OVS13

விமானநிலையம் வந்த இரு பெண்களும் தங்கள் குடும்பத்தை பிரிய வேண்டுமே என கலங்கி நிற்க,
“என் மேல நம்பிக்கை இல்லையா சுமி?” என்றதும், விழிநீர் துடைத்து கணவன் முகம் பார்க்க,
“நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை இருந்தா அழுகை வராது. உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன்னு தோணுச்சுன்னா அழ மாட்ட. விக்கியைப் பார்! உன் அண்ணன் மேல உள்ள நம்பிக்கையால் தான் எங்களைப் பிரியணும்ன்னு வருந்தினாலும் அழாம இருக்கா!” என இதமாக தோளோடு அணைத்துக் கொள்ள,
‘உனக்கு இப்படி ஒரு நினைப்பா? நான் அழுதா சமாதானம் பண்ண இங்க ஆள் இல்ல, அப்படி யாரும் முன் வந்தால் கூட, இதெல்லாம் இயற்கை தான்…கொஞ்ச நேரத்துல தானே சமாதானம் ஆகிடுவான்னு விரட்டி விட்டுருவான் உன் மச்சான்! உன்னை மாதிரி தாங்கி தடுக்கில் இடமாட்டான்.
எதுக்கு இந்த வேதனைன்னு தான் நான் அழலை’ என அண்ணனிடம் மௌன மொழி பேசியவள், கணவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவனிக்கவே இல்லை. (ஐயையோ! பார்த்துட்டான்…! இன்னைக்கு உனக்கு மண்டகப்படி காத்திருக்கு!)
“விக்கிம்மா, எந்த நேரமானாலும் அப்பாவுக்கு கால் பண்ணு… இதை வச்சுக்கோ, சீக்கிரம் பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டு சொல்லு, கையாவலுக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணிவிடுறேன், உபயோகப்படுத்திக்கோ…” என நோட்டுக் கட்டை கொடுக்க, தலையசைத்தபடி வாங்கிக் கொண்டாள்.
“பாண்டியன் நல்லவர் தான்டா, கொஞ்சம் பிற்போக்கா இருக்கலாம். அதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லடா, பயப்படக்கூடாது. எதுவாயிருந்தாலும் சமாளிக்கப் பழகிக்கனும். உன்னால முடியலைங்கிற நிலை வரும் போது உனக்கு துணையா நாங்க இருக்கோம்ங்கிற நினைப்பு எப்போதும் இருக்கனும்” அண்ணனாய் அறிவுரை சொல்லி, அணைத்துக் கொண்டான் சசி.
“நீ இன்னும் சின்ன குழந்தையில்லை விக்கி. எதுக்கெடுத்தாலும் குழம்பி, கலங்கி நிற்கக்கூடாது. நீ மட்டும் மாப்பிள்ளையை நம்பி இருக்கிறதா நினைக்காதே. அவரும், அவர் குடும்பமும் கூட உன்னை நம்பித் தான் இருக்காங்க. நல்ல மனைவியா, மருமகளா, நாத்தனாரா நடந்துகிட்டு அவங்க நம்பிக்கையை காப்பாத்தணும்.
பொத்தி வளர்க்கிற தோட்டத்து செடியை விட தானே வளர்ற காட்டு செடி தான் திடமா நிலைச்சு இருக்கும். பக்கத்துல யாரும் இல்லையேன்னு பதறக்கூடாது. நிதானமா, தெளிவா நடந்துக்கணும். குடும்பம்ன்னா முன்னபின்ன தான் இருக்கும்.
எல்லோரும், எப்போதும் கொஞ்சிக்கிட்டே இருக்க மாட்டாங்க. சில நேரம் அவங்க கோபத்தை தைரியமா எதிர்கொள்ற உறுதியோடு இருக்கனும். நிக்ட்டோபோஃபியா பத்தி மாப்பிளைக்கு தெரியும் தானே, ஒன்னும் பிரச்சனை இல்லையே?” அறிவுரைகள் பல சொன்னாலும் அன்னையும் பயத்துடனேயே கேட்டார்.
“தெரியும்மா! இங்க பவர் கட் பிரச்சனை இருக்கிறதால இன்வெர்ட்டர் வச்சுட்டாங்க” என்றதும் மாப்பிள்ளையின் மீது மாமியாருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அனைவரும் நிம்மதியுடன் விமானம் ஏறிவிட்டனர்.
‘சுமதிக்கு யாரும் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. மாமனார், மாமியார், கணவன் ஏன் சுந்தரி உட்பட அனைவரும் பொதுவாகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அண்ணன் சொன்னபிறகு அவளும் இயல்புக்கு வந்துவிட்டாள். ஆனால் நமக்குத் தான் வளைச்சு, வளைச்சு எல்லோரும் அட்வைஸ் பண்றாங்க, அந்த அளவுக்கு நான் தைரியமா இல்லையோ?’ சுய அலசலில் ஈடுபட்டிருந்தவளுக்கு வீட்டிற்கு வந்துவிட்டோம் என்பதே தெரியவில்லை.
