எப்படி காதலை சொல்வது ? தவிப்பும் காத்திருப்பாய் நொடிக்கு ஒரு முறை வாசல்புறம் பார்த்திருந்தாள் மாயா.
காதலை சொல்வதில் தன் தோழிக்கு நிகராகுமா? சட்டென்று அந்த நாள் அவள் நினைவுகளாய் எழும்பி நின்றன.
தினமும் ரேடியோவில் ஓலிக்கும் மகிழின் குரலின் மீது சாக்ஷிக்கு அத்தனை ஈர்ப்பு.
இல்லத்தில் உள்ள எல்லோருக்குமே அவன் குரலில் ஈர்ப்புதான். ஏன் மாயாவுக்கும் பிடித்தம்தான்.
ஆனால் சாக்ஷிக்கு மட்டும் அந்த ஈர்ப்பு தன் எல்லைகளை கடந்திருந்தது.
ஒருநாள் அவன் நிகழ்ச்சியை கேட்டுவிடாமல் போனாலும் அவளுக்கு பையத்தியமே பிடித்துவிடும். புலம்பி தள்ளி எல்லோரையும் ஒருவழி செய்துவிடுவாள்.
ஆதலால் இல்லத்தில் உள்ள எல்லோருமே மகிழின் நிகழ்ச்சி வந்துவிட்டாளே ‘ஏ சாக்ஷியோட ஆளு பேசிறாரு’ என்று பரிகசிக்க அவள் அதை என்றுமே மறுதலித்ததில்லை.
மனதளவில் ஆழமாய் அந்த குரலோடு வாழ ஆரம்பித்திருந்தாள்.
அப்போதுதான் மகிழ் அந்த காதலர் தின நிகழ்ச்சியை நடத்த இல்லத்தில் கேட்டுக் கொண்டிருந்த எல்லோருக்கும் குதுகலம் பற்றிக் கொண்டது.
விளையாட்டகத்தான் எல்லோரும்
“இன்னைக்கு நீ மகிழ்கிட்ட ப்ரொப்போஸ் பன்ற” என்று அவளை தூண்டிவிட்டனர்.
“ஏன் பண்ணமாட்டன்னு தைரியமோ ?” என்று அவளும் கேட்க
“சாக்ஷி… இது விளையாட்டில்ல… நீ பேசப் போறது ஆர் ஜே மகிழ்கிட்ட” என்று மாயா அச்சப்படுத்த
“எனக்கென்ன பயம் ? அவன் கடவுளா இருந்தாலும் என் மனசில இருக்கிற விருப்பத்தை நான் சொல்லனும்னு நினைச்சா சொல்லுவேன்” என்றாள்.
மாயா உடனே அவளை மேலும் அச்சப்படுத்த, மகிழ் ரேடியோவில் சொன்ன எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அதிசயக்கும் விதமாய் அந்த அழைப்பு ஒருநிலையில் ஏற்கப்பட்டுவிட்டது.
மாயா உடனே கைப்பேசியை சாக்ஷியிடம் கொடுத்துவிட்டாள்.
அவளுக்கு கிட்டிய வாய்ப்பை தன் தோழியிடம் விட்டு கொடுத்ததின் பராபலன் இன்னும் அவளை விடாமல் துரத்துகின்றது.
சாக்ஷி அளவுக்கு தனக்கு தைரியம் இல்லையா? அவளால் அத்தனை சுலபமாய் அவனிடம் காதலை சொல்ல முடிந்த போது தன்னால் ஏன் முடியவில்லை ?
கேள்வி கேட்டு கொண்டவளுக்கு அதற்கான காரணமும் கிட்டியது.
சாக்ஷி மகிழிடம் காதலை சொல்லும் போது அவளுக்கென்று எதிர்பார்புகளோ அல்லது எந்தவித இழப்புகளோ இல்லை. ஆனால் இங்கே அவள் சொல்லப் போகும் காதல் அவனின் உறவை கூட இழக்க நேரிடலாம்.
அதனாலயே தான் இந்தளவுக்கு அச்சப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று காரணம் கற்பித்துக் கொண்டாள்.
காதலை சொல்லாமலிருக்க காரணங்கள் ஆயிரம் கிடைத்தாலும் இன்று சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியும் அவளுக்கு இருந்தது.
