Nan Un Adimayadi–epi 2

Nan Un Adimayadi–epi 2

அத்தியாயம் 2

தீபம் இங்கே கோயில் இங்கே

தேவன் எங்கே காதல் நெஞ்சே

சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம்

சொந்தம் ஒன்று தேடும் (தவமங்கை)

 

காலையில் கேட்ட சேவலின் கூவலில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் தவமங்கை.

“கொக்கரக்கோக்கோ” என விடாமல் கேட்ட சத்தம் இவளுக்குப் புதுமையாக இருந்தது. அவள் வாழ்ந்து வளர்ந்ததோ நவீன ரக ப்ளாட் வளாகம். அங்கெல்லாம் எங்கே இது போல உயிரினங்களின் ஒலி! நாய், பூனை, கிளி இவற்றின் சத்தங்களைக் கேட்டிருக்கிறாள். இந்த சத்தம் அவளுக்கு புதிதாகத்தான் இருந்தது.

பக்கத்தில் இருந்த போனை எடுத்துப் பார்த்தாள் தவமங்கை. காலை மணி ஐந்து என காட்டியது.

“பேய் கூட தூங்கிட்டு இருக்குற நேரத்துல கூவி கூவி மனுஷன எழுப்புது பாரேன்! உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா!” என புன்னகையுடன் முணுமுணுத்தவள், மறுபடியும் தூங்க முயன்றாள். ஆனால் தூக்கம் வரவில்லை. எழுந்து குளித்துவிட்டு பிரம்ம முகூர்த்ததில் தியானமாவது செய்யலாம் என முடிவெடுத்தவள், டவல், மாற்றுடை எடுத்துக் கொண்டு சோப்பு, ப்ரஷ், பேஸ்ட், ஃபேஸ் ஸ்க்ரப்பேர், கொக்கோ பட்டர், ஷாம்பூ எல்லாம் வைத்திருக்கும் குட்டி வாளியையும் எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

முதல் நாளே பாத்ரூம் எங்கிருக்கிறது என காட்டிக் கொடுத்திருந்தார் காமாட்சி.

“கொக்கரக்கோ கோழி, கொக்கரிக்கும் தோழி” என மெல்லியக் குரலில் பாடிக்கொண்டே பாத்ரூம் இருக்கும் இடத்துக்கு வந்தாள். கிணற்றை தாண்டித்தான் பாத்ரூம் இருந்தது. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. சுவிட்ச் இருக்கும் இடத்தைத் தேடி பாத்ரூம் விளக்கைப் போட்டாள் மங்கை. குண்டு பல்பின் வழி மெல்லிய வெளிச்சம் பரவியது.

உள்ளே நுழைந்து தாள்ப்பாள் போட்டுக் கொண்டாள். பின் பாத்ரூமை ஒரு நோட்டம் விட்டாள். சுத்தமாக இருந்தது. பெரிய தொட்டி, அதை நீரால் நிரப்பி வைத்திருந்தார்கள். அதனுள்ளே பச்சை கலரில் மொண்டு ஊற்றிக் குளிக்க சின்ன பக்கேட். தொட்டிக்கு அந்தப்புறம் காலைக்கடனை முடிக்கும் இடம் இருந்தது. சிமெண்டு தரைதான். நன்றாக தேய்த்துக் கழுவாவிட்டால் கண்டிப்பாக வழுக்கும். அந்த பாத்ரூம் உள்ளே ஒரே ஒரு சோப்பு டப்பா. அதனுள் வெள்ளையா, பிங்க்கா, நீலமா என கண்டுப்பிடிக்க முடியாத வர்ணத்தில் ஒரு சோப். அந்த சோப்பை உற்றுப் பார்த்தாள் மங்கை.

‘டாவ் சோப் மாதிரி இருக்கு! காமாட்சி ஆண்ட்டி இதெல்லாம் யூஸ் பண்ணறாங்களா?’ என மனதில் நினைத்தப்படியே முன்பு விட்ட பாடலைத் தொடர்ந்தப்படியே தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றினாள் மங்கை.

