nk19
nk19
நிலவொன்று கண்டேனே 19
அந்தப் பெரிய பங்களாவின் ஹாலில் தோரணையாக அமர்ந்திருந்தார் அன்பரசு. அகண்ட திண்டுக்களுடனான சோஃபாவில் அவர் அமர்ந்திருந்த விதம் பார்ப்பதற்கு ராஜ களையாக இருந்தது.
எதிரே இருந்த சோஃபாவில் ராஜலிங்கம் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் நம்பியார் போல கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார் அவர் மகன் மாணிக்கவேல்.
மாணிக்கவேல் அன்பரசைப் பார்த்த பார்வையில் அத்தனை ஸ்நேகம் இருக்கவில்லை. ஆனால் ராஜலிங்கம் நிதானமாகக் தான் அமர்ந்திருந்தார்.
“நான் சொன்னதையெல்லாம் நிதானமா சிந்திச்சுப் பாரு லிங்கம். வேண்டிய மட்டுக்குச் சொத்துப் பத்து சேமிச்சுட்டே. அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சம் புண்ணியத்தையும் சேக்கலாமேப்பா.” மீசையை நீவிய படியே சொன்னார் அன்பரசு.
ராஜலிங்கம் அமைதியாகக் கேட்ட படியே இருந்தார். அன்பரசுவின் மேல் அவருக்கு நல்ல மரியாதை இருந்தது. ஒரே ஊர்க்காரர்கள் வேறு. ஆனால் மகன் ஏகத்துக்கும் குதித்தான்.
“உங்க மருமகள் எங்கிறதால தான் இப்படிப் பேசுறீங்க ஐயா.” மிகவும் சூடாக வந்தது பேச்சு.
“ஏன் தம்பி? இதே மருமகள் தான் என்னையும் தூக்கி உள்ளே வெச்சா? அதை மறந்திட்டுப் பேசாதே.”
“அதைத்தான் நானும் சொல்லுறேன். நீங்க எல்லாத்தையும் மறந்திட்டு உங்க வசதிக்கு அவங்களோட இப்போ கூட நிக்கிறீங்க.” வார்த்தைகள் கொஞ்சம் வீரியமாகத்தான் வந்து வீழ்ந்தன. அன்பரசு நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டார்.
“எத்தனை கஷ்டப்பட்டு எங்கப்பாவை வெளியே கொண்டு வந்திருக்கேன் தெரியுமா? அதுக்கெல்லாம் காரணம் அந்தப் பொம்பளை தான். அவங்களை நான் சும்மா விடமாட்டேன்.”
அதற்கு மேலும் அன்பரசு அமைதியாக இருக்கவில்லை. ஒரு வேகத்தோடு எழுந்தவர் வேஷ்டியை மடித்துக் கட்டினார்.
“என்னடா பண்ணுவ? இல்லை என்னடா பண்ணுவ? நானும் போகுது சின்னப் பையன்னு பார்த்தா ரொம்பத்தான் எகிறுர? நீ அனுப்பி வெச்சியே ஒருத்தன், அருவாளைக் குடுத்து. அவன் இன்னும் எங்கிட்டத்தான் இருக்கான். உன்ற அப்பாவோட முகத்துக்காகப் பார்க்கிறேன். இல்லைன்னா நடக்கிறதே வேறே. என்ற வயசுக்கு உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்.”
அன்பரசுவின் கர்ஜனையில் ராஜலிங்கம் ஆடிப்போனார். மகனை ஒரு முறைப்பு முறைத்தவர், அன்பரசைப் பிடித்து மீண்டும் சோஃபாவில் உட்கார வைத்தார்.
“ஐயா! நீங்க உக்காருங்க ஐயா. அவன் ஏதோ சின்னப் பையன் புரியாமப் பேசுறான்.”
“வார்த்தைகளை விடும் போது பார்த்து விடணும் லிங்கம்.” அப்பா தனக்கு எதிராகப் பேசவும் கோபத்தோடு உள்ளே போனார் மாணிக்கவேல். பெரியவர்கள் இருவரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை.
“லிங்கம்… உம் பையனுக்கு வர்ற இதே கோபம் தான் எனக்கும் அன்னைக்கு வந்திச்சு. ஆனா நல்லா யோசிச்சுப் பாருப்பா. எங்கேயோ பொறந்து எங்கேயோ வளந்து இந்தத் தொழிலைச் சாதகமாப் பயன்படுத்தி நாலு காசு சம்பாதிக்காம நம்ம ஊரு மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்குதுப்பா அந்தப் பொண்ணு.”
