Nan Un Adimayadi–Epi 7

அத்தியாயம் 7

உள்ளுக்குள்ள புழுங்குதடி

உச்சந் தல வேக்குதடி

கும்பக்கரை பக்கந்தானே

குளிக்கப் போவோம் ரெண்டு பேரும்

சீயக்காயும் தாரேன் நான் தேச்சு விடவும் வாரேன் (முத்துக்காளை)

 

காளையின் மாந்தோப்பில் கூடி இருந்தனர் மங்கையும் அவளது மாணவிகள் பத்து பேரும். இந்த சனிக்கிழமை மாலையைத்தான் கராத்தே பயிற்சிக்காக தேர்ந்தெடுத்திருந்தாள் தவமங்கை. ஆரம்பத்தில் கலாவுக்கு மட்டும் வீட்டில் கிணத்தருகே வைத்து சொல்லிக் கொடுப்பது என முடிவெடுத்திருந்தாள். அதற்கு காமாட்சியிடம் அனுமதியும் வாங்கி இருந்தாள். ஆனால் கலா அவளோடு சேர்த்து சிலரை கூப்பிட, அவர்கள் இன்னும் சிலரை கூப்பிட என பத்து ஆள் சேர்ந்து விட்டது.

பள்ளியில் உள்ள மைதானத்திலே ஒரு நாள் பயிற்சி கொடுத்தாள். அங்கே அந்த மறை வந்து நின்று இவளை வெறித்து வெறித்துப் பார்க்க இவளுக்கு வெறியே கிளம்பி விட்டது. அதோடு இவர்கள் பயிற்சி செய்வதை இன்னும் சிலரும் வேடிக்கைப் பார்க்க வர, மாணவிகள் வெட்கப்பட்டு நெளிந்தனர். கை காலை நீட்டி கற்றுக் கொள்ள சங்கோஜப்பட்டனர்.

வேறு வழி இல்லாமல்தான் அன்று மாலை காளையைத் தேடிப்போனாள் மங்கை. வீட்டில் எப்பொழுதும் சமையல்கட்டு, முற்றம், பாத்ரூம், தன் ரூம் என மட்டுமே நடமாட்டத்தை வைத்திருப்பவள், அன்று மாட்டுக் கொட்டகையில் அவன் குரல் கேட்க அங்கேயே பேசுவது என போனாள்.

கொட்டகையை நெருங்கும் போதே காளையின் கொஞ்சும் குரல் இவள் செவிப்பறையை மோதியது.

“என் பவுனுக்குட்டிடி நீ! என் பட்டுச் செல்லம்! வெள்ளாவியில போட்டு வெளுத்த மாதிரி என்னா வெள்ளையா இருக்கடீ நீ! என் வெள்ளச்சி! என் ஆசை குள்ளச்சி” என கன்னுக்குட்டியைக் கொஞ்சிக் கொண்டிருந்தவன், கையை ஆட்டி ஆட்டி பாட வேறு செய்தான்.

“அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும்

அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ

ட்ரியோ ட்ரியோ ட்ரீயோ ட்ரீயோ ட்ரூ”

துண்டை தலையில் கட்டி வேட்டியை முட்டிக்கு மேல் மடித்து விட்டிருந்தவன் கன்னுகுட்டியைத் தடவிக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அதன் முகத்துக்கு உம்மா,உம்மாவென முத்தம் வேறு வைத்துக் கொண்டிருந்தான்.

மகன் செய்யும் சேட்டைகளையெல்லாம் பக்கத்தில் இருந்த திண்டில் அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தார் காமாட்சி. மச்சக்காளையோ சாணி அள்ளிக் கொண்டிருந்தார்.

குடும்பமே அங்கிருக்க, அவர்களை தொல்லை செய்ய வேண்டாமென வந்த வழியே மெதுவாகத் திரும்பினாள் மங்கை. அதற்குள் காமாட்சி மகனை வறுத்தெடுக்க ஆரம்பித்திருந்தார்.

