nk17

நிலவொன்று கண்டேனே 17
அந்த ப்ளாக் ஆடி வீட்டின் முன் சர்ரென்று வந்து நின்றது. வலது  கையில் அத்தனை பெரிய கட்டு இருந்தாலும் கம்பீரமாக இறங்கினார் அன்பரசு.
காரை யுகேந்திரன் தான் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான். ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி இருந்தாலும் அப்பாவோடான பழைய நெருக்கம் இன்னும் வரவில்லை.
இரண்டு நாட்கள் ஹாஸ்பிடல் வாசத்தை முட்டி மோதிச் சமாளித்த அன்பரசுவிற்கு இன்று தான் ஆசுவாசமாக இருந்தது. வீட்டிற்கு முன்னால் நின்றபடி ஆழ்ந்து சுவாசித்தவர் மடமடவென உள்ளே போனார்.
“முருகா! உங்க ஐயாவை அங்கேயே நிக்கச் சொல்லு.” வானதியின் குரலில் மின்சாரத்தைத் தொட்டாற் போல நின்றார் அன்பரசு.
அவர் கண்கள் பொய் சொல்லவில்லை. சாட்ஷாத் வானதியே தான். கைகளில் ஆரத்தித் தட்டோடு அங்கே அப்போது இல்லாத முருகனை அழைத்தபடி வந்து கொண்டிருந்தார்.
யுகேந்திரனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தார் அன்பரசு. அவர் தன்னை நோக்கித் திரும்புவது தெரிந்த உடனேயே வானத்தைப் பார்த்தான் அந்த வம்புக்காரன். உதட்டில் புன்னகை இருந்தது.
அன்பரசுவிற்கு வாயெல்லாம் புன்னகையாகிப் போனது. அவரிடம் யாரும், ஏன்… நித்திலா கூட வானதி வீட்டுக்கு வந்ததைச் சொல்லவில்லை.
தன் முன்னே மனைவி சூடத்தைச் சுற்றவும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றார் அன்பரசு. கை இயல்பாக மீசையைத் தடவிக் கொண்டது.
மனம் நிறைந்து போனது மனிதருக்கு. இத்தனைக்கும் வானதி அவர் முகம் பார்க்கவே இல்லை. அந்த அழகிய முகத்தில் கடுகளவும் ஸ்நேகம் தெரியவில்லை. இருந்தாலும், மனைவி பக்கத்தில் இருப்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
ஆரத்தித் தட்டோடு வாசலுக்கு வந்தார் வானதி. யுகேந்திரன் இன்னும் அங்கேயே தான் நின்றிருந்தான். 
“அம்மா…” வானதியின் முகம் பார்த்து லேசாக இழுத்த மகனை  உறுத்து விழித்தவர் வீட்டிற்குள் சென்று விட்டார். யுகேந்திரன் ஒரு பெரு மூச்சோடு தலையில் கை வைத்துக் கொண்டான்.
ஹாஸ்பிடலில் வைத்து நித்திலா பண்ணிய களேபரத்தில் யுகேந்திரன் முழி பிதுங்கிப் போனான்.
‘அத்தைக்கிட்டப் பேசுங்க யுகி ப்ளீஸ்.’ இதே பல்லவியை மீண்டும் மீண்டும் மனைவி பாடவும் அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. பயந்த படியே தான் வானதியை அணுகினான்.
அம்மாவின் குணம் மகனுக்கு நன்றாகத் தெரியும். பழக மிகவும் இனிமையான வானதி ஒன்றை வெறுத்து வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் மாற்றுவது மிகவும் கஷ்டம்.
தான் சொல்ல வந்ததை யுகேந்திரன் சொல்லி முடித்த போது மகனை ஒரு பார்வை மட்டுமே பார்த்தார் வானதி. அந்தப் பார்வையில் அவன் முதுகுத்தண்டு சில்லிட்டது. 
மறுக்கவில்லை… சண்டை போடவில்லை. ஆனால் அந்த முகத்தில் அவரை நெருங்க முடியாத ஒரு இறுக்கம் தெரிந்தது. 
