naan aval illai 25

காதலும் நட்பும்

உயர உயர எழும்பி வந்தாலும் தன் எல்லையை கடக்க முடியாமல் தோற்று போய் பின்வாங்கும் அலைகளின் நிலைமையில்தான் டேவிடும் இருந்தான். 

அவன் உணர்ச்சிகள் ஊற்றாய் பெருகி அவளிடம் தன் மனஎண்ணத்தை சொல்ல நினைத்து, அது இயலாமல் தோற்று பின்வாங்கிக் கொண்டிருந்தது.

எது அவனை தடுக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை. 

தோழமை என்ற எல்லையை எப்போதே அவன் மனம் கடந்துவிட, காதல் என்ற எல்லை கோட்டையும் தொட முடியாமல் தயங்கி நின்றான். 

இருவரின் எண்ணங்களும் வானத்திற்கும் பூமிக்கான தூரம். 

அவளோ அவன் அழைப்பிற்காக, புறப்பட்டு வந்துவிட்டாளே ஒழிய, அவள் மனம் துளிக்கூட அந்த சூழ்நிலைக்குள் ஓட்டவில்லை.

டேவிடிற்காக அவள் இயல்பாக இருக்க முயற்சித்தாலும் திரும்ப திரும்ப அவள் மனம் மகிழை பற்றிய சிந்தனையிலயே ஆழ்ந்தது.

ஜென்னியின் இந்த அமைதியின் காரணம் புரியவில்லை எனினும் அவளின் அமைதியை குலைத்திடவும் மனம் வரவில்லை. 

அவளுக்கு அந்த அமைதி தேவையெனில் அதை அவள் பரிபூரணமாய் அனுபவிக்கட்டுமே.

ஆனால் அவள் பார்க்கத்தான் அமைதியாய் தென்பட்டாள். அவள் மனமோ பெரும் போராட்டத்திற்குள் உழன்று கொண்டிருந்தது.

கதிரவன் மறைந்து இருள் தன் ஆதிக்கத்தை தொடங்கிய போதுதான் தன்னிலை உணர்ந்தவள், டேவிடின் புறம் திரும்ப அவனோ உலகத்தையே மறந்து அவள் மீது லயித்திருப்பதை கண்டு அதிர்ந்து “டேவிட்” என்றழைக்க,

அவன் சுதாரித்து கொண்டு “என்ன ஜென்னி? போலாமா ?!” என்று கேட்டான்.

அவள் புரியாத பார்வையோடு, “போலாம்… ஆனா இவ்வளவு நேரம் நீங்க என்ன பார்த்திட்டிருந்தீங்க?” என்று கேள்வி எழுப்ப,

அவன் புன்னகையோடு “உன்னைதான்” என்றான்.

அவள் புருவங்கள் முடிச்சிட “என்னையா? ஏன்? ” என்று கேட்டு புருவத்தை உயர்த்தினாள்.

“நீ கடலையே பார்த்திட்டிருந்த… நான் உன்னையே பார்த்திட்டிருந்தேன்…”

“அதான் ஏன்?!” என்று அவள் அழுத்தமாய் கேட்க, அவனும் பதிலுக்கு

“நீ ஏன் கடலை அப்படி பார்த்திட்டிருந்த ?” என்று கேட்டான். 

“ஒரு ரிலேக்ஸேஷன்காக” 

“எனக்கும் அதேதானே” என்றவனை விழிகள் இடுங்க பார்த்தவள்,

“என்ன டேவிட் விளையாடிறீங்களா?” என்றவளின் முகத்தில் கோபம் துளிர்விட்டது.

அவன் தன் புன்னகை மாறாமல் “விளையாடல ஜென்னி… ஸ்ரீயஸாதான் சொல்றேன்” என்றான்.

“நானும் ஸ்ரீயஸ்ஸாவே கேட்கிறேன்… என் முகத்தில என்ன இருக்கு ?… நீங்க ரிலேக்ஸாகிற அளவுக்கு”

அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு “உன்னோட அழகான ஐய்ஸ்… வளைவாய் இருக்கிற அடர்த்தியான புருவம்… ஓவியம் மாதிரி இருக்கிற உதடு… வடிச்ச வைச்ச சிற்பம் மாதிரி முகம்… உலகத்தில இருக்கிற எல்லா அழகும் உன் ஒருத்திக்குள்ள அடங்கிடுச்சோன்னு யோசிச்சி பார்த்திட்டிருந்தேன்” என்றான். 

