Nan Un Adimayadi– EPI 12

அத்தியாயம் 12

தடுமாறாமல்

தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக (தவமங்கை)

 

பரோட்டா கடை தரமான சம்பவம் நடந்து வாரம் ஒன்று ஓடியிருந்தது. கராத்தே கிளாஸ் முடித்த மங்கை, அங்கேயே இவர்களுக்கு எதாவது தேவையா என கேட்டப்படி சுற்றிக் கொண்டிருந்த செவலையை நோக்கிப் போனாள்.

“மிஸ்டர் செவல!”

“நானா டீச்சர்?” என சுற்றும் முற்றும் பார்த்தான் அவன்.

“செவலைன்றது நீங்கதானே?”

“அந்தக் கர்மம் புடிச்ச பேரு என்னதுதான்! ஆனா மிஸ்டர்னு மருவாதையா யாரும் கூப்டது இல்லை பாருங்க! அதான் வியந்துப் போய் நின்னுட்டேன். சும்மா வாடா போடா செவலைன்னு கூப்டுங்க டீச்சர்”

“சரி செவலை, எங்க இருக்கார் உங்க காளை?”

“உங்களுக்கு ஜூஸ் போட்டு என் கையில குடுத்துட்டு கொட்டகைக்குப் போய் கவுந்தடிச்சுப் படுத்துட்டான் டீச்சர். கிளாசு முடிஞ்சதும் நீங்க பத்திரமா வூட்டுக்குப் போயிட்டீங்களான்னு பார்த்துட்டு ஆத்தாக்கிட்ட கொடலு வறுவல் வாங்கிட்டு வர சொன்னான். அதான் முடிஞ்சதே, வாங்க டீச்சர் கிளம்பலாம்”

“ஓஹோ! நான் காளைய பார்க்கனுமே. கூட்டிட்டுப் போக முடியுமா?”

“ஐயயோ வேணாம் டீச்சர்!”

“ஏன்?”

“அது வந்து..” என ஏதோ சொல்ல வந்தவன்,

‘இல்ல சொல்ல வேணாம்! டீச்சர் போய் பார்க்கட்டும்! அப்பவாவது இதுக்கு ஒரு முடிவு வருதான்னு பார்ப்போம்’ என நினைத்து அமைதியாகி விட்டான்.

ஒரு வாரமாக இரவு வீட்டுக்கு வராமல் செவலை வீடு, தோப்பு கொட்டகை என தங்கிக் கொள்கிறான் காளை. காற்று போல் வந்து காலை நேரத்துக் கடமையை மட்டும் அவன் செய்துப் போவது காமாட்சிக்கு மட்டும் தெரிந்திருந்தது. மகன் வீடு தங்காமல் பரதேசியாக திரிவதைப் பற்றி காமாட்சி மச்சக்காளையிடம் அழுது புலம்பியதைக் கேட்டவள், அவனை சென்றுப் பார்ப்பது என முடிவெடுத்திருந்தாள். அன்று சண்டையின் போதே ஏதோ விஷயம் என புரிந்தாலும் கணவன் மனைவியின் பேச்சில்தான் ஊரில் என்ன வதந்தி உலவுகிறது என தெரிந்துக் கொண்டாள் தவமங்கை. படித்த தன் சொந்தங்களே கண் காது மூக்கு வைத்து அவள் கல்யாணம் நின்றதைப் பற்றி புரணி பேசி இருக்கும் போது, படிப்பறிவில்லாத பாமர மக்களின் பேச்சுக்களை இவள் பெரிதாக சட்டை செய்யவில்லை.

இந்த வகை பேச்சுக்களைத் தவிர்க்கவே காளை வெளியே தங்குகிறான் என புரிந்துக் கொண்டவள் அவனை பார்த்துப் பேசி வீட்டுக்கு வர சொல்ல வேண்டும் என முடிவெடுத்து தான் செவலையை அணுகினாள். அவன் கொட்டகைக்கு அருகே அழைத்துப் போய் நிறுத்தி விட்டு, அவசர வேலை இருப்பதாக சொல்லிக் கலண்டுக் கொண்டான்.

