NKV1

NKV1

                                                  1

உச்சிப்புளி அருகே உள்ள சுந்தரமுடையான் சுகமான, சுகாதாரமான சுவாசத்திற்கும் பசுமைக்கும் பஞ்சமில்லா அழகிய கிராமம்.

கடற்கரையை ஒட்டிய பசுமையான தென்னந்தோப்புகளும், அவரவர் ஆசைகளுக்கும், மெனக்கெடல்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான தோப்புகளும், மரங்களும் நிறைந்த அருமையான இடம்.

நண்பகலில் வீசும் கடற்காற்றுக்கும், பசுமை படர்ந்த மரக்கிளைகளில் வீற்றிருக்கும் இலைகளின் ஆனந்த தலை அசைப்பால் உண்டாகும் தென்றல் காற்றுக்கும், தினந்தோறும் ஒரு ஊடலுடன் கூடிய கூடல் நடந்தாலும், அங்கு வாழும் மக்களுக்கு அதை உணர, ரசிக்க ரசனை இருக்கிறதோ, இல்லையோ, நேரமில்லை.

ஆனால், அதை உணர, ரசிக்க ஒரு கூட்டம் அத்திசை நோக்கிய பயணத்தை அவ்வப்போது மேற்கொள்கிறது. வார இறுதியில், அரசு விடுமுறை நாட்களில் அங்கு செல்பவர்களின் மனம் ஆசுவாசப்படுவதோடு, மீண்டும் அங்கு செல்லத் தூண்டும் வகையில் பொழுதுகள் இனிமையாகக் கழியும்.

சுமார் ஐநூறு குடும்பங்களைக் கொண்ட அக்கிராமத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப, சுற்றிலும் பனை மட்டையால் வேயப்பட்ட வேலிகளுக்குள், வீட்டைச் சுற்றிலும் மா, தென்னை, முருங்கை, சப்போட்டா, கொய்யா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை, நார்த்தை, கறிவேப்பில்லை, வேம்பு இவற்றுடன் மல்லி, முல்லை, கனகாம்பரம் மற்றும் இதர வண்ண மலர்கள், அழகு செடிகள் இல்லாத வீடுகள் சொற்பமே.

பூர்விகமாக அங்கு குடியிருப்பவர்களைத் தவிர, இளைப்பாறல்களுக்காகவும், விடுமுறையை வித்தியாசமாக விரட்ட நினைப்பவர்களுக்காகவும் பல வகையான தோப்புகள் கைகொடுக்கும்.

இருபத்தைந்து விழுக்காடு வெளியூர் மக்கள்,  செடிகள், மரங்கள் வளர்க்க எண்ணுபவர்கள் அங்குள்ள நர்சரிகளில் வந்து தமது எண்ணத்திற்கு ஏற்ப மரக்கன்றுகளை வாங்கிச் செல்பவர்களாக இருப்பதால் எப்பொழுதும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருக்கும்.

அங்கிருந்து மூன்று மைல் தொலைவில் அழகான கடற்கரை. அங்கு வாழ்பவர்களின் பிரதான உணவாக கடல் மீன்கள், (குளத்து மீன்களும் கிடைக்கும்) நண்டு, கணவாய், இறால் மற்றும் கருவாடு விரும்பி உண்ணப்படுகிறது.

ஊரின் மையத்தில் இருக்கும் பழமையான வீடும், சற்றேரக்குறைய ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வீட்டைச் சுற்றிலும் பல விதமான செடிகள், மரங்கள், வண்ண மலர் தோட்டம் என காண்போரை சற்று கவனிக்க செய்யும் விதமாக சுற்றுச் சுவருடன் கூடியது, மேலும், அலங்காரமான இரும்பு கேட்டுடன் கூடிய வாயில்.

மூன்று தலை முறையாக மாவு மற்றும் ரைஸ் மில்லும், அடுத்த தலை முறையின் முயற்சியாக செங்கல் சூளை, மரங்கள், செடிகள் மற்றும் பல வண்ண மலர்களின் செடிகளை உற்பத்தி செய்து விற்பது, அதாவது நர்சரி , விற்பனைக்காக மலர்த்தோட்டங்கள் என இருந்த தொழில்களின் வரிசையில் இந்த தலைமுறையின் தலையீடாக இறால் வளர்ப்பும் இணைந்து , இடை விடாத உழைப்பால் உயர்ந்த குடும்பம் அவர்களது.

குடும்பத்தலைவர் ஹரிகிருஷ்ணன், அவரின் மனைவி துர்கா.