ராஜலிங்கம் எதுவும் எதிர்த்துப் பேசவில்லை. முகத்தில் சிந்தனை தெரிந்தது. அமைதியாகக் கேட்டபடியே உட்கார்ந்திருந்தார்.
“இத்தனைக்கும் அருவாளோட வந்தவன் உம் பையன் அனுப்பின ஆள்தான்னு அந்தப் பொண்ணுக்கு நல்லாத் தெரியும். அவன் இன்னும் எங்கிட்டத்தான் இருக்கான்னும் தெரியும். அவனைத் தூக்கிப் போலீஸ்ல குடுத்திருந்தா இன்னைக்கு உம் பையனும் உள்ளே தான் இருந்திருப்பான்.”
இதைச் சொல்லும் போது மட்டும் ராஜலிங்கம் கொஞ்சம் அசைந்து கொடுத்தார்.
“உம் பையன் உள்ளே இருந்திருந்தா நீ எப்படி வெளியே வந்திருக்க முடியும் சொல்லு. பிரச்சினை தீர்ந்ததுன்னு அது பாட்டுக்கு போயிருக்கலாமில்லை. ஆனா அந்தப் பொண்ணோட நோக்கம் அது இல்லை லிங்கம். உன்னைக் குடும்பத்தோட உள்ளே தூக்கி வெக்கிறதுல என்ன இருக்கு? மக்களுக்கு கெடுதல் நடக்கக் கூடாதுன்னு நினைக்குது அவ்வளவுதான்.”
“புரியுது ஐயா.”
“அரசாங்கத்துக்கு வேலை பார்க்கிறவங்க ஒன்னும் கூமுட்டை இல்லை லிங்கம். நீ வெளியே வரப்போறது அங்க தெரிஞ்சிருக்கு. உம்பையன் அவனோட மாமனார் பேர்ல லைசன்சுக்கு அப்ளை பண்ணி இருக்கிறது கூட அங்க தெரிஞ்சிருக்கு.”
“என்ன சொல்லுறீங்க ஐயா? என்ன லைசென்ஸ்? எனக்கு ஒன்னும் தெரியாதே?”
“நினைச்சேன்… உனக்குத் தெரியாமத்தான் நிறைய விஷயங்கள் நடக்குதுன்னு நான் அப்பவே நினைச்சேன். வேணாம் லிங்கம். உன் பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வை. இதுக்கு மேலே உம் பையனால என்ற மருமகளுக்கு ஏதாவது ஆச்சு… அதுக்கப்புறம் இந்த அன்பரசை நீ பகைச்சுக்க வேண்டி வரும்.”
“ஐயையோ! என்ன வார்த்தை ஐயா பேசுறீங்க? நான் பார்த்துக்கிறேன். பையன் எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். இனி கவனிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க.”
“நல்லது லிங்கம். நான் அப்போ கிளம்புறேன்.” எழுந்து வணக்கம் வைத்த அன்பரசு விடு விடு வென்று காருக்குப் போய்விட்டார்.
முருகன் கதவைத் திறந்து விட உள்ளே அமர்ந்தவர் நெற்றியைக் கையால் தடவிக் கொண்டார்.
“ஐயா!”
“சொல்லு முருகா.”
“நாலு தடவை வீட்டுல இருந்து கால் வந்தது. நீங்க ஒரு தடவை பேசிடுங்க ஐயா.” கால் பண்ணியது வானதி என்று அன்பரசுக்குத் தெரியும். மீசையைத் தடவிய படி சிரித்தவர்,
“இருக்கட்டும் வீட்டுக்குப் போயே பேசிக்கிறேன். நீ காரை எடு.” என்றார்.
“சரிங்க ஐயா.”
நேற்று இரவு வானதி கொஞ்சம் சமரசம் ஆகி இருந்தாலும் பழையபடி அத்தணை சரளமாகப் பேசவில்லை. அன்பரசுவும் விட்டுப் பிடிக்கலாம் என்று விட்டு விட்டார்.
காலையிலேயே யுகேந்திரனோடு ராஜலிங்கத்தை அன்று சந்திக்க இருப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் அன்பரசு.
அப்பொழுதிலிருந்து கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தார் வானதி. கணவனிடம் ஏதோ சொல்ல நினைப்பது போல இருந்தது அவர் முகம்.
