கொங்ககிரி
ஈஷ்வர்தேவ் உலக மக்களின் அடிப்படைத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவத் துறையை ஆளும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தான்.
மனிதனுக்கு உணவு, கல்வி, பணம், வசதி போன்றவை எல்லாம் கிடைத்துவிட்ட அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்வு என்பது கைக்கெட்டாத கனியாக மாறிக் கொண்டே வந்தது. அதிலும் பல உயிர்க்கொல்லி நோய்கள் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
உலக மக்களின் அந்த அச்சத்தைதான் ஈஷ்வர் தன் ‘ரா’ மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அச்சாணியாக மாற்றிச் செயல்பட வைத்தான் எனலாம். அங்கே உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று கொண்டிருந்தது. அந்த நோயிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் நல்ல எண்ணம் கொண்டு அல்ல. அதற்கு பின்னணியில் ஈஷ்வரின் பெரும் சுயநலம் ஒளிந்து கொண்டிருந்தது. இத்தகைய மருந்துகளைத் தன் கைவசம் வைத்துக் கொண்டு உலகையே தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம்.
உலகில் வெகு சிலரையே பீடித்த டீ7 செல் என்ற பயங்கர கொடிய நோய் பற்றி ரா மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிந்து கொண்டது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி வல்லுநர்கள் தீர்க்கதரிசிகளாக கண்டுகொண்டது என்னவெனில் இன்று இல்லாவிடிலும் விரைவில் அந்தக் கொடிய நோய் உலக மக்கள் பலரைப் பீடித்துக் கணக்கிட முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.
அதன் காரணத்தால் அவர்கள் டீ7 நோயிற்கு கிட்டதிட்ட பல மாதங்கள் சிரமப்பட்டு மருந்து தயாரித்து வெற்றியும் கண்டனர். அத்தகைய பெரிய வெற்றியை உறுதிப்படுத்த போயும் போயும் எலியின் மீதோ அல்லது குரங்கின் மீதோ சோதிப்பதை விட மனிதன் மீதே சோதித்துப் பார்த்தால் என்ன என்ற விபரீத ஆசை அப்போது அவர்களுக்கு உதித்தது.
இந்த எண்ணத்தைச் செயல்படுத்தவே தமிழகத்தில் உள்ள பலராலும் அறியப்படாத கொங்ககிரி கிராமத்தை, உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தன் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த மருந்தினை சோதிக்க தேர்ந்தெடுத்து வெகுசாமர்த்தியமாய் திட்டம் தீட்டினான் ஈஷ்வர்தேவ்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் சிலர் அந்த ஊர்மக்களின் உடல்நலனை சோதிப்பதாக சொல்லி அவர்களில் திடமான ஒரு சிலர் மீது டீ7 வியாதியை உருவாக்கவல்ல கிருமியை அவர்கள் மீது செலுத்தினர். அந்த நோய் தன் கைவரிசையைக் காட்டும் போது நிச்சயம் மலைக்கு கீழே உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு வருவார்கள் என்றும்… அப்படி வரும் பட்சத்தில் அவர்கள் மீது தங்கள் மருந்தை சோதித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தனர்.
ஆனால் ரா ரிசர்ச் சென்டரின் இந்த விபரீத திட்டம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. மாறாய் யாரையும் அந்த நோய் பாதிக்கவில்லை என்ற செய்தியே அவர்கள் செவிக்கெட்டி எல்லோருக்குள்ளும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் உண்டாக்கியது.
இதற்கு பின்னணியில் ஒரு பெரிய மாஸ்டர் மைன்ட் வேலை செய்திருக்கிறது என்பதை மட்டும் ஈஷ்வர்தேவ் கணித்திருந்தான்.
ஈஷ்வரின் கணிப்பு சரிதான். இதற்கு பின்னணியில் ஒருவனின் அசாத்தியமான புத்திக்கூர்மை இருந்தது.
அன்று மட்டும் அந்த கொங்ககிரி மலையின் உச்சியில் அவன் இல்லையென்றால் அந்த மக்களை அந்தக் கொடிய நோய் பீடித்து, அவர்கள் உயிரை பலி வாங்கியிருக்கும்.
