Nazhuvum Idhayangal 18
Nazhuvum Idhayangal 18
பகுதி 18
அடுப்படியில் இருந்து வெளிப்பட்ட மாரீஸ்வரி, இருவரையும் மாறி மாறி பார்த்தவர், ஹர்ஷாவை சந்தேகப் பார்வை பார்த்தப்படி “ப்ரியா என்னமா? என்ன ஆச்சு? ஏன் கண்கலங்குற?” எனக் கேட்க, அவள் பதில் சொல்லாமல் மௌனம் காக்க, “என்ன இந்த பய எதுவும் சொன்னானா?” என மீண்டும் ஹர்ஷாவை முறைக்க முயன்று கொண்டே அவளிடம் கேள்வியைக் கேட்டார்.
அவளோ இல்லை என்பது போல் மறுத்து தலையாட்ட, “பின்ன என்னம்மா ஆச்சு? தல வலிக்குதா?” எனக் கேட்க, என்ன சொல்வது என தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவரே ஒரு உபாயம் அவளுக்கு அளிக்கவும், அதன்படியே ஆமென தலையசைத்தாள்.
“ரொம்ப வலிக்குதா கண்ணு…” என வாஞ்சையாய் அவள் தலையை தடவி விட்டவர், “சாப்பிட்டுட்டு தூங்கு கண்ணு. சரியா போகும்… வலி குறைஞ்சிடும்” என அவளுக்கு முதலில் சிற்றுண்டியை வைத்து கொடுத்தார். அதன் பின்னே ஹர்ஷாவுக்கு உணவு அளித்தார்.
“ஹர்ஷா… நீயும் சாப்பிட்டுட்டு போய் ப்ரியாவை தூங்க வை” என உபாயம் அளித்தவரே, குண்டைத் தூக்கி போட, சாப்பிட்டு கொண்டிருந்த ப்ரியா திடுக்கென நிமிர்ந்தாள்.
ஏனெனில் ப்ரியா, தான் தன் அம்மாவிடமோ அல்லது உதயாவுடனோ படுப்போம் என்று நினைத்திருந்தால், ஆனால் இப்படி தன்னிடம் ஒட்டாமல் இருப்பவனிடம் போய் தன்னைப் பார்த்து கொள்ளுமாறு சொன்னால்… அதுவும் ப்ரியா போன்றவள், திடுக்கிடாமல் இருந்தால் தான் அதிசயம்.
ஹர்ஷா சாப்பிட்டு எழுந்தவுடன், “ப்ரியா வர்றியா? வா போய் படுக்கலாம்” என மிக சாதரணமாய் சகஜமான கணவனாய் கேட்டான். அவனுக்கு ப்ரியாவின் எண்ணம் தெரியாமல் இல்லை. ஏனெனில் ஹர்ஷா முத்துவை பார்க்காமல், அவள் மீது வஞ்சம் கொள்ளாமல், இன்னும் பழைய ஹர்ஷாவாகவே இருந்திருந்தால், அவனும் இதையே தான் யோசித்து, அவனே ப்ரியாவின் அம்மாவிடம் போய் அவளை ஒப்படைத்திருப்பான்.
ஆனால் இப்பொழுது புதிய ஹர்ஷாவாய், ஒப்பனை செய்த அவதார புருஷனாய் இருப்பதால், அவளிடம் “இன்னும் அம்மாட்ட போய் படுக்க, நீ என்ன சின்னப் பிள்ளையா?” என அவளுக்கு மட்டும் கேட்குமாறு குரலை தாழ்த்திக் கேட்டான்.
ப்ரியா இதற்கும் கண்ணை அகட்டி அவனை ஆச்சரியப் பார்வை பார்க்கவும், அவனோ ரொம்பவும் நிதானமாய் கண்ணடித்தான். ப்ரியாவிற்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. ‘இது நிஜம் தானா? இல்லை என் மண்டையில் அடிப்பட்டதால் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, என் கண்ணுக்கு தான் அப்படி தோன்றுகிறதோ?’ என குழம்பி தான் போனாள்.
“என்ன ப்ரியா யோசனை? வா போகலாம்” என அவளின் முழங்கையைப் பற்ற நெருங்கினான் ஹர்ஷா. அவளோ அனிச்சை செயலாய் சட்டென விலகி, அவன் பின்னே நகர்ந்து, போகலாம் என்பது போல் தலையசைத்தாள்.