தற்போது இவை அனைத்தையும் எழுபதை நெருங்கும் ஹரிகிருஷ்ணனும் அவரின் இளைய மகன் ரகுநந்தனும் இணைந்து அக்கிராம மக்களின் ஒத்துழைப்போடு திறம்பட நடத்தி வருகின்றனர்.

விக்ரமன், அவருடைய மூத்த மகன், தற்போது ஆஸ்திரேலியாவில் பணி நிமித்தம் தங்கி இருக்கிறான். உடன் அவன் மனைவி ஊர்வசி, குழந்தைகள் அனன்யா மற்றும் நவீன் வசித்து வருகின்றார்கள்.

அடுத்தவன் ஆதித்யன், புரூனேயில் பணி புரிந்து வருகிறான். அவனது மனைவி நர்மதா, இரண்டாவது பிள்ளைப்பேற்றிற்காக சுந்தரமுடையானில் இருக்கிறாள்.

மகன்கள் மூவரும் தனது தந்தையின் அயரா உழைப்பினைக் கண்டு வளர்ந்தவர்கள். தமது குடும்ப தொழிலில் அதிக அக்கறையும், ஈடுபாடும் இருந்தாலும், தனது தந்தையின் வழிகாட்டுதலால் வெளியூர்களில் சென்று பணி செய்யும் அளவிற்கு திறமையை வளர்த்துக்கொண்டவர்கள்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் பணி புரிந்து வந்த ரகுநந்தன், தனது தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்ட நலக்குறைபாடு காரணமாக தனது மென்பொருள் நிறுவன பணியை விட்டு விட்டு, தந்தையோடு தமது குடும்பத் தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டான்.

ரகுநந்தனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல மற்ற இருவரும். ஒப்பந்த அடிப்படையில் இருவருக்கும் சில ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய நிலை. ஒப்பந்த காலத்திற்கு முன்பு , பணியிலிருந்து விலகும் பட்சத்தில் அபராதமாக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க எண்ணி அவர்களின் தந்தை, ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஊருக்கு வந்துகொள்ளலாம் என கூறிவிட்டார்.

துர்காவிற்கு, பெண் குழந்தைகள் இல்லையெனும் ஏக்கம் எப்பொழுதும் உண்டு. தற்போது குழந்தைப்பேற்றிற்காக வந்துள்ள தனது இரண்டாவது மருமகளை கவனிப்பதிலும், தனது இரண்டாவது மகனின் மகளான தன்யஸ்ரீ ஐ சீராட்டுவதிலும் சற்றே திருப்தி அடைந்து வருகிறார்.

“அப்பத்தா….” என்ற தனது பேத்தியின் அழைப்பில் என்னவென கேட்டார் கண்களாலேயே …..

“அம்மா …. மொபைலை தர மாட்டிங்கறாங்க….நீங்க தாங்க….”

“இவ்வளவு நேரமா கூப்பிட்டேன், காதுல வாங்காம இருந்த..”

“இல்ல அப்பத்தா …. காதுல விழல…..” என்றாள், உடலை சற்றே வளைத்தபடி

“அடி பட்டு …. கைல போன் இருந்தா…. இந்த அப்பத்தா கூப்பிடறது காதுல விழ மாட்டிங்குது… என்னத்தா சொல்ல….”,  ‘அந்த காலத்து புள்ளைங்க எல்லாம் இப்படியா வளந்துச்சுங்க’ என மனதில் எண்ணியபடி ,

“என் போன் ல ஒண்ணுமில்லைனு சொல்லுவ….”

“பரவா இல்ல …… தாங்க…”

“சரி மொதல்ல சாப்டுவியாம், அப்புறம்….அப்பத்தா போன் தரேன்….”

“இல்ல சாப்பாடு வேணாம்……நான் அம்மாகிட்ட போறேன்…..” என்றபடி நகர முயன்றவளை..

“சாப்பிடற நேரமாச்சுன்னு உங்க அம்மா போன் ஐ உங்கிட்ட இருந்து வாங்கிருப்பா…. போதும் இன்னிக்கு போனை பார்த்தது……வா சாப்பிடு ….”

“பசிக்கல வேணாம் …..” என்றவாறு நர்மதாவின் அறையை ஒட்டி நடக்க ஆரம்பித்தாள், தன்யா

எதிரில் வந்த நர்மதா இருவரின் பேச்சுக்களை கேட்டவாரே அங்கு வர ….

