Rainbow kanavugal – 2

2

ஜெயாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சாரங்கபாணி அவளை அறைக்குள் வைத்து கடித்து துப்பிவிட்டார்.

“ஒரு பொம்பள புள்ள கிட்ட கூட உன் ஜம்பம் பலிக்கலயா… நீயெல்லாம் ரவுடிங்ககிட்ட பேசி எப்படி உண்மையை வாங்குவ… இதுல டைரெக்ட் எஸ் ஐ ஆ போஸ்டிங் வேற”

இந்த மாதிரியான பேச்சுக்களை கேட்டு கேட்டு அவளுக்கு அலுத்து போனது.

எத்தனயோ முயற்சிகளையும் தோல்விகளையும் கடந்து அவள் இந்த வேலையை வாங்கினாள். எல்லாம் இதற்காகத்தானா? கடுப்பாவதை தவிர அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்யவும் முடியாது.

சேர்ந்த புதிதில் அவள் நேர்மையாகத்தான் இருந்தாள். கண்ணும் கருத்துமாக தன் வேலைகளை கவனித்து கொண்டாள். ஆனால் யார் அவளை நேர்மையாக இருக்கவிட்டார்கள்.

இதனாலேயே அவள் நிறைய இடங்களுக்கு தூக்கிவீசப்பட்டாள். ஒரு நிலைக்கு மேல் முடியாமல் தன் கொள்கைகளை விட்டு கொடுத்தாள். பணம் வாங்குவதில் அவளுக்கு உடன்பாடில்லை.

அதேநேரம் வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் அவள் தடுக்கவில்லை. எந்த குற்றத்தையும் தான் ஒருத்தியாக தடுத்து நிறுத்தவிட முடியாது என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டாள்.

அன்றிலிருந்து கண்ணெதிரே நடக்கும் குற்றங்களை சகித்து கொண்டு ஒதுங்கியிருப்பதுதான் நல்லது என்று முடிவுக்கு வந்தாள்.

அந்த காரணத்தினால்தான் இரண்டு வருடமாக அவள் இந்த ஒரே காவல்நிலையத்தில் நீடித்து கொண்டிருக்கிறாள்.

ஆனாலும் அவளால் முழுமையாக அநியாயத்தின் பக்கம் நிற்க முடியாது. அதனாலேயே இந்துமதியை காப்பற்ற அவள் தன்னால் இயன்றவரை முயற்சித்தாள்.

எந்த பிரச்சனையிலும் அவள் சிக்கி கொள்ளாமல் காப்பாற்ற எண்ணினாள். அதற்காகவே அந்த உபாயத்தை ஜெயா யோசித்து சொன்னது. மிகவும் சிரமப்பட்டு சாரங்கபாணியிடமும் தன் யோசனைக்கு சம்மதமும் வாங்கினாள்.

வழக்கு முடிந்தால் போதுமென்று அவரும் சம்மதித்துவிட்டார். இல்லையெனில் இந்நேரம் இந்துமதிக்கு எதிராக சார்ட் ஷீட் தயாரித்து அவள் வாழ்க்கையையும் இந்த வழக்கையும் சேர்த்தே முடித்திருப்பார்கள்.

ஆனால் இந்துமதியோ இது எதையும் புரிந்து கொள்ளாமல் தான் பிடித்த பிடியிலேயே நிற்க, இப்போது தேவையில்லாமல் சாரங்கபாணி கோபத்திற்கு ஜெயா பலியாக நேரிட்டது.

சாரங்கபாணி அங்கே இடமாறி வந்து ஆறு மாதங்களானது. அவள் பார்த்த வரைக்கும் அவரிடம் பணம் மட்டும்தான் பேசும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றிக்கெல்லாம் அவருக்கு அர்த்தமே தெரியாது.

போதா குறைக்கு வந்து சேர்ந்த புதிதில் அவளிடமே நிறைய தவறான பார்வைகள். சீண்டல்கள். ஆனால் அவள் எந்த இடத்திலும் தன்னை விட்டுகொடுக்கவும் இல்லை. வளைந்து கொடுக்கவுமில்லை.

