naan aval illai- 19

naan aval illai- 19

ஆழ்ந்த சிந்தனை

ஜென்னி ஆழ்ந்த சிந்தனையில் அவளின் வீட்டின் முன்புறமிருந்த தோட்டத்தோடு இணைந்திருந்த அகண்டு விரிந்த குளியல் தொட்டி நீரில் (Swimming pool) கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தாள்.

மாலை தொடங்கி இருள் கவ்வி சந்திரனும் உதித்துவிட்டான்.

நேரம் கடந்து செல்வதை பற்றிய கவலையில்லாமல் அல்லது அதன் நினைப்பே இல்லாமல் இருந்தாளோ? !

அது அவளுக்குதான் தெரியும்.

ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கியிருக்க அவள் பாதங்கள் தண்ணீருக்குள் மெல்ல விறைத்துக் கொண்டிருந்தன.

ஆனால் அதையும் அவள் உணர்ந்ததாக தெரியவில்லை. 

நகை திறப்புவிழா முடிந்து வந்ததிலிருந்தே அவள் எதையோ பறிகொடுத்த நிலையில்தான் இருந்தாள். ஆனால் எதை? 

அதை அவள்தானே சொல்ல முடியும்.

ரூபா அவளின் சிந்தனைக்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் அதனை அறிய முற்பட, அவளை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.

ஜென்னித்தா அமர்ந்திருந்த இடத்தை சுற்றியும் நிசப்தமாய் இருக்க, அவள் மனமோ அமைதியற்ற நிலையில் கொந்தளித்து கொண்டிருந்தது.

அவள் நினைவெல்லாம் நகைக்கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவங்களை சுற்றிதான் வளைய வந்து கொண்டிருந்தது.

அதுவும் “சாக்ஷி அக்கா” என்று புகழ் அழைத்தபடி அணைத்த அந்த நொடி, சொல்ல முடியாத உணர்வுகளோடு சிலையாய் சமைந்தாள். 

ரூபாவும் அங்கிருந்த பணியாளும் அவன் ஜென்னியை அணைத்து கொண்டிருந்ததை புரியாமல் பார்த்திருந்தனர்.

அப்போது ரூபா கண்ணசைத்து ஜென்னியிடம் அது குறித்து விசாரிக்க, அவள் தெரியாதது போல் தோள்களை குலுக்கினாள்.

ரூபா புகழின் தோளை தட்டி “அவங்க பேர் சாக்ஷி இல்ல… ஜென்னித்தா” என்றதும் அவன் அவள் கரத்தை தட்டிவிட்டு மீண்டும் ஜென்னியை கட்டிக் கொண்டு “உம்ஹும் இவங்க சாக்ஷி அக்காதான்” என்றான்.

மீண்டும் ரூபா ஏதோ சொல்ல எத்தனிக்க,
ஜென்னி சமிஞ்சையால் அவளை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு புகழின் கரத்தை பிரித்து இருக்கையில் அமர வைத்தவள் “உங்க பேர் என்ன?” என்று கேட்டாள். 

“என் பேர்தான் உங்களுக்கு தெரியும் ல” என்றான்.

“எனக்கு தெரியுமா?” என்று ஆச்சர்யக் குறியாய் பார்த்தவள்,

பின் ரூபாவை கை காண்பித்து,

“உங்க பேரு இந்த க்காவுக்கு தெரியாதாம் அவங்ககிட்ட சொல்லுங்க” என்றாள்.

ரூபாவும் அவன் புறம் குனிந்து கன்னத்தை வருடி “எஸ்… வாட்ஸ் யுவர் நேம்?” என்று வினவ,

புகழ் தலையை அசைத்தபடி “மை நேம் இஸ் புகழரசன்… மை பாஃதர் நேம் இஸ் அருண்… மை மதர் நேம் இஸ் எழில்” என்று ஆரம்பித்தவன் தொடர்ந்து கொண்டிருக்க, ஜென்னியும் ரூபாவும் மெலிதாய் புன்னகையித்தனர்.