அவன் பின்னே சென்றாலும், அவளுள் ஆயிரம் கேள்விகள் அதிவேகமாய் முளைத்து கொண்டிருந்தன. அப்போது இவர்கள் செல்லும் வழியில் நவீனும், விபினும் ஓடிக் கொண்டு வர, ப்ரியா நினைவுலக்த்திற்கு வந்து, “டேய்… குட்டீஸ் எங்கடாமா போறீங்க? தூங்கலையா? வாங்க தூங்க போகலாம்” என அவர்களில் ஒருவனைப் பற்றி நிறுத்தி, தூக்க போனாள்.
ஆனால் அவள் செயலை அந்த வாண்டு தடுப்பதற்குள், “ஏய் ப்ரியா கொஞ்ச நாளைக்கு இப்படி குனிஞ்சு பசங்கள எல்லாம் தூக்காத. முத ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடு.” என வாண்டுகளின் தந்தையே தடுக்க, அதற்கு பதில் அளிப்பது போல், லொக் லொக்கென இருமிய கார்த்தி, ‘யெப்பா… சாமீ… உலக மகா நடிப்புடா சாமீ…’ என நினைத்தப்படி, அவனைப் பார்த்து கொண்டே தன் தலையை தட்டினான்.
அவனின் எண்ணம் ஹர்ஷாவுக்கு புரிய, “டேய்… தண்ணிய குடி… தண்ணிய குடி” என அழுத்தமாய் கூற, “வேணாம்டா சாமீ… நா எங்க வீட்டுலேயே போய் குடிச்சுக்குறேன்” என கூறியவாறே, எழுந்து மற்றவர்களிடம் விடைபெறாமலே சென்று விட்டான்.
அவன் சொல்லிக் கொள்ளாமல் போவதை, வெளியே காற்றாட அமர்ந்திருந்த கணேசன் ஒரு தினுசாய் பார்க்க, “லூசுப்பய இவேன் எப்பவும் இப்படி தான்… கொஞ்சம் அரவேக்காடு” என கணேசனின் எண்ணம் புரிந்து ரமணன் பதில் அளித்தார்.
அவரின் பதிலில் வெளியேறிய கார்த்தி திரும்பி பார்த்து, ‘சொல்லுங்க சொல்லுங்க… ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க பையனோட சேர்ந்தவனுக்கு எல்லாம் இதான் கதி’ என எண்ணியபடி, அவரை கடைக்கண்களால் ஏற இறங்க பார்த்து விட்டு சென்றான்.
“ஏய் என்னடா பார்வை?” என தன் தோளில் இருந்த துண்டை அவன் பக்கம் ஒரு வீசு வீசினார் ரமணன். “வேணா… கல்ல விட்டு எறிஞ்சிருவேன்” என அவன் தன் ஆள்காட்டி விரலை ஆட்டிச் சொல்ல, அருகில் இருந்த கணேசன் சிரிக்க, “ஏலேய்… இங்க வாடா… என்னடா ஆச்சு உனக்கு? சாப்பிட்டியாடா” என விசாரிக்க, “உம்ம்ம்… ம்ம்ம்” என வாயை சுழித்து விட்டு “எங்க வீட்டுக்கு போயே… சாப்பிட்டுக்குறேன்” என சென்று விட்டான்.
இங்கு மேலே அறைக்குள் வந்த ப்ரியாவுக்கு, ராஜ உபச்சாரம் செய்தான் ஹர்ஷா. அவளை கட்டிலில் அமர செய்து, மருந்து உறையை பிரித்து, நிறைய மாத்திரைகளுக்கு மத்தியில் இரவு உட்கொள்ள வேண்டிய மாத்திரையை கவனமாய் தனியே எடுத்து, பிரித்து அவள் கைகளில் கொடுத்து, தண்ணீர் குவளையையும் எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
இதற்கு மேல், ப்ரியாவிற்கு எப்படி இருந்தது என கேட்கவா வேண்டும்? அவள் கனவுலகத்தில்… இல்லை இல்லை அவனுடன் காதல் உலகத்தில் கைகோர்த்து ஒரு ஜோடிப் பாடலே பாடி முடித்திருப்பாள். ப்ரியாவிற்கு அவனின் செயல் இன்ப அதிர்வுகளை அவளுள் நிமிடத்திற்கு நிமிடம் அல்ல, நொடிக்கு நொடி அனுப்பிக் கொண்டே இருந்தது.
அடுத்து அவன் என்ன செய்ய காத்திருக்க போகிறானோ? என இன்பமான பதற்றம் ஏற்பட, அவன் கண்ணோடு தன் கண்களை கலக்க விட்டாள். அவனோ தன் கைகளை அவளின் இரு தோள்களுக்கு கொண்டு செல்ல… ப்ரியாவோ அவன் செய்கையில் இதயம் படபடத்தாலும், அவனின் முகத்தில் பதித்த தன் பார்வையை அவள் விலக்கிக் கொள்ளவில்லை.
