Sempunal 9

செம்புனல் – 9

எஸ்.ஐ. அவருடைய அறையிலிருந்து வெளியே வந்தார். அவருக்காக ஸ்டேஷனில் காத்திருந்தவர்கள் எழ உட்காருமாறு சைகைச் செய்தார். காவல் நிலையத்திற்கு வெளியே காரில் அமர்ந்திருந்தார் நரனின் தந்தை சக்கரவர்த்தி.

“தேடிப் பாத்தீங்களா?”

“பாத்துட்டோம் சார். யார் மேலயும் சந்தேகம் வரல. எனக்கென்னமோ அந்தக் காட்டுக்குள்ள இருக்க வாய்ப்பில்லைன்னுத் தோணுது”

“எப்படி சொல்லுறீங்க? பையன் காணாமப் போய் நாலு நாளாச்சு. தெனம் வீட்டுல ஒரே கொடச்சல். நிம்மதியே போச்சு. தறுதலையா வளத்தது அவங்க… கடைசில நம்மத் தல உருளுது”

“புரியுது சார்… ஆனா வெறும் ஒரு ஊகத்துல நம்ம அவங்கள எவ்வளோ விசாரிக்குறது? காட்டுக்குள்ளேயும் போய் பாத்தாச்சு. அதோட பையனத் தூக்குற அளவுக்கு எந்தக் காரணமும் இல்லையே”

“கம்ப்ளயின்ட் குடுத்து…”

“ஸ்டேஷனுக்குத் தான வந்தாங்க? நேரடியா உங்க பையன்கிட்டப் போகலையே. அந்த ஊருக்கும் உங்க பையனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்குறதாவே தெரியல சார். ரப்பர் தோட்டமும் இன்னும் போடல. அதுக்கான வேலை ஆரம்பிச்சிருந்தாலாவது கோவத்துலப் பண்ணுற வாய்ப்பிருக்குன்னு யோசிக்கலாம்.

அந்த ஊர்ப் பக்கமே உங்க பையன் போன மாதிரித் தெரில. அவனோட பிரெண்ட்ஸ், அவன்கூடத் தங்கியிருந்த மத்த எல்லாரையும் கேட்டுப் பாத்துட்டோம். ஒரு நாள் ரெண்டுப் பசங்க வந்து பேசிருக்கானுங்க. அவனுங்கள ஸ்டேஷன்ல பாத்ததாவும் சொல்லிட்டாங்க.

நான் அவனுங்களத் தூக்கிட்டு வந்து ரெண்டுத் தட்டுத் தட்டியும் பாத்துட்டேன் சார். இதுக்கு மேல நம்ம எதும் பண்ணப் போய்… அமைதியா இருக்க ஜனங்கள உசுப்பேத்திவிட்டுட்டா அப்பறம்…

கண்டிப்பா அவன் அந்தக் காட்டுக்குள்ள இல்ல சார். அது ஒண்ணும் சாதாரணக் காடில்ல. உள்ளப் பத்தடித் தள்ளிக் கொண்டு போய் எவனையாவது நிக்க வெச்சு ஒரு சுத்து சுத்திவிட்டா வந்த வழி மறந்துடும்”

“சரி நான் கெளம்புறேன்”

“நான் என்னால முடிஞ்ச வரைக்கும் விசாரிச்சு சொல்லிட்டேன் சார். எதுவும் ப…”

“பரவாயில்ல. அவன் கார் கெடைச்ச ஊர்லயும் கேட்டுட்டுதான் இருக்கேன். சீக்கிரம் தகவல் கெடைக்கும். டிரைவர்… போலாம்”

சக்ரவர்த்தி சீட்டில் பின்னால் சாய்ந்துக் கண்களை மூடினார். மகனின் எந்தச் செயலும் பிடித்ததில்லை. பெற்ற பாசமா? அப்படி ஒன்றும் தனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம். இந்த நான்கு நாட்களை அவனுக்குக் கிடைத்த தண்டனையாக நினைத்தார்.