ஜென்னி அவன் தலையை வருடி “வெரி குட்… அப்படியே நீங்க உங்க அப்பாவோட போஃன் நம்பர் சொல்லுங்க பார்ப்போம்” என்க,

அவனும் தன் ஒற்றை விரலால் தாடையில் வைத்து யோசித்தபடி தொலைப்பேசி எண்ணை ஒவ்வொன்றாய் உரைக்க, அங்கே நின்றிருந்த பணியாள் அவன் சொல்ல சொல்ல அந்த எண்களை அழுத்தி டயல் செய்தான்.

புகழின் தந்தை தொடர்பில் இணைய , கைப்பேசியில் அந்த பணியாள் தெளிவாய் புகழ் அங்கே இருக்கும் விவரத்தை உரைத்து முடித்தான்.

“இப்போ உங்களை கூட்டிட்டு போக அப்பா வந்திருவாங்க… வெயிட் பண்ணுவோம்” என்று ஜென்னி புகழிடம் தெரிவிக்க,

“அப்பா எப்படி வருவாரு ?… நான் மாமா கூட இல்ல வந்தேன்” என்றான் புகழ்.

ரூபா அவனிடம் “நீ இங்க இருக்கிறதை உங்க அப்பா மாமாகிட்ட போஃன் பண்ணி சொல்லிடுவாரு” என்றதும்,

அவன் தன் பார்வைகளை விரித்து “மாமா போஃன்தான் என்கிட்ட இருக்கே” என்று தன் பேண்ட் பேக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து காண்பித்தான்.

ஜென்னியும் ரூபாவும் அதிர்ச்சியாக, அவன் காண்பித்த கைப்பேசி உயிரற்ற நிலையில் இருந்தது.

ஜென்னி அந்த கைப்பேசியை வாங்கிப் பார்த்து “போஃன்ல சார்ஜ் இல்ல போல” என்றதும்

“ஆமாம் சார்ஜ் இல்ல… நான் கேம் விளையாடிட்டிருந்தனா… ஸ்விட்ச் இட் ஆஃப் ஆயிடுச்சு” என்று புகழ் சொல்ல. 

ஜென்னியும் அவனின் வெள்ளந்தியான பேச்சை கேட்டு சிரித்தபடி “சரி அது போகட்டும்…. உன் கூட உங்க மாமா… அப்புறம் வேற யார் யார் வந்தது?” என்று கேள்வி எழுப்ப,

“லாவண்யா மாமி வந்தாங்களே… எங்க வேந்தன் மாமாவை கல்யாணம் பண்ணிக்க போறவங்க” என்றுரைக்க ஜென்னி வார்த்தைகளின்றி அமைதியானாள். 

அவள் முகம் இறுக்கமாய் ஒரு சில நொடிகள் மாறி பின் பழைய நிலைக்கு திரும்பின.

அப்போது அந்த அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தவன் “மேடம் அந்த பையனோட ரிலேஷன்ஸ் வந்து வெளியே வெயிட் பன்றாங்க” என்று அறிவுறுத்த,

ஜென்னி புன்முறுவலோடு ” ஒகே புகழ்… நீங்க போயிட்டு வாங்க… நாம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்” என்றாள்.

அவன் செல்லாமல் அவள் கரத்தை கெட்டியாய் பிடித்துக் கொண்டு “உம்ஹும்… நான் வேந்தன் மாமா கூட போக மாட்டேன்.. என்னை மகிழ் மாமாகிட்ட கூட்டிட்டு போங்க சாக்ஷி அக்கா” என்றான்.

அவள் பதில் பேச முடியாமல் அப்படியே மௌனமானாள். 

அவளை மீறிக் கொண்டு உடைப்பெடுக்க இருந்த உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவள்

புகழின் கன்னத்தை தாங்கியபடி “நீங்க குட் பாய் இல்ல… இப்படி எல்லாம் அடம் பிடிக்க கூடாது…” என்று அவனை சமாதானப்படுத்த முயல,

அவன் அவள் சொல்வதற்கு செவிசாய்க்காமல் அதே பிடிவாதத்தோடு “உம்ஹும் நான் போக மாட்டேன்… வேந்தன் மாமா என்னை அடிப்பாரு” என்க,

ஜென்னி அதிர்வோடு பார்த்தாள்.