உழைத்து களைத்து ஓய்வெடுக்க, சாப்பிட என அவ்விடத்தைத் தான் காளையின் குடும்பமே பயன்படுத்துவார்கள். ஒரு கயிற்று கட்டில், மரத்தால் செய்யப்பட்டிருக்கும் சில மணக்கட்டைகள், தண்ணீர் குடம், என கன கச்சிதமாக இருந்தது கொட்டகை. கூரை மட்டும் வைத்து திறந்த வெளியாக இருக்கும் அந்தக் கொட்டகையையின் அழகை ரசித்தப்படி நின்றிருந்தவளின் கூந்தலை மாலை நேர தென்றல் களைத்து விளையாடியது.

“உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்!!” என ஹரிசரண் போன் வழியே உருகிக் கொண்டிருக்க, காளை கயிற்றுக் கட்டிலில் படுத்து ஓலை வேய்ந்த விட்டத்தைப் பார்த்திருந்தான். அவள் வந்து நிற்பதை எப்படித்தான் அறிந்தானோ, சடக்கென எழுந்து நின்றான் காளை.

ஜென்மம் ஜென்மமாக அவளைப் பார்க்காதது போல முகத்தை ஆசையாக ஏறிட்டு அவன் பார்க்க, இவளுக்குப் பகீரென்று இருந்தது.

‘நெளியாம நேரா கண்ணப் பார்க்கறானே!’ என இவள் மூளை கணக்குப் போட்டு கால்களுக்கு கட்டளை அனுப்பி ஓரடி பின்னே எடுத்து வை என சொல்ல, அதை செயல் படுத்துவதற்குள் அவளை நெருங்கி கையைப் பிடித்திருந்தான் மொரட்டுக்காளை.

“எலிசு!! நெஜமா நீதானா எலிசு? மாமன தேடி வந்துட்டியா?”

‘இதுக்குத்தான் ஆரம்பத்துல செவல வேணான்னு சொன்னானா?’ என நினைத்தவள்,

“செவல!” என சத்தம் போட்டு அழைத்தாள்.

“காளை ஒரே சோகமா கெடக்கான் டீச்சர்! என்னால ரெண்டு கண் கொண்டு பார்க்க முடியல. சரக்கடிச்சாத்தான் அவனுக்கு பேசற தைரியம் வரும் அதனால ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! நான் நடையை கட்டறேன்” என தூரத்தில் இருந்து அசரீரியாக செவலையின் குரல் கேட்டது.

“இடியட்!” என முணுமுணுத்தவள், காளையின் பிடியில் இருந்து கையை உருவ முயன்றாள்.

“இட்டியட் தான் எலிசு! நான் இட்டியட் தான். இந்த எலிசு கைக்கு எட்டாதுன்னு தெரிஞ்சும் இலவு காத்த காண்டாமிருகமா காத்துக் கெடக்கேனே, கண்ணுப் பூத்துக் கெடக்கேனே நான் இட்டியட் தான். எலிசு வேணும்னா அறிவு வேணுமாம்லே! அதோட சேர்த்து அழகும் வேணுமாம்லே! எங்க போவேன் நான்!!!!! அழகுக்கும் அறிவுக்கும் எங்க போவேன் நான்?????”

கையை உருவ போராடிக் கொண்டே,

“அப்படிலாம் யாரு சொன்னா?” என கேட்டாள் மங்கை.

“எலிசோட பாதர் மிஸ்டரு அஜய்!! மை பாதர் இன் லாவ்வு!”

“ஓ”

“ஓ பீ கீயூ ஆர் எஸ்

ரோட்டுல ஓடுது பஸ்

தோசை சாப்புட மெஸ்

எலிசுதான் என்னோட லவ்ஸ்

குடுப்பேனே ஆயிரம் கிஸ், கிஸ், கிஸ்!!!”