இதற்கிடையில் சுந்தரியும், பிள்ளையும் வேறு இறங்கிச் சென்றிருக்கிறார்கள். மனைவியின் நினைப்பு இங்கில்லை, அதுவும் சைனா நோக்கி பறந்து கொண்டிருக்கிறது என்பது புரியவே அதை திசை திருப்பும் நோக்குடன்,
“ஈஸ்வரி… வீட்டுக்கு வந்தாச்சு! இறங்கு” என கன்னம் தட்ட, திடுக்கிட்டு இறங்கியவள் தங்கள் அறை நோக்கிப் போக, பிறந்தவீட்டு நினைவுகளோடு முடங்கி போகப் போகிறாள் என்பதை யூகித்து,
“ஈஸ்வரி…!” என அழைக்க,
‘யாரும் இல்லா தனிமையில் கொஞ்ச நேரம் அழுது கரைஞ்சு தூங்கினால் இயல்பாகிடலாம். விடமாட்டான் போலவே… ஈஸ்வரி, ஈஸ்வரின்னு ஏலம் போடுறான்.’ என  எரிச்சலும், அலுப்புமாய்,
“என்ன அத்தான்?” பரிதாபமாய் கேட்க,
“வா, வெளியில் போய்ட்டு வரலாம்” அவள் பதிலுக்காகவெல்லாம் காத்திருக்கவில்லை. கரம் பிடித்து அழைத்துச் சென்றவன், தின்னையருகே வந்ததும் பற்றியிருந்த கரத்தை விட்டு,
“வெளியில போய்ட்டு வர்றோம் பா!” என அறிவித்துவிட்டு, மெஜந்தா வண்ண ஸ்கூட்டியின் அருகே சென்று, ஸ்டார்ட் செய்து,
“ஏறிக்கோ” எனவும்,
“இது யாரோடது? இவன் பைக் என்னாச்சு?” மனதின் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே ஏறிக்கொண்டாள். ஏரிக்கரையில் நிறுத்தியவன்,
“வண்டி பிடிச்சிருக்கா ஜில்லு?”
“ம்…”
வண்டி பற்றி ஏதேனும் கேட்பாள் என காத்திருக்க, அவளோ ம் என்பதோடு முடித்துக் கொண்டதும் சிறு ஏமாற்றம் தோன்றினாலும்,
“உனக்காகத் தான் வாங்கினேன். பிசினெஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அடிக்கடி வெளியில் போக வேண்டியது இருக்கும். என் வேலையை விட்டு உனக்கு டிரைவர் வேலை பார்க்க முடியாதில்ல…? வா கத்துத் தரேன். நம்ம ஊருக்குள்ள டிராஃபிக் பத்தின பயமில்லாம ஓட்டலாம். அப்புறம் சிட்டில ஓட்டுறது சுலபம்”
“ம்ஹூம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம். பயமா இருக்கு… விழுந்துடுவேன்”
“ஆரம்பிக்கிறதுக்கு முன்னேயே அபத்தமா பேசாத ஈஸ்வரி! விழுந்து, எழுந்து தானே நடக்க கத்துக்கிறோம். அது போல தான் இதுவும். நாலு தடவை விழுந்தா தான் நல்லா ஓட்ட முடியும் வா… வா!” என மிரட்டி அவளை முன்னே அமர வைத்து ஆதியோடு அந்தமாய், ஆக்சிலேட்டர், பிரேக், ரியர் வ்யூ எல்லாம் சொல்லிக் கொடுத்து பின்னே அமர்ந்து கரம் பற்றி, ஸ்டார்ட் செய்யவும், வேகத்தை கூட்டவும், குறைக்கவும் சொல்லிக் கொடுத்தான்.
கணவனின் ஸ்பரிசம் முதுகோடு ஒட்டிக்கிடக்க, கழுத்து வளைவில் விரவும் அவனது மூச்சுக்காற்றும், தனது கைகளைப் பற்றியிருக்கும் வலிய கரங்களும் வேதியியல் மாற்றத்தை உண்டாக்க கவனம் சிதறியது. வேகத்தை குறைப்பதற்கு பதில் கூட்டி வைக்க,
“ஈஸ்வரி! நான் என்ன சொன்னேன்…? நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க? கவனம் எங்கேயிருக்கு?” என சிடுசிடுத்தான். தன் தடுமாற்றம் புரிய, அவனது கோபத்தில், நீர் தெளித்த பாலாய் உணர்வுகள் அடங்கிப் போக,
“சாரி அத்தான்…!” கண்களில் குளம் கட்ட முணுமுணுத்தாள்.
‘ஏன்டி இப்படி படுத்துற…? நான் நல்ல மூட்ல இருக்கும் போது உனக்கு இந்த ஃபீலிங்க்கெல்லாம் வராது. இப்போ இருக்க எரிச்சலில் உன்னை கொஞ்சவும் முடியாது.’ என தன்னை சமன் செய்துகொண்டவன் கோபம் விடுத்து… விலகி அமர்ந்து, மென்மையாகவே கற்றுக் கொடுத்தான். பலமுறை அவன் பின்னிருக்க பிரச்ச்னையின்றி ஏரியை சுற்றி வந்தாள்.