ஹர்ஷாவோ சாதாரணமாய் அவளை தொட்டு பேசி, உரிமையாய் அதட்டினாலும், இப்போது அவள் பார்க்கும் பார்வைக்கு பதில் கொடுக்க முடியாமல்… அப்பார்வையின் மொழியும்… எதிர்பார்ப்பும்… நோக்கமும்… புரிந்தாலும், ஏதோ ஒன்று அவனைத் தடுக்க, கைகளை அவளின் தோள் வரை கொண்டு சென்றவனால், மேற்கொண்டு அவளைத் தொட முடியவில்லை.
அதனால் சட்டென கைகளை இழுத்துக் கொண்டு நிமிர்ந்தவன், அவளின் முகம் பார்த்து என்ன சொல்வது என புரியாமல், தடுமாறினான். ஆனால் அவளைப் படுக்க வைக்க தானே முயன்று கொண்டிருந்தோம் என்பது நியாபகம் வர, “படு ப்ரியா” என அன்பாய் கட்டளையிட்டான்.
அவளும் அவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு முன், தோள் வரை வந்த கைகள் ஏன் தொடாமல் விட்டு செல்கிறது? என ஒரு வினா பார்வைப் பார்த்தப்படியே படுத்துக் கொண்டாள். ஏற்கனவே அவளின் பார்வையில் தடுமாறிக் கொண்டிருந்தவன், அவளின் இந்த வினா பார்வைக்கு விடை தெரியாமல் இல்லை… ஆனால் விடைக் கொடுக்க முடியாமல் திக்கி தான் போனான்.
ப்ரியா போன்ற சாதுவை, காதல் எனும் போர்வையில் அழகாய் மடக்கி, அடக்கி விடலாம் என அசால்ட்டாய் எண்ணியிருந்தான். ஆனால் இப்போதோ, அவளின் காதல் போர்வைக்குள்… உள்ளே செல்லவும் முடியாமல், வெளியே அவளின் பார்வை தீட்சண்யத்தை தாங்கவும் முடியாமல், கட்டிலின் மறுபக்கம் அமர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தான்.
நெடுநேரமாகியும் அவன் அமர்ந்திருப்பதைக் கண்டவள், “என்னங்க… தூங்கலையா?” எனக் கேட்டாள். அப்போது தான் சிந்தனையில் இருந்து கலைந்தவன், “ம்ம்???” எனக் கேள்வி கேட்டான்.
“இல்ல… தூங்கலையான்னு கேட்டேன். ரொம்ப நேரமா உட்கார்ந்து இருக்கீங்களே…” எனக் கூற, “ம்ம்… படுக்கணும்” என சொல்லியப்படியே படுத்தான்.
முதலில் நேராக படுத்திருந்தவன், பின் மெல்ல ப்ரியா பக்கம் பார்த்தவாறு திரும்பி ஒருக்களித்து படுத்தான். தோள் வரை போர்த்தி படுத்திருந்த ப்ரியாவை கீழிருந்து மேல் வரை பார்வையாலேயே முன்னேறி அங்குலம் அங்குலமாய் அளந்து கொண்டிருந்தவன், அவளின் முகத்தில் மையமிட்டு கொண்டான்.
‘இவளை ரொம்ப சாதாரணமாய் எண்ணி விட்டோமோ? இவளின் ஒரு சொக்கு பார்வைக்கே தடுமாறி போகிறோமே… இவளை நாம் ஆள நினைப்பது தவறோ? இவளிடம் ஏதோ ஒன்று இருக்கிறதோ?’ என ப்ரியாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
உறக்கம் கலைந்த ப்ரியா, திடீரென கண் விழித்தவள், தன் கணவன் தன்னை உற்று நோக்குவதைக் கண்டு, புருவத்தை உயர்த்தி, தலையை லேசாய் மேல்நோக்கி ஆட்டி, கண்களாலேயே என்னவென்று கேள்வி கேட்டாள்.
அவனோ ஒன்றுமில்லை என்று வேகமாய் என்பதை விட அவசரமாய் தலையை மறுத்து இடவலமாய் லேசாக ஆட்டினான்.
அதைக் கண்ட ப்ரியாவுக்கு சிரிப்பு வர, அதை மனதுக்குள் அடக்கினாள். ஆனாலும் துளிர் விடும் விதை போல, அகத்துள் வந்த சிரிப்பு முகத்திலும் துளிர் விட… அதை வாட விடாமலே, மீண்டும் புருவத்தை சுருக்கி ‘அப்புறம் ஏன் தூங்கவில்லை?’ என மொழியாமல், கண்களை மூடி திறந்து கேட்டாள்.