“கொக்கரக்கோ கோஓஓஓஓஓ” ழி வராமல் குளிரில் நடுங்கியவள் கோவென கத்தி விட்டாள். ஹீட்டருக்குப் பழக்கப்பட்டிருந்த உடம்பு நடுநடுங்கிப் போனது.

“என்னம்மா, என்னாச்சு?” வெளியே இருந்து காமாட்சியின் குரல் பதட்டத்துடன் கேட்டது.

“ஒன்னும் இல்ல ஆண்ட்டி! தண்ணி லேசா ஜில்லுன்னு இருக்கு!” என உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

“மட்டி, மட்டி! குளிக்கற முன்ன தண்ணியோட டெம்ப்ரச்செர செக் பண்ணறது இல்ல! இடியட்!” தன்னையே மெல்லியக் குரலில் திட்டிக் கொண்டவள், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை மேலே தெளித்துத் தெளித்துக் குளித்து விட்டு வந்தாள்.

வெளியே வர, காலைக் காற்று ஜில்லேன மேனி தழுவி போனது. ஏற்கனவே குளிரில் விறைத்துப் போய் இருந்தவளுக்கு பற்கள் டைப்படிக்க ஆரம்பித்து விட்டன. மரங்களில் இருந்த பழ வாசனையோடு, மாட்டு சாணத்தின் வாசனையும் கலந்து மூக்கைத் தொட்டுப் போனது. இவள் வருவதற்காக வெளியே காத்திருந்தார் காமாட்சி. தவமங்கையின் பற்கள் கபடி ஆடுவதைப் பார்த்தவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஏத்தா! பச்சைத் தண்ணி பழக்கம் இல்லையா உனக்கு? இங்கெல்லாம் இப்படித்தான்! போக போக பழகிடும்த்தா”

“ச..ச..ரி ஆண்ட்டி” தந்தியடித்தப்படியே பதிலளித்தவள் ரூமுக்குள் புகுந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள். இந்த குளிரில் பிரம்ம முகூர்த்தமாவது தியானமாவது! போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டவளுக்குக் கண்கள் கலங்கியது.

‘அழக்கூடாது மங்ஸ்! இப்படிலாம் இருக்கும்னு தெரிஞ்சு தானே வந்த! சமாளிக்கனும், எல்லாத்தையும் சமாளிக்கனும்’ என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் கண்ணீர் நிற்கவில்லை.

“ஏத்தா!” வெளியே காமாட்சியின் குரலில் கண்ணீரை அவசரமாகத் துடைத்தாள்.

“வரேன் ஆண்ட்டி”

“அதென்னா ஆண்டியோ! அழகா ஆத்தான்னு கூப்புடுத்தா! இந்தா வா, இந்த காபி தண்ணியக் குடி முதல்ல! நடுக்கம் நிக்கும்”

“இல்ல பரவாயில்ல ஆண்ட்டி..ஹ்ம்ம் ஆத்தா. உங்களுக்கு எதுக்கு சிரமம்!”

“அதெல்லாம் ஒன்னும் சிரமம் இல்ல! காளை காபி போட்டு வச்சிட்டுத்தான் தோட்டத்துக்குப் போயிருக்கான். உனக்கும் சேர்த்துத்தான் போட்டுருக்கான். வாத்தா!” என வற்புறுத்தினார்.

தட்டமுடியாமல் அவரின் வீட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் தவமங்கை. மணக்கட்டையை எடுத்துப் போட்டவர்,

“இதுல உட்காருத்தா!” என பணித்தார்.

தேவையான பொருட்கள் மட்டுமே இருந்த அந்த வீட்டில் டைனிங் டேபிள் இல்லை என்பதை நேற்றே கவனித்திருந்தாள் மங்கை. ட்ரேக் போட்டம், டீ சர்ட்டில் இருந்தவள், அந்த மணக்கட்டையில் அழகாக சப்பளங்காலிட்டு அமர்ந்துக் கொண்டாள்.