எத்தனை தூரம் கலகலப்பாக இருப்பாரோ, அதற்கு எதிர்மாறாக ஒடுங்கிப் போனார். சத்தியமூர்த்தி அழைத்தபோது எதுவும் சொல்லாமல் கிளம்பி வந்தார். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். ஆனால்… யாரோடும் எதுவும் அனாவசியமாகப் பேசவில்லை. 
இது எதையும் கண்டு கொள்ளும் நிலையில் அன்பரசு இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து வந்தவர் கை நனையாமல் ஃப்ரெஷ்ஷாக ஒரு குளியல் போட்டார். டைனிங் டேபிளில் உட்கார்ந்து நீண்ட நாட்களுக்குப் பின் மனைவி கையால் சூடாக இட்லி சாம்பார் சாப்பிட்டார். சுகமாகத் தூங்கி விட்டார். 
மதியம் ஒரு மணி. நித்திலா மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்திருந்தாள். தான் யுகேந்திரனோடு காதலாக ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட வீடு. மனதுக்குள் மத்தாப்பு ஒன்று சிதறுவது போல மகிழ்ச்சியாக உணர்ந்தாள். 
சோஃபாவில் உட்கார்ந்த படி டீவி பார்த்துக் கொண்டிருந்தார் அன்பரசு. உள்ளே நுழைந்த மருமகளைப் பார்த்த போது இயல்பானதொரு புன்னகை தோன்றியது.
“மாமா.”
“வாம்மா.”
“கை எப்படி இருக்கு? வலி இன்னும் இருக்கா மாமா?”
“கொஞ்சம் இருக்கும்மா. பெயின் கில்லர் குடுத்திருக்காங்க.”
“ம்… சாப்பிட்டுட்டு மறக்காம போடுங்க மாமா.” சொன்னபடியே இயல்பாகக் கிச்சனுக்குள் போனாள் நித்திலா. வானதி சமையலில் மும்முரமாக நின்றிருந்தார்.
“அத்தை.”
“வந்துட்டியாம்மா… இதோ! எல்லாம் முடிச்சிட்டேன். சாப்பிடலாம். ரொம்பப் பசிக்குதா?”
“இல்லை அத்தை. நீங்க ஆறுதலாவே பண்ணுங்க. நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?”
“அடி வாங்கப் போறே நீ. ஓடு… போய் முகம் கழுவிட்டு வா  சாப்பிடலாம். யுகேந்திரன் எங்க நித்திலா?”
“காரைப் பார்க் பண்ணுறாங்க அத்தை.” சொல்லிவிட்டு ரூமிற்குள் வந்தாள் நித்திலா. கணவனின் கைகள் அவளை வளைத்துக் கொண்டன.
“எல்லாரையும் பேசியே வசியம் பண்ணியாச்சா?”
“சும்மா போங்க கவிஞரே. யாரை வசியம் பண்ணி என்ன பண்ண? இந்தக் கவிஞரை வசியம் பண்ண முடியலையே.”
“இந்த ஸ்டேட்மென்ட்டை உலகம் நம்புங்கிறே?”
“நம்பாதுங்கிறீங்களா?”
“உன்னோட வயித்துக்குள்ள இருக்கிற பொடுசு கூட நம்பாது.”
“அப்படியா?” கண்களை உருட்டி ஒரு நாடகமாடியவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் யுகேந்திரன்.
“அத்தை சாப்பிட வரச் சொன்னாங்க.” என்றாள் நெளிந்தபடி.
“போகலாம்…” காரியத்தில் கண்ணாக இருந்தவனைக் கலைத்தது வானதியின் குரல்.
“நித்திலா! எல்லாரும் சாப்பிட வாங்க.” 
“ம்ப்ச்…” அவன் சலிப்பில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் நித்திலா. அவளை முறைத்த படியே ரூமை விட்டு வெளியேறினான் யுகேந்திரன்.
அனைவரும் டைனிங் டேபிளில் வளைத்து உட்கார வானதி பரிமாறிக் கொண்டிருந்தார். 
“அத்தை நீங்களும் உக்காருங்க.”
“இல்லைம்மா… நீங்க சாப்பிடுங்க.”
