nk13

nk13

நிலவொன்று கண்டேனே 13
யுகேந்திரனும் நித்திலாவும் அந்தக் காட்டுப் பாதையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். சில்லென்ற பச்சைக் கூரைக்குக் கீழே நடப்பது அத்தனை சுகமாக இருந்தது.
அன்பரசைக் கைது பண்ணி அன்றோடு ஒரு வாரம் ஆகி இருந்தது. அம்மாவும் பையனும் அன்பரசின் வீட்டை விட்டு விட்டு சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
தற்போது இருவரின் ஜாகையும் அங்கே தான். தங்கள் நம்பிக்கைக்கு வேட்டு வைத்த மனிதரைப் போய்ப் பார்க்கக் கூட யாரும் முயற்சிக்கவில்லை.
ஹாஸ்பிடலில் இருந்து திரும்பி வந்த வானதியிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. உடல் நிலையில் எந்தப் பின்னடைவும் இருக்கவில்லை. அதையும் தாண்டி மனதளவிலும் கொஞ்சம் பலப்பட்டாற் போல தோன்றியது.
சத்தியமூர்த்திக்கும் அது பெரிய ஆறுதலாக இருந்தது. மருமகன் பார்த்த வேலையில் எங்கே மகளுக்குப் பித்துப் பிடித்து விடுமோ என்று அஞ்சியவர் ஆசுவாசமானார்.
“நித்திலா…”
“சொல்லுங்க யுகி.” 
“அம்மா இன்னைக்கு திரும்பவும் கல்யாணப் பேச்செடுத்தாங்க.” நிதானமாகச் சொன்னவனைக் கூர்மையாகப் பார்த்தாள் பெண்.
“என்ன சொல்லுறீங்கப்பா?” ஆச்சரியமாக அவள் கேட்க, லேசாகத் தோளைக் குலுக்கினான் யுகேந்திரன்.
“அம்மா இப்போ இருக்கிற நிலைமையில என்னால எதுவும் எதிர்த்துப் பேச முடியலை நித்திலா.”
“அது சரிங்க… அதுக்காக இப்போ எப்பிடிக் கல்யாணம் பண்ணுறது?” பேசிய படியே நடந்து கொண்டிருந்தவன் அவள் கேள்வியில் சட்டென்று நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ஏன்? இப்போ பண்ணினா என்ன?”
“என்னப்பா இப்பிடிக் கேக்குறீங்க? ஜெயில்ல இருக்கிறது உங்க அப்பா.”
“அப்பிடி யாரு சொன்னா நித்திலா? ஜெயில்ல இருக்கிறது எம்.எல்.ஏ அன்பரசு. எங்கப்பா கிடையாது. எங்கப்பாக்கு இதெல்லாம் பண்ணத் தெரியாது. தயவு செஞ்சு இன்னொரு முறை இந்தப் பேச்சை எடுக்காதே.” 
கோபமாகப் பேசி முடித்தான் யுகேந்திரன். நித்திலா மறுத்து எதுவும் பேச முயலவில்லை. புண்பட்ட அவன் மனது போலியான ஒரு மாயைக்குள் பதுங்கிக் கொள்கிறது என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
தன் பிரியத்திற்குரிய தந்தையின் பிம்பம் சரிந்து போனதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவளால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது, வருத்தமாகத்தான் இருந்தது. அதற்காக… நடந்தது அத்தனையையும் தூக்கித் தூரப் போட்டு விட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியுமா என்ன?
“என்ன நித்திலா? பதிலையே காணோம்?” 
“கொஞ்சம் பொறுத்துப் பண்ணலாமே யுகேந்திரன்.”
“ஏன்? எதுக்குக் காலதாமதம் பண்ணுறே? நமக்கென்ன வயசு குறைஞ்சுக்கிட்டுப் போகுதா?”
“அதுக்கில்லை யுகி…”
“நித்திலா… கல்யாணம் பண்ண சம்மதமா? இல்லையா? இதுக்கு மட்டும் பதில் சொல்லு.” 