அவளின் கையை வலது கரம் பற்றி இருக்க இடது கரத்தால் காற்றில் கோடு கிழித்துக் கொண்டே கவிதை சொன்னான் காளை. மங்கைக்கு கோபம் சுள்ளென வந்தாலும், அவன் கவிதையைக் கேட்டு சிரிப்பும் வர பார்த்தது. முயன்று அடக்கிக் கொண்டாள்.

“இது கவிதையா?”

“ஆமா எலிசு! நீ பக்கத்துல இருந்தா கவிதைலாம் அருவி மாதிரி கொட்டுது! ஆனா அதை அள்ளி வைக்கத்தான் ஒரு பக்கெட்டு இல்லைன்னு நெனைக்கறப்போ, மனசு விக்கெட்டு மாதிரி விழுந்துடுது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது”

“எது புனிதம்? தண்ணி அடிச்சிட்டு கையைப் புடிக்கறதா?”

அவள் சொன்னதைக் கேட்டு பட்டென கையை விட்டவன், அடுத்த நொடி அவள் தோளைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான். வேண்டாம் என அவள் தள்ள தள்ள இன்னும் பின்னால் இவன் நகர்ந்தாலும் இவளையும் இழுத்துக் கொண்டே நகர்ந்தான்.

“இப்படிலாம் பேசுனா முத்துக்காளை வேணா நடுங்கிப் போய் ஓடிப் போயிருவான் எலிசு! இது மொரட்டுக்காளை, எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டான்! ஆமா தெரியாமத்தான் கேக்குறேன், அந்த முத்துக்காளை என்ன பெரிய தியாகியா?

‘எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க’ன்னு சோக கீதம் படிக்கிறான்! என் கையில மட்டும் அவன் மாட்டுனான் செவுலு அவுலாயிடும்! டெட் பாடியாகிருவான் பார்த்துக்கோ! என் முன்னுக்கு மட்டும் அவன வர வேணாம்னு சொல்லி வை எலிசு! வந்தான் அடுத்த நாளே அவனுக்கு பாலுதான்!! ஆசை ஆசையா உன்னை இந்த நெஞ்சுல வச்சுப் பூசை செய்யறேன்” என சொல்லி அவள் கையை இழுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தியவன்,

“அவன் என்னன்னா உங்கப்பாரு சொன்னாருன்னு அப்படியே உன்னை யாருக்கோ தாரை வார்த்துக் குடுக்கப் பார்க்கறான்! நீ கல்யாணம் ஆகி போயிட்டாலும், அந்த தொரை பிரம்மச்சாரியா இருந்து நீ புள்ளக்குட்டியோட வாழறத பார்த்து, அந்த நிம்மதியிலேயே வாழ்ந்து முடிச்சிருவாராம்! அப்போ எலிசு எலிசுன்னு உன்னை மாஞ்சு மாஞ்சு லவ் பண்ணுற நான் என்ன மஞ்ச மாக்கானா? உன்னை வுட்டுக்குடுத்துட்டு இந்த மொரட்டுக்காளை விரலை சூப்பிக்கிட்டு போகனுமா? எனக்கு எலிசு வேணும்!” என சொல்லியவன் ஒரு விரலால் அவள் கன்னத்தைத் தொட்டுத் தடவினான்.

“ப்பா! பழுத்த பங்கனப்பள்ளி மாதிரி வளவளன்னு இருக்கு எலிசு உன் கன்னம்!”

அவள் கையைத் தட்டிவிட,

“நீ சொல்லு எலிசு, எனக்கு என்ன குறை? கருப்பா இருந்தாலும் களையா இல்லையா? இங்கிலீசு பேச தெரியலைனாலும் இங்கிதமா நடந்துக்கலியா? படிக்கலைனாலும் பண்பா இல்லையா இல்ல பாசக்காரனா இல்லையா? உன்னை விட அறிவா உள்ளவன கட்டிக்கிட்டனா உன்னை மதிக்க மாட்டான் எலிசு! உன்னை விட அழகா உள்ளவன கட்டிக்கிட்டனா திமிர் காட்டுவான் எலிசு! என்னை மாதிரி பசங்கதான் உங்கள மாதிரி அழகான, அறிவான பொண்ணுங்கள ராணி மாதிரி பார்த்துப்பாங்க! எனக்கு நீ வேணும் எலிசு! காலம் பூரா நீ வேணும்! எனக்கு ஒரு ஆத்தாவா, எனக்குப் புள்ளையா, என் பொஞ்சாதியா எல்லாமுமா நீ வேணும் எலிசு! வேணும்! வேணும்! வேணும்!” என சொல்லியவன் இறுக்கி அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் திமிரவில்லை, தடுக்கவில்லை அப்படியே அமைதியாக நின்றாள்.