“வா பாப்பு…. அம்மாக்கு பசிக்குது… நீயும் வந்து அம்மாவோட சாப்டுவியாம்…. தன்யா குட்டி நல்ல புள்ள தான…. “

“சாப்டா, உங்க போனை தருவீங்களா….”

“இவ்வளவு நேரம் கேண்டி கிராஷ் விளையாடிட்டு இப்ப தான போனை தந்த…”

“அப்ப சாப்பாடு வேணாம்”

“அடம் பண்ணாத பாப்பா… இவ்வளவு நேரம் போனை யூஸ் பண்ணா…. கண்ணு வலிக்கும், அப்புறம் தலை வலிக்கும், அதான் அம்மா வேணான்னு சொல்றேன்..நாளைக்கு காலைல தருவேனாம் …வா … இப்போ சாப்பிடு..”

“அப்ப …. ஊட்டி விடுங்க…” என நான்கு வயது தன்யா ஸ்ரீ கூற , அதற்குள் தட்டுடன் வந்த துர்கா,

“அம்மா சாப்பிடட்டும்…. அப்பத்தா ஊட்டி விடுறேன்… வா….” என அழைக்க , அடுத்த நாள் ஒப்பந்தம் கையெழுத்திடாமல் சரி செய்யப்பட்டதால் இசைந்தாள்.

இருவரும் உண்டு விட்டு அறைக்கு சென்ற பிறகு வந்த கணவருக்கான தேவைகளை கவனித்து அவரும் உறங்கச் சென்ற பின் இளைய மகனுக்காக காத்திருந்தார்.

ரகுநந்தன், ஆறடி உயரம், மாநிறம், மிகவும் அடர்ந்த கேசம், புன்னகையை தன்னுடனே தேக்கி வைத்துக்கொண்ட உதடுகள், கூரான நாசி, கடற்கரையை ஒட்டிய தோழர்களுடன் சிறு வயது முதல் கடலில் நீச்சலடித்துப் பழகியதால் உண்டான ‘கிண்’ என்று இருக்கும் வலிமையான தசைகள், ‘ வீ ‘ வடிவ குறுகிய இடை, அகன்ற தோள்கள், பள பளப்பான கண்கள்,

சிறு வயது முதல் மிகவும் பொறுமையுடனும், புத்திசாலித்தனத்துடனும் வளர்ந்த தனது மகனின் இன்றைய நிலையை எண்ணியபடி இருந்த தாயின் கவனத்தை திருப்பும் வகையில் காம்பௌண்டைத் தாண்டி உள்ளே வந்தது BMW .

“ஏன்பா.. இன்னிக்கு ரொம்ப லேட்டாகிருச்சு… “

“மதுர வரை வேலம்மா …. அதான்… “

“அப்பாட்ட சொல்லலயா…”

“இல்லம்மா… நம்ம ஆடிட்டரு…. வெளியூர் போறாராம் …. வர ஒரு மாசமாகும்னு சொன்னதால …. கிளம்பிட்டேன்”

“போன்லயாவது சொல்லிருக்கலாம்ல…”

“இன்னிக்கு டவர் ப்ரோப்ளேமாவே இருந்ததும்மா…மொதல்ல ட்ரை பண்ணேன்…… அப்புறம் வேலைல மறந்துட்டேன்…”

தாயிடம் பேசியவாறு கை, கால், முகம் அலம்பிவிட்டு உணவருந்த வந்தான்.

“அம்மா… , சாப்பிட்டீங்களா…”

“இல்ல, இனிமே தான்யா… சாப்டணும்…” என்றவாறு மகனுக்கு உணவை எடுத்து வந்தார்.

“தட்டெடுத்துட்டு வாங்கம்மா…. சேர்ந்து சாப்பிடலாம்….” என்று கூறியபடி அடுக்களாயினுள் கழுவி வைக்கப்பட்ட தட்டை நந்தனே எடுத்து வந்து தாய்க்கும் உணவை எடுத்து தந்தபடி உண்ண அமர்ந்தான்.

“ஏன்மா …. எதுக்கு இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கீங்க… உடம்பை கவனிங்கம்மா….”

“சரிய்யா….”

இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறியபடி உண்டு முடித்தனர்.

நந்தன் கடைக்குட்டி, அம்மா செல்லம் சிறு வயது முதலே.. மற்ற இருவரும் தாயுடன் நந்தன் அளவிற்கு ஒட்டமாட்டார்கள். நந்தன், தாய், தந்தை இருவரிடமும் அதிக ஒட்டுதலுடன் இருப்பான்.

