அத்தியாயம் 1 

 

சென்னை மாநகரம் அந்த மாலைப் பொழுதில் அதற்கே உரியப் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தது. பிரபல நட்சத்திர ஹோட்டலின் பார்க்கிங் லாட்டில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு காயத்ரி, லட்சுமி இருவரும் ஹோட்டல் லாபியை நோக்கி நடந்தனர்.

 

காயத்ரியின் நெருங்கிய தோழி உதயாவின் 19 வது பிறந்தநாள் விழாவிற்காக அவர்கள் வந்திருந்தனர். ஹோட்டல்  வரவேற்பறையில் வைக்கப் பட்டிருந்த பார்ட்டி ஹால் பட்டியலில் ‘மிஸ் உதயா ஹால் நம்பர் 7 ‘ என்று பார்த்து விட்டு, பெண்கள்  இருவரும் 2ஆம் தளத்திற்குச் செல்ல லிஃப்ட்டில் ஏறினர்.

 

தயங்கியபடி நின்ற காயத்ரி “ஹேய் லட்சுமி சொன்னா கேளு எனக்கு இந்தப் பார்ட்டி எல்லாம் பழக்கம் இல்லை. பேசாம திரும்ப போய்டலாமா? ” என்று கேட்க.

 

லட்சுமியோ “சரி வா போலாம், எனக்கு ஒன்னும் இல்ல. அப்புறம் நீதான் அவளைக் காலேஜ்ல சமாளிக்கணும்… என்னை கோர்த்து விடக் கூடாது சரினா வா ஜூட் ! ” என்று சற்று நக்கலாகவே பதிலளிக்க.

 

“இப்படி சொன்னா எப்படி ? நீ தான் ஏதாவது சாக்கு கண்டுபிடிச்சு உதவிப் பண்ணுவேன்னு பார்த்தா இப்போவே இப்படி எஸ்கேப் ஆகுறே !” என்று காயத்ரி தோழியை முறைக்க.

 

“அப்போ வாயை மூடிண்டு வா… வேணும்னா ஒரு அட்டெண்டன்ஸ் போடுவோம், கிஃபட் கொடுப்போம், நல்லா சாப்பிடுவோம், அப்புறம் படிக்கணும், அசைன்மெண்ட் பண்ணனும்னு ஏதான சொல்லிட்டு சீக்கிரமா கிளம்பிடலாம் சரியா?” என்று லட்சுமி சொல்ல காயத்ரியும் ‘சரி’ என்பது போல் தலை அசைத்தாள்.

 

காயத்ரி, உதயா, லட்சுமி மூவரும் பள்ளிநாட்களிலிருந்து இணைபிரியா தோழிகளாகவே இருந்துவருகின்றனர். இப்பொழுது இவர்கள் கல்லூரியில் Bsc.விஸ்காம் (விஸ்வல் கம்யூனிகேஷன்) மூன்றாம் ஆண்டு படித்துவருகின்றனர். 

 

பார்ட்டி ஹால் கதவின் அருகே நின்றிருந்த அவர்களது கல்லூரி தோழி ஸ்ருதி, அவர்களைக் கண்டதும் புன்னகைத்தபடி

“ஒருத்தர் கூட நம்ம கிளாஸ் செட்டு வந்தமாதிரி இல்லையே என்ன செய்யலாம்னு தயங்கிக்கிட்டு இருந்தேன் ” என்று பெருமூச்சு விட்டபடி சொல்லத் தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

காயத்ரியோ “என்னப்பா சொல்றே ஒருத்தர் கூடவா நம்ம குரூப் பசங்க வரல?” என்றவள் யோசனையாய் லட்சுமியை பார்த்து “என்னடி எஸ் ஆயிடலாமா ?” என்று முணுமுணுக்கும் அதே சமயம் ஹால் கதவைத் திறந்துகொண்டு வந்தாள் அன்றைய விழாவின் நாயகி உதயா.

 

“உள்ள வராம இங்க என்ன செய்யுறீங்க ?வாங்கடி“ என்று அவர்களை கிட்டத்தட்ட இழுத்து கொண்டு உள்ளே சென்றாள். 