“நீயே ஓட்டு. மெதுவா போ, நான் பின்னாடியே வரேன்” என்றதும் மறுப்பாய் தலையசைக்க,
“உன்னால முடியும் ஈஸ்வரி. நல்லா தான் ஓட்டுற! பயப்படாதே!” என உற்சாகப்படுத்தினான். பாதி தூரம் பிரச்சனையின்றி கடக்க சிறு சிரிப்புடன் மெது ஓட்டத்தில் அவளை பின் தொடர குறுக்கே ஒரு நாய் வர, வளைத்து திருப்புவதற்கு பதில்,
“ஏய்! நாய் குட்டி தள்ளிப்போ… ஓடு! ஓடு!” என கூப்பாடு போட… நாயோ சாவதானமாய்ச் செல்ல, (நாய்க்குட்டி வரும்னு கனவா கண்டோம்! நடுரோட்டில் இதெல்லாம் சகஜமப்பா!)
நாய்க்கும் அவளுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வர மோதப் போகிறோம் என்னும் பயத்தில் பிரேக்கை போடுவதற்கு பதில் கைகளை எடுத்து கண்களை மூடி, “ஐயோ!” என அலற, விழப் போகிறாள் எனப் பதறி,
“ஏய்… வண்டியைப் பிடி!!” என்றபடி பாய்ந்து வந்து பிடித்துவிட்டான். இருந்தும் நிலை தடுமாறி வண்டி கீழே விழ, இவள் ஏரியை நோக்கி உருள, பதட்டத்துடன் அவளைப் பிடிக்க முயல, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நீருக்குள் விழுந்துவிட்டாள். செருப்பை உதறி, வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு நீருக்குள் பாய, அவளை காணாது, மேலே தலை தூக்கி,
“ஈஸ்வரி… ஈஸ்வரி!” என பதறி அழைக்க எங்கும் இல்லை. மீண்டும் நீருக்குள் தேடியவனுக்கு பயம் வந்தது. எங்கேனும் சேற்றில் சிக்கிக் கொண்டாளோ… பதட்டமும், பயமுமாய் தேடினான்.
‘ஒருவேளை நீந்தி கரையேறியிருப்பாளோ…?’ மீண்டும் தண்ணீரை விட்டு வெளியே பார்க்க, கவிழ்ந்து கிடக்கும் வண்டியைத் தவிர ஒரு ஈ, காக்கை கூட இல்லை. நிமிடங்கள் கூட யுகங்களாய் தோன்ற, உயிர் பதைக்க, விபரீதமாக ஏதேனும் நடந்துவிட்டதோ என உள்ளம் பதற…
“எங்கடா இருக்க ஜில்லுக்குட்டி?! இருக்க… தானே!?” அழுகை வந்தது. ஏரியின் மையத்திற்கு வந்தவன் தலை தூக்கிப் பார்க்க,
“ஹாய் அத்தான்!” ஒய்யாரமாய் எதிர்க்கரையில் அமர்ந்து கையாட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனையாள். அடுத்த சில நிமிடங்களில் கரையேறிய கணவனிடம்,
“என்னத்தான் பயந்துட்டீங்களா? நான் நல்லா ஸ்விம் பண்ணுவேன்… தெ…” சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவன் கொடுத்த அறையில் கீழே விழுந்துவிட்டாள். மண்டியிட்டு அவள் தோள் பற்றி தூக்கி அமர்த்தியவன்,
“இதெல்லாம் என்ன விளையாட்டு முட்டாளே!? உன்னை பார்க்கிற வரை என் உயிர் என்கிட்டே இல்ல… லூசு! லூசு… எனக்குன்னு வந்து சிக்கியிருக்கு பாரு, கொலு பொம்மை!” அவன் வசைபாடல்களெல்லாம் அவளை எட்டவேயில்லை.
‘உன் உயிர் உன்னிடம் இல்லையா? அப்போ நான் தான் உன் உயிரா? அப்படின்னா நீ என்னை லவ் பண்றியா விருமாண்டி? கேட்போமா?’ அவள் வாய் திறக்க,
“பேசாதே, ஏதாவது பேசின, கொன்னுடுவேன்!” என முறைக்க, இவள் வாய் பிளக்க,
“ஆமா! உன்னைக் காணலைன்னு தண்ணிக்குள்ள ஒருத்தன் துடிச்சுட்டு இருக்க, கொஞ்சம் கூட அக்கறையோ, சுரனையோ இல்லாம மண்ணு மாதிரி உட்கார்ந்திருந்துட்டு ஹாய் வேற… உன்னை என்ன சொல்றது?”
‘இவன் இப்படியெல்லாம் திட்டுவானா? சீ… சீ பேட் பாய்!’
“என்ன முழிக்குற, இன்னும் ஒரு சாரி சொல்லத் தோணலை?”
