Naan aval illai 50

Naan aval illai 50

ஆனந்த அதிர்ச்சி

மாயா தன் தோழியின் கரத்தை பிடித்து கொண்டு “என்ன மன்னிப்பியா சாக்ஷி ?” என்று கேட்டு கண்ணீர் விட்டு கதறியவளை

“என்ன மாயா  பேசிற” என்று சொல்லி அவளை சமாதான செய்ய முயல அவள் அப்போதும் அமைதியின்றி அழுதபடியே இருந்தாள். 

அவள் முகமெல்லாம் அழுது அழுது வீங்கியிருந்தது. கண்கள் முழுவதும் ஈரம் படர்ந்திருக்க ஜென்னி அவளை சமாதானப்படுத்த சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அவள் அழுகையை அதிகரித்து கொண்டிருக்க இறுதியாய் அழுது அழுது அவள் மயங்கி சரிந்தாள்.

எல்லோருமே ஒரு நொடி பதறிவிட மகிழ் மாயாவை தூக்கி வந்து அவள் அறையில் படுக்க வைத்தான்.

மகிழ் அறையை விட்டு வெளியே வந்ததும் ஜென்னி அவனிடம் “ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போலாமே” என்று தவிப்புற,

யாழ்முகை அவர்களிடம் “அதெல்லாம் ஒண்ணு வேண்டாம் சாக்ஷி… எல்லாம் யூஸ்வல்தான்… பிரகனன்சி சிம்ப்டம்ஸ்… சாப்பிடாம கொள்ளாம அழுதுட்டே வேற இருந்தா இல்ல…” என்று சொல்ல மறுகணமே எல்லோரின் முகமும்  மலர்ந்தது. 

மகிழ் தன் விழிகள் அகல ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்தான். அவள் நேற்று அவன் வந்த போது கட்டியணைத்து கொண்டதை நினைவுகூர்ந்தவன் அவளை கோபத்தில் நிராகரித்ததை எண்ணி இந்த நொடி குற்றவுணர்வில் தலையிலடித்து கொண்டான். 

அதே நேரம் ஜென்னி டேவிடை முறைத்து கொண்டிருந்தாள். 

அவன்தானே உண்மையெல்லாம் போட்டு உடைத்தது. அந்த கோபம் அவளுக்கு. 

அவன் அவளிடம் “எனக்கு இந்த விஷயம் தெரியாது ஜென்னி  ?” என்றுரைக்க,

அவள் கண்ணீர் தளும்ப “நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல டேவிட்” என்றதும் 

அவன் தவிப்போடு “உன் நல்லதுக்காகதான்” என்றவன் சொல்ல வர,

அவள் இடைமறித்து “பேசாதீங்க டேவிட்” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளை இப்போதைக்கு சமாதானம் செய்வது இயலாத காரியம் என அப்போதைக்கு மௌனமானான்.

அதற்குள் மகிழ் மாயாவின் அறைக்குள் செல்ல அவள் சோர்ந்த நிலையில் படுத்துகிடப்பதை பார்த்து அவன் மனம் கனத்தது.

மயக்க நிலையில் கிடந்தவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை தன் கரங்களில் ஏந்தி நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து கண்ணீர் பெருக்க அந்த துளிகள் அவள் முகத்தில் சிந்தி அவளை எழுப்பிவிட்டது.

அவன் முகத்தை அத்தனை அருகாமையில் பார்த்து அவளும் கண்ணீர் வழிந்தோட “என்னை மன்னிச்சிடுங்க மகிழ்… உங்களை புரிஞ்சிக்காம நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்க,

“நானும்தான்டி உன்னை புரிஞ்சிக்கல.” என்றவன் அவள் கண்ணீரை துடைக்க, அவள் உலகையே மறந்த நிலையில் அவனை விழி எடுக்காமல் பார்த்திருந்தாள். 

மகிழ் நெகிழ்ச்சியான பார்வையோடு “பிரகெனன்ட்டா இருக்கன்னு ஆன்ட்டி சொன்னாங்க” என்று கேள்வி குறியாய் அவளை பார்க்க,

அவள் வெட்க புன்னகையோடு தலையை அசைத்து ஆமோதிக்க, அவன் சந்தோஷத்தின் உச்சத்தை தொட்டிருந்தான்.

களிப்பில் மிதந்தவன் அவளை உணர்வுபூர்மாய் தன் மார்போடு சேர்த்து  இறுக்கமாய் அணைத்து கொள்ள அவளும் நெகிழ்ந்து அவனை அணைத்து கொண்டவள், 

சட்டென்று அவனை விலக்கி விட்டு “சாக்ஷி எங்கே  ?” என்று கேட்டாள். 

பின்னிருந்து “இங்கதான் இருக்கேன்” என்று ஜென்னி உரைக்க மகிழ் பதறி கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து விலகி நின்றான்.

மாயாவிற்கும் ஏதோ உள்ளூர குத்திய உணர்வு.

அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்தபடி ஜுஸ் டம்ளரை ஏந்தியபடி நுழைந்தவள் “நான் இப்பதான் வந்தேன் பா… நான் எதையும் பார்க்கல” என்றவள் சொல்லவும் மாயா புன்னகையித்துவிட மகிழின் முகத்திலிருந்த இறுக்கம் மாறவேயில்லை.

அவன் அறையை விட்டு வெளியேற போக, அவனை வழிமறித்து நின்றவள் “இப்ப அவசரமா எங்க போறீங்க?” என்று கேட்டு நிறுத்த,

அவன் தடுமாறி “அது” என்க, 

ஜென்னி அவன் கையில் ஜுஸ் டம்ளரை தினித்து “உங்க பொண்டாட்டியை ஜுஸ் குடிக்க வையுங்க… அதை விட உங்களுக்கு என்ன அவசர வேலை” என்றவள் சொல்ல அவள் முகத்தை அவன் ஏறிட்டான்.

எந்தவித சலனமுமில்லாமல் தெளிந்த ஓடை நீராய் இருந்த அவள் முகத்தை அவன் ஆச்சர்யமாய் பார்க்க, 

ஜென்னி மாயா அருகில் போய் அவள் கரத்தை பற்றியவள் “பாப்பாவை இப்படியெல்லாம் பட்டின போட கூடாது…நேரா நேரத்துக்கு சாப்பிடிறனும்… வேலையெல்லாம் உங்க வீட்டுக்காரரை பார்த்துக்க சொல்லு… நீ புஃல்லா ரெஸ்ட் எடு” என்றவள் சொல்ல மாயா கலீரென்று சிரித்துவிட்டாள்.

மகிழ் பொய்யான கோபத்தோடு “இப்ப என்ன சொன்ன. ?” என்று புருவத்தை சுருக்கி பார்க்க,

“ஏன் செய்யமாட்டீகளா? அப்படி என்ன  கழற்ற வேலை உங்களுக்கு? ” என்றவள் கேட்க,

மாயா புன்னகையோடு “நீ வேற சாக்ஷி… அவர் காலையில போனா நைட் இரண்டு மூணாயிடும்… சன்டேஸ் கூட வீட்டில இருக்க மாட்டாரு” என்று சலிப்புற்று கூறவும்,

ஜென்னி மகிழை முறைத்தபடி “நீங்க இல்லன்னா ஜே சேனலே நடக்காதோ? !” என்றவள் கேட்க 

“எனக்கும் அதே டௌட்தான்” என்று மாயா சொல்லவும் இரு தோழிகளும் கள்ளத்தனமமாய் புன்னகையித்து கொண்டனர்.

மகிழ் முறைத்தபடி “நான் ஜே சேனலுக்கு எவ்வளவு முக்கியம்னு போய் நீ உங்க வருங்கால கணவர் டேவிட் கிட்ட கேளு தெரியும்” என்று கர்வமாய் உரைக்க  ஜென்னி அவள் சிரிப்பதை நிறுத்திவிட்டாள். 

மாயா குழப்பமுற்று “வருங்கால கணவர் டேவிடா ? அப்போ ராகவ்” என்று கேட்டாள். 

ஜென்னி மகிழின் முகத்தை துணுக்குற்று பார்க்க அவளுக்கு ராகவை பற்றி தெரியாது என்று சமிஞ்சை செய்தான்.

ராகவ் பற்றிய உண்மையை மகிழிடம் மட்டுமே டேவிட் உரைத்திருக்க அதனாலயே மாயா குழம்பினாள்.

மாயா அது பற்றி பேச ஆரம்பித்து ஜென்னியை காயப்படுத்த போகிறாளோ என்று அஞ்சி “அதெல்லாம் இருக்கட்டும் நீ முதல்ல ஜுஸை குடி” என்று மகிழ் அதனை அவள் வாயில் நுழைத்து பருக செய்தான்.

ஜென்னி அவள் குடிக்கும் வரை பொறுமை காத்தவள் பின்னர் எழுந்து “சரி மாயா.. நான் கிளம்பிறேன்” என்று அவர்களை பார்த்து உரைக்க,

மாயா அவள் கரத்தை கெட்டியாய் பிடித்து கொண்டு “இப்பவே போகனுமா?” என்று தோழியை பிரிய மனசில்லாமல் அழ தொடங்க,

அவள் அருகில் அமர்ந்து ஜென்னி “கவலைப்படாதே மாயா… நான் அடிக்கடி உன்னை பார்க்க வர்றேன்… வெளியே டேவிட் வெயிட் பன்றாரு… நான் போகனும்” என்று சொல்ல,

மாயா மகிழை பார்த்து முகத்தை சுணங்க “அனுப்பி வை… மாயா” என்றான் அவனும்.

“போ” என்று மாயா கோபித்து கொண்டு தலையை திருப்ப, ஜென்னி அவளை கட்டியணைத்தபடி “கோச்சிக்காதே மாயா… நான் வர்றேன்… நீ உன்னையும் வயித்தில இருக்கிற பாப்பாவையும் பத்திரமா பார்த்துக்கோ… ” என்று சொல்ல பிரிய மனமில்லாமல் மாயாவும் தன் தோழியை இறுக்கி அணைத்து கொண்டாள்.

