NAI6(1)

சுயநலம்
எங்கே பார்த்தாலும் நடிகன் ராகவிற்கான புகழாரம் ஒலித்துக் கொண்டிருந்தது. 
வீ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 
வாஸனின் ஒரே மகன்தான் ராகவ்.
ஏதோ பணம்படைத்தவன் என்பதால் மட்டும் ராகவ் சினிமாத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறவில்லை. அப்படி மாறிவிடவும் முடியாது. அரசியலில் பணம்படைத்தவன் தலைமை ஏற்கலாம். ஆனால் சினிமாத்துறையில் மக்கள் அவன் திறமையை ஏற்றால் மட்டுமே சாதிக்க முடியும். அப்படி ஏற்றுக் கொண்டால் அவனை கடவுளுக்கு நிகிராகவும் பார்ப்பர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இப்போது ராகவ் அந்த நிலைக்கு உயர்ந்திருந்தான். பணத்தை தாண்டி அவன் திறமையும் அவன் தேடிப்பிடித்த திறமையாளர்களும் அவனுக்கு தொடர் வெற்றியை தேடித் தர, நந்தக்குமாரோடு இணைந்த இந்த படமும் வெற்றிப் பெற்றுவிட்டது. இதனை 
ஹேட்டிரிக் வெற்றி என்றே கொண்டாட வேண்டும். 
கிட்டதட்ட முதல் நாளே படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அந்த படத்தின் போக்கும் ராகவின் நடிப்பும் சாமன்யர்கள் மனதையும் கவரும்படியாக இருந்தது என்பதாலயே அவன் ரசிகர்கள் வெற்றி களிப்பில் 
ஆரவாரித்து கொண்டிருந்தனர். 
அத்தகைய பிரபலமான நட்சத்திரமான ராகவ் இன்று சையத்தின் திறமையை அறிந்து அவனை கைத்தூக்கிவிட பெரும் வாய்ப்பை உருவாக்கி தரப் போகிறான்.
அந்த வாய்ப்பு ராகவின் வாழ்க்கையையும் சேர்த்தே மாற்றப் போகிறது. 
இங்கே இருவருக்கிடையில் உண்டான பிணைப்பு, விதி முன்னமே தீர்மானித்தது  என்பதை இருவரும் அறிந்திராத ஒன்று.
*********
சாரதா இல்லத்தை விட்டு வந்தப்பின்னும் கூட மகிழின் செவிகளில் மாயாவின் வார்த்தைகள் ஒலித்து அவன் மனதை வெகுவாய் காயப்படுத்தி கொண்டிருந்தது. 
மாயா அவன் காதலை எப்படி ‘லஸ்ட்’ என்று சொல்லுவாள் ? அப்படியா தான் சாக்ஷியோட பழகினோம்? 
அந்த வார்த்தை பாரமாய் அவன் மனதை கனக்க செய்ய, தாங்க முடியாத வலியோடு ரேடியோ ஸ்கை அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
நேரம் கடந்துவிட எல்லோருமே தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வெளியேறிக்  கொண்டிருந்த சமயம் அது.
மகிழ் உள்நுழைவதை பார்த்தவர்கள் எல்லோருமே அவனிடம் துக்கம் விசாரிக்க தொடங்கினர்.
அவர்கள் கேள்விக்கெல்லாம்  பதில் சொல்லுமளவுக்கு அப்போது மகிழுக்கு பொறுமை இல்லை. 
நேராய் ஷாலினி இருந்த அறைக்குள் நுழைந்தான். தன் வேலையை முடித்து புறப்பட தயாரானவள் அவன் நிற்பதை பார்த்து வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தாள்.
அவன் பார்வை அவள் மீது கூர்மையாய் பாய்ந்தது. 
தன் பிறந்த நாளன்று என்ன நிகழ்ந்தது என்று யோசித்தவனுக்கு சாக்ஷியை தன் அலுவலகத்தில் அழைத்துவந்த நினைவு வந்தது.
அங்கே கேக் வெட்டி கொண்டாட்டாங்கள் நடைப்பெற்ற சமயத்தில் சில மணித்துளிகள் சாக்ஷி ஷாலினியோடு தனிமையாக பேசினாள்
ஷாலினியிடம் பேசியப் பின் சாக்ஷியின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. அதோடு அல்லாது அங்கிருந்து புறப்பட்ட பின்னர் சாக்ஷி மகிழிடம் “ஷாலினி உங்களை காதலிச்சாங்களா மகிழ்? ” என்று கேட்க அவன் கோபமாய் அவளை கடிந்து கொண்டான்.