“பரவாயில்லை அத்தை, உக்காருங்க. மாமா… நீங்களாச்சும் சொல்லுங்க.” நித்திலாவின் வற்புறுத்தலில் அங்கே ஒரு கணம் ஒருவிதமான சங்கடம் தோன்றியது.
அழைத்தவுடன் வந்து விட்டாலும் அத்தை மாமாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை நித்திலாவின் கண்கள் கவனித்த படியே தான் இருந்தன. 
யுகேந்திரனுக்கும் அது புரிந்தாலும் வாய் திறக்க அத்தனை தைரியம் வரவில்லை. அம்மாவின் பிடிவாதம் அவனறிந்தது. ஆனால் நித்திலா எதையும் கண்டு கொள்ளவில்லை.
“நாங்க சொன்னா அத்தை கேக்க மாட்டேங்குறாங்க. நீங்க சொல்லுங்க மாமா.” நித்திலா சொல்லி முடிக்க அன்பரசுவின் ஃபோன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவர் அவசரமாகக் காதுக்குக் கொடுத்தார்.
“சொல்லுப்பா…” மறுமுனையில் என்ன சொன்னார்களோ? அன்பரசுவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
“நான் சத்தமா ஒரு வார்த்தை அதட்டிச் சொன்னா வேட்டியை நனைக்கிற பய… அவனுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திடுச்சா? சரி நான் உன்னை அப்புறமாக் கூப்பிடுறேன்.” சொன்னவர் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
“என்னாச்சு மாமா?” 
“ஒன்னும் இல்லைம்மா. அன்னைக்கு சைக்கிள்ல வந்த அந்தப் பொறம்போக்கைப் பிடிச்சாச்சு.” நிதானமாகச் சொல்லி விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார் அன்பரசு. யுகேந்திரனுக்கும், வானதிக்கும் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் தோன்றினாலும் மௌனமாகவே இருந்தார்கள்.
“யாராம் மாமா அது?” தயங்கிய படியே கேட்டாள் நித்திலா.
“அது… நீ ஒரு பால் பண்ணைக்கு சீல் வச்ச இல்லைம்மா… அந்த ஃபாக்டரி ஓனரோட பையன் வேலை. அவனோட ஆளாம்.”
“ஓ…”
“ம்… அப்பாவை வெளியே கொண்டு வர ரொம்பவே முயற்சி பண்ணுறான் போல. அது முடியாம போகும் போது வர்ற ஆத்திரம் உம்மேல திரும்பி இருக்கு.”
“நான் என்னோட கடமையைத் தான் செஞ்சேன் மாமா.” அவள் விளக்கத்தில் புன்னகைத்தார் அன்பரசு.
“இப்பவும் சம்பந்தப்பட்டவனைப் போலீஸ்ல ஒப்படைச்சு மகனையும் உள்ள தள்ள முடியும். ஆனா வேணாம்மா… அது இன்னும் வன்மத்தைத் தான் வளர்க்கும்.”
“சரி மாமா.”
“வெளியே போகும் போது கொஞ்சம் கவனமா இரும்மா. நானும் காவலுக்கு ஏற்பாடு பண்ணுறேன்.”
“இல்லை மாமா, போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்காங்க.” அவள் சொல்லவும் கேலியாகப் புன்னகைத்தார் அன்பரசு.
“கறுப்பனை பழைய படி வரச்சொல்லுறேன்.” யுகேந்திரன் அப்போதுதான் வாயைத் திறந்தான்.
“பழைய படின்னா? அப்போ இதுக்கு முன்னாலே கறுப்பன் இருந்தானா? ஏன்? என்னாச்சு?” அன்பரசுவின் கேள்வியில் நித்திலாவும், யுகேந்திரனும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். நினைக்கவும் விரும்பாத நிகழ்வு.
“நித்திலா… நீ சாப்பிடு முதல்ல. பழைய கதையை அப்புறமா பேசிக்கலாம்.” வானதியின் அதட்டலில் எல்லோரும் மீண்டும் சாப்பாட்டில் கவனமானார்கள். அன்பரசின் முகத்தில் சிந்தனை தோன்றியது
எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவும் வானதி பசியாற அமர்ந்தார். அத்தைக்கு நித்திலா பரிமாற ஆண்கள் இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். வானதி முடிக்கும் வரை காத்திருந்த நித்திலா,
“யுகி…” என்றாள்.
