிய மாலையை இன்னொருவனுக்கு சூடிவிட்டு, அந்த உறவை காப்பாற்றிக் கொள்ள என் முகத்தைக் கூட பார்க்க மாட்டேன் என்று சொல்லி நிராகரித்துவிட்டுப் போனாயோ… அன்று முடிவெடுத்தேன்… உன் விதியை நான் தீர்மானிக்க வேண்டும் என்று” என தன் மனக் குமுறலை நிறுத்தாமல் கொட்டித் தீர்த்தான்.

“உங்கள் கோபம் என்மீதுதானே… அதை என்னிடம் காண்பியுங்கள்… தவறிழைத்த என்னை தண்டியுங்கள்… அவரை தயவு கூர்ந்து விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினாள்.

“சற்று முன்பு நான் மன்றாட மாட்டேன் என்று கர்வமாய் உரைத்தாய்… இப்போது எங்கே சென்றது… உன் கர்வம்?!” என்றான்.

“என் கணவரின் உயிரை விட என் கர்வம் ஒன்றும் எனக்குப் பெரிதல்ல… அவர் எல்லோருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் கொண்டவர்… மனதாலும் கூட  யாருக்கும் தீங்கிழைக்க நினைக்க மாட்டார்.

என் மீது கொண்ட கோபத்தைத் தீர்த்துக் கொள்ள தாங்கள் அவரை தண்டிக்க நினைப்பது நியாயமில்லை… என்ன தண்டனையாக இருந்தாலும் அதை எனக்கு வழங்குங்கள்… அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று தன் வலியை எப்படியாவது அவனுக்குப்  புரிய வைத்துவிட முடியாதா என்று ஏக்கத்தோடு உரைத்தாள்.

ருத்ரதேவனுக்கோ அவள் தன் கணவனைக் குறித்து சொன்ன புகழுரைகள் அவனுக்குள் இருக்கும் கோபத்தை மேலும் மேலும் தூண்டிவிட குரோதத்தோடு,

“உன் கணவனின் உயிரைப் பறிப்பதே நான் உனக்களிக்கும் சரியான தண்டனை அக்னீஸ்வரி… உன் அருமையான கணவனை நீ இழந்தால்தான்… என்னை வசீகரித்து… என்னை பேதலிக்க வைத்த உன் அழகு அதன் மதிப்பிழந்து போகும்… துணைவனின்றி உன் இளமை எல்லாம் கரைந்து போகும்… தனிமையில் நீ தினம் தினம் வாடித் துன்புறவாய்… அப்போதுதான் என் வேதனையையும் தவிப்பையும் நீ உணர்வாய்” என்று உரைக்க அக்னீஸ்வரி அவனின் வக்கிரமான எண்ணத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

அந்தச் சமயத்தில் முழுவதுமாய் அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. நிலவில்லாத அந்த இருளில், அவ்விடத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் தம் நெருப்பு ஜ்வாலைகளால் வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

ருத்ரதேவனின் அகத்தில் இருந்த குரூர எண்ணம் மொத்தமாய் அவன் முகத்தில் வெளிப்பட அந்த தீ பந்தங்களின் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் காட்சியளித்தான்.

மேலும் ருத்ரதேவன் தன் மனதின் வன்மமான எண்ணங்களை தொடர்ந்தபடி, “உன் கணவன் என்றோ இறந்து… நீ கைம்பெண்ணாய் ஆகியிருக்க வேண்டியவள்… உன் நேரம் நன்றாயிருந்ததால்… ஒரே மாதிரியான முகத் தோற்றம் கொண்ட உன் கணவனின் தமையன் இறந்துவிட்டான்!” என்றுரைக்க அக்னீஸ்வரியின் கண்கள் அகலவிரிந்தது.

தன் அத்தானின் மரணம் விபத்து என்றல்லவா அவள் இது நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனின் மரணம் தன் மீது கொண்ட வஞ்சத்தால் நிகழ்த்தப்பட்டது என்று உணர்ந்த மறுகணம் அவள் உடைந்து நொறுங்கினாள்.