அவள் அவன் சொன்னதை நம்ப முடியாமல் “நீங்களா இப்படி பேசிறீங்க” என்று கேட்க, “ஹ்ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தான்.

அவள் நெற்றியை தேய்த்தபடி “என்ன பேசிறீங்கன்னு யோசிச்சிதான் பேசிறீங்களா?!” என்க,

“யோசிச்சி பேசியெல்லாம் எனக்கு பழக்கமில்லை ஜென்னி… மனசில என்ன தோணுச்சோ அதை அப்படியே சொல்லிதான் பழக்கம்” 

அவன் பேசியது அதிர்ச்சிகரமாய் இருந்த போதும், அவனை தவறாக எண்ணிக் கொள்ள முடியாமல் சற்று நிதானித்து 
“நீங்க பேசிறது உங்களுக்கே தப்பா தெரியலயா ?” என்று கேட்டாள்.

“நான் தப்பா என்ன சொல்லிட்டேன்” கேட்டுவிட்டு அவன் புன்னகையிக்க அதற்கு மேல் பொறுமையிழந்தவள்,

அவனை கோபமாக பார்க்க முடியாமல் எழுந்து கைகளில் ஒட்டிய மணலை தட்டிக் கொண்டு அந்த கடற்மணலில் நடக்கத் தொடங்கினாள்.

அவனும் அவசரமாய் எழுந்து அவளை பின்தொடர்ந்தவன் “ஜென்னி ஸ்டாப்… நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்னு கோச்சிக்கிட்டு போற” என்க, அவள் காதில் வாங்காமல் முன்னேறி நடந்தாள். 

டேவிட் வேகமெடுத்து அவள் கரத்தை எட்டி பிடித்துக் கொள்ள, அவள் தவிப்போடு “கையை விடுங்க” என்றாள்.

அவன் விடாமல் “நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு போ” என்க, 

“முடியாது… நீங்க முதல்ல என் கையை விடுங்க” என்றவள் அவஸ்த்தையோடு அவள் கரத்தை மீட்க முயல,

அப்போதூ அவர்களை கடந்து சென்றவன், “என்னம்மா பிரச்சனை ?… தகராறு பன்றானா ?” என்று கேட்டு விட்டு உடனே டேவிடின் புறம் திரும்பி ” பொண்ணுங்ககிட்ட பொறுக்கித்தனம் பன்றியா ?!” என்று அவன் கேட்டதுதான் தாமதம்.

ஜென்னி சீற்றத்தோடு “யார் பொறுக்கித்தனம் பன்றா ?… உங்களுக்கு என்ன தெரியும் இவரை பத்தி… கொஞ்சங் கூட விவஸ்த்தையே எல்லாம பேசிறீங்க… வார்த்தையை விடறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சி பேசுங்க” என்று அவள் படபடவென பொறிந்து தள்ள,

அவன் தலையிலடித்து கொண்டு “ஓ லவ்வர்ஸா… உங்களுக்கு சண்டை போட வேற இடமே கிடைக்கலயா? ” என்று புலம்ப,

அவள் எரிச்சலோடு “யாரு லவ்வர்ஸு… இடியட்… நல்லதாவே யோசிக்க மாட்டீங்களா ?” என்று பொறுமியவள் டேவிடின் புறம் திரும்ப அவன் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

“டேவிட்” என்று பல்லை கடித்து கொண்டவளிடம் “ஜென்னி கூல்… அவன் ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு உளறிட்டு போறான் விடு… அதுக்கு போய் டென்ஷனாயிட்டு” என்றான்.

“டென்ஷனாகாம… உங்களை தப்பா பேசிட்டு போறான்… அதுவும் இல்லாம நம்மல லவ்வர்ஸுன்னு வேற சொல்லிட்டு போறான்… அவன் திரும்பி வரட்டும்… அவன் பல்லை பேத்திடுறேன்” 

“அவன் உனக்காக சப்போர்ட் பண்ண வந்தா… நீ எனக்காக ஸப்போர்ட் பண்ண.. அதான் அவன் தப்பா புரிஞ்சிக்கிட்டான்”

“அதெப்படி தப்பா புரிஞ்சிப்பான்… நண்பர்கள் அண்ணன் தம்பி இந்த மாதிரி ஏதாச்சும் உறவுன்னு யோசிக்கவே மாட்டாங்களா? !”