“உனக்கு காளைன்னு பேரு வச்சதுக்கு, இன்னும் கன்னுக்குட்டிய கொஞ்சிக்கிட்டு கெடக்கற! காலாகாலத்துல கண்ணாலம் கட்டி இருந்தா இந்நேரம் புள்ளக் குட்டிய கொஞ்சிக்கிட்டு இருந்துருக்கலாம்! ஏன்டா இந்த அழிச்சாட்டியம் பண்ணுற? நீ புடிச்ச மாட்டுக்கு மூனு காலுன்னு நிக்கறதெல்லாம் சரியில்ல சொல்லிப்புட்டேன். சின்னப்புள்ளயில இருந்து நீ சொல்லறதுக்கெல்லாம் தலையாட்டறோம்னு இதுக்கும் அப்படியே இருந்துடுவோம்னு நெனைச்சிட்டியா? நான் ஸ்கோல் போகல, உங்க கூட வெவசாயம் பார்க்கறேன், அக்கா படிக்கட்டும்னு வந்து நின்னப்போவே நாலு போட்டு ஸ்கோலுக்கு தொரத்திருக்கனும். மகனுக்கு இந்த வயசுலயே பொறுப்பப்பாரேன்னு எங்க கூடவே வச்சிக்கிட்டு வேலை வேலைன்னு அலைக்கழிச்சிட்டோம்! அப்போ ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் இன்னும்தான் மாடா உழைக்கற! அக்கடான்னு உக்கார, தலை கோத, மடி சாஞ்சுக்கன்னு ஒரு தொணை வேணாமாடா காட்டுப்பயலே! அந்த சரசாவுக்கும் ஒனக்கும் பத்துக்கு ஏழு பொருத்தம் பொருந்தி வந்துருக்குடா! கண்ணாலத்த பேசி முடிக்கவா?”

“ஏத்தா எப்ப பாரு சரசா சரசான்னு என் உசுர எடுக்கற! அவளுக்கு இங்கிலீசுல நாலு வார்த்தை நச்சுன்னு பேச தெரியுமா? இல்ல எழுத்துக்கூட்டிப் படிக்கத்தான் தெரியுமா?” என கடுப்பாக கேட்டான் காளை.

“ஒன் மவன் இங்கிலீபீசுல படிச்சு இஞ்சினீயரா இருக்காரு! அவருக்குப் போயீ சரசா கொரசான்னு பொண்ணு பாக்கற! சுத்த கூறு கெட்ட கெழவியா கெடக்கடி நீ!” என மகனை நக்கலடித்தார் மச்சக்காளை.

“தகப்பா! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிப்புட்டேன்! ஒரு வாரமா பேசாம இருந்த ஆத்தா பேசிருச்சுன்னு பட்டுன்னு அது கட்சி சேர்ந்துட்டியா? எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டி, பொண்டாட்டிக்கெல்லாம் பொண்டாட்டின்னு அந்த சீரியல்காரன் மாதிரி ரவுசு காட்டாதே! காண்டாகுது”

“அததான்டா நானும் சொல்லறேன்! நீயும் அந்த சரசா புள்ளய கட்டிக்கோ! பொண்டாட்டி போண்டா டீன்னு அவ பின்னாலேயே சுத்து! நானும் ஒங்கப்பனும் இப்படியே காசி ராமேஸ்வரம்னு ஒரு சுத்து போயிட்டு வரோம்!”

“காமு, அப்படியே கோவாக்கும் போலாம்டி”

“காடு வாவான்னுதாம், இந்த கெழத்துக்கு கோவா கேக்குது! வகுந்துப்புடுவேன் வகுந்து! எனக்குன்னு வாய்ச்சதும் சரியில்ல, நான் பெத்ததும் சரியில்ல” மச்சக்காளைக்கு அனல் பார்வையைக் கொடுத்தார் காமாட்சி.