 வார்த்தைகள் வராமல் அவளுக்கு மூச்சு முட்ட… ஆற்றாமையாலும் குற்றவுணர்வாலும் அவள் விழிகள் கண்ணீர் பிரவாகமாய் மாறியது.  இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து கட்டுப்படுத்த முடியாமல் அவள் அந்த இடத்திலேயே கதறி அழுதாள்.

ருத்ரதேவன் அவள் அப்படி தேற்றமுடியாமல் அழுவதைக் கொஞ்சம் இரக்கத்தோடு பார்த்து, “நீ மட்டும் அந்த வைத்தியனை மணமுடிக்காமல் இருந்திருந்தால் உனக்கு இப்படி எல்லாம் நேர்ந்திருக்காது அக்னீஸ்வரி… என்னை மணமுடித்து நீ இந்த நாட்டின் சாம்ராஜ்யத்தை ஆளும் அரசியாய் இருந்திருப்பாய்” என்று சொல்ல அவள் கண்ணீர் உறைந்து கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

“நல்ல வேளையாக அப்படி ஒன்று நிகழவில்லை… உன்னைப் போன்றவனை மணப்பது மரணிப்பதற்குச் சமம்… பாம்பு கக்கும் நஞ்சை விட உன் மனதில் உள்ள வஞ்சம் ரொம்பவும் மோசமானது… என் ஒருத்தியின் மீது கொண்ட உன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள இத்தனை கீழ்த்தரமான காரியங்களை செய்திருக்கிறாய்… நான் மட்டும் உன்னை பார்த்திராமல் இருந்திருந்தால்… இப்படி என் அக்கா, அத்தான் என்று யாரையும் இழந்திருக்கமாட்டேன்… என் கணவர் இப்படி சிறையில் கிடந்து துன்பப்பட்டிருக்க மாட்டார்… எங்கள் வாழ்க்கை இன்பகரமானதாக இருந்திருக்கும்… நான் என்னை உண்மையாய் நேசித்த என் கணவரின் காதலை புரிந்து கொண்டிராமல்… அறிவிழந்து உன் மீது போய் காதல் கொண்டேனே… எல்லாமே என் தவறுதான்… என் அறிவீனமான செயலால் ஏற்பட்ட விளைவு… உன் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள நீ இந்தளவுக்கு தரம்தாழ்ந்து போவாய் என நான் ஒருநாளும் எண்ணவில்லை” என்றவள் சீற்றமாய் அவனைச் சாடினாள்.

அவள் தன்னை ஒருமையில் மரியாதையின்றி விளித்ததும், தரம் தாழ்ந்து என்று சொன்ன வார்த்தையும் அவனைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல அவளின் அருகாமையில் வந்தவன்,

“யாரடி தரம் தாழ்ந்து போனது… நானா இல்லை நீயா… காதலிக்க ஒருவன்… கணவனாக உறவு கொள்ள மற்றொருவன்… நீ எல்லாம் பெண் இனத்திற்கே சாபக்கேடு” என்றான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்டு அவள் கோபம் கொள்ளாமல் அலட்சியத்தோடு அவனைப் பார்த்தபடி, “ஒரு அரசை நிர்வகிக்கும் அரசருக்கு நிகரான பதவியில் இருந்து கொண்டு நீ உன் சுயலாபத்திற்காக, உன் வஞ்சமான எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள என் அத்தானை கொன்றிருக்கிறாய்… என் கணவன் மீது பொய்யான பழியைச் சுமத்தி சிறையில் அடைத்திருக்கிறாய்… அதுமட்டுமின்றி நான் வேறொருவனின் மனையாளாகிவிட்ட போதும் என்னிடம் இப்படி அறிவிழந்து பேசிக் கொண்டிருக்கிறாய்… நீ இளவரசனாக இருக்க மட்டும் இல்லை… ஆண்மகனாக இருக்கவே தகுதியற்றவன்” என்று அவள் பார்வையில் அனல் தெறிக்க உரைக்க,