“மாட்டாங்க ஜென்னி… இந்த உலகத்தோட பார்வையே அப்படிதான்… நல்லது பேசத் தெரியாத உலகம்… நல்லது யோசிக்க தெரியாத உலகம்… நல்லதை மதிக்க தெரியாத உலகம்… ஏன் ? நல்லவனா இருந்தா அவன் வாழவே லாய்க்கில்லாதவன்னு தூக்கி போடற உலகம்… இதுதான் யதார்த்தம்” என்க,

“ஆனா நீங்க அந்த யதார்த்தத்துக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவர் டேவிட்… யூ ஆர் அ மேன் ஆஃப் பெர்க்ஷன் (Man of perfection) . யாரும் தப்பா கூட உங்களை ஒரு வார்த்தை சொல்றதை என்னால தாங்கிக்க முடியாது” என்று அவள் சொல்லவும் அவளை ஆழமாய் பார்த்தபடியே நின்றான்…

அவளை மட்டும்மே பார்த்தபடி

அவனை சுற்றியிருந்த இந்த பரந்தவிரிந்த உலகம் அவள் ஒருவளாக சுருங்கிப் போக, அவள் மீதான காதல் அவனுக்கு பெருகிக் கொண்டே போனது.

ஜென்னி டேவிடின் பார்வையில் இக்கட்டாய் உணர்ந்தவள் “டேவிட்… என்னாச்சு உங்களுக்கு… ஏன் இப்படி பார்க்கிறீங்க ?” என்றாள். 

“சாரி ஜென்னி…” என்று அவன் உரைக்க,

“எதுக்கு?”

” என்னால உன்னை ப்ரண்ட்டா மட்டும் பார்க்க முடியல… ஐம் க்ராஸிங் மை லிமிட்ஸ்… அது என்னையும் மீறி நடக்குது… என்னை நீ ரொம்ப டிஸ்டர்ப் பன்ற … உன்னை பார்க்காம பேசாம… என்னால இருக்க முடியல… இதுதான் காதலான்னு கேட்டா அதுக்கும் எனக்கு சரியா பதில் தெரியல… ஆனா ஒரு விஷயம் மட்டும் ஸ்டிராங்கா தோணுது… நீ என் வாழ்க்கை முழுக்க இருக்கனும் ஜென்னி… ” என்று அவன் சொல்லி முடிக்க, அவள் அதிர்ந்து போனாள்.

அவள் முகம் சுருங்கிப் போக அவனை நிமிர்ந்தும் கூட பார்க்காமல் “நான் போறேன்” என்று அவள் முன்னேறி நடக்க,

“நாம ஒண்ணா வந்தோம்… இப்போ நீ மட்டும் கிளம்பிறன்னா ?!” என்று நின்றபடியே அவன் கேட்க,

“நான் டேக்ஸில போய்க்கிறேன்… நீங்க போங்க!” என்றாள். 

“அப்போ என் மேல இருந்த நம்பிக்கை உடைஞ்சி போச்சா? நீ சொன்ன அந்த மேன் ஆஃப் பெஃர்ப்க்ஷன்”

அவள் மேலே செல்லாமல் திரும்பி அவனை பார்க்க, “எவனோ ஒரு டேக்ஸி டிரைவரை நம்புவ… ஆனா என்னை நம்பி வரமாட்ட” என்று கேட்க,

“அப்படி இல்ல டேவிட்”

“வேறெப்படி?” 

“அய்யோ… வேறெப்படியும் இல்ல… வாங்க போலாம்” என்றாள்.

அவன் மௌனமான புன்னகையோடு அவள் பின்னே வந்தான்.

அவர்களுக்கு இடையில் புகுந்து கொண்ட மௌனம், அவர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருந்தது. 

அவர்களின் காதலும் நட்பும் ஒன்றோடு ஒன்றோடு போர் தொடுத்துக் கொள்ள, இரண்டுமே ஒன்றை ஒன்றை ஆட்கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியதுதான் மிச்சம்.

மாயாவும் மகிழும் பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அவசர சிகிச்சை பிரிவின் வெளிப்புறத்தில் நின்று கொண்டு கண்ணீரிலேயே கரைந்தபடி நின்றிருந்த தன் தாயை பார்த்து பதறியவற் “ம்மா” என்று அழைக்க, அவரும் அவனை பார்த்த நொடி “டே மகிழ்… அப்பாவுக்கு” என்று மேலே சொல்ல முடியாமல் கலங்கி நின்றார்.

மகிழ் அவரை அணைத்தபடி “அப்பாவுக்கு ஒண்ணு ஆகாதும்மா, நீங்க கவலைப்படாம தைரியமா இரூங்க” என்றான்.