மாயா பெருமூச்செறிந்து அவளை விடவும் ஜென்னியும் ஏக்க பார்வையோடு  பார்த்துவிட்டு மகிழின் புறம் திரும்பி “மாயாவை பார்த்துக்கோங்க மகிழ்” என்றதும் 

தலையசைத்தவன் “நீ உன் உடம்பை பார்த்துக்கோ” என்று உரைக்க, ஜென்னியும் அவன் சொன்னதற்கு சரியென்று சமிஞ்சை செய்துவிட்டு புறப்பட்டாள். 

மாயா அவளை வழியனுப்ப படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள மகிழ் கட்டாயப்படுத்தி அவளை அங்கயே நிறுத்திவிட்டு வெளியே வந்தவன், 

ஜென்னியுடன் புறப்பட தயாராகியிருந்த டேவிடிடம் “நீங்க கேட்டது மறந்துட்டு போறீங்களே டேவிட் சார்” என்று சொல்லி அறையிலிருந்த சாக்ஷியின் வீணையை எடுத்து அவனிடம் தர டேவிடின் முகம் அத்தனை பிரகாசமாய் மாறியது.

இதற்கு முன்பு வேறு யார் கேட்டிருந்தாலும் அந்த வீணையை மகிழ் நிச்சயம் தந்திருக்க மாட்டான். அதை அவன் அந்தளவுக்காய் அவளாகவே எண்ணி நேசித்து வந்தான். 

ஆனால் இப்போது அந்த வீணை டேவிடிடம் இருப்பதே சரியென்று பட்டது. தன்னைவிடவும் அவன் அதை நன்றாக பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை உருவாகி இருக்க, மனதார அந்த வீணையை டேவிடிடம் அளித்தான்.  

ஆனால் ஜென்னிக்கு ஒன்றும் விளங்கவில்லை. டேவிட் அந்த வீணையை பின் இருக்கையில் வைக்க, ஜென்னியும் பின்னோடே அமர்ந்து கொண்டாள்.

அவள் இன்னமும் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்து புறப்பட, 

ஜென்னி அவனிடம் “இப்ப இந்த வீணையை அங்கிருந்து எடுத்துட்டு வர வேண்டிய அவசியமென்ன. ?” என்றவள் இறுகிய பார்வையோடு கேட்க,

“என் வொஃய்வ்து… அதை வாங்கிட்ட வர எனக்கு உரிமை இல்லையா  ?” என்றவன் சொல்லி முன்னிருந்த கண்ணாடியில் அவள் முகத்தை பார்க்க அவளின் பார்வையில் வெளிப்பட்ட புன்னகையை உள்வாங்கி கொண்டது அவன் விழிகள். 

ஜென்னி நடந்தவற்றை யோசித்தபடி மௌனமாய் வந்திருக்க,

“மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா”

என்ற பாடல் ஓலித்து கொண்டிருக்க,

டேவிட் அப்போது “இந்த பாட்டோட லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இல்ல” என்று பேச்சு கொடுக்க,

“லவ் ஸாங்ஸா கேட்கிறீங்க போல…” என்றவள் கிண்டலாய் கேட்க,

“கடவுள் இல்லாம கூட இந்த உலகம் இயங்கலாம்… ஆனா காதல் இல்லாம… முடியாதுன்னு யாரோ என்கிட்ட சொன்னாங்க” என்றவன் புன்முறுவலோடு அவளை திரும்பி பார்க்க,

“அப்படின்னு யார் சொன்னது ?” என்று ஏதும் அறியாதவள் போல் அவள் கேட்க,

“முன்னாடி வந்து உட்கார்ந்தா  சொல்றேன்” என்றான்.

“பரவாயில்லை… நான் பின்னாடியே 

இருக்கேன்” என்றவள் சொல்ல பலமாய் ஏக்க பெருமூச்சொன்றை வெளிவிட்டு அவளின் வீட்டில் சென்று காரை நிறுத்தினான்.

ஜென்னி அத்தனை நேரமாய் அந்த வீணையை தீண்டியபடி அவள் வாழ்வில் கடந்த வந்த இன்பகரமான காலங்களில் நிலைகொண்டிருக்க, கதவை திறந்து “ஜென்னி” என்று டேவிட் அழைக்கவும் அப்போதே உயிரும் உணர்வும் பெற்றவளாய் விழித்தெழந்தாள்.

“என்னாச்சு  ?” என்று அவன் கேட்கும் போது வீட்டில் கார் நின்றிருப்பதை பார்த்தவள் இறங்கி அவனிடம் பதில் பேசாமல் முன்னேறி சொல்ல,

அவள் கரத்தை அழுந்த பற்றி நிறுத்தியவன் “இப்போ நீ கோபப்படிறளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன் ?” என்றவன் வினவ,

அவன் புறம் திரும்பி நின்று அவன் கரத்தை பிரித்துவிட்டவள் “யாரை கேட்டு மாயாகிட்டயும் மகிழ்கிட்டயும் உண்மையை சொன்னிங்க ?” என்று கோபமாய் கேட்க,

“இப்ப அதனால தப்பா என்ன நடந்திடுச்சு ?” என்று கேட்டு கூர்மையாய் பார்த்தான். 