“ம்…” ஃபோனைக் குடைந்து கொண்டிருந்தவன் அண்ணாந்து பார்த்தான். தன் கணவனுக்கு மாமனாரை நெருங்குவதில் ஒரு தயக்கம் இருப்பதை நித்திலாவும் உணர்ந்திருந்தாள்.
“முழுசா உருவாகல்லை… முகத்தைக் கூட இன்னும் நாம பார்க்கலை…” அவள் நிறுத்தவும் மூவரும் பேசும் அவளையே பார்த்திருந்தார்கள்.
“அந்தக் குழந்தையைத் தொலைச்சிடுவோமோன்னு அன்னைக்கு நாம அவ்வளவு பயந்தோமே…” யுகேந்திரனின் கண்ணோரம் சுருங்கியது. இவள் என்ன சொல்ல வருகிறாள்?
“ஒரு அப்பா முப்பது வருஷமா பார்த்துப் பார்த்து வளர்த்ததைத் தொலைச்சிட்டு நிக்குறாரே… அவரைப் பார்த்து உங்களுக்கு மனசு பதறலையா யுகி?” அந்தக் கேள்வியில் யுகேந்திரன் நிலை குலைந்து போனான். 
தலை சட்டென்று குனிய மௌனமாகவே இருந்தான். வானதி கூட இதை எதிர்பார்க்கவில்லை. உருண்டு திரண்ட இரு நீர்த்துளிகள் அவன் ஃபோனில் பட்டுத் தெறிக்கவும் அன்பரசு தவித்துப் போனார்.
“யுகேந்திரா…” நாற்காலியை உதறிவிட்டு மகனிடம் விரைந்தவர் அவனை வாரி அணைத்துக் கொண்டார்.
“நீ எதுக்குக் கண்ணு கலங்குறே? நீ என் சிங்கக் குட்டிடா. தப்புப் பண்ணினது அப்பா கண்ணு. அப்பாதான் அழணும், அப்பா தான் உங்கிட்ட மன்னிப்புக் கேக்கணும்.”
அன்பரசு பேசப் பேச யுகேந்திரனின் உடல் குலுங்கியது. அப்பாவை இறுக்கமாகக் கட்டிக் கொண்டவன் அவர் தோளில் தலை சாய்த்து அழுதான்.
“இல்லைப்பா… நான் தான் தப்புப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா…” கதறும் மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
நித்திலா நடப்பது அனைத்தையும் ஒரு நெகிழ்வோடு பார்த்திருந்தாள். வானதி சட்டென்று கிச்சனுக்குள் போய் விட்டார். அவர் கண்களும் கலங்கினாற் போலத்தான் தெரிந்தது.
லன்ச் ப்ரேக் முடிந்திருக்கவும் மீண்டும் ஆஃபீசுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் நித்திலா. நேற்றுத்தான் எல்லோரும் இந்த வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
வந்ததிலிருந்து அந்த ரூமின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் ரசித்து ரசித்துப் பார்த்தாள் பெண். முதன்முதலாக இந்த வீட்டுக்கு வந்த போது அவள் யுகேந்திரனின் தோழி தான்… காதலியல்ல.
வந்தாள்… கொஞ்சம் நேரம் செலவழித்தாள்… போய்விட்டாள், அவ்வளவு தான். பிற்பாடு காதல் வந்தபோது மீண்டும் வர சந்தர்ப்பம்  அமையவில்லை.
அவன் அலமாரியைத் திறந்து நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்தாள். சின்னதாக ஒரு ஃப்ரேமில் அவள் ஃபோட்டோவும் இருந்தது.
‘என்ன அது?’ அவன் ஆடைகளுக்கு நடுவில் அவளுக்குப் பரிட்சயமானது போல் ஒன்று தெரிந்தது. அடுக்கைக் குலைக்காமல் மெதுவாக எடுத்துப் பார்த்தாள். 
