NN 11

உதயாவின் திடீர் திருமண ஏற்பாட்டால் காயத்ரியின் கனவு பற்றிய எண்ணமோ கவலையோ அவர்களுக்கு வரவில்லை. காயத்ரியும் தோழியின் திருமண செய்தியால் குதூகலமாகவே இருந்தாள். இதைக் கவனித்த மற்ற மூவரின் மனமும் கொஞ்சம் நிம்மதியானது.

கல்லூரி செமஸ்டர் விடுமுறையின் முதல் நாள் காலை உணவின் பொழுது உதயா கையில் நோட்டு பென்சிலுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து காயத்ரியுடன் கலந்தாலோசித்து ஷாப்பிங் செல்ல பட்டியல் தயார் செய்து கொண்டு இருந்தாள் .

“உதயா என்ன சீக்கிரமா எழுந்து என்னமோ எழுதிண்டு இருக்கே. காலேஜ் மூடியாச்சே இப்போ போய் படிச்சுண்டு இருக்கே ? அப்போ பரீட்சை பூட்ட கேஸா , இப்போவே அறீயர்ஸ்க்கு படிக்கிறியோ ! ” என்று சிரித்து கொண்டே கெளதம் அங்கு வந்தான் .

“டேய் அண்ணா உதை வாங்க போறே , நான் கல்யாணத்துக்கு ஷாப்பிங் லிஸ்ட் போடறேன்” என்று வாயில் பென்சிலுடன் அறிவித்தாள் உதயா.

“அடியே இப்போதான் பேசிருக்கோம் இன்னும் தேதி கூட முடிவு பண்ணல அதுக்குள்ள ஷாப்பிங் லிஸ்ட்டா ஓவரா இல்லையா ? “என்றான் கெளதம் மேலும் அவளை உசுப்பேத்த எண்ணி .

“அதுக்காக ? நீங்க தேதி முடிவு பண்ண உடனே டிசைனர் பிளவுஸ் ரெடி ஆகாது . எல்லாம் பிளான் பண்ணி பண்ணனும் , பிளானிங் ரொம்ப முக்கியம் பாஸ் ” வடிவேலு ஸ்டைலில் உதயா சொல்லி கொண்டிருக்க.

கையில் உப்புமாவுடன் வந்த மேகிமா ” பாப்பாவுக்கு கல்யாணம் முடிவாயிறுக்குன்னு சொன்னா , இனிக்கி என்ன ஸ்வீட் வேணும் சொல்லுங்க செஞ்சுடறேன். ” என்றார் உற்சாகமாய்.

” பாஸந்தி பண்ணுங்கோ மேகிமா ! ” என்றபடி அங்கு ஓட்டமும் நடையுமாய் வந்தான் சிவா.

” ஹை பாஸந்தி ! ” என்று காயத்ரியும் குதிக்க

” அடியே என் கல்யாணம் முடிவானதுக்கு கூட நீ இப்படி குதிக்கலை ஒரு பாஸந்திக்கு இந்த பில்டப் ஆகாது தாயே ! ” என்று உதயா அவளை வம்பிழுக்க.

காயத்ரியோ “போடி ! “என்று நாக்கை துருத்தி காட்டி விட்டு செல்லமாய் கன்னத்தை இடித்தாள் .

” ஹா ஹா காயு கவலை விடு எப்படியும் அடுத்து அடுத்து வீட்ல கல்யாணம் தான் சோ அடிக்கடி பாஸந்தி தான் ! ” என்றபடியே சாப்பிட உட்கார்ந்தான் கெளதம்.

” ஆமா காயு உனக்கு பாஸந்தி பிடிக்குமா ? சொல்லி இருக்கலாமல ? முன்னாலேயே வாங்கிண்டு வந்துருப்பேனே ” என்றான் சிவா .

“டேய் டேய் எனக்கு கூடத்தான் குலாப் ஜாமுன் பிடிக்கும் என்றைக்காவது வாங்கி கொடுத்திருக்கியா ? துரோகி ! “என்று கௌதம் போலியாய் கோவிக்க.

‘ஏன்டா ? ஏன் ?’ என்பது போல் பார்த்தான் சிவா.