ரூபா அவனிடம் பரிவாக “நீ ஏதாச்சும் மிஸ்டேக் பண்ணி இருப்ப புகழ்… அதான் அடிச்சிருப்பரு” என்றாள்.

“உம்ஹும் நான் எந்த மிஸ்டேக்கும் பண்ணல… நான் சாக்ஷி அக்கா போட்டோவை பார்த்து மாமாகிட்ட சாக்ஷி அக்கான்னுதான் சொன்னேன்… மாமா இல்லன்னு சொன்னாரு… நான் கேட்கல… அதான் என் கன்னத்தில் ஓங்கி அடிச்சிட்டாரு” என்று தன் ஒருபுற கன்னத்தை தொட்டு காண்பித்தான். 

ஜென்னி அப்போதுதான் சிவந்து வீங்கியிருந்த அவன் கன்னத்தை கவனித்தாள்.

ரூபாவும் அதனை பார்த்து “அச்சச்சோ…” என்று பதற, ஜென்னியின் முகம் உக்கிரமாய் மாறியது.

அவள் அவனிடம் “நீ சாக்ஷின்னு சொன்னதுக்காகவா அடிச்சாரு புகழ்” என்று கேட்க,

“ம்ம்ம்!” என்று வேகமாய் தலையசைத்தான்.

உடனடியாக ஜென்னி அவனை அழைத்துப் போக காத்து நின்றிருந்த பணியாளனிடம் “இந்த பையனோட ரிலேஷனை உள்ளே வர சொல்லுங்க” என்று கட்டாளையாய் உரைத்தாள்.

அவனும் அவள் சொன்னதை ஏற்று வெளியே காத்திருந்த லாவண்யாவிடமும் வேந்தனிடமும் உள்ளே வர சொல்லி அழைத்தான்.

வேந்தனோ மொத்தமாய் வியர்வையில் நனைந்திருந்தான். காரை நிறுத்த இடம் கிடைக்காமல் அவதியுற்ற சமயம் லாவண்யாவும் தன்யா ஜுவ்லறிக்குள் புகுந்தாள்.

வெளியேவும் உள்ளேயும் நிரம்பியிருந்த கூட்டத்தில் அவள் புகழை கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

அதே நேரம் வேந்தனிடம் அவன் கைப்பேசி இல்லாததால், லாவண்யாவை கண்டுபிடிக்க முடியாமல் அவனும் அவதியுற்றான். 

இறுதியாய் இருவரும் ஒருவரை ஒருவர் தேடி கண்டு கொண்டனர். அந்த சமயம் லாவண்யாவின் கைப்பேசியில் வந்த அழைப்பில் எழில் புகழ் நகைக்கடை அலுவலக அறையில் இருக்கும் விவரத்தை உறைத்தாள்.

அதன் பின்னரே அவர்களுக்கு மூச்சே வந்தது. நிம்மதி அடைந்தவர்கள் அவனை அழைத்துப் போக வந்திருந்தனர்.

அப்போதுதான் வேந்தனிடம் அந்த நகைக்கடை ஊழியன் உள்ளே வர சொல்லி அழைக்க, அவன் லாவண்யாவை அங்கேயே காத்திருக்க சொல்லிவிட்டு சென்றான்.

வேந்தன் அந்த ஊழியனின் வழிக்காட்டுதலில் அறையினுள்ளே நுழைந்த சமயம், புகழோடு சாக்ஷி அமர்ந்திருப்பதை பார்த்து அவனுக்கு குலை நடுங்கியது.

அவன் பார்வை அவள் மீதே நிலைக்குத்தி நின்றுவிட, அவள் உடை அலங்காரத்தை பார்த்தவனுக்கு சந்தேகமின்றி அவள் சாக்ஷியாகவே காட்சியளித்தாள்.

