thaagam 24

 

 

தாகம் – 24

 

             விக்ரம் காரை வேகமாக ஓட்டினான். வழக்கமாக விக்ரமிடம் இருக்கும் நிதானம் இன்று இல்லை. விக்ரம் எதுவும் பேசவில்லை. திவ்யாவால் இந்த அமைதியை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ஏதாவது பேசி  அவனிடம் திட்டு  வாங்கினால் கூட பரவாயில்லை என்ற எண்ணத்தில் இரண்டு முறை அவன் முகத்தை பார்த்தாள். அதில் இருந்த அழுத்தம் திவ்யாவை அமைதியாக இருக்க செய்தது.

 

            ஆனால்  திவ்யாவால் எத்தனை நிமிடங்கள் அமைதியாக இருக்க முடியும்…? “பாடல் ஒலித்துக் கொண்டிருந்தால், அதையாவது கேட்கலாம் ” , என்றெண்ணி,  “பாட்டு போட்டுக்கட்டுமா ? ” , என்று தயங்கியபடியே  விக்ரமிடம் கேட்டாள்.

 

தலை அசைத்தான் விக்ரம். அவன் தலை அசைப்பையே சம்மதமாக கருதி, கார் மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்ய பாடல்  ஒலித்தது…

 

” எங்கெங்கோ  செல்லும் என் எண்ணங்கள்

இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே “,

 

     பாடலோடு ஒன்றாக இணைந்த திவ்யா , கண்களை மூடிக் கொண்டு  அவளும் அதோடு சேர்ந்து பாட ஆரம்பித்தாள்.

 

ஹா…நான் காண்பதே உன் கோலமே

அங்கும்…இங்கும்…எங்கும்

 

             திடீரென்று பாடல் நின்று வட்டது.  கண்களை திறந்த திவ்யா , விக்ரமை பார்க்க, ” சாரி … உண்மையா பாட்டு கேட்கும் மன நிலையில் நான் இல்லை….. ” , என்று மெதுவாக கூறினான்.

 

அவனிடம் பேச விரும்பாதவளாக முகத்தை சாலையின் பக்கமாக திருப்பி கொண்டு.., “என்ன ஜென்மமோ..? ” , என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே வந்தாள்.

 

    இவை எதுவும் விக்ரம் கண்ணிலும் படவில்லை, கருத்திலும் பதியவில்லை . அவன் மூளை ஏதோ சிந்திக்க, சாலையை பார்த்துக் கொண்டு காரை ஓட்டினான் விக்ரம்.

 

           திவ்யா வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

கார் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைந்தது.

 

ஆகா..!! எவ்வளவு பெரிய வீடு…!!  இல்லை  பங்களா….

 

“இதை எப்படி பராமரிப்பார்கள்…? ” , என்ற எண்ணம் திவ்யாவுக்கு வந்தது.

 

“என்னை எதற்காக இங்கு அழைத்து வந்திருப்பான்.. ?” , என்று எண்ணம் தோன்ற, “ஒருவேளை என்னை  கடத்தி இங்கு கொண்டு வந்திருப்பானோ..? என்ற எண்ணம் ஒரு நொடி தோன்ற , விக்ரமைப் பார்த்தாள். ” இல்லை.. வாய்ப்பேயில்லை .. இவன் நல்லவன்..  ரமேஷ் சொல்லிருக்கானே.. “, என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டாள்.

 

“இத்தனை நேரம் பொறுமையாக இருந்து விட்டோம்.. இன்னும் சில நிமிடங்கள் தானே …” , என்றெண்ண காரை நிறுத்தினான் விக்ரம்.

 

காரிலிருந்து விக்ரம் இறங்க, திவ்யாவும் இறங்கினாள்.

 

விக்ரம் திவ்யாவின் கைகளை பிடித்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றான்.

            அங்கு ஒரு பெண் எதிரே வர, “அம்மா  ரூம்ல இருக்காங்களா?” , என்று விக்ரம் தோரணையாக கேட்க, அந்த குரலில் சற்று அஞ்சி  வேகமாக தலை அசைத்தாள்.