அன்று மாலை உதயாவும் காயத்ரியும் முதற்கட்டமாக தாங்கள் வாங்கிய பொருள்களைக் கடை விரித்துக் காட்ட கௌதமும் சிவாவும் மலைத்தே போனார்கள். ” ஹே என்ன இது? நீ போட்டுக்க துணி வாங்கிருக்கியா இல்ல கடை வைக்க ஸ்டாக் வாங்கிருக்கியா? ” என்று கௌதம் வம்பிழுக்க உதயா கோபத்தில் அவனை மொத்தி எடுத்து விட்டாள்.

இரவு வெகு நேரம் சிவாவும் கௌதமும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்க , பெண்கள் இருவரும் அன்று முழுவதும் ஷாப்பிங் செய்த களைப்பில் சீக்கிரமாக உறங்கச் சென்றுவிட்டனர்.

” மேடம் ! இந்த டீலும் நம்ம கைய விட்டு போய்டுச்சு ! கடைசி நேரத்தில் கௌதம் வந்து என்னென்னமோ பேசி கிளைன்ட் மனசைக் குழப்பி டீலை தட்டிக்கொண்டு போய்ட்டான்! சாரி மேடம் ! ” என்று கையை பிசைந்து கொண்டு நின்றான் நட்ராஜன் , தாரா குரூப்ஸ் ‘எம் டி’ தாரிகாவின் பி ஏ .

தன் கையிலிருந்த பேப்பர் வெயிட்டை கீழே விட்டெறிந்த தாரிகா ” புல்ஷிட் ! வெட்டி காரணம் சொல்லாதே ! உன்ன நம்பி அனுப்பினது தப்பு. நானே நேர்ல போயி டீல முடிச்சுருக்கணும். என் மூஞ்சி முன்னாடி நிற்காதே கெட் லாஸ்ட் ! ” என்று கத்த. தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவள் அறையை விட்டு வெளியேறினான் நட்ராஜன் .

தன் டெஸ்க்கை அடைந்தவன் தன் தொலைப்பேசியில் யாருக்கோ போன் செய்து ” சார் ! அந்த டீல் மிஸ் ஆனது தெரிஞ்சு மேடம் ரொம்ப கோவமா இருக்காங்க ! எப்படியாவது நீங்கதான் சமாதானம் பண்ணனும் ! ”

மறுமுனையில் ” சரி சரி நீ அவகிட்ட போகாதே நான் பேசிக்கிறேன். அந்த பசங்க இரண்டு பேரும் நிறைய இடைஞ்சல் பன்றாங்க. தட்டி வைக்கணும். சின்னதா ஒரு சாம்பிள் காட்டினா தான் அடங்குவார்கள் போல இருக்கு. நீ வைடா நான் அப்புறம் பேசுறேன். ”

“சரிங்க சார் ” என்று வைத்து விட்டான் நட்ராஜன் . “எல்லாம் என் நேரம் அப்பனுக்கும் பொண்ணுக்கும் நடுவில் நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன் “ என்று அலுத்துக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.

இங்கு நிலவரம் இப்படி இருக்க அங்கு சிவா மற்றும் கௌதமின் அலுவலகத்திலோ நிலைமை தலை கீழாக இருந்தது. ஒரே கூத்தும் கும்மாளமுமாய் ஆஃபிஸில் பார்ட்டி களைகட்டி கொண்டிருந்தது.

“தேங்க்ஸ் கௌதம்! உன்னால்தான் இந்த டீல் கெடச்சுது. எப்படிடா லாஸ்ட் மினிட்ல நமக்குச் சாதகமா மாத்தினே ? “ என்று சிவா ஆர்வமாய் கேட்க.

“அது ஒண்ணுமில்ல டா, காத்தாலே தான் அவங்க கம்பெனி புதுசா கோவையில் பிரான்ச் ஓபன் பண்ணற்றதா நியூஸ் கெடச்சுது, அதான் நம்ம கம்பெனி பிரான்ச் கோவையில் இருக்குறதால இந்த ப்ரொஜெக்ட்டை இன்னும் பர்சனல்லா பாத்துக்க முடியும்ன்னும் பிளஸ் முன்னாடி பேசினது விட இரண்டு மாசம் முன்கூட்டியே முடிச்சு தருவதாவும் ப்ராமிஸ் பண்ணினேன் மேலும் எக்ஸ்ட்ரா ஆறுமாசம் மெயிண்டெனென்ஸ் பன்றேன்னும் சொன்னேன், அதான் உடனே அக்ரீமெண்ட் சைன் பண்ணிட்டாங்க “ என்றான் கௌதம் உற்சாகமாய்.