 ருத்ரதேவன் அவள் வார்த்தைகளின் வீரியத்தைத் தாங்காமல், “வேண்டாம் அக்னீஸ்வரி… நீ பெண்ணென்று பார்க்கிறேன்… இல்லையெனில்” என்று தன் கோபத்தைக் கட்டுபடுத்த முயன்றவனிடம்,

“இல்லையெனில்… என்ன… என் சிரத்தை கொய்துவிடுவாயா… ஆகட்டும் செய்… இப்போது உன் வீரத்திற்கும் வாளிற்கும் களங்கம் ஏற்படாது… ஏனெனில் நீயே முழுவதுமாய் களங்கப்பட்டுதான் நிற்கிறாய்” என்றாள்.

ருத்ரதேவன் அவளை வெறுப்போடு நோக்கி, “நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்து விட்டாய் போலும்”என்றான்.

“நீ இந்நாட்டின் இளவரசர் என்று மட்டும் சொல்லிக் கொள்ளாதே… அது இந்த ஆரை நாட்டிற்கே பெரும் அவப்பெயர்… என் கணவரின் உயிருக்காக உன்னைப் போன்ற ஒருவனிடம் இறங்கிப் போக என் தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது… ஆகட்டும்… நடப்பது எதுவாயினும் அது நடக்கட்டும்… அந்த இறைவனும் நிச்சயம் எனக்கு இரக்கம் காட்டமாட்டான்… நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பும் காதலும் உண்மையெனில் மீண்டும் எங்கள் உறவை அது காப்பாற்றிப் பிணைத்து வைக்கட்டும்” என்று உரைத்துவிட்டு அக்னீஸ்வரி அங்கிருந்து கோபத்தோடு அகன்றாள்.

ஒரு நாள் அவள் சொன்னது நிகழும். ஆனால் அதற்காக அவர்கள் இருவரும் காலத்தின் சுழற்சியில் கணக்கிடமுடியாத நீண்டதொரு பெரும் பிரிவைச் சந்திக்க நேரிடும்.

அக்னீஸ்வரி அரண்மனையை விட்டு வெளியேறி நடந்து செல்ல அவள் மனம் வேதனையில் ஆழ்ந்து போனது. அன்று விஷ்ணுவர்தன் கடைசியாய் சந்தித்த போது ருற்றதேவனைக் குறித்து அவன் எழுப்பிய கேள்வியின் காரணம் இப்போது அவளுக்குப் புரிந்தது. அவன் அன்று சொல்லிச் சென்ற வார்த்தைகள் எத்தனை ஆழமான அர்த்தம் பொதிந்தவை என்பதை இன்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

‘என்ன நேரினும் துணிவை மட்டும் விட்டு விடாதே அக்னீஸ்வரி’ என்று தனக்குத்தானே பலமுறை உறைத்துக் கொண்ட போதும் அவளின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டே இருந்தது. தன் கணவனைப் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் அவள் மனதில் ஆட்கொண்ட போது அன்று அவன் விழியில் தெரிந்த தவிப்பின் காரணம் இப்போது விளங்கிற்று.

கண்கள் உணராத அவனின் தூய்மையான காதலை இப்போது வெகு தாமதமாய் அவள் மனம் உணர்ந்து கொண்டது. மீண்டும் அது எப்போது விழிகளின் வழியே சங்கமிக்கும் என்பதற்கான விடை தெரியாத கேள்வியோடு அவள் விரக்தியே ரூபமாய் நடந்து சென்றாள்.