இரவு நடுநிசியை கடக்கும் போது மகிழ் வீட்டிற்கு வந்தடைந்தான்.
அவன் தரையை பார்த்தபடியே சோர்வோடும் கலக்கத்தோடும் நுழைய,
அதனை அவள் விழிகளும் கண்டுகொண்டன.
எதனால் இந்த கலக்கம் என புரியாமல் அவன் அருகாமையில் வந்தவள் “என்னாச்சு மகிழ்? ரொம்ப வேலையோ?!” என்று கேட்க “ஹ்ம்ம்” என்றான்.
அவன் தோளில் இருந்த பேகை வாங்கிக் கொண்டவள் “சரி நீங்க போய் ப்ரஷாயிட்டு வாங்க” என்றாள்.
அவனோ “ஹ்ம்ம்ம்” என்றபடி அசையாமல் நின்றிருந்தான்.
“மகிழ்” என்று அவள் அழைக்க, அவன் பதில்லில்லாமல் சிலையெனவே நிற்க மீண்டும் அவள் “மகிழ்” என்று சத்தமாய் அழைத்தாள்.
“ஆன்” என்று உறக்கத்திலிருந்து விழித்தவன் போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் முகம் ஏதோ சொல்ல முடியாத குழப்பத்தை தேக்கி வைத்திருப்பதாக தோன்றியது.
தவிப்பும் அவஸ்த்தையோடு இருந்தவனிடம் “மகிழ் ஏன் இப்படி இருக்கீங்க… என்னாச்சு… ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் கேட்க அவனுக்கு எந்தபுறம் தலையசைப்பது என்றே புரியவில்லை.
“அது… நான்” என்று மகிழ் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணற, அவள் உடனே “மகிழ் ரிலேக்ஸ்… நான் போய் தண்ணி எடூத்துட்டு வர்றேன்… நீங்க இப்படி உட்காருங்க” என்று சொல்லி உள்ளே செல்லப் பார்த்தவளை நகர விடாமல் அவள் கரத்தை பற்றிக் நிறுத்தினான்.
அவள் யோசனைகுறியோடு நிமிர்ந்து அவனை பார்க்க, அவன் கண்களில் நீர் வழிய “நான் சாக்ஷியை பார்த்தேன் மாயா” என்றவனின் முகத்தில் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒரு சேர கலந்திருந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பாய் தொலைந்து போன அவன் காதல் உயிர்பெற்று அவனுக்குள் ஊற்றாய் மீண்டும் பெருக ஆரம்பித்திருந்தது.
அந்த உணர்வுகளோடு கட்டுண்டு கிடந்தவனுக்கு மேலே பேச வார்த்தைகளே வரவில்லை.
ஆனால் மாயா அவன் சொன்னதை கேட்டு அளவுகடந்த ஏமாற்றமடைய,
அந்த நொடி அத்தனை எரிச்சலும் கோபமும் மூண்டிருந்தது அவளுக்கு.
அவன் கையை உதறியவள் ரௌத்திரமான பார்வையோடு “பையத்தியம் பிடிச்சிருக்கா மகிழ் உங்களுக்கு… சாக்ஷி சாக்ஷி சாக்ஷி… எப்ப பாரு சாக்ஷி… எது பேசினாலும் சாக்ஷி… அவளை தவிர நீங்க வேறு எதை பத்தியும் யோசிக்க மாட்டீங்களா?… பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்களா?… இதுல சாக்ஷியை பார்த்தேன்னு வேற” என்று சொல்லி தலை மீது கைவைத்து கொண்டாள்.
அவள் உணர்ச்சிவசப்படுவதை பார்த்து மௌனமானவன் பின் பொறுமையோடு “நம்பு மாயா… நான் சாக்ஷியை பார்த்தேன்” என்று சொல்ல
அவள் விரக்தியான பார்வையோடு அவனை ஏறிட்டு,
“அய்ய்ய்ய்ய்யோ மகிழ்… அவளை எப்படி நீங்க பார்க்க முடியும்… அவதான் செத்துட்டாளே” என்று கத்தினாள்.
அவளின் அந்த வார்த்தை அவன் பொறுமையை சுக்குநூறாய் உடைத்தது.
அவனும் உடைந்து “வாயை மூடிறி… அடிச்சேன்னு தவடை பேந்திரும்” என்று கை ஓங்க அவள் மிரட்சியோடு அவனிடமிருந்து ஒதுங்கி நின்றாள்.