அப்போது புகழ் அவள் கரத்தை இறுக பற்றியபடி “நீங்கதான் சாக்ஷி அக்கான்னு மாமாகிட்ட சொல்லுங்க” என்க,

இதனை காதில் வாங்கியவன் அவள் என்ன பதில் உரைப்பாள் என ஆழமாய் பார்த்தான். 

ஜென்னி வேந்தனை கூர்ந்து நோக்கியபடி “நான்தான் சாக்ஷி” என்றாள்.

“நான்தான் சொன்னேன் இல்ல” என்று புகழ் வேந்தனிடம் கூறி இன்பமுற,

அவனுக்கோ இதை கேட்டு உலகம் சுழலாமல் நின்றுவிட்டது . 

அவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட,

ஜென்னி புகழிடம் திரும்பி “நீ சொன்ன மாதிரி நான் சொல்லிட்டேன் புகழ்… இப்ப நீ உன் மாமா கூடபோகனும் ஒகே” என்றாள்.

வேந்தன் புருவங்கள் முடிச்சிட குழம்பி நிற்க புகழ் அவளிடம் “ஒகே… நான் போறேன்… ஆனா நீங்க மகிழ் மாமாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்” என்றாள்.

ஜென்னி தலையசைத்து “ஹ்ம்ம்ம்” என்க

“ப்ராமிஸா” என்று தன் கரத்தை நீட்டினான்.

அவள் தயக்கத்தோடு “புகழ்… நீ இப்போ போ… நான் கூட்டிட்டு வர்றேன்” என்றவள் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட புகழும் அவளை கட்டியணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான். 

வேந்தனுக்கு தன் கண்முன் நிகழ்பவற்றை நம்பமுடியாமல் பார்த்திருக்க புகழ் ஜென்னியிடம் “பை க்கா” என்று சொல்லிவிட்டு அவனருகில் வந்து நின்றான்.

வேந்தன் தெளிவற்ற நிலையில் புகழை அழைத்துக் கொண்டு புறப்பட எத்தனிக்க, ஜென்னி “எக்ஸ்க்யூஸ் மீ ” என்றாள்.

அவன் எதற்கு அழைக்கிறாள் என்று புரியாமல், யோசனைக்குறியோடு திரும்ப அவன் முன்பு எழுந்து நின்றவள் “சின்ன குழந்தைங்க கிட்ட போய் உங்க கோபத்தையும் வீரத்தையும் காட்டாதீங்க… அது மனிஷத்தனம் இல்ல…” என்றாள். 

அவள் சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடிக்க, அதற்குள்ளாக ரூபா ஜென்னியிடம் “கஸ்டம்ர்ஸுக்கு க்ப்ட்ஸ் கொடுக்க கூப்பிடிறாங்க ஜென்னி போலாமா ?” என்றழைத்தாள்.

ஜென்னி அவனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு புகழிடம் “பை புகழ்” என்று கையசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

ஏனோ ஜென்னி அந்த நிகழ்விலிருந்து மீண்டு வராமல் அதிலயே மூழ்கியிருக்க, அவள் தோளின் மீது ஒரு கரம் பதிந்தது.

அதனை உணர்ந்தவள் சட்டென்று 
பார்வையை திருப்பி யாரென்று நோக்கினாள். 

டேவிட் அவளை ஆழ பார்த்திருந்தான்.

எதிர்பாராத அதிர்ச்சியோடு “நீங்க எப்போ வந்தீங்க டேவிட் ?” என்று வினவ,

“எப்போ வந்தீங்களாவா ?!! நானும் டென் மினிட்ஸா ஜென்னி ஜென்னின்னு கத்துக்கிட்டிருக்கேன்… நீ கவனிக்காம அப்படி என்ன யோசிச்சிட்டிருக்க ?” என்று இறுக்கமாக கேட்கவும்,

“ஓ சாரி டேவிட்” என்றபடி எழுந்து கொள்ள முயற்சித்தவள் நிற்க முடியாமல் தடுமாறி பின்னோடு தண்ணீருக்குள் விழப் போக டேவிட் “ஜென்னி கேர்ஃபுல்” என்று சொல்லி அவள் கரத்தை பற்றி பின்னோடு விழாமல் அணைத்துப்பிடித்தான்.