அவனோ இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், முகவாயை உயர்த்தி, இதழ்களை லேசாக பிதுக்கி யோசிப்பவன் போல பாவனை செய்து, பின் அவளைப் போலவே கண்களை மூடி திறந்து, இரு தோள்களையும் லேசாய் உயர்த்தி இறக்கினான்.
இதற்கு என்ன அர்த்தமென்றால், ‘தூக்கம் வரவில்லை அதனால் தூங்கவில்லை’ என்று அர்த்தமாம். ஆனால் இதை சரியாக புரிந்து கொண்ட ப்ரியா, ஏதோ யோசனையை கண்டுப்பிடிப்பவள் போல், நாடியில் ஆள் காட்டி விரலை வைத்து, நாடியை மூன்று முறை தட்டி, பின் ஏதோ யோசனை வந்தவள் போல், கண்களை அகட்டி, அந்த விரலை தூக்கி தன் நெஞ்சில் வைத்து, பின் வாயில் வைத்து… பின் அவனை நோக்கி நீட்டினாள்.
அதற்கோ அவன் தன் இரு கைகளையும் குவித்து, கும்பிட்டு… அப்படியே ஒன்று சேர்ந்த அந்த இரு கைகளையும் தன் முகத்திற்கு அடியில் வைத்து கண்களை இறுக மூடி, நிஜமாகாவே உறங்க ஆரம்பித்து விட்டான்.
ஆனால் இப்பொழுதோ ப்ரியாவிற்கு தான் உறக்கம் வராமல், வார்த்தைகள் அற்ற சம்பாஷணையை… மொழி பெயர்க்கப்படாத அன்பை… வசனமே கலக்காத காதலை… ஆம்… காதல் தான்… இது ஒரு ஆரோக்கியமான காதலுக்கு… அன்புக்கு… ஆரம்ப புள்ளி என எண்ணி மகிழ்ந்தாள்..
மேலும், அவள் கடைசியாய் ‘நீங்க தூங்க, நான் வேணா பாடவா?’ என கேட்க, அதற்கு அவன் ‘ஆளை விடு தாயே நானே தூங்குறேன்’ என சொல்லாமல் சொன்னதை, அவனின் முகபாவத்தை எண்ணி… மனதிற்குள்ளே ரசித்து ரசித்து மகிழ்ந்தாள். அதன் வெளிப்பாடாய் அவள் முகம் மலர்ந்தார் போல் புன்னைகையுடனே காணப்பட, அப்படியே கண்ணும் அயர்ந்தாள்.
இந்த முக மலர்ச்சி மீண்டும் மீண்டும் மலருமா? இல்லை மலராமல் வாடிப் போகுமா என்பதை ஹர்ஷா தான் சொல்ல வேண்டும்.
மறுநாள், ப்ரியாவின் பெற்றோர் மற்றும் உறவுகள் எல்லோருக்கும், காலை உணவு மதிய உணவு என தடபுடல் விருந்தாக இல்லாவிட்டாலும், ஏதோ இரண்டு வகை காய்கறியோடு, அப்பளம், பாயசம் என ஹர்ஷாவின் அன்னையும் அண்ணியும் அசத்த… அதற்கே அனைவருக்கும் ஒரு ஒரு வேலையாய் பொழுதுகள் எல்லாம் சரியாய் போக… மிச்சம் இருந்த மாலை பொழுதில் ப்ரியா வீட்டினர் கிளம்பி, மனமில்லாமல் பிரியாவிடைப் பெற்று சென்றனர்.
ஆகமொத்தம் அன்றைய பொழுது இனிமையாய் கழிய, இரவு உணவிற்கு பின், ஹர்ஷா பின்னேயே சென்ற ப்ரியாவின் மனதில், நேற்றைய இரவின் சாயல் பதிய, அது அப்படியே அவள் முகத்தில் தானாக புன்னகையை வரவழைத்துக் கொண்டது.
இதை எதையும் அறியாத ஹர்ஷா… நேற்று நடந்த இனிய சம்பவங்களை மறந்தவனாய்… மறதி மன்னனாய்… இல்லை… அவ்வாறு அல்ல… அதை நியாபகத்தில் கொள்ளாமல், வேறொன்றை நியாபகமாய் கொண்டதால், அறைக்குள் நுழைந்ததும் கட்டிலுக்கு சென்று ஒரு பக்கமாய் ஒருக்களித்து படுத்து கொண்டான்.