ஜென்னி சிவந்திருந்த விழிகளோடு “அவங்க இரண்டு பேரும் உடைஞ்சி போய் எப்படி அழுதாங்க பார்த்தீங்க இல்ல” என்றவள் கனத்த மனதோடு சொல்ல, 

“ஆனா உன் நட்பு உனக்கு கிடைச்சிடுச்சே…” என்றவன் சொல்ல 

அவள் பதிலின்றி அவனை ஏறிட்டாள்.  

“நீ மாயா மேல வைச்சிருக்கிறது ரொம்ப ஆழமான நட்பு… அது எந்த காலத்திலயும் பிரிய கூடாது… அதனாலதான் நான் அப்படி செஞ்சேன்… இப்ப கொஞ்சம் கஷ்டமாவும் வலியாவும் இருந்தாலும் அது நாளடைவில மாறிடும்… ஜென்னி” என்று அவன்  பொறுமையாய் அவளுக்கு சொல்லி புரிய வைக்க,

அவனை ஆச்சர்யத்தோடு அவள் விழிஎடுக்காமல் பார்த்திருந்தாள்.

“என்னாச்சு ஜென்னி ?”

“இல்ல… எனக்காக இவ்வளவு செய்ற உங்களுக்கு பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்” என்று அவள் நெகிழ்ந்து கேட்க,

அவன் புன்னகையோடு “என் வாழ்க்கை பூராவும் என் கூடவே இரு ஜென்னி… எனக்கு அது போதும்” என்றவன் நிறுத்தி மீண்டும் “ஆனா ப்ரண்டா இல்ல… ஜென்னித்தா டேவிடா…” என்று கூறவும் 

“அப்போ நம்ம மேரேஜை  எப்ப வைச்சிக்கலாம்” என்று கேட்டாள் புன்னகை அரும்ப,

“சீர்யஸா” என்றவன் வியப்பின் விளிம்பில் நின்றிட “ஹ்ம்ம்” என்றாள்.

அவன்  அந்த நொடியே அவளை அணைத்து கொண்டான். 

அவள் புரியாமல் நிற்க, அவள் முகத்தை முத்தங்களால் நிரப்ப அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

காதலோடு உறவு கொள்வதும் காமத்தோடு உறவு கொள்வதும் முற்றிலும் வெவ்வேறு என்பதை அவனின் மென்மையான முத்தங்கள் மூலம் அவள் உணர, 

சட்டென்று அவளை பிரிந்தவன் தலையில் கை வைத்து கொண்டு “ஸாரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என்க,

அவனை விழி இடுங்க பார்த்தவள் “உணர்ச்சிவசப்பட்டு நடந்த மாறி தெரியலயே…  வான்டட்டா செஞ்ச மாதிரி இருக்கு” என்றாள். 

“வான்டட்டா பண்ணி இருந்தன்னா இப்படி இருக்காது” என்று சொல்லி அவளை கூர்ந்து பார்க்க

“வேறெப்படி இருக்கும் ?” என்றவள் கேட்க,

அவன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்பதை உறுதி செய்தவன் அவள் முகத்தருகே வரவும் மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் அவன் எண்ணம் புரிந்து விழிகளை மூடி கொள்ள, அவள் இதழ்கள் அவள் உதட்டை தொட்ட நொடியே நெருப்பை தொட்ட பிள்ளை போல வெடுக்கென  பின்வாங்கி கொண்டாள்.

அவனை நெருங்க வேண்டும் என்று அவள் எண்ணியதென்னவோ உண்மை. 

அதே நேரம் அவள் காயப்பட்ட உணர்வுகள் அதனை ஏற்க விடாமல் அவளை அச்சுறுத்தும் போது என்ன செய்வாள். 

தோற்று போன பார்வையோடு 

“ஸாரி டேவிட்… என்னால முடியல” என்று கண்ணீர் தளும்ப தலை குனிந்து நின்றவளை பார்த்து 

“இட்ஸ் ஒகே ஜென்னி… விடு” என்று இயல்பாய் அவள் தோள்களை தட்டினான்.

நடந்தவற்றை எண்ணியவள் தவிப்போடு “இப்ப கூட ஒருமுறை நல்லா யோசிங்க… நம்ம மேரேஜ் நடக்கனுமா  ?!” என்றவள் டேவிடிடம் கேட்க

அவன் அழுத்தமாய் திருத்தமாய் “நடக்கனும்…  கிராண்டா நடக்கனும்… அந்த ஸ்பெஷல் மொமன்ட்டை நான் ரொம்ப அழகா பதிவு பண்ணி வைக்கனும்… அதை பார்க்கிற நம்ம பேர பசங்க எல்லாம் பிரமிச்சி போகனும்” என்று தீர்க்கமாக உரைக்க,

அவள் விழிகள் அவன் எண்ணங்களை ஈடேற்ற முடியுமா என்ற நிராசையோடு தாழ்ந்து கொண்டது.

