Poi poottu 5

Poi poottu 5

9
காலை சீக்கிரமே கிளம்பிச் சென்றிருந்தான் ராஜேஷ். கார்த்திக் இல்லாததால் இங்கே இருக்கும் வேலைகள் அனைத்தையும் அவன் பார்க்க வேண்டுமே…
அவன் சென்றதும் தானும் தயாராகி காரை எடுத்துக் கொண்டு கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மீனா.
கார் சத்தம் கேட்டதும் விரைந்து வெளியே வந்த கவிதா “வாடி… உனக்காகத் தான் வெயிட் பண்ணுறேன்” என்று தோழியின் கை பிடித்து உள்ளே அழைத்தாள்.
“சும்மா சுத்தாத… உனக்கு இந்த டைரி படிக்கணும். அதுக்காக வெயிட் பண்ணேன்னு சொல்லு. நான் வரதப் பத்தியெல்லாம் நீ என்னைக்குச் சந்தோஷப்பட்டிருக்க?”
“போடி… நீயும் இல்லன்னா எனக்கு போர் அடிக்காதா? முதல்ல அத குடு. நீ படிச்ச வர நான் படிச்சுட்டு தரேன்” அவள் கையிலிருந்து டைரியை வாங்கிக் கீழே இருந்த ரோஷனின் அறைக்குள் சென்றாள் கவிதா.
மீனா ஏற்கனவே போனில் தான் படித்தவரை கவிதாவிடம் கூறியிருந்தாள். அதுவரை படித்தவளால் அந்த இடத்தில் நிறுத்த முடியவில்லை.
ஆர்வ மிகுதியால் அறை வாயிலை எட்டிப் பார்த்தாள். மீனா ரோஷனுடன் பேசும் சத்தம் கேட்டது. அவசர அவசரமாக வாசித்தாள்.
ப்ரேக் விட்டதும் ஜென்னி கேள்விக் கேக்குறதுக்கு முன்னாடி கிளாஸ் விட்டு வெளில போயிடணும்னு யோசிச்சு வேகமா வெளில வந்தேன். கிளாஸ் வாசலுக்குப் பக்கத்துல கௌதம் நின்னுட்டு இருந்தான்.
திடீர்னு அவன என் கிளாஸ் வாசல்ல, அதுவும் இவ்வளவு பக்கத்துல பார்த்ததும் நான் ஸ்தம்பிச்சு நின்னுட்டேன்.
என்ன பேசணும்? என்ன பண்ணணும்? நிக்கணுமா? இல்ல ஓடி போயிடணுமா? எதுவுமே எனக்குத் தோணல.
“என்னடி இங்க நிக்குற?”னு ஜென்னி கேட்டதும் திரும்பினேன். அவ என் பின்னாடி வந்துட்டு இருந்தா. அவளும் கௌதம அங்க எதிர்ப்பார்க்கல. என்னையும் அவனையும் மாத்தி மாத்திப் பார்த்துட்டே நின்னா.
மத்த நேரத்துல எல்லாம் தேவைக்கு அதிகமா யோசிக்குற ஜென்னி, இப்போ இப்படி மண்ணு மாதிரி நின்னதும் எனக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சு.
கௌதம் கைய கட்டி நின்னு என்னையே உத்துப் பார்த்துட்டு இருந்தான். நான் தல குனிஞ்சு நின்னேன்.
“உன் பேரு என்ன?”
கௌதம் முதல் முதல்ல என்கிட்ட பேசுறான்… என்னால என் காதையே நம்ப முடியல.
சூரியன் உதிக்காத இருள் சூழ்ந்த காலை வேளையில கேக்குற முதல் குயில் கூவும் சப்தம் மாதிரி… பிறந்த குழந்தையின் முதல் அழுகை சப்தம் மாதிரி… மழை வரும்போது விழுற முதல் மழை துளியோட…
“உன் பேரு என்னன்னுக் கேட்டேன்?”னு கௌதம் மறுபடியும் கேட்டதுக்கு அப்பறம் தான் அவன் என்கிட்ட கேள்விக் கேட்டான்றதே எனக்கு ஞாபகம் வந்துது.
பேரு… என் பேரு… ஐயோ… சத்தியமா அந்த ஒரு நொடி என் பேரே எனக்கு மறந்துப் போச்சு. இவ்வளவையும் மனசுக்குள்ள பேசினேனே தவிர என்னால என் உதட்டப் பிரிக்க முடியல.