அவளுக்கு மட்டும் புதிய வெள்ளி டம்ளரில் காபி ஊற்றிக் கொடுத்தார் காமாட்சி.

“எனக்கு மட்டும் பால் போட்ட காபி குடுத்துட்டு நீங்க கருப்பு காபி குடிக்கிறீங்க!” என கேட்டாள் மங்கை.

“நீ பட்டணத்துப் புள்ளல்ல! பால் போட்டுத்தான் காபிலாம் குடிப்பியாம். அதனாலதான் உனக்கு பால் போட்டு காபி கலந்துருக்கான். நாங்களால் இப்படியே குடிச்சுப் பழகிட்டோம். காலையிலேயே பால் கலந்துகிட்டா எனக்கு நெஞ்சு கரிக்கும்மா!”

காபி அருமையாக இருந்தது. ரசித்து ருசித்து மிடறு மிடறாக அருந்தினாள் மங்கை.

“உங்க மகன்தான் போட்டாறா காபிய? ரொம்ப நல்லா இருக்கு ஆத்தா. எங்க ஊருல கூட இப்படி ஒரு காபிய நான் குடிச்சது இல்ல. பாலாடை அப்படியே திரிஞ்சு மேல வந்து, நாக்குல நர்த்தணம் ஆடுது. என்ன சொல்லுங்க, ஃப்ரேஷ் பாலுல குடிக்கற காபியோட ருசியே தனிதான். ஆவ்சம் ஃபீல்!”

மகன் போட்ட காபியைப் புகழ்ந்ததில் மகனையே புகழ்ந்துவிட்ட மாதிரி முகம் மலர்ந்துப் போனார் காமாட்சி.

“அதெல்லாம் நல்லா செய்வான்மா எங்க காளை! கல்யாணம் கட்டிக்கிடுன்னா மட்டும் பிடி கொடுக்கமாட்டான். மகள கட்டிக் குடுத்த நேரத்துல எனக்கு கர்ப்பப்பையில பெரச்சனைன்னு சொல்லி அத எடுத்துப்புட்டாங்க! புதுசா கல்யாணம் ஆனவள எப்படி ஒத்தாசைக்கு கூப்ட! இவன் தான் எல்லாம் செஞ்சான் எனக்கு! ஆக்கிப் போடறதுல இருந்து, தலை சீவிவிடறது வரைக்கும்! இவனுக்கு ஒரு பொண்ணப் பார்த்துக் கட்டி வச்சிட்டா என் கட்டை நிம்மதியா வெந்துடும்”

“ஆத்தா! காலையிலே இதென்ன பேச்சு! உங்க மகன் சீக்கிரமா கல்யாணம் பண்ணி குழந்தைக் குட்டின்னு சந்தோஷமா இருப்பாரு! தவமங்கை சொன்னா கண்டிப்பா நடக்கும். அதனால கண்டதெல்லாம் பேசாதீங்க”

“உன் வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் ராஜாத்தி! இப்படியே உக்காந்திரு. இட்லிக்கு ஊத்திடறேன். சாப்புடலாம்”

“இத்தனை மணிக்கேவா? நான்லாம் எட்டு மணிக்குத்தான் காலை சாப்பாடு சாப்பிடுவேன் ஆத்தா”

“அஞ்சு மணிக்கு எழுந்துட்டு எட்டு மணிக்கு சாப்படறதா? வயிறு என்னாத்துக்கு ஆகும்? பாரேன் உன் வயிறு எப்படி ஒட்டிப் போய் கிடக்குதுன்னு! பெரிய தனக்காரரு உன்னை நல்லாப் பார்த்துக்கனும்னு சொல்லிருக்காரு. நல்லா சாப்பாடு போட்டு இங்கிர்ந்து நீ போறதுக்குள்ள புஷ்டியா ஆக்கித்தான் அனுப்புவேன்.”