 

ஹாலினுள் நுழைந்த காயத்ரி கண்கள் விரிய மயங்கி நின்றாள்.

 

தங்க நிறத்தில் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த ஹால் காண்போரை மெய்மறக்க செய்தது. ஹாலின் நேர் எதிரே வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மேடையும் அங்கங்கே வட்டமான மேஜைகளும் அதனைச் சுற்றி தலா நான்கு இருக்கைகளும் இருந்தன. 

 

குறுக்கும் நெடுக்கும் கையில் குளிர் பானங்களையும் ஐஸ் கிரீம் கப்புகளையும் எடுத்துக்கொண்டு சர்வர்கள் நடந்து கொண்டிருக்க.

 

அதுவரை தயக்கத்துடன் வந்துகொண்டிருந்த காயத்ரி “ஹை ஐஸ்கிரீம்!” என்று அலற …லட்சுமியோ அவளை முறைத்தபடியே 

“கத்தாதே டீ! ஏற்கனவே எதோ கண்ணைக் கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு. நீ வேற கத்தி மானத்தை வாங்காதே! கொஞ்சம் அடக்கி வாசி. ப்ளீஸ்டீ !” என்று கெஞ்ச.

 

“என்னப்பா இப்படியே நிக்கறீங்க? வாங்க இந்த டேபிள்ல உக்காருங்க. அப்புறம் அங்க பஃபே இருக்கு…கூச்சப்படாமல் நல்லா வெளுத்துக் கட்டுங்க. நான் கொஞ்சநேரத்தில் வந்துடறேன்” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள் உதயா.

 

“அடியே நல்லவளே! சாப்பிடுன்னு சொன்னியே…ஆனால் அந்த பஃபே எங்கே இருக்குதுன்னு காட்டாமல் போறியேடி” என்று ஸ்ருதி அலுத்துக்கொள்ள. 

 

காயத்ரியோ ”அதுனால என்னடி? அங்க பார் ஒருத்தன் தட்டைத் தூக்கிண்டு போரான்.அநேகமா அவன் அங்க தான் போயிண்டு இருக்கான்னு நினைக்கிறேன். சீக்கிரமா வா!” என்று லட்சுமியையும் ஸ்ருதியையும் உடன் அழைத்தாள்.

 

அந்த ஆணின் பின் நடந்தவர்களை லட்சுமி முறைத்த படியே “இனி நான் உங்க கூட எங்கேயுமே வரமாட்டேண்டி. என்னடி இது இப்படி மானத்தை வாங்கறீங்க. அட்லீஸ்ட் கொஞ்சம் மெள்ளமா பேசுங்க எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க” என்று புலம்பிக் கொண்டே பின் தொடர்ந்தாள்.

 

ஒரு வழியாக அந்த ஹாலின் இடப்புறம் இருந்த பஃபேவை அடைந்தனர். 

 

உணவு வகைகளைக் கண்டவர்களின் நாவிலோ எச்சில் ஊறியது.

 

“என்னப்பா இது? பிறந்தநாள் பார்ட்டியா கல்யாண வீடா? இத்தனை வெரைட்டியா! எல்லாத்தையும் சும்மா டேஸ்ட் பண்ணாலே நாளைக் காலை ஆகும் போல இருக்கே ” என்று மலைத்தவர்கள் அனைத்திலுமிருந்து கொஞ்சம் கொஞ்சம் தங்கள் தட்டில் பரிமாறிக் கொண்டனர்.

 

ஆண்களும், பெண்களும் மற்றும் சற்று வயது முதிர்ந்தவர்கள் கூட மேல் நாட்டுப் பாணியில் உடையணிந்து இருக்க. அவர்களைப் பார்த்தவாறே தோழிகள் தங்கள் மேசையின் முன் அமர்ந்தனர்.

 

“நாம ஒன்றும் அவளோ மோசமா இல்லல்ல ?” என்று கூறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

காயத்ரி, வயது 19, ஐந்தடி உயரமும். மாநிற சருமமும், களையான குழந்தை போன்ற முகமும்… அதிக மேக்கப் ஏதும் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண்போல் இருந்தாள். இடை வரை நீண்ட கருங்கூந்தலை லூஸ் ஹேர் விட்டு. டார்க் பிங்க் நிறத்தில் முட்டிக்கு சற்று கீழே வரை நீளும் டிரஸ் அணிந்து இருந்தாள்.