தன் தகப்பனைப் பார்த்து சிரிப்புடன், இடது கையை வலது அக்குளில் வைத்து வலது கையை மூன்று முறை ஆட்டி

“அஸ்க்கு புஸ்க்கு! கோவாவாம் கோவா! ஆத்தா குடுத்துச்சா ராவா!!!” என இடி இடியென சிரித்தான்.

ரூமுக்குள் போக முனைந்தவள், இவர்கள் பேச்சை மென்னகையுடன் கேட்டப்படி அங்கேயே நின்றிருந்தாள்.

“காளை, கடைசியா கேக்கறேன்! சரசாவ கட்டிக்கிறியா இல்லையா?”

“நானும் கடைசியா சொல்லறேன் ஆத்தா! நான் கட்டைல போற வரைக்கும் கன்னி கழியாம இருந்தாலும் இருப்பேனே ஒழிய என் லட்சியத்த உட்டுக்குடுக்க மாட்டேன்”

காமாட்சிக்கு கோபம் அணைகடந்தது.

“ஒனக்கு நாலு வார்த்தை இங்கிலிபீசு தெரியுமாடா? வந்துட்டான் படிச்ச பொண்ணு வேணும், தடிச்ச பொண்ணு வேணும்னு”

“மதர்! வாட் கொஸ்டீன் யூ ஆஜ்கீங் மீ? சோ மேனீ இங்கிலிஸ் ஐ க்நோ! மேங்கோ, பார்மிங், யூரியா, வாட்டர், சீட், பிக்கல், மேங்கோ ஜீஸ், மேங்கோ பல்ப்பு, ஆல் இங்கிலிஸ் ஐ க்நோ!”

அவனுக்கு தெரிந்திருந்த வார்த்தைகள் கூட அவன் வேலையை சுற்றியே இருப்பதைக் கேட்டு புன்னகை விரிந்தது மங்கைக்கு.

“தொரை என்னமா இங்கிலீசு பேசுது” என அதையும் நக்கலடித்தார் மச்சக்காளை.

“தகப்பா! இப்போத்தான் ஆத்தா சண்டை முடிஞ்சு சமாதானம் ஆகிருக்கு! கள்ளுக்கடை மேட்டர இழுத்துவுட்டேன் அம்புட்டுத்தான்! மறுபடியும் புட்டுக்கும்! சோ பீ கேர்பூல்” என தகப்பனை எச்சரித்தான் காளை.

“அடேய், அடேய்! ஏன்டா!” என பதறினார் மச்சக்காளை.

காமாட்சியின் பார்வை கூர்மையாக தன் கணவனின் மேல் பதிந்தது.

“என்ன சமாச்சாரம்?”

“ஒன்னும் இல்ல காமு! ஒன்னுமே இல்ல!”

மகனைப் பார்த்தார் காமாட்சி.

“யூ சீ மதர்! டாடி டிரீப்பூ கோவிங்”

“தமிழ்ல சொல்லித் தொலைடா”

“இதுக்குத்தான் இங்கிலிஸ் தெரிஞ்ச பொண்ண கட்டி வைன்னு சொன்னேன்! இப்போ பாரு நான் பேசரது உனக்கு புரியாத மாதிரியே, நாளைக்கு அந்த சரசாவும் முழிச்சிக்கிட்டு நிக்கும்! வெரி டிரபிள் யூ க்நோ”

அவர் முறைக்கவும் கைத்தூக்கி சமாதானம் செய்தவன்,

“நம்ம டாடியும் அவர் கள்ளுக்கடை கேங்கும் கோவாவுக்கு ட்ரீப் பிளான் பண்ணுறாங்க ஆத்தா! ஒரு மாசமா கள்ளுக்கடையில அத பத்தித்தான் பேச்சு” என போட்டு உடைத்தான் மகன்.

“ஐயோ! உன் மேல சத்தியமா நாங்க அங்கிருக்கற மாருதி கோயிலுக்குத்தான் போகப் போறோம் காமு! நம்ம காளைக்கு கல்யாணம் ஆகனும்னு வேண்டுதல் வைக்கப் போறோம்! நம்புடி காமு” மச்சக்காளைக்கு டப்பா டான்ஸ் ஆடியது.