‘அடப்பாவி! நான் வாயைத் திறக்கும் போதே பேசாதே கொன்னுடுவேன்னு மிரட்டிட்டு இப்போ சாரி சொல்லுங்கிறான்…’ அயர்ந்து நோக்க,
‘ஜில்லு நீ சாரி சொல்லவா வாயைத் திறந்த? நல்ல காலம் காதல், கீதல்ன்னு உளறியிருந்தா இன்னொரு கன்னத்திலும் படம் வரைஞ்சிருப்பான்’ மனம் அறிவுறுத்த, (நீ ம்ன்னு சொல்லு, அவன் மூஞ்சில பூரான் விட்டுருவோம்!)   
“சரி தான், என்ன அடி? காது இன்னும் இறையுது” அதுக்கெல்லாம் யார் சாரி சொல்லுவாங்களாம்?” மெல்ல எழ,
“ஏய், எங்கே கிளம்புற?” என்றான் அதட்டலாய்.
“வீட்டுக்கு தான். குளிருது” ஈரஉடை உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க அவனுக்கும் குளிரத் தான் செய்தது. அதுக்காக இப்படியே போனால் அவள் கன்னத்தில் இருக்கிற கோட்டோவியத்துக்கு ஒரு பஞ்சாயத்து கூட்டுவாங்க, கொஞ்ச நேரமானால் கன்றல் குறையும், பதில் சொல்ல வேண்டியதிருக்காது என்று யோசித்தவன்,
“இன்னும் உருப்படியா ஓட்டலை, அதுக்குள்ள என்ன வீட்டுக்கு? நீயா பயமில்லாம ஏரியை சுத்தி வர்ற வரை இங்க தான், போ… போய் வண்டியைத் தூக்கு” என ஆணையிட,
“அப்போ விடிய, விடிய இங்க தானா? இப்பவே கண்ணை கட்டுதே” என பரிதாப முகம் காட்டினாலும், இரக்கமின்றி துரத்தினான். தட்டுத் தடுமாறி ஓரளவுக்கு ஓட்டக் கற்றுக் கொண்டாள்.
லேசாக இருட்டத் தொடங்க ஆடைகளும் காய்ந்திருந்தது. கன்றலும் காணாமல் போயிருந்தது என்பதால் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவன் உடைமாற்ற, அவளோ கண்ணாடியில் கன்னத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். கணவனின் விரல் தடம் காணாமல் போயிருந்தாலும் லேசாக சிவப்பேறியிருந்தது.
‘அப்ரிஸியேஷனுக்கு கூட முத்தம் கொடுக்காதவன், அடிச்சதுக்கு சாரி சொல்லி முத்தம் கொடுத்திட்டாலும்…’ கண்ணாடி வழியாக கண்ணாளனை நோட்டம் விட,
“என்ன பார்வை? கன்னம் காணாம போயிடலை. பத்திரமாத் தான் இருக்கு, உடுப்பை மாத்து!” என வெளியேறி விட்டான்.
‘அடிச்சு வச்சிட்டு பேச்சைப் பாரு! ஈர டிரஸ் தன்னாலேயே காய்ஞ்சிடுச்சு. அக்கறைப்படுற அழகைப் பார்’ முணுமுணுப்புடன் மாற்றிக் கொண்டாள்.
“ஈஸ்வரி…”
“ஷப்பா! கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுறானா?” அலுப்புடன் அவன் முன் போய் நிற்க,
“உங்க பிஸினஸுக்கு லைசன்ஸ் அப்ளை பண்ணியாச்சு. இன்னும் ஒரு வாரத்தில் வந்திடும். மெஷின் ரெண்டு விலை பேசி வச்சாச்சு. மத்த பொருளெல்லாம் வாங்கியாச்சு, பேக் பண்ண பேப்பர் பேக் அப்புறம் பொருளோட நன்மைகள், உபயோகிக்கும் முறை சொல்ற பேப்பர் பிரிண்ட் பண்ண கொடுத்தாச்சு. நாளைக்கு போர்ட் எழுதுறவன் வர்றான்.
நீங்க பண்ணப் போறது பொடிங்கிறதால மின்விசிறி உபயோகிக்க முடியாது அதனால் இயற்கையா மிதமான காத்து வர்ற திண்ணையிலேயே வச்சுக்கலாம். அதுக்கு முன்ன நீண்ட பத்தியும், கிரில் கேட்டும் இருப்பதால் மழைக்கும் பாதுகாப்பு, திண்ணையை ஒட்டினாற் போல இருக்கிற ரூமிலேயே ஸ்டோர் பண்ணிக்கலாம்.