அவன் கட்டுக்கடங்காத கோபத்தோடு “முதல்ல நான் காண்பிக்கிறதை பார்த்துட்டு அப்புறம் நீ என்ன வேணா பேசு” என்றான்.
அவளோ அவனின் செயலால் அதிர்ந்து போயிருந்தாள். அவன் ஒருமுறை கூட அப்படி எல்லாம் மரியாதை குறைவாய் பேசியதில்லை. எந்த பெண்ணிடம் அப்படி பேசுபவனும் கிடையாது. நடந்து கொள்பவனும் கிடையாது. ஆனால் இன்று அவளை அடிக்க கை ஓங்கி மரியாதை குறைவாகவும் பேசிவிட்டான்.
அவள் அதற்கு மேல் அவனை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாய் நின்றிருந்த நேரம் அவன் டீ.வியை இயக்கினான்.
எதற்காக அவன் சம்பந்தமில்லாமல் டீவியை இயக்குகிறான். .அவள் புரியாமல் குழப்பமாய் பார்த்திருந்தாள்.
******
டேவிட் சொன்னது போல் ஜென்னித்தாவை பார்க்க அன்றிரவு உணவிற்கு வீட்டிற்கு வந்திருந்தான்.
அவர்கள் இருவரும் அந்த தோட்டத்தை சுற்றிலும் நடந்தபடி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் எதேச்சையாய் தன் செல்பேசியில் நேரத்தை பார்த்தவள் “சாரி டேவிட்… டைம் பார்க்காம ரொம்ப நேரம் பேசிட்டிருந்திட்டேன்…” என்றாள்.
அவனும் நேரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து, “ஆமாம் ஜென்னி… ரொம்ப லேட்டாயிடுச்சு… சரி ஒகே.. . அப்புறம் பார்ப்போம்…” என்று முன்னேறி அவன் கார் நோக்கி நடந்தான்.
செல்லும் போதே “நான் வேற இங்க உன் வீட்டில இவ்வளவு நேரம் இருக்கிறது மட்டும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சிதுன்னு வைச்சுக்கோ அவர் பாட்டுக்கு கன்னாபின்னான்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாரு” என்றாள்.
அவள் குழப்பமாக “ஏன் அப்படி ? அவ்வளவு பெரிய சேனல் எம்.டி இவ்வளவு கன்ஸவ்வேட்டிவ்வா யோசிப்பாரா? நம்ப முடியலியே” என்றாள்.
“அவர் கன்ஸவ்வேட்டிவ் இல்ல ஜென்னி… நான்… எனக்கு இப்ப வரைக்கும் ப்ரண்ட்ஸ்னு ஒருத்தர் கூட கிடையாதா ?.. அதனாலதான் எனக்கு ஒரு கேர்ள் ப்ரண்டான்னு அவரால் நம்ப முடியல…”
“கரெக்டதான்… எனக்கும் கூட அதே டௌட்.. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க டேவிட் ?” என்றாள்.
“ப்ளீஸ் ஜென்னி… இதே மாதிரி கேள்வியை நிறைய பேர் கேட்டுட்டாங்க… எக்கச்சக்கமான அட்வைஸும் பண்ணிட்டாங்க… நான் அதெல்லாம் நிறைய கேட்டுட்டேன்… ஸோ நீயும் ஆரம்பிக்காதே” என்றபடி காரில் ஏறப் போனான்.
“ஓகே ஆரம்பிக்கல… பட் எப்பவுமே இப்படி சீர்யஸா இருக்காதீங்க டேவிட்… கொஞ்சம் லைஃப்பை என்ஜாய் பண்ணுங்க…” என்றதும் காரில் ஏறாமல் நின்றவன் ஆழமாய் பார்த்து
“என்ஜாய் பன்றதுன்னா என்ன ஜென்னி?லவ் பன்றது மேரேஜ் பன்றதுமா? ! நான்ஸென்ஸ்… அதை தாண்டி வாழ்க்கையில வேறெதுவும் இல்லையா… எப்பவும் a + b hole square மாதிரி ஒரே பார்ஃமுலாவை பிடிச்சிக்கிட்டு மேரேஜ் லவ்வுனுதான் எல்லோரூம் வாழனுமா ?” என்று படபடவென பொறிந்து அவனின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தான்.