“சூப்பர் டா. வெரி குட். உனக்கு இன்னிக்கி குலாப் ஜாமுன் வாங்கி தரேன்டா ! ” என்றான் சிவா குதூகலமாக

” சிவா ! பல கோடி ரூபா
ய்க்கு ப்ராஜெக்ட் பிடிச்சதுக்கு நீ தெருக் கோடி கடையில் குலாப் ஜாமுன் வாங்கி கொடுத்து ஏமாத்தலாம்னு பாக்கறியா ? மவனே ஒழுங்கா பெருசா ஏதான ட்ரீட் தர வழிய பார் ” என்று கௌதம் எகிற

” ஹலோ! இது உன் கம்பெனிக் கூடன்றத மறந்து மறந்து போறே ? நீ நம்ம குரூப்ல சம பங்கு தாரர் டா ! இது நம்ம கம்பெனி டா ! நீ சரி வர மாட்டே , மேகிமா கிட்டச் சொல்லி வாரத்துக்கு நாலுநாள் இனிமே வல்லாரை கீரை வெண்டைக்காய்ன்னு சமைச்சு தர சொல்றேன். மறதி வியாதி உனக்கு ஜாஸ்தியா ஆயிப்போச்சு.” என்று சிவாவும் அவனை வம்பிழுத்துக் கொண்டிருக்கும் பொழுது , சிவாவின் போன் அடிக்க அதை எடுத்துப் பேசிவந்த முகம் இறுகிப் போனது .

“என்ன விஷயம் சிவா ? பேய் அறைந்த மாறி இருக்கே ? ” என்று கௌதம் முடிக்கும் முன்னமே

” கௌதம் உடனே நாம லாயர் வீட்டுக்கு போகணும் டா ! கிளம்பு ” என்று சிவா பரபரக்க , இருவரும் லாயர் வீட்டிற்கு விரைந்தனர் , வழியில் சிவா எதுவும் பேச வில்லை கௌதமும் அவனே சொல்லும் வரை எதுவும் கேட்காமல் இருப்பதென மௌனமாகவே பயணித்தான்.

லாயர் வீட்டில் அவர் பேசப் பேச சிவா வாயடைத்துப்போய் சிலையாய் அமர்ந்திருந்தான்.

“சிவா ஐ ஏம் சாரி! அவர் சொன்னதால் தான் இவ்ளோ நாள் உன் கிட்ட இதைப் பத்தி சொல்லாமல் இருந்தேன். பட் அதற்கான நேரம் வந்துட்டதால இப்போது சொல்ல வேண்டி இருக்கு . உன் தாத்தா உயிலில் இந்த விவரம் ஏன் இல்லையென்று நீ யோசிக்கலாம் ஆனால் அவர் அதுல இதை சொல்லாமல் வேறு மூலமா உன்கிட்ட இதை ஒப்படைக்க நெனச்சுருக்கார் அதான் . வீட்டுக்குப் பொய் பொறுமையா படித்து பார் , சந்தேகம்ன்னா கேள் “என்று சொல்லி அவனிடம் ஒரு கடிதத்தையும் , பத்திரத்தையும் கொடுத்தார்.

“சரி அங்கிள் ! ஐ வில் கெட் பேக் டு யூ ! ” என்று இருவரும் புறப்பட்டனர்.

இரவு அவர்கள் இருவரும் சிவாவின் அறையில் அந்த பத்திரத்தை படித்த இருவருக்கும் பெரும் குழப்பம்
” என்னடா இது இப்படி ஒரு இடம் இருக்கறதா வேற எந்த டாக்குமெண்ட்ஸ்லையும் இல்லையே ! இது என்ன புதுசா இருக்கு ? ” என்று கௌதம் வினவ

” எஸ் டா ! எனக்கும் இதுவரை இப்படி ஒரு இடம் இருக்குறது தெரியாதுடா ! தாத்தா இதை பத்தி பேசினதே இல்ல. இத அந்த உயில்லையே எழுதி இருக்கலாமே. ஆனா இதை ஏன் இப்படி தனியா கொடுக்கணும் . ” என்று சிவாவும் குழம்ப

” டேய் அந்த லெட்டர் என்னனு பாரு” என்று கௌதம் சொல்ல இருவரும் கடிதத்தை பிரித்தனர்.