“ஷாலு என் பெஸ்ட் ப்ர்ண்ட்… யார் இப்படி சொன்னாலும் பரவாயில்லை… ஆனா நீ எங்க நட்பை கலங்கப்படுத்தி பேசினா என்னால தாங்க முடியாது சாக்ஷி” என்று அழுத்தமாய் கண்டிக்க, “சாரி மகிழ், தப்புதான்… நான் அப்படி கேட்டு இருக்க கூடாது” என்றவள் மேலே எதுவும் பேசாமல் அதோடு அந்த பேச்சை நிறுத்திக் கொண்டாள். 
ஆனால் அவள் ஏன் அப்படி கேட்டாள் என்று தான் ஆராயமல் விட்டது இப்போது நெருடலாய் தோன்ற, அது குறித்து கேட்கவே ஷாலினியை அலுவலகத்தில் சந்திக்க வந்திருந்தான் மகிழ். 
அந்த எண்ணத்தோடே ஷாலினியை வழிமறித்து அவன் நிற்க அவனின் தோற்றத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
அந்த ஒரு வாரத்தில் வளர்ந்த தாடி… கவனிப்பாரற்று போன முகம் என அவள் இல்லாத அவன்… அவனாக இல்லை. .
சாக்ஷியின் இழப்பு அவனை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை அவன் முகமே தெளிவாக எடுத்துரைத்தது.
அவள் அவன் கன்னங்கள் தடவி கண்ணீர் உகுத்தபடி “என்ன மகிழ் ? இப்படி இருக்க? ” என்று கேட்க, அவள் கரத்தை அவசரமாய் தட்டிவிட்டு விலகி நின்றான்.
இத்தனை நாள் அவள் தொடுகையில் நட்பு மட்டுமே இருப்பதாக உணர்ந்தவனுக்கு இன்று அப்படி இல்லை என்று புரிந்தது.
“மகிழ்” என்று சொல்லி நெருங்கப் போனவளை “ஸ்டே தேர்” என்று சொல்லி  பின்னோடு வந்தான்.
“என் மேல என்ன கோபம் மகிழ்?!” என்று கேட்டவளின் முகத்தில் ஏக்கமும் காதலும் அப்பட்டமாய் தெரிந்தது.
அவளின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் 
“நான் கேட்கிறதுக்கு நீ உண்மையை சொல்லனும்… சொல்லுவியா ஷாலு ?!” என்று பார்வையை சுருக்கி கேட்டான்.
“கேளு மகிழ்”
“லாஸ்ட் வீக் சாக்ஷியை நான் நம்ம ஆபிஸுக்கு கூட்டிட்டு வந்தேன்… ஞாபகம் இருக்கா? “
“ஞாபகம் இருக்கே… அன்னைக்கு கூட உன் பர்த்டே… “
“எஸ்…. அன்னைக்கு நீ சாக்ஷிக்கிட்ட என்ன சொன்ன  ?” என்று கேட்டதும் அவள் முகத்தில் லேசான தடுமாற்றம் தோன்றி மறைந்ததை மகிழின் விழிகள் கவனித்தன.
“பெரிசா ஒண்ணும் பேசலயே” என்று அவள் உரைக்க, மகிழின் முகம் உக்கிரமாய் மாறியது.
“பொய் சொல்லாதே” என்றவனின் பார்வை மிரட்டலாய் மாறியது.
“நான் ஏன் பொய் சொல்லப் போறேன் மகிழ்” என்று இயல்பாகவே அவள் பதிலுரைக்க, மகிழின் கோபம் மாற்றமடையவில்லை. 
சிறிது நேர யோசனைக்கு பின் நிமிர்ந்தவன் “நீ என்னை காதலிக்கிறியா?” என்று கேட்க அந்த கேள்வி அவளை தடுமாற்றமடையச் செய்ய, அவளால் அதற்கு மேல்
இயல்பாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை. 
நட்பு முலாம் பூசி வைத்திருந்த அவள் காதலின் சாயம் வெளுத்துப் போனது.
அலைப்பாய்ந்த அவள் விழிகளை உற்றுக் கவனித்தவன், சாக்ஷி அன்று கேட்டது உண்மைதான் என்று இப்போது தெளிந்தான்.
மனதில் குற்றவுணர்வோடு அவன் நின்றிருக்க ஷாலினி அவனை நெருங்கினாள்.
“நான் உன்னை ரொம்ப  காதலிக்கிறேன் மகிழ்… உன் கிட்ட சொன்னா நீ  எப்படி எடுத்துப்பியோன்னு பயம்… நம்ம நட்பு என்னாகுமோன்னு பயம்… அந்த பயத்தினாலதான்” என்று பேச முடியாமல் அவள் வார்த்தைகள் திக்கி தடுமாற மகிழ் அவளை ஏற இறங்க குற்றவாளியை போல் பார்த்தான் .