அதே நேரம் அவன் எழிலை பார்த்து என்ன விஷயம் என்பது போல் கண்களாலயே விசாரிக்க, அவள் பிறகு சொல்வதாக தலையசைத்தாள்.

தன் அம்மாவை முடிந்தளவு தேற்றியவன் தன் தமக்கையை தனியாய் அழைத்து “என்ன பிரச்சனை எழில் ?” என்று கேட்க,

“வேந்தன் அண்ணாவால நம்ம குடும்ப மானமே போச்சு டா… அவனை அண்ணான்னு சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்கு” அழுது அழுது சிவந்த அவள் முகம் அவனை பற்றி பேசும் போது அத்தனை கோபத்தை பிரதிபலித்தது.

“என்ன சொல்ற எழில் ?… வேந்தன் அண்ணாவா?!” அவன் நம்பாமல் கேட்க, அவள் சொல்ல வாயெடுத்து பின் மாயாவை பார்த்து மௌனமானாள்.

மாயா புரிந்து கொண்டு அங்கிருந்து விலகி செல்ல யத்தனிக்க அவள் கரத்தை
பற்றியவன், எழலிடம் “அவளும் நம்ம குடும்பத்தில ஒருத்திதான் எழில்… நீ விஷயத்தை சொல்லு” என்றான்.

மாயா பூரிப்படைந்த சமயத்திலும் எழிலும் அவர்கள் உறவை புரிந்து கொண்டு “மாயாவை நீ கல்யாண பண்ணிக்கிட்ட இருந்தையே நான் மறந்திட்டேன்டா… அதான்” என்று சொல்லி எழில் தன் பார்வையாலயே மாயாவிடம் மன்னிப்பு கோர,

மாயா இமை மூடி தன் புரிதலை உணர்த்தினாள்.

மகிழ் தவிப்போடு “சரி… அண்ணாவோட கல்யாணம் என்னாச்சு?!” என்று கேட்க

“எல்லாம் நாசமா போச்சு…” என்றவளை குழப்பமாய் பார்த்தான் மகிழ்.

எழில் கோபம் பொங்க “எப்படிடா அந்த கன்றாவியை சொல்லுவேன் ? அண்ணனுக்கு ஏகப்பட்ட பொண்ணுங்களோட தொடர்பு இருக்காம்… அதுலயும் ஒரு பொண்ணு கூட கெனடாவில லிவ்விங் ரிலேஷனில இருந்திருக்காராம்… அது ஒரு பக்கம்னா குடி சிகரெட்டு ஒண்ணு பாக்கியில்லை… இந்த வயசில பாவம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதையெல்லாம் கேட்டு தொலைக்கனும்னு தலையெழுத்து… பொண்ணு வீட்டுக்காரங்க வந்து மானத்தை வாங்கி அசிங்கப்படுதிட்டு போயிட்டாங்க… என் மாமியார் மாமனார் , நம்ம சொந்தக்காரங்க எல்லாம் நம்ம குடும்பத்தை கேவளமா ஒரு பார்வை பார்த்தாங்க பாரு….. நாண்டுகிட்டு செத்துரலாம் போல இருந்துச்சு”என்று சொல்லி கதறியவளை சமாதானம் செய்யாமல் அதிர்ச்சியில் அவன் உறைந்திருக்க,

மாயா எழலிடம் “அழாதீங்க அண்ணி” என்று சமாதானம் செய்தாள்.

மகிழால் நம்பவே முடியவில்லை. வேந்தனை ரொம்பவும் உயர்வான இடத்தில் வைத்திருந்தான். ஆனால் இன்று அந்த பிம்பம் சுக்குநூறாய் உடைந்து போனது.

மகிழ் அவசரமாய் நிமிர்ந்து “எப்படி இதெல்லாம் உங்களுக்கு தெரியும் ?” என்று தன் சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ள கேட்டான்.

“பொண்ணு வீட்டுக்காரங்க சொல்லிதான் எங்களுக்கே எல்லா தெரியும்”

“அவங்க சொன்னா நீங்கெல்லாம் நம்பிடுவீங்களா?” என்று மகிழ் கோபமாக கேள்வி எழுப்ப, அவனால் இன்னுமும் தன் தமையனை தரம் தாழ்த்தி யோசிக்க முடியவில்லை.