ஏனெனில் அவனின் கோபத்திற்கு… அவள் தன்னை பேசியதற்கு… பதிலடியாய் நேற்று அவளை தொட்டு ஆள நினைத்தான். ஆனால் அவளே தன்னை ஆட்டுவிப்பவளாய் மாறுவாள் என அவன் எண்ணி பார்க்கவும் இல்லை. தான் அவள் முன்… அவளின் கண் பார்வைக்கு முன்… இவ்வளவு பலவீனமானவனாய் மாறுவோம் என அவன் எதிர்ப்பார்க்கவும் இல்லை.
இவ்வாறு ஹர்ஷா எண்ணி, வேக வேகமாய் அவள் தன்னை ஆட்டுவிக்கும் முன் உறங்கி விட, இங்கு ப்ரியாவோ ‘சே! என்ன இன்று வந்ததும் தூங்கி விட்டார். நேற்று போல் மருந்து மாத்திரை எல்லாம் எடுத்து கொடுக்கவில்லை. இப்படி கண்டும் காணாமல் உறங்கி விட்டார். அப்படி என்றால் எல்லாம் ஒரு நாளைக்கு தானா??? இல்லை நேற்று நம் வீட்டினர் இருந்ததால்… நடித்தானா???’ என குழப்பத்தில் இருந்தவள், அவன் நடித்தானோ என எண்ணும் போதே தானாகவே மரியாதையை சுருக்கி விட்டாள் போலும்.
“ம்ஹும்…” என பெருமூச்சு விட்டவள், மாத்திரையை விழுங்கி உறங்க சென்றாள். மறுநாள் வெள்ளிக்கிழமை, ஹர்ஷா அலுவலகம் சென்று விட்டு வர, மாலை டிபன் காபியோடு வந்த மாரீஸ்வரி, “ஹர்ஷா நாளைக்கு நாங்க எல்லோரும் நம்ம கோவிலுக்கு போய், சாமி கும்பிட்டுட்டு நந்தாவோட நேர்த்திக்கடன்ன முடிச்சிட்டு வாரோம் டா” எனக் கூற, “நாங்கன்னா… அப்போ நான்??? நா வரக்கூடாதா?” என சிறிது சலிப்பாய் கேட்டான்.
“அப்படி இல்லடா… இப்போ தான் ப்ரியா சரியாகிட்டு வர்றா… அதனால அந்தப் புள்ளைய அலைய வைக்க வேணாம்னு நினைச்சேன்… நீயும் அந்தப் புள்ளையும் வீட்டுல இருங்க. நான் இந்தப் புள்ளைங்கள கைல பிடிச்சுக்கிட்டுப் போறேன்” என அவனுக்கு பேச இடம் கொடாமல் அவரே மடமடவென முடிவெடுத்தார்.
“ம்ம்… ஹும்…. சரிமா… கூட்டிட்டு போயிட்டு வா. பத்திரமா பார்த்துக்கோ மா.” என அவருக்கே அவன் அறிவுறுத்த, “டேய்… நான் உனக்கு அம்மா டா” என அவர் கூற, “ஆனா நான் அவனுங்களுக்கு அப்பா மா. அவனுங்களப் பற்றி எனக்கு தான் தெரியும்” எனத் தெளிவாய் பதில் அளித்தான்.
“சரிடா சாமி… பாத்திரமாவே பார்த்துக்கிறேன். அப்படியே நாளான்னிக்கு லீவு தான… அப்படியே அந்தப் பக்கமா… கும்பகோணம் கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம்” என ஒரு வழியாய் முழுவதுமாய் சொல்லி முடிக்க… “என்ன ரெண்டு நாள் போறீங்களா?” என ஹர்ஷா லேசாய் திடுக்கிட, “அக்கா… டூர் போறீங்களா… ரெண்டு நாளா??? அக்கா அக்கா நானும் வர்றேன்… அத்தைக்கிட்ட சொல்லுங்கக்கா… ப்ளீஸ்…” என சிறு குழந்தையாய் மாறி, ஹர்ஷாவின் அண்ணி கமலாவின் காதோரமாய் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள் ப்ரியா.
கமலாவோ ‘விபின் நவீன் தான் சிறு பிள்ளை என நினைத்தால், இவள் அவர்களை விட சிறு பிள்ளையாய் இருப்பாள் போலவே! கடவுளே!’ என நினைத்து, “இல்ல ப்ரியா… அது வந்து… ம்ம்ம்…” என முடிக்கும் முன்னேரே ப்ரியா, “அக்கா… ப்ளீஸ் கா… எனக்கு ஒன்னும் இல்ல… எல்லாம் சரியா போச்சு” என தன் நெற்றி காயத்தை துடைத்து காண்பித்தாள்.