*****

அக்னீஸ்வரி அவ்விதம் பேசிவிட்டுச் சென்ற பின் ருத்ரதேவனின் கோபம் எல்லையை மீற அவன் தனக்குத்தானே,

‘இத்தனை அகந்தையாடி உனக்கு… ஆகட்டும்… என் வாளாலேயே உன் கணவனின் சிரத்தைக் கொய்தால்தான் என் கோபமும் தீரும்… உன் அகந்தையும் அடியோடு அழியும்’ என்று சொல்லிக் குரோதத்தோடு கோட்டைச் சிறையை நோக்கி வேகமாய் நடந்தான்.

16

இரு துருவங்கள்

ருத்ரதேவன் தன் மனதில் எந்தளவுக்குக் கோபத்தையும் வஞ்சத்தையும் சுமந்து கொண்டு அந்தப் பயங்கரமான கோட்டைச் சிறைக்குள் பிரவேசித்தான் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

உள்ளே நுழையக் காவலர்கள் வரிசையாக கைகளில் ஆயுதம் ஏந்தியபடி நின்றிருந்தனர். வழியே நெருப்புப் பந்தங்கள் அனலைக் கக்கியபடி வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருக்க,

 ருத்ரதேவன் அத்தகைய கோபத்தோடு உள்ளே நுழைவதைப் பார்த்த வீரர்கள் எல்லோருமே கலவரம் கொண்டனர். இந்தளவுக்குக் கோபத்தோடு இதுவரை யாரும் அவனைக் கண்டதே இல்லை. ஆதலால் எல்லோருக்குமே அவனின் சினம் தாங்கிய முகத் தோற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சிறைக்குள் இருந்த விஷ்ணுவர்தன் தன் கம்பீரம் குறையாமல் எத்தகைய ஆபத்து வந்தாலும் அதைத் துணிவோடு எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவன் மனம் ஓயாமல் அக்னீஸ்வரியைப் பற்றியே நினைவு கூர்ந்திருக்க, அதனால் ஏற்பட்ட ஏக்கத்தின் தாக்கம் அவன் முகத்தில் வேதனையைப் படரச் செய்தது. ஏன் இத்தனை நாள் அவளை தான் உறவு கொள்ளாமல் ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று உள்ளூரக் குற்றவுணர்வில் பரிதவித்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயம் ஒரு காவலாளி அவனிருக்கும் சிறையின் கதவைத் திறந்தான்.  அங்கே வெளிச்சம் மங்கி இருந்தபடியால் அவனால் எதையும் கூர்மையாக நோக்க முடியவில்லை. ஆனால் அவன் மனம் நடக்கப் போவதை உணர்ந்து கொள்ள, நடப்பது எதுவாயினும் தான் அச்சம் கொள்ளக் கூடாது என்று அழுத்தமாய் எண்ணிக் கொண்டான்.

விஷ்ணுவர்தனின் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட அந்தக் காவலாளி அவனை சிறைக்கதவின் வழியே வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். ருத்ரதேவனை எதிர்க் கொள்ளப் போகிறோம் என்பதை விஷ்ணுவர்தன் தன் புத்திக்கூர்மையால் யூகித்தான்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரிந்தவர் எனினும் அவர்கள்  நேர்கொண்டு சந்திப்பது இதுதான் முதல்முறை. இருவரும் முற்றிலும் மாறுப்பட்ட குணங்கள் கொண்ட இரு துருவங்கள்.

ருத்ரதேவன் வேகம் என்றால் விஷ்ணுவர்தன் விவேகம். அவன் கர்வத்தின் உச்சத்தில் நிற்க இவன் பணிவின் ரூபமாயிருந்தான். அவன் கோபத்தில் மூழ்கியிருக்க இவன் எதையும் பொறுமையோடு எதிர்கொண்டான். இப்படி எல்லாவற்றிலும் வெவ்வேறு குணங்களோடு இருக்கும் இவர்கள் புத்திக்கூர்மையிலும் பலத்திலும் சரிசமமானவர்களாய் இருக்க அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறாய் இருந்தது. ஆனால் ருத்ரதேவனின் பதவியும் அவன் இருக்கும் இடமும் அவன் கையை மேலோங்கச் செய்திருந்தது.