அவர் முகத்திலறைந்தார் போல தன் விருப்பமின்மையை அவள் தெரிவித்து விட, அன்றிலிருந்து சாரங்கபாணி அவளை புழு பூச்சியை விடவும் கேவலமாக நடத்தினார். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவளை மட்டம்தட்டினார். இன்றும் கிட்டத்தட்ட அதுதான் நடந்தது.

அப்போதும் இந்துமதியின் மேல் அவளுக்கு கோபம் வரவில்லை. பாவம்! அவளுக்கு தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

. இனிமேல் அவளால் எதுவும் செய்ய முடியாது. இந்துமதியை இந்த வழக்கிலிருந்து காப்பாற்ற அவள் யோசித்த யுக்திகள் அனைத்தும் பயனில்லாமல் போனது. எல்லாம் இனி அந்த இறைவனின் வசம்.

“எழுந்து வாம்மா… உன்னை இன்ஸ்பெக்டர் கூப்பிடுறாரு” என்று ஒரு பெண் கான்ஸ்டபிள் இந்துமதியின் கரத்தை பற்ற அவள் பதட்டமானாள். எழுந்திருக்காமல் அவஸ்தையோடு நெளிய, “வாம்மா” என்று அவள் கட்டாயப்படுத்தி அவளை இழுத்தார்.

இந்துமதி பபடப்போடு ஜெயாவின் புறம் திரும்பி பார்க்க, ‘இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்பது போல் அலட்சிய பார்வை பார்த்துவிட்டு அருகே இருந்த கோப்புகளை ஆராய தொடங்கினாள்.

இங்கே தன் நியாயத்தை கேட்கவும் தனக்காக பேசவும் யாருமே இல்லை என்பதை எண்ணுகையில் நெஞ்சம் விம்மியது அவளுக்கு. எங்கேயோ நடுக்காட்டிற்குள் கொடூரமான மிருகங்களுக்கு இடையில் தனித்துவிடப்பட்டது போல தோன்றியது.

யாரெனும் தனக்கு உதவ மாட்டார்களா? என்று ஏக்க பார்வை பார்த்து கொண்டே அவள் எழுந்து கொள்ள, அந்த பெண் கான்ஸ்டபிளோ அவளை அவசர அவசரமாக சாரங்கபாணி அறைக்குள் தள்ளி விட்டு வந்துவிட்டாள்.

என்ன செய்வது என்று தன் கைகளை பிசைந்தபடி அவள் தவித்து கொண்டிருக்க, “உட்காரு” என்ற சாரங்கபாணியின் குரல் அதிகாரமாக ஒலித்தது.

அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் அவள் மறுப்பாக தலையசைத்தாள். அவரின் பார்வை தன் தேகத்தில் மேய்ந்து கொண்டிருந்ததை, அவரின் மௌனம் அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.

ஆசுயையான உணர்வோடு அவள் நிற்க, சாரங்கபாணி தன் மௌனத்தை உடைத்து பேச தொடங்கினார்.

“ஆமா… உன் புருஷன் என்ன பண்றான்?”

அவள் சில நொடிகள் தாமதித்துவிட்டு, “மளிகை ஸ்டோர் வைச்சிருக்காரு” என்றாள்.

“சூப்பர் மார்கெட் மாதிரியா?” என்றவர் இழுக்க,

“இல்லை சின்ன கடைதான்” என்றாள்.

“ஹ்ம்ம்… அதான் பச்சி பறந்து போக பார்த்துச்சோ?” என்றவர் எள்ளல் தொனியில் கேட்க,

“நீங்க எதுவும் தெரியாம பேசுறீங்க… அப்படியெல்லாம் இல்ல” என்று அவள் குரல் கோபத்தில் சற்றே உயர்ந்துவிடவும்,

“நான் தெரியாம பேசுறானா?” என்று கேட்டு எகத்தாளமாக சிரித்தார். அந்த சிரிப்பில் ஏதோ ஆழமான அர்த்தம் பொதிந்திருப்பது போல் தோன்றியது.