அன்பரசு எதையும் கண்டு கொள்ளவில்லை. எப்போது எல்லாவற்றையும் மறந்து இயல்பாகச் சொல்லத் தோன்றுகிறதோ அப்போது சொல்லட்டும் என்று வெளியே போய்விட்டார்.
காரை வீட்டின் முன் முருகன் நிறுத்த இறங்கிக் கொண்டார் அன்பரசு. கார்ச் சத்தம் கேட்கவும் வாசலுக்கு விரைந்து வந்தார் வானதி.
“பேசினீங்களா?” தயக்கம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.
“ம்… பசிக்குது. முதல்ல சாப்பாடு போடு அம்மிணி.” கையைக் கழுவிக்கொண்டு நிதானமாக டைனிங் டேபிளில் அமர்ந்தார் அன்பரசு.
கைகள் உணவைப் பறிமாறினாலும் கண்கள் கணவனின் முகத்தையே பார்த்தபடி இருந்தது, ஒரு எதிர்பார்ப்போடு. மனைவியின் முகம் பார்த்துப் புன்னகைத்தார் அன்பரசு.
“எதுக்கம்மிணி இவ்வளவு டென்ஷன்?”
“என்ன ஆச்சு?”
“லிங்கம் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கான். மகன் தான் கொஞ்சம் எகிறின மாதிரி தெரிஞ்சுது. பார்க்கலாம் கண்ணு. நீ கவலைப்படாதே.”
“எப்படிக் கவலைப் படாம இருக்க முடியும்?” கலங்கிய குரலில் சொன்னவர் ஓய்ந்து போய் அன்பரசுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
“நல்லது பண்ணுறவங்களுக்கு இன்னைக்கு யாரு நல்லது நினைக்கிறா? இந்த உலகம் எங்க போகுதுன்னு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.”
“அதான் நான் பார்த்துக்கிறேன் இல்லை. நீ எதுக்குக் கவலைப்படுற கண்ணு. என்னைத் தாண்டி எதுவும் நடக்காது.” சொன்னவர் வானதியின் கையின் மேல் தன் கையை வைத்து அழுத்திப் பிடித்தார்.
கணவனைப் பார்த்த வானதியின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன. இருந்தாலும், மனதுக்குள் யானை பலம் வந்தது போல் இருந்தது.
இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. மழை பெய்து கொண்டிருந்த ஒரு அழகான மாலைப் பொழுது. யுகேந்திரன் அப்போதுதான் தோப்பிலிருந்து வந்து குளித்துக் கொண்டிருந்தான்.
நித்திலா வீட்டுக்கு முன்னாலிருந்த வராண்டாவில் நின்றுகொண்டு கைநீட்டி மழையின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
“நித்திம்மா… நனையாம இங்க வந்து உக்காரு. சூடா காஃபியைக் குடி.” சூடு பறக்க வடை, காஃபி ட்ரேயோடு வந்த வானதி நித்திலாவை அதட்டினார்.
“எப்பப் பாரு ஹாஸ்டல் வார்டன் மாதிரி அதட்டிக்கிட்டே இருக்காதே வானதி.” லேசாகக் கடிந்து கொண்ட அன்பரசு தானும் வந்து அமர்ந்து கொண்டார்.
குளியலை முடித்த யுகேந்திரனும் வந்து சேர அந்த இடமே கலகலப்பாக இருந்தது. தன் கவிஞனைப் பார்த்துப் பெண் சிரித்த சிரிப்பில் அத்தனை உயிர் இருக்கவில்லை. அதன் காரணம் அவனுக்கும் தெரியும்.
தென்னந்தோப்பில் காய் பறித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த நான்கு நாட்களாக அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் இரவு பத்து மணியைப் போலத்தான் வீடு திரும்பினான் யுகேந்திரன். அசதியாக உறங்கும் மனைவியை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாமல் பார்த்துக் கொண்டான்.
அன்பரசு முழுமையாக நித்திலாவின் பொறுப்பை அவர் வசம் ஏற்றுக் கொண்டதால் நிம்மதியாக வேலை பார்த்தான் மகன்.
“உடம்புக்கு ஏதாவது வந்துச்சுன்னா இந்த மாதிரி நேரத்துல மாத்திரை கூட சாப்பிட முடியாது. நீதானேம்மா அவஸ்தைப்படணும்.” அக்கறையாகச் சொன்ன வானதி காஃபியை நித்திலாவிடம் நீட்டினார்.