‘சரியா போச்சுன்னு தான் தெரியுமே, அதனால தான நானும் அத்தையும் உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போனாலாவது… ஏதாவது வொர்க் அவுட் ஆகும்னு நினைச்சோம்’ என மனதில் தாங்கள் போட்ட திட்டத்தை நினைத்து, அதற்கு சாதகமாய் அமையுமாறு பேச ஆரம்பித்தாள்.
“ம்ச்சு… என்ன ப்ரியா சின்னக் குழந்த மாதிரி பேசுற, டூர் எங்க போக போகுது, நாம நினைச்சா இன்னொரு நாள் வேற டூர் தாராளமா போகலாம். இப்போ உன் உடம்பு தான் முக்கியம். டாக்டர் உன்ன அலைய வைக்க கூடாதுன்னு சொல்லிருக்கார்.” என அறிவுறுத்தினாள்.
“ஆமா, அவருக்கு என்ன வேலை? அவருன்னு இல்ல எல்லா டாக்டர்களும் இப்படி தான் சொல்லுவாங்க. என்ன தனியா விட்டுட்டு போகாதீங்க கா” என மீண்டும் தர்க்கம் செய்ய ஆரம்பிக்க, அதனால் எல்லோரது கவனமும் அவள் பக்கம் திரும்ப, “ஏன் ஈஸ்வரி… ப்ரியா தான் ஆசைப்படுதே… கூட்டிட்டு தான் போவோமே” என ரமணன் அவளுக்கு சிபாரிசு செய்ய, “ஆமா மா, நீ வேணா ப்ரியாவ கூட்டிட்டு போயேன். அவ தான் ஆசப்படுறாளா” என ஹர்ஷாவும் கூறினான்.
‘ஈஸ்வரா… நா பெத்தது தான் ஒன்னும் புரியாம இருக்குன்னா… எனக்கு வாச்சதும் புரியாம பேசுதே’ என ரமணனுக்கு ஒரு வசைப் பாடு மனதிற்குள் பாடியவர், “நீங்க சும்மா இருங்க… அவள என்ன தனியாவா விட்டுட்டு போறோம், கூட தான் ஹர்ஷா இருக்கான்ல, அந்தப் புள்ளையே இப்ப தான் தேறிட்டு வருது, அதுக்குள்ள அங்க இங்கன்னு அலைகழிக்க சொல்றீங்க. இங்க பாரு ப்ரியா… அத்த என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுப் பழகு. உங்கம்மா அப்படி தான சொல்லிட்டு போனாங்க” என ரமணனுக்கு பதில் அளித்து விட்டு, ப்ரியாவிடம் சிறிது கடினமாய் மொழிந்தார்.
அதிலேயே முகத்தைச் சுருக்கி கொண்டு சரியென தலையை மட்டும் ஆட்டினாள். ஏனெனில் என்றுமே தனக்கு பக்கபலமாய் பேசும் அத்தை, இப்போது தனக்கு சாதகமாய் இல்லாவிட்டாலும், ஏதோ அறிவுறுத்தினால் கேட்டு தானே ஆக வேண்டும். அது தான் முறையும் கூட… அதை மீறினால், அவர்களை அவமானப்படுத்தியதாய் ஆகும். அதனால் மௌனமாய் சம்மதித்து விட்டாள்.
அன்று இரவே, மாரீஸ்வரியும், கமலாவும் மறுநாள் பயணத்திற்கு தேவையான உணவை தயார் செய்தனர். அவர்களுக்கு ப்ரியா உதவி செய்தாள். ஏனெனில் குழந்தைகளை கையில் அழைத்து செல்லும் போது வெளி இடங்களில் உணவு வாங்கி உண்பதை விட, ஆறி போனாலும், வீட்டு உணவே சிறந்தது என நம்பினர்.
ஏனோ ப்ரியாவிற்கு தான் மனமே ஒட்டவில்லை. கமலா கூட அவளிடம் “ப்ரியா நல்ல சான்ஸ்… யூஸ் பண்ணிக்கோ. என்ன எல்லாம் இப்படி என் வீட்டுக்காரரோட தனியா விட மாட்டாங்களான்னு நினைக்கிறேன்… நீ என்னடான்னா எதையும் புரிஞ்சுக்காம லூசு மாதிரி பேசுற… போ போய் ஒழுங்கா உன் புருஷனோடு டூயட் பாட பாட்ட செலக்ட் பண்ணி வை. போ… போ…” என அவளை விரட்டி விட்டாலும், தாங்கள் ஏன் அவர்களை தனியே விட்டு செல்கிறோம் என்பதை இலைமறைகாயாக அல்லாமல் நேரடியாக சிதறு தேங்காயாகவே போட்டு உடைத்திருந்தாள் கமலா.