சாரங்கபாணி மேலும், “ஆமா ஒரு பொம்பள புள்ள  இவ்வளவு நேரமா போலிஸ் ஸ்டேஷன்ல இருக்க… இன்னும் உன்னை யாரும் தேடிக்கிட்டு வரல… ஏன்? உன் புருஷன் கூட உன்னை தேடிட்டு வரல” என்று கேட்ட நொடி அவளுக்கு சுருக்கென்று தைத்தது.

‘அதானே! ஏன் மாமா இன்னும் வரல?’ அவள் மனதிலும் அதே கேள்வி எழுந்தது. இந்நேரம் விஷயம் அவருக்கு தெரிந்திருக்கும்தானே!

அவள் எண்ணத்தை சாரங்கபாணி சரியாக கணித்து,

“ஒருவேளை உன் லட்சணம் உன் மளிகை கடை புருஷனுக்கு தெரிஞ்சிருக்குமோ என்னவோ?!” என்று சொன்ன நொடி அவள் அதிர்ந்து பார்க்க, சாரங்கபாணி குரூரமாக சிரித்தார்.

“இல்லை… அப்படியெல்லாம் இருக்காது… அவர் வருவாரு” என்றாள் கண்கள் கலங்க!

“அப்படின்னா இந்நேரம் வந்திருக்கணுமே” என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது.

‘ஒரு வேளை அப்படிதான் இருக்குமோ?!’ அவள் மனதிலும் அந்த எண்ணம் எட்டி பார்க்க, அப்படி நினைக்க கூட அவளுக்கு பயமாக இருந்தது.

‘இல்ல… அப்படி இருக்க கூடாது… மாமா வந்துடணும்’ அவள் உள்ளுர ஊமையாக அழுது கொண்டிருந்தாள். ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பில் கொஞ்சம் கூட நியாயமில்லையே!

திருமணமான நாளிலிருந்து அவருக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி அவள் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றது.

காதல் இல்லாவிட்டாலும் ஒரு அன்பான பார்வை கூட பார்த்ததில்லையே! கரிசனமாக நடந்து கொண்டது இல்லையே! அவருக்கு தான் தந்தெல்லாம் தொடர்ச்சியான நிராகரிப்புகள் மட்டும்தான்.

அவரிடம் பேசவும் வழியில்லை. தானாக அவரை புரிந்து கொள்ளவும் முயலவில்லை. எங்கள் உறவுக்கு கணவன் மனைவி என்ற பெயரிருந்தது. அவ்வளவுதான்!

பின் எந்த உரிமையில் தனக்காக அவர் வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறது இந்த மனம் என்று அவளுக்கு புரியவில்லை.

, அந்த நொடி அவள் தேகத்தை ஏதோ நெருக்கமாக உரசம் உணர்வு. அவள் திரும்பிய கணத்தில் சாரங்கபாணியை பார்த்தவள் நெருப்பை தீண்டியவள் போல உடனடியாக நகர்ந்து, சுவற்றில் மோதி கொண்டாள்.

“ஏன்… ஏன் இந்த பயம்… நான் என்ன உன்னை கடிச்சா தின்ற போறேன்?” என்று அவர் குழைவாக கேட்க, இத்தனை நேரம் அவர் குரலிலிருந்த அதிகார தொனி காணாமல் போயிருந்தது. அவர் நடத்தையிலும்தான்.

அவர் கரம் அவள் தோளை தொட முன்னே நீளவும் அவள் பதறி விலக பார்த்து அங்கிருந்த நாற்காலி சரிந்தது.

“என்னை விட்டுடுங்க சார்… ப்ளீஸ்” என்று கெஞ்சி கொண்டே அவள் சுவரில் ஒண்டி கொள்ள, அவர் முகம் குரூரமாக மாறியது.

“இங்க என்னை தவிர உன்னை யாரும் காப்பாத்த முடியாது… புரிஞ்சு நடந்துக்கோ?” என்றபடி அவர் அவளை நெருங்கி வர, அவரின் செயலில் அவள் உடலெல்லாம் கூசி போனது.