வெள்ளந்தி கிராமத்துப் பாசத்தில் லேசாக கண் கலங்கும் போல் இருந்தது மங்கைக்கு. கேவலமான பார்வைகள், முன்னே விட்டுப் பின்னே புறம் பேசிய பேச்சுக்கள் என மனதைக் கீறி அதில் குளிர் காய்ந்த தன் படித்த சொந்தபந்தங்களை விட படிக்காத இவர்கள் எவ்வளவோ மேல் என தோன்றியது அவளுக்கு. குடும்பத்தை விட்டுவிட்டு நிம்மதி தேடி இங்கே வந்ததில் தப்பே இல்லை என் இரண்டாம் நாளே தோண ஆரம்பித்து விட்டது மங்கைக்கு.

இங்கிருக்கும் ஐந்து கிராமத்துக்கும் சேர்த்து ஒரு உயர்நிலைப்பள்ளி கட்டி இருந்தது அரசாங்கம். ஏற்கனவே இங்கே ஒரு ஆரம்பப்பாடசாலை மட்டுமே இருந்தது. மேலே படிக்க பஸ் பிடித்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து போய் டவுனில் இருக்கும் பள்ளியில் தான் படிக்க வேண்டும். அவ்வளவு தூரம் போய் வர கஸ்டம் என பெண் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியோடு நிறுத்தி விடுவார்கள் சுற்று வட்டார கிராமத்து மக்கள். பலர் மனு எழுதிப் போட்டிருக்க இந்த வருடம்தான் கட்டிடம் எழும்பி, பள்ளியும் துவக்கப்பட்டிருந்தது.

தவமங்கைக்கு தன் வீட்டில் இருப்பது மூச்சு முட்டிப் போக, வேறு பள்ளிக்கு தூரமாய் மாற்றல் வேண்டி எழுதிப் போட்டிருந்தாள். அப்படி இப்படி என தள்ளிப் போய் இந்த பள்ளிக்குப் போஸ்டிங் கிடைத்திருந்தது. விட்டால் போதும் என பெட்டிப் படுக்கையைக் கட்டிக் கொண்டு இங்கே வந்துவிட்டாள். இந்த கிராமத்தை ஒட்டிய ஊர்களில் இருந்தே மற்ற ஆசிரியர்கள் இருக்க, இவளும் இன்னொரு ஆண் ஆசிரியரும் தான் தூரத்தில் இருந்து வந்திருந்தார்கள். அந்த ஆசிரியரை பக்கத்து கிராமத்தில் தங்க வைத்த கிராமத்தின் பெரிய தனக்காரர், பாத்ரூம் வசதியோடு இருக்கும் காமாட்சியின் வீட்டில் இவளுக்கு ரூம் தருமாறு கேட்டுக் கொண்டார். அவர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை ஒன்றாக இருப்பதால் வசதிப்படாது என காமாட்சியின் வீட்டைப் பேசி இருந்தார். பணம் கொடுப்பதாக சொல்லி இருந்தாலும் அதெல்லாம் காமாட்சிக்குப் பெரிதாக தோன்றவில்லை. மகனின் உழைப்பால் தேவைக்கு மிஞ்சியே பணவரவு இருந்தது. பெரிய தனக்காரரே நயந்து கேட்கிறார், அதோடு படிப்பறிவிக்க வந்த ஆசிரியைக்கு தங்களால் முடிந்த உதவி எனும் எண்ணமும் சேர சரி என ஒத்துக் கொண்டிருந்தார்.

பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தது என அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே வேலையைப் பார்த்தார் காமாட்சி. பேச்சில் முழுக்க முழுக்க எட்டிப் பார்த்தது அவரின் பிள்ளைகள் இருவர்தான். முத்துக்காளையைப் பற்றி பேசும் போது இவளுக்கு நேற்றைய இரவின் ஞாபகம் வந்துவிட்டது.