அப்படி உணர்த்தியும் கூட, ஏதோ அவளை மட்டும் தனியே விட்டு செல்லும் உணர்வு மனதில் அடிக்கடி ஏற்பட்டது. அதற்கு காரணம் ஹர்ஷாவின் நடவடிக்கை தான். ஏனெனில் அவள் மருத்துவமனை விட்டு வீட்டிற்கு வந்த நாளன்று இரவு காதல் கணவனாய், எல்லா உபசரனையும் செய்தானே தவிர மறுநாள் இருந்து மீண்டும் பழைய ஹர்ஷாவாய் மாறவில்லை தான், ஆயினும் முதல் நாள் போல் அவன் நெருங்கவும் இல்லை.
இதற்கு முன் என்றால், இவன் இப்படி தான்… இது தானே அவனது வாடிக்கை என எண்ணி விட்டிருப்பாள். ஆனால் இப்போதோ அவனுள்ளும் காதல்??? சரி காதலோ பரிவோ ஏதோ ஒன்று தோன்றியதே தன் மீது… எதுவும் தோன்றாமல் இருப்பதற்கு ஏதோ ஒன்று தோன்றி, பாறையாய் இருந்தவன், பனியாய் உருக தொடங்கியிருக்கானே என எண்ணி மகிழ்ந்திருந்தாள்.
ஆனால் அதுவும் கனவோ என்பது போல் அவன் நடந்து கொள்ளும் விதம் அவளை யோசிக்க வைக்க… ஏற்கனவே அடிப்பட்ட தலையாதலால்… ரொம்பவும் குழம்பி சோர்ந்து தான் போனாள்.
மறுநாளும் விடிந்து, எல்லோரும் கோவிலுக்கு சென்று விட, ஹர்ஷாவும் அலுவலகம் சென்று விட, வீட்டில் ப்ரியா மட்டும் தனித்திருந்தாள். அவர்கள் வீடு ரொம்பவும் பெரிய வீடில்லை தான், ஆனால் ப்ரியாவிற்கு அந்த அடக்கமான சின்ன வீட்டில் கூட தனித்திருப்பது, ஏதோ பெரிய வனாந்தரத்தில் தனித்து இருப்பது போல் தோன்றியது.
ஹும்… அந்த சீதா தேவிக்கு கூட அசோக வனத்தில் துணைக்கு இரு பூதகணங்கள் இருந்தார்கள். ஆனால் நம் ப்ரியாவிற்கு அவர்கள் கூட இல்லாமல் தனியே இருக்க… ரொம்பவும் பொழுது என்ன நொடி கூட நகராமல் சேட்டை செய்கிறதோ என எண்ண தோன்றியது. அதனால் அவற்றை அடக்குவதற்கு, தொலைக்காட்சியை துணைக்கு வைத்து கொண்டாள்.
மதியம் உணவு உண்ட பின்னும், தொலைக்காட்சியே துணையாய் இருக்க, சிறிது கடுப்பானாள். அது ஏனெனில் அலுவலகம் சென்ற கணவன், கிடைக்கும் நேரத்தில் தன் மனைவியிடம் காதல் பொங்க பேச வேண்டாம், ஆனால் தனியாய் இருக்கிறாளே என எண்ணி கூடவா பேசக் கூடாது என கடுப்பாகும் போதே அவள் அலைப்பேசி அழைக்க, ‘ஒரு வேளை நம் மனதின் குரல் (குமுறல்) நம் ஞானசூன்யத்திற்கு தான் எட்டி விட்டதோ’ என எண்ணி மகிழ்வோடு அலைப்பேசிக்கு கைக் கொடுக்க, ஆனால் அதுவோ அவளை கை விட்டு விட்டது.
ஆம், அதில் அழைத்தது கமலா. மதியம் சாப்பிட்டாளா? மாத்திரை போட்டாளா? என அவளும், மாரீஸ்வரியும் கேட்டு நலம் விசாரிக்க, பின் குசுறாய் கமலா “என்ன ப்ரியா பாட்டு செலக்ட் பண்ணிட்டியா” என அவளின் குமுறலை மேலும் பொங்க வைத்து விட்டாள்.