“அதாவது கட்டை பிரம்மச்சாரி அனுமாரு கோயிலுல போய் என் மவன் கல்யாணத்துக்கு வேண்டுதல் வைக்கப் போறீங்க?”

தலையை எந்தப் பக்கம் ஆட்ட என தெரியாமல் எல்லாப் பக்கமும் ஆட்டினார் மச்சக்காளை. பளிச்சென முகத்தில் வந்து பட்டுத் தெறித்தது சாணி. குறிப்பார்த்து வீசி இருந்தார் காமாட்சி.

“அடி சண்டாளி!” கோபம் கொப்புளிக்க தன் கையில் இருந்த சாணியை இவரும் காமாட்சி புறம் பந்தாய் உருட்டி அனுப்ப, அதுவும் குறி தவறி அவர் தோளில் பட்டுத் தெறித்தது.

“சபாஷ், சரியான போட்டி” என காளை சொல்லி வாய் மூடவில்லை, அவன் முகத்துக்கு இரண்டு பக்கத்தில் இருந்தும் பறந்து வந்தது சாணி.

அவன் திகைத்துப் போய் விழிக்க, கலகலவென சிரிப்பு சத்தம் கேட்டது. மூவரும் சண்டையை விட்டுவிட்டு சத்தம் வந்த திசையைப் பார்த்தனர். அங்கு தவமங்கை சிரித்தப்படி நின்றிருந்தாள். அசடு வழிந்தப்படி நின்றிருந்த மூவரையும் பார்த்தவள், சிரிப்புடனே தான் வந்த காரியத்தைப் பற்றி சொன்னாள். துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்ட காளை, தன் தோப்பிலே கராத்தே பயிற்சிக்கு இடம் ஒதுக்கித் தருவதாக ஒத்துக் கொண்டான். அவள் முகத்தை நேராகப் பார்க்காமல்தான்.

தோப்பில் அவர்களுக்காக ஓரிடத்தை ஒதுக்கி இருந்தான் காளை. நல்ல காற்றோட்டமாகவும், சுத்தமாகவும் இருந்தது அவ்விடம். காற்றில் மாங்காய் வாசம் நாசியை நிரட, வெயில் அதிகம் படாதபடி நிழலாக இருந்தது. இடத்தைக் காட்டிவிட்டு தன் வேலையைப் பார்க்க போய் விட்டான் காளை. சுற்றிலும் வேடிக்கைப் பார்க்க யாரும் இல்லாததால் மாணவிகளும் ரிலேக்‌ஸாக உணர்ந்தனர். முதலில் உடலை தளர்த்த உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவள், பின் கராத்தே பேசிக்கை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். மானவிகள் சுடிதாரோடு வந்திருக்க, இவள் டீ செர்ட் ட்ராக் சூட்டில் வந்திருந்தாள்.

கை விரல்களை எப்படி மடக்கிக் கொள்டவது, காலை எப்படி நீட்டி நிற்பது என செய்து காட்டி, பின் ஒவ்வொருவராக செய்வதை சுற்றிப் பார்த்துத் திருத்தினாள் தவமங்கை. எதற்காக கராத்தே கற்றுக் கொண்டோம் எனும் எண்ணம் மனதில் தோன்றி அவளை வதைக்கவும் செய்தது. அந்த நினைவுகளை மூட்டைக் கட்டி மூலையில் போட்டவள், முனைந்து பயிற்சியைக் கொடுக்க ஆரம்பித்தாள். அரை மணி நேரமானதும் ரெஸ்ட் என சொல்லி கொண்டு வந்திருந்த துண்டால் முகத்தைத் துடைத்தவள் முன்னே ஒரு டம்ளர் நீட்டப்பட்டது.

அவள் முன்னே காளைதான் நின்றிருந்தான்.