“அவ பேரு ரேணு” நல்லவேளை ஜென்னி சொல்லிட்டா. அவன் ஒரு தடவ அவள பார்த்துட்டு என்னைப் பார்த்தான். திரும்ப அவள பார்த்து “நீ போ… நான் இவ கூடக் கொஞ்சம் தனியா பேசணும்” னு சொன்னான். எனக்குச் சர்வமும் அடங்கி ஒடுங்கி போயிடுச்சு…
என்னாது? தனியா பேசணுமா?
ஜென்னிய போகாதன்னுக் கண்ணாலயே கெஞ்சினேன். கிராதகி… அவன் சொன்னதும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு ஓடிட்டா.
“வா”னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு முன்னாடி நடந்தான். வேற வழி இல்லாம நானும் அவன் பின்னாடி போனேன்.
“நடக்க முடியாமல் அவள் கால்கள் பின்னிக் கொண்டன…” ஏதோ ஒரு கதைல படிச்ச வரி… அந்த நேரம் என்னோட நிலமையும் அப்படித் தான் இருந்துது.
கிரௌண்ட்ல ஒரு மரத்தடில போய் நின்னு திரும்பிப் பார்த்தான். சுத்தி நிறையப் பேர் இருந்தாங்க. சிலர் எங்கள கவனிச்சாலும் யாரும் பெருசா ரியாக்ட் பண்ணல.
நான் நிமிர்ந்து அவனப் பார்த்தேன். கொஞ்ச நேரம் என்னை ஆழமா பார்த்தவன் “எதுக்கு இன்னைக்கு என் கிளாஸ் பக்கம் வந்த?”னு கேட்டான்.
பாத்துட்டான்… என்னை அவன் சரியா கவனிக்கலன்னு நெனச்சேன். ஆனா நான் அவன் கிளாஸ் பக்கம் வந்ததப் பார்த்துட்டான். இப்போ என்ன சொல்லி சமாளிப்பேன்?
“அது பர்ஸ்ட் இயர் ப்ளாக் கிடையாது. அப்பறம் எதுக்கு அங்க வந்த?”னு கேட்டான். நான் அமைதியா தல குனிஞ்சு நின்னேன்.
“அன்னைக்கு காண்டீன்ல எதுக்கு என் மேல மோதுனதுக்கு அழுத?”னு கேட்டான்.
எனக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. இதெல்லாம் இவன் கவனிச்சானா? யாராவது வந்து என்னைக் காப்பாத்த மாட்டாங்களான்னு சுத்திப் பார்த்தேன். எல்லோரும் அவங்கவங்க வேலையப் பார்த்துட்டு இருந்தாங்க.
“க… வீ… ஈ…” ஹாலிலிருந்து மீனா கத்திய கத்தலில் தூக்கி வாரிப் போட்டு அவசரமாக டைரியை மூடிய கவிதா “என்ன மீனா?” என்று குரல் கொடுத்தாள்.
“ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்காத. நான் படிச்சத விட நீ அதிகமா படிக்க ஆரம்பிச்சுட்டன்னு எனக்குத் தெரியும்”
‘எப்படிக் கண்டுப்பிடிச்சா?’
“இல்ல மீனா…”
“நீ படிக்குற ஸ்பீட் எனக்குத் தெரியும். பொய் சொல்லாத”
“ஹே ப்ளீஸ் மீனா… நீ வீட்டுல போய்ப் படிச்சுக்கோயேன்… ப்ளீஸ்டி…”
“படிச்சுத் தொல”
செண்பகம் “அடடடா… இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இப்படிக் கத்துறீங்க? மீனாக்கா டைரி உங்கக்கிட்ட தான இருக்கப் போகுது? நீங்க வீட்டுல போய்ப் படிக்கத் தான போறீங்க? அப்பறம் என்ன?
கவிதா அக்கா… அதான் மீனா அக்காவுக்கு நீங்க படிக்குறது தெரிஞ்சுடுச்சே… வெளில வந்து உட்கார்ந்தே படிங்க. எதுக்கு இப்படி ஆளுக்கு ஒரு ரூம்ல உக்காந்து கத்திட்டு இருக்கீங்க?” என்று சத்தம் போட்டாள்.
மீனா ரோஷனின் பொம்மையைக் கீழே வைத்து விட்டு எழ கவிதா டைரியுடன் ஹாலிற்கு வந்தாள். “செண்பா…” என்று இருவரும் ஒரு சேர கூவினர்.
“நான் இல்லபா…” வேகமாகச் சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள் செண்பகம்.
“போய்ப் படி போ” என்று மீனா கூற கவிதா சோபாவில் அமர்ந்தாள்.