“நீதான் என் குவின் எலிசபெத்தா?”

“எலிசபெத்தா?”

“ஆமா என்னோட எலிசபெத்து! எம்புட்டு அழகா இருக்க நீ! அப்படியே அன்னந்தண்ணி இல்லாம பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு” லேசாக இளித்து வைத்தான் காளை.

“என்னா தெனாவெட்டு இருந்தா திருட வந்துட்டு, ஒய்யாரமா கீழ படுத்துகிட்டு இளிக்க வேற செய்வ? எனக்கு கராத்தே தெரியவும் ஆச்சு! ஒரே கிக்குல கீழ சாய்ச்சுட்டேன். இல்லைனா என் போன், லேப்டாப்லாம் ஆட்டையப் போட்டுட்டுப் போயிருப்பல்ல! கிராமத்துல திருட்டுப் பயம்லாம் இல்ல, அதனால கதவுக்கு தாள்ப்பாள் இல்லைன்னு ஆண்ட்டி சொன்னத நம்பி படுத்தது தப்பாப் போச்சு! மாடு மாதிரி இருக்கியே, உழைச்சு சாப்டா என்னா? இப்படி திருடித்தான் பொழைக்கனுமா?” என கேட்டுக் கொண்டே முத்துக்காளையின் நெஞ்சில் ஓங்கி ஓங்கிக் குத்தினாள், அவன் மேல் அமர்ந்திருந்த தவமங்கை.

அவள் கொடுத்த குத்துக்கள் எல்லாம் தாய்லாந்து நாட்டில் கொடுக்கும் மசாஜ் மாதிரி இருந்தது போல! கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு சுகமாக கண்மூடி படுத்திருந்தான் காளை.

“இப்படிக் குத்துறேன்! எருமை மாட்டுல மழை பேஞ்ச கணக்கா படுத்துருக்கான் பாரேன்! திருட்டு ராஸ்கல்!”

“நாம எலிக்குட்டிப் பெத்துக்க வேணாம் எலிசபெத்து! புள்ளக் குட்டியே பெத்துக்கலாம். ஆசைக்கு ஒரு பொண்ணு, ஆஸ்த்திக்கு ஒரு பையன். அதுக்கு மேலலாம் உன்னைக் கஸ்டப்படுத்தமாட்டேன். சரியா? மாமனுக்கு அமுக்கி விட்டது போதும், இப்ப வந்து படுத்துக்க” என சொன்னவன் இரு கைகளாலும் அவளை அமுக்கிப் பிடித்து நெஞ்சில் சாய்த்து கட்டிக் கொண்டான்.

அவனின் இரும்புபிடியில் தவமங்கையால் அசையவே முடியவில்லை.

“விடுடா டேய்! ஆண்ட்டி, ஆண்ட்டி! காமாட்சி ஆண்ட்டி வாங்க” என இவள் கத்த,

“ஆத்தாவ கூப்டாத எலிசு! இதெல்லாம் நாலு சுவத்துல தான் நடக்கனும்” என சொல்லி இன்னும் இறுக்கிக் கொண்டான். போதையில் கூட இந்த விஷயத்தில் தெளிவாகத்தான் இருந்தான் நம் காளை.

இவள் போட்ட சத்தத்தில், தூங்கிக் கொண்டிருந்த காமாட்சி அரக்கப் பறக்க ஓடி வந்தார். அந்த ரூமின் தாழ்வாரத்தில் இருந்த லைட்டைப் போட்டவர் கண்டது கீழே படுத்தவாறு தவமங்கையைக் கட்டிக் கொண்டிருந்த தன் மகனைத்தான்.

“டேய் எரும மாட்டுக் காளை! விடுடா அவங்கள” இறுக்கி இருந்த அவன் கைகளிலேயே படபடவென பட்டாசைக் கொளுத்தினார்.

“வலிக்குது ஆத்தா!”