“புரியாம பேசாதடா… அவங்க ஒண்ணும் சும்மா சொல்லல… அண்ணனை பத்தி எல்லாம் ஆதாரமும் வைச்சுகிட்டுதான் பேசினாங்க… நாங்களும் நம்பல… ஆனா அண்ணனே ஆமாம் அப்படிதான்னு ஒத்துக்குச்சு” என்று எழில் சொல்லும் போதே மகிழ் மனதளவில் சிதைந்து போனான். அவன் விழிகளிலும் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.

அதற்குள் டாக்டர் அழைப்பதாக சொல்ல, எழில் முன்னே சென்றாள்

மகிழ் உடைந்து அப்படியே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

மாயா அவனருகில் அமர்ந்து “என்ன மகிழ் ? நீங்களே இப்படி உடைஞ்சி போனா எப்படி?” என்று கேட்க,

“இல்ல மாயா… என்னால இப்பவும் நம்ப முடியல… அண்ணன் போய்” என்று வார்த்தை வராமல் தடுமாற,

மாயா அவன் கரத்தை பிடித்து கொண்டு “உங்களாலயே இதை தாங்க மூடியலன்னா… அம்மா அப்பா எப்படி தாங்கியிருப்பாங்க… யோசிச்சீங்களா? நீங்கதான் இந்த நேரத்தில அவங்களுக்கு துணையா நிற்கனும்” என்க,

அவனும் அவள் சொல்வதை ஏற்று தன் கண்ணீரை துடைத்து கொண்டு தெளிவுப்பெற்று எழுந்து சிகிச்சை அறை வாசலுக்கு சென்றான்.

சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து “மைல்ட் அட்டேக்தான்… நத்திங் ஸ்ரீயஸ்… ஆனாலும் அவரை ஜாக்கிரதையா பார்த்துக்கனும்… நிறைய டென்ஷன் கொடுக்காதீங்க” என்று வரிசையாய் நிறைய அறிவுரைகளை வகுத்தவர் இறுதியாக ஒருத்தர் ஒருத்தராக உள்ளே சென்று பார்க்க சொன்னார்.

வள்ளியம்மை மருத்துவர் சொன்ன வார்த்தையால் சற்று ஆறுதல் பெற்று, கணவனை சென்று பார்த்து தன் ஆற்றாமையால் வெதும்பியவள் கண்ணீரோடு அறைக்கு வெளியே வந்து “அப்பா உன்கிட்ட பேசனுமா மகிழ்”என்றதும் அவன் ஆர்வத்தோடு
உள்ளே சென்றான்.

அங்கே இருந்த மருத்துவ உபகரணங்களும் அதற்கு கிடையில் துவண்டு படுத்துக்கிடந்த தந்தையை வெகுநாட்களுக்கு பிறகு பார்த்தவனுக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது.

மகன் வந்து நின்றதும் ஞானசேகரனின் விழிகளிலும் நீர் உகுக்க,

அவன் கண்ணீர் தளும்ப “நான் இத்தனை நாளா உங்களை பார்க்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்று வருத்தமுற்றான்.

அவர் மகனின் கரத்தை பிடித்தபடி மூச்சை இழுத்துவிட்டு பேச சற்று சிரமப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் “நீ ஏன்டா மன்னிப்பு கேட்கனும்… நீ என்னடா தப்பு செஞ்ச நான்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன்… அந்த பாவத்துக்குதான் எனக்கு இந்த தண்டனை” என்க,

அவன் புரியாமல் “என்னப்பா இப்படியெல்லாம் பேசிறீங்க” என்று கேட்டான்.

“ஆமாம் மகிழ்… நான் பெரிய பாவம் பண்ணிட்டேன்… அந்த பொண்ணு சாக்ஷியோட குறையை சுட்டிக்காட்டி நீ கல்யாணம் பண்ணிக்க அவ தகுதியானவ இல்லன்னு சொன்னப் பாரு…

அந்த பாவம்தான்.. நம்ம குடும்பத்தை சுத்தி சுத்தி அடிக்குது…

உங்க தருதலை பிள்ளைக்கு என் பொண்ணை கட்டிக்க என்ன தகுதி இருக்குன்னு கேட்டாங்கடா .. நாங்க அடிச்ச பந்து எங்களுக்கே திரும்பி வந்த மாதிரி இருந்துச்சு… ” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல அங்கிள்” என்று சமாதனம் உரைத்தது ஒரு பெண்ணின் குரல்.

மகிழ் அந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தவன் திகைத்துவிட, ஞானசேகரனுக்கோ அந்த கணம் அவர் விழியை அவராலயே நம்ப முடியவில்லை.

Comments Here