Vettai

Vettai

வேட்டை ஆரம்பம்…

மௌனமாக கையில் முந்தைய நாள் பிறந்தநாள் பரிசாக சரண் அணிவித்து விட்டிருந்த பிரேஸ்லெட்டை ஒற்றை விரலால் வருடிக்கொண்டு, அதைவிட்டு பார்வையை அகற்றாமல் அமர்ந்திருந்தாள் ஹரிணி. முகம் உணர்ச்சியற்று இருந்தது.

அவளருகே என்ன ஏது என்று எதுவுமே புரியாத தவிப்பிலும் குழப்பத்திலும் சுஜி.

திலகவதியோ என்ன நடக்கிறது என்றே புரியாத பாவனையை முகத்தில் காட்டி நொடிக்கொரு முறை ஹரிணியையும் சரணையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

தீரனின் பார்வை ஆராய்ச்சியாக ஹரிணியின் மேல் படிந்திருந்தது.
சரணோ உச்ச பட்ச கோபம், குழப்பம், பதட்டம் இன்னபிற ஏகப்பட்ட உணர்ச்சிகளின் கலவையாக ஹரிணியைப் பார்த்தபடி இருந்தான்.

பொறுமை பறந்துவிடும் போல் இருந்தது அவனுக்கு.
“எவ்வளவு நேரம் அமைதியா இருப்ப ஹரிணி? சிக்மகளூர்ல என்ன நடந்ததுன்னு கேக்கறேன்ல?” அடக்கப்பட்ட கோபம் இருந்தது அவன் குரலில்.

ஹரிணி அமைதியாகவே இருக்க, அவனது கோபத்தைப் பார்த்து சுஜிக்குதான் துணுக்கென்று இருந்தது.

“என்ன நடந்ததுண்ணா? சிக்மகளூர்ல எதுவுமே நடக்கல. நாங்க பத்திரமா போயிட்டு பத்திரமா வந்துட்டோம். ஹரிணிய எதுக்கு நீங்க கோவிச்சுக்கறீங்கன்னே எனக்குப் புரியல.”

உண்மையிலேயே எதற்கு சரண் இவ்வளவு கோபப்படுகிறான் என்பதே விளங்கவில்லை சுஜிக்கு. முந்தையநாள் சிருங்கேரி சென்றுவிட்டு மாலைதான் ட்ரிப்பை முடித்து பெங்களூரு வந்திருந்தார்கள்.

வந்ததுமே சரணோடு ஹரிணியின் பிறந்தநாள் பார்ட்டிக்காக ஹோட்டலுக்குச் சென்றாயிற்று.

இன்று மதியம் ஹாஸ்டலுக்கு வந்தவன் காரணமே சொல்லாமல் இருவரையும் வீட்டுக்கு அழைத்துவந்து அமர வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான்.

சுஜியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இமைக்காத பார்வையை ஹரிணி மீது செலுத்தியவன், எழுந்து சென்று டீவியைப் போட்டான்.

கீழே ஸ்க்ரோல் ஓடிக் கொண்டிருக்க, கன்னடத்தில் பரபரப்பான தலைப்புச் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தாள் அழகான பெண்ணொருத்தி. அவள் முகம் செயற்கையான கவலையைத் தாங்கி இருக்க இதழ்களில் உறைந்த மாறாப் புன்னகையோடு செய்தியைப் படித்துக் கொண்டிருந்தாள்.

“சிக்மகளூரில் கெம்மணங்குண்டி வனப்பகுதியில் இளம் வனத்துறை அதிகாரி ஜார்ஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33. அஸ்ஸாம் மாநிலத்தில் பணிபுரிந்த அவர் சிக்மகளூர் வனப்பகுதியில் பணியேற்று சில நாட்களே ஆனது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெங்களூருவில் இரண்டு அரசு அதிகாரிகள் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொல்லப்பட்டுள்ள நிலையில் மூன்றாவதாக அதே பாணியில் நடந்துள்ள இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் கொலைகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குக் காரணமான மர்ம நபரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.”
மேலும் அந்தப் பெண் செய்திகளை வாசித்துக் கொண்டே போக, தொலைக்காட்சியை அணைத்தவன் துருவும் பார்வையோடு ஹரிணியைப் பார்க்க, இப்பொழுதும் சுஜிதான் கோபமாகப் பேசினாள்.