“நல்லா வலிக்கட்டும்! விடுடா அந்தப் புள்ளய” என அவன் மேல் இருந்து தவமங்கயைப் பிரித்து எடுத்தார்.

“இருத்தா நான் வரேன்” என அவளை விட்டுவிட்டுப் போய் ஒரு பக்கேட்டில் நீர் எடுத்து வந்து மகனின் முகத்தில் ஊற்றினார். தண்ணீரைத் துடைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், சரக்கினாலும் இப்பொழுது குளிர் நீர் பட்டதினாலும் சிவந்திருந்த கண்களை தேய்த்துக் கொண்டே இரு பெண்களையும் பார்த்தான்.

செக்க செவேலென சிவந்திருந்த அவன் விழிகளைப் பார்த்து லேசாக நடுக்கம் பிறக்க,

‘லைட்டுப் போட்டதும் தானே இவன் இம்மாம் பெருசா இருக்கான்னு தெரியுது! இவனையா கீழ தள்ளி மேல ஏறி உட்கார்ந்தேன்! நான் அடிச்ச அடிக்கு, திருப்பி ஒரே ஒரு அறை விட்டுருந்தான் என் மொகரையெல்லாம் பேந்துருக்குமே! அம்மாடி!’ என உடலை சிலிர்த்துக் கொண்டாள் மங்கை.

மலங்க விழித்த மகனை பார்த்து,

“ஒரு வாரமா படிச்சு படிச்சு தானே சொன்னேன், இந்த ரூமுக்கு டீச்சர் வராங்க, இந்தப் பக்கம் வராதேனு! குடுச்சுப்போட்டு வந்து இப்படி அலப்பறை பண்ணி வச்சிருக்க! நம்மல பத்தி டீச்சரு என்ன நினைப்பாங்க? எழுந்திருடா காளை! வீட்டுல போய் படு. மீதி ஏச்சுபேச்செல்லாம் நாளைக்கு நீ நிதானமா ஆனதும் வச்சிக்கறேன்! போ” என விரட்டினார்.

தட்டுத் தடுமாறி எழுந்தவன் முகத்தில் குற்ற உணர்ச்சியுடன்,

“ஓ டீச்சரா, அப்போ என் எலிசு இல்லையா! சாரி டீச்சர்! மன்னிச்சிருங்க! இனி இப்படிலாம் நடக்காது! சாரி டீச்சர்” என பல சாரிகளைக் கேட்டவன் முகத்தில் டன் கணக்காக சோகம்.

“தப்பா எடுத்துக்காதம்மா! முத்துக்காளைன்னு எனக்கு ஒரு மகன் இருக்கான்னு சொன்னேன்ல, அது இவன் தான். வெள்ளிக்கிழமையான போதும் இந்த கருமம் புடிச்ச சரக்கப் போட்டுட்டு வந்து கம்முன்னு படுத்துப்பான். இன்னிக்குத்தான் நீ யாருன்னு தெரியாம வம்பு பண்ணிட்டான். ரொம்ப நல்லவன்மா! அவனுக்காக நான் மன்னிப்பு கேக்கறேன்! மன்னிச்சிடு தாயி”

“சேச்சே! விடுங்க ஆண்ட்டி, என் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு! திருடன்னு நினைச்சு நான் தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். உங்க மகன் ஓங்கி ஒன்னு விடாமப் போனாரே!”

“அதெல்லாம் பண்ணமாட்டான். பாக்கத்தான் முரடன். மனசு பச்சக்குழந்தையாட்டாம்த்தா”

‘அந்தப் பச்சைக்குழந்தைதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன ரெண்டு குழந்தைப் பெத்துக்குவோமான்னு என் கிட்ட உளரிக்கிட்டு இருந்துச்சு!’ வாய் விட்டு சொல்லாவிட்டாலும், இனி அவனிடம் இருந்து தள்ளி நின்று பழக வேண்டும் என முடிவெடுத்தாள் தவமங்கை.