“காளை”

“ஹ்ம்ம் எலிசு”

“எனக்கு மொரட்டுக்காளை வேணா”

“ஏன் வேணா! ஏன் வேணா?”

“ஏன்னா அவன் நெஜம் இல்லை! முத்துக்காளை தான் நெஜம்”

“அவனப்பத்தி பேசாத எலிசு! தைரியம் இல்லாத கோழைப்பையன். அவனுக்கெல்லாம் எதுக்கு காதலு கன்றாவி எல்லாம்! அவன மட்டும் என்னிக்கும் நம்பாத எலிசு! உன் நல்லதுக்குத்தான்னு சொல்லி இன்னொருத்தன கட்டி வச்சிருவான்!”

அவன் அணைப்பில் இருந்து மெல்ல நிமிர்ந்துப் பார்த்தவள்,

“வலிக்கிது” என்றாள்.

சட்டென அவளை அணைப்பில் இருந்து விலக்கியவன், போதையில் மெல்ல தடுமாறி பின்னே சரிய போனான். அவன் விழுந்து விடாமல் இருக்க இரு கைகள் கொண்டு காளையின் தோளை இவள் பற்ற, இருவரும் ஒன்றாக அந்தக் கயிற்றுக் கட்டிலில் சரிந்தார்கள். காளை கீழே இருக்க, அவன் மேலே மங்கை படுத்திருந்தாள்.

எழுந்துக் கொள்ள அவள் முயல, அவனோ வாகாக அவளைக் கட்டிக் கொண்டான்.

“காலம் பூரா உன்னை இப்படியே தாங்கிப்பேன் எலிசு! நீ குண்டானாலும் சரி, உண்டானாலும் சரி இப்படியே இந்த நெஞ்சுல தாங்கிப்பேன் எலிசு”

“விடுங்க, விடுங்க” என அவள் திமிர, கைகளை விலக்கிக் கொண்டான் காளை.

அவளே அவசரமாக எழுந்து நின்றுக் கொண்டாள். மெல்ல மூச்சு வாங்கியவள்,

“நான் போறேன்!” என நடக்க ஆரம்பித்துவிட்டாள். பின் என்ன நினைத்தாளோ, திரும்பி வந்து வேறு பக்கம் பார்த்து நின்றவள்,

“வீட்டுக்கு வாங்க காளை! உங்காத்தா ரொம்ப கவலைப்படறாங்க” என சொன்னாள்.

“நானா வர மாட்டேன்னு சொல்லுறேன். இந்த முத்துக்காளை விடமாட்டறான் எலிசு! ரொம்ப பீலாகி போயிக் கிடக்கறான் அவன்! ஊருல கண்டதும் பேசறாங்களாம் எலிசு, உன்னையும் அவனையும் சேர்த்து வச்சி! முட்டாப்பசங்க! உன்னையும் என்னையும் சேர்த்து வச்சிப் பேசனாலும் அதுல நியாயம் இருக்கு! அவன் கூட இட்டுக்கட்டிப் பேசறத கேட்டா எனக்கே கோபம் வருதுனா பார்த்துக்கோயேன்! நீ வீட்டுக்கு வர சொன்னன்னு அந்த சொங்கி முத்துக்காளைகிட்ட சொல்லுறேன்! கண்டிப்பா வருவான் எலிசு! நீ பார்த்து பத்திரமா போய்டுவியா? நானும் வருவேன் உன் கூட, ஆனா பாரு, சரக்கடிச்சா வூட்டுக்கு வர மாட்டேன்னு சத்தியம் வச்சிருக்கேன். அதான் தயங்கறேன்! நீ போ எலிசு!”