அன்று அந்த கொங்ககிரி மலையின் மக்களை ஆபத்பாந்தவனாய் காத்த அவன்… இன்றும் அந்த மலைஉச்சியில் ஏதோ ஒரு முக்கியமான தேடலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான் என்று சொல்ல வேண்டும்.
அவன் யார்… எதைத் தேடுகிறான்… என்று நாமும் கொங்ககிரி மலைக்குச் சென்று பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
கொங்ககிரி மலை உச்சியில் இருந்த அந்தச் சிறிய கிராமத்தில் மக்கள் தொகை வெகுகுறைவாகவே இருந்த து. அந்த மலை உச்சியில் வானவன் தொட முடியாத தூரத்தில் இருந்தும் நம் கைகள் தொட்டு விடும் தூரத்தில் இருப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்த, அந்த அழகிய பௌர்ணமி இரவில் பூமியை முழுவதுமாய் இருளை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெண்மதியோன் கம்பீரமாய் தலைதூக்கி இருந்தான்.
எங்குப் பார்த்தாலும் பசுமை படர்ந்திருக்க அந்தக் காட்சி காண்போரை அதிசயப்படுத்தும் விதமாய் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் உலகமே இயந்திரத்தோடு இணைந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க, கொங்ககிரியில் மட்டும் பசுமை எங்கனம் மாற்றமடையாமல் இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.
அதற்குக் காரணம் பல வஞ்சகர்களின் பார்வை அம்மலையின் மீது இன்னும் படவில்லை. அங்கே இருக்கும் மக்களுக்கு கல்வி முதற்கொண்டு மின்சாரம் உட்பட வேறெந்த அடிப்படை வசதியும் செய்துத் தரப்படவில்லை. அதுமட்டுமின்றி அங்கே இருப்பவர்களுக்கு தொலை தொடர்பு வசதியும் கிடையாது. அந்த மலை மீதிருந்து ஏறுவதற்கோ இறங்குவதற்கோ கூட அவர்கள் காட்டுவழிப் பாதையில் நடந்து செல்லத்தான் வேண்டும். அதே சமயத்தில் அம்மக்கள் இவை எல்லாம் அத்தியாவசிய தேவையென கருதாததனால் அவர்கள் அரசாங்கத்திடம் இது குறித்து முறையிடவில்லை.
அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மலையை விட்டு கீழே இறங்கி தாங்கள் விளைவித்த பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வருவது வழக்கமான ஒன்று.
அந்த ஊரின் சிறப்பம்சமாய் திகழ்வது விளக்கொளியில் பிரிகாசித்துக் கொண்டிருக்கும் அந்த சிறு மலைக்கோவில்தான். அங்கே உக்கிரமான கோலத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும் திரௌபதி அம்மனை தரிசிக்க அவ்வப்போது வெளியூரிலிருந்து சில பக்தர்கள் வருவது வழக்கம். அதைத் தவிர்த்து வெளியாட்கள் யாரும் கொங்ககிரிக்கு வருவதில்லை.
அப்படியிருக்க கொங்ககிரி மலையின் முழு நிலவு வெளிச்சத்தில் ஈஷ்வரின் திட்டத்தை முறியடித்த அந்த அறிவுக்கூர்மையான ஆடவன் அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவனுடன் மும்முரமாய் ஒரு தேடலில் ஆழ்ந்திருந்தான்.
இருளில் அந்த ஆடவனின் முகம் புலப்படாமல் போனாலும் அவன் வியக்க வைக்கும் கம்பீரமும் உயரமும் நன்றாகவே புலப்பட்டது. என்னதான் நிலவொளி வானில் பிரகாசமாய் இருந்தாலும் மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப் பாதைக்கு ஒளியூட்டுவது சாத்தியமில்லை. அவன் கையிலிருந்த பேட்டரி வெளிச்சம் அந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.
அந்த ஆடவன் ஒரு கருப்பு நிற ஜீன்ஸும் சந்தன நிற டீஷர்ட்டும் அணிந்து கொண்டு அதன் மீது ஒரு ஜெர்கின்னும் உடுத்தியிருந்தான். அவன் தன் இரும்பினை ஒத்த தோள்களில் கருப்பு நிற பை ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தான்.