கௌதம்கு என்ன பதில் சொல்லுவேன்? அமைதியாவே நின்னுட்டு இருந்தேன்.
“எதுக்கும் பதில் சொல்ல மாட்டியா? சரி என் பேரு தெரியுமா?”னு கேட்டான்.
அதுக்கும் நான் முழிச்சேன்.
“கௌதம். நீ எதுக்கு என்னை இப்படி முழுங்குற மாதிரி பார்க்குறன்னுத் தெரிஞ்சுக்கலாமா ரேணு”னு கேட்டான்.
அவ்வளவு தான். அங்கேருந்து என்னால எவ்வளவு வேகமா நடந்து வர முடியுமோ அவ்வளவு வேகமாத் திரும்பிப் பார்க்காம நடக்க ஆரம்பிச்சுட்டேன்.
பர்ஸ்ட் இயர் ப்ளாக் கிட்ட வந்ததும் ஒரே ஓட்டமா ஓடி வந்து… படில வேகமா ஏறி… கிளாஸ்குள்ள வந்தப்போ எனக்கு மூச்சே நின்னுடும் போல இருந்துது.
ம்ம்ஹும்ம்… சாமி சத்தியமா இனி அவன் இருக்கப் பக்கம் தல வெச்சுப் படுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு கைய இறுக்கி புடிச்சு உட்கார்ந்திருந்தேன்.
என் பக்கத்துல வந்த ஜென்னி “எதுக்குடி இப்படி வெறப்பா இருக்க?”னு கேட்டா.
முன்னாடி இருந்த நோட்ட எடுத்து அவ தலையிலயே அடிச்சு “நீ போ னு சொன்னா இப்படித் தான் தனியா விட்டுட்டு போயிடுவியா?”னு கத்துனேன்.
“நான் என்ன தெரியாத யாரோக்கிட்டயா உன்ன விட்டுட்டு போனேன்? கௌதம் அண்ணா தான?”னுக் கேட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.
இவ இளிச்ச சத்தத்த கேட்டு “யாருடி? இப்போ நம்ம கிளாஸ்கு வெளில இவ கூடப் பேசுன சீனியரா?”னு ஆர்வமா கேட்டு ரம்யா என்னோட இன்னொரு பக்கம் வந்து உட்கார்ந்தா.
அவள திரும்பி மொறச்சேன். இந்த ஆர்வத்த எல்லாம் படிப்புல காட்டிடாதீங்கடின்னு மனசுக்குள்ள அவள திட்டுனேன்.
பின்னாடி பெஞ்ச்ல உட்கார்ந்திருந்த கிருபா, பூஜா, கலை மூணு பேரும் என்ன புடிச்சு இழுத்து “ஹே நெஜமாவாடி? அந்தச் சீனியர் அண்ணாவாடி? எப்போலேருந்துடி?”னு மாத்தி மாத்தி கேக்க ஆரம்பிச்சாங்க.
ஷ்ஷ்ஷ்… ஜென்னி…… உன்ன கொல்லாம விட மாட்டேன்டி… அவள ஒரு பார்வை பார்த்தேன்.
எந்திரிச்சு வெளில போயிட்டா. அப்பவும் வாயப் பொத்தி சிரிச்சுட்டே தான் போனா. அப்படி என்ன அவளுக்கு என்னைப் பார்த்தா சிரிப்பா வருதுன்னு தெரியல. இதுங்கக்கிட்ட மாட்டி விட்டுட்டு போயிட்டாளே… எப்படிச் சமாளிக்கப் போறேன்னு பயந்துட்டே திரும்பி பார்த்தேன்.
மூணு பேரும் சொல்லு சொல்லுன்னு சொன்னாங்க. பக்கத்துல இருந்த ரம்யா சொல்லுடி ப்ளீஸ்னு சொன்னா.
“அது ஏன்டி அடுத்தவங்க லவ் பண்ணா இவ்வளவு ஆர்வமா கதை கேக்குறீங்க?”ன்னு கேட்டேன்.
“லவ் ஸ்டோரி எல்லாமே இண்டரெஸ்டிங்கா இருக்கும்டி. நாங்க தான் லவ் பண்ணல… அட்லீஸ்ட் அடுத்தவங்க கதையாவது கேக்கலாம்ல”னு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாங்க.
நல்லா இருக்குடி உங்க லாஜிக்.
நான் நாலு பேரையும் ஒரு தடவ பார்த்துட்டு “நான் யாரையும் லவ் பண்ணல”ன்னு சொன்னேன்.