இவள் திரும்பி நடக்க,

“எலிசு!” எனும் குரலில் அப்படியே நின்றாள்.

“இந்த மொரட்டுக்காளைய கல்யாணம் பண்ணிப்பியா எலிசு?”

“மாட்டேன்!” என சொன்னவள் எடுத்தாள் ஒரு ஓட்டம்! அவன் கையில் மீண்டும் சிக்க அவளுக்கென்ன பைத்தியமா?

அந்த சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து முத்துக்காளை வீட்டில் எப்பொழுதும் போல தங்க ஆரம்பித்து விட்டான். ஆனால் மங்கையின் முன் மட்டும் வருவதேயில்லை.

பள்ளியில் வேறு பல நாட்களாக தலைவலி ஒன்று ஆரம்பித்திருந்தது மங்கைக்கு. தினந்தோறும் அவள் மேசையில் மூன்று ரோஜாக்கள் வீற்றிருக்க ஆரம்பித்திருந்தன. மற்ற ஆசிரியைகள் இவளை பார்த்து கேலி செய்ய, இவளுக்கோ கடுப்பு கடுப்பாக வந்தது. அன்று சீக்கிரம் பள்ளிக்கு வந்தவள், யாரும் பார்க்க முடியாதபடி அலமாரியின் பின்னால் ஒளிந்து நின்றுக் கொண்டாள். அவள் அனுமானித்திருந்தப்படியே மறை தான் அவள் மேசையில் பூவை வைத்துக் கொண்டிருந்தான்.

“பிள்ளைகளுக்கு முன் மாதிரியா இருக்கற ஒரு ஆசிரியர் செய்யற காரியமா இது?” என கடுமையாகவே கேட்டபடியே அலமாரியின் பின்னால் இருந்து வந்தாள் மங்கை.

அலட்டிக் கொள்ளாமல்,

“ஹாய் டீச்! எப்படி என்னோட சர்ப்ரைஸ்?” என புன்னகை முகத்துடன் கேட்டான் அவன்.

“சகிக்கல! இனிமே இந்த மாதிரி சில்லியா நடந்துக்காதீங்க மிஸ்டர் மறை”

“யாரோ ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துகிட்டாத்தான் தப்பு டீச்! வருங்கால மனைவிக்கிட்ட இப்படிலாம் நடந்துக்கலனா தான் தப்பு”

“வாட்?”

“யெஸ் மை டியர்! எங்க வீட்டுல இருந்து உங்க வீட்டுல போய் பேசி சம்மதம் வாங்கி பல நாள் ஆகுது”

“வாட்!!!”

“யெஸ் மை டார்லிங்! உன்னைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு! ஆனாலும் பழக பழக இந்தப் பழமும் புளிக்கும்னு நெனைச்சேன். உன்னோட அழகு, எட்டி நின்னு பழகும் பாங்கு, வேலையில நீ காட்டும் டேடிகேஷன், உன்னோட கோபம் எல்லாம் என்னை அப்படியே அடிச்சு துவைச்சுப் போட்டுருச்சு! நீ கூடவே வச்சு ரசிச்சு ருசிச்சு சாப்பிட வேண்டிய தேன் பலான்னு போக போக புரிஞ்சுக்கிட்டேன். காதலுக்கு மயங்க கூடிய ஆள் நீ இல்லைன்னு புரிஞ்ச நொடியே வீட்டுல விட்டுப் பேச சொல்லிட்டேன்! இந்த விஷயத்தை நானே உனக்கு சொல்லனும்னு தான் அஜய் மாமாகிட்ட ரகசியமா வச்சிக்க சொன்னேன். போன தடவை என்னை வந்துப் பார்த்துட்டுத்தான் உன்னைப் பார்க்க வந்தாரு தவா”

“ஓஹோ!”

தந்தைக்கு செய்துக் கொடுத்த வாக்கு கண் முன் வந்து நின்றது மங்கைக்கு. தன் முன்னால் சிரித்த முகத்துடன் நின்றிருக்கும் மறைச்செல்வனைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.