அந்த அன்பால் அவர்களின் ஆசைகளுக்கெல்லாம் சரி, சரி என்று போனதும் தவறோ என்பது போல கடந்த இரண்டு ஆண்டு கால அவனது வாழ்வு அமைந்து, துர்காவிற்கு தூக்கம் என்பதே இல்லாமல் போனது.

உண்டபின் சிறிது நேரம் டிவியில் நியூஸ் கேட்டுவிட்டு படுக்கைக்கு செல்லும் பழக்கத்தால் ஹாலில் டிவியை ஆன் செய்து அமர்ந்தான்.

அதன் பிறகான இதர வேலைகளை முடித்துவிட்டு வந்த தாயின் களைப்பான தோற்றம் மகனுக்கு வருத்தத்தை தந்தது.

“ஏம்மா… இனி நீங்க சாப்பிட்டுட்டு …. எனக்கு சாப்பிட… மேடை மேல எடுத்து வச்சுட்டு போயி படுக்கம்மா…… நான் போட்டு சாப்டுக்குவேன்…”

“என்னப்பா ….. இவ்வளவு நாளா செய்யறது தான…. புதுசா என்ன பண்ணேன்…”

“நீங்க ரொம்ப டையர்டா … இருக்கீங்க… அதான் சொல்றேன்… நான் சொல்லி நீங்க கேக்கமாட்டீங்க…” என்றவாறு டிவியை அணைத்து விட்டு , அவனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“நந்தா…” தாயின் அழைப்பு அவனின் நடையை நிறுத்தியது.

“என்னம்மா….”

“நாளைக்கு வதனா வரா…. அத சொல்ல தான் கூப்பிட்டேன் ” என்றவாறு மகனின் முகத்தில் ஏதேனும் , அவனின் உணர்வுகளின் உச்சத்தினை காண எண்ணியவருக்கு ஏமாற்றமே….

“என்னம்மா திடீர்னு…”

“திடீர்னு ஒண்ணுமில்ல, ஏற்கனவே சொன்னது தான….”

“வதனி இங்க வர ஒத்துக்கிட்டாளா ……?”

“அதனால தான், இன்னிக்கு உங்கத்தை உங்கப்பாவுக்கு பேசினா…”

“நீங்க வதனிகிட்ட பேசுனீங்களாம்மா..”

“இல்ல தம்பி… ஏன் கேட்குற…”

“இல்ல… அத்தை, மாமாவோட வற்புறுத்தலுக்காக , அவ இங்க வர சரின்னு சொன்னாளோணு கேட்டிருக்க வேண்டியதுதானம்மா”

“அவளோட ட்ரைனிங் முடிஞ்சு ஆறு மாசமாச்சு. இதுவே லேட்டு தானப்பா…”

“தானா கனியாதத…. தடி கொண்டு கனிய வைக்க கூடாதுன்னு நீங்க தானம்மா சொல்லுவீங்க…. அதான் கேட்டேன்…”

“யாரும் அவளை வற்புறுத்தல…. வற்புறுத்துனா… வருத்தப்படற ஆளும் இல்ல அவ….அவளாவே …. நான் சொன்ன நாளுக்கு மேல ஆறு மாசமாச்சுன்னு சொல்லி… இங்க கூட்டிட்டு வந்து விட யாரும் வாரீங்களா…. இல்ல நானா போயிக்கணுமான்னு கேட்டதா… உங்கத்தை சொன்னா…” என சிரித்தபடி கூறினார்.

“சரிம்மா …. வரட்டும்…. பாத்துக்கலாம்”

“இன்னிக்கு மாதிரி வெளியூர் எதுவும் போயிற வேணாம் …தம்பி.. அவங்க வரும்போது இன்னிக்கு மாதிரி லேட்டா வந்தா நல்லாருக்காதுல்ல …. அதுக்கு தான் சொன்னேன்..”

“எங்கயும் போகலம்மா…போதுமா.?” என்றவாறு நகர்ந்தான்..

வதனியின் வரவுச் செய்தியை கேட்ட பின் ரகுநந்தன் தனது இயல்பை தொலைத்து, உறக்கம் மறந்து விழித்திருந்தான் ….. விடியலை நோக்கி..

அவனது வாழ்க்கை எனும் வானில் நிலவாகிய அவளை கொண்டு வர எவ்வளவு திண்டாட்டம் என்பதை காண அவள் வரும் வரை காத்திருப்போம்.

error: Content is protected !!