 

”  வேலை ஆள் போலும்.. ” , என்று மனதிற்குள் நினைத்துக்  கொண்டாள் திவ்யா.

 

படி அருகே ,  ஹாலில் ஓரத்தில் இருந்த மீன் தொட்டி திவ்யாவின் கண்களை பறித்தது. “மீன் தொட்டியை  அருகில் சென்று பார்க்க வேண்டும்” ,என்ற ஆவல் அவள் மனதிற்குள் எழுந்தது.

 

விக்ரம் கையை விட்டால் தானே…!!!

 

திவ்யாவை இழுத்துக் கொண்டு அவன் அம்மா முன் நின்றான்.

 

விக்ரம் வந்த வேகத்தில் சற்று அதிர்ச்சி அடைந்த விக்ரமின் தாய்,

“கல்யாணம்  செய்து அழைத்து  வந்து விட்டானோ ….” , என்று பயந்து திவ்யாவின் கழுத்தை பார்த்தார்.  விக்ரமின் வேகம் அவர் அறிந்ததாயிற்றே!!!!!

அப்படி எதுவும் நடக்கவில்லை என்றறிந்து சற்று அமைதி  அடைந்தவராக, ” என்ன ஆச்சு விக்ரம் ? ஏன் இவ்வளவு பதட்டம் ? ” , என்று  மெத்தையில் அமர்ந்துக் கொண்டு  பொறுமையாக வினவினார்.

 

“திவ்யா யாரு..?”, என்று கேட்டான் விக்ரம்.

 

“இதை கேட்கவா இப்படி அழைத்து வந்தான்…? , என்ன விஷயமாக இருக்கும்?”,  என்று திவ்யா சிந்திக்க தொடங்க, விக்ரமின் தாயாரின் குரல் திவ்யாவின் சிந்தனையை நிறுத்தியது.

 

“என் கிட்ட கேட்டா என்ன அர்த்தம்.. ? நீ ரமேஷ் கிட்ட தான் கேக்கணும்…”, என்று விக்ரமின் அம்மா கூற, “நான் ஏன் இவளை கல்யாணம் பண்ணிக்க  கூடாது…? இதையும் ரமேஷ் கிட்ட கேக்கவா? ” , என்று அவன் தாயை கூர்மையாக பார்த்துக் கொண்டே  கேட்டான்  .

 

“இவன் ஏன் இப்படி குதிக்கிறான்..? என்ன நடந்திருக்கும் ?” , என்று விக்ரமின் தாய் யோசிக்க, “இவன் என்ன பேசி கொண்டிருக்கிறான்..?” , என்று அதிர்ந்து நோக்கிய திவ்யாவுக்கு.., “இத்தனை அன்பாய் , அழகாய் காதலை சொன்ன இவனுக்கு தேசிய விருது கொடுக்கலாமா..?  இல்லை “Best Love proposal “ன்னு  விஜய் அவார்ட்ஸ் கொடுக்கலாமா” , என்ற சந்தேகமும் எழுந்தது.

 

“நீ என்ன பேசறேன்னு எனக்கு புரியலை.. ” , என்று விக்ரமின் அம்மா அமைதி காக்க, ” அப்ப நீங்களா என்கிட்டே எந்த விஷயத்தையும்  சொல்லமாட்டீங்க..? ” , என்று நேரடியாக கேட்டான்.

 

“நீ எதை கேட்கணு மோ  அதை நேரடியாக கேட்க வேண்டியது தானே.. ” , என்று விக்ரமின் தாய் கோபமாக கூற, அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் திவ்யா பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு இன்னக்கி ஒரு கால் வந்துச்சு.. திவ்யாவோட அப்பா மரணத்திற்கும் நம்ம குடும்பத்திற்கும் சம்பந்தம்  இருக்குனு சொன்னான்..  நான் எப்படி நம்பறதுனு கேட்டதுக்கு ,  எல்லா உண்மையும் உங்களுக்கு தெரியும்னு சொன்னான் ” , என்று விக்ரம் நேரடியாக கூற , “என்னை சந்தேக படுறியா? ” , என்று கேட்டார் விக்ரமின் தாயார்.