எங்கோ தொலைந்துப் போன மகன் புதிதாய்ப் பிறந்து வந்துவிடுவானென்ற நம்பிக்கை. எதனடிப்படையில் உருவானதென்று பிடிப்படவில்லை. எதனடிப்படையில் உருவாகியிருக்கக் கூடுமென்ற யூகம் கூட நம்பிக்கையின் வேரை ஒருவேளை ஆழம் பார்க்கக் கூடும்.

மனைவியின் கண்ணீர் மட்டும் எல்லா வேலைகளுக்கு நடுவிலும் உறுத்திக்கொண்டிருந்தது. தினம் மகனைப் பற்றி விசாரிப்பதும் அந்த உறுத்தல் தந்தக் குற்றவுணர்வில் தான்.

‘சீக்கிரம் தகவல் கிடைக்கும்’ இது மூன்று நாட்களுக்கு முன்பு நம்பிக்கையின் வெளிப்பாடாய் இருந்தது. நாளுக்கு நாள் நம்பிக்கைக்கும் நடப்புக்கும் உள்ள இடைவேளை பெருகிக்கொண்டே போவதைக் கைக் கட்டி வேடிக்கைப் பார்ப்பது போன்ற பிரம்மை.

வீட்டினுள் செல்லும்போது மனைவியின் கண்ணில் படாமல் அலுவலக அறைக்குள் சென்றுவிட நினைத்தார். இரண்டு கை விரல்களையும் கோர்த்து இறுக்கி மூடி யாசகம் கேட்கும் பார்வையுடன் வாசலிலேயே காத்திருந்தார் மங்கை.

“தெருவுல வந்து நிக்க வேண்டியதுதான? ஏன் வாசலோட விட்ட?”

“நீங்க இந்நேரம் வருவீங்கன்னு… எதாவது தெரிஞ்சுதா?”

“ஒம்புள்ள ஒரு உருப்படாதவன்னுத் தெரிஞ்சுது. எங்கப் போறேன் வரேன்னு வீட்டுல சொல்லுறப் பழக்கமில்ல சரி… கூடத் தங்கியிருந்தவங்க, பிரெண்ட்ஸ் கிட்டக் கூடவா சொல்ல மாட்டான்? அன்னைக்கு சாயந்தரமே ஹோட்டல்லேந்துக் கெளம்பிப் போனானாம். இதுவும் ஹோட்டல் ரிசப்ஷன்ல சொன்னதாலத் தெரிஞ்சுது. எங்கப் போனான் என்ன ஆனான்னு ஒருத்தருக்கும் தெரியல”

“இதையே மூணு நாளா சொல்லுறீங்களே?”

“இதுக்கு மேல வேற எவனும் எதுவும் சொல்ல மாட்டேங்குறானே… அப்படி என்ன கழட்டுற வேலப் பாக்கப் போனானோ… வருவான்…”

“கண்டிப்பா வருவானாங்க?”

“வரலன்னா என்ன பண்ண முடியும்…”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க… என்ன இருந்தாலும் நம்மப் புள்ள”

“எவளையாவது இழுத்துட்டு ஓடிட்டானா?”

“என்னங்க இப்படிக் கேக்குறீங்க?”

“இவன் ஒருத்திய இழுத்துட்டு ஓடுனாதான் அதிசயம். நாளுக்கு ஒண்ணுன்னு… ச்சை… ஊருக்குள்ள தலக் காட்ட முடியாத மாதிரி செஞ்சு வெச்சிருக்கான். துக்கம் விசாரிக்குற மாதிரிப் பையன் சரியில்லையாமேன்னு கேட்டுட்டுப் போவாங்க. விடுங்க சார் நம்மத் தலையெழுத்துன்னு ஆறுதல் சொல்லுற மாதிரி சிரிச்சுட்டுப் போவாங்க.

உண்மைய சொல்லணும்னா எனக்கு இப்பக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. தேடிப் பாக்குற வரைக்கும் தேடியாச்சு. இனி அவனா வந்தா உண்டு. போய் வேலையப் பாரு. சும்மா என்ன தொந்தரவுப் பண்ணாத”

வந்துவிடுவான். மனம் மீண்டும் மீண்டும் இதையே சொன்னது. இதை மட்டும் சொல்லவில்லை. வந்துவிடுவானா என்ற கேள்வியையும் அவ்வபோது கேட்டது.