 

அந்த ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த உதயாவோ பேருக்கு ஏற்றார் போல் அழகு! கிட்டத்தட்ட ஐந்தே முக்கால் அடி உயரம், கோதுமை நிறம், நேர் பட்ட நாசி, செக்க சிவந்த இதழ்கள். தோள்வரை நீண்ட கூந்தலை சுருளச் செய்து. வெள்ளை நிற டிரஸ் அணிந்து முகத்தில் புன்னகையுடன் மிக அழகாக இருந்தாள்.

 

“நம்ம உதயாதான் செம்மயா இருக்கால்ல! சாதாரண சல்வார்ல வந்தாலே பசங்களெல்லாம் அப்படி சுத்தறாங்க இவ்வளவு அலங்காரத்தோட இவளைப் பார்த்தா அவளோதான் மொத்தமா விழுந்துருவாங்க” என்று சிரித்த படி தங்களுக்குள் தோழியைப் பெருமையாய் பேசிக்கொண்டு உணவை ருசித்தனர்.

 

சில நிமிடங்கள் கழித்து அவர்கள் மேசை அருகே உதயாவும் அவள் அண்ணன் கௌதமும் வர. உதயா “சாரி பா! கொஞ்சம் பிஸி ஆயிட்டேன் சாப்டீங்களா? நல்லா இருக்கா? பாவம் கெளதம் தான் எல்லாம் ஏற்பாடு பண்ணது” என்று அண்ணனின் தோளில் சாய்த்துப் புன்னகைத்தாள்.

 

“ஆமா இப்போ கொஞ்சு! போன வருஷம் உன் பிறந்தநாளுக்கு நான் ஊரில் இல்லைன்னு போன் பண்ணி என்னவெல்லாம் திட்டினே? அந்தப் பாசம் தாங்காமல் தானே நான் இப்படி பெரிசா பார்ட்டி ஏற்பாடு பண்ணினேன் ! இல்லைனா உன்கிட்ட எவன் வாங்கி கட்டிக்கிறது ?” என்று கௌதம் கிண்டல் செய்ய.

 

உதயா அவனை அடிப்பது போல் கையை ஓங்க ,அவனும் பயப்படுவது போல் பாவனை செய்ய அவர்கள் அனைவரும் சிரிக்க அந்த  இடமே களைகட்டியது..

 

கௌதம் உதயாவின் அண்ணன் , வயது 26, ஆறடி உயரமும், மீசை இல்லாத வழவழப்பான முகமும் . எப்பொழுதும் புன்னகையை ஏந்தும் சற்று சிவந்த இதழுமாய்…மாடல்போல் இருந்தான்.

 

கௌதமிற்கும் லட்சுமிக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு இருப்பது போல் இருந்தாலும் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.

 

தோழிகள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத போதிலும் அவ்வப்போது கிண்டல் செய்வதுண்டு.

 

“ஹோய்! உன் ஆளோட கோட்சூட் கெட்டப் பார்ட்டிக்காகவா இல்லை உனக்காகவா?” என்று ஸ்ருதி கண் சிமிட்டி முணுமுணுக்க மங்கலான ஒளியிலும் லட்சுமி முகம் சிவந்தது தெரிந்தது..

 

அதைக் கண்டும் காணாமலும் ரசித்தவாறே கௌதம் உதயாவிடம்  “.அவன் வந்துட்டான் நான் போய்ப் பேசிண்டு இருக்கேன் ” என்று புன்னகைத்த படி நகர்ந்தான். அதாவது அங்கிருந்த நழுவினான்.

 

‘நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தான் உண்டு தன் ஐஸ்கிரீம் உண்டு’ என்று காயத்ரியோ மும்முரமாக ஐஸ்கிரீமை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தாள்.