சப்ளையர், டிஸ்ட்ரிபியூட்டர் எல்லோரையும் ஒரு முறை அறிமுகப்படுத்தி விடுறேன். அப்புறம் நீ பார்த்துக்கோ. ஒரு வாரத்துக்குள்ள வண்டியை நல்லா ஓட்ட கத்துக்கோ” என விளக்கம் வைக்க, தான் இல்லாத நாட்களில் தனக்காக இத்தனை வேலை பார்த்திருக்கிறான் என்றதும் காதல் பெருக, நடுக்கூடம் என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் அவன் கன்னத்தில் முத்தமிட, வேகமாய் துடைத்துக் கொண்டவன், சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட,
‘உனக்கெல்லாம் முத்தம் கொடுத்தேன் பாரு, என்னை சொல்லனும்!’ என முகம் தூக்கி வாசலில் அமர்ந்து ஊர் கதை பேசும் கூட்டத்தில் உப்புக்கு சப்பாணியாய் உட்கார்ந்திருக்கும் மாமியாரோடு தானும் இணைந்து கொண்டாள்.
“கள்ளி, முத்தம் கொடுத்து மூடை ஏத்திவிட்டுட்டு ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளை மாதிரி வேடிக்கை பார்க்கிறதை பாரு” காண்டாகியவன் திண்ணையில் அமர்ந்து அடிக்கொரு தரம் அவளைப் பார்ப்பதை வேலையாகச் செய்து கொண்டிருந்தான். அந்நேரம் கரண்ட் கட்டாக, நொடிப்பொழுதில் இன்வெர்ட்டர் உபயத்தில் ஒளிவெள்ளம் பெருக, இது எப்படி சாத்தியம்? என்பது தான் பேச்சாகிப் போனது அம்மக்களுக்கு.
அவனுக்கு முன்னதாகவே படுக்கைக்கு வந்தவள், கைபேசியில் இருக்கும் தன் பிறந்த வீட்டு சொந்தங்களின் புகைப்படத்தை பார்த்தபடி சயனித்திருக்க, அறைக்குள் வந்தவன் விளக்கை அணைக்க,
“இப்போ எதுக்கு லைட்டை ஆப் பண்றீங்க? போடுங்கத்தான்!” பயமும், கோபமுமாய் சொல்ல, மீண்டும் ஒளிரவிட்டவன்,
“என் பொண்டாட்டி இங்க தான் இருக்காளா இல்லை கூடுவிட்டு கூடு பாய்ஞ்சு சீன தேசம் போயிட்டாளான்னு செக்கிங்…வேற ஒண்ணுமில்லை நீ தூங்கு விக்கி”
‘நக்கல் தானே’ சினந்தவள் அவனை முறைக்க,
“என்ன முறைப்பு? அடுத்த வீட்டு பொண்ணுன்னா அட்வைஸை அள்ளிவிடுறது? தன் வீட்டு பொண்ணுக்குன்னா நம்பிக்கையை விட சேஃப்டி தான் முக்கியமாகிறது…இதெல்லாம் எந்த ஊர் நியாயமோ?”
“புரியலை… எனக்குத் தான் ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணாங்க. சும்மா ஏதாவது சொல்லாதீங்க!” முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
“ஓஹோ! கட்டுக்கட்டா உன் அப்பா பணம் கொடுத்தாரே, அது எதுக்கு?” குரலின் மாறுபாடு உறுத்தினாலும்,
“கைச்செலவுக்கு வச்சுக்கோன்னு கொடுத்தாங்க. அக்கவுண்ட் ஓபன் பண்ண சொல்லியிருக்காங்க, அதிலும் பணம் போடுவாங்க. அவங்க பொண்ணுக்கு கொடுத்தாங்க. இதில் என்ன பிரச்சனை?” புரியாமல் விழிக்க,
“கைச்செலவுக்கு கூட காசு கொடுக்க முடியாத அன்னக்காவடிக்கு பொண்ணை கட்டிட்டோமேன்னு சொல்லாம சொல்றார், அப்படித் தானே?”
“அத்தான், ப்ளீஸ்… நானே எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கேன். நீங்க வேற படுத்தாதீங்க. இது அவசர ஆத்திரத்துக்கு யூஸ் பண்ணிக்கிறதுக்காக கொடுத்தது தான். அன்றாட செலவுக்கு இல்லை. வம்பு வளர்க்காதீங்க! எனக்கு தூக்கம் வருது”
“அவசரம்ன்னா எப்படி? புருஷனோட சண்டைன்னா பெட்டியை கட்டி கிளம்புறதுக்காக கொடுத்ததா?” உக்கிரம் அடக்கி கேட்க, பட்டென எழுந்தமர்ந்தவள்,
“இப்போ என்ன பிரச்னை உங்களுக்கு?” அமைதியாகவே கேட்டாள்.
“உன் அப்பா என்னை நம்பலை! நாங்க உன்னை நல்லா பார்த்துப்போம்ங்கிற நம்பிக்கை இல்லை. அது தான் பணம் கொடுத்து சேப்டி பண்றார்” எங்கோ வெறித்தபடி சொல்ல,
‘இவன் பக்கத்தில் இருந்து பார்த்தால் இவனது வருத்தம் நியாயம் தான்’ மெல்ல அவன் தோள் தொட்டு,
“சாரி அத்தான், எப்படி நினைச்சு கொடுத்தாங்களோ தெரியல, அதை திருப்பிக் கொடுத்திடுறேன். போதுமா? நீங்க ஹர்ட் ஆகாதீங்க ப்ளீஸ்!” எனக் கெஞ்ச,
“கொடுக்க வேண்டாம். வச்சுக்கோ”
“ஏன்?” அதிர்வுடன் கேட்டாள்.