அதோடு தன் வலது கரத்தில் நவீன கைக்கடிகாரம் ஒன்றைக் கட்டியிருந்தான். ஆம் வலது கரத்தில்தான். ஏனெனில் அவன் தன் இடது கையையே அதிகமாக பயன்படுத்துபவன். அந்த நவீன கைக்கடிகாரம் அவன் செல்லும் திசையைக் காட்டும் திசைக்காட்டியாகவும் பயன்பட்டது.
அவனின் உடை, தோற்றம் எல்லாம் அவன் அந்த ஊரைச் சார்ந்தவன் இல்லை என்று தோன்ற வைத்தாலும் அவன் அந்த காட்டுப்பாதையில் தங்குதடையின்றி செல்வதைப் பார்த்தால் அந்த இடத்திற்கு ரொம்பவும் பழக்கப்பட்டவன் என்றே தோன்ற வைத்தது.
அவன் திடீரென்று தன் நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு அங்கே கம்பீரமாய் நின்றிருந்த கிளை படர்ந்திருந்த உயரமான மரத்தின் மீது தன் வலிமையான தோள்களால் பிடித்துத் தாவி ஏறியவன் சற்று நேரத்தில் அந்த மரத்தின் உச்சியில் ஏறி நின்று சுற்றிலும் பார்வையிட்டான். இத்தனை நேரம் இருள் சூழ்ந்திருந்ததனால் அவன் முகத்தைக் காண முடியவில்லை.
இப்போது நிலவொளி திண்ணமாய் அவன் மீது விழ… கீரிடமென அமைந்த கேசம், அடர்ந்த புருவங்கள், இருளை கிழித்துக் கொண்டு பார்க்கும் கூர்மையான விழிகள் என அந்த ஒளி பொருந்திய முகம் டாக்டர். அர்ஜுனை நினைவுப்படுத்தியது. இங்கே நிச்சயம் இவன் யாரென்று நாம் சொல்லியே தீர வேண்டும்.
சுவாமிநாதனுக்குப் பிறந்த இரட்டையர்களுக்கு பிறகு அவர்கள் வம்சாவெளியில் வெகுகால இடைவெளிக்கு பிறகு ஒரே பிரசவத்தில் இரட்டையராய் ஜனித்தவர்களில் ஒருவன். அர்ஜுன் பிறப்பிற்கு பிறகு நொடி நேர வித்தியாசத்தில் ஜனித்தவன். நம் கதையின் நாயகன் அபிமன்யு!
அபிமன்யுவின் தோற்றம் மட்டுமே அர்ஜுனை ஒத்து இருந்ததே தவிர அவனின் நடை உடை பாவனை முற்றிலும் வேறு ஒரு பாணியில் தனித்துவமாய் இருந்ததென்றே சொல்லலாம். அபிமன்யு தன் இடது கரத்தால் உச்சாணிக் கிளையைப் பிடித்தபடி தன் கம்பீரமான உடலை தாங்கிக் கொண்டு நின்றிருந்ததைப் பார்க்க மெய்சிலிர்க்க வைத்தது.
அவன் திரௌபதி அம்மன் கோவிலின் விளக்கை நோக்கிவிட்டு தான் ஆரம்பித்த இடத்திலிருந்து எத்தனை தொலைவு வந்தோம் என்று கணித்து பின் வேகம் பொருந்திய விவேகத்தோடு சத்தம் எழுப்பாமல் மரத்தின் மீதிருந்து இறங்கினான்.
இப்போது அபிமன்யு தன் கணீரென்ற குரலால், “இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளப் போய் பார்ப்போம் ண்ணா!” என்றான்.
அப்போது அபிமன்யுவோடு இருந்த இன்னொருவன் தோற்றத்தால் அந்த ஊரோடு கச்சிதமாகப் பொருந்தியிருந்தான். அவன் தன் உடலை கருப்பு நிறப் போர்வையை சுற்றிக் கொண்டு கையில் நீண்ட கம்பை வைத்திருந்தான்.
“ஏன் தம்பி?… ஒவ்வொரு பௌர்மணி அன்னைக்கும்… நீங்க தவறாம வந்துர்றீங்க… ஆனா நீங்க தேடி வந்த பூ மட்டும் கிடைச்சபாடில்லையே?!” என்றான்.