“அன்புள்ள பப்பு கண்ணா.

என் ஆசீர்வாதங்கள். நீ நான் நினைக்கும் அளவுக்கு வளரும் வரை உன்கிட்ட இதை பத்தி சொல்ல வேண்டாம்னு நம்ம வக்கீல் கிட்ட நான் கண்டிஷன் போட்டதால் இத்தனை நாள் உன்கிட்ட சொல்லாம இருந்துருக்கார்.

இனி நான் சொல்ல போகும் விஷயத்தை பொறுமையா வாசி ,

என்னடா தாத்தா இந்த வீட்டையும் அந்த உயிலில் சேர்த்திருக்கலாமே , ஏன் இப்படி தனியா ஒப்படைகிறார்ன்னு நீ எண்ணலாம் ஆனால் நான் அப்படி செய்யாததற்கு ஒரு காரணம் இருக்கு கண்ணா

இந்த உயிலில் இருப்பது நம்மோட பூர்வீக வீடு. இதை பத்தி நான் யாருக்கும் சொல்ல வேண்டாம்ன்னு தான் தனியா உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அந்த வீட்டுக்கு நீ உடனே போகணும் தனியா போகாதே நம்ம கௌதமையும் கூட்டிண்டு போ , அங்க நீ போனதும் இந்த ரகசியத்தை நான் மறச்சு வச்சதற்கான காரணம் உனக்கு புரியும்.

எக்காரணத்தை கொண்டும் இந்த வீட்டை பற்றி இப்போதைக்கு வெளியாள் யாரிடமும் பகிராதே. உடனே அந்த வீட்டுக்கு போ ! மீதி தானா புரியும். கவனம் கண்ணா

ஆத்திரம் மூளையை மழுங்க செய்யும் , வேகத்தை விட விவேகம் முக்கியம் மனதில் வைத்துக்கொள்.

ஆசீர்வாதங்கள் ‘

“என்னடா சிவா ஒரே மர்மமா இருக்கு . நாம மொதல்ல அந்த வீட்டுக்கு போவோம் அவர் சொல்ல வர்றது என்னனு தெரிஞ்சுண்டே ஆகணும்” என்று கௌதம் சொல்ல அதேதான் தன் எண்ணமும் என்பது போல் சிவாவும் தலை அசைத்தான்.

பத்திரத்தையும் கடிதத்தையும் பற்றிய விவரங்களை காயத்ரி மற்றும் உதயாவிடம் பகிர்ந்து கொண்டவர்கள் மறுநாளே சிவாவின் பூர்வீக ஊரான தஞ்சையை அடுத்த சிவ புரத்துக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள்.

விடியற்காலை சென்னையிலிருந்து புறப்பட்டவர்கள் மதியம் தஞ்சையை அடைந்தனர் , அங்கிருந்த சிவ புரத்துக்கு ஒரு மணிநேர பயணம் . ஒருவழியாக அந்த ஊரில் இருக்கும் அந்த வீட்டை அடைந்தவர்கள் சற்று திகைத்துதான் போயினர்.

கொஞ்சமும் பழமை மாறாமல் அப்படியே இருந்தது அந்த அழகான அரண்மனை , வாயிலில் இருந்த காவலாளியிடம் தான் யார் என்ற விவரத்தை சொல்லி உள்ளே நுழைந்தவர்கள் , வாயிற்கதவை அடையும் பொழுது உள்ளிருந்த ஓடி வந்த மூதாட்டி ” வா பப்பு கண்ணா ! எப்படி இருக்கே ! சின்ன வயசுல சென்னைல பார்த்தது. நீ வருவேன்னு நேத்தே வக்கீல் போன் பண்ணினார் ! அதான் காத்துண்டு இருக்கேன். இவன் தான் கௌதமா ? அம்மா இந்த பொண்ணுங்க யாரு ? கண்ணா தாத்தா சொன்னதை மறந்துட்டியா யாருக்கும் விவரம் சொல்லப்டாதுன்னு சொல்லிருப்பாரே . ” என்று பட பட வென பேசிக்கொண்டே சென்ற மூதாட்டி .