அதனால் தான் அதே கடுப்போடு ரிமோட்டை வைத்து தொலைக்காட்சிகளை நகர்த்த தொடங்கினாள். அப்படி நகர்த்தியதில் பாட்டுச் சேனல் வர, ஏற்கனவே கடுப்பாகி கடுப்பாகி களைத்துப் போன ப்ரியாவிற்கு அந்தப் பாடல் இதமாய் இருக்க, அப்படியே விட்டு விட்டாள். சிறிது நேரத்தில் கண் சொருகி, அமர்ந்திருந்த மெத்திருக்கையிலேயே காலை நீட்டி, படுத்து உறங்கிப் போனாள்.
மதியம் மாலையாகி, மாலையும் மயங்க தொடங்கிற்று. ஆனால் உறங்கிய ப்ரியாவும் எழவில்லை. அலுவலகம் சென்ற ஹர்ஷாவும் அலுவல் முடிந்த பின்னும், எழ மனமில்லாமல் இல்லை, யாருமற்ற தனிமையில் எப்படி ப்ரியாவை எதிர்நோக்குவது என்ற பயத்தில்… ஆம், பயம் தான், எங்கே அவள் தன்னை காதல் செய்ய வைத்து விடுவாளோ? என்ற பயம் தான் அவனை வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்தது.
சரி வீட்டிற்கு போக வேண்டாம், ஆனால் அலுவலகத்தை விட்டு செல்ல தானே வேண்டும், அதற்கு சரியாய் பல்லியும் உச்சுக் கொட்ட, அலுவலகப் பையனும், “சார்… எதுவும் வேளை இருக்கா? பூட்டுற நேரமாச்சு…” என தலையைச் சொரிந்தப் படி, பணிவன்புடன் கேட்டான்.
“இல்லப்பா… இந்தா… கிளம்பிட்டேன்” எனக் கூறியப்படி தனது பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான். ‘ம்ம்ம்… பேசாமல் கார்த்தி வீட்டிற்கு செல்லலாமா? அங்கு சென்றால், அவன் காரணம் கேட்டு… அதை நாம் சொல்ல… “ச்சீ… த்தூ… வேணா டா எனக்கு வாய்ல ஏதாவது அசிங்கமா வந்துடும்.” என கார்த்தி ஹர்ஷாவின் மனத்திரையில் காரி உமிழ்ந்தான். ஹுஹும் வேண்டாம் நமக்கு இந்த அசிங்கம். பேசாமல் வீட்டிற்கே செல்லலாம்’ என முடிவெடுத்து வீட்டிற்கு செல்ல, வழியில் பெருமாள் கோவில் கண்ணில் பட, சட்டென கைகள் தானாய் வண்டியை நிறுத்தி, கால்கள் கோவிலை நோக்கி சென்றது.
கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தும், இருட்ட தொடங்கியும் ஹர்ஷாவிற்கு நேரம் நகராமல் இருப்பதாக தோன்றியது. இவன் இன்றைக்குள் வீடு சென்று சேர மாட்டான் போல என கடவுள் எண்ணினார் போலும். அதனால் உடனடியாய் ஒரு மின்னல் கீற்றை அனுப்பி, அதன் பின்னேயே ஒரு இடியையும் இறக்கி விட்டார்.
இதற்கு மேலும் இங்கிருந்தால், மழை வந்து விடும், பிறகு நம் வண்டி மக்கர் செய்து விடும் என அஞ்சி எழுந்து வீட்டிற்கு விரைந்தான் ஹர்ஷா. ஆனால் அதற்குள் எட்டு பத்து மின்னல்களும், அதனை தொடர்ந்து இடியும் பலமாய் முழங்கி மழை பொழிய ஆரம்பித்து விட்டது.
அங்கு வீட்டில் இருந்த ப்ரியாவும், இடியின் சத்தத்தில் கண்களை சுருக்கி திறக்க, ஆனால் ஒரே இருட்டாய், தொலைக்காட்சியின் வெளிச்சம் மட்டும் வீட்டை நிரப்பியது. முதலில் ப்ரியாவிற்கு எங்கு இருக்கிறோம்? ஏன் இவ்வளவு இருட்டு? என ஒன்றும் புரியவில்லை.
பின் மெல்ல… மெல்ல… நிதானம் வந்து சுற்றுப்புறம் புரிவதற்குள் மீண்டும் இடி முழங்க பயந்தே போனாள் ப்ரியா. மேலும் அவள் பின்னிருந்து ஏதோ ஒரு உருவம் தன்னை அணைக்கவும், அவள் உயிர் வரை பயம் ஊடுருவ… “ஆஆஆவ்வ்….. ஆஆஆவ்வ்…” எனக் கத்தியே விட்டாள்.
இதயம் நழுவும்….