“அப்பறம் எதுக்கு அந்த அண்ணா உன்கிட்ட வந்து பேசுனாங்க?”னு கிருபா கேட்டா.
“தெரியாது”னு சொன்னேன்.
“சரி என்ன பேசுனாங்க?”னு கலை கேட்டா.
எங்கேருந்துடி எனக்குன்னு வந்து சேருறீங்க? முடியல என்னால… கௌதம் கேட்டத நான் எப்படி இவங்கள்ட சொல்ல முடியும்? அமைதியா இருந்தேன்.
“இவ பொய் சொல்லுறாடி. இவங்களுக்குள்ள ஏதாவது சண்டையா இருக்கும்”னு பூஜா சொன்னா.
உடனே ரம்யா முந்திக்கிட்டு “ஒஹ்ஹ்… அதான் அவங்கள கிளாஸ்கு வெளில பார்த்ததும் அப்படியே அமைதியா நின்னாளா?”னு கேட்டா.
“ஆமா ஆமா… அந்த அண்ணா இவள பாத்ததுலயே தெரியல… இவள எவ்வளவு லவ் பண்ணுறாங்கன்னு” இது கலை.
“இவங்க எப்படிடி மீட் பண்ணி இருப்பாங்க?”னு கிருபா கேட்டா.
அடீஈ… பாவிகளா… சம்பந்தப்பட்டவ நான் இங்க குத்துக் கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேன். நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்ததும் டோட்டல் ஸ்டோரியே பார்ம் பண்ணி முடிச்சுட்டீங்களேடின்னு எனக்கு மலைப்பா இருந்துது.
அந்த நேரம் ஜென்னி உள்ள வந்ததும் அவள தொரத்தி தொரத்தி அடிச்சேன். அவளும் பெஞ்ச் மேலயெல்லாம் ஏறி ஓடி என்கிட்ட அடி வாங்கி மூச்சு வாங்க அவ இடத்துல வந்து உட்கார்ந்தா. நானும் மூச்சு வாங்க அவ பக்கத்துல உட்கார்ந்தேன்.
கௌதம் அண்ணா என்ன சொன்னாங்கனு கேட்டா. பின்னாடி பெஞ்ச்ல இருந்த மூணு பேரும் கன்னத்துல கை வெச்சு முன்னாடி நகர்ந்து வந்து என்னையே பார்த்தாங்க. அவங்கள ஒரு தடவ திரும்பிப் பார்த்துட்டு ஜென்னிய கைய புடிச்சு வெளில இழுத்துட்டு போனேன்.
“நான் அன்னைக்கு அழுதத பார்த்திருக்கான்டி. ஏன் என் மேல இடிச்சதுக்கு அழுதன்னு கேட்டான். எதுக்கு என் கிளாஸ் பக்கம் வந்த? அது பர்ஸ்ட் இயர் ப்ளாக் இல்லையேன்னு கேட்டான். என் பேரு தெரியுமான்னு கேட்டு அவன் பேர சொன்னான். எதுக்கு இப்படிப் பார்க்குறன்னு கேட்டான். நான் ஓடி வந்துட்டேன்”னு சொன்னேன்.
ஜென்னி வயித்த புடிச்சு கண்ணுல தண்ணி வர அளவுக்குச் சிரிச்சா.
அந்த ஹவர் வர வேண்டிய ஸ்டாப் வரல. அதனால இவங்கக்கிட்ட நான் சிக்கிட்டேன். ஜென்னிய மண்டைல அடிச்சுட்டுக் கிளாஸ் உள்ள வந்துட்டேன். என்னை வீட்டுல டிராப் பண்ணப்பையும் ஜென்னி என்ன பாத்து பாத்து சிரிச்சுட்டே இருந்தா.
– ரேணு
10
“என்ன கவி சிரிச்சுட்டே இருக்க?” மீனா எழுந்து வந்து அவள் அருகில் சோபாவில் அமர்ந்தாள்.
“இந்த ரேணு அடிச்ச கூத்தெல்லாம் இருக்கே… நீ அப்பறமா படிச்சு பாரு மீனா”
“ம்ம் ம்ம்… ஹேய்… எங்கடி ரோஷன காணும்?”
“அவன் மாடிபடிக்கிட்ட இருப்பான்டி. போய்ப் பாரு”
“புள்ளைய பத்தி கவலப்படுறியா?” மீனா அவசரமாகப் படியருகில் ஓடினாள். ரோஷன் முழங்காலிட்டுக் கடைசிப் படியில் இரு கைகளையும் ஊன்றி சிரித்துக் கொண்டிருந்தான்.