 

“இல்லை அம்மா.. ஆனால் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..  திவ்யா

 அவங்க  அப்பா  மரணத்திற்கு காரணம் தேடி அலையறா.. ஒருவேளை தப்பு பண்ணவங்க நம்ம குடும்பத்தில இருந்தாலும்  அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்.  நல்ல மனிதருக்கு நியாயம் கிடைக்கணும் ” , என்று கோர்வையாக பேசி முடித்தான்.

 

விக்ரமின் அம்மா அமைதியாக அமர்ந்திருக்க, விக்ரம் இறுக்கமாக அமர்ந்திருந்தான்.

 

என்ன நடந்திருக்கும் என்ற ஆவல் திவ்யாவின் மனதுக்குள் இருந்தாலும்…..” இப்ப எதுக்கு இந்த பிரச்சனை…? ” ,   என்று திவ்யா கேட்டாள்.

 

“இல்லை திவ்யா.. பழி சொல் வந்துட்டா  அதை சரி செய்தே ஆக வேண்டும்.. ” , என்று விக்ரமின் தாயார் அழுத்தமாக கூற, விக்ரமின் பிடிவாதம் எங்கிருந்து வந்தது என்பதை திவ்யா புரிந்து கொண்டாள்.

 

விக்ரமின் தாயார் கடந்த காலத்தை நோக்கி சென்றார்.

”       திவ்யா அப்பாவும் உங்க அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ” , என்று விக்ரமை பார்த்து கூறினார் . விக்ரம் அம்மா கூறுவதை கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்

மேலும் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் விக்ரமின் தாய்.

“திவ்யா அப்பா ரொம்ப நல்லவர். நேர்மையானவர். நிஜம் பத்திரிகையில் நிருபர். “புஷ்பா” , ங்கிற புனைப் பெயர்ல அவர் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். வசதியான குடும்பத்தில் பிறந்த உங்க அப்பாவுக்கும்  கதை எழுதறது , கவிதை எழுதறதுனா ரொம்ப இஷ்டம்.  தொழில் இருந்ததால அவரால முழு நேர நிருபரா வேலை பார்க்க முடியலை.

 

    ஒரு நாள் திவ்யாவோட அப்பா  கூவ நதிக்கரை மக்களை பேட்டி எடுத்துட்டு அந்த நதிக்கரையில் போய் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதுல ஒரு தொழிற்சாலையிலிருந்து வர கழிவுகள் ரொம்ப  ஆபத்தான விஷம் கலந்த நீருனு   கண்டுபிடிச்சாங்க.

            திவ்யாவோட அப்பா அதை கண்டுபிடிக்கிறதுக்கு உதவியா இருந்தது உங்க அப்பா. அதனால் உங்க அப்பாவை ஒரு விபத்து மூலமா  கொலை பண்ண திட்டமிட்டாங்க. உங்க அப்பாவை காப்பாத்திட்டு திவ்யா அப்பா இறந்துட்டாங்க.

     நாங்க அதுக்கு அப்புறம் பல  முறை புஷ்பாவை பார்த்து பேசினோம். நம்ம பிஸ்னெஸ்ல பாதியை அவ கிட ஒப்படைச்சிரலாமுன்னு முடிவு பண்ணோம்.. ஆனால் புஷ்பா எதையும் ஏத்துக்களை, நம்ம உதவியை  ஏத்துக்கிட்டா , திவ்யா அப்பா பண்ண தியாகத்துக்கு மதிப்பு இல்லாம போய்டுமுனு சொன்னா.. “நீங்க என்னை பாக்கிறது உங்களுக்கு குற்ற உணர்ச்சியா இருக்கும்.. எனக்கும் தேவையில்லாத சங்கடத்தை தரும்.உங்க உதவி எங்களுக்கு வேண்டாம்..இனி என்னை பார்க்க வராதீங்கன்னு”,  புஷ்பா சொல்லிட்டா. ஒரு நாள் சொல்லாம , வீட்டைக் கூட காலி பண்ணிட்டு போய்ட்டாங்க.. அதுக்கு மேல புஷ்பாவை தொந்திரவு பண்ண கூடாதுனு நாங்களும் புஷ்பாவை தேடி போகலை.. உங்க அப்பாவும் அதுக்கு அப்பறம் கதை கவிதைன்னு எதுவும் எழுதலை…