அவன் அத்தனை அழுத்தமாகக் கேட்கும் போது நித்திலாவிற்கு வேறு பதில்கள் கிடைக்கவில்லை. 
“சம்மதம் கவிஞரே… இப்போவே இங்கேயே இந்தக் காட்டுல வெச்சே பண்ணிக்கலாமா?” அவள் சற்றே தலை தாழ்த்தி பவ்வியமாகக் கேட்க யுகேந்திரன் முகத்தில் புன்னகை அரும்பியது.
“காட்டு மலர்களைப் பறித்து மாலை சமைத்து அந்தச் சூரியனையும் இந்தச் சிட்டுக்குருவியையும் சாட்சியாக வைத்து மாலை மாற்றுவோமா கவிஞரே?”
கவிதையாக அவள் சற்றே பெரிய குரலில் கேட்க அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான் யுகேந்திரன்.
“இந்த வாயும் இல்லைன்னா நீ சாட்சிக்குக் கூப்பிட்ட அந்தச் சிட்டுக் குருவியே உன்னைத் தூக்கிக்கிட்டுப் போயிடும்.”
“ஐயையோ! அப்போ கவிஞருக்கு நித்திலா இல்…லை…” ராகமாகப் பதில் சொன்னாள் பெண். அவள் கைபிடித்து அவளைத் தன்னருகே இழுத்தவன்,
“கவிஞருக்கு இல்லைன்னா…” முழுதாக முடிக்காமல் அவள் கண்களையே பார்த்திருந்தான்.
“கவிஞருக்கு இல்லைன்னா வேறு யாருக்கும் இல்லை.” சொன்னபடியே அவன் தோள் சாய்ந்து கொண்டாள். குரலில் அத்தனை உறுதி இருந்தது.
“நித்திலா…”
“ம்…”
“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“சொல்லுங்க யுகி.”
“என்னை நிமிர்ந்து பாரு நித்திலா…” சொல்லி விட்டு அவளைத் தன் தோளிலிருந்து நிமிர்த்தினான். ஆச்சரியமாகப் பார்த்தாள் நித்திலா.
“என்னப்பா?”
“கண்ணம்மா! நான் சொல்லுறதைக் கேட்டு நீ ஆத்திரப்படக் கூடாது.” அவனை விசித்திரமாகப் பார்த்தாள் நித்திலா.
“அப்பிடி என்னத்தை சொல்லப் போறீங்க? நான் ஆத்திரப்படுற அளவுக்கு?”
“நித்தி… நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.” அவன் சொல்லி முடித்த பின் அந்த இடத்தில் சுற்றி வர இருந்த பறவைகளின் சத்தம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
அவன் சொன்ன விஷயத்தைக் கிரகிக்க நித்திலாவின் மூளை சண்டித்தனம் பண்ணியது. அவள் தோள்களைப் பிடித்து லேசாக ஆட்டினான் யுகேந்திரன்.
“நித்திலா… நான் சொன்னது புரிஞ்சுதா உனக்கு?”
“ஏன் யுகி? ஏன் இப்பிடிப் பண்ணினீங்க? ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லணும்னு உங்களுக்குத் தோனலையா?”
இமைக்காமல் தன் விழிகளுக்குள் பார்த்து அவனின் சரிபாதி கேட்ட போது… யுகேந்திரனின் இதழ்க்கடை ஓரம் கசப்பாக ஒரு புன்னகை தோன்றியது.
“சொன்னால் சம்மதிக்க மாட்டாய் என்று தெரியும் கண்ணம்மா.”
“அப்போ தெரிஞ்சும் ஏன் யுகி செஞ்சீங்க?” 
அவனிடமிருந்து ஆழமாக ஒரு பெருமூச்சு கிளம்பியது. சற்று நேரம் அமைதியாக இருந்தவன் அவளை விட்டு விலகி பக்கத்தில் இருந்த மரத்தில் சாய்ந்து கொண்டான்.