அந்தக் காவலாளி விஷ்ணுவர்தனை ருத்ரதேவன் முன்னிலையில் அழைத்து வந்து நிறுத்த தீப்பந்தங்களால் ஆன வெளிச்சம் அந்த இடத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது. ருத்ரதேவனின் முகம் கோபத்தில் கனலேறியிருந்தது.

ருத்ரதேவன் மீது அக்னீஸ்வரி வீசிய கோபமான வார்த்தைகளும் அவள் விஷ்ணுவர்தனைப் பற்றி பேசும் போது அவள் முகத்தில் வெளிப்பட்டக் காதலும், ருத்ரதேவனுக்கு விஷ்ணுவர்தன் மீது அதீத வெறுப்பை வளர்த்துவிட்டது.

இந்த எண்ணத்தோடு ருத்ரதேவன் விஷ்ணுவர்தனை நோக்க, அவன் முகமோ சிறு சலனமில்லாத தெளிந்த ஓடைநீராய் இயல்பான புன்னகையைத் தாங்கி நின்றது. அவன் பார்வை அமைதியைப் பிரதிபலித்தது. அந்த முகம் ஆதுர சாலை தலைமை வைத்தியர் சுவாமிநாதனை முன்னிறுத்த, ருத்ரதேவனின் எண்ணம் மாறி சற்றுத் தயங்கியபடி நின்றான்.

ருத்ரதேவனின் ஆழ் மனம்,  ‘நீ செய்ய நினைப்பது பெரும் குற்றம்’ என்று எச்சரித்தது. அவன் தன் உரையிலிருந்த வாளின் மீதிருந்த கையை யோசனையோடு எடுக்க,

விஷ்ணுவர்தன் புன்னகை ததும்பிய முகத்தோடு, “என்ன ருத்ரதேவா… நீ செய்வது தவறு என்று உன் மனம் எச்சரிக்கிறதோ?!” என்றான்.

இவ்விதம் அவன் உரைத்ததும் ருத்ரதேவன் அதிர்ந்தபடி பார்த்தான். அப்போது அருகில் இருந்த வீரன் கோபம் கொண்டு, “இளவரசர் என்ற மரியாதை இல்லாமல்” என்று தன் வாளை உறையில் இருந்து எடுத்தான்.

உடனடியாக ருத்ரதேவன் தலையசைத்துத் தன் கண்பார்வையாலேயே அந்த வீரனை மிரட்டி விலகிப் போகச் சொன்னான். சூழ்ந்திருந்த வீரர்களையும் அங்கிருந்து செல்லச் சொல்ல, விஷ்ணுவர்தன் மீண்டும் இயல்பான புன்னகையோடு, “ஏன் எல்லோரையும் செல்லச் சொன்னாய்… உன் வஞ்சமான எண்ணம் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற அச்சமோ?” என்று கேள்வி எழுப்பினான்.

“பரவாயில்லையே… வைத்தியர்கள் உடலில் உள்ள நோய்களைத்தான் கண்டறிவார்கள்… ஆனால் நீ மனதில் உள்ள எண்ணங்களைக் கூட கண்டறிந்து கொள்கிறாய்… திறமைசாலிதான்” என்று ருத்ரதேவன் விஷ்ணுவர்தனைப் பாராட்டினான்.

“உன் எண்ணத்தை… நான் இன்று கண்டறியவில்லை… எப்போது நீ என் தமையனைக் கொன்றாயோ… அன்றே கண்டறிந்து கொண்டேன்” என்று  கோபத்தை முன்னிறுத்தி விஷ்ணுவர்தன் உரைக்க,

“நான்… உன் தமையனைக் கொன்றேனா!” என்று ருத்ரதேவன் அலட்சியமாய் கேட்க,

“பின் வேறு யார் கொன்றது… எங்களின் ஒரே மாதிரியான முக ஒற்றுமையால் உன் வஞ்சக எண்ணத்திற்கு என் தமையன் பலியானார்… அவரைக்  காட்டு மிருகங்கள் கொல்லவில்லை என்பதை நான் முன்னமே அறிந்து கொண்டேன்… நானும் என் தமையனும் பார்க்காத காட்டு விலங்குகளா?

அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இருவருக்குமே நன்காகத் தெரியும்… அது மட்டுமின்றி… நீலமலை காடு எங்களுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட ஒன்று… அங்கே இப்படி ஒரு விபத்து என் தமையனுக்கு நேர்ந்தது எனில் ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை நான் யூகித்தேன்… என்னைக் காணாமல் தேடி வந்த என் தமையனை நான் என்று எண்ணி மனித மிருகங்கள் தன் பழியைத் தீர்த்து கொள்ள சூழ்ந்து கொன்ற பின்னரே… காட்டு விலங்குகள் தம் பசியை தீர்த்துக் கொள்ள எத்தனித்திருக்க வேண்டும்” என்றான்.

ருத்ரதேவன் வியப்புக் குறியோடு, “உன் புத்திக்கூர்மை அபாரம் விஷ்ணுவர்தா… இதே புத்திக்கூர்மை நீ அக்னீஸ்வரியை மணம் முடிக்கும் போது எங்கே போயிற்று… அவள் மனதின் எண்ணத்தை நீ கண்டறிய மறந்தாயா… இல்லை தெரிந்து கொண்டே அவள் கழுத்தில் மாலையிட்டாயா?!” என்று ருத்ரதேவன் உக்கிரமான பார்வையால் தன் சினத்தை வெளிப்படுத்தினான்.

இப்போது விஷ்ணுவர்தன் சிரித்தபடி, “நான்தான் அக்னீஸ்வரிக்கு மணவாளனாக வேண்டும் என்பதும்… அவளுக்கு என் கரத்தால் மாலை சூடப்பட வேண்டும் என்பதும் விதிக்கப்பட்ட ஒன்று… இதில் யார் எண்ணத்தைக் கண்டறிந்து என்ன நேரப் போகிறது?” என்றான்.

ருத்ர தேவனுக்கு அந்த வார்த்தைகள் வெறி கொள்ளச் செய்ய,

“அப்படியெனில் உன் மரணமும் என் கரத்தாலேயே நிகழ வேண்டும் என்பதும் விதிக்கப்பட்ட ஒன்று” என்று தன் வாளை வெளியில் எடுக்க அதன் மினுமினுப்பு கண்களைப் பறித்தது.

விஷ்ணுவர்தன் எதற்கும் தயாராக நின்றிருப்பதால் அவன் மாறாத புன்னகையோடு, “நான் மரணிக்கப் போவதை எண்ணி சிறிதும் அச்சம் கொள்ளவில்லை… ஆனால் இந்த ஆரை நாட்டு மக்கள்… உன்னைப் போன்ற ஒருவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பதை எண்ணியே நான் அச்சம் கொள்கிறேன்” என்றான்.

ருத்ரதேவன் கண்களில் வெறியோடு, “என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்களுக்கு நான் எந்தத் தீங்கும் இழைக்க மாட்டேன்… அதே நேரத்தில் என் நம்பிக்கையை உடைத்து என்னை வஞ்சித்தவர்களை நான் நிம்மதியாக வாழ விடமாட்டேன்” என்று சொல்ல இருவரின் கண்களிலும் வந்து நின்றது அக்னீஸ்வரியின் முகம்தான்.

விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரிக்கு இவனால் மேலும் துன்பங்கள் வருமோ என்ற கவலை ஏற்பட, “அக்னீஸ்வரி கள்ளங்கபடமில்லாதவள்… யாரையும் வஞ்சிக்கவோ ஏமாற்றவோ தெரியாதவள்… அவள் சூழ்நிலை அவ்விதம் அமைந்துவிட்டது

 கண்ணைக் கவரும் அழகிய மலர்கள்… தான் சென்று சேர்கின்ற இடம் குறித்து ஆசை மட்டும் கொள்ளலாம்… ஆனால் அவை இறைவனின் தோளை ஆலங்கரிக்கப் பட வேண்டுமா… இல்லை காய்ந்து சருகாகிவிட வேண்டுமா என்பதை எல்லாம் தீர்மானிக்கும் உரிமை அந்த மலரிடம் இல்லை

கிட்டத்தட்ட பெண்களின்  நிலையும் அதுதான்… அப்படியிருக்க என் மனையாள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவளுமே அவள் விரும்பிய இடத்தை அடைய முடியாமல் விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள நேரிட்டது… இதில் நீ அவள் மீது வஞ்சம் கொள்ளவோ பழி தீர்க்க நினைப்பதோ நியாயமில்லை” என்றான்.

ருத்ரதேவன் அவன் பதிலைக் கேட்டு அமைதியான முகப்பாவனையோடு, “அந்த கள்ளங்கபடமில்லாதவள் சற்று முன்பு என்னை மதிக்காமல் என்னென்ன பேசி விட்டாள் என்று தெரியுமா… அவள் பெண்ணாக இல்லையெனில் அவள் சிரம் துண்டாயிருக்கும்… இப்போது அவளால்தான்… நான் சினம் கொண்டு உன்னைக் கொல்லத் துடிக்கின்றேன்… உன் மீது அவளுக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால் என்னிடம் மன்றாடி உன் உயிரை மீட்டிருப்பாள்… இப்படி என் சினத்தைத் தூண்டிவிடுவாளா… சரியான அகந்தை கொண்டவள்” என்றான்.

விஷ்ணுவர்தனின் அமைதியும் பொறுமையும் கரைந்து போக அவன் கோபத்தோடு, “ருத்ரதேவா!” என்று குரலையுயர்த்தி அவன் எதிர்பாராத போது அவனைக் கீழேத் தள்ளிவிட ருத்ரதேவனின் வாள் தரையில் வீழ்ந்து சத்தம் எழுப்பியது.

அந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி விஷ்ணுவர்தன் தன் சங்கிலி பிணைத்த கரங்களால் ருத்ரதேவன் கழுத்தில் இறுக்கியபடி, “என் தமையனை கொன்றதற்கே உன் மீது நான் அளவில்லா கோபத்தைத் தேக்கி வைத்திருக்க… நீ மேலும் மேலும் அக்னீஸ்வரியின் மீது இத்தனை துவேஷம் கொண்டிருப்பாய் எனில் உன்னை உயிருடன் விடக் கூடாது” என்று வெறியோடு சொல்ல அதற்குள் ருத்ரதேவன் தன் கரங்களால் சங்கிலியை பிடித்து இழுத்து விஷ்ணுவர்தனைக் கீழேத் தள்ளிவிட்டு சுதாரித்தபடி எழுந்து நின்று கொண்டான்.

ருத்ரதேவனின் வாள் கீழே வீழ்ந்து கிடக்க அதை விஷ்ணுவர்தன் எடுப்பதற்குள் அதை ருத்ரதேவன் எடுத்துக் கொண்டான். விதி இப்போது ருத்ரதேவனுக்கு சாதகமாய் நின்றது.

“என்னைக் கொல்ல முயிற்சி செய்கிறாயா விஷ்ணுவர்தா… அது இப்பிறவியில் நடவாது… அடுத்த பிறவியில் வேண்டுமானாலும் முயற்சித்துப் பார்… அப்போதும் உன்னால் முடியாது” என்று அழுத்தமாய் சொல்லியபடி அவனால் இறுகப்பட்ட தன் கழுத்தை சரி செய்துகொண்டு உக்கிரமாய் சிரித்தான்.