எந்த பக்கமும் நகர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தாள் அவள் அந்த காவல் நிலையத்திற்குள்! காவல் செய்யும் நிலையத்தில் கற்பழிப்பவர்களும் கொலை செய்பவர்களும் காவல் காக்கப்படுகிறார்கள்.

இரத்த வாடையை முகர்ந்தபடி வந்த ஓநாயை நெருக்கத்தில் பார்ப்பது போல அத்தனை கொடூரமாக நெருங்கியது சாரங்கபாணியின் முகம். அவள் தன் கரங்களால் முகத்தை மூடி கொண்டு, அழ தொடங்கினாள்.

இந்த உடலை விட்டு உயிர் இப்போதே பிரிந்து போய்விட கூடாதா என்று அவள் தவிப்புறும் போது கதவை மெல்ல திறந்து கொண்டு, “:சார்” என்று ஜெயா உள்ளே வர,  சாரங்கபாணி அவசரமாக விலகி நின்றார்.

அவர் உச்சபட்ச எரிச்சலோடு, “அறிவில்ல உனக்கு” என்றவர் கத்த, கீழே விழுந்து கிடந்த அந்த நாற்காலியையும் ஓரமாக ஒண்டி கொண்டிருந்த இந்துமதியின் அச்ச பார்வையும் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அவளுக்கு தெளிவாக புலப்படுத்தியது. ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியாது. இதெல்லாம் அவளுக்கு பழகி போய்விட்டது.

சாரங்கபாணியோ கடுப்போடு, “எதுவா இருந்தாலும்… போயிட்டு அப்புறம் வா” என்று கத்த,

“இல்ல சார் கொஞ்சம் முக்கியமா?” என்று ஆரம்பித்தவள் சாரங்கபாணியிடம் கண்களை காட்டிவிட்டி அவரிடம் ரகசியமாக ஏதோ பேசினாள். அவர் விரும்பத்தகாத ஏதோ ஒன்று நடந்தது போல அவர் முகம் கோரமாக மாறியது.

அவர்கள் இருவரும் இந்துமதிக்கு கேட்காத விதமாக ஏதோ விவாதித்து கொண்டிருந்தனர்.

இந்துமதிக்கு அந்த நொடி கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. மூச்சை இழுத்துவிட்டு கொண்டு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி கொண்டாள். ஆனால் இன்னும் எத்தனை நொடிகளுக்கு அந்த நிம்மதி!

மீண்டும் அச்சம் பரவ, ‘கடவுளே! மாமா வரணும்… சீக்கிரம் வரணும்… இங்கிருந்து என்னை கூட்டிட்டு போயிடணும்’ என்று மனதிற்குள்ளாகவே ஜபித்து கொண்டாள்.

பிரச்சனைகள் வரும் போதுதான் பலருக்கும் கடவுளின் நினைவு வரும். அது போலதான் அவளுக்கு தன் கணவனின் நினைவு வந்தது.

இத்தனை நாளாக அவனிடம் அவளுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் தேவையையும் இருந்ததில்லை. அதனால்தான் அவனை ஒரு பொருட்டாக கூட அவள் மதிக்கவில்லை. ஆனால் இன்று அவனை கடவுள் நிலையில் வைத்து பார்த்தாள். வேறு வழி!

இங்கே அவளை காப்பாற்ற அவனை தவிர வேறு யார் வர முடியும்.

முதல் முறையாக அவள் மனம் தன் துணைவனை தேடியது. அவன் வருவானா என்று ஏங்கியது.

பேதையவள் அறியாள்! அவள் நின்றிருக்கும் சுவருக்கு அந்த பக்கமாகதான் அவன் நின்று கொண்டிருந்தான் என்பதை!

அவளுக்கும் அவனுக்கும் இடையில் அந்த ஒரு சுவரு மட்டும்தான். அருகிலிருக்கும் போது உடனிருப்போரின் அருமை தெரிவதில்லை. அவர்கள் விலகியிருக்கும் போது மனம் அவர்களை தேடுகிறது. இதுதான் மனித எண்ணங்களின் விந்தை!

error: Content is protected !!