“ரொம்பப் பிரியப்பட்டுத்தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன் நித்திலா. இந்தக் காடு தான் எனக்கு எல்லாமே. அளவுக்கு மீறிக் காதலிச்சேன்…” 
எங்கோ பார்த்துக் கொண்டு கனவில் பேசுவது போல பேசினான் யுகேந்திரன். நித்திலா அவனைக் கலைக்கவில்லை.
“நடந்த விஷயம் உனக்கு வேணும்னா சம்பவமா இருக்கலாம்… ஆனா எனக்கு அப்பிடி இல்லை. அன்னைக்கு ஒருத்தன் உம்மேல கை வெச்சப்போ கூட நான் இவ்வளவு வேதனைப்படலை. யாரோ ஒரு காவாலிப்பய உம்மேல கை வெச்சுட்டா… நாம களங்கப் பட்டிருவோமா? அப்பிடித்தான் தோனிச்சு.”
“இப்போ அப்பிடித் தோனலை நித்திலா. முழுசா நான் களங்கப்பட்டு நிக்குற மாதிரித் தான் தோனுது. புகார் உங்கிட்ட வந்ததாலே நான் தப்பிச்சேன். உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப் பாரு. அப்பனும் மகனும் கூட்டுக் களவாணிங்கன்னு சொல்லி இருக்க மாட்டாங்க?”
அவன் கேள்வியில் விக்கித்துப் போனாள் பெண். இதற்கு என்னவென்று பதில் சொல்வது? 
“வேணாம்மா… அஞ்சு ரூபா சம்பாதிச்சாலும் அதை நாணயமா சம்பாதிக்கணும்னு நினைக்கிற ஆள் உம் புருஷன். என்னால இந்த இடத்துல இனி நிம்மதியா இருக்க முடியாது. அதான் உங்கிட்ட கூட சொல்லலை. எம்மேல கோபமா?”
அவனையே பார்த்திருந்தவள் அவனருகில் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். அந்த இறுக்கம் அவனுக்கு ஏதேதோ பதில்கள் சொன்னது.
“நான் கிறுக்கன் தான் கண்ணம்மா. என்னைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.”
“எனக்கு இந்தக் கிறுக்கனைத்தானே ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் என்ன செய்ய?” தன் மார்புக்குள் முகம் புதைத்துப் பிதற்றியவளின் தலையைத் தடவிக் கொடுத்தான் யுகேந்திரன்.
“நாம பேசணும் கண்ணம்மா…”
“பேசுங்க யுகி.”
“இப்பிடிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நின்னா எனக்குப் பேசத் தோனாது. வேற ஏதாவது தான் தோனும்.” அவனை விட்டுச் சட்டென்று விலகியவள் பக்கத்திலிருந்த மரத்தில் தானும் சாய்ந்து கொண்டாள்.
“சொல்லுங்க யுகி.”
“நித்திலா… இனி உம் புருஷன் ஆஃபீஸர் கிடையாது. வெறும் விவசாயி தான். இப்போ கையில இருக்கிறது வெறும் நூறு ஏக்கர் தென்னந் தோப்பு தான்.” 
“நான் காதலித்தது ஆஃபீஸரை அல்ல, என் கவிஞரை…” அவள் பதிலில் புன்னகைத்தான் யுகேந்திரன்.
“அது எங்க பரம்பரைச் சொத்து. வானதியோட தாத்தா சம்பாரிச்சது. என்னோட தாத்தாக்கெல்லாம் தமிழ் வளர்க்கத்தான் தெரிஞ்சுது. தென்னை வளர்க்கத் தெரியலை.”
“ஹா… ஹா…” அவள் சிரிப்பில் அவனும் புன்னகைத்தான்.
“அதுல இருந்து வர்றது தான் இப்போதைக்கு நமக்கு வருமானம். என்ன… ஓகே வா?”
“ஐயையோ! என்ன யுகி இப்பிடிச் சொல்லிட்டீங்க? தோப்புல இருந்து ஒரு ஐம்பதாயிரம் வருமானம் வருமா?”
“அதைவிட ஜாஸ்தியாவே வரும்.”
