அந்த போதையை அனுபவித்தவனுக்கு அதிலிருந்து மீண்டு வரவே விருப்பமிராது.
சிறுவயதிலிருந்து அத்தகைய போதையை அனுபவித்தவன் ராகவ்.
வீ தயாரிப்பு நிறுவனம் என்றாலே தனிமரியாதை. அத்தகைய நிறுவனத்தின் உரிமையாளர் வாஸனின் ஓரே மகன் ராகவ் என்றால் சும்மாவா ?! அவனை பார்ப்பவர்கள் எல்லோருமே மரியாதையோடு எட்டி நிற்பதுதான் வழக்கம்.
இப்படி வளர்ந்தவன் அந்த புகழென்ற போதையை நிலைநிறுத்தி கொள்வதற்காகவே தனக்கென்ற ஒரு அங்கிகாரத்தை சினிமா உலகத்தில் நிலைநாட்டிக் கொண்டான்.
எல்லோருமே அவனை அப்படி வியந்து பார்ப்பதைதான் அவனுமே விரும்பினான்.
சிறு அலட்சிய பார்வையை கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.
அப்படி இருக்க ஜென்னித்தாவின் வார்த்தைகளை ராகவால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அவள் எப்படி தன்னிடம் அப்படி சொல்லுவாள். உள்ளுக்குள் அவன் ஈகோ கர்ஜித்தது.
அப்படியே பிறகுதான் பேச வேண்டுமென்றாலும் அதை அவள் பொறுமையாக எடுத்துரைத்திருக்கலாமே.
அவள் சொன்னது எந்த மாதிரியான வார்த்தை பிரயோகம்.
‘அந்த கடவுளாவே இருந்தாலும் நாளைக்கு காலையில கால் பண்ண சொல்லு’
தன்னை வேண்டுமென்ற அலட்சியப்படுத்த அல்லது அவமானப்படுத்த அவள் பிரயோகித்த வார்த்தைகள் போலவே அவனுக்கு தோன்றிற்று.
அவள் திமிரையும் கர்வத்தையுமே அந்த வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாய் தெளிவுப்படுத்திக் கொண்டிருந்தன.
அவனின் உச்சந்தலையில் வசித்திருந்த அவனின் புகழ் போதையை ஓரே நொடியில் அவள் வார்த்தைகள் இறக்கிவிட்டன.
அந்த போதை இறங்கிய காரணத்தினாலோ அதை சமன்படுத்த வேறு போதையை கோப்பை கோப்பையாய் உள்ளிறக்கி கொண்டிருந்தான்.
அவன் அமர்ந்தபடி குடித்து கொண்டிருக்க, அவன் செகரட்டிரி மனோ அருகில் நின்றபடி அவன் காலி க்ளாஸ்களை நிரப்பி கொண்டிருந்தான்.
அவன் தன் அளவை மீறுகிறான் என்பது மனோவுக்கு புரிந்தாலும் அதை சொல்ல துணிவு வரவில்லை.
ராகவ் போதை நிலையோடு “சிகரெட்” என்று மனோவை கேட்க, அடுத்த கணமே ராகவிடம் சிகரெட்டை நீட்டி பற்ற வைத்தான்.
மனோவிற்கு பதட்டமாய் இருந்தது. அவன் இந்தளவுக்கு தன்னிலை மறப்பவன் இல்லையே. எல்லாத்திற்கும் காரணி அந்த ஜென்னித்தாவா ?
மனோ சிந்தித்திருக்கும் போதே ராகவ் சிகரெட்டை புகைத்தபடி தள்ளாடி எழுந்திருக்க இவன் “பாஸ்” என்று தாங்கிக் கொண்டான்.
அப்போது ராகவ் அவன் தோள்களில் கரத்தை போட்டுக் கொண்டு “எதுக்கு மனோ அவ என்னை இன்ஸல்ட் பண்ணா?” என்று கேள்வி எழுப்பினான்.
மனோ தயக்கத்தோடு “அவங்க உங்களை இன்ஸல்ட் பண்ணனும்னு இன்டென்ஷென் எல்லாம் இருக்காது பாஸ்… ஏது தெரியாம” என்று சொல்லி தன் பாஸை அப்போதைக்கு அமைதியடைய வைக்க அவன் சமாளிக்க,
ராகவிற்கு சினம் பொங்கியது.