“கடைசி வரை நீ இந்த பணத்தை உபயோகப்படுத்தக் கூடாது. ஒருவேளை அப்படி ஒரு சூழல் உருவானா… நாம வாழுற வாழ்க்கைக்கு அர்த்தமில்லாம போயிடும். அதாவது, எப்போ இந்த பந்தம் வேண்டான்னு தோணுதோ அப்போ தான் இதை யூஸ் பண்ணனும்!” என்றாலும் அந்தப் பணத்தை எடுக்கும் நிலை வரவே கூடாது என மானசீகமாய் வேண்டிக் கொண்டவன்,
‘ராணி விஷயம் பேசிவிடுவோமா? என் மீது நம்பிக்கை இருந்தால் எப்போது சொன்னாலும் நம்புவாள். ஒருவேளை எதிர்மறையான விளைவு வரும்ன்னா, இப்போ சொல்ல வேண்டிய அவசியமில்லை. முடிந்த வரை தள்ளிப் போடலாம். அதுக்குள்ள என் அன்பு புரிஞ்சுட்டா பிரச்சனை இருக்காது.’ தேற்றிக் கொண்டவனாய் விழி மூடிக் கொண்டான்.
‘இன்னும் கோபமோ? ஒரு நாள் இரவுக்கே ஆ… ஊன்னான் இப்போ அஞ்சு நாள் கழிச்சு வந்திருக்கேன், நல்ல பிள்ளையா தூங்குறான்… சரியில்லையே’ மனதோடு மல்லுக்கட்டி,
“அத்தான்!”
“ம்…”
“அதான் சாரி சொல்லிட்டேன்ல…” மார்பில் தலை சாய்த்து முகம் பார்க்க,
“நானும் தான் சரின்னு சொல்லிட்டேனே…” விழி திறக்காமலேயே சொன்னான்.
“அப்புறம் ஏன்…?” எப்படிச் சொல்ல என்ற சிறு யோசனைக்குப் பின்
“தூங்குறீங்க?” என இழுக்க,
“தூக்கம் வருது, தூங்குறேன். குட்நைட்… நீயும் தூங்கு ஈஸ்வரி…” இதமாய் தட்டிக் கொடுத்தான்.
‘இவனை எப்படி சரி செய்ய? ஐயோ, அப்பா… உங்களை யார் பணம் கொடுக்கச் சொன்னது? ஆங்கிரி பர்ட் ஆஃப் ஆயிடுச்சு பாருங்க” சரி செய்யும் வகை தெரியாமல் தந்தையை கடிந்து கொண்டவள், மெல்ல தூங்கிப் போனாள்.
காலையில் அலுவலகத்திற்கு தயாராகியவன், மனைவியின் கன்னம் தட்டி எழுப்ப எத்தனிக்க, உடற்சூடு அதிகமாக இருப்பது போல் தோன்ற,
‘சுடுற மாதிரி இருக்கே, காய்ச்சலோ?’ என நெற்றியிலும், கழுத்திலும் தன் கை வைத்துப் பார்க்க, அவளுக்கு காய்ச்சல் இருப்பது புரிய,
“ஈஸ்வரி…!” பதட்டத்துடன் எழுப்ப, அவளோ அவன் கரம் பற்றி, தன்  கன்னத்தோடு அழுத்திக் கொண்டு,
“போயிடாதீங்க அத்தான்! என் கூடவே இருங்க…” என்றதும் மறுப்பின்றி  அவள் அருகே அமர, மடி சாய்ந்து கொண்டாள்.
‘கடவுளே, நேத்து தண்ணிக்குள்ள விழுந்து ஈர உடையோட ரொம்ப நேரம் இருந்தது, அவள் உடம்புக்கு ஒத்துக்கல போல, தப்பு பண்ணிட்டேன். உடனே வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கணும்!’ எனும் வருத்தம் மேலிட,
“நீ படுத்துக்கடா ஜில்லு, நான் டாக்டரை கூட்டிட்டு வந்துடுறேன்”
“வேணாம்… நீங்க என் பக்கத்திலேயே இருங்க, போதும்!” என்றவளால் கண்களை திறக்க முடியவில்லை. இருந்தும் விழிநீர் காது தொட,
“அழாதடா ஜில்லு, நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்”
“நான் அழல அத்தான். கண்ணெல்லாம் எரியுது, அது தான் கண்ணீர் வருது. உடம்பெல்லாம் வலிக்குது…” என்றவளுக்கு உண்மையாகவே அழுகை வந்துவிட்டது.
“ரொம்ப கஷ்டப்படுற, உன்னால எழுந்து கிளம்ப முடியாது. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன். எனக்கு இருபது நிமிஷம் கொடு, அம்மாவை வேணும்னாலும் உன் பக்கத்தில் இருக்க சொல்றேண்டா!”