“கவனமா இருக்கேன் அத்தை.” சொன்ன இளையவள் மாமனாரைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னம்மா? என்ன சொல்லணும் மாமாக்கிட்டே?”
“மாமா… அந்த பால்பண்ணை ஓனரோட லைசன்ஸ் எங்க கவனத்துக்கு வந்திருக்கு?”
“ஓ… என்ன சொல்லுறாங்க?”
“ஏற்கனவே இருந்த பண்ணையை சீல் வச்சதால இன்னொன்னுக்கு அனுமதி குடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க.”
“ஓ… பரவாயில்லையே! நம்ம பசங்களும் நல்லது நினைக்கிறாங்க!” ஆச்சரியமாகச் சொன்னார் அன்பரசு.
“இப்பவும் காசு குடுத்து வேலையை நடத்த முயற்சிகள் நடந்திருக்கு மாமா. ஆனா, எல்லாரையும் தப்பா சொல்லிட முடியாது இல்லையா?”
“அதுவும் சரிதான்.”
“நித்திலா… எனக்கொன்னு தோணுது.” இது யுகேந்திரன்.
“என்ன யுகி?”
“இந்த லைசன்சுக்கு நீங்க ஓகே சொன்னா என்ன?”
“எப்படிப்பா? திரும்பவும் அதே தகிடுதத்தம் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”
“அதேதான்… இந்த ஒரு விஷயத்தை டிமாண்ட்டா வச்சு சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசுங்க. இதையும் ரிஜெக்ட் பண்ணினா வீணான பகைதான் வளரும். நல்லா யோசிச்சுப் பாரு.”
யுகேந்திரன் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல் தான் தோன்றியது நித்திலாவுக்கு. அன்பரசைத் திரும்பிப் பார்க்க அவர் முகமும் யோசனையில் ஆழ்ந்திருந்தது.
காஃபியை முடித்திருந்த யுகேந்திரன் உள்ளே எழுந்து போய் விட்டான். மழை இன்னும் கொஞ்சம் வலுவாகப் பெய்ய ஆரம்பித்திருந்தது.
“அம்மிணி! எனக்கும் யுகி சொல்லுறது சரின்னு தான் படுது. நான் நாளைக்கு லிங்கத்தை உங்க ஆஃபீசுக்கு கூட்டிக்கிட்டு வர்றேன். அங்க வச்சுப் பேசலாம். சரியா?”
“சரி மாமா.”
“நித்திலா…” உள்ளே இருந்து யுகேந்திரன் அழைக்கும் குரல் கேட்டது.
“நீ உள்ளே போம்மா. போய் என்னன்னு கேளு. இதைப்பத்தி அப்புறமாப் பேசிக்கலாம்.” வானதி விரட்டவும் உள்ளே போனாள் நித்திலா.
உடம்பின் ஒவ்வொரு அணுவும் கவிஞனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. ரூம் ஜன்னலின் ஓரமாக நின்றிருந்தவன் இவள் வருகையை அறிந்ததும் கைகள் இரண்டையும் விரித்தான். ஓடி வந்து அடைக்கலமாகிக் கொண்டாள் பெண்.
“மெதுவா வா கண்ணம்மா.” லேசாகக் கடிந்து கொண்டவன் அந்தக் கன்னங்களில் மென்மையாக முத்தம் வைத்தான். அவள் செல்லச் சிணுங்கலில் புன்னகைத்தவன் அவள் செம்பவள இதழ்களில் சின்னதாக ஒரு கவி வடித்தான்.
“கவிஞரே! இப்பெல்லாம் கண்ணம்மாவை அடிக்கடி மறந்து போயிடுறீங்க.”
“இது அநியாயமான குற்றச்சாட்டு கண்ணம்மா. நான்கு நாட்கள் பிரிவிற்கு இத்தனை பெரிய வார்த்தையா?”
“அதென்ன? நாலு நாள்ன்னு அத்தனை சுலபமா சொல்லிட்டீங்க? அந்த நாலு நாள்ல நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்.”
“சாரி கண்ணம்மா… வேலையையும் பார்க்கணும் இல்லையா?”
“அது தெரியுது… இருந்தாலும்…” அவள் ஆதங்கம் புரிந்தவன் தலையைத் தடவிக் கொடுத்தான்.