“மாங்கா ஜூஸ் டீச்சர்! இதமா இருக்கும், குடிங்க” என நீட்டியப்படியே நின்றிருந்தான்.

“எதுக்கு ஜூஸ்?”

“நம்மூரு புள்ளைங்க தகிரியமா இருக்கனும்னு இதெல்லாம் சொல்லிக் குடுக்கறீங்க! நீங்க தெம்பா இருந்தா தானே, தெம்பா சொல்லிக் குடுக்க முடியும்” என சொல்லியவன் இன்னும் கையை நீட்டியப்படியே இருந்தான். பார்வை அவள் பின்னால் இருந்த மாங்காய் மரத்தில் இருந்தது.

“முகத்தப் பார்த்தே பேச மாட்டீங்களா?” என சலித்துக் கொண்டவள் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

மாணவிகளுக்கு செவல ஜூஸ் சப்ளை செய்துக் கொண்டிருந்தான்.

அவள் அப்படி சொன்னதும், மெல்ல மங்கையின் முகத்தைப் பார்த்தான் காளை. பயிற்சி செய்ததில் முகம் சிவந்துக் கிடக்க, முடி கலைந்துப் போய் பார்க்கவே வாரி அணைத்துக் கொள்ளும் அளவுக்கு அழகாய் இருந்தாள். சட்டென பார்வையைத் திரும்பவும் மாங்காய் மரத்துக்கு மாற்றினான் காளை.

“ஜூஸ் ரொம்ப ருசியா இருக்கு மிஸ்டர் காளை”

முகம் மலர்ந்துப் போனது அவனுக்கு.

“நம்ம தோட்டத்து மாங்காய்ல நானே ஜீஸ் போட்டேன் டீச்சர்.”

“உங்க தோட்டத்து மாங்காய்னு சொல்லுங்க”

முகம் வாடிப் போனது அவனுக்கு.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்னு கமலகாசன் சொல்லிருக்காரு டீச்சர். எல்லா ஊரும் நம்ம ஊரு, எல்லா மக்களும் நம்ம சொந்தக்காரங்க டீச்சர். எல்லா ஊரும் நம்ம ஊரா இருக்கறப்போ, என் மாங்கா தோப்பு, உன் மாங்கா தோப்புன்னு ஏன் பிரிவினை டீச்சர்?”

அவன் சொல்லியதில் சிரிப்புப் பொத்துக் கொண்டு வர குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் புரை ஏறியது அவளுக்கு. அவள் இரும, இவன் அவசரமாக தலையைத் தட்டி, முதுகை நீவிக் கொடுத்தான்.

“பாத்து டீச்சர், பாத்து”

“விடுங்க மிஸ்டர் காளை” என்றவள் அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.

அவள் இருமவும் யோசிக்காமல் தட்டி தடவி இருந்தான் காளை. அவள் விலகவும் தான் அவன் செய்தது உரைத்தது. தாமா டீச்சரைத் தொட்டோம், இந்தக் கைகளா அவள் முதுகைத் தடவியது என புலகாங்கிதம் அடைந்தவன் தன் இரு கைகளையேப் பார்த்தப்படி நின்றிருந்தான். (நோட் திஸ் பாயிண்ட்! காளை ரெண்டு வாரத்துக்குக் கைய கழுவ மாட்டான்.)

“கமான் கேர்ல்ஸ்!’ என அவள் பயிற்சியைத் தொடங்க ஆரம்பிக்க, கனவில் நடப்பவன் போல கைகளையேப் பார்த்தப்படி திரும்பி நடந்தான் காளை.

வெள்ளிக்கிழமையும் வந்தது. இனிமேல் குடித்தால் செவல வீட்டிலேயே தங்கி விடுவேன் என சத்தியம் செய்திருக்கிறான் என காமாட்சி சொல்லி இருக்க, தைரியமாக பாத்ரூம் போய்விட்டு வந்தாள் மங்கை. கிணற்றருகே திண்டின் மேல் அமர்ந்திருந்த காளையைப் பார்த்ததும் பகீரென இருந்தது அவளுக்கு. அவசரமாக ரூமுக்கு நடையை எட்டிப் போட்டாள் அவள்.