“எப்படிடா இவ்வளவு தூரம் வந்த?” அவனைத் தூக்கியவளின் கன்னத்தைக் கடித்தான் ரோஷன்.
அவர்கள் அருகில் வந்த கவிதா “பாரபட்சம் பார்க்காம எல்லாரையும் கடிடா நீ” என்று ரோஷனை வாங்கிக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்ததும் அவனைத் தூங்க வைத்துவிட்டு சிறிது நேரம் தானும் அவனுடன் உறங்குவதாகக் கூறி கீழே இருந்த அறைக்குச் சென்றாள் மீனா.
செண்பகமும் அலுப்பாக இருப்பதால் சிறிது நேரம் உறங்குவதாகக் கூறி அவளுடைய அறைக்குள் சென்றுவிட கவிதா மீண்டும் டைரியுடன் ஹால் சோபாவில் அமர்ந்தாள்.
இன்னைக்கு காலேஜ்குள்ள நுழையும்போதே கௌதம் பைக்ல வரதப் பார்த்தேன். ஜென்னி வண்டிய நிறுத்த போனப்போ அவனும் எங்க பின்னாடியே வந்தான்.
இருக்குறது ஒரு பார்க்கிங் ஏரியா. அவன் அங்க தான வண்டிய நிறுத்த முடியும்… என் பின்னாடி வரான்னு எப்படி நினைக்குறது? அதுக்கு மேல யோசிக்காம நார்மலா இருக்க முயற்சி பண்ணேன்.
ஜென்னி வண்டிய விட்டு இறங்கினதும் பக்கத்துல வண்டிய நிறுத்த வந்தவன பார்த்து “குட் மோர்னிங் கௌதம் அண்ணா”னு சொல்லி சிரிச்சா.
அவனும் பதிலுக்குச் சிரிச்சு “என் பேர உனக்குச் சொன்ன உன் பிரண்ட் உன் பேர எனக்குச் சொல்லவே இல்ல”னு சொல்லி என்னைப் பார்த்தான்.
ம்ம்கும்… என் பேரே மறந்து போச்சாம்… இதுல என் பிரென்ட் பேரு வேற உன்கிட்ட சொல்லணுமான்னு இருந்துது.
“என் பேரு ஜென்னி… கிளாஸுக்கு டைம் ஆயிடுச்சு. அப்பறம் பார்க்கலாம்ணா…”னு சொல்லிட்டு அவ கெளம்புனா. நாங்க வண்டிய நிறுத்திட்டு அங்கேருந்து நகருற வரைக்கும் நான் தலை நிமிரவே இல்ல.
கௌதம் எங்க பின்னாடியே வரான்னு பர்ஸ்ட் இயர் ப்ளாக் கிட்ட வந்ததுக்கு அப்பறம் தான் கவனிச்சேன். உடனே அவனைத் திரும்பிப் பார்த்தேன்.
“ஒண்ணு வெச்ச கண்ணு வாங்காம பார்க்குற… இல்லன்னா பார்க்கவே மாட்டேங்குற… நீ பார்க்கலன்னா எனக்கும் என்னவோ மாதிரி இருக்கு. அதான் நீ என்னை நிமிர்ந்து பாக்குற வரைக்கும் உன் பின்னாடி வந்தேன். பாய் ரேணு”னு சொல்லிட்டு வேகமாத் திரும்பிப் போயிட்டான்.
கௌதம் என்ன சொல்ல வந்தான்? நான் அவன பார்க்கணும்னு எதிர்ப்பார்க்குறானா? நான் பார்க்குறது அவனுக்கு எப்படித் தெரியும்? அப்போ ஒவ்வொரு தடவையும் என்னை அவன் கவனிச்சிருக்கானா? என்னைப் பார்க்கவாவது செஞ்சிருக்கியா கௌதம்னு நான் ஏங்குனதெல்லாம் தேவயில்லாத ஒண்ணா?
ஆனா அவன்கிட்ட என்ன பேச? அவன் சொன்னதுக்கு அர்த்தம் என்ன? என்னால ஏன் அப்போ அவன நிமிர்ந்து பார்க்க முடியல?
எனக்கு அவன பிடிச்சிருந்துது. முதல் பார்வையிலேயே. அதனால தான அவன பார்த்துக்கிட்டே இருந்தேன். இப்போ அவனே வந்து என்கிட்ட பேசுறப்போ என்னால எதுவும் பேச முடியலயே…
ஒருவேளை எனக்குத் தைரியம் பத்தலையோ? ஏதோ ஒருத்தன பார்த்ததும் பிடிச்சிருந்ததால பார்த்தேனோ? அவன்கிட்ட பேசுற அளவுக்கு எனக்குக் கட்ஸ் இல்லையோ?