“பசியாற கட்டிட்டியா காமு?” என கேட்டப்படியே வந்தார் மச்சக்காளை. அங்கே அமர்ந்திருந்த தவமங்கையைப் பார்த்தவர்,

“டீச்சரம்மா, ராத்திரி நம்ம காளை ரவுசு பண்ணிப்புட்டானாமே! காலையில இருந்து நூறு தடவை என் கிட்ட சொல்லி சொல்லி மாஞ்சிப் போயிட்டான். நீ தப்பா எடுத்துக்காத தாயி. இனி உன் பக்கமே வர மாட்டான்” என மகனுக்காக பேசினார்.

“அதெல்லாம் பரவாயில்ல அங்கிள்”

“ஆங்கிலா? என்னை ஆத்தான்னு கூப்படற மாதிரி அவர அப்பான்னு சொல்லிப் பழகுத்தா!”

சரியென தலையாட்டினாள் தவமங்கை.

தூக்கு சட்டியை கணவரிடம் கொடுத்தவர், நான்கு இட்லிகளை தட்டில் இட்டு மங்கையிடம் நீட்டினார்.

“ஐயோ ஆத்தா!”

“சாப்புடறப்போ என்ன ஐயோ நொய்யோ! அப்டிலாம் பேசுனா ஒடம்புல ஒட்டாதுத்தா”

“எனக்கு நாலு இட்லி வேணா ஆத்தா! ரெண்டு போதும்” விட்டால் அழுது விடுபவள் போல முகத்தை வைத்திருந்தாள் மங்கை. இட்லி முத்துக்காளையின் உள்ளங்கை அளவுக்கு பெரிதாக இருந்தது. இதில் நான்கை சாப்பிட்டால் இரவு வரை அவளுக்குப் பசிக்காது. காமாட்சியிடம் கெஞ்சி கெஞ்சி கஸ்டப்பட்டு மூன்று இட்லிகளை முழுங்கி வைத்தாள். பொழுது நன்றாக விடிந்தவுடன், பள்ளிக்கு கிளம்பி சென்றாள். அன்று பள்ளி விடுமுறையானாலும், பாடத்திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல், சட்டதிட்டங்களை வரைமுறை படுத்துதல் என பல வேலைகள் காத்திருந்தன.

அந்தி சாயும் நேரம் வீட்டுக்கு வந்தவள், காளையை மட்டும் பார்க்கவேயில்லை. உணவை காமாட்சி அறைக்கே கொண்டு வந்து தர உள்ளேயே இருந்துக் கொண்டாள். மறுநாள் காலை குளிக்கப் போனவளுக்கு ஒர் ஆச்சரியம் காத்திருந்தது. குளிரைப் பழக்கிக் கொள்ளலாம் என தொட்டி தண்ணீரில் கை விட்டு அளைந்தவள் முகம் மலர்ந்துப் போனது. தொட்டியில் தண்ணீர் சூடாக இருந்தது.

நன்றாக சுடுதண்ணீர் ஊற்றி திருப்தியாக குளித்து விட்டு வந்தாள். கிணற்றடியில் நின்றிருந்த காமாட்சியிடம்,

“ரொம்ப தேங்க்ஸ் ஆத்தா சுடுதண்ணி வச்சி தொட்டியில ஊத்துனதுக்கு! ஹேப்பியா ஒரு குளியல போட்டேன் இன்னிக்கு” என சிரித்த முகமாக சொன்னாள்.

“சுடுதண்ணியா? நானா?” என அதிர்ந்தவர் கண்களை சுழற்றினார். மாட்டுக் கொட்டகையில் இருந்து முத்துக்காளை அவரையே தான் பார்த்தப்படி நின்றிருந்தான்.

‘அட ராமா! கதை இப்படி போகுதா! கிழிஞ்சது கிருஷ்ணகிரி’

அன்றிலிருந்து தினமும் காலை, தவமங்கைக்கு சுடுநீர் குளியல்தான்.

 

(அடிபணிவான்….)

error: Content is protected !!