அவன் தன் கரத்தால் அவள் முகவாயை நிமிர்த்தி “நான் சொன்னதெல்லாம் கண்டிப்பா நடக்கும் ஜென்னி… நீ அதை பார்க்கதான் போற” என்றவன் அழுத்தமாய் சொல்ல அவள் பெயருக்கென்று புன்முறுவலித்தாலும் அவன் விருப்பத்தை எந்த நெருடலும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலை அவளை அழூத்த தொடங்கியிருந்தது.

மன்னிப்பு

டிவியில் திரும்ப திரும்ப ராகவ் ஜென்னியிடம் நடந்து கொண்ட முறையை ஒளிபரப்ப அந்த காட்சியை பார்த்த எல்லோருமே அதிர்ந்து போயிருந்தனர்.

அதே நேரம் அவன் செயலை கண்டு அந்தளவுக்காய் வெறுக்கவும் ஆரம்பித்தனர்.

ராகவ் என்ற பெயரை கேட்டாலே எல்லோரும் முகம் சுளித்து கொள்ள, அவன் கட்டிகாத்த பேர் புகழோடு சேர்த்து அவனின் வசீகரிக்கும் முகமும்  சீரழிந்து போனது. 

அவன் முகத்தின் ஒருபக்கம் அத்தனை கோரமாய் மாறியிருக்க யாரும் அவன் அருகில் வரவும் தயங்கினர். அப்படி வருபவர்களும் அவன் முகத்தை பார்க்கவும் விருப்பம் கொள்ளாமல் நிராகரித்தனர்.

நேற்றுவரை அவன் செல்லும் இடங்களில் அவனை திரும்பி பார்க்காத ஆட்களே கிடையாது. அவன் எங்கு சென்று நின்றாலும் அவனை ஓர் கூட்டம் சூழ்ந்து கொள்ளும். 

ஆனால் எல்லாமே ஒரு நொடியில் நிர்மூலமாகிவிட்டது.

புகழின் உச்சாணி கொம்பில் இருந்து 

வீழ்ந்தான். 

இல்லை… ஜென்னியின் புத்திசாலித்தனத்தால் வீழ்த்த பட்டான் 

வாழ்க்கையின் சாரம்சமும் அதுதான். 

  நிலையாமையை புரிந்து கொள்ளாமல் அகம்பாவத்தோடும்

ஒழுக்கமின்றியும் வாழும் ஒவ்வொருவனுக்கும் ராகவின் வாழ்க்கை ஒரு பாடம்.

அவனவன் விதைத்ததை அவனவன் அறுவடை செய்தே தீர வேண்டும். 

வலியும் வேதனையும் அவனவனுக்கு வரும் போதுதான் புரியும். 

“ஏ ஜென்னி… எங்கடி இருக்க? உன்னை கொன்னாதான்டி எனக்கு மனசு ஆறும்” என்று வெறிகொண்டு கத்தியபடியேதான் அவன் அந்த ஆர்பாட்டத்தை பண்ணி கொண்டிருந்தான்.

அவள் மீதான வெறியும் கோபமும் அவனை தன்னிலை மறக்க செய்தது.

ராகவும் அவன் விதைத்த வினைகளை அறுவடை செய்து கொண்டிருந்தான். 

அவனென்ன கொஞ்சநஞ்சமா விதைத்திருக்கிறான். 

மருத்துவமனையில் மயக்கம் தெளிந்ததிலிருந்து அந்த இடத்தையே துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

அவனுக்கு நேர்ந்ததை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. ஒருபுறம் வலியும் இன்னொரு புறம் அவமானமும் அவனை கொன்று தின்று கொண்டிருந்தது. 

அந்த தவிப்பிலும் கோபத்திலும்தான் அங்கே இருந்த எல்லா பொருள்களையும் உடைத்து நொறுக்கி கொண்டிருந்தான். அவற்றை எல்லாம் நொறுக்கிவிட்டால் அவனுக்கு நேர்ந்தது இல்லையென்று ஆகிவிடுமா  ?! 

ஆனால் முட்டாள்தனமாய் அவன் தன்னிலை மறந்து அவ்விதம் நடந்து கொள்ள, அவனின் அந்த செய்கையால் அங்கிருந்தவங்கள் அனைவரும் மிரட்சியடைந்தனர்.

மருத்துவர்களை கூட அவனை நெருங்க அச்சம் கொண்டனர். 

வாஸனால் தன் மகனை அப்படி பார்க்கவே முடியவில்லை. 

அவனின் நிலையயை எப்படி சரி செய்வது என்று ஆழ்ந்து அவர் யோசிக்க

அந்த சமயம் ராகவை கைது செய்ய போலீஸ் வந்திருந்தனர். 

ஜென்னியின் மீது அவன் அமிலத்தை வீச இருந்த காட்சியை இந்த உலகமே பார்த்து கொண்டிருந்ததே. 

வாஸனுக்கு மகனை எப்படி காப்பாற்றுவது என்றே புரியவில்லை.  அவரால் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. 

மகனை பொறுப்பாய் வளர்க்காமல் பணம் பொருள் பின்னோடு ஓடியதற்கான தண்டனையை அவர் அனுபவித்துதான் ஆக வேண்டும்.