ஐயோ அவன் திரும்பி வந்து பேசுனா என்ன பண்ணுறது? தேவயில்லாம அவன டிஸ்டர்ப் பண்ணிட்டோமோ? என் வீட்ட பத்தியெல்லாம் நான் ஏன் யோசிக்கவே இல்ல?
என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி எழுந்துது. அடுத்து என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியல. சிலை மாதிரி நின்னுட்டு இருந்த நான் திரும்பி ஜென்னிய பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தா. இவளுக்கு என்ன அப்படி எப்போ பார்த்தாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு வேண்டிக் கிடக்கு…
அவள மொறச்சேன். “ஏன் ரேணு உன் மூஞ்சி இப்படிப் பேயரஞ்ச மாதிரி இருக்கு?”னு கேட்டா.
அப்படியா இருக்குனு யோசிச்சு ஒரு தடவ என் கன்னத்த வருடிப் பார்த்தேன்.
ம்ம்ஹும்… நமக்கு இந்தக் காதல் கீதல் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணி அவள இழுத்துட்டு கிளாஸுக்கு போயிட்டேன்.
சாயந்தரம் வண்டி எடுக்கப போனப்போ கௌதம் அவன் பைக் மேல உட்கார்ந்திருந்தத தூரத்துல வரும்போதே பார்த்துட்டேன். அவன்கிட்ட போக வேண்டாம்னு தோணுச்சு. ஜென்னிய போய் வண்டி எடுத்துட்டு வர சொல்லிட்டு நான் அங்கயே நின்னுட்டேன்.
எனக்குக் காதலிக்குற தைரியம் இருக்கா இல்லையான்னு தெரியாம அநாவசியமா கௌதம் மனசுல எந்த ஆசையையும் வளர்க்க நான் தயாரா இல்ல.
ஜென்னி போய் வண்டி எடுக்குறப்போ கௌதம் ஏதோ அவக்கிட்ட பேசுனான். அப்பறம் திரும்பி நடந்து வந்தான். எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. அவ சீக்கிரம் வண்டிய எடுத்துட்டு வரணும்னு வேண்டிக்கிட்டே நின்னேன்.
என்கிட்ட வந்ததும் “இப்போ எதுக்கு ரேணு நீ இங்கயே நிக்குற? அவ கூட வண்டி எடுக்க வர வேண்டியது தான?”னு கேட்டான்.
நான் அவனத் தாண்டி ஜென்னிய பார்த்தேன். அவளோட வண்டில உட்கார்ந்திருந்தா. “நான் சொல்லுற வரைக்கும் அவ வர மாட்டா. எனக்குப் பதில் வேணும் ரேணு”னு சொன்னான்.
ரேணு ரேணு ரேணு… எத்தன தடவ என் பேர சொல்லுறான். ஏன்டா என்ன படுத்துறன்னு அவன் சட்டைய பிடிச்சு கத்தணும் போல இருந்துது.
இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு எனக்குத் தெரியும். நான் எதுவும் பேசல. அழுக முட்டிக்கிட்டு வந்துது. நான் கஷ்டப்படுறது மட்டுமில்லாம என் கௌதமையும் எதுக்கு இப்படி என் பின்னாடி வர வெச்சேன்னு நெனச்சு நொந்து போனேன்.
எனக்கு என்னையே பிடிக்காம போன தருணம்… என்னையே நான் வெறுத்த தருணம்…
“என் பின்னாடி வராத கௌதம்”னு சொல்லிட்டு அங்கேருந்து நகரப் போனேன். “என்கிட்ட நீ பேசுற முதல் வார்த்தை இதுவா இருக்கும்னு நான் நினைக்கல ரேணு”னு கௌதம் சொன்னான்.
என் இதயத்த யாரோ அறுத்து எடுக்குற மாதிரி இருந்துது. கதறி அழணும் போல இருந்துது. கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சுது. அவன பார்த்துட்டு வேகமா ஜென்னிகிட்ட ஓடி போயிட்டேன். நான் அழறதப் பார்த்து அவளும் வேற எதுவும் பேசாம வண்டிய எடுத்தா.