அத்தனை நேரம் ஓரே நிலையில் அமர்ந்திருந்ததால் மறுத்து விறைத்திருந்த அவள் கால்கள் நிற்க முடியாமல் கெஞ்ச, அவளும் விழாமல் அவன் கரத்தை இறுக பிடித்துக் கொண்டாள். 

அவள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றிருந்த கணம், டேவிடின் உணர்வுகள் அவளிடம் தடுமாறின.

அப்போது ஏற்பட்ட உணர்வு அவனுக்கு ரொம்பவும் புதியது. 

மனதாலும் உடலாலும் இதுவரையில் அனுபவித்திராத உணர்வு. 

தோழி என்ற வரையறை தகர்ந்து போன உணர்வு. 

அவளின் நெருக்கத்தில் அவன் கண்ணியம் மெல்ல மெல்ல நழுவிக் கொண்டிருந்தது.

ஜென்னி அந்த நொடி சுதாரித்து பாதத்தை ஊன்றியவள் அவனிடமிருந்து விலகி நின்று “தேங்க்ஸ் டேவிட்” என்றாள்.

அவன் பார்வையை அவளிடமிருந்து வேறுபுறம் திருப்பிக் கொண்டு, அவளை எதிர்கொள்ள முடியாமல் தவித்திருந்தான். தான் அவளை பார்த்தவிதம் தவறென்று அவன் மூளை குற்றச்சாட்ட, மனமோ அந்த உணர்வை உள்ளூர விரும்பியது.

“டேவிட்” என்ற ஜென்னியின் அழைப்பு அவனை மீட்டெடுக்க,

தன் எண்ணங்களுக்கு அணைப்போட்டு நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி “டூ யூ ப்ஃல் பெட்டர் நவ் ?!” என்று வினவ,

“ம்ம்ம்” என்று இயல்பாய் தலையசைத்தாள்.

அதன் பிறகு இருவரும் அங்கிருந்து முன்னேறி நடக்க, அவர்கள் இருவருக்கு இடையில் அழுத்தமான மௌனம் குடிக்கொண்டிருந்தது.

டேவிட் அந்த மௌனத்தை கலைத்தபடி “என்னாச்சு ஜென்னி உனக்கு ? இஸ் எனிதிங் ராங்?” என்று கேட்டபடி அவளை பார்த்தான். 

அவள் தன் எண்ணங்களை மறைத்தபடி புன்முறுவலோடு “நோ டேவிட்” என்றாள்.

“எல்லார்கிட்டயும் நீ முகமூடி போட்டுட்டிருக்கிறது ஓகே… ஆனா என்கிட்டயும் கூடவா ?” 
அவன் பார்வை அவளை ஆராய்ந்து பார்க்க, அவளோ பதிலின்றி மௌனமாகவே நடந்து வந்தாள். 

“உன்னை எதோ டிஸ்டர்ப் பண்ணியிருக்கு ஜென்னி… வாட் இஸ் இட் ?” என்று கேட்டான்.

“அ.. ப்.. படி எதுவும் இல்ல டேவிட்”

“நோ.. சம்திங் பாதரிங் யூ” என்றான் அழுத்தமாக!

அவள் அவனை சமாளிக்க முடியாமல் யோசித்திருக்க,

டேவிட் மேலும் “ஹ்ம்ம்… ஜென்னிக்குள்ள இருக்கிற சாக்ஷி எட்டி பார்க்கிறாளோ?!” என்றான்.

“ஷட் அப் டேவிட்”

ரௌத்திரமானாள் ஜென்னி !

அவள் முகம் சிவக்க, உதடுகள் கோபத்தில் துடித்தன.

Comments Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!