“அது அத்தனை சுலபத்துல கிடைச்சிருமா… பௌர்ணமி அன்னைக்கு நிலவு வெளிச்சத்தில் மட்டுமே பூக்கிற அரிதான மலர்” என்றான்.
“அந்த பூ நம்ம ஊர்ல கிடைக்கும்னு எப்படி அவ்வளவு உறுதியா நம்பறீங்க” என்று அந்த ஊர்காரர் கேள்வி எழுப்பினார்.
“நம்ம ஊரோடு சேர்த்து இன்னும் சில மலைபிரதேசங்களிலும் கிடைக்கும்னு என்கிட்ட இருக்குற ஒலைச்சுவடி குறிப்பில இருக்கு… ஆனா அந்த ஊருங்கள்ல எல்லாம் ஆட்கள் நடமாட்டம் அதிகமாயிடுச்சு… காட்டை எல்லாம் அழிச்சிட்டாங்க… இந்த பூ அடர்ந்த காட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலதான் பூத்திருக்கும்… என் கணிப்புப்படி மத்த மலைகளில் கிடைக்க சான்ஸ் கம்மிதான்… ஆனா இங்க நிச்சயம் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்லியவன் மேலே செல்லாமல் தடைப்பட்டு நின்று ஏதோ புதுவித வாசனை பரவி இருப்பதை நுகர்ந்தான்.
அவனின் நாசி மட்டும் கொஞ்சம் அதீத சக்தி வாய்ந்தது போலும். சிறு தொலைவில் இருக்கும் மூலிகை வாசத்தை நுகர்ந்து அது எத்தகைய மூலிகை எனக் கண்டறிய கூடியதாய் இருந்தது. உடனே தன் பையில் துழாவி ஒரு பழமையான ஓலைச்சுவடியை எடுத்து தன் டார்ச் லைட்டை எடுத்து அதன் மீது ஒளியூட்டிப் படிக்கலானான்.
அப்போது அபிமன்யுவோடு வந்தவன், “ஏதோ குறிப்பு… குறிப்புன்னு… சொன்னீங்களே அது இதுதானே தம்பி” என்று கேள்வி எழுப்பினான்.
அவன் நிமிர்நது பார்க்காமலே யோசனையோடு, “ஆமா ண்ணா” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் குறிப்பை எடுத்து பத்திரமாக உள்ளே வைத்தான்.
பின்னர் அபி தன் கடிகாரத்தில் உள்ள திசைக்காட்டியைப் பார்த்து வழியைத் தீர்மானித்தான்.
இப்போது ஒரு இடத்தில் மட்டும் மரங்கள் விலகி நிலவின் வெளிச்சம் நுழைந்திருக்க அபிமன்யு ஆவலோடு பார்த்த காட்சி அவனை அதிசயிக்க வைத்தது. நிலவின் ஒளியில் அவன் தேடி வந்த மலர்கள் படர்ந்திருந்தன. அந்த மலர்கள் கருநீலமும் இடையில் மட்டும் மஞ்சள் நிறமாய் இருக்க அவன் படித்த குறிப்புப்படி அவை அந்த மலர்கள்தாம் என்பதை அறிந்து கொண்டான்.
அவன் மனதில் ஏற்பட்ட ஆனந்தம் அவன் முகத்தில் பிரகாசித்தது. எத்தனை நாள் தேடல் பூர்த்தியானதை எண்ணி இன்பமுற புன்னகை செய்தவனின் தோள்களில் கைவைத்து பின்னோடு வந்தவரும், “ஆத்தாடி! இந்த பூ தானா?!” என்று வியப்பில் ஆழ்ந்தார் .
“ம்… இதான் சந்திரவதனி மலர்… மற்ற தாவரங்கள் உடலுக்குதான் மருந்து… ஆனா இது மனித மூளைக்கான மருந்து… இந்தப் பூவை உட்கொண்டால் மனோதிடம் உண்டாகும்… பிரசவத்தின் போது உட்கொண்டால் சுகப்பிரசவமாகும்” என்றுரைத்து அந்தப் பூவை பறிக்க கால்களை மடக்கி அவன் அமர்ந்த போது அந்த பூக்களுக்கிடையில் சுருண்டிருந்த ஒரு நீண்ட நாகம் தலைதூக்கி படமெடுத்தது. அபி சுதாரிப்பதற்குள் அது அவனின் கரத்தைத் தீண்டியது.