அன்று அவள் அணிந்திருந்த புடவை. அதற்குள் பத்திரமாக அந்தக் கிழிந்த ஜாக்கெட்டும் இருந்தது. கைகள் தானாகப் புடவையைத் தடவ எண்ணங்களோ பின்னோக்கி ஓடியது. டாக்டர் ஆன்ட்டியின் வீட்டில் எடுத்திருப்பான். 
அவள் சிந்தனையைக் கலைத்த படி பின்னிருந்து அணைத்தான் கணவன். அந்த அணைப்பில் கொஞ்சம் வேகமிருந்தது.
“கண்ணம்மா… தான்க் யூ… தான்க் யூ கண்ணம்மா…” அவன் பிதற்றலில் புன்னகைத்தாள் நித்திலா.
“அப்பாக்கிட்ட பேச கவுரவம் தடுக்குதோ ஐயாவுக்கு?”
“ஐயையோ! அது கவுரவம் இல்லைடா… ஏதோ ஒரு தயக்கம்… தப்புப் பண்ணிட்டோம்னு ஒரு குற்ற உணர்ச்சி.”
“நீங்க என்ன தப்பு பண்ணினீங்க யுகி?”
“அப்பா தப்புன்னு தெரிஞ்சப்போ நிமிஷத்துல அவரைத் தூக்கிப் போட்டுட்டேனே நித்திலா. அவரில்லாமக் கல்யாணத்தை நடத்துற அளவுக்கு துணிச்சல் வந்திடுச்சே நித்திலா.”
“ம்… சரி விடுங்க. மகனை சரிக்கட்டியாச்சு… அம்மாவை என்ன பண்ணுறது?”
“அது கொஞ்சம் கஷ்டம்தான் நித்திலா. விட்டுப் பிடிக்கலாம்.”
“விட்டாப் பிடிக்க முடியாது யுகி. பாவம் உங்கப்பா. உங்கம்மாவை ஏக்கமா பார்க்கும்போது எனக்கே பரிதாபமா இருக்கு தெரியுமா?”
“ஏய்… என்ன நீ? எப்பப் பார்த்தாலும் அவங்களைப் பத்தியே பேசிக்கிட்டு. என்னைப் பத்தி யோசிக்க மாட்டியா?”
“உங்களைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு?”
“அடியேய்!” சொன்னபடியே அவளைத் தன்புறமாகத் திருப்பியவன் அவள் கையிலிருந்த புடவையை அப்போதுதான் கவனித்தான். அவன் கை அந்த ஜாக்கெட்டைத் தடவியது. 
அப்பா சற்று முன்பு சொன்ன சேதிகள் மனதில் ஓடினாலும் அதைப் புறந்தள்ளிவிட்டு மனைவியைக் கவனித்தான் யுகேந்திரன்.
“இந்தப் புடவையை அணைச்சிக்கிட்டு எத்தனை நாள் தூங்கி இருக்கேன் தெரியுமா?”
“………..” 
“கர்ணன் அம்மாவோட புடவையைப் பத்திரப்படுத்தின மாதிரி… எனக்கு என் காதலியோட புடவை.” பேசிய படியே அவளை அலமாரியின் கதவோடு சேர்த்துப் பிடித்தான். அவன் பார்வையே ஆயிரம் சேதிகள் சொன்னது நித்திலாவிற்கு.
“யுகி… எனக்கு ஆஃபீசுக்கு நேரமாச்சு…”
“போகலாம் கண்ணம்மா… இன்னும் டைம் இருக்கு.” அவன் காரியம் தான் அவனுக்குப் பெரிதாகப் போனது.
“நீங்க தான் என்னை… ட்ராப்… பண்…” வார்த்தைகள் வரவில்லை. வர வழியும் இருக்கவில்லை.
அலுத்துக் களைத்துப் போய் வீடு வந்திருந்தாள் நித்திலா. நேரம் மாலை ஆறைத் தாண்டி இருந்தது. சின்னதாக ஒரு குளியல் போட்டுவிட்டு ரூமை விட்டு வெளியே வந்தாள். வீடு அமைதியாக இருந்தது. கிச்சனில் வானதியின் அரவம் கேட்டது. அடிக்கடி இப்போது அங்கே தான் புகுந்து கொண்டார் வானதி.