“இல்ல… இல்ல, வேண்டாம். என் பையில் பாராசிட்டமால் இருக்கும். அதை எடுங்க போதும். நீங்க என் பக்கத்துலயே இருங்க…”
“டாக்டர் கொடுக்காம நாமா கண்டதையும் போடக் கூடாது ஈஸ்வரி. சீக்கிரம் வந்துடுறேன்.”
“இது நான் சைனாவிலே யூஸ் பண்ணினது தான். அதையே கொடுங்க. நீங்க கூடவே இருங்க!”
“சின்ன புள்ளை மாதிரி பிஹேவ் பண்ணாத ஈஸ்வரி! நீ முன்னாடியே யூஸ் பண்ணினேங்கிறதுக்காக இப்பவும் அதையே தொடரணும்ங்கிறது இல்ல. அது சரியும் இல்ல. டாக்டரை பார்த்து தான் மாத்திரை வாங்கணும். கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ… வந்துடுறேன்.”
“ம்ஹூம்… முடியலன்னு சொல்றேன். விட்டுட்டு போறதிலேயே குறியா இருக்கீங்க அத்தான்! அத்தை….” என மருமகளின் தீனக் குரல் கேட்க, மகன் உள்ளே சென்று வெகுநேரமாகியும் வராததால் காலம் கடத்தாமல் இவர்களது அறைக்கு வந்துவிட்டார்.
மகனது மடியில் சுருண்டு கிடக்கும் மருமகளை கண்டு பதறி,
“என்னத்தா ஆச்சு?!” என வாஞ்சையுடன் நெற்றி வருட,
“ஆத்தி! உடம்பு அனலா கொதிக்குதே! நான் போய் அப்பாவ டாக்டரை கூட்டிட்டு வரச் சொல்றேன்!”  என விரைந்தவர் பிரச்சினையை சுலபமாக சரி செய்ததோடல்லாமல், தண்ணீரும், மெல்லிய வெள்ளைத் துணியும் கொண்டுவர,
“கொடுங்கம்மா, நான் பார்த்துகிறேன்” என அவரிடம் வாங்கியவன், மடி மீது இருக்கும் மனைவியின் நெற்றியில் ஒற்றடம் கொடுக்க ஆரம்பித்தான். இருபது நிமிடங்களில் வந்த மருத்துவர், அவளைப் பரிசோதித்துவிட்டு,
“காய்ச்சல் அதிகமா இருக்கு, அதனால இப்போ ஒரு ஊசி போடுறேன். நான் கொடுத்திருக்கிற மாத்திரைகளை கொடுங்க. காய்ச்சலை குறைக்க, இப்பொழுது செய்யும் ஸ்பஞ்சிங் மிகச் சரியானது. அதையே தொடருங்க. தேவைப்பட்டா நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்றபடி அவர் ஊசியை எடுக்க, இவளோ ஊரையே கூட்டினாள்.
“ஊசி வேணாம். நான் அதெல்லாம் போட்டதே கிடையாது. மாத்திரையே போதும். அதுலேயே சரியாகிடும். நீங்க சொல்லுங்கத்தான்!” (யாருகிட்ட போய் சப்போர்ட் கேக்குது பாரேன்!)
“சொல்றதைக் கேளு ஈஸ்வரி, ஒரு ஊசி தானே போட்டுக்கோ. நீ தானே ரொம்ப கஷ்டப்படுற… உடம்பு வலி குறையும்!” என அவளுக்கு எடுத்துச் சொல்ல,
“மாத்திரையே போட்டுக்கிறேன்… நீங்க எனக்கு கை, கால் பிடிச்சு விட மாட்டீங்களா?” என சிடுசிடுக்க, அவளது கோபம் அவனை ஏதும் செய்யவில்லை. மாறாக அவள் மேல் வாஞ்சை தான் கூடியது. தன் பெற்றோர் தவிர மூன்றாம் மனிதராய் டாக்டரும் இருக்க, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவள் நலம் ஒன்றே குறியாய் சிறுபிள்ளைக்கு விளக்குவது போல்,
“நான் உன்னை பார்த்துக்கிறேன்டா. கண்டிப்பா கை, கால் பிடிச்சுவிடுறேன் ஆனாலும் நீ ஊசி போடுறபடி போட்டுக்கோ. அப்போ தான் சீக்கிரம் குணமாகும். உன்னால் தாங்க முடியலை பார்!” எனப் போராடி, ஒரு வழியாய் அவளை சம்மதிக்க வைத்தான்.
இருந்தும், புஜத்தில் போட்ட ஊசியால் தோன்றிய சிறு வலிக்கு, தன் கண்களை இறுக மூடி, பற்கள் கொண்டு  இதழ் கடித்து, அவன் மார்பில் முகம் புதைத்து, உடலை இறுக்கி தன் கரங்கள் கொண்டு அவன் புஜத்தை அழுத்தி அவனுக்கு பெரும் வலியை உண்டாக்கிய பின்னரே ஓய்ந்தாள்.