“டீச்சர்”

அவனின் அந்த அழைப்பில் தான் சுவாசம் சீரானது அவளுக்கு. முத்துக்காளைதானே டீச்சர் என்பான். மொரட்டுக்காளை எலிசு எனவல்லவா கூப்பிடுவான்! அமைதியாத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“இத்தனை வருஷத்துல இதுதான் மொத வெள்ளி நான் குடிக்காம வரது டீச்சர்”

பதில் பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு அவனையேப் பார்த்தப்படி நின்றாள் அவள். அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவன்,

“என்னம்மோ தெரில டீச்சர்! செவல வீட்டுல படுக்கப் புடிக்கல. நம்ம வீடு இருக்க, நம்ம வீட்டு ஆளுங்க இருக்க எதுக்கு அங்க போய் படுக்கனும்! அதான் குடிக்காம வந்துட்டேன்!”

நம்ம வீட்டு ஆளுங்க என அவளையும் சேர்த்து சொன்னது போல இவளுக்குத் தோண,

“உங்க வீடு, உங்க வீட்டு ஆளுங்க” என திருத்தினாள்.

“ம்ப்ச்! போங்க டீச்சர்! இதுதான் படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் உள்ள வித்தியாசம்! நீங்க எல்லாத்தையும் நான் நான்னு பிரிச்சுப் பார்ப்பீங்க! நாங்க எல்லாத்தையும் நாம நாமன்னு சேர்த்துப் பார்ப்போம்” என சொன்னவன் மெல்ல எழுந்துக் கொண்டான். பெருமூச்சை விட்டுக் கொண்டவன்,

“வாய் நமநமங்குது டீச்சர்! கல்ப்பா வுட்டு பழகிருச்சுல்ல, அதான்! வெள்ளின்னாலே வெடுக் வெடுக்குன்னு கைகாலுலாம் ஆடுது! நான் போய் இந்த வாய் நமச்சலுக்கு ஊறுகாயையாச்சும் நக்கிட்டுப் படுக்கறேன்” என மெல்ல அடுப்பங்கரைக்கு நகர்ந்தான்.

“குட்டு நைட்டு டீச்சர்! எனக்கு பேட்டு நைட்டு” என முன் பாதியை சத்தமாக சொன்னவன் பின் பாதியை முனகிக் கொண்டுப் போனான்.

சன்ன சிரிப்புடன், கடந்து போனவனையேப் பார்த்திருந்தாள் மங்கை.

திங்கள் அன்று வேலையெல்லாம் முடித்து விட்டு வந்தவன் கண்ணுக்கு தவமங்கை தென்படவே இல்லை. எப்பொழுதும் என்ன வேலை செய்தாலும் அவன் கண்கள் அவ்வப்பொழுது தென்படும் அவள் பிம்பத்தை கண்களில் கண்டு உள்ளத்தில் பதிந்துக் கொள்ளும். இரவாகியும் சாப்பிட கூட அவள் வராமல் இருக்க, ஆத்தாவிடம் கேட்கவும் இவனுக்குப் பிடிக்கவில்லை. காமாட்சி கவனிக்கா வண்ணம் மெல்ல நழுவி அவள் அறை வாயிலுக்குப் போனான்.

“டீச்சர்! டீச்சர்” என மெல்லிய குரலில் அழைத்தான் காளை. உடம்பு எதாவது முடியாமல் படுத்திருக்கிறாளா என தோன்ற, கதவை தட்டினான். கதவு தானாகவே திறந்துக் கொண்டது. அங்கே அவன் கண்ட காட்சியில்,

“ஆத்தா!!!!!!!” என பெருங்குரல் எடுத்துக் கத்தினான் முத்துக்காளை.

 

(அடி பணிவான்)