மகன் கேட்டதையெல்லாம் செய்த, சொன்னதையெல்லாம் கேட்ட நிகழ்வுகள் நினைவு வந்தன. எல்லாம் தன் தவறோ என்று யோசித்தார். சரி, தவறு என்றெல்லாம் ஆராய இது நேரமல்ல. மகன் கிடைக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு வீட்டிற்குள் சென்றார் மங்கை.

தெய்வா அறை வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே அமர்ந்திருக்க இது அவள் வீடில்லை. யாரும் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம்.

வீடு நிசப்தமாயிருந்தது. அவள் இங்கும் அங்கும் நடக்க சப்தம் கேட்டுக் கண்ணைத் தேய்த்தபடி அறைக் கதவைத் திறந்தாள் காவேரி. தூக்கம் அவள் கண்களை விட்டுப் பிரிந்திருக்கவில்லை.

“எழுப்பிட்டனா?”

“ம்ம்… என்ன வேணும்?”

“பாத்ரூம்…”

“வீட்டுப் பின்னாடி இருக்கு. இன்னும் நீ புடவைய மாத்தலையா? தம்பி எங்க?”

“மாத்தணும். எங்கயோ வெளிலப் போனாங்க”

“சரி நீ மூஞ்சிய கழுவிட்டு வா. பயங்கரப் பசி. காலைல சரியா சாப்பிட கூட இல்ல. சமைக்கணும். என்ன செய்யணும்னு சொல்லுறேன். இன்னைக்கு நீயே செய்”

“நானா?”

“சமைக்கத் தெரியாதா?”

“தெரியும். நீங்க தூங்குங்க. செஞ்சுட்டு எழுப்புறேன்”

“அப்பறம் எது எங்க இருக்குன்னு சொல்லணும்ல… சீக்கிரம் வா சொல்லிட்டுப் படுக்குறேன். தல வலி வேற…”

தெய்வா அறைக்குள் ஓடினாள். மாற்றுத் துணி இருக்கிறதா? ஒரு நொடி இதயம் நின்று துடித்தது. காலையில் குளித்து அப்படியே கிளம்பி வந்தாயிற்று.

“இந்தா… உன் துணியெல்லாம் இதுல இருக்காம். உங்கம்மாக் காலையிலக் குடுத்தாங்க”

காவேரி வைத்துச் சென்ற பையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஏதோ பொக்கிஷம் போல், அந்த நிமிடம் அது இல்லையேல் உயிர் பிரிந்துவிடும் போல இறுக்கி அணைத்தாள்.

வேகமாகப் பையைத் திறந்தாள். மேலே இருந்தவை எல்லாம் சுடிதார். அவற்றை அள்ளிக் கீழே போட்டாள். அடுத்துப் பாவாடை தாவணி. அவற்றையும் அள்ளி வீசினாள். கையில் கிடைத்த புடவையை எடுத்து வீட்டின் பின் பக்கம் விரைந்தாள்.

‘பொண்ண எங்கக் கொண்டு போய் விடுறோம், எதுக்குக் கொண்டு போய் விடுறோம்னுக் கூட மனசுலப் பதியல. குடுத்தனுப்பிருக்க உடுப்பப் பாரு…’ மனம் கொதித்தது. இதை அப்போதே வார்த்தை மாறாமல் தாயிடம் நேரில் சொல்லிவிட வேண்டுமென்ற வேகம்.

வீட்டின் பின்னால் சிறிய தோட்டமிருந்தது. பூக்கள் ஒரு பக்கமும் காய்கள் ஒரு பக்கமும் நட்டு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைத் தாண்டித் தெரிந்தத் தகரக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

தெய்வா அடுக்களைக்குள் சென்றபோது காவேரி காயரிந்துக் கொண்டிருந்தாள். “நேரமாயிடுச்சா?” என்று கேட்டபடி அவளருகில் தரையில் அமர்ந்தாள்.

“இல்ல… நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. சேந்தே சமைப்போம். அரிசிக் கழுவி ஒலையிலப் போடு”

“பரவாயில்ல நான் செஞ்சிடுவேன். நீங்க குடுங்க”

“சொல்லுறேன்ல… எந்திரி தெய்வா”

“நான்… என்ன இந்த வீட்டுலக் கட்டிக் குடுத்தது உங்களுக்குப் புடிக்கலையாக்கா?”