“அங்க கொலை நடந்ததால ஹரிணிய நீங்க சந்தேகப்படறீங்களா? அவ நாள் முழுக்க என்கூடதான் இருந்தா. அவளுக்கு எதுவுமே தெரியாது.”

“உன் ஃபிரெண்டுக்கு ஒன்னுமே தெரியாதா? சரி, அந்த மலைக்கு சஞ்சயும் மகேஷூம் ஏன் வந்தாங்க?”

இதுவும் உண்மையிலேயே சுஜிக்கு புதிய செய்தி. குழப்பத்தோடு சரணைப் பார்த்தவள், “எங்க கிளாஸ் சஞ்சய் மகேஷா? அவங்க அங்க எப்ப வந்தாங்க? அவங்க சஸ்பென்ஷன்ல இருக்காங்க. டிரிப்புக்கு அவங்க வரல.”

“இதோ உன் பக்கத்துல உட்கார்ந்து இருக்காங்களே அந்த மேடம்க்கு தெரியும் அவங்க எப்ப வந்தாங்க? ஏன் வந்தாங்கன்னு? வாயைத் திறந்து பேசப் போறியா இல்லையா ஹரிணி.”

“…”

“இரண்டு பேரும் இப்ப யூஸ்லெஸ் வெஜிடபிள் மாதிரி ஹாஸ்பிடல்ல கிடக்கறானுங்க. உடம்புல உயிரைத் தவிர வேற எதுவுமே இல்ல. அவனுங்க மேல வர்மக்கலை பயன்படுத்தப்பட்டிருக்கு. அவனுங்க எழுந்து நடமாடவே வருஷக்கணக்காகுமாம்.

உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியும். உனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். இப்ப வாயைத் திறந்து பேசப் போறியா இல்லையா?”
உச்சபட்ச டெசிபலில் ஒலித்த அவன் குரலில் தூக்கிவாரிப் போட்டது தோழிகள் இருவருக்குமே.

திலகவதிதான் பதட்டம் நிறைந்த குரலில், “சரண் எதுவாயிருந்தாலும் கொஞ்சம் பொறுமையாப் பேசு. அவளுக்கு உண்மையாவே எதுவும் தெரியாதோ என்னவோ.”

“ம்மா… ஏன்ம்மா நீங்க வேற? அவளுக்கு அங்க நடந்தது எல்லாமேத் தெரியும். ஈவன் யாரு இந்தக் கொலையெல்லாம் செய்யறதுன்னுகூடத் தெரியும்னு நினைக்கிறேன்.” பேசுவதை நிறுத்தி அவளை முறைத்தவன், “அழுத்தமா எதுவுமே வாயத் திறந்து பேசாம உட்கார்ந்திருக்கா” என்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் மௌனத்தைக் கலைக்கவே இல்லை.

“அம்மாடி, உனக்கு எதாவது தெரிஞ்சதுன்னா அவன்கிட்ட சொல்லிடும்மா. எந்தப் பிரச்சனையாயிருந்தாலும் சரண் பார்த்துக்குவான். மாமாவும் உனக்குதான் சப்போர்ட் பண்ணுவாங்க.” தன்மையாகப் பேசிய திலகவதியிடம் மெதுவான அதேசமயம் அழுத்தமான குரலில்,

“எனக்கு அங்க என்ன நடந்ததுன்னு நிஜமா தெரியாது ஆன்ட்டி.” அவளது பதில் வெகுவாக எரிச்சல் படுத்தியது அவனை.

“ஓ… உனக்குத் தெரியாதுல்ல…” ஆழ்ந்து இமைக்காமல் அவளைப் பார்த்தவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,

“நீ இவ்வளவு அடமெண்ட்டா இருந்தா, உன்னை கஸ்டடியில எடுத்து விசாரிக்கறதைத் தவிர எனக்கு வேற வழியில்ல.”

“சரண், என்ன பேசறோம் யார்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” அதிர்ந்து போன திலகவதி கோபப்பட. தீரனுமே,

“சரண், கொஞ்சம் பொறுமையா இரு” பதறிப் போனார்.