‘கல்யாணம் நின்னுப் போன பொண்ணுங்கறதனால, பல பொண்ணுங்கள கலட்டி விட்டவன் தான் வாழ்க்கைப் பிச்சை போடுவான்னு இவன தேர்ந்தெடுத்துட்டீங்களாப்பா?’ மனம் ஊமையாய் ஓலமிட்டது.

மறைச்செல்வனின் அப்பா இன்கம்டெக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் நல்ல பதவியில் இருந்தார். அம்மாவோ ஈபியில் வேலை செய்தார். அக்கா தங்கை என பிக்கல் பிடிங்கல் இல்லை. ஓரளவு வசதியான குடும்பம். அதோடு அவனும் மகளைப் போலவே ஆசிரியராக இருக்க, மகளின் வேலைச்சுமை அறிந்துப் புரிந்து நடந்துக் கொள்வான் என எண்ணி தான் சம்மதத்தைக் கூறி இருந்தார் அஜய். அதோடு விரும்பி வந்து கேட்கிறான், மகளை சந்தோஷமாக வைத்துக் கொள்வான் என எண்ணினார். விசாரித்த வரை எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, ஆண் பெண் என தோழர்கள் கூட்டம் அதிகம் என மட்டும் தெரிய வர, யாருக்குத்தான் இல்லை என அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்.

“ரெண்டு வருஷம் டைம் கேட்டுருக்கியாமே தவா! அந்த ரெண்டு வருஷத்தை நாம காதலிச்சு கடத்திடலாம்!”

“எனக்கு லேடிஸ் போகனும்!” என சொன்னவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் விடுவிடுவென வெளியே நடந்து விட்டாள். பொங்கி பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் முகத்தை நீர் விட்டுக் கழுவினாள். முன்பொரு முறை இதே போல மனதில் இருந்த பிம்பத்தைக் கழுவிய நொடிகள் ஞாபகம் வந்து கண்களில் இன்னும் கண்ணீரைச் சேர்த்தது.

‘எனக்கு காதல் வேணும்! அதோட இணைஞ்சு வர காமம் வேணும்! சோ, எனக்கு உங்க மகன் வேணா!’ என முடிவெடுத்து முதல் காதலை உதறிய நிமிடங்கள் மனதில் வந்து போக,

“எனக்கும் காதலுக்கும் ராசியே இல்லையோ!” என வாய்விட்டு சொன்னவள், முகத்தை அழுந்தத் துடைத்தாள். நெஞ்சின் ஓரம் மலர்ந்து சிரித்த உருவத்தையும்தான்!!!!!

 

(அடி பணிவான்…)

(எல்லோருக்கும் வணக்கம். ஏற்கனவே பேஸ்புக்ல சொன்ன மாதிரி, இங்க லாக் டவுன் செஞ்சுட்டாங்க கொரோனாவால! வாங்கி வச்ச மளிகைலாம் ரெண்டு வாரத்துக்குப் போதுமான்னு ஆரம்பிச்சு, இன்னும் பல பல கவலைகள். என்னால கான்சேண்ட்ரேட் பண்ணி எழுதவே முடியல. பாதி எழுதிட்டு இருக்கறப்போ வெளையாட வாம்மான்னு ஒரு குரல், டீ வேணும்னு இன்னொரு குரல், டீவி ரிமோட் எனக்கு வேணும்னு சண்டைன்னு குதூகலமா போகுது! அதனால் அட் லீஸ்ட் ஓன் வீக் அப்டேட், ஆடியோ நாவல் எல்லாம் நிறுத்தி வைக்கிறேன். எல்லாரும் புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். நிலைமை கொஞ்சம் சீரானதும் எப்பொழுதும் போல வாரம் ரெண்டு அப்டேட் தரேன். எல்லோரும் சேப்பா இருங்க! தேவையில்லாம வெளியில போகாதீங்க! டேக் கேர்! லெட்ஸ் டூ அவர் பார்ட் டூ ஃபைட் திஸ் வைரஸ்!!!!)