கௌதம் அதே இடத்துல நின்னுட்டு இருந்தான். அவனைத் தாண்டிப் போறப்போ கௌதம் என்னைப் பார்த்த பார்வை… நான் தப்புப் பண்ணிட்டேன். அவன நான் பார்த்திருக்கவே கூடாது…
-ரேணு
இன்னைக்கு கௌதம் எங்களுக்கு முன்னாடி பார்க்கிங் ஏரியா வந்து எங்களுக்காகக் காத்துட்டிருந்தான். இவன் ஏன் நான் சொல்லுறத கேக்க மாட்டேங்குறான்? நான் வண்டிய விட்டு இறங்கி அவன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி கைய காட்டி நிறுத்த சொல்லிட்டு “நான் உன்கிட்ட பேச வரல ரேணு. நீ போகலாம். எனக்கு ஜென்னி கூடப் பேசணும்”னு சொன்னான். அவன் கண்ணுல கோபத்த
சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்கவும் கவிதா திரும்பிப் பார்த்தாள். ரோஷனின் அறையிலிருந்து தான் சப்தம் வந்தது.’ரெண்டு பேரும் எந்திரிச்சுட்டாங்க போல’டைரியை மூடி கீழே வைத்துவிட்டு எழுந்து சென்று அந்த அறையை எட்டிப்பார்த்தாள்.
மீனாவின் மேல் படுத்திருந்த ரோஷன் அவள் கன்னத்தைக் கடிக்க வந்தான். அவன் மிக அருகில் வரும்போது மீனா அவனைக் கடிக்க விடாமல் தூக்கினாள். அவன் கை தட்டி சிரிக்கவும் அவளும் பெரிதாகச் சிரித்து அவனைத் தன் மீது படுக்க வைத்துக் கொண்டாள். மீண்டும் அவன் அவள் கன்னத்தைக் கடிக்க வந்தான்.
“என்னடி விளையாட்டு இது?”
“இது நாங்க புதுசா கண்டுப்பிடிச்சது. இல்லடா தங்கம்?”
கவிதாவும் மீனாவின் அருகில் படுத்தாள்.
“என்ன கா? அப்படிச் சிரிச்சுட்டு இருக்கீங்க? கிச்சன் வரைக்கும் கேக்குது”
“நாங்க கண்டுப்பிடிச்ச புது விளையாட்ட விளையாண்டுக்கிட்டு இருக்கோம் செண்பா” ரோஷனை மேலே தூக்கினாள் மீனா. அவன் கை தட்டி சிரித்தான்.
“நல்ல விளையாட்டு போங்க…”
கையில் தேநீர் கோப்பையுடன் வீட்டிற்கு வெளியே இருந்த படிகட்டில் ரோஷனுடன் அமர்ந்தனர் தோழிகள் இருவரும். சிறிது நேரத்தில் செண்பகமும் வந்து அவர்கள் அருகில் அமர்ந்தாள்.
ரோஷன் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்ததும் மீனாவின் மடியிலிருந்து கீழே இறங்க வேண்டும் என்று அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.
எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்காததால் வேறு வழி இல்லாமல் கடைசிப் படியின் அருகில் கீழே இறக்கிவிட்டாள் மீனா.
“அது என்னவோ மீனா இவனுக்குப் படிகட்டுன்னா ரொம்பப் பிடிச்சிருக்குடி… எப்போ பாரு கையில இருக்கப் பொம்மைய படில அடிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கான்”
“விடுடி… அமைதியா தான இருக்கான்”
“அடடே இன்னைக்கும் குட்டி பையன் வெளில உட்கார்ந்திருக்கானா?” என்று கேட்டபடியே போர்டிகோவின் அருகில் வந்தார் சீத்து மாமி.
“வாங்க” என்று எழுந்த கவிதா “மீனா நான் சொன்னேன்ல… பக்கத்து வீட்டுல இருக்காங்கன்னு… சீத்து மாமி… இவங்க தான். இது என்னோட பிரண்ட் மீனா” என்று பரஸ்பரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
“வணக்கம் மா. உங்களைப் பத்தி கவிதா நிறையச் சொல்லி இருக்கா. வாங்க தோட்டத்துல போய்ச் சேர்ல உட்காரலாம்”
“வேண்டாண்டிம்மா… இங்கயே உக்காரலாம். நாள் பூரா சேர்ல உக்காந்து இடுப்பு வலிக்கறது” என்று கூறி மேல் படியில் கை ஊன்றி மெதுவாக அமர்ந்தார் சீத்து மாமி.