“யுகி…”
“ம்…”
“என் கவிஞர் இலக்கியம் பேசி ரொம்ப நாளாச்சு தெரியுமா?”
“அப்படியா என்ன?”
“ம்…”
“இன்றைக்குப் பேசுவோமா? கேட்கும் மூடில் அம்மிணி இருக்கீங்களா?”
“வீழ்ந்ததே அந்த இலக்கியத்தில் தானே… அது கசக்குமா கவிஞரே?”
“இது நியாயம் இல்லை கண்ணம்மா. இலக்கியம் தான் உன்னை வீழ்த்தியதா? இந்த யுகேந்திரன் உன்னைக் கிஞ்சித்தும் கவரவில்லையா?” அவன் கேள்வியில் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் பெண்.
அந்தக் கண்களில் நாணத்தையும் தாண்டி ஒரு மயக்கம் தெரிந்தது. அந்தப் பார்வையில் காதல் பொங்கி வழிந்தது.
“எங்கே? என்னைப் பார்த்து இன்னொரு முறை அதைத் திரும்பக் கேளுங்க?” அவள் சவாலில் அவன் கள்ளுண்ட வண்டாகிப் போனான்.
“கண்ணம்மா குறுந்தொகை படித்திருக்கிறாயா?”
“கொஞ்சம்…”
“அதன் விசேஷம் தெரியுமா உனக்கு?”
“இல்லையே…”
“உவமைக்கு மிகவும் பேர்போனது குறுந்தொகை. இதிலிருக்கும் பாடல்களில் பெரும்பாலானவை யார் பாடியது என்று கூடத் தெரிந்திருக்காது.”
“அப்படியா?”
“ம்… ஆனால் பாடல்களில் வரும் உவமையை வைத்து அந்தப் பாடலாசிரியரைக் குறிப்பிட்டிருப்பார்கள்.”
“அது எப்படி?”
“யாயும் ஞாயும் யாரா கியரோ பாடல் இருக்கிறதல்லவா?”
“ம்…”
“அந்தப் பாடலின் ஆசிரியரை செம்புலப் பெயனீரார் என்று சொல்லுவார்கள்.”
“ஓ… பாடலில் ‘செம்புலப் பெயனீர் போல’ என்று வருமே, அதனாலா?”
“ஆமாம். உனக்கொன்று தெரியுமா? குறுந்தொகையில் இருபத்தியோரு பெண்பாற் புலவர்கள் இருக்கிறார்கள்.”
“அடேங்கப்பா!”
“அதிலொரு பாடல் வரும். காதலன் தன் காதலியை பற்றிச் சொல்லுவான். அவன் காதலி அத்தனை அழகானவளாம். ஆசை மிகுதியால் அவனை விரைந்து தழுவிக் கொள்பவளாம்.”
“ம்ஹூம்…”
“அவன் மீது எப்போதுமே தன் பார்வையை வைத்துக்கொள்ள விருப்பம் கொண்டவளாம். இத்தகைய அழகுடைய பாசம் மிக்க அவளை நான் எப்படி மறந்து இருப்பேன்? என்று கேட்பான்.”
“காதலிக்கும் போது இப்படித்தான் கேட்பான்… கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாம் ஓடுற தண்ணியில உரசின சந்தனம் தான்.”
“ஐயையோ! உவமை அற்புதமா இருக்கே கண்ணம்மா!”
“பேச்சை மாத்தாதீங்க யுகி. காட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் எத்தனை நாளாச்சு? தோப்புக்குப் போய் எத்தனை நாளாச்சு?” அடுக்கினாள் பெண்.
“போகலாம் கண்ணம்மா.”
“எப்போ? வெளியே பாருங்க. மழை எவ்வளவு அழகா இருக்கு. இந்நேரம் அந்தத் தொங்கு பாலத்துல உங்க கூட சேந்துக்கிட்டு நனைஞ்சா எப்படி இருக்கும்?” ரசித்துச் சொன்னாள் நித்திலா.
“முதல்ல எம் பொண்ணு சேஃபா வெளியே வரட்டும். அதுக்கப்புறம் எங்க வேணும்னாலும் போகலாம். அதுவரைக்கும் தடாதான் நித்திலா.”
“இது நியாயமே இல்லை.” கோபத்தில் அவனைத் தள்ளிவிட்டு வெளியே போகும் மனைவியை ஆசையாகப் பார்த்திருந்தான் யுகேந்திரன்.