“மொதல்ல உள்ள வாங்க , முதல் தரம் நம்ம ஆத்துக்கு வந்துருக்கே வெளிலயே நிக்க வச்சு பேசுறேன் பார் வா கண்ணா ! வா கௌதம் ! வாங்க மா ! என்று நால்வரையும் உள்ளே அழைத்து சென்றார். “

கலவரமாக இளையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அந்த மூதாட்டியோ ” என்ன இப்படி முழிக்கறே பப்பு நான் தான் உன் பாட்டி பட்டம்மாள் , உன் தாத்தாவோட கூட பொறந்த தங்கை.

என்ன பாட்டியா என்பது போல் சிவா முழிக்க , இந்த பட்டு பாட்டியை மறந்துட்டியே கண்ணா? விடு என் பேர்லயும் தப்பு இருக்கு அடிக்கடி வந்து போக இருந்துதானே நினைவிருக்கும் , நான் ஒரே ஒரு முறைதான் சென்னை வந்துருக்கேன் அப்போ நீ சின்ன குழந்தை அதுனாலதான் உனக்கு என்னை நினைவில்லை.

சரி எல்லாரும் ஸ்நானம் பன்னிட்டு வாங்கோ சாப்டுட்டு பேசலாம் .” என்றவர் ஆண்களுக்கும் பெண்களுக்குமான அறைகளை காட்டி விட்டு சமையல் தயாராவதை கண்காணிக்க சமையல் அறைக்கு சென்று விட்டார் அவர் .

” என்னடா இங்க இப்படி ஒரு புது பாட்டி ! உன்னை கடைசியா குழந்தையா இருக்கும்போது பார்த்தா சொல்லுறாங்க. அப்படி பார்த்த கிட்ட தட்ட 21 வருஷமா இவங்க உன்ன காண்டாக்ட் பண்ணவே இல்லையே ! என்னடா ஒரே ரகசியமோ ரகசியமா இருக்கு . இந்த பாட்டிவேர கேப் விடாம பேசறாங்க. ட்ரெயின் ஓடுறமாதிரி இருக்கு ” கௌதம் தன் சூட்கேஸை திறந்த படியே கேட்க .

” எனக்கும் ஒன்னும் நினைவில்லை கௌதம் , இப்படி ஒரு பாடி இந்த ஊர் எதுவுமே நினைவில் இல்லை . கேள்வி பட்ட ஞாபகம் கூட இல்லை ” என்று சிவாவும் அலுப்போடு அங்கிருந்த கட்டிலில் சாந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் அவர்களை மத்திய உணவிற்காக அங்கு இருக்கும் பணியாள் அழைத்து சென்றான் ,
பயண களைப்போ ! அந்த உணவின் சுவையோ ! அல்ல இன்னும் இன்னும் என்று ஆசையாய் பரிமாறிய பாட்டியின் பாசமோ ! நால்வரும் வழமைக்கு மாறாக நிரம்பவே உண்டனர்

“டேய் சிவா தினமும் இப்படி சாப்பிட்டா நான் அவ்ளோதான்.” என்று ஏப்பம் விட்ட படி ஹாலில் ஊஞ்சலில் அமர்ந்து விட்டான் கௌதம் அவன் அருகே சிவாவும். பெண்கள் இருவருக்கும் உண்ட மயக்கம் தலைக்கேற குட்டி தூக்கம் போட ரூமிற்கு செல்வதாக சொல்ல ” சாப்பிட்ட உடனே படுக்க கூடாது மா , கொஞ்ச நேரம் இங்க உட்காருங்கோ சித்தநாழி கழிச்சு அப்புறம் தூங்க போகலாம் சரி தானே ! ” என்று அவர்களையும் ஹாலில் அமர வைத்தார் பட்டு பாட்டி .