“அப்படி… நீ எந்திரிச்சு அரிசியைக் கழுவு”

தெய்வா எழுந்து அரிசியை எடுத்துக் கழுவி முடிக்க அரை மணி நேரமானது. காவேரி தலையை நிமிர்த்தவில்லை. தெய்வா எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவள் மனதை அளந்து காட்டியது.

அவள் இந்த வீட்டிற்கு வந்ததைத் தன்னால் ஏன் ஏற்க முடியவில்லை என்று யோசித்தாள். சரியான காரணம் எதுவும் பிடிப்படவில்லை. ‘அவளை சமாதானம் செய்ய வேண்டுமா? ஆறுதல் சொல்ல வேண்டுமா? தேற்ற வேண்டுமா? இவையெல்லாம் தான் செய்துதான் ஆக வேண்டுமா?’ என்று நிறைய சந்தேகங்கள்.

பரமன் மத்தியானம் வீட்டிற்கு வரவில்லை. அவன் வந்தபோது இரவு மணி ஒன்பதிற்கும் மேலாகியிருந்தது. ரங்கன் வெளியில் சென்றிருந்தான். தெய்வா வீட்டின் நடுவிலிருந்த முற்றத்துத் தூணில் சாய்ந்தமர்ந்துக் கண் மூடியிருந்தாள்.

“என்ன தம்பி இவ்வளவு நேரம்?”

குரல் கேட்டுக் கண் திறந்த தெய்வா பரமனை கண்டதும் எழுந்து நின்றாள்.

“டவுன் வரைக்கும் போயிருந்தேன் அண்ணி. சாப்பிட்டேன்”

அறைக்குள் சென்றவன் துண்டுடன் வீட்டின் பின்னால் சென்றான். நீண்ட நேரமாக தெய்வாவுடன் பேசாதது உறுத்த “என்கூட வாயேன்” என்றாள் காவேரி. தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று மர அலமாரியைத் திறந்து அதிலிருந்து ஒரு புடவையை எடுத்து நீட்டினாள்.

“இதக் கட்டிக்கோ. என் ஜாக்கெட் சரியாதான் இருக்கும். புடவை உள்ளயே இருக்கும். இப்ப வந்திடுறேன்”

கதவை மூடிவிட்டு காவேரி சென்றுவிடப் புடவையைப் பார்த்தபடி நின்றிருந்தாள் தெய்வா. மத்தியானத்திலிருந்து எதுவும் பேசாதவள் தானே அழைத்து எடுத்துக் கொடுத்த புடவை. கட்டிக் கொண்டாள் ஒருவேளை அவள் தன்னுடன் நன்றாகப் பேசக்கூடுமென்ற நப்பாசை. கட்டிக் கொண்டாள்.

கதவுத் தட்டப்பட “வாங்கக்கா” என்றாள். எடுத்து வந்திருந்த பூவை தெய்வாவின் தலையில் சூடினாள். “வா” என்று கைப் பிடித்து அவள் அறையை நோக்கி அழைத்துச் சென்றாள்.

பேசாதவள் பேசியதற்கு சந்தோஷப்பட்டவள் எதற்காக இந்நேரத்தில் புடவை மாற்ற வேண்டுமேன்று கேட்டிருக்க வேண்டும். யோசித்திருக்கவாவது வேண்டும். அறை வாசலுக்கு வந்த பிறகு யோசித்தாள்.

“உள்ளப் போ” என்ற காவேரி தெய்வாவை அறைக்குள் விட்டுக் கதவை வெளியிலிருந்து மூடினாள். கட்டிலில் அமர்ந்திருந்த பரமன் எழுந்து நின்றான். தெய்வா அவனையும் மூடியக் கதவையும் மாறி மாறிப் பார்த்தாள். கதவை மூடி இரண்டடி நடந்த காவேரி சட்டென்று நின்று தலையிலடித்துக் கொண்டாள். கதவருகில் சென்றவள் அவளது அறைக்கே திரும்பிச் சென்றாள்.