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? அவ அவ்வளவு அழுத்தமா இருந்தா நான் அப்படிதான் விசாரிக்க வேண்டிவரும். வாரண்ட் வாங்கி நானே அரெஸ்ட் பண்ணுவேன்.”
கஸ்டடியில் எடுப்பேன், அரெஸ்ட் பண்ணுவேன் என்ற வார்த்தைகளில் கண்கள் கலங்கி நீர் திரண்டு அவனையேப் பார்த்தவாறு அமர்ந்திருந்த ஹரிணியைப் பார்த்த சுஜிக்கு ஆறவில்லை.

“என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போறீங்க? அவதான் எதுவுமே தெரியலைங்கறாளே. அவளைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அவளுக்கில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் உங்க இஷ்டத்துக்குப் பேச வேணாம்.”

சுஜியின் பதிலில் ஏகத்துக்கும் கோபம் ஏற, “ஆதாரம்தான கேக்கற. இரு வரேன்.” உள்ளறைக்குள் நுழைந்தவன் ஒரு பாலித்தீன் கவர் ஒன்றைக் கொண்டு வந்து டீப்பாயின் மேல் போட, அதனுள் அழகாக சுருண்டிருந்தது ஹரிணி எப்பொழுதும் குளிருக்குப் பயன்படுத்தும் ஷால் ஒன்று.

அதைப் பார்த்த சுஜி அதிர்ந்து போனாள். இது ஹரிணியின் ஷால்தான். இது எப்படி சரண் கைகளுக்குப் போனது? இதை ஆதாரம் என்கிறானே அவன். ஒன்றுமே புரியாமல் ஹரிணியைப் பார்த்திருந்தாள்.

“இது உன்னோட ஷால்தான ஹரிணி? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத. இதை உன்கிட்ட நானே நிறைய முறை பார்த்திருக்கேன்.”

அந்த ஷாலைப் பார்த்து ஹரிணியுமே அதிர்ந்து போயிருந்தாள், ‘இதை எப்படி மறந்து போனேன்? காரில் இருந்து இறங்கி அவன்களிடமிருந்து தப்பிக்க ஓடிய நேரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. இந்த ஷால் காரில் கிடந்திருக்க வேண்டும்.’ மனதுக்குள் எண்ணியபடி சரணை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன ரெண்டு பேரும் வாயடைச்சுப் போய் நிக்கறீங்க? அந்த சஞ்சயும் மகேஷூம் வந்த கார்ல கிடந்தது இது. ஆதாரம் போதும்ல. அங்க இந்த ஷால் எப்படிப் போச்சு? கேட்டு சொல்லு உன் ஃபிரெண்டுகிட்ட.”
இப்பொழுது அனைவரது பார்வையுமே ஹரிணியை மொய்த்திருக்க, மெல்ல வாய் திறந்தவள், “முந்தாநேத்து நைட்டு உங்களுக்கு ஃபோன் பேசிட்டுத் தூங்கப் போனப்ப, ரேணு குரல்ல ரேணு பேசற மாதிரியே பேசி என்னை அந்த காட்டேஜ் வாசலுக்கு வரவச்சானுங்க சஞ்சயும் மகேஷூம்.

அப்புறம், மோசமான நோக்கத்தோட மயக்கமருந்து கொடுத்து கார்ல என்னைக் கடத்தப் பார்த்தானுங்க.
அதுவரைக்கும்தான் எனக்குத் தெரியும். மயக்கமருந்தை என் முகத்துல அழுத்தவும் நான் மயங்கிட்டேன். நான் திரும்பக் கண்முழிச்சப்ப அந்த காட்டேஜ் வாசல்லதான் இருந்தேன். நடுவுல என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. என்னை யார் கொண்டுவந்து காட்டேஜ் வாசல்ல போட்டதுன்னும் எனக்குத் தெரியாது.” கைவிரல் நகங்களைப் பார்த்தவாறு சொல்லிமுடித்தாள்.