“மரணம் என்பது முடிவல்ல… என் மனதில் உன் மீது நான் கொண்ட கோபம் நான் மரணித்தாலும் மாறாது” என்று விஷ்ணுவர்தன் ஆக்ரோஷமாய் உரைக்க,

“என்னைக் கொல்ல மீண்டும் பிறவி எடுத்து வருவேன் என்கிறாயா” என்று சிரித்தபடிக் கேட்டான் ருத்ரதேவன் .

விஷ்ணுவர்தனின் மனம் ஏனோ சஞ்சலப்பட மன எண்ணங்களை வார்த்தைகளாகக் கொட்டினான்.

 “ஆம்! அப்படி ஒன்று நிகழ வேண்டும்… நீ எத்தகைய இடத்தில் இருந்தாலும் அன்று உன் விதியை நான் முடிக்க வேண்டும்… ஈர் உடல் ஓர் உயிர் என நானும் என் தமையனும் ஓர் தாய் கருவறையில் மீண்டும் ஒன்றாய் சஞ்சரித்து ஜனிக்க வேண்டும்… மீண்டும் அக்னீஸ்வரியின் மீது காதல் கொண்டு அவளையே  என் மனையாளாய்” என்று அவன் இறுதியான ஆசைகளைச் சொல்லி முடிக்கும் முன்னரே ருத்ரதேவன் தன் வாளைக் கோபத்தோடு வீசி அவன் சிரத்தைத் துண்டாக்கினான்.

ருத்ரதேவன் எண்ணம் ஈடேறிவிட அவன் பயங்கரமாய் நகைத்தபடி  துண்டான சிரத்தைப் பார்த்து, “என்னைக் கொல்வேன் என்று நீ சொன்னதைக் கூட நான் மன்னிப்பேன்… ஆனால் இன்னொரு பிறவி எடுத்து வந்து மீண்டும் அக்னீஸ்வரியை மணந்து கொள்வேன் என்று சொன்னாயே… அது மன்னிக்க முடியாத குற்றம்… இப்பிறவியில் அல்ல… எப்பிறவியிலும் அவளுக்கு உரிமையானவன் நான் மட்டும்தான்… வேறு யார் அவள் மீது உரிமை கொண்டாடினாலும் உயிரற்று மடிந்து கிடப்பர்… உன்னைப் போல” என்று உரைத்துவிட்டு தன் குரலை உயர்த்தி, “மாறா!” என்று அழைத்தான். அப்போது ஒரு வீரன் அவன் முன்பு பணிவாக வந்து நின்றான்.

அவன் விஷ்ணுவர்தன் மடிந்து கிடப்பதை அதிர்ச்சியாக நோக்க ருத்ரதேவன் இறுக்கமான முகத்தோடு “விஷ்ணுவர்தன் சிறைக்காவலர்களை வெறி கொண்டு தாக்கினான் என்றும் தப்பிக்க முயற்சி செய்தான் என்றும்… அந்தச் சூழ்நிலையில் வேறுவழியின்றி நீ அவன் சிரத்தை கொய்து விட்டாய் என்றும் அரசரிடம் சொல்லிவிடு… நான் இங்கே வந்தது குறித்து யாருக்கும் தெரியக் கூடாது… இவன் மீதான குற்றத்தை நிரூபிக்க வேற்று நாட்டு பொக்கிஷம் ஆதுர சாலையில் கிடைக்கப்பெற்றதாக வதந்தியைப் பரப்பிவிடு” என்றான்.

“ஆகட்டும் இளவரசே! ஆனால் நம் மக்கள் ஆதுர சாலை மீதும் வைத்தியர் சுவாமிநாதர் மீதும் அதிக மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கின்றனர்…  இந்த வதந்தியை எவ்விதம்” என்று தயங்கினான்.

“திரும்பத் திரும்ப ஒரு பொய் உரைக்கப்படும் போது அது உண்மையின் ரூபமாகவே மாறிவிடும்… நான் சொல்வதை அப்படியே செய் மாறா! மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ருத்ரதேவன் சொல்ல அந்த வீரன் தலையசைத்து ஆமோதித்தான்.

error: Content is protected !!