ஆனாலும் இவர்கள் எல்லாம் திருந்தும் ஜென்மங்கள் அல்லவே. 

ராகவ் நிறுத்தாமல் “ஜென்னி” என்று அவள் மீது வெறியாய் சத்தமிட அவருக்கும் ஜென்னி மீது அந்தளவுக்கு துவேஷம் மூண்டிருந்தது.

அதோடு மனோவும் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் விவரிக்க, ஜென்னி டேவிடை சந்தோஷமாய் வாழ விடவே கூடாதென மனதிற்குள்  சபதம் ஏற்று கொண்டார்.

******

சையத்திற்கு கொஞ்ச நாட்களாய் நெருக்கடி அதிகமாகி கொண்டிருந்தது. பணம் செலவாகி கொண்டிருந்தது ஒழிய வரவு என்று எதுவும் இல்லை.

அதுவும் இல்லாமல் மதுவின் குடும்பத்தையும் அவன்தான் கவனித்து கொள்கிறான். அவனுக்கு தெரிந்தது கற்றது எல்லாம் சினிமா மட்டும்தான். வேறு வேலைகளை பற்றியும் வியாபாரங்கள் பற்றியும் 

இதுவரை அறிந்து கொள்ளாதது எத்தனை பெரிய தவறென்று இன்று அவன் வருந்திகொண்டிருந்தான். 

சினிமாவை பொறுத்துவரை வெற்றி வந்தால் அவர்கள் உச்சாணி கொம்பில் ஏற்றி வைக்கப்படுவார்கள். அதே போல் தோல்வி வந்தால் மொத்தமாக தூக்கியெறியப்படுவார்கள்.

அவன் தோல்வி அடையவில்லை எனினும் அவன் மேல் விழுந்த கரும்புள்ளி அவனின் சினிமா வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திருந்தது

மூன்று மாதங்களாக வாய்ப்புகளை  தேடி அவன் அலைய, யாருமே அவனுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகயில்லை.

ராகவின் பெயர் மோசமானதில் அவனின் பெயர் தாழ்த்தப்பட்டுவிட்டது. 

ஜென்னி ராகவை வீழ்த்தியதில் அவனுக்கு சந்தோஷம்தான் எனினும் எல்லோரையும் போல அவளும் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பாளோ என்ற எண்ணத்தில் அவளை எதற்காகவும் அணுகாமல் இருந்தான்.

அதுவும் அவளிடம் இருந்து எந்த உதவியும் பெற அவன் விரும்பவில்லை. அவளை அன்று அந்தளவுக்கு நிராகரித்த அனுப்பிய குற்றவுணர்வு  வேறு உள்ளூர குத்தி கொண்டிருந்தது. 

சையத் அப்போது தன் மனைவி மதுவிடம் பணத்தை எண்ணி கொடுத்து “தங்கச்சிக்கு பீஸ் கட்ட வைச்சுக்கோ” என்க,

“இப்போ இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா… அப்பாவுக்கு வேற இப்பதான் ஹாஸ்பெட்டில் பில் கட்டினோம் வேற” என்று மது வேதனையுற சொல்லவும்

“பரவாயில்லை மது… பார்த்துக்கலாம்” என்றான்.

அவன் எப்போது கேட்டாலும் பார்த்துக்கலாம் என்கிறானே தவிர, எப்படி எல்லாவற்றையும் சமாளிப்பான் என்று அவளுக்கு கலக்கமாய் இருந்தது.

அதுவும் தான் அவன் வாழ்வில் வந்ததில்திலிரூந்துதான் அவனுக்கு இத்தனை கஷ்டம் என்ற தாழ்வுமனப்பான்மை வேறு அவளை தவிப்புக்குள்ளாக்கியது.

அவள் முகபாவனையை புரிந்தவன் “நீ பாட்டுக்கு கண்ட மேனிக்கு யோசிக்காதே…எல்லாமே சரியாயிடும்” என்றபடி அவளை அணைத்துபிடிக்க,

அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டு கண்ணீர் வடித்தவள் “எல்லாமே என்னாலதான்… நான் வந்ததினாலதான்” என்க,

அவன் முகத்தை நிமிர்த்தி பிடித்து “இல்லை எல்லாம் என்னாலதான்” என்க,

அவள் புரியாமல் பார்க்கவும் “உனக்கு தெரியாது மது… எங்க அப்பா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாரு… நான்தான் அவர் கஷ்டத்தை புரிஞ்சிக்காம உதாசீனபடுத்திட்டேன்… அதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனைதான்… இதுல நீயும் என் கூட கஷ்டபடிறன்னுதான் எனக்கு வேதனையா இருக்கு” என்று சொல்லவும்,

“அப்படி எல்லாம் இல்லை… நீங்க சும்மா எல்லா தப்பையும் உங்க மேலயே போட்டுக்காதீங்க ?!” என்றவள் புருவத்தை சுருக்கி முகம் சுணங்கினாள்.