அவள் இயல்பான புன்னகையோடு
“டேவிட்… நீங்க பார்மூலா மாதிரி வாழ வேண்டாம்… அதே நேரத்தில இவ்வளவு பாஃர்மலாவும் வாழ வேண்டாமே” என்று நிதானித்து சொல்ல
“இறைவனுக்கு சேவை செய்றது… எல்லார்கிட்டயும் அன்பு காட்டிறது… உண்மையே பேசிறது… இதெல்லாம் உங்களை பொறுத்த வரைக்கும் பார்ஃமலானா வாழ்க்கையா ஜென்னி?!” என்று மீளாத அதே ஆதங்கத்தோடே அவளிடம் கேட்டான்.
“அப்படி இல்ல… நீங்க சொன்ன விஷயங்களோட … கொஞ்சம் லவ்வும் கலந்து இருக்கலாமே டேவிட்…” என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு அவன் வியப்பாக பார்த்திருக்க, அவள் துளியும் மாறாத புன்னகையோடு “நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா டேவிட்” என்று ஆரம்பித்தவள் அவனிடம் “கடவுள் இல்லாம கூட இந்த உலகம் இயங்கலாம்… ஆனா காதல் இல்லாம… நோ வே” என்றாள்.
அவளின் இந்த வாதம் அவனை கடுப்பாக்க ” நான்ஸென்ஸ் மாதிரி பேசாதே ஜென்னி” என்று முறைத்தான்.
“நான் ஒண்ணும் நான் ஸென்ஸ் இல்ல… நீங்கதான்”
டேவிடின் பார்வையில் கனலேற அவள் அலட்டிக் கொள்ளாமல் “தப்பா நினைச்சுகாதீங்க… ஸென்ஸ்தான் நம்ம ப்லீங்க்ஸ்… அது இல்லன்னு சொல்றது ஸென்ஸில்லாம நடந்துக்கிறதுதானே? !” என்று கேள்வி எழுப்பினாள்.
அவன் அவளை எகத்தாளமாய் பார்த்து “லவ் ஆட்ரேக்ஷன் இதுக்கு மட்டும்தான் நம்ம ஸென்ஸ் ஆர்கன்னு சொல்ல வர்றியா ?”
“இதுக்கும்னும் சொல்ல வர்றேன்”
“அந்த உம் இல்லன்னா எதுவும் இல்லையோ ?!”
“ஆமாம்” என்று சொல்லி தோள்களை குலுக்கினாள்.
“இட்ஸ் ரிடுக்குலஸ்” என்று அவன் முகத்தை திருப்பிக் கொள்ள
“நோ இட்ஸ் நாட்” என்று மறுத்தவள் அவனிடம் “ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு சக்திதான் இந்த உலகத்தை ஸ்தம்பிக்கவிடாம இயக்கிட்டிருக்கு… சின்ன சின்ன ஜீவராசிகளில் ஆரம்பிச்சி நம்மல மாதிரி மனிஷங்க வரைக்கும்… அந்த உணர்வு இருக்கிற காரணத்தினாலதான் நாம ஸர்வைவ் ஆகிட்டிருக்கோம்… ஏன் தாவரங்கள் உட்பட… அதை இல்லன்னு மறுக்க முடியாமா உங்களால?!”
ஆழமாய் அவள் கேட்ட கேள்வி அவனை பதிலுரைக்கமுடியாமல் செய்துவிட,
அவள் மீண்டும் “ஈர்ப்போட அடுத்த நிலைதான் காதல்… அந்த காதல் இல்லைன்னா வாழ்க்கை சுவராஸ்மா இருக்காது… காதல்தான் எல்லாத்தையும் நேசிக்கவும் ரசிக்கவும் கத்துக் கொடுக்கும்.. வலியை கூட தாங்கிக்கிட்டு வாழவும் கத்துக் கொடுக்கும்… ” என்றாள் அழுத்தமாக!
அவனால் பேசவே முடியவில்லை. அவளின் விளக்கம் வெறும் வாதம் அல்ல என்பதும் புரிந்தது. அது ஏற்கவேண்டிய உண்மைதான்.