சஞ்சயும் மகேஷூம் அவளைக் கடத்த முயன்றனர் என்பது உள்ளுக்குள் திடுக்கென்று இருந்தாலும், அவள் மேலும் உண்மை எதையோ மறைக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு. “இதை என்னை நம்பச் சொல்றியா?” ஆழ்ந்த அவனது குரலில் நம்பிக்கையின்மை நிறைந்திருந்தது.

“நீங்க நம்பலைன்னாலும் நடந்தது இதுதான். எனக்கு வேற எதுவுமே தெரியாது. இதுக்குமேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா என்னை அரெஸ்ட் பண்ணிக்கோங்க.” தலை குனிந்தபடியே அவன் முகம் பார்க்காமலேயே சொல்லி முடித்தாள்.

அவளைக் கடத்த முயன்றனர் என்பதிலேயே அரண்டு போயிருந்த திலகவதி, “டேய் யார் செய்த புண்ணியமோ, ஹரிணிக்கு எதுவும் ஆகாம தப்பிச்சாளே. அந்தமட்டும் போதும். அவதான் நடந்ததைச் சொல்லிட்டா இல்ல. இனி அங்க என்ன நடந்ததுன்னு கண்டு பிடிக்க வேண்டியது உன் வேலை.

அதைவிட்டுச் சும்மா அவளை மிரட்ற வேலை வச்சுக்காத.”

“என்கிட்டகூட நடந்ததைச் சொல்லலையேடி நீ.” சுஜியின் குரலிலுமே ஹரிணிக்கு நடக்கவிருந்ததை எண்ணி பயமிருந்தது. அதே நேரத்தில் என்ன பெண்ணிவள்? அர்த்த ராத்திரியில் தனியே சென்று கயவர்களிடம் அகப்படத் தெரிந்தாளே என்ற கோபமும் இருந்தது.

“அந்த நேரத்துல ரேணு குரலைக் கேட்டிருந்தாலும் உன்னை எழுப்பி உன்கிட்டச் சொல்லாம தனியா போனது தப்புன்னு தோனுச்சி. உன்கிட்ட சொன்னா திட்டுவியோன்னு பயமா இருந்தது. அதான் சொல்லல.”

“எங்ககிட்ட சொல்லியிருக்கலாமேம்மா.” தீரன் கனிவோடு கேட்க, “அ… அதான் அங்கிள் நீங்க எல்லாரும் திட்டுவீங்கன்னு பயமா இருந்துச்சி. அதான் யார்கிட்டயும் சொல்லல.” குற்றவுணர்ச்சி இருந்தது அவள் குரலில்.

“அது எப்படி சரியா நீ போகிற இடத்துல எல்லாம் கொலை நடக்குது? ஐ மீன்… இதுவரை நடந்த மூனு கொலையிலயும் சம்பவம் நடந்தப்ப அந்த ஸ்பாட்ல நீ இருந்திருக்க. அது எப்படி?” சரணின் கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளை சந்தேகப் படுகிறான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது அவன் பார்வையில்.

ஆனால், அவளுக்குமே அது புரியாத புதிர்தான். அவளுக்கே தெரியாத கேள்விக்கு என்ன பதில் சொல்ல… வனத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட விஷயம் இப்போது சரண் டீவியை போட்டுக் காட்டிய பிறகுதான் தெரிந்தது அவளுக்கு.

“எனக்கு நிஜமாத் தெரியல.” அவளைச் சிறிது நேரம் பார்த்திருந்தவன்,

“ஓகே… நீ சொல்றத நம்பறேன் ஹரிணி. நிமிர்ந்து என் கண்ணைப் பார்த்து இப்ப நீ சொன்னதெல்லாம் சொல்லு.”

சரணின் பேச்சுக்கு பதிலே பேசாமல் தலையைக் குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“ம்மா, பார்த்தீங்கல்ல. அவளால என் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட முடியல. அவ பொய் சொல்றா. எதையோ மறைக்கிறா.”
இப்பொழுது தீரனின் குரல் கடினமாக வந்தது. “அவ எதையோ மறைக்கிறான்னு உனக்குத் தோனுதில்ல. அது என்னான்னு கண்டுபிடிச்சிட்டு பேசு. அதுவரை அவளை எதுவுமே சொல்லாத.