 

“இங்க என்ன சீன் ஓடுது.. இது என்ன பண்ணுது பாரு? ஸ்கூல் படிக்க வேண்டிய குழந்தையை யாருப்பா காலேஜ்ல சேர்த்து விட்டா?” என்று ஸ்ருதி கேலி செய்ய.

 

‘இதான் பூலோகமா?’ என்பது போல் “என்னப்பா என்னாச்சு? ஏதான கேட்டியா? ஐஸ் கிரீம் வேணுமா ?” என்று காயத்ரி விழிக்க.

 

உதயாவோ சிரித்தபடியே ” இல்லடி செல்லம்! நீ சாப்பிடு”என்று சொல்லி அவளும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

 

காயத்ரி தவிர மற்ற பெண்கள் தங்களைச் சுற்றி இருந்த வாலிபர்களைப் பார்த்துக் கமெண்ட் அடித்துக்கொண்டும், தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டுமிருந்தனர்.

 

ஒரு வழியாக ஐஸ்கிரீமை முடித்த காயத்ரி மெதுவாக ஜூஸை குடித்தவாறே அவர்களைச் சுற்றி இருக்கும் விருந்தினர்கள்மேல் பார்வையைச் சுழல விட்டாள்.

 

அந்த ஹாலின் வலது புறம் கௌதம் ஒரு வாலிபனுடன் பேசிக் கொண்டு இருந்தான். 

 

அவனும் கௌதமை போன்றே ஆறடி உயரமும் , வெள்ளை சருமமும் , அளவான உடற்கட்டும் , அவன் வசீகரமான முகத்திற்கு ஏற்பச் சீராக வெட்டப் பட்ட சிகையும், மீசையுமாய் எதோ கிரேக்கச் சிற்பம்போல் இருந்தான். என்ன முகம் தான் ஏனோ கடுவன் பூனைபோல் கடு கடுவென இருந்தது.

 

“கொஞ்சமான சிரியேன்டா! சிரிச்சா வாய் சுளுக்கிக்குமா என்ன?” என்று அவனைக் கூர்ந்து நோக்கி காயத்ரி மனதினுள் முணுமுணுக்க, அது காதில் விழுந்து போல், அவன் திடுமென அவளை  திரும்பிப் பார்க்க. புரைக்கேறி அவள் தடுமாற…

 

இதைக் கவனிக்காத உதயாவோ “ஹேய் மெதுவா குடிடி. நாங்க யாரும் கேட்கமாட்டோம். வேணும்னா இன்னுமொரு ஜூஸ் கொண்டு வரச்சொல்றேன்” .என்று கிண்டல் செய்ய.

 

காயத்ரி ஏற்கனவே சின்னதாய் இருந்த தனது அழகிய கண்களைச் சுருக்கி கோவமாய் முறைத்தாள் .

 

“ஐயோ ! அப்படியெல்லாம் பார்க்காதேடி! சிரிப்பு சிரிப்பா வருது. நீ இவளோ வளர்ந்திருக்கே ஆனா ஒழுங்கா முறைக்கக் கூடத் தெரியலையே பேபி ! ” என்று உதயா வெறுப்பேற்ற. நாசி பெரிதாக அவள் இன்னும் முறைக்க, உதயாவோ அவள் கன்னத்தைப் பற்றி  “ஸோ கியூட்” என்று கொஞ்ச, “போடி! ” என்று செல்லமாகக் கோவித்துக் கொண்டாள் காயத்ரி.

 

மெதுவாக அந்த வாலிபனை மீண்டும் காண அவள் திரும்ப, அவனோ அங்கில்லை ! ‘ எங்கே போனான்’ என்று திரும்பியவள் உறைந்து விட்டாள்.

 

அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்த கெளதமையும் அவனது தோழனையும் அவள் கவனித்திருக்க வில்லை. அவர்களைப் பார்த்தபடி கௌதம் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட, ஆண்கள் இருவரும் அதில் அமர்ந்தனர்.

 

“திஸ் இஸ் சிவா! என் பெஸ்ட் பிரென்ட். எனக்கு எல்லாமே இவன் தான் ! ” என்று அவர்களுக்கு அறிமுகம் செய்ய சிவா கௌதமின் கையைப் பற்றி டேய் “ஏண்டா?”என்பது போல் ஏதோ சொல்ல “ நண்பேன்டா “ என்ற கௌதம் அவனைப் பக்கவாட்டில் அனைத்து கொண்டான்.