“உன் பேர்லயும் தப்பு இருக்கு” என்றவன் அவளை முறைப்பாய் பார்க்க,

“என்னங்க அது  ?” என்று அவள் கேள்விகுறியாய் பார்க்க

“என்னை நீ சரியாவே பார்த்துக்கிறதே இல்ல” என்றவன் குறும்பாய் புன்னகையிக்க,

அவள்  “போங்க நீங்க” என்று நாணத்தோடு தலைகவிழ்ந்து கொண்டாள்.

“நீ இப்படி வெட்கப்பட்டே என்னை கொல்றடி” என்றவன் அவளை இறுக்கி அணைத்து  கொண்டு தன் முத்த அணிவகுப்பை நடத்தி கொண்டிருந்தவன் அவள் இதழ்களில் வந்து தடைப்பட்டு நிற்கவும் விழித்து அவனை குழப்பமாய் ஏறிட்டவளிடம்  “மிச்சத்தை நான் நைட் கன்டின்யூ… பன்றேன்” என்றவன் சொல்ல,

“உங்களை” என்றவனை தள்ளிவிட்டு அறைகதவை அவள் திறக்க போக

“எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ரியாக்ட் பன்ற… இது கோபமா வெட்கமா  ?!” என்றவன் கேட்டபடி பின்தொடர அவள் வெளியே சென்றுவிட்டாள்.

“ஏ சொல்லிட்டு போடி” என்று அவன் கேட்பது காதில் விழுந்தாலும் கேட்காமல் சென்றவள் முகப்பு அறையில் ஜென்னியும் டேவிடும் அமர்ந்திருப்பதை பார்த்து ஆச்சர்யமாய்  நின்றுவிட்டாள்.

“எப்படி இருக்கீங்க மது? ” என்று ஜென்னி சோபாவில் அமர்ந்தபடி கேட்க,

“நல்லா இருக்கேன் மேடம்” என்று சொன்னவள் பின்னோடு வந்த தன் கணவனை பார்க்க அவன் ஜென்னியை அதிர்ச்சியோடு பார்த்தான்.

அவள் அருகில் அமர்ந்த டேவிடை சந்தேகமாய் பார்த்தவன் “நீங்க ஜே சேனல் எம்.டி மிஸ்டர். டேவிட்தானே  ?!” என்று கேட்க அவன் புன்னகையோடு “ஹ்ம்ம்” என்றான்.

சையத் ஜென்னியை பார்த்து பேச எண்ணும் போதே அவள் டேவிடின் புறம் திரும்பி ஏதோ சொல்ல அவன் தன் பேகிலிருந்து இன்விடேஷன் கார்டை எடுத்தான்.

இருவரும் எழுந்து நின்று கொண்டு அங்கே நின்றிருந்த சாஜிம்மாவிடம் அதனை கொடுத்து “எல்லோரும் கண்டிப்பா வந்திரனும்… அப்சானா ஆஷிக் வந்ததும் அவங்ககிட்ட கூட சொல்லிடுங்கமா” என்க, அவர் அவளை உச்சிமூகர்ந்தார். 

ஜென்னி உடனே சையத்தின் புறம் திரும்பி “நீங்களும் மதுவும் கண்டிப்பா வந்திரனும்… இல்லன்னா எனக்கு செம கோபம் வந்திரும் சொல்லிட்டேன்” என்றாள்.

சையத் குற்றவுணர்வோடு “ஜென்னி” என்றழைக்க,

அவள் புன்னகை மாறாமல் “என் மேரேஜ் முடிஞ்சதும் உங்க டீரீம் மூவியை நம்ம பண்றோம்… நீங்க அதுக்கான வேலையை பாருங்க” என்றாள். 

மது தன் கணவனை பார்த்து புன்னகையிக்க, வியப்பானவன் டேவிடை நோக்கினான்.

ஜென்னி புன்முறுவலோடு “அவரை ஏன் பார்க்கிறீங்க?  நான் சம்மதம் சொன்னா அவருக்கும் சம்மதம்தான்… என்ன டேவிட்  ?” என்றவள் டேவிடின் புறம் திரும்ப,

“எஸ்… நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க சையத்… மூவி ப்ரொடக்ஷன் நான் பாத்துக்கிறேன்” என்றதும் அவன் இன்பத்தில் திளைத்து “தேங்க் யூ ஸோ மச்” என்று டேவிடின் கைகளை குலுக்கியவன் ஜென்னியின் புறம் திரும்பி “தேங்க்ஸ் ஜென்னி” என்றான்.

இருவரும் இது குறித்து பேசிவிட்டு புறப்பட சையத் ஆனந்த அதிர்ச்சியில் திளைத்திருக்க, மதுவும் சாஜிம்மாவவும்   சந்தோஷத்தில் மூழ்கினர்.

ஜென்னியின் வார்த்தை சையத்திற்கு புத்துயிர் தந்தது போல் இருக்க அவன் மனமெல்லாம் அந்த நொடியே தன் கனவு படத்தை எப்படி இயக்க வேண்டுமென்ற திட்டமிடலை  செய்ய தொடங்கின. 