எங்களை நம்பிதான் அவளை இந்த ஊர்ல விட்ருக்காங்க அவங்க அப்பாம்மா. நாங்க அவ சொல்றதை நம்பறோம். இனியும் அவளை நீ பேசறதைக் கேட்டுகிட்டு இருக்க முடியாது.”

கோபத்தோடு எழுந்தவன் அவளைப் பார்த்து, “எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டு உன்கிட்ட பேசறேன். கிட்ட நெருங்கிட்டேன். கூடிய சீக்கிரம் நடக்குற கொலைக்கெல்லாம் யார் காரணம்னு தெரிஞ்சிடும். யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன்.

நீ யாரைத் தப்பிக்க வைக்க இப்படிப் பண்றன்னு தெரியல. ஆனா, நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் சட்டத்தோட பிடியில இருந்து யாரும் தப்பிக்க முடியாது. கண்டுபிடிச்சதும் உன்கிட்ட வரேன். எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண ரெடியா இரு.”
சரணின் பேச்சு உள்ளுக்குள் கலவரத்தைக் கொடுக்க, போகும் அவன் முதுகையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

தொய்ந்து போயிருந்தவளை வெகுவாகத் தேற்றிய திலகவதியும் தீரனும் ஆறுதலாகப் பேசி அவளை சாப்பிட வைத்து ஹாஸ்டலுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றனர்.

ரூமுக்குள் வந்ததும் சுருண்டு படுத்துக் கொண்டவளைப் பார்த்த சுஜிக்குப் பாவமாக இருந்தது. சரண் பேசிய வார்த்தைகள் தனக்கே இவ்வளவு வருத்தம் தருகிறதே ஹரிணிக்கு எவ்வளவு மனவருத்தம் தந்திருக்கும் என்று எண்ணிப் பெருமூச்சு விட்டவள், இருவரது துணிகளையும் எடுத்து அழகாக மடித்து கப்போர்டில் அடுக்கத் தொடங்கினாள்.

மெத்தையில் சுருண்டிருந்த ஹரிணியின் மனமோ பல்வேறு எண்ணங்களின் குழப்பத்தில் இருந்தது. சரணின் வார்த்தைகள் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி இருந்தது. கண்களை மூடினாலே அன்று நடந்த நிகழ்வுகளே கண்முன் வந்தது.

பெரிதாக பலத்தைப் பிரயோகிக்காமல் சில நொடிகளிலேயே சஞ்சயையும் மகேஷையும் வீழ்த்திய அந்த உருவத்தையே ஆவென்று பார்த்திருந்தாள்.

கண்களும் இருபுருவ மத்தி மச்சமும் பழகிய யாரையோ நினைவுபடுத்துவதாய். ஆனால், தழும்புகள் நிறைந்த விகாரமான அந்த முகம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாய்.

சொரசொரப்பான தரையில் உப்புத்தாளை வைத்துத் தேய்த்தது போன்ற கரகரப்பான குரலில்,

“யாரும்மா நீ? இந்த நேரத்துல இங்க எப்படி வந்த?” என்று கேட்டவனை உற்று பார்த்தவள்,

“எ… என்னைத் தெரியலையா? லா… லால்பாக் ரோட்ல, மால்ல… நா… நான் உங்களைப் பார்த்திருக்கேன்.”

சில நொடிகள் அவளைப் பார்த்திருந்தவன், “இது காட்டு மிருகங்கள் நடமாடும் பகுதி. இங்க ரொம்ப நேரம் நிக்கக் கூடாது.” என்றபடி முன்னே நடக்கத் துவங்க,

அவன் பின்னே தொடர்ந்தாள். சற்று சாய்ந்து பின்னிப்பின்னி நடந்த அவனது நடையும் வித்தியாசமாய் இருந்தது.

வழியில் அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் திரும்பிக்கூட பார்க்காத மௌன நடை. அருவிக்கரை பாதையின் அருகே வந்ததும், “எங்க தங்கியிருந்தம்மா? சொன்னாக் கொண்டுபோய் விடுவேன்.”