“அத்தை… எங்க யாரையும் காணோம்?” கேட்டவள் கையில் காஃபியைக் கொடுத்தவர் கண் ஜாடையில் வெளியே காட்டினார். 
அவர் பார்வையைத் தொடர்ந்த நித்திலா மலர்ந்து போனாள். அன்றைக்குப் போல இன்றைக்கும் ‘பார்பிக்யூ’ ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.
யுகேந்திரன் ஏதோ சொல்ல அன்பரசு அதற்கு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேரும் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி இருந்தார்கள்.
“அத்தை… வாங்க அங்க போகலாம்.”
“இல்லைம்மா… நீ போ, நான் வரலை.”
“அத்தை…” 
“போம்மா…” அதற்கு மேல் நித்திலாக்கும் வற்புறுத்த முடியவில்லை. 
கார்டனுக்கு வந்தவளைக் கண்களாலேயே கேள்வி கேட்டான் யுகேந்திரன். நித்திலாவோடு வானதியையும் அவன் எதிர் பார்த்திருந்தான். உதட்டைப் பிதுக்கினாள் மனைவி. 
மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்தது. அப்பாவும் மகனும் அடித்த லூட்டி பார்ப்பதற்கு அத்தனை இதமாக இருந்தது. நித்திலாவிற்கு எல்லாம் புதிதாக இருந்தது. அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
“மாமா… உங்க பையனைப் பாடச் சொல்லுங்க.” நித்திலா அவள் பங்கிற்கு ஆரம்பித்து வைத்தாள்.
“அதான் அம்மிணி கேக்குதில்லை… பாடு கண்ணு.” அன்பரசுவின் உத்தரவில் நித்திலாவை முறைத்தான் யுகேந்திரன்.
“அங்க என்ன முறைப்பு? பாடுங்கிறேனில்லை…” அப்பாவின் அதட்டலில் புன்னகைத்தான் மகன்.
சூழ்நிலைக்குத் தக்கபடி இலக்கியம் பேசுவதில் அவனை அடிக்க ஆள் உண்டா என்ன? என்ன பாடப் போகிறான் என்று நித்திலா ஆவலாகக் காத்திருந்தாள்.
‘சிங்கம் என்றால் என் தந்தை தான், செல்லம் என்றால் என் தந்தை தான், கண் தூங்கினால் துயில் நீங்கினால், எம் தந்தை தான் என் தந்தை தான், எல்லோருக்கும் அவர் விந்தை தான்.’
அவன் பாடவும் நித்திலா ஸ்தம்பித்துப் போனாள். இப்படியொரு பாடலை அவள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அன்பரசு கூட லேசாகக் கண் கலங்கப் புன்னகைத்துக் கொண்டார்.
நித்திலாவுக்கு ஏதோ ஒரு உணர்வு தூண்ட கிச்சனைத் திரும்பிப் பார்த்தாள். வானதி வைத்த கண் வாங்காமல் அன்பரசையே பார்த்த படி இருந்தார். கண்களில் காதல் வழிந்தது.
மாமனாரைப் பார்த்தவள் கிச்சன் பக்கமாக அவருக்கு கண்ணால் ஜாடை காட்டினாள். திரும்பிப் பார்த்த அன்பரசு வானதியின் பார்வையில் உருகிப் போனார். 
கணவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தவுடன் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டார் வானதி. 
அன்பரசுவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அதையும் தாண்டி ஒரு கர்வம் பொங்கி வழிய மீசையைத் தடவிக் கொண்டார். இந்த நாடகத்தைப் பார்த்திருந்த யுகேந்திரன் மனைவியைத் திரும்பிப் பார்க்க மாமனார் அறியாத வண்ணம் கண் சிமிட்டினாள் பெண். 
‘இருக்குடி இன்னைக்கு உனக்கு.’ அவளுக்குப் புரியும் படி வாய்க்குள் முணு முணுத்தான் யுகேந்திரன். உதட்டைப் பிதுக்கி, மூக்கைச் சுருக்கி அழகு காட்டியது பெண்.
‘இல்லம் சங்கீதம்.’