” பாட்டி மன்னிச்சுக்கோங்கோ எனக்கு எதுமே நினைவில் இல்லை , உங்களை பற்றியும் இந்த வீட்டை பற்றியும் தாத்தா ஒன்னு சொன்னமாதிரி ஞாபகம் இல்லை . இதை பற்றி எதுவும் யாருக்கும் சொல்ல கூடாதுன்னு சொன்னதற்காக காரணம் என்ன ? ” என்று சிவா கேட்டுக்கொண்டே செல்ல

” இரு இரு சொல்றேன் , அதற்கு முதல்ல இந்த பெண்கள் யாருன்னு சொல்றியா. வந்த உடனே கேட்டா நல்லா இருக்காதேன்னு இப்போ கேட்கறேன் .” என்று பாட்டி கேட்க

உதயனை காட்டி ” இவள் உதயா , கௌதமோட தங்கை. அவ காயத்ரி அவ ..” என்று சிவா கௌதமை கேள்வியாய் பார்க்க

” அது காயத்ரி உதயவோட தோழி , நம்ம சிவா கல்யாணம் பணிக்க போற பொண்ணு பாட்டி” என்று முடித்தான் கௌதம்

அவன் சொன்னதை கேட்டு பாட்டியோ பூரித்து போக , சிவாவோ ” ஐயோ போட்டு உடைச்சுட்டியே டேய் ! ” என்பது போல் கௌதமை முறைத்தவன் , ” இவ வேற என்ன ரியாக்ஷன் கொடுக்குறான்னு தெரியலையே ஆண்டவா அவளை பார்க்கவும் பயமா இருக்கு. என்ன பண்ணுவேன் ஆண்டவா ” என்று மனதில் புலம்பிக்கொண்டே இருக்க

” தீர்காயுசு இருக்கணும் கண்ணம்மா ! ரொம்ப சந்தோஷம்டி தங்கம் ” என்ற பாட்டியின் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பிய சிவா இன்னும் அசந்து போனான் , காயத்ரியை காணவில்லை , பாட்டியின் கண் போகும் வழியில் பார்க்க காயத்ரியோ பாட்டிக்கு நமஸ்காரம் செய்து கொண்டிருந்தாள்.

” என்னடா பப்பு பாக்றே? வாடா நீயும் வந்து நமஸ்காரம் பண்ணு ஜோடியா ஆசிர்வாதம் பண்றேன் ! ” என்றார் பாட்டி.

கௌதம் அவனை முதுகை பிடித்து தள்ளிவிட அவசர அவசரமாய் அவனும் சாஷ்டாங்கமாய் பாட்டியின் காலில் விழுந்தான். இருவரையும் மனதார வாழ்த்திய பாட்டியின் கண்ணிலோ ஆனந்தம் தாளவில்லை .

இப்பொழுதும் சிவா காயத்ரியை ஏறெடுத்தும் பார்க்க வில்லை அமைதியாக தரையை பார்த்த படியே மீண்டும் கௌதம் அருகில் சென்று ஊஞ்சல் அமர்ந்து கொண்டான்.
‘ ஆர்வக்கோளாறு புசுக்குனு கால்ல விழுதுட்டா ? எனக்கு கண்ஜாடை காட்டி இருக்கலாமே. என்னை பத்தி பாட்டி என்ன நினைப்பாங்க?’ மனதில் பொறுமியவன் அமர்ந்த நொடியே யாருக்கும் தெரியாமல் கௌதமின் தொடையை நன்றாக கிள்ளி விட்டான்
” அம்மா !! ” என்று அவன் துள்ளிக்கொண்டு எழுந்துநிற்க

“என்னடா கண்ணா என்னாச்சு ” என்று பாட்டி கேட்க ” அது அது ஒன்னும் இல்லை பாட்டி நானும் நமஸ்காரம் பண்ணலாம்னு..” என்று சமாளித்து சிவாவை முறைத்த படியே அமைதியாக பாட்டியின் காலில் விழுந்தான் கௌதம்

அனைவரும் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது தான் மட்டும் விழாமல் இருக்க முடியும் ? உதயாவும் பாட்டியின் காலில் விழ. ‘ இவ ஸ்டார்ட் பண்ணாலும் பண்ணா எல்லாரையும் விழவச்சுட்டாளே. கேடிதான் என்செல்லம் ’ மனதில் சிவா காயத்ரியை கொஞ்சிக்கொண்டு இருக்க.