 

அதுக்கு அப்புறம் புஷ்பாவை , நான் அன்னக்கி திவ்யாவின் மொபைலில் தான் பார்த்தேன்..  நம்ம  உறவே வேண்டாமுன்னு போன புஷ்பா..,   இந்த கல்யாணத்துக்கு ஒதுக்க  மாட்டா.. அதனால தான் நீங்க ரெண்டு  மனசுல ஆசையை வளர்த்துட்டு ஏமாற கூடாதுனு நினச்சேன்.. ” , என்று பேச்சை முடித்தார் விக்ரமின் தாய்.

 

“அப்பாவை கொலை பண்ண முயற்சித்தது யார்? இதை திசை திருப்பும் முயற்சி ஏன் நடக்கிறது.?” , என்று விக்ரம்  வினவ , தனக்கு தெரியாது என்று தலை அசைத்தார் விக்ரமின் அம்மா.

 

“ஆண்ட்டி, அந்த விஷம் கலந்த நீர் இன்னும் கூவம் நதிக்கரையில் கலந்துட்டு இருக்கா..? ” , என்று திவ்யா அதிர்ச்சியுடன் கேட்க,

 

“இல்லை திவ்யா.. இந்த கொலை அதன் பின்னணினு விக்ரம் அப்பா போட்ட கேஸோட பலனா குற்றவாளியை கண்டு பிடிக்க முடியலைனாலும் குற்றவாளி  செய்த தப்பை நிறுத்த முடிஞ்சிதுனு நம்பறோம்…. அந்த விஷம் தன்மை நிறைந்த கழிவு நீர் கூவம் நதிக்கரையில் கலந்திருந்தாள் இந்நேரம் நாம யாரும் இருந்திருக்க மாட்டோம்.. ” , என்று கூறிய விக்ரமின் தாய், “அது என்ன கால் ? உனக்கு ஏன் பண்ணாங்க? வேறு என்ன சொன்னாங்க ?” , என்று விக்ரமை நோக்கி வினவினார்.

 

 

“திவ்யாவை கொலை பண்ணிடுவோமுனு மிரட்டினாங்க.. அவளுக்கு உதவி பண்ணா  என்னையும் கொலை பண்ணிருவேன்னு மிரட்டினாங்க…”, என்று விக்ரம் அமைதியாக கூறினான்.

 

“இந்த மாதிரி மிரட்டல் கால் உங்க அப்பாக்கும் நிறைய வரும்..  இத்தனை வருஷங்கள் இல்லாம இப்ப ஏன்  இந்த திடீர் பிரச்சனை?” , என்று விக்ரமின் தாய் கேட்க, ” திவ்யா , அவங்க அப்பா பண்ண அதே ப்ரொஜெக்ட்டை பண்ரா …”, என்று விக்ரம் கூற, அவளை ஆழமாகப் பார்த்தார் விக்ரமின் தாய்.

விக்ரம் தீவிரமாக சிந்திக்க, “இன்னமும் என்ன யோசிக்கிறீங்க..?”, என்று திவ்யா கேட்க, “உங்க அப்பாவை கொலை பண்ணது யாரா இருக்கும்.?” , என்று விக்ரம் யோசனையாக கேட்டான்.

 

” கண்டுபிடித்து இப்ப என்ன ஆகப்போகுது… ?” , என்று கேட்டாள் திவ்யா.

 

“அதை தேடி தானே நீ இப்ப கஷ்டப்படற….?” , என்று விக்ரம் கேட்க,  “இல்லை ” , என்று தலை அசைத்தாள் திவ்யா.