“அது போதாதே… என்னோட ப்யூட்டி பார்லருக்கும் காஸ்ட்லி ட்ரெஸ்ஸுக்கும் இந்தப் பணம் சுண்டைக்காய் கவிஞரே.” கேலியாகக் கூறி கைகளை விரித்தாள் நித்திலா. 
“யாரு? நீங்க? ப்யூட்டி பார்லர்? நடுரோட்டுல வியர்வை வடிய நின்ன நீங்க… ப்யூட்டி பார்லரா? நடத்துங்க… நடத்துங்க…”
“பின்ன என்ன கவிஞரே? வேலை இல்லைன்னாப் போகுது. அதுக்குப் பெருசா விளக்கம் குடுக்குறீங்க?”
“ஆ… இன்னொரு விஷயம் நித்திலா.”
“சொல்லுங்கப்பா.”
“கார் வாங்கும் போது மிஸ்டர். அன்பரசு இருபது லட்சம் எனக்குக் குடுத்து நல்ல காரா வேண்டிக்கோன்னு சொன்னார். சரி… நம்ம அப்பாதானேன்னு நானும் அதை வாங்கி ‘டௌன் பேமென்ட்’ க்கு குடுத்தேன்.”
“ம்…”
“அந்தப் பணத்தை அவர் முகத்துல வீசணும் நித்திலா.”
“யுகீ…”
“அந்த ப்ளாக் ஆடியை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உனக்குத் தெரியும். அந்தப் பணத்தைத் திரும்பக் குடுக்கலைனா என் காரை நானே வெறுத்திடுவேன்.”
“யுகீ… நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்களோன்னு எனக்குத் தோனுது. கொஞ்சம் நிதானமா…” பேசியவளைக் கை உயர்த்தித் தடுத்தான் யுகேந்திரன்.
“பட்ட அவமானமெல்லாம் போதும். இனி எந்த ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்.” உறுதியாகச் சொன்னவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் நித்திலா. உறவுகளின் அருமை இவனுக்குப் புரியவில்லை என்று தான் தோன்றியது.
“எனக்கு இப்போ பேங்க்ல லோன் குடுக்க மாட்டாங்க. கேக்கவும் முடியாது. அதனால உம் பேர்ல ஒரு லோன் எடுக்கிறேன். தவறாம ஒவ்வொரு மாசமும் பணம் கட்டிருவேன். சரியா மேடம்?” 
பக்கத்தில் கிடந்த ஒரு காய்ந்த குச்சியைப் பொறுக்கியவள் அவனை நாலு அடி அடித்தாள். 
“லொள்ளு ரொம்பத்தான் கூடிப்போச்சு கவிஞரே… அது சரி… அப்போ என்னோட சம்பளத்தை என்ன பண்ணுறது?”
“அது உன் இஷ்டம் கண்ணம்மா. அதை நீ விரும்புறவங்களுக்குக் குடு, நல்லது பண்ணு. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எம் பொண்டாட்டியை நல்லா வச்சிருக்க எனக்குத் தெம்பிருக்கு.”
அவனைக் காதலாகப் பார்த்தவள் கண்களில் மயக்கமிருந்தது. அவனை நெருங்கி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள் நித்திலா.
“இது நியாயமில்லை நித்திலா. என்னைக் கட்டிப் போட்டுட்டு நீ பாட்டுக்கு கட்டிப் பிடிக்கிறே… முத்தம் குடுக்கிறே… என்ன பண்ணுற நீ?” அவன் குரலில் ஆதங்கம் இருந்தது.
“கவிஞரே! உங்களை நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். அது என் இஷ்டம். அதுல எல்லாம் நீங்க தலைப் போடக் கூடாது. ஆனா… அத்தைக்கிட்ட கொஞ்சம் கல்யாணத்தை தாமதிக்கச் சொல்லலாமே…”
நாசூக்காகக் கேட்டாள் நித்திலா. அவளுக்கு இந்த நிலைமையில் கல்யாணம் என்பது அத்தனை ஏற்புடையதாக இருக்கவில்லை.