அதற்குள் பின்னோடு வந்தவர் தன் கொம்பை அந்த பாம்பின் மீது ஓங்கி தன் சினத்தைக் காண்பிக்க அபிமன்யுவோ அடிக்க வேண்டாம் என்பது போல் அந்த கொம்பைப் பிடித்து தடுத்து “அடிக்காதீங்க அண்ணே! அதென்ன பண்ணுச்சு… பாவம்… நாமதான் அதோட இடத்துக்கு வந்து கொந்ததரவு கொடுத்துட்டோம்” என்றான்.
அவர் கொம்பை ஓங்கிய வேகத்தில் அந்த பாம்பு வளைந்து வளைந்து அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டது.
அபிமன்யு எத்தகைய சூழ்நிலையிலும் பிற உயிருக்கு தவறிக் கூட தீங்கிழைக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் என்பது அவனின் செயலிலும் பேச்சிலும் இப்போது அழுத்தமாய் வெளிப்பட்டது.
அபிமன்யு தன் கைகுட்டையை எடுத்து தன் ரத்த நாளத்தை லேசான இறுக்கத்தோடு கட்டினான்.
“அய்யோ… இப்படி பாம்பு உங்களை கொத்திடுச்சே தம்பி… ஏதாச்சும் ஆயிடப் போகுது” என்று அவர் பதட்டமடைய, “ஒன்னுமில்ல ண்ணே! பயப்படாதீங்க” என்று ரொம்பவும் இயல்பாக உரைத்தான்.
“விஷ பாம்பு தம்பி… உயிருக்கே ஆபத்தாயிடும்” என்று அந்த ஊர்க்காரர் மீண்டும் படபடப்பு அடங்காமல் உரைக்க,
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… வீரியன் பாம்புதான்… ராஜ நாகம் இல்ல கரு நாகமா இருந்தாதான் உடனே பாதிக்கும்… அதுவும் இல்லாம நாம பாம்பு கடிச்சிடுச்சேன்னு பதறினாதான்… ரத்த ஓட்டம் அதிகரிச்சு… உடம்பு முழுக்க விஷம் வேகமாக பரவிடும்” என்று சொல்லிவிட்டு அபிமன்யு டார்ச்சை அடித்து அந்த பாம்பு கடித்த இடத்தைப் பார்த்து அது ஆழாமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
பின்னர் அவன் தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி கடிப்பட்ட இடத்தை நன்றாக கழுவினான்.
பாம்பு கடித்தும் பதட்டமில்லாமல் அவன் இருப்பதும் அந்த இருளிலும் பாம்பு எந்த வகை என அவன் அறிந்து கொண்டு சொன்ன விதமும் அவன் உடன் இருந்தவரை வியப்பில் ஆழ்த்தியது.
அபி சற்று நேரம் யோசித்தபடி, “சிறியா நங்கை இலைதான் இந்தக் கடிக்கு மருந்து” என்று உரைத்தான்.
“அவ்வளவுதானே… நீங்க இங்கயே இருங்க தம்பி… நான் போய் பறிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லி டார்ச் லைட்டை வாங்கிக் கொண்டு சென்றார்.
அபிமன்யு நிலவொளியில் படர்ந்திருந்த அந்த மலர்களை நோக்கி, “நாம நினைச்சதை அடையணும்னா சில இடையூறுகளை சந்திச்சுதானே ஆகணும்… அதுக்கெல்லாம் இந்த அபி பயப்படமாட்டான்” என்று சொல்லி அந்த மலர்களைப் பறிக்க ஆரம்பித்தான்.
அபிமன்யுவிற்கு எதையும் எதிர்கொள்ளும் துணிவும் நம்பிக்கையும் அளவிட முடியாமல் இருந்தது எனலாம். ஆதலாலேயே அவன் நினைத்ததை செயல்படுத்த எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தான்.
அந்த ஊர்க்காரர் பறித்து வந்த சிறியா நங்கையை ஒரு நெல்லி அளவு உட்கொண்டான். அந்த தாவரத்தின் அதீத கசப்புத் தன்மை எத்தகைய விஷத்தையும் முறிக்கவல்லது.