“இதையெல்லாம் என்கிட்ட சொல்ல பயம்… ஆனா சாக்ஷிகிட்ட உன் காதலை பத்தி சொல்லி இருக்க… இல்ல” 
அவன் விழிகளில் கோபம் தாண்டவமாட ஷாலினி நடுக்கமுற்றாள்.
அவள் அமைதியாய் நிற்க “பதில் சொல்லு ஷாலு” என்று அழுத்தம் கொடுத்தான்.
பதட்டமடைந்தவள் “இல்ல மகிழ்… சாக்ஷிகிட்ட நான் உன்னை லவ் பன்றதை பத்தி சொல்லல” என்றதும் மகிழ் சந்தேகமாய் பார்த்தான். 
இவளாக சொல்லாமலா  சாக்ஷிக்கு தெரிந்திருக்கும் என்று.
அவன் எண்ணத்தை புரிந்தவளாய் “சாக்ஷிகிட்ட நான் சொன்ன விஷயம் வேற” என்றாள்.
“அதான் என்ன விஷயம்?” என்று முறைப்பாக கேட்டான்.
“அது” என்று தயங்கியவளை பார்வையாலயே எரித்துவிடுவது போல் அவன் பார்க்கவும் ஷாலினி பயத்தோடு பேசத் தொடங்கினாள்.
“நான் தப்பா ஒண்ணும் சொல்லல… உண்மையைதான் சொன்னான்”
“என்ன உண்மை?” என்று கேட்க
“அது… உனக்கு சாக்ஷி மேல இருந்தது காதல் இல்ல… பரிதாபம், இல்லன்னா அவ அழகு மேல உனக்கு ஈர்ப்பு… அவ்வளவுதான்” என்றதும் அவன் முகமெல்லாம் சிவந்தது.
“போதும் ஷாலினி… நிறுத்து” என்று அலுவலகம் என்றும் பாராமல் கத்திவிட்டான்.
அவள் அதிர்ந்து நிற்க வெறுப்பான பார்வையோடு “நீயும் ஒரு பொண்ணுதானே… இந்த வார்த்தையெல்லாம் சாக்ஷியை எந்தளவுக்கு காயப்படுத்தும்னு உனக்கு தெரியாது” என்று கேட்க அவள் கண்ணீர் உடைப்பெடுத்தன.
“இல்ல மகிழ்… அது” என்று விளக்கம் சொல்ல யத்தனிக்க
“உன் விளக்கம் எனக்கு வேண்டாம்… நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்கோ… நான் சாக்ஷி மேல வைச்சிருந்தது காதல்தான்.. அதுக்கு பேர் பரிதாபமோ ஈர்ப்போ இல்ல… அப்படி எனக்கு ஈர்ப்பு ஏற்படனும்னா அது எனக்கு முதல உன் மேலதான் ஏற்பட்டிருக்கனும்… ஏன்னா இந்த ஆபிஸ்லயே நீதான் அழகு… ” என்று சொல்லியவன் முகத்தில் ஒரு வித வெறுமை.
அவன் சொன்ன வார்த்தை ஷாலினியின் மனதை ரொம்பவும் காயப்படுத்த,
அவன் விரக்தியோடு அந்த அறையை விட்டு வெளியேற “மகிழ்” என்று அவன் கரத்தை பற்றினாள் ஷாலினி.
அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் “ப்ளீஸ்… ஷாலினி… என் கையை விடு… உன் கூட இனிமே நட்பாவும் என்னால இருக்க முடியாது… அப்படியே இருந்தாலும் இந்த ஜென்மத்தில அந்த உறவு காதலாவும் மாற முடியாது” என்றான். 
ஷாலினி உடைந்து போய் நின்றாள். தன் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவு ஒரு நல்ல நட்பும் அவளுக்கு இல்லாமல் போனது. 
ஷாலினி அன்று சாக்ஷியின் மனம் காயப்படும்படி பேசியிருக்கிறாள். ஆனால் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே நடந்துக் கொண்டாள். 
அப்படி இருக்க சாக்ஷி மாயாவிடம் அந்தளவுக்கு உடைந்து போய் பேச வேண்டிய அவசியமில்லையே என்ற எண்ணம் தோன்றியது மகிழுக்கு. அப்போது அதை தாண்டி வேறெதோ அவளை காயப்படுத்துமளவுக்கு நிகழ்ந்திருக்குமோ ?! என்ற தன்னைத்தானே கேட்டுக் கொண்டபடி அந்த நாளை மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டான். 