“முடியாது நித்திலா.” தயவு தாட்சண்யம் இல்லாமல் மறுத்தான் யுகேந்திரன்.
அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் நித்திலாவின் கையை மீறித்தான் அனைத்தும் நடந்தது. 
என்ன சொல்லியும் வானதி அவளின் பேச்சைக் கேட்கவில்லை. நல்ல நாள் பார்த்து, தேதி குறித்து, மண்டபம் பிடித்து, பத்திரிகை அடித்து என அனைத்தையும் வேகமாகச் செய்து முடித்தார்.
இப்படியொரு மாற்றம் அவருக்குத் தேவைதான் என்பதால் யுகேந்திரனும், சத்தியமூர்த்தியும் எதுவும் பேசவில்லை. அவருக்குத் துணையாக அனைத்து வேலைகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
அன்பரசு என்ற ஒரு மனிதரின் எந்தத் தலையீடும் இல்லாமல், சரியாகச் சொல்லப் போனால் அவரின் பெயரைக் கூட உச்சரிக்காமல் அவரின் ஒற்றை மகனின் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்து முடிந்தது.
இதை விட ஒரு பெரிய தண்டனையை எந்தத் தகப்பனுக்கும் கொடுத்து விட முடியாது என்று தான் நித்திலாவிற்குத் தோன்றியது. 
வானதி தரப்பிலும் நியாயம் இருந்ததால் நித்திலா வாயை மூடிக்கொண்டாள். அன்பரசுவை ஒரு தரம் பார்த்து விட்டு வரலாமா? என்று நித்திலா கேட்ட போது யுகேந்திரன் பார்த்த பார்வையிலேயே அந்த யோசனையையும் கை விட்டிருந்தாள்.
அந்த ஏரியாவின் பெரிய புள்ளிகள், இலக்கிய வட்டம், உற்றார் உறவினர் என அனைவரும் கலந்து சிறப்பிக்க நித்திலாவின் கழுத்தில் மங்கலவணி பூட்டினான் யுகேந்திரன்.
தேனில் விழுந்த எறும்பு போல திக்கு முக்காடிப் போனாள் பெண். இத்தனை சொந்த பந்தங்களை அவள் கண்ணால் கூடக் கண்டதில்லை. 
அத்தனை பேரும் ஆளுக்கொரு உறவு முறை சொல்ல நித்திலாவின் கண்கள் கலங்கிப் போயின. யாரையும் கண்டு கொள்ளாமல் அத்தனை பேர் முன்னாடியே யுகேந்திரனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
கூடியிருந்த இளையவர்கள் தான் கூச்சலிட்டுக் கேலி பண்ணினார்கள்.
கல்யாணம் முடிந்த கையோடு சத்தியமூர்த்தியின் வீட்டுக்குத் தான் அழைத்துச் சென்றான் யுகேந்திரன். நித்திலாவுக்கு அதில் லேசான அதிருப்தி இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
தான் ஆசைப்பட்ட யுகேந்திரனின் வீடு அதுவல்லவே. தன் மனதில் இருப்பதைச் சொல்லி அவர்களின் காயத்தைக் கீற அவள் பிரியப்படவில்லை.
இரவு ஊரையே ஆக்கிரமித்திருக்க நிலா ராஜவலம் வந்து கொண்டிருந்தது. வானதி கை காட்டிய ரூமிற்குள் போனவள் கொஞ்சம் திகைத்துப் போனாள்.
எந்த வித அதீத அலங்காரங்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான எல்லாவிதமான ஆயத்தங்களும் அங்கு இருந்தது.
மல்லிகைப் பூக்கள் தூவி விடப்பட்டிருந்த அந்த மெத்தையில் கனமான மனதோடு அமர்ந்தாள் நித்திலா.
சந்தோஷப்பட வேண்டிய தருணம் தான். ஆனால்… அதையும் தாண்டி, கூடு போல இருந்த ஒரு குடும்பத்தைக் கலைத்த குற்ற உணர்ச்சி மனதைத் தாக்கியது. 
கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள் நித்திலா. யுகேந்திரன் தான் வந்து கொண்டிருந்தான். எப்போதும் போல அவளை மயக்கும் வேஷ்டி சட்டை. வேஷ்டியின் நுனியை ஒற்றைக் கையால் தூக்கிப் பிடித்திருந்தான்.
“வெல்கம் மிஸஸ். யுகேந்திரன்.” அவன் குரலில் விழி சுருக்கிப் பார்த்தாள் நித்திலா.
“அதென்ன மிஸஸ். யுகேந்திரன்… நான் சொல்லுறேன்… இனி நீங்க மிஸ்டர். நித்திலா.” முறுக்கிக் கொண்டாள் மனைவி.
“ஐயையோ! இந்த ஸீன்ல நீ கொஞ்சம் வெட்கப்படணும் கண்ணம்மா…”
“அதெல்லாம் சும்மா சும்மா வெக்கப்பட முடியாது யுகி. அது தானா வரணும்.” பக்கத்தில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்த யுகேந்திரன் தனக்குத் தானே பேசிக் கொண்டான்.
“யுகேந்திரா… உன் பாடு இன்னைக்குத் திண்டாட்டம்னு தான் நினைக்கிறேன் நான்.” அவன் புலம்பி முடிக்கும் போது கட்டிலில் கிடந்த மல்லிகைப் பூக்களை அள்ளி அவன் மேல் வீசினாள் நித்திலா.
கோபமாக முகத்தை வைத்துக் கொண்டவள் அவனைக் கணக்கில் கொள்ளாது அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
யுகேந்திரனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் தோன்றியது. அவள் பக்கத்தில் அமர்ந்தவன், அவளைத் தன்புறமாகத் திருப்பினான்.
“என்னாச்சு நித்திலா?” என்றான்.
“என்ன யுகி இதெல்லாம்?” கண்களாலேயே அங்கிருந்த ஏற்பாடுகளைச் சுட்டிக் காட்டினாள் நித்திலா.
“ஏன்டா? இதெல்லாம் இயற்கை தானே?”
“நான் சொல்லுறதைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க யுகி.”
“கண்ணம்மா… அதிகம் யோசிக்காதே… என்னை அதிகம் சோதிக்கவும் செய்யாதே. உன் கட்டளைக்குக் கட்டுப்பட்டுக் கை கட்டிக் காத்திருந்த கவிஞன் நான்.”
“அதுக்கில்லை யுகி…”
“நித்திலா! வேறு பேசு.” ஆணையாக வந்தது யுகேந்திரனின் குரல்.
“உன்னைப் பற்றிப் பேசு. என்னைப் பற்றிப் பேசு. நம் வாழ்க்கையைப் பற்றிப் பேசு. வேறெதுவும் பேசாதே.”
“கஷ்டமா இருக்கு யுகி. உங்களை… அத்தையை… பார்க்கும் போது கஷ்டமா இருக்கு.”
“ஏன்டா?”
“நான் தப்புப் பண்ணிட்ட மாதிரித் தோனுது. ஒரு கூட்டைக் கலைச்சிட்டோம்னு மனசு கிடந்து தவிக்கிது.”
“முட்டாளா நீ? உன்னோட கடமையைத்தானே நீ செஞ்சே? இதுக்கு எதுக்கு வருத்தப்படுற?”
“தெரியலை யுகி. மனசு உறுத்துது. அத்தை சங்கடத்துல இருக்கும் போது… எப்பிடி… இதெல்லாம்…”
“அதுக்கு?”
“…………….” அவள் பேசவில்லை.
“கொன்னே போட்டிடுவேன். என்ன விளையாடுறியா?” அவளைக் கோபமாக முறைத்தவன் அந்த முகம் வாடுவதைக் காணப் பொறுக்காமல் அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டுக் கொண்டான்.
“நாம் வேறு பேசலாம் கண்ணம்மா.”