அந்த யோசனையோடு அவளை கூர்மையாய் பார்த்தவன்
“நீ சொல்றது புரியுது ஜென்னி… ஆனா என்னால ஒரு பெண்ணை காதல் உணர்வோடு பார்க்க முடியும்னு தோணல… ஐ டோனா ஒய்… தேவையில்லாம எந்த பெண்ணுக்கும் என்னால ஏமாற்றம் ஏற்பட வேண்டாம்… அதனால்தான் நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றது…” என்று தன் மனதை குத்திக் கொண்டிருந்த உண்மையை அவளிடம் வெளிப்படுத்தினான்.
அவள் அவனை நேர்கொண்டு பார்த்து “சுத்தி இருக்கிறவங்களை சந்தோஷமா வைச்சுக்கனும்னா அதுக்கு முதல்ல நம்ம சந்தோஷமா இருக்கனும்… உங்ககிட்ட நிறைய கேரிங் இருக்கு… ஆனா ஷேரிங் இல்ல… நமக்கு யாராவது அன்பை காட்டினாதான்னே நாம மத்தவங்க மேல அதே அன்பை காட்ட முடியும்… அது ஒரு சைக்கிள்… உண்மை என்னன்னா உங்க பேரண்ட்ஸ் வாழ்க்கையில காதல் இல்லங்கிறதால… அதை உங்க வாழ்க்கையிலயும் இல்ல…” என்று ரொம்பவும் நேரடியாக அவன் வாழ்க்கையின் குறைப்பாட்டை அவள் சுட்டிக்காட்ட அவன் முகம் சுருங்கிப் போனது.
பதில்பேசாமல் காரில் சாய்ந்து மௌனமாய் அவன் யோசித்துக் கொண்டிருக்க ஜென்னி அவன் முகமாற்றங்களை பார்த்து துணுக்குற்றவள் “ஸாரி டேவிட்… ரொம்ப அதிகபிரசிங்கித்தனமா பேசிட்டேனா ?” என்றாள்.
அவன் புன்முறுவலோடு ஆமாம் என்று தலையசைக்க அவள் முகம் வாட்டமுற்றது.
அவன் அவளிடம் “ஆனா நீ அப்படி பேசினது எனக்கு பிடிச்சிருந்தது… அட்வைஸை விட இந்த அதிகபிரசிங்கத்தனம் பெட்டர்… இன்னும் கேட்டா யாரும் இதுவரைக்கும் என்கிட்ட இவ்வளவு உரிமையோடு பேசினதில்லை”
என்றான்.
அவள் அமைதியோடு பார்த்திருக்க அவனே மேலும் “நீ சொன்ன விஷயத்தை நான் யோசிக்கிறேன்” என்றான்.
அவள் குதுகலமாகி “சூப்பர்… அப்போ லவ் பன்றதை பத்தி யோசிப்பீங்க”
“ஹ்ம்ம்…. அந்த பீஃல் வந்தா பார்ப்போமே”
“வராம எங்கப் போகுது… வரும்… ஆனா நீங்க இப்படி கடிவாளம் கட்டின குதிரை மாதிரி இருக்காதீங்க” என்றாள்.
அவள் சொன்னதற்கு புன்னகையித்தவன் “சரி ஜென்னி ரொம்ப லேட்டாயிடுச்சு” என்று தயங்க “ஆமா ஆமா லேட்டாயிடுச்சு கிளம்புங்க” என்றாள்.
அதோடு அவளிடம் விடைப்பெற்று காரில் ஏறி அமர்ந்தவன் அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு செல்ல, இரவு நேரம் என்பதால் வாகன நெரிசல்கள் குறைவாகவே இருந்தது.
இருந்தும் டேவிட் மிதமான வேகத்திலயே பயணப்பட்டான்.
அவன் அறிந்த நிதர்சனங்கள் பல அவனுக்கு வலி நிறைந்ததாகவே இருந்திருக்க, இன்று அவள் உணர்த்திய நிதர்சனமோ அவனை புதிதாக பிறக்க செய்தது.
உலகத்தை புது கண்ணோட்டத்தோடு எதிர்கொள்ளச் செய்தது.
ஆனால் ஜென்னிக்கு இது விரைவில் பிரச்சனையாய் மாறப் போகிறது.
வரம் கொடுத்தவன் தலையிலயே கை வைப்பது போல, அவள் உயிர்பித்த அவனின் உணர்வுகள் அவள் புறமே திரும்புமே !