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று சாக்ஷியை மகிழ் தன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர அங்கே யாருமே இல்லை. வீடு பூட்டியே இருந்தது.
சாக்ஷிக்கு அவன் வீடு புதிய இடம் அல்ல. அடிக்கடி மாயாவோடு மகிழின் தோழி என்ற பெயரில் சாக்ஷி அங்கே வந்திருக்கிறாள். அதே சமயம் மகிழின் குடும்பத்தினர் சாக்ஷியின் இசை நிகிழ்ச்சிக்கு வந்து அவளை பாராட்டியிருக்க, அதன் பிறகே தன் காதலை பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் மகிழ் தெரியப்படுத்தினான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் சம்மதம் கிடைக்கவில்லை. அதுவும் அவள் குறையை சுட்டிக் காட்டி அவர்கள் வேண்டாம் என்று சொன்னதால் எல்லோர் மீதும் அவனுக்கு வருத்தம். 
இந்த விஷயம் சாக்ஷிக்கு தெரிந்தால் அவள் வேதனையுறுவாளே என்று அவளிடம் சொல்லாமல் மறைத்திருந்தான். ஆதலாலயே வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து அழைத்து வந்திருந்தான்.
அதுமட்டுமே காரணமே இல்லை.
சாக்ஷியிடம் தனிமையில் பேச வேண்டுமென்பது மகிழின் ரொம்ப நாள் விருப்பம். அவள் காதலுக்கு சம்மதம் சொன்ன நாளில் இருந்து இன்றுவரை தனியாக அவளிடம் பேசும் சந்தர்ப்பம்  வாய்த்ததே இல்லை. எப்போதும் அவளோடு இணை பிரியாமல் மாயா இருப்பாளே !
இன்று மாயாவே அதிசயமாய் அவளை தனியாய் அவனுடன் அனுப்பியிருக்க, அரிதாய் கிடைக்கப்பெற்ற சந்தர்பத்தை  அவன் வீணடிக்க விரும்பவில்லை.
வெளியே எங்கே அழைத்துச் சென்றாலும் அத்தகைய தனிமை கிடைக்காது. அதனாலயே அவளை தன் வீட்டிற்கு அழைத்துவந்தான்.
மகிழ் வீட்டுக்கதவின் அருகில் இருந்த பூந்தொட்டி பின்னிருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்துவிட்டு “உள்ளே வா சாக்ஷி”   என்றழைக்க,
சாக்ஷி குழப்பமாய் “வீட்டில யாரும் இல்லையா மகிழ் ?” என்று கேட்டு தயங்கி நின்றாள்.
“ஏன் ? யாரும் இல்லன்னு மேடம் உள்ளே வர மாட்டீங்களோ? !”
“அப்படி இல்ல” என்று தயங்கியவளின் கரத்தை பற்றி உள்ளே அழைத்து வந்தான்.
சாக்ஷி யோசனைக்குறியோடு “என்ன மகிழ் ? சிகரெட் ஸ்மெல் வருது… யாராச்சும் உங்க வீட்டில ஸ்மோக் பண்ணுவாங்களா ?” என்று சந்தேகமாய் கேட்கவும்
“எங்க வீட்டிலயா… ம்ஹூம்… யாருக்கும் அந்த பழக்கம் இல்லையே… அதுவும் இல்லாம அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது” என்றவன்  முகர்ந்து பார்த்தான்.
“அப்படி ஒண்ணும் ஸ்மெல் வரலியே” 
“லைட்டா வருது… மே பீ வெளியே இருந்துக் கூட வந்திருக்கலாம்”
“இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப தேவையா ?!” என்று கேட்டபடி அவளை சோபாஃவில் அமர வைத்தவன்,  அவளை பார்த்தபடி எதிரில் அமர்ந்து கொண்டான்.
சந்தன நிற காட்டன் புடவையில் ரோஸ் வண்ணத்தில் சிறுசிறு பூக்கள் புடவை முழுவதும் பூத்துக்குலுங்க  மடிப்புகள் கலையாமல் அவள் புடவை  உடுத்தியிருந்த அழகில் மெய்மறந்து போனான்.
நெற்றியில் குங்கும நிற பொட்டு. தூக்கி ஏற்றி வாரி இருந்த அவள் கூந்தலின் பின்னலில் சூடியிருந்த பூக்கள் லேசாய் வாட்டமுற்றாலும் அதுவும் அவளுக்கு அழகூட்டியது.