“அக்கா… நான் இங்க… இங்க ஏன்…”

“இரு இரு… பொறுமையா… ஏன் இப்படி நடுங்குற? உக்காரு முதல்ல. நான் போய்த் தண்ணி எடுத்துட்டு வரேன்”

கட்டிலின் நுனியில் அமர்ந்தவள் சட்டத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். பரமன் எடுத்து வந்து தந்த சொம்பு நீரில் இரண்டு மடக்குக் குடித்தாள். சொம்பை அவனிடமே நீட்டினாள். அவன் அதை கதவருகில் வைத்துத் திரும்புகையில் எழுந்து நின்றிருந்தாள்.

“உக்காரு”

“இல்ல நான் வெளில…”

“இந்த ரூம் உள்ள என்ன நடக்கணுங்குறத என்னால முடிவுப் பண்ண முடியும். வெளிலப் போனா உன்ன யார், என்ன கேள்விக் கேப்பாங்கங்குறத என்னாலத் தீர்மானிக்க முடியாது. உக்காரு”

தெய்வா முன்பைப் போலவே கட்டிலின் நுனியில் அமர்ந்தாள். பரமன் அவளைத் தாண்டிச் சென்று கட்டிலின் மறு முனையில் அமர்ந்தான்.

“நோகடிக்காம இருக்க முயற்சிப் பண்ணுறேன்னு காலையிலயே சொன்னேன். அத நம்புற நெலமையில நீ இல்லன்னுத் தெரியுது. என்னால வெளிலப் போய் படுக்க முடியாது. உன்ன வெளிலப் போகவும் விடமாட்டேன். எனக்கு மெத்தையில்லாமத் தூக்கம் வராது. நீ கீழப் படுத்துக்கோ.

நேத்து வரைக்கும் நான் மட்டும் படுத்திருந்த ரூம். வேறப் போர்வையில்ல. நாளைக்கு அண்ணிக்கிட்டக் கேளு. இப்போதைக்கு மெத்த மேல விரிச்சிருக்குறத எடுத்துக்கோ. இருக்க ரெண்டுத் தலைகாணில ஒண்ண எடுத்துக்கோ.

தூங்கு. இன்னையிலேந்து நீ இந்த வீட்டுல, இந்த ரூமுள்ள, என்கூடத் தூங்குறத மாத்த முடியாதுன்னு நெனச்சுட்டே தூங்கு. இன்னைக்கில்லன்னாலும் ரெண்டு மூணு நாள்லத் தானாப் பழகிடும். பிடிக்குதுப் பிடிக்கலன்னெல்லாம் யோசிக்காத. பழகிக்கணும்னு நென. இப்போதைக்கு அது போதும்.

இன்னைக்கு நெறைய அலஞ்சேன். காலையில சீக்கிரம் எழுந்தது வேற. கண்ணக் கட்டுது. சீக்கிரம் படுக்கைய விரிக்குறியா? நான் தூங்கணும்”

தெய்வா எழ அவனும் எழுந்தான். மெத்தை மீது விரித்திருந்த விரிப்பை உருவினாள். ஒரு தலையணையை எடுத்துக் கொண்டாள். பரமன் விளக்கை அணைத்து பேனை போட்டு அதைப் பார்த்தபடியே மெத்தை மீது படுத்தான். விரிப்பைக் கழுத்துவரை போர்த்தியபடி வெறும் தரையில் தலையணை மீது தலை வைத்துச் சுருண்டுப் படுத்தாள். உடனே உறக்கம் வரவில்லை. வராமலேயும் இல்லை.

வெளியே கேட்ட சத்தத்தில் கண்களை மெல்லத் திறந்தாள். விடியத் துவங்கியிருந்தது. பரமன் கட்டிலில் அமர்ந்து முகத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தான். தெய்வா வேகமாக எழுந்து விரிப்பை மடித்துத் தரையில் வைத்துக் கதவருகே சென்றாள்.

“தலைல இருக்கப் பூவ எடுத்து இங்கயே மூலைலப் போடு. கொண்டைப் போட்டுட்டு வெளில வா”

பரமன் வெளியே சென்றுவிட அவன் சொன்னதையெல்லாம் செய்தாள் தெய்வா.

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!