“ரொம்ப சந்தோஷம் பப்புமா ரொம்ப சந்தோஷம். “ பாட்டி இன்னும் ஆனந்தத்தில் பேசிக்கொண்டிருக்க.” அம்மாடி காயத்ரி உங்கப்பா..” பாட்டி ஆரம்பிக்கும் பொழுது இடைபுகுந்த சிவா ” அவளும் எங்களை மாதிரிதான் பாட்டி அவளுக்கும் யாரும் இல்லை , அவ அப்பா என் அப்பாகிட்ட காரியதரிசியா இருந்தார் , இப்போ அவரும் இல்லை ! ” என்று சொல்ல

இப்பொழுது திகைப்பது காயத்ரியின் முறையானது ” என்ன சிவா எங்கப்பா உங்கப்பாகிட்ட பிஏ வா இருந்தாரா சொல்லவே இல்லையே ! ” என்று படபடக்க .

” அப்பறம் விவரமா சொல்றேன் மா , ப்ளீஸ் ! ” என்று சிவா கேட்க சரி என்று அமைதியானாள்.

பாட்டி காயத்ரியை ஆரத்தழுவிக்கொண்டார் “ என் தங்கமே. உன்னை பார்க்காமல் எவ்ளோ நாள் ஏங்கி இருப்பேன் ? “ கண்கலங்க.

“பாட்டி ப்ளீஸ் என்ன நடக்குதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்லுங்கோளேன். தலையே வெடிக்கும் போல இருக்கு “என்று சிவா கெஞ்ச

“ வா பப்பு , நீங்களும் வாங்கோ “ காயத்ரியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டவர் நால்வரையும் அழைத்து கொண்டு அங்கு இருக்கும் ஒரு அறைக்கு சென்றார். அந்த அறை முழுவதும் பல பழங்கால பொருள்கள் இருந்தன, “ இதென்ன பாட்டி ஸ்டோர்ரூம் மாதிரி இருக்கே ? “ என்றும் கௌதம் வினவ ,

“இது ஸ்டோர் ரூம் இல்லைப்பா ஸ்டோரி ரூம் , இங்க இருக்குற ஒரு ஒரு வஸ்துக்கு பின்னாலயும் ஒரு கதை இருக்கு கண்ணா . ஆனா இப்போ உங்களுக்கு தெரியவேண்டிய கதையை மட்டும் பாப்போம்” என்று சொன்னபடியே அங்கிருந்த இரும்பு அலமாரியை தன் இடுப்பில் இருந்த சாவியை எடுத்து திறந்தார்.

“பப்பு கௌதம் ரெண்டு பெரும் இங்க வாங்கப்பா. அங்க இருக்குற ஆல்பம் அப்புறம் அந்த பைல் அப்புறம் அந்த கவர் எல்லாத்தையும் எடுத்துண்டு என் ரூமுக்கு போங்கோ.நான் பின்னாலயே வரேன் “ என்று சொல்ல அவர்களும் அவர் சொன்னபடியே அவற்றை எடுத்து பாட்டியின் அறைக்கு சென்றனர் , பாட்டியும் மறுபடி அந்த அறையை பூட்டி விட்டு சென்றார்.

அங்கு பாட்டி அவர் அறையின் கட்டிலில் அவற்றை பரப்பி வைத்தார் “ வாங்கோ” என்று அவர்களை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார்.

முதலில் ஆல்பமை திறந்தவர் அதிலிருக்கும் சில பழைய போட்டோக்களை காட்டினார் “ இதெல்லாம் யாருன்னு உனக்கு தெரிய வாய்ப்பில்லை. சொல்றேன் “ என்று ஒரு புகை படத்தை காட்ட.

நடுவில் அமர்திருந்த வயது முதிர்ந்த தம்பதியரை காட்டி “இவர்கள் தான் என்னையும் உன் தாத்தாவையும் பெத்தவா. எங்கள் அப்பா அம்மா , அவங்க பின்னாடி நிக்கற்து உன் தாத்தா. அவர்பக்கத்துல இருக்கறது உங்க பாட்டி அவா தோளில் சாஞ்சுண்டு நிக்குறது நான் , என் பக்கத்துல நிக்குறது என் ஆத்துக்காரர் ,இங்க என் அப்பா பக்கத்துல நிக்குற சின்ன பயன் யார் தெரியுமா ? அது தான் பப்பு உங்கப்பா” என்று சொல்லி அவர் நிமிர , நால்வரும் மிக ஆர்வமாகவே புகை படத்தை பார்த்து கொண்டு இருந்தனர் .
சிவாவின் அப்பா பள்ளி பருவத்தில் இருந்த பொழுது எடுத்த புகைப்படம்.