“ம்…”
“நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று. பொக்கிஷம் போல நினைவுப் பெட்டகத்தில் சேகரிக்க வேண்டிய நாள் பெண்ணே.”
“அது தெரியுது…” அவள் பதிலில் சிரித்தான் யுகேந்திரன்.
“சங்க இலக்கியத்தில் வரும் பெண்கள் உன் போல ராட்சசிகள் அல்ல தெரியுமா?” சொன்னவனை முறைத்தாள் நித்திலா.
“காதல் வாழ்க்கையில் கற்புக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதே போல களவுக்கும் காதலனை அனுமதித்தார்கள்.”
“ஓஹோ!”
“சிலப்பதிகாரத்தில் கோட்டோவியமாகக் காட்டப்பட்ட முதலிரவு அகநானூறில் தான் இலக்கிய நயத்தோடு சொல்லப் பட்டிருக்கிறது கண்ணம்மா?”
“என்னவாம்…” சிணுங்கலோடு கேட்டாள் பெண்.
“தனித்த அறையில் தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கிறாள். தலைவன் அவள் கைகளை விலக்கி விடத் தொடுகிறான். அந்த முதல்த் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்து விடுகிறது.”
“அடேங்கப்பா!”
“அவளின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன் அவளின் அச்சத்தைப் போக்கும் விதமாக ‘உன் மனதில் நினைப்பதை அஞ்சாமல் கூறு’ என்று அவளோடு நயமாகப் பேசுகிறான்.”
“ம்…”
“இன்னுமொரு இடத்தில் இப்படிச் சொல்கிறான்.”
“எப்படி?”
“என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள்.”
“சபாஷ்!”
“கசங்காத புத்தாடையால் தன்னை மறைத்துக் கொள்கிறாள் பெண்.”
“ம்…”
“தலைவன் ‘உன் பிறை நெற்றியில் அதிக புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையைப் போக்க உன் ஆடையைக் கொஞ்சம் திற’ என்கிறான்.”
“ம்க்கும்… ரொம்ப அக்கறை தான்.”
“ஹா… ஹா… ‘உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப…’ என்று பாடல் வரும். பொருள் புரிகிறதா?”
“ம்… உறையிலிருந்து எடுத்த வாள் போல அவள்…” மேலே சொல்லவில்லை நித்திலா. யுகேந்திரன் புன்னகைத்துக் கொண்டான்.
“நாணங் கொண்ட பெண் தன் மலரணிந்த கருமையான அடர்ந்த கூந்தலால் தன்னை மறைத்துக் கொள்கிறாள். இது ஒரு பாட்டுல கூட வரும் நித்திலா.”
“என்ன பாட்டு?”
“தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே…
ஆடை என்ன வேண்டுமா…
நாணம் என்ன வா வா..” அவன் பாடவும் மெய்சிலிர்த்தது பெண்ணுக்கு. அவனை அண்ணாந்து பார்த்தாள்.
“பேசி மயக்கும் சித்து வித்தை உங்களுக்கு நன்றாக வருகிறது.”
“இன்னும் நிறைய வித்தை வரும் கண்ணம்மா. எனக்கு அனுமதி கொடு.”
“நீங்கள் கவிஞர் தானே யுகி?”
“எனக்கென்ன தெரியும்? நீதான் சொல்கிறாய்.”
“உங்கள் இலக்கியத்தில் தலைவி வேண்டாம் என்றால் வேண்டும் என்றுதானே பொருள்?” அவள் சொல்லி முடித்த கணத்தில் யுகேந்திரனின் கண்கள் பளபளத்தது.
“என் திருட்டுக் கண்ணம்மா…” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அந்தக் கவிஞனின் வல்லினத்திலும் மெல்லினத்திலும் நொறுங்கிப் போனது அவள் இடையினம்.
இதுவரை அறம் பொருள் என இலக்கியம் பேசிய கவிஞன் முதன் முறையாக இன்பம் சேர்த்தான். அவளையும் சேர்த்துக் கொண்டான்.

error: Content is protected !!