வேறு எதையுமே பேச விரும்பாமல் அழுத்தமாய் நின்றவனைப் பார்த்தவள், தான் தங்கியிருந்த இடத்தைச் சொன்னாள். அந்த காட்டேஜ் இருக்கும் சாலையின் முனை வரை அவளுடன் வந்தவன்,

அவளைப் போகச்சொல்ல திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். அவள் பத்திரமாக உள்ளே சென்றாளா என்று உறுதிபடுத்திய பிறகே நகர்ந்தான் அவன்.

முன்தினம் மாலை பிறந்தநாள் பரிசை அவளுக்கு அணிவித்துவிட்டு, அவளுடன் பேசிக் கொண்டிருக்குபோதே சரணுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

முக்கியமான கேஸ் விஷயமாக சிக்மகளூர் செல்கிறேன் என்று அவசரமாக அவன் கிளம்ப, தோழிகள் இருவரும் ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

சரண் கேஸ் விஷயமாக சிக்மகளூர் செல்கிறான் என்றதும் சஞ்சய் மகேஷ் பற்றித் தன்னிடம் விசாரிப்பான் என்று ஹரிணி எதிர்பார்த்துதான் இருந்தாள்.

தன்னைப் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியவனைக் காட்டிக் கொடுக்க ஏனோ அவளால் முடியவில்லை. அக்கறையாக, பாதுகாப்பாக தன்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டு காட்டேஜ்க்குள் நுழையும் வரை நின்று பார்த்த உருவம் மனதை நிறைத்து இருந்தது.

நன்கு பரிச்சயமான அந்த விழிகள் பெரும் குழப்பத்தைத் தந்த போதும், அந்தக் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள அவளெடுத்த முயற்சிகள் மேலும் குழப்பத்தையே தந்தது.

துணிகளை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்து ஹரிணியைப் பார்த்தாள் சுஜி. ஹரிணியின் மூடிய இமைகளின் மேல் கண்மணிகள் உருள்வது தெரிய, தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று கண்டுகொண்டவள் மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.

“ஹரிணி, நடந்ததையே நினைச்சிகிட்டு இருக்காத. எப்படியோ எந்த ஆபத்தும் இல்லாம திரும்பி வந்தியே அதுவே போதும்.”

“…”

“இந்தப் போலீஸ்காரங்களே இப்படிதான் ரொம்பப் போலீசா நடந்துக்குவாங்க. கல்யாணத்துக்கப்புறம் நல்லா வச்சு செய்டி. எல்லாத்துக்கும் தவிக்கவிடு. அப்பதான் போலீஸ்கார் அடங்குவார்.”

சுஜியின் பாவனையில் தன்னைமீறி சிரிப்பு வந்தது ஹரிணிக்கு. தோழியின் விரிந்த இதழ்களைக் கண்டதும்தான் சுஜிக்கும் சற்று நிம்மதியாகியது.

“எழுந்திரு. தூக்கம் வரலைன்னா எதையாவது படிக்கலாம். மைண்டு கொஞ்சம் மாறும்” என்றபடி ஷெல்ஃபைக் குடைந்தாள்.

புதிதாய் வாங்கிய புத்தகங்களில் ஒன்றை உருவியவளின் கையில் கூடவே அந்தப். பெட்டியும் வந்து சேர்ந்தது. எடுத்துக் கொண்டுவந்து மேஜையில் அமர்ந்தவள், பெட்டியைத் திறந்து டைரியை வெளியே எடுத்தாள்.

முதல் பக்கத்தில் அழகான கையெழுத்தில் இருந்த விபரங்களை தனக்குள் படித்தவள், அடுத்த பக்கத்தைப் புரட்ட ஆனந்தனும் பூரணியும் இணைந்திருந்த ஃபோட்டோ ஒன்று இருந்தது.

“ஹேய், செமயா இருக்காங்கப்பா ஜோடி. இந்த டைரிய எழுதினவரோட வொய்ஃப் போல. எவ்வளவு அழகா இருக்காங்க பாரேன்” என்று ஹரிணிக்குக் காட்ட,

“ஹேப்பிண்ணா…” என்று முனுமுனுத்தவாறு அதிர்ந்துபோய் பார்த்திருந்த ஹரிணியின் முகமாறுதல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை சுஜியால்…

வேட்டை தொடரும்…

error: Content is protected !!