தானாக தொடர்ந்த பாட்டி” உங்கப்பா பக்கத்துல இருக்குறது அவர் உயிர் தோழன் சுதாகரன் , எங்கப்பா மடில இருக்குறது யார் தெரியுமா அவ தான் என் பொண்ணு ருக்மணி” என்றவர் கண்கள் கலங்க தன் புடைவை தலைப்பால் கண்களை துடைத்து கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார் வலப்பக்கம் நிக்குறது உன் சித்தப்பா”. என்று சொன்னவர் மேலும்

“கௌதம் கண்ணா அந்த பைல இருக்குற வீடியோ காஸெட்டை எடுத்து அந்த காஸெட் பிளேயர்ல போடு” என்று சொல்ல அதிலிருந்த காஸெட்டை எடுத்த கௌதம் மிகவும் வியப்புடன் ” பாட்டி இன்னுமா காஸெட் எல்லாம் வச்சிருக்கீங்க ! இதெல்லாம் சீடி யா மாத்தி வச்சுருக்கலாமே ” என்று கேட்ட படி அதை இயக்க

அது எதோ கல்யாண சிடி , இங்கும் அங்கும் பலர் நடந்து கொண்டு இருக்க சிவாவின் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் அருகில் கையில் பழங்கள் நிறைந்த தாம்பாளத்துடன் முகமெங்கும் புண் சிரிப்புடன் இருக்க அவர்கள் அருகில் மிகவும் இளமையாய் இந்த பாட்டி ! அவர் அருகில் அவர் கணவர் .

“ஐயோ பாட்டி நீங்களா இது சோ கியூட்” என்று காயத்ரி பாட்டியின் கன்னத்தை பிடித்து சொல்ல .

அவளை பார்த்து மெல்லிதாய் புன்னகைத்த பாட்டி ” இது என் பொண்ணு ருக்குமணி கல்யாணம் அப்போ எடுத்து , இது யார் பாரு “ என்று அவர் காட்ட அங்கு கையில் குழந்தையுடன் ஒரு பெண்ணும் அவருடன் ஒரு ஆணும் வர சிவா ஒரு கணம் ஸ்தம்பித்து போனான்

“ அப்பா ! அம்மா ! “ என்றவன் வாயில் சத்தமே வரவில்லை . “ஆமா பப்பு உன் அப்பா அம்மா அவங்க இடுப்புல இருக்குறது நீ உனக்கு அப்போ ரெண்டு இல்ல மூணு வயசு இருக்கும் ! நீ ரொம்ப வாலு அப்போ , உன்ன சமாளிக்க முடியாம உங்கம்மா உன்ன இடுப்புலயே எப்போவும் வச்சுண்டு சுத்தினா பாவம்.” என்று சொல்ல

துறுதுறுவென கையில் இருக்கும் பொம்மையை ஆட்டியபடி அம்மா காதில் எதையோ சொல்லி சொல்லி சிரித்து கொண்டு இருந்தான் குழந்தை சிவா,

மெல்ல எழுந்து டிவி அருகில் சென்ற சிவா திரையில் இருக்கும் தன அன்னையை தொட்டு பார்ப்பது போல திரையை கைகளால் வருடி கொண்டிருந்தவன், ஷாக் அடித்தது போல் கையை எடுத்தான் , காட்சிகள் மாற “ இது இது என்று திணற “

ருக்மணியும் கிருஷ்ணமூர்த்தியும் மணக்கோலத்தில் ஊஞ்சலில் ஆட.

“அம்மா அப்பா! “ என்று காயத்ரியும் ஒரு கணம் வாய்விட்டு பதற , பாட்டியோ அவள் கையை மென்மையாக பற்றி கொள்ள “ ஆமா கண்ணா உங்க அப்பா அம்மாதான் , நீ என் ருக்மணியோட பொண்ணு என் பேத்தி ! நீ இங்கு வருவதற்கு முன்னாடியே நீ யாருன்னு தெரியும் ஆனா இப்போ சொல்லலாம்னு பொருதுண்டு இருந்தேன்.” கண்கள் குளமாக
“இந்த பாட்டியை மன்னிச்சுடு தங்கம் “ பேத்தியை அணைத்துக்கொண்டார்.