சையத் வீட்டிலிருந்து புறப்பட்ட டேவிடும் ஜென்னியும் காரில் சென்று கொண்டிருக்க, 

டேவிடின் கைப்பேசி ஓலிக்கவும் எடுத்து பேசியவன் ஜென்னியின் முகத்தை மிரட்சியோடு பார்க்க “என்னாச்சு டேவிட்  ?” என்று கேள்வி எழுப்பினாள்.

“அது… மகிழோட அண்ணன் சீர்யஸா இருக்கிறாராம்… உன்னை பார்க்கனும்னு” 

என்று இழுக்க அவள் யோசனையாய் அமர்ந்திருந்தாள்.

வேந்தன் நிலையை பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். ஆனால் தான் அவனால்தான்  அந்த மோசமான நாட்களை கடந்துவர நேரிட்டது என்று எண்ணியவளுக்கு ஏனோ அவன் மன்னிப்பை ஏற்க விருப்பமில்லை.

மகிழின் அண்ணனாயிருந்து அவன் செய்ததெல்லாம் எப்படி மறக்க முடியும். அவனை அன்று நகைகடை திறப்பு விழாவில் பார்த்த போதே அவனையும் சும்மா விட்டுவிட கூடாதென்று அவள் மனம் சொல்ல அதன் பிறகுதான் அவன் விட்டு சென்ற கைப்பேசியை வைத்து சில முக்கியமான ஆதரங்களை எடுத்து அவன் திருமணத்தை நிறுத்தி அவன் வேலையையும் போக வைத்தாள்.

அதன் பிறகு அவன் அடிப்பட்ட போது மருத்துவமனையில் சேர்த்தது மனித நேயத்தின் காரணியால். மற்றபடி மன்னிக்க அவள் மனம் இடம் கொடுக்க மறுத்தது. 

அப்போது டேவிட் அவளிடம் “போய் பார்த்துட்டு வந்திடலாமே” என்று கெஞ்சலாய் கேட்க

“உங்க இஷ்டம்… ” என்று விட்டேதியாய் பதிலுரைக்கவும் அவளுக்கு விருப்பமல்லை என்பது நன்கு புரிந்தது.

இருந்தாலும் வேந்தன் இறக்கும் தருவாயில் கோபத்தை காட்டுவது எந்த வகையிலும் சரியில்லை என்று எண்ணியவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

ஜென்னியும் டேவிடும் வந்தடைந்து வேந்தன் இருக்கும் அறைக்கு வர வள்ளியும் எழிலும் அழுது கொண்டிருக்க  மாயா அவர்கள் இருவரையும் தேற்றி கொண்டிருந்தாள். 

ஞானசேகரன் உடைந்து போய் அமர்ந்திருக்க மகிழ் சிலை போல் உணர்வுகளற்று நின்றிருந்தாலும் அவன் விழிகளில் நீர் சூழ்ந்திருந்தன. 

எல்லோரின் நிலைமையும் பார்த்தவள் மகிழ் அருகில் வந்து “என்னாச்சு” என்று கேட்க,

அவன் எங்கோ வெறித்தபடி தலையை மட்டும் அசைத்து வேந்தன் இறந்த செய்தியை உரைத்து

“இந்த லெட்டரை அண்ணன் உன்கிட்ட கொடுக்க சொன்னாரு” என்று அதனை நீட்ட அவள் அதனை வாங்க முற்படும் போதே அவள் கரம் நடுங்கியது.

அதனை பிரித்தவள் அதிலிருந்த வேந்தனின் கையெழுத்தின் கோலத்தை பார்த்தே மரண தருவாயில் கைகள் நடுங்க அவன் கண்ணீர்விட்டு எழுதியிருக்கிறான் என்பது புரிந்தது.

‘எனக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதியில்லன்னு நல்லா தெரியும். நான் செஞ்ச கீழ்தனமான வேலைக்கு என்னை நீ மன்னிக்க மாட்டன்னும் தெரியும். ஆனா உன்கிட்ட மன்னிப்பு கேட்காம செத்து போக எனக்கு மனசு வரல… உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடு’ 

என்றவன் கடிதத்தை படித்த மாத்திரத்தில் அவள் கண்ணீர் உடைப்பெடுத்தது.

டேவிட் அவள் அருகில் வந்து தோளினை தட்டி கொடுக்க அவன் மேல் சாய்ந்தழுதவள் “தேவையில்லாம என் கோபத்தை பிடிச்சிட்டு தப்பு பண்ணிட்டேனோ டேவிட் ?” என்று வினவ,

“அப்படி எல்லாம் இல்ல… உன் பாயின்ட் ஆஃப் வீயூல இருந்துபார்த்தா நீ செஞ்சது சரிதான்” என்று சொல்லி சமாதானம் செய்தான். 

வேந்தனுக்கு சாக்ஷியின் மீதிருந்த காழ்புணர்ச்சி அவள் வாழ்க்கையையே எனும் போது அவளால் எப்படி மன்னிக்க முடியும். 

ஆனால் வேந்தனின் கடிதம் அவள் மனதை உருகச் செய்து அவன் மீதான கோபத்தை மறக்கடித்துவிட்டது. 

அவனின் இறுதி சடங்கில் அவள் கலந்து கொண்டதே வேந்தனுக்கு அவள் வழங்கிய மன்னிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!