 

 26 வயதான சிவா, கௌதமின் உயிர்த் தோழன்.

 

உதயா சிவாவிடம் “அண்ணா இவங்க என் காலேஜ் பிரெண்ட்ஸ்! இது லட்சுமி , அவ ஸ்ருதி , அந்த ஜூஸ் குள்ள விழுந்துடுவாங்கிற மாதிரி ஒருத்தி இருக்கா பாருங்க…அவ காயத்ரி ” என்று அறிமுகம் செய்ய.

 

அதுவரை குடிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தவளோ உதயாவை மீண்டும் அதேபோல் முறைத்தாள்.

 

“ஹே சொன்னேன்ல முறைக்க ட்ரை பண்ணாதே பேபின்னு” என்று உதயா மறுபடி அவள் கன்னத்தைப் பற்றிக் கிள்ள. 

 

யாரோ ஒருவன் முன் இப்படி அவளை அவள் தோழி கொஞ்சவும், சிறிதும் நிமிராமல், அவள் சொன்னது போலவே ‘இந்த ஜூஸ் க்ளாசில் குதித்தால் தான் என்ன?’ என்பது போல் குனிந்து கொண்டாள் .

 

கௌதமும் மற்றவர்களும் உரக்கச் சிரிக்கச் சிவாவோ இன்னும் முகத்தைக் கடினமாக்கிக் கொண்டான்! இதைக் கவனித்த காயத்ரியோ . ‘சிடுமூஞ்சி சிரிக்கக் காசு கேட்பான் போல! ‘ என்று மனதினுள் கடு கடுத்தாள்.

 

அவனோ அவளைச் சட்டென்று கூர்ந்து பார்க்க காயத்ரியும் பயத்தில் அவன் கண்ணைப் பார்க்காமல் எங்கெங்கோ பார்க்க

 

‘ ஆண்டவா ! இவன் முன்னாடி இன்னும் எவளோ நேரம் உட்காரணுமோ? ‘ என்று மனதில் பொருமினாள். அவளின் மனம் அறிந்தாற்போல்..

 

சிவா சட்டென “உதயாம்மா கேக் கட் பண்ணலாமா?” என்று அன்பாகக் கேட்க.

 

காயத்ரியோ ‘பார்க்கத் தான் ஆள் சிடுமூஞ்சியா இருக்கான் ஆனால் குரல் கம்பீரமா இருக்கே! ‘ என்று நினைத்துக்கொண்டாள்.

 

“சரி அண்ணா!” என்றவள் “வாங்க “ என்று மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கேக் கட் செய்யச் சென்றாள்.

 

அனைவரும் ‘ஹாப்பி பர்த்டே’ வாழ்த்து பாட, உதயா சிறு குழந்தைபோல் ஆர்வமாய் கேக் வெட்டிக் கௌதமிற்கும் சிவாவிற்கும் ஊட்ட… அவர்களும் அவளுக்கு ஊட்ட

 

“ஐயோ பாசமலர் படம் பார்க்கிற மாதிரில இருக்கு! நல்ல வேளை இதை பார்க்கச் நம்ம சிவாஜியும், சாவித்திரியும் இங்க இல்ல ” என்று காயத்ரி சொல்லக் கேட்டுப் பக்கென்று சிரித்து விட்டாள் லட்சுமி .

 

அங்கிருந்த மேஜைகள் எல்லாம் சுவர்களை ஒட்டி நகர்த்த படுவதை பார்த்த லட்சுமி

 

” என்னப்பா அவளோதான் பார்ட்டி, கிளம்புங்கன்னு சொல்றாங்களா? இருந்தாலும் இப்படியா அப்பட்டமா துரத்துவாங்க ?” என்று முணுமுணுக்கும் பொழுது.

 

விளக்குகள் இன்னும் மங்கலாக்கப்பட்டு, சத்தமாக டிஸ்கோ மியூசிக் ஒலிக்க..டீஜெவின் கைங்கரியத்தில் அந்த ஹாலே அல்லோல கல்லோல பட ஆரம்பித்தது.