 

“அப்பா மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம்.. அவர் காப்பாற்றணும்னு நினைச்ச கூவம் நதி,  கூவம் நதிக்கரை மக்கள்…. இதெல்லாம் தான் என் குறிக்கோள்… ” , என்று திவ்யா அமைதியாகவும் அழுத்தமாகவும் கூறினாள்.

 

“என் கணிப்பு சரினா , கொலைகாரன் நம்மளை  தேடி வருவான்… நாம கொஞ்சம் ஜாக்கிரதையா  இருந்தா போதும்… ” , என்று திவ்யா கூறினாள்.

 

 

“சரி ஆண்ட்டி நாங்க கிளம்பறோம்..” ,  என்று திவ்யா கூற விக்ரமும் கிளம்பினான்.

 

“முதன்முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கா எதாவது சாப்பிட்டுட்டு போங்க.. ” , என்று விக்கிரமின்  தாய் கூற,

 

“இல்லை ஆண்ட்டி … ஒர்கிங் ஹௌர்ஸ்..  நிறைய வேலை இருக்கு….. ” , என்று  திவ்யா கூற இருவரும் அவசரமாக  கிளம்பினர்.

 

 

விக்ரம்  காரில் மியூசிக் சிஸ்ட்டத்தை ஆன் செய்தான்.

 

  பாடல் ஒலித்தது..

” ஹா…கல்லானவன் பூவாகிறேன்

கண்ணே…உன்னை…எண்ணி

ஹா…பூவாசமும் பொன் மஞ்சமும்

எங்கோ…எங்கோ…ராஜா

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்

நான்…நீ…நாம் “

 ரசித்து  சிரித்தாள் திவ்யா. அவள் சிரிப்பை உணர்ந்து ரசித்தான் விக்ரம்.

 

“எங்க போகணும்.? ஏதோ அவசரமா கிளம்பின மாதிரி இருந்ததே… ” , என்று விக்ரம் வினவ,  ” உங்க ஆபீஸ்க்கு எதிர் பக்கம் இருக்கிற அம்மன் கோவில் முன்னாடி  இறக்கி விடுங்க.  கொஞ்சம் வேலை இருக்கு. ” , என்று திவ்யா கூறினாள்.

 

  காரை அம்மன் கோவில் பக்கத்தில், நிறுத்தினான். திவ்யா  எங்கு செல்ல போகிறாள், என்ற அறிதவனாய், “எதாவது பிரச்சனைனா கால் பண்ணு… ” , என்று கூறிவிட்டு, “இவளை திருத்த முடியாது “, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவனாய் விக்ரம் கிளமபினான்.

 

திவ்யா  டீக்கடை ஒட்டிய சந்து வழியாக உள்ளே  செல்ல.. தீபா எதிர்பக்கமாக நடந்து வருகிறாள்.

 

தீபா பேசுவது தெளிவாக திவ்யாவின் காதில் விழுகிறது.” இன்னக்கி அம்மாக்கு சம்பளம் வந்திருச்சு.. ஐம்பது ரூபாய் எனக்கு  குடுத்தாங்க.. நான் இன்னக்கி வாட்டர் பாட்டில் வாங்கி மீதி  காசை  பத்திரமா வச்சிப்பேன்.. ” , என்று தீபா ஆனந்தமாக கூற, பாண்டியன் எதுவும் பேசாமல் தலை அசைத்தான்.  பாண்டியன் முகத்தில் அத்தனை உற்சாகம் இல்லை. தீபா தண்ணீர் பாட்டில் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையோடும் தாகத்தோடும் நடந்தாள்.

 

      திவ்யா கூவ நதிக்கரை நோக்கி வேகமாக நடந்தாள்.  இந்த மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டுமென்ற தாகம் அவள் மனம், மூளை, சொல்,  செயல் அனைத்திலும் நிறைந்திருந்தது..

 

         இதில் யார் தாகம் தீரும்…….??

 

                          காத்திருப்போம்…….

                                      தாகம் தொடரும்……


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!