மருத்துவரோ, “சின்ன பிள்ளைகளுக்கு கூட நான் சுலபமா போட்டுருக்கேன். ஆனா இப்படி அடம்பிடிக்கிற புள்ளையை பார்த்ததில்லை!” என தனது 30 வருட அனுபவத்தை புரட்டி பார்த்து குறும்பாய் புன்னகைத்து விடைபெற்றார். (நீங்க அனுபவஸ்தர்ங்கிறதால சரியா போச்சு, இதே கத்துக்குட்டி டாக்டரா இருந்தா அவனுக்கு மாத்தி குத்தியிருப்பார்!)
“புள்ளைக்கு இந்த கஞ்சியை கொடுய்யா. நான் வேலையை முடிச்சிட்டு வாரேன்!” என்று நாசூக்காய் அவ்விடம் விட்டு நகர்ந்தார் குணா.
“மாமா…!” என மெல்லிய குரலில் அழைக்க, அவரோ மருத்துவரை வழியனுப்ப சென்றிருந்தார்.
“ஐயோ! செத்தேன்… ரொம்ப பண்ணிட்டேனோ… இதுக்கு வேற திட்டுவானோ? அத்தை ஏன் இப்போ போனாங்க? தனியா மாட்டிகிட்டேனே!?” என அவன் முகம் பார்க்க, (உனக்கு காய்ச்சல் வந்தா குடும்பமே கூடி கும்மியடிக்கணுமா… உனக்கெல்லாம் ஆங்கிரி பர்ட் தான் சரி!)
அவனோ மனையாளை தன் தோள் மீது சாய்த்துக்கொண்டு, அன்னை கொண்டு வந்த உடைஅரிசி கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினான். மறுப்பின்றி வாங்கிக் கொண்டாள்.
“நீங்க ஆபிஸ் போகப் போறீங்களா?” (பச்சை புள்ளை மாதிரி அடம் பண்ணிட்டு இப்போ பயம் வேற! எங்களால ஒன்னும் பண்ண முடியாது போ!) அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, தோன்றிய புன்னகையை அவளிடம் காட்டாது,
“ஏன் கேட்குற?”
“நீங்க போறதுன்னா போங்க. நான் அத்தை கூட சமத்தா இருந்துப்பேன்.”
“கொஞ்ச நேரம் முன்னாடி என் கூடவே இருங்கன்னு கேட்டவங்க எங்க போனாங்க?” புருவம் உயர்த்தி நக்கலாய் வினவ,
“இப்போ காய்ச்சல் கொஞ்சம் பரவாயில்லை. ஊசி வேற போட்டாச்சு. ஐ ஃபீல் பெட்டர்” என்றாள் பவ்யமாய்.
“அப்போ என்னை தேடமாட்ட, இனி இந்த அத்தான் தேவையில்ல அப்படித் தானே?” கேட்கும் போதே அவனுள் சிறு வலி உண்டானாலும், அழகாய் அதை மறைத்தான். ஆனாலும் அவள் கண்டுகொண்டாள்.
‘என்னடா இது நான் பண்ணியிருக்க அளப்பறைக்கு ஆங்க்ரி பேர்ட் விழிச்சுகிட்டு வகையா வச்சு செய்யும்னு பார்த்தா ஒரே ஃபீலிங்கா இருக்கு?’ என தைரியம் பெற்றவளாய்,  
“இல்ல, இல்ல… நீங்க எப்போதும் என் பக்கத்திலேயே இருக்குறது தான் பிடிக்கும். நீங்க ஆபீஸ் போகணுமேன்னு தான் சொன்னேன்.  காலையில அம்மா ஞாபகம் அதிகமா இருந்துச்சு, நீங்க கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு… அது தான் சின்ன பிள்ளை மாதிரி அடம் பண்ணிடேன். சாரி!”
“அது கூட நல்லா தான் இருந்துச்சு. நான் மீதி சீனையும் பார்க்கிறேன். நீ நடத்து!” என தன்  கால் நீட்டி வாகாய் அமர,
“நான் தூங்கப் போறேன்!” என்றாள் பாவமாய்.
மறுபேச்சின்றி, அவளை தன் மார்பில் தாங்கி ஸ்பஞ்சிங் செய்ய, நல்ல பிள்ளையாய் கண்கள் மூடிக் கொண்டாள். கணவனின் இதம் மனதை நிறைக்க,
“வோ ஐ நி சோங் அர்! என்னும் முணுமுணுப்புடன் மார்பில் முத்தமிட,
“தூங்கு டா…” என நெற்றியில் முத்தமிட்டு, அவளை வாகாய் படுக்கையில் கிடத்தி கால்களை மென்மையாய் பிடித்து விட்டான். அவளோ, கண் அயர்வதற்கு பதிலாய், தன் கண்ணாளனேயே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அவனது அன்பும், அக்கறையும், கவனிப்பும் அன்னை சொன்னதை உண்மை என்றாக்கின.
மீதம் நாளை சொல்லுவான்…