 

“அய்யயோ! என்னடி இது மெதுவா எதோ தாலாட்டு மாறி இருந்த மியூசிக்கை மாற்றி இப்படி காதில் ரத்தம் வர மாதிரி அலற விட்டானுங்க! வேணாம் கிளம்பிடலாம் இது சரி வராது. இங்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தா கூட நான் நாலுநாள் ஆனாலும் தல வலியில் அவஸ்தை படணும்டி” என்று லட்சுமி புலம்ப .

 

“ஏண்டி நானா போடச் சொன்னேன்?” என்று காயத்ரியும் அலுத்துக்கொள்ள  “ஹாய்! நான் டான்ஸ் ஆடப் போறேன் ” என்று துள்ளிக் குதித்து ஸ்ருதி செல்ல.

 

“கிளம்பிடலாமா?” என்று காயத்ரி வாயெடுக்கும் முன்னரே ” ஷல் வி டான்ஸ் ?” என்று லக்ஷ்மியின் முன்னால் நின்றான் கௌதம்! 

 

மறுக்க முடியாமல் ” ம்ம்” என்று லக்ஷ்மியும் அவனுடன் ஆடுவதற்குச் சென்றுவிட.

 

காயத்ரி மட்டும் என்ன செய்வது என்று புரியாமல், ஒரு ஓரமாய் இருந்த மேசையின் முன் அமர்ந்தாள்.

 

கைப்பேசியை நோண்டிய படியே அங்கே வந்தான் சிவா.

 

‘இப்போ இங்க உட்காரலாமா? இல்ல எழுந்திடலாமா? ‘ என்று அவள் யோசிக்கும் பொழுதே.

 

சிவா ” ஹாய் ! நான் இங்க உட்காரலாமா ? இஸ் இட் ஓகே ?” என்று கேட்க.

 

மனதைப் படித்தார் போல் அவன் சட்டெனக் கேட்கவும் “பரவால்ல யாரும் திட்டமாட்டாங்க ! நீங்கத் தாராளமா உட்காரலாம்! ” என்றாள்.

 

இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத அவனோ உரக்கச் சிரித்தபடியே அவளுக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான்.

 

அவன் சிரித்த பிறகே அவள் சொன்ன பதிலை உணர்ந்தாள்.  ‘என்னை லூசுன்னு நினைச்சிருப்பானோ? ச்சே! முதல் முதலா பேசுறப்போ இப்படியா சொதப்புவே காயத்ரி‘ என்று தன்னை தானே நொந்து கொண்டு அதை வெளிக் காட்டாமல் அசடு வழிந்தாற்போல் புன்னகைத்தாள்.

 

அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு “ காயு நீ டான்ஸ் ஆட போகலையா? ஏன் இப்படி தனியா உட்கார்ந்து இருக்கே ?” என்று எதோ நன்கு பரிச்சயம் ஆனவன் போல ஒருமையில் கேட்க…

 

“இல்லை எனக்குப் பழக்கம் இல்லை அதான்…ஆமா நீங்க டான்ஸ் ஆடப் போகலையா ?”

 

“நோ! ஐ டோன்ட் பீல் லைக் டான்சிங் டுடே. காலையிலிருந்து ஒரே மூட் அவுட். எதோ உதயா கம்பல் பண்ணாளேன்னு வந்தேன்! ” என்றான்.

 

‘இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்? வடிவேலு சொல்லற மாதிரி “சேம் பிளட்”ன்னு சொல்லவா?’ என்று மனதினில் நினைக்கும் பொழுதே

 

சிவா “என்ன யோசிக்கிறே ?” என்று கேட்க , “சேம் பிளட்! ” என்று மனதில் நினைத்ததை உளறியவள் உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவன் திரும்பவும் உரக்கச் சிரிக்க.

 

‘சிரிச்சா எவளோ அழகா இருக்கான் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே ‘ என்று எண்ணிக் கொண்டவள்.

 

“நான் சொன்னது அவளோ பெரிய ஜோக்கா இல்ல, நான் தப்பா எடுத்துக்க கூடாதுன்னு சிரிசீங்களா? ” என்று திரும்பவும் உளர. அவனோ மறுபடி சிரிக்க .

 

“நான் வாய மூடிண்டு இருக்கிறதே பெட்டெர்! ” என்று அவள் வாய்விட்டு அலுத்துக்கொள்ள.

 

“அப்படி இல்லை. டோன்ட் மிஸ்ட்கே மீ ! ” என்று சொல்லிக் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

 

‘இவன் கண்டிப்பா மனசுக்குள்ள எதோ நினைச்சுதான் சிரிக்கிறான் காயு. போதும் அடக்கி வாசி‘ என்று தன்னிடம் சொல்லிக் கொண்டாள்.

 

சில நிமிடங்கள் மௌனமாய் கழிந்தது.

 

“ஹேய்! என்ன ரெண்டு பேரும் டான்ஸ் ஆட வரலையா ?” என்றபடி அங்கே உதயாவும் கௌதமும் வர.

 

லட்சுமி எங்கே என்று எட்டிப் பார்த்த காயத்ரி, அவளோ ஸ்ருதியுடன் ஆடிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, வந்தவர்களை நோக்கினாள்.

 

“இல்லை உதயாம்மா! மூட் இல்லை” என்றான் சிவா .

 

கௌதம் அங்கே சென்று கொண்டிருந்த சர்வரை கைக்காட்டி அழைத்து, நான்கு குளிர் பானங்களை எடுத்து ஒரு கிளாசை சிவாவிடம் நீட்ட…

 

“ஹேய்! நான் குடிக்க மாட்டேன்னு தெரியும் தானே? ஐ டோன்ட் ட்ரின்க் கௌதம்!” என்றான் சிவா கடுமையாக.

 

“என்னடா நீ ? உன்னை எனக்குத் தெரியாதா ? இதில் ஆல்கஹால் இல்லடா, வெறும் ஜூஸ் தான்… எடுத்துக்கோ” என்றான் “நீயும் எடுத்துக்கோ காயத்ரி. ” என்று சொல்லி அவளிடம் ஒரு கிளாஸ் கொடுத்து தனக்கும் உதயாவிற்கும் எடுத்துக் கொண்டான்.

 

சிவா புன்னகைத்தவாறே “உட்காருடா கௌதம். இங்க உட்கார்ந்தால் யாரும் திட்டமாட்டார்களாம்!” ஓரக்கண்ணில் காயத்ரியை பார்த்தபடி நக்கலாய் சொல்ல

 

கௌதம் சிரித்துக் கொண்டே “என்னடா சொல்றே ?” என்று கேட்க. சிவாவோ காயத்ரியை காட்டி “இல்லடா இப்போதான் மேடம் எனக்கு சொன்னாங்க..நான் உனக்கு சொன்னேன்” என்றான் சர்வ சாதாரணமாய்.

 

காயத்ரியோ கோவம் பொங்க அவனை முறைக்க” ஐயோ ஸோ சுவீட்” என்று மறுபடி உதயா அவள் கன்னத்தை நோக்கிக் கிள்ளுவதற்காகப் பாய…அவளோ தன் கன்னங்களைக் கைகளால் மூடிக் கொண்டாள். அனைவருமே சிரித்து விட்டனர் காயத்ரி உள்பட.

 

….

 

இத்தனை ஆழமாய், சுகமாய், அவள் உறங்கிப் பல நாட்கள் ஆனது. மெத்தைகூட இன்று இதமாய் இருக்க எழவே மனம் இல்லாமல் கண்களை மெதுவாகத் திறந்தாள்.

 

‘எத்தனை அழகான கண்கள்,  வசீகரமான முகம், கம்பீரமான மீசை! ‘ என்று ஒவ்வொன்றாய் மென்மையாய் தொட்டுப் பார்த்தவள்

“அம்மா ! “ என்று அலற.

 

அந்தச் சத்தத்தில் அரண்டு கண்விழித்த சிவா கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்தான்.

 

அவள் ஒரு புறம் ! அவன் ஒரு புறம் ! இருவர் முகத்திலும் அதிர்ச்சி !

error: Content is protected !!