செண்பகம் “மாமி டீ குடிக்குறீங்களா இல்ல காபி கலந்து எடுத்துட்டு வரவா?” என்று கேட்க “ஒண்ணும் வேண்டாம் செண்பா. இப்போ தான் நம்மாத்துலக் குடிச்சுட்டு வரேன். நீயும் உக்காரு. செத்த நேரம் பேசிண்டிருக்கலாம். ஆத்துல ஒண்டியா நாள் பூரா உக்காண்டு போர் அடிச்சுண்டிருக்கேன்” என்றார்.
மீனாவும் செண்பகமும் சீத்து மாமியுடன் பேசுவதை கவிதா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ எவ்வளோ நன்னா பேசுற மீனா. உன் பிரண்ட பாரு… அமைதியாவே இருக்கா”
“அவக் கெடக்குறா விட்டுத் தள்ளுங்க மா. அவ எப்பயும் அப்படித் தான். என்னைக்கோ அதிசயமா தான் பேசுவா. ரொம்ப க்ளோஸா பழகிட்டா நல்லா அரட்ட அடிப்பா. மத்தபடி தோ இப்படித் தான்… ஈஈ னு இளிச்சுக்கிட்டே உக்காந்திருப்பா. நீங்க எனக்குப் பக்கத்து வீட்டுல குடி இருந்திருக்கணும்… இவக்கிட்ட வந்து மாட்டிக்கிட்டீங்க”
“நீ வாங்க போறடி” என்று கூறியதோடு நிறுத்தாமல் அவள் முதுகில் ஒரு அடியையும் வைத்தாள் கவிதா.
“ஆமா மீனா. நான் உனக்குப் பக்கத்தாத்துல இருந்திருந்தா நன்னா பொழுது போயிருக்கும்… பேசிண்டிருந்ததுல நேரம் போனதே தெரியல மா. இருட்ட ஆரம்பிச்சுடுத்து. நான் வரேன்… மீனா நம்மாத்துக்கும் வா என்ன?” என்று கூறி விடைபெற்றுச் சென்றார் சீத்து மாமி.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிய மீனா தானும் கிளம்புவதாகக் கூறினாள்.
சரியென்று தலையசைத்த கவிதா சிறிது தயங்கி “மீனா… நான்… எனக்கு அந்த டைரி குடுப்பியா? ப்ளீஸ்டி… ரெண்டு நாள் மட்டும் தான். படிச்சுட்டு தரேன். ப்ளீஸ்…” என்றாள்.
“ரெண்டு நாள் கழிச்சுப் பாதிப் படிச்சுட்டு இருக்கும்போது எப்படிடி திருப்பித் தரது… முழுசா படிச்சுட்டு தரேன்னு சொல்ல மாட்டியே?”
உடனே அவளைக் கட்டியணைத்து “கண்டிப்பா இல்லடி. ரெண்டு நாள் கழிச்சு எவ்ளோ படிச்சிருந்தாலும் திருப்பித் தந்திடுறேன். அப்பறம் எப்பயும் போல நீயே படிச்சுட்டு எனக்கு போன் பண்ணி சொல்லு” என்றாள் கவிதா.
“சரி. டைரி பத்திரம். ரெண்டு நாள் தான்… பை டா ரோஷன் குட்டி” அவன் கன்னத்தில் முத்தமிட்டுக் கிளம்பிச் சென்றாள் மீனா.
இரவு ராஜேஷ் படுக்கையறைக்குள் வந்ததும் முதல் வேலையாக டைரியை தேடினான்.
“என்ன ரொம்பத் தீவிரமா தேடுறீங்க?”
“ஒண்ணுமில்ல… துண்ட காணும்… அதான்” மனைவியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து வேறுபுறம் திரும்பி நின்று சட்டையைக் கழற்றினான்.
“துண்ட எதுக்கு ராஜேஷ் புக் ஷெல்ப்ல எல்லாம் தேடுனீங்க?”
“அதான் என்ன தேடுறேன்னு தெரியுதுல்ல… எடுத்துக் குடுக்க வேண்டியது தான?”
“டைரி கவிதாகிட்ட இருக்கு. ரெண்டு  நாள் மட்டும் குடுத்துட்டுப் போடின்னு ரொம்பக் கெஞ்சுனா… அதான்”
“நீ ரெண்டு வாரத்துலப் படிக்குறத அவ ரெண்டு நாள்ல படிச்சு முடிச்சிடுவா…” என்று முணுமுணுத்தவன் குளியலறைக்குள் சென்றான்.
“என்னது?” என்று மீனா அதட்டலாகக் கேட்கவும் “ஒண்ணுமில்ல மீனு” என்று கூறி வேகமாகக் கதவை மூடித் தாழிட்டான் ராஜேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!