“தெரியாமலா… அதுவும் என்னை தெரியாமலா மனோ… இந்த ராகவை அவளுக்கு தெரியலயா? அவ்வளவு திமிரா அவளுக்கு”
உச்சபட்ச கோபத்தோடு கேட்டவனை பார்த்து மனோ அஞ்சி நிற்க
“அதெப்படி மனோ அவளுக்கு என்னை தெரியாம இருக்கும்…” கிஞ்சிற்றும் அவன் மனம் சமாதானமடைய மாட்டேன் என்று பிடிவாதமாய் நின்றது.
“பாஸ்… விடுங்க… காலையில பேசிக்கலாம்”
“நான் அவளை பார்க்கனும் மனோ… அதுவும் உடனே பார்க்கனும்” என்று அழுத்தமாய் அந்த போதை நிலையிலும் கேட்டான்.
மனோ அவஸ்த்தையோடு “உடனே எப்படி பாஸ்… நீங்க தூங்குங்க… நாளைக்கு காலையில பார்த்துக்கலாம்” என்று அவனை ஆசுவாசப்படுத்தியபடி கட்டிலில் படுக்க வைக்க ராகவ் நிறுத்தாமல் “அவளை நான் பார்க்கனும் மனோ” என்று ஓயாமல் புலம்பியவன் பின் தான் அருந்திய போதையின் தாக்கத்தில் மெல்ல மயக்க நிலைக்கு சென்றான்.
மனோவிற்கு ராகவின் நடவடிக்கை சற்று புதிதாய் இருந்தன. இப்படி அவன் என்றுமே உணர்ச்சிவயப்பட்டதில்லை. எதையும் நிறுத்தி நிதானமாய் கையாள்பவனுக்கு இன்று என்னவானது. யாரோ ஒரு பெண் ஏதோ சொன்னதற்கு போய் இத்தனை ஆர்பாட்டமா? இப்படி யோசித்தவன் அவன் அமைதியடைந்து உறங்குவதை பார்த்து ஆழ்ந்த பெருமூச்சுவிட்டபடி மேஜை மீதிருந்த பாட்டில்கள், சிகரெட்துண்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தினான்.
பார்ப்பதற்கு முன்னரே ராகவிற்கு அவள் மீது வெறுப்பும் தவறான அபிப்பிராயமும் பதிவாகியது.
**********
மகிழ் வீட்டிற்கு ரொம்பவும் தாமதித்து நடுஇரவில் வந்து சேர, யாழ் கதவை திறந்துவிட்டு “சாப்பிட்டீங்களா ?” என்று கேட்டார்.
அவனும் “சாப்பிட்டேன் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு மாடியறைக்கு சென்றான்.
அவன் கதவருகில் வந்து நின்று
“மாயா” என்றழைத்து வெகு நேரம் தட்ட பதிலே இல்லை.
உடனே அவன் தன் செல்பேசியை எடுத்து அவளுக்கு அழைக்க, அறைக்குள் அவள் அலைப்பேசி அடிக்கும் சத்தம் அவனுக்கும் கேட்டது.
அது அவளுக்கு கேட்கவில்லையா?
உறங்கியிருப்பாளோ?! என்று சந்தேகத்தோடு அவன் அறை வாசலில் நின்றவன் மீண்டும் ஒரு முறை மாயா என்றழைத்து கதவை தட்டவும் அப்போது “ஆ வர்றேன்” என்று குரல் கொடுத்துவிட்டு கதவை திறந்தாள்.
“சாரி… டிஸ்டர்ப் பண்ணிட்டனோ… நல்லா தூங்கிட்டியோ” என்று மகிழ் கேட்க
“இல்ல ழுழிச்சிட்டுதான் இருந்தேன்” என்று சொல்லியபடி படுக்கையின் மீது சம்மேளம் போட்டு அமர்ந்து கொண்டு தலையணையை எடுத்து மடியில் வைத்து கொண்டாள்.
அவன் கோபம் பொங்க “ஏ… நான் பாட்டுக்கு தொண்டை தண்ணி வத்த கத்திட்டிருக்கேன்… நீ கதவை திறக்காம உள்ளே என்ன பண்ணிட்டிருந்த” என்று கேட்க
“ரொம்ப சீர்யஸா ஒரூ மேட்டரை பத்தி யோசிச்சிட்டிருந்தேன்… அதான் நீங்க கூப்பிட்டது காதில விழல” என்று அவள் சொல்லவும் நம்பாமல் பார்த்தான்.
“உன் போஃன் ரிங்கானது கூடவா கேட்கல”
“கால் பண்ணிங்களா ?!” என்று அவள் கேள்வியாய் பார்க்க
அவன் புருவத்தை சுருக்கியபடி “நல்லா நடிக்கிற” என்று சொல்லியபடி மாற்று உடைகளை கப்போர்ட்டை திறந்த எடுக்க
அவன் ஏன் அப்படி சொன்னான் என்று அவள் யோசித்திருக்கும் போதே ஷார்ட்ஸ் பனியன் அணிந்து கொண்டு வெளியே வந்தவன் முகத்தை துடைத்தபடி “உனக்கு ஏதாவது பிரச்சனையா மாயா” என்று கேட்க
தன் மனதில் உள்ள எண்ணங்களை அவன் கணித்திருப்பானோ என்று யோசித்தவளின் முகம் பதட்டமாய் மாற அவன் புரியாமல் “என்ன கேட்டன்னு இப்படி பேய் முழி முழிக்கிற…” என்றான்.
அவள் மறுதலித்தபடி “ஒண்ணும் இல்லை” என்று தலையசைத்தாள்.
“இல்ல… ஏதோ இருக்கு… இப்ப நீ அதை என்கிட்ட சொல்ற” என்று சொல்லி அவள் எதிரே படுக்கையின் மீது அமர்ந்து கொண்டான்.
‘ஆமாம் அப்படியே என் பிரச்சனையை சொல்லி இவருக்கு புரிஞ்சிட்டாலும்’ என்று மனதிற்குள் புலம்ப அவன் அவளை உறுத்து பார்த்தவன் “உன் பிரச்சனை என்னன்னு எனக்கு இப்போ புரிஞ்சிது… ” என்றான்.
“என்ன ?”
“உனக்கு சரியா காது கேட்கல…அதான் கதவை தட்டினதும் கேட்கல… போஃன் அடிச்சதும் கேட்கல…” என்றதும் அவள் கோபமாக “அதெல்லாம் இல்ல..எனக்கு காதெல்லாம் நல்லா கேட்குது” அவள் சொல்ல
“அப்புறம் ஏன் நான் இவளோ பக்கத்தில உட்கார்ந்து பேசிட்டிருக்கேன்… நீ பதில் சொல்லாம பேந்த பேந்த முழிச்சிட்டிருக்க” என்று கேட்க அவன் இத்தனை அருகாமையில் இருப்பதுதானே பிரச்சனை.
அது அவனுக்கு புரியவில்லையே என்று மனதில் எண்ணிக் கொண்டவள் படுக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டாள்.
அவன் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் சலிப்புற்றவன் “நீ எப்படியோ போ… எனக்கு தூக்கம் வருது… ப்ளீஸ் லைட் ஆஃப் பண்ணிடு” என்று பணிக்க
அவள் அவனிடம் “இருங்க மகிழ்… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்றாள்.
அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு “இவ்வளவு நேரமா அதானே நானும் கேட்டேன்…” என்றவன் அவள் முன்பு வந்து நின்று “சரி… என்ன விஷயம்… சொல்லு” என்று கேட்க அவள் அப்போது தன் பேகில் வைத்திருந்த செக்கை அவனிடம் காண்பித்தாள்.
மகிழ் அதனை யோசனையோடு வாங்க, அவன் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.
அதில் எழுதப்பட்டிருந்த தொகையை அவன் விழிகள் ஆழ கவனித்தன. எப்படி பார்த்தாலும் அது பத்து கோடிதான். கீழே அந்த கையெழுத்திற்கு கீழிருந்த பெயர் டேவிட் அந்தோணி என்றிருந்தது.
அடுத்த அதிர்ச்சி. ஜே டிவியின் தற்போதைய எம்.டி என்பதை யூகித்தவன் அவளிடம் வியப்புகுறியோடு “இது எப்போ மாயா” என்று கேட்டான்.
“நேத்தே நீ ஏன் என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லல” இறுக்கமாய் முகத்தை வைத்து கொண்டு அவன் கேள்வி எழுப்ப,
“அது… நானே ஷாக்கல இருந்தேன்”
நேற்று இரவு நடந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்தியவன் “சரி… செக்கை பத்தி விடு… டேவிட் சார் கூப்பிட்டதை பத்தி என்கிட்ட சொல்லி இருக்கலாமே… அதுவும் என் ஆபிஸ் வரைக்கும் வந்திருக்க… ஒரு வார்த்தை கூட சொல்லல” என்று கேட்டு கோபமாய் பார்த்தான்.
அப்போதிருந்த மனநிலையில் அவன் மீது கோபம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட தவிப்பு. போதாக் குறைக்கு ஈகோ வேறு தலைத்தூக்க எதற்கு எல்லாவற்றையும் அவனிடம் சொல்ல வேண்டும். அவன் யார் தமக்கு என்று சொல்லாமல் விட்டாள்.
இப்போது என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தாள்.
“சரி இந்த விஷயத்தை அம்மா அப்பாகிட்ட சொன்னியா?!” என்று அடுத்த கேள்வி கேட்க அவள் இல்லையென்பது போல் தலையசைத்தாள்.
“அந்த டேவிடை பத்தி எதுவும் தெரியாம நீ ஏன் தனியா அங்கே போனோம்”
“இதுல என்ன இருக்கு… பஃன்ட் ரைய்ஸிங்காக இந்த மாதிரியானவங்கள பார்க்க போகிறது சகஜம்தானே”
“உனக்கு சுத்தமா மூளையில்லயா… ஏன் இப்படி முன்யோசனை இல்லாம நடந்துக்கிற”
“நான் இப்போ என்ன தப்பு செஞ்சிட்டேன்னு இப்படி எல்லாம் பேசிறீங்க”
“அய்யோ மாயா… நீ போய் மீட் பண்ணது சாதாரணமான ஆள் இல்லை… ஜெ சேனல் நெட்வொர்கோட எம்.டி… அவ்வளவு ஈஸியா யாருமே அவரை பார்க்க முடியாது… ஆனா எனக்கு என்ன புரியலன்னா கொஞ்சங் கூட சம்பந்தமே இல்லாம உன்னை கூப்பிட்டு இவ்வளவு பெரிய அமௌன்ட்டை ஏன் தூக்கி தரனும் ?”
“நானும் இதெல்லாம் யோசிச்சேன் மகிழ்… அப்புறமா தோணுச்சு… இதெல்லாம் நார்மல்தான்… பணக்காரங்க இந்த மாதிரி அர்கனைஷேனுக்காக டோனேஷன் கொடுப்பாங்கதானே”
“கொடுப்பாங்க மாயா… பட் அமௌன்ட் பெரிசா இருக்கு… அதுதான் கொஞ்சம் நெருடலா இருக்கு”
“நீங்க இவ்வளவு யோசிக்க எல்லாம் வேண்டாம்.. டேவிட் சாரை பார்த்தா ரொம்ப நல்ல மாதிரிதான் தெரியுது” என்று சொல்ல அவளை புரியாமல் பார்த்தவன் “ஓ… பார்த்தவுடனே நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு மேடமுக்கு தெரிஞ்சிடுச்சு” என்று கேட்டு குத்தலாய் ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வை அவளுக்கு புரிந்தும் புரியாமலிருக்க
அவன் அவளிடம் “ஒரு தடவை பார்த்த டேவிட் உனக்கு நல்லவரா தெரியிறாரு இல்ல… ஆனா ஏன் உனக்கு என்னை பார்த்ததும் தப்பா தோணுச்சு”
என்றோ நடந்த விஷயங்களை ஏன் இப்போது கிளறுகிறான் என அவள் சங்கடமாய் பார்க்க,
அவனே மேலும் “உனக்கு என் மேல நல்ல அபிப்பிராயம் இல்ல… அதை நீ சாக்ஷிகிட்டயும் சொல்லி இருக்க இல்ல” என்று உரைத்தான்.
திசை மாறி அவர்கள் உரையாடல் சாக்ஷியின் புறம் திரும்புவதை மாயா விரும்பாமல் “ஏன் மகிழ் இப்ப பழைய விஷயத்தை எல்லாம் பேசிட்டிருக்கீங்க” என்றாள்.
அவன் நினைத்ததை அவளிடம் கேட்டுவிட பிடிவாதமாய் “ஏன் மாயா ?… யாருன்னே தெரியாத டேவிடுக்காக சப்போர்ட் பண்ணி பேசிற… அன்னைக்கு சாக்ஷி என்னை பத்தி தப்பா சொல்லி அழும் போது… நீ மகிழ் அப்படி எல்லாம் இல்ல… நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்கேன்னு சொல்லி அவளை
சமாதானப்படூத்தி இருக்கலாம் இல்ல… ஏன் நீ அப்படி பண்ணல… அட்லீஸ்ட் அவகிட்ட நடந்த விஷயங்களை கேட்டு தெரிஞ்சிட்டிருக்கலாம்… அவளுக்கு புரிய வைச்சிருக்கலாமே… நீ ஏன் அப்படி செய்யல மாயா…” என்று கேட்டதும் அவள் அதிர்ந்து நின்றுவிட்டாள்.
மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் எதையும் மறக்காமல் தான் டேவிடை பற்றி சொன்ன ஒற்றை வார்த்தையை பிடித்து கொண்டு கேள்வி கேட்பது அவளை வேதனைப்படுத்த, மகிழ் ஆற்றமுடியாத வேதனையோடு வழிந்த விழி நீரை துடைக்க
“மகிழ்…” என்று அவள் அவனை தேற்ற நினைத்தாள்.
அவனோ மீண்டும் அவளை நோக்கி”நீ மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா இன்னைக்கு என் சாக்ஷி என் கூட இருந்திருப்பாளே மாயா” என்றான்.
அந்த வார்த்தையை தாங்க முடியாமல் “போதும் மகிழ்… இப்படி எல்லாம் சொல்லி என்னை கொல்லிதீங்க ப்ளீஸ்… நான் மட்டும் சாக்ஷிக்கு இப்படி எல்லாம் நடக்கும்னு நினைச்சேனா என்ன?” என்று அவளும் கண்ணீர் வடிக்க மகிழ் மௌனமானான்.
“நான் இனிமே உன்கிட்ட அவளை பத்தி பேச கூடாது அப்படிதானே… பைஃன்… இனிமே பேசல… ஆனா அவ இல்லங்கிறதை இந்த நிமிஷமும் நான் நம்ப தயாராயில்லை”
“பைத்தியக்காரத்தனமா பேசாதீங்க… ஷீ இஸ் நோ மோர்… இனிமே சாக்ஷி நம்ம வாழ்க்கையில இல்லை… நீங்க ஏன் அதை புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க மகிழ்… ”
மாயா அவள் சொன்னதை நம்ப முடியாமல் அதிர்வோடு பார்த்தவன் பின் பதிலேதும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேற அவள் பின்னோடு வந்து “மகிழ் எங்க போறீங்க ?” என்று கேட்கவும்,
அவளை பார்க்காமலே “என் சாக்ஷி ரூமுக்கு” என்றான்.
“வேண்டாம் மகிழ்… அங்க போன நீங்க ரொம்ப இமோஷன் ஆவீங்க” என்றாள்.
“அதை பத்தி நீ கவலை பட வேண்டாம்” என்றவன் விறுவிறுவென சென்று விட இயலாமையோடு கண்ணீர் உகுத்தாள் மாயா.
தன்னுடைய உணர்வுகளுக்காக அவன் மனதை தான் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிட்டோமா என்ற குற்றவுணர்வு அவளை அழுத்தியது.
மறுபுறம் தன் உயிர் தோழியை விட்டுகொடுத்து கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணமும் அவளை வேதனையுற செய்ய, இருதலைகொள்ளி எறும்பாய் தவித்தாள்.
அதே சமயம் இவர்களின் சம்பாஷணைகளை எதிர்பாராத விதமாய் கீழே நின்றிருந்த யாழ்முகையும் கேட்டாள்.
அவர்கள் இயல்பான மணவாழ்க்கைகயை வாழவில்லையோ என்ற சந்தேகம் துளிர்த்தது அவருக்கு.
அதே சமயம் சாக்ஷி இன்னும் அவர்களுக்கு இடையில் இருக்கிறாள் என்பதையும் அவர்களின் உரையாடலின் மூலம் யாழ்முகைக்கு உணர்த்திற்று.
மகிழ் அந்த நேரம் சாக்ஷியின் அறைக்கு சென்றிருந்தான். அவளின் அறையும் அவள் பொருட்களும் எப்போதும் போல இருந்த இடத்தில் அவள் நினைவாய் இன்னும் அப்படியே வைக்கப்பட்டு இருந்தது.
மகிழ் நேராய் அவள் மீட்டும் வீணையில் தலைசாய்த்து படுத்து கண்ணீர் வடிக்க தொடங்கினான்.
அவன் உதடுகள் அவனையும் மீறி கவிதையை